Sunday, March 24, 2013

காதல் கீதம் – 11

பகுதி - 10
மறு நாள் காலையில், அவன் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது, அவன் தந்தை போன் பண்ணி, நீ ஒரு நாள் லீவு சொல்லிட்டு, இன்னைக்கு ராத்திரியே கிளம்பி மெட்ராஸுக்கு வா என்று கூறினார். 

அவனும், அன்றிரவே மெட்ராஸுக்கு கிளம்பி போனான். காலையில் வீட்டில் போய் இறங்கி, குளித்து காலை சிற்றுண்டி சாப்பிட்டு முடித்தவுடன், அவனுடைய தந்தை அவனிடம்,

“ஏண்டா, இது எத்தனை நாளா நடக்குது” என்று கேட்டார்

“எதுப்பா”

“ஆதாண்டா, நீ ஒரு பொண்ணை விரும்புறது”

“அப்பா, அது யாரோ ஒரு பொண்ணு இல்லப்பா, நம்ம மணியோட சொந்தக்கார பொண்ணுப்பா” என்றான் அடைக்கப்பன்.

“அது எல்லாம் எங்களுக்கு தெரியும். எனக்கு தான் இந்த காதல் கத்திரிக்காய் எல்லாம் பிடிக்காதுன்னு உனக்கும் தெரியும் தானே. தெரிஞ்சும் நீ, காதலிச்சிருக்கேன்னா, என்னடா அர்த்தம்” என்று கோபப்பட்டார்.

“அப்பா, நான் வேற ஜாதி பொண்ணை காதலிச்சிருந்தா நீங்க கோபப்படுறதுல அர்த்தம் இருக்கு. எப்படியும் நீங்க எனக்கு ஒரு செட்டிய வீட்டு பொண்ணை தான் கல்யாணம் பண்ணி வைப்பீங்க, அது ஏன் இந்த ஜனாகியா இருக்க கூடாது?” என்று திருப்பி கேட்டான் அடைக்கப்பன்.

“ஏங்க அவன் சொல்றதிலும் என்ன தப்பு இருக்குங்க” என்று இருவருக்கும் இடையில் புகுந்தாள் அவன் தாய்.

“இவனா ஒரு பெண்ணை தேடிக்கிறதுக்கு, பெத்தவங்கன்னு நாம எதுக்கு இருக்கோம்” என்று கேட்டார்.

“அவன் ஒண்ணும் மத்த பசங்களை மாதிரி வேற யாரையோ காதலிக்கலை. நமக்கு தெரிஞ்ச குடும்பத்து பொண்ணை தான் காதலிக்கிறான். அந்த பொண்ணும் ரொம்ப நல்ல பொண்ணா தான் தெரியிது” என்று பதிலுரைத்தாள்.

“எல்லாம் நீ கொடுக்கிற செல்லம் தான், அவனை இப்படியெல்லாம் பண்ண வைக்குது. சரி நான் இப்ப என்ன பண்ணனும்” என்று சற்று கீழிறங்கி வந்தார்.

“அந்த பொண்ணும் அடுத்த மாசத்துல படிப்பை முடிக்க போகுது. நாம நம்ம மணிக்கிட்ட, நம்ம பிள்ளையோட ஜாதகத்தை கொடுத்து, அந்த பொண்ணோட ஜாதகத்தை கேப்போம்”

“எனக்கு என்ன ஒரே கஷ்டம்னா, நமக்கு இருக்கிறது ஒரே புள்ள, அவனுக்கு நான் ஒரு நாலைந்து இடத்துல அலைஞ்சு, நல்ல குணமுள்ள ஒரு பொண்ணை கட்டி வைக்கணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். என்ன, இப்ப அது முடியாது.” என்று வருத்தப்பட்டார்.

“இங்க பாருங்க, நமக்கு அவன் சந்தோஷம் தானே முக்கியம். அதனால ஆக வேண்டிய காரியத்தை பார்ப்போம்.”.

