சிதம்பரத்திற்கு பெண் பார்த்து முடித்து, மீண்டும் உண்ணாவின்
வீட்டிற்கு எல்லோரும் வந்தார்கள். அப்போது அங்கிருந்த அடைக்கப்பனை பார்த்த நாராயணனுக்கு, ஜானகியை பார்க்கத்தான் இவன் வந்திருக்கான் என்று தோன்றியது. அந்த நினைப்பை
உண்மையாக்குகிற மாதிரி ஜானகியும், அடைக்கப்பனும் கண்களால் பேசிக்
கொண்டிருந்தார்கள்.
“அடடே, நீங்க எப்ப தம்பி மெட்ராஸுக்கு வந்தீங்க?” என்று அடைக்கப்பனிடம்
கேட்டார் நாராயணன்.
ஜானகியை பார்த்துக் கொண்டிருந்த அடைக்கப்பனோ, இந்த கேள்வியால் தடுமாறி, சுதாரித்துக்கொண்டு அவருக்கு பதில் அளிப்பதற்காக திரும்பினான்.
“எனக்கு இங்க மெட்ராஸ் ஆபிஸ்ல வேலை இருந்ததுனால, நேத்து தான் வந்தேன்” என்றான்.
“நீங்க வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சிருந்தா, உங்களையும் கூட்டிக்கிட்டு
போயிருப்போமே” என்று கூறினார் நாராயணன்.
“அதனால என்னங்க பரவாயில்லை. ஆமா எப்ப கல்யாண சாப்பாடு போடப்
போறீங்க சிதம்பரம்” என்று கேட்டான் அடைக்கப்பன்.
“அடுத்த மாசமே போட வேண்டியது தான்” என்றான் சிதம்பரம்.
“அவ்வளவு சீக்கிரமாவா” என்றான் அடைக்கப்பன்.
“அது வேற ஒண்ணும் இல்லை தம்பி, பொண்ணோட ஆயா சீக்கிரமா பேத்தியை
கல்யாண கோலத்துல பார்க்கணும்னு ஆசைப்படுறாங்க. அதனால தான்” என்று அவனுடைய கேள்விக்கு பதிலுரைத்தார் நாராயாணன்.
“அப்புறம் எங்க வீடும் பக்கத்துல தான் இருக்கு, எல்லோரும் வீட்டுக்கு வாங்க.அம்மாவும்
உங்களை வீட்டுக்கு கூப்பிட்டேன்னு சொல்லச் சொன்னாங்க” என்று கூறினான் அடைக்கப்பன்.
அப்போது உண்ணாவும், “நானும் மறந்துட்டேன் மாமா, அத்தையும்
உங்களை கூட்டிக்கிட்டு வரச்சொன்னாங்க” என்றாள்.
“நாங்க ஐந்து மணியை போல வரோம்” என்று அடைக்கப்பனிடம் கூறினார்
நாராயணன்.
அடைக்கப்பனும் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.
மாலை சரியாக ஐந்து மணிக்கு, ஜானகி, சிதம்பரம்,அவர்களுடைய பெற்றோர் மற்றும் உண்ணா எல்லோரும் அடைக்கப்னின் வீட்டிற்கு வந்தார்கள்.
“வாங்க, வாங்க, எல்லோரும் வரணும்” என்றாள் அடைக்கப்பனின் அம்மா.
“சௌக்கியமா இருக்கீங்களா?” என்று கேட்டாள் ஜானகியின் அம்மா.
“ரொம்ப சௌக்கியம், எங்க இவ்வளவு தூரம் வந்துட்டு வீட்டுக்கு வராம போயிடுவீங்களோன்னு நினைச்சேன்”.
“அது எப்படி நாங்க வராம போயிடுவோம், தம்பி வேற கண்டிப்பா வீட்டுக்கு
வரணும்னு சொல்லியிருக்கு. ஆமா, எங்க அடைக்கப்பனோட அப்பாவை காணோம்”
என்று கேட்டார் நாராயணன்.
“அவுங்க, வேலை விஷயமா வெளியூர் போயிருக்காங்க, நாளைக்கு ராத்திரி
வந்துடுவாங்க. ஆமா, பையனுக்கு பேசி முடிச்சுட்டீங்க போல இருக்கு”
என்று கேட்டாள் அடைக்கப்பனின் அம்மா.
“ஆமா ஆச்சி, நல்ல இடமா இருந்துச்சு, எங்களுக்கும் பொண்ணை பிடிச்சுப்போச்சு.
பேசி முடிச்சுட்டோம். இன்னும் தேதி முடிவு பண்ணலை. பத்திரிக்கையை அனுப்புறோம், கண்டிப்பா அண்ணனை கூட்டிக்கிட்டு வந்துடனும்” என்றாள் ஜானகியின் அம்மா.
“கண்டிப்பா நாங்க வரோம். சரி, பேசிக்கிட்டு இருங்க,
நான் காப்பி போட்டுக்கிட்டு வரேன்” என்று எழுந்தாள் அடைக்கப்பனின் அம்மா.
