உதவி இயக்குனர் எங்களிடம் பேர் எல்லாம் வாங்கிக்கிட்டு போன பிறகு, நாங்களும், சரி ஒரு பத்து நிமிஷத்துல இயக்குனர் வந்துடுவாருன்னு நினைச்சுக்கிட்டு உட்கார்ந்திருந்தோம். நேரம் தான்
போனுச்சே தவிர, இயக்குனர் வந்த பாடில்லை. எங்களுக்கு தெரிஞ்சு
போச்சு, இந்த சினிமாக்காரங்களும்
சரி, அரசியல்வாதிகளும் சரி, சொன்ன நேரத்துக்கு
வர மாட்டாங்க,நாம தான் அடிச்சு புடிச்சு 5.40க்கு எல்லாம் வந்திருக்கோம்னு.
என்ன பண்றது, வந்தாச்சு தேவுடு காக்க வேண்டியது தான்னு உட்கார்ந்திருந்தோம்.
அப்ப அங்க வந்த என்னோட நண்பர் ஒருவருக்கு பெரிய சந்தேகம், எப்படி, இவுங்க நம்மளை படத்துக்கு தேர்வு செய்வாங்கன்னு. “நடிச்சு காட்ட சொல்லுவாங்காளா”
இல்லை “வசனம் பேசிக் காட்டச் சொல்லுவாங்களான்னு” ஒரேடியா புலம்பிக்கிட்டே இருந்தாரு.
அதுல இன்னொருத்தர் வேற, “எதுக்கு கவலைப்படுற, நாம தான் ஐந்தாறு நாடகத்துல நடிச்சிருக்கோம்,அதுவும் 300, 400 பேருக்கு முன்னாடியெல்லாம் நடிச்சிருக்கோம், அப்புறம் ஏன் பயப்பிடுறன்னு” அவரை சமாதானம் படுத்தினாரு. அவுங்க நம்மளை என்ன
செஞ்சுக்காட்டச் சொன்னாலும், பின்னி பெடலெடுத்திடணும்னு ஒரு முடிவோடு
தான் உட்கார்ந்திருந்தோம். மணியோ ஏழு ஆயிடுச்சு. ஃபிரெஷ்ஷப் பண்ண மேல போனவங்க இன்னும்
கீழே வரவே இல்லை. அப்பத்தான் வரவேற்புல இருந்தவங்ககிட்ட, மற்ற
ஆளுங்க, இந்த படத்தோட கதாநாயகன் இன்னைக்கு வராரு, அவருக்கு ஒரு சூட் அறை ஒண்ணு புக் பண்ணுங்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தது எங்க
காதுல விழுந்துச்சு (ஒட்டெல்லாம் கேக்கலை!!!, நாங்க வரவேற்புல
உட்கார்ந்திருந்ததுனால காதுல விழுந்துச்சு). பேசாம இன்னைக்கு ராத்திரி ஒன்போது,ஒன்பதரை மணி வரை இங்கேயே இருந்தா, “இளைய தளபதி” விஜய்யையும்
பார்த்துட்டு போயிடலாம். ஒரு வேளை நாம இந்த படத்துல நடிக்கிறதுக்கு தேர்வாகலைன்னாலும்
பரவையில்லை, அவரையாவது பார்த்த ஒரு திருப்தி கிடைக்கும்னு நாங்க
பேசிக்கிட்டு இருந்தோம். ஒரு வழியா 7.30 மணிக்கு இயக்குனர், அப்புறம்
உதவி இயக்குனர் எல்லாம் கீழே வந்தாங்க. நாங்க உட்கார்ந்திருந்ததுக்கு பக்கத்துல ஒரு
சின்ன அறைக்குள்ள போய் கதவைச் சாத்திக்கிட்டாங்க. ஆஹா, இந்த அறைக்குள்ள
தான் தேர்வு பண்ணப்போறாங்கன்னு தெரிஞ்சுப் போச்சு. ஐந்து நிமிஷத்துக்கெல்லாம், அந்த உதவி இயக்குனர் வெளியே வந்து ரெண்டு எடுபிடிங்க கிட்ட என்னமோ பேசிட்டு
உள்ளே போயிட்டாரு. உடனே ஒரு எடுபிடி அந்த அறையோட கதவுக்கிட்ட போய் நின்னாரு. இன்னொரு
எடுபிடியோ, எங்க பக்கத்துல வந்து நின்னு, என்னோட ஒரு நண்பரை கூப்பிட்டு அந்த அறைக்குள்ள போகச் சொன்னாரு. எங்களுக்கு
இப்பத்தான் உண்மையிலேயே டென்ஷன் எகிற ஆரம்பிச்சுது. வேலைக்கு இன்டர்வியூக்கு போகும்போது
கூட இப்படி ஒரு டென்ஷன் இல்லை, இதுக்கு போய் இப்படி டென்ஷனா இருக்குதேன்னு
நான் நினைச்சுக்கிட்டு இருக்கும்போதே, அந்த நண்பர் வெளியே வந்துட்டாரு.