“சரிடா, இதை கேக்குறதுக்காக தான் நான்,உன்னைய இன்னைக்கே வர சொன்னேன். நீ இன்னைக்கு ராத்திரி கிளம்பு, நானும் உன் அம்மாவும் மேக்கொண்டு ஆக வேண்டிய வேலைகளை பார்க்கிறோம்” என்றார் அவனிடம்.

அடைக்கப்பனுக்கோ, உள்ளுக்குள் ஒரே சந்தோஷம். அதை வெளியே காட்டாமல். ரொம்ப தாங்க்ஸ்மா, ரொம்ப தங்க்ஸ்ப்பா என்று கூறி வெளியே போனான்.

மறு நாள் மீண்டும் படமாத்தூருக்கு சென்று வேலையில் மூழ்கினான். 

பிறகு வந்த ஒரு மாதமும் ஜானகிக்கு கடைசி செமெஸ்டெர் பரீட்சை என்பதால், அவனால் ஜானகியை பார்க்க முடியவில்லை. ஜானகிக்கும் பரீட்சை முடிந்த இரண்டு வாரத்திற்கு பிறகு ஒரு நாள் மணியும்,உண்ணாவும்,அடைக்கப்பனின் பெற்றோரும் படமாத்தூருக்கு ஜானகியின் வீட்டுக்கு வந்து, ஜனாகியை தங்கள் வீட்டு மருமகளாக ஆக்கிக் கொள்ள ஆசைப்படுவதாக கூறினார்கள். ஜானகியின் தந்தை நாராயணனுக்கு, இவர்களின் காதல் தெரிந்திருந்த படியால், அவரும் சம்மதித்தார். இரு வீட்டாரும் தங்கள் வழக்கப்படி,ஜாதகம் மாத்திக்கொண்டார்கள். ஜாதகத்தை பார்த்துவிட்டு மேற்கொண்டு நடக்கலாம் என்று முடிவு எடுத்தனர்.

அதன்பிறகு, அடைக்கபப்பனும், ஜானகியும் தங்களுக்கு திருமணம் நிச்சயம் நடக்கப்போகிறது என்று மிகுந்த சந்தோசத்துடன் இருந்தார்கள்.

கிட்டதட்ட பத்து நாள் கழித்து, ஒரு நாள் அடைக்கபனுக்கு,அவனுடைய தந்தை, உடனே  வருமாறு கூப்பிட்டார். அவனும் தன் வீட்டிற்கு போனான்.

“அடைக்கப்பா, மனசை தளர விடாதே, உனக்கும் ஜானகிக்கும் கலியாணம் நடக்காது” என்றார் அவன் தந்தை.

“என்னப்பா சொல்றீங்க. திடீர்னு குண்டை தூக்கி போடுறீங்களேன்னு” அதிர்ச்சியோடு கேட்டான் அடைக்கப்பன்.

“உங்க ரெண்டு பேருக்கும் ஜாதகம் பொருந்தலைப்பா” என்றாள் அவன் தாய்.

“என்னம்மா, இந்த காலத்துலேயும் ஜாதகம் அது இதுன்னுட்டு. உங்களுக்கு ஜானகியை பிடிக்கலை, அது தான் ஏதாவது ஒரு காரணம் சொல்றீங்க” என்று கோபப்பட்டான்.

“ஏண்டா, பிடிக்காமதான் நாங்க ஜாதகம் எல்லாம் பார்த்தோமாக்கும். இதோ பாருப்பா, உன் சந்தோஷம் தான் ங்க சந்தோஷம். ஒண்ணுக்கு மூணு ஜோசியர் சொல்லிட்டாங்க. அதோட ஜானகி வீட்டுலேயும் ஜாதகம் பார்த்த இடத்தில இந்த ரெண்டு பேருக்கும் கலியாணம் பண்ணாதீங்கன்னு  சொல்லி இருக்காங்க”  என்று விளக்கினார் அவன் தந்தை. .

“ஏம்பா, அப்படி பார்த்தா, வெளி நாட்டுல இருக்கிறவங்க எல்லாம் ஜாதகம் பார்த்தா கல்யாணம் பண்ணிக்கிறாங்க” என்று கேட்டான்

“அவுங்க கலாச்சாரம் வேற, நம்ம கலாச்சாரம் வேற. உங்க ரெண்டு பேருக்கும் கலியாணம் பண்ணக்கூடாதுன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும் உங்களுக்கு கலியாணம் பண்ணி வச்சு, பின்னாடி ஏதாவது பிரச்சனை வந்தா என்னப்பா பண்றது” என்று கூறினார்.