உடனே, உண்ணாவும், ஜானகியும் எழுந்து பின்னாடியே போனார்கள்.
கொஞ்ச நேரத்தில் உண்ணாவும், ஜானகியும், காபியை எல்லோருக்கும்
கொடுத்தார்கள்.
“பரவாயில்லை, பொண்ணை நல்லா வளர்த்திருக்கீங்க. காபி எல்லாம் நல்லா
போடுறா” என்றாள் அடைக்கப்பனின் அம்மா.
“அவளுக்கு சமையல்ல நல்ல ஈடுபாடு” என்று பதிலுரைத்தாள் ஜானகியின்
அம்மா.
“இந்த காலத்து பொண்ணுங்க எல்லாம் கலியாணம் ஆவதற்கு முன்னாடி
சமையல் கட்டு பக்கம் வராங்கண்ணா பெரிய அதிசயம் தான்”
மற்றவர்கள் பேசிக்கொண்டிருக்க, மறுபடியும் அடைக்கப்பனும், ஜானகியும் கண்களால் காதல் பாஷை பேசிக்கொண்டிருந்தார்கள்.
“சரி, நாங்க கிளம்புறோம். அவசியம் கலியானத்திற்கு வந்துடுங்க” என்று கூறி எல்லோரும்
கிளம்பி போனார்கள்.
அடைக்கபனின் அம்மாவோ அடைக்கப்பனிடம், “ரொம்ப நல்ல குடும்பமா இருக்கு.
அதிலும் அந்த ஜானகி, ரொம்ப நல்லா பொண்ணா இருக்கா” என்றாள்.
அடைக்கப்பனுக்கு உள்ளுக்குள் ரொம்ப சந்தோஷம். அதை வெளியே காட்டாமல், “ஏம்மா, காபி போட்டுட்டா, ரொம்ப நல்லா பொண்ணா” என்று வேண்டுமென்றே
சீண்டினான்.
“அப்படி இல்லடா, பி.இ. படிக்கிறோம்னு கொஞ்சம் கூட பந்தா இல்லாம, ரொம்ப
எளிமையா இருக்கா. அதோட அடுப்படியில, என்னையும் , உண்ணாவையும், நீங்க காபி போடாதீங்க, நானே போடுறேன்னு சொல்லி, ரொம்ப நல்லா காபி போட்டா. அந்த
ஆச்சியும் ரொம்ப நல்ல மாதிரியா தான் தெரியிறாங்க. அந்த செட்டியாரும் தேவைக்கு அதிகமா
பேசலை. மொத்தத்துல நல்ல குடும்பமா தான் தெரியிது” என்றாள்.
அடைக்கப்பன் மனதுக்குள், நம்ம வேலை ரொம்ப சுலபமா முடிஞ்சுடும்னு எண்ணி
மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.
“உனக்கும், இந்த மாதிரி ஒரு குடும்பத்துல பொண்ணை எடுத்தா நல்லா தான் இருக்கும். உம்.
உனக்குன்னு ஆண்டவன் யாரை எழுதி வச்சிருக்கானோ? என்றாள்.
அடைக்கப்பனோ, தன் காதலை சொல்ல, இது தான் சரியான சமயம் என்று எண்ணிக்கொண்டு,
“ஏம்மா, பேசாம இந்த குடும்பத்துலேயே பொண்ணை எடுத்தா” என்று இழுத்தான்.
“என்னடா சொல்ற” என்றாள் அவனுடைய தாய்.
“ஆமாம்மா , பேசாம இந்த ஜானகியையே நீ மருமகளாக்கிக்கிட்டா என்ன?”
என்று மீண்டும் கேட்டான்.
அவனையே வைத்த கண் வாங்காமால் பார்த்துக் கொண்டிருந்தாள் அவனுடைய
தாய்.
“என்னம்மா அப்படி பார்க்கிற” என்றான் .
“எப்படிடா, உனக்கு இந்த மாதிரியான ஒரு எண்ணம் வந்துச்சு?”
“இல்லம்மா, நீ தான் சொன்னியே, அவுங்க ரொம்ப நல்லவங்களாக இருக்காங்க, அந்த பொண்ணும் ரொம்ப நல்லா பொண்ணா இருக்குதுன்னு, அதனாலதான்
இப்படி கேட்டேன்” என்றான்.
“டேய், உன்னைய பத்தி எனக்கு தெரியும், உண்மைய சொல்லு” என்றாள்.
அடைக்கப்பனும், ஜானகியை முதன் முதலில் பார்த்ததிலிருந்து, அவளை விரும்புவது
வரைக்கும் மறைக்காமல் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, அம்மா என்ன
சொல்லப்போறாங்களோன்னு, உள்ளுக்குள் பயந்துகொண்டு, அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தான்.
- தொடரும்
No comments:
Post a Comment