“அம்மாண்டா, உங்கப்பா சொல்ற மாதிரி, பின்னாடி எதுவும் பிரச்சனை வரக்கூடாது. நீ நூறு வயசுக்கும் சந்தோஷமா இருக்கணும். உனக்கு வேற நல்ல இடத்துல பொண்ணு பார்க்கிறோம்பா. ஜானகியை மறந்துடுப்பா” என்றாள் அவன் தாய்.

“ஈஸியா சொல்லிட்டீங்க, அவளை மறந்துடுங்கன்னு. நான் எவ்வளவு நம்பிக்கையா இருந்தேன் தெரியுமா, ரெண்டு பெரும் ஒரே இனம், அதனால ஒரு பிரச்சனையும் வராதுன்னு, இப்படி கடைசில ஜாதகத்து மேல பழியை போட்டுடிங்களே “ என்று புலம்பினான்.

“இங்க பாருடா, நிறைய பேருக்கு, அவுங்க விரும்புனவங்களை கலியாணம் பண்ணிக்க முடியாத சூழ்நிலை உருவாயிடும். இனி நமக்கு அவ்வளவு தான், வாழ்க்கையே போச்சுன்னு நினைச்சுக்காம வேற யாரையாவது கலியாணம் பண்ணிக்குவாங்க. அதனால நீயும் அவளை மறந்துட்டு வேற ஒரு பொண்ணை கலியாணம் பண்ணிக்கோ” என்று எடுத்துரைத்தார் அவனுடைய தந்தை.

அடைக்கப்பனும், வேண்டா வெறுப்பாக, இருவரின் அறிவுரைகளையும் கேட்டுக்கொண்டு, அன்று இரவு படமாத்தூருக்கு பஸ் ஏறினான். மறு நாள் காலை ஆபிஸுக்கு போன மறு நிமிடம், ஜானகியின் வீட்டுக்கு போன் பண்ணினான். ஜானகி தான் எடுத்தாள்.

“ஜானகி, நாம வழக்கமா சந்திக்கிற சிவகங்கை பார்க்குக்கு சியாந்திரம் வரியா? உன் கூட நிறைய பேசணும்”.

“சரிப்பா நான் வரேன்”

மாலை இருவரும் சிவகங்கை பூங்காவில் சந்தித்தார்கள்.

“உங்க வீட்டில என்ன சொல்றாங்க ஜானு என்று கேட்டான் அடைக்கப்பன்.

“எங்க வீட்டிலையும், ஜாதகத்துமேல பழியை போடுறாங்கப்பா” என்றாள் ஜானகி.

“பேசமா நாம யாருக்கும் தெரியாம ரிஜிஸ்டர் மேரேஜ் பன்னிக்கலாமா” என்றான்.

“எனக்கு அதுல உடன்பாடு இல்ல. நம்ம கல்யாணம் எல்லோருடைய சம்மதத்திலும் தான் நடக்கணும்னு நினைக்கிறேன். ” என்றாள் அவள்.

“நீ நினைக்கிறது சரி, ஆனா நமக்கு கல்யாணம் நடக்காது போல இருக்கே” என்றான் அவன்.

“பேசாம நாம ரெண்டு பெரும் பிரியிறது தான் சரிப்பா”

“எப்படி உன்னால அப்படி சொல்ல முடியுது. எனக்கு உன்னைய மறக்கணும்னு நினைச்சாலே கஷ்டமா இருக்கு”

“எனக்கு மட்டும் உங்களை மறக்கிறது அவ்வளவு ஈஸியா என்ன? என்ன பண்றது, நம்ம அம்மா, அப்பா நம்மளோட நல்லதுக்கு தானே சொல்றாங்க. நாம கல்யாணம் பண்ணிக்கிட்டு, நாளைக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்தா, அப்புறம் என்ன பண்றது”.

“நீ சொல்றதும் சரி தான், இந்த சமாதானத்தை புத்தி கேட்டுகிது, ஆனா மனசு கேக்க மாட்டேங்குதே. நாம பிரியிறதை தவிர வேற வழி இல்லையா” என்று ஆதங்கத்தோடு கேட்டான்.

“எனக்கு தெரிஞ்சு இல்லப்பா. நீங்க சொன்ன மாதிரி, நாம யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனா என்ன நம்மளை பெத்தவங்களோட மரியாதை போயிடும். பிள்ளைங்களை வளர்க்கத் தெரியாம வளர்த்திருக்காங்கன்னு அவுங்களுக்கு ஒரு பேர் உண்டாகும். பெத்தவங்களோட மனசை காயப்படுத்தி நாம நம்ம வாழ்க்கையை தொடங்க வேண்டாங்க” என்று நிதானமாக பதிலுரைத்தாள்”.

“சரிப்பா, நீ சொல்ல, சொல்ல என் மனசுக்கு தெளிவு கிடைக்குது. சரி, நாளைக்கும் நாம இதே இடத்தில சந்திச்சு, நாம எடுத்த புகைப்படங்களையும், கடிதங்களையும் தீயிட்டு அழிச்சிடலாம். நீயும் உங்கப்பாம்மா சொல்றவரை பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ, நானும் எங்கப்பாம்மா சொல்றவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றான் அடைக்கப்பன்.

“சரிப்பா, உங்க கூட பழகின இந்த நாட்கள் ரொம்பவும் இனிமையான நாட்கள்பா, என்னதான் நான் வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும், மனசுல ஓரத்துல உங்களோட பழகின இந்த நாட்கள் பதிஞ்சு போயிடும்”.

“ஆனா, அதுவும் காலப்போக்குல அழிஞ்சுடும். எல்லாத்தையும் மறக்கிற சக்தி, காலத்துக்கு தான் இருக்கே. சரி, நீ கிளம்பு. நாளைக்கு மறக்காம எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வந்துடு” என்றான்.

இருவரும் கிளம்பி போனார்கள். அதற்கு பிறகு, இரண்டு மாதத்தில், அடைக்கப்பன் வேற வேலையை தேடிக்கொண்டு, மெட்ராஸுக்கே போய் விட்டான். ஆறு மாதத்திற்கு பிறகு, அடைக்கப்பன், ராயவரத்தை சேர்ந்த தெய்வானையை கலியாணம் செய்துக்கொண்டான். ஜானகியும் கண்டனுரை சேர்ந்த நாகப்பனை திருமணம் செய்துக்கொண்டாள்.


பழைய நியாபகங்களிலிருந்து, மீண்டு இவ்வுலகுக்கு வந்த அடைக்கப்பன், 
அன்னைக்கு நாம ஈஸியா ஜானகிக்கிட்ட சொன்னோம், காலம் எல்லாத்தையும் மறக்கடித்து விடும்னு, ஆனா 15 வருஷம் கழிச்சும், நம்மளால ஜானகியை மறக்க முடியலையே. இப்ப அவள் இன்னொருவருடைய மனைவி, அவளை நினைக்க கூடாதுன்னு, புத்தி சொன்னாலும், பாழாப்போன இந்த மனசு திடீர்,திடீர்னு என்னைக்காவது ஒரு நாள் அவளை நினைக்குதே. இதை தான் சொன்னார்களோ, முதல் காதலை மறக்க முடியாது, அது எப்பவும் நம்ம மனசுல ஒரு ஓரத்துல இருக்கும்னு. சரி, முடிந்த வரை, அவளை நினைக்காம இருக்க முயற்சிப்போம் என்று மனசுக்குள் உறுதி எடுத்துக்கொண்டு, தலையை ஜன்னலுக்கு வெளியே நீட்டி, கடவுளே, “ஜானகி எங்கே இருந்தாலும் நல்லா இருக்கணும்” என்று வேண்டிக்கொண்டு, குளிக்க போனான்.

-முற்றும்

No comments:

Post a Comment