உடனே இன்னொரு நண்பர் உள்ளே போனாரு. நாங்க முத நண்பரை பேட்டி எடுக்க ஆரம்பிச்சுட்டோம்.
“என்ன கேட்டாங்க, என்ன செய்ய சொன்னாங்கன்னு” சரமாரியா அவரை கேட்டோம்.
அவர் பதில் சொல்லிக்கொண்டிருக்கும்போதே என்னைய உள்ள போகச் சொன்னாங்க.
நான் அந்த அறைக்குள்ள போனவுடனே, இயக்குனர் விஜய் என்னைய
அவருக்கு முன்னாடி இருந்த நாற்காலியில் உட்காரச் சொல்லி, என்னைய
பற்றி கேட்டாரு. நானும் உட்கார்ந்து என்னைய பற்றி சொன்னேன். நான் இந்த மாதிரி,இந்த மாதிரி, சிட்னில ஒரு ஐந்து குறு நாடகங்களை எழுதி, அதை மேடையேற்றி நடிச்சிருக்கேன். அப்புறம் இங்க வானொலிக்கு சில நிகழ்ச்சிகளை
தயாரிச்சு வழங்குறேன்னு சொன்னேன். இயக்குனர் விஜய்யும், சார்
நீங்க கண்டிப்பா இந்த படத்துல நடிக்கிறீங்கன்னு சொல்லி, எனக்கு
பக்கத்துல உட்கார்ந்திருந்த அவரோட இணை இயக்குனர் பிரசன்னாவிடம், சாரை “லாக்” பண்ணிக்கோன்னு சொன்னாரு. நான் எந்த மாதிரி காட்சில நடிக்க வேண்டியிருக்கும்னு
கேட்டேன்.
அப்ப அவர் நீங்க சந்தோனத்தோட ஒரு நாலைந்து நகைச்சுவை காட்சில வருவீங்கன்னு
சொன்னாரு. ஐந்து நாள் நீங்க படப்பிடிப்புக்கு வரவேண்டியிருக்கும்ன்னு சொன்னாரு. அப்ப
தான், அந்த உதவி இயக்குனர் கிருஷ்ணா, சார்
நீங்க இங்க கொஞ்சம் வந்து நின்னு, உங்களைப்பற்றி சொல்லுங்கன்னு
சொன்னாரு. முதல்ல எனக்கு ஒண்ணும் புரியலை. இப்பத் தானே என்னோட அருமை பெருமைகளை எல்லாம் என் வாயாலே சொன்னேன், மறுபடியும் சொல்லனுமா, என்னடா, இது பேசாம ஒரு அல்லக்கையை கூட்டிக்கிட்டு வந்திருக்கலாம் போலன்னு நினைச்சேன்(சும்மா
தாங்க, உண்மையில அப்படி எல்லாம் நினைக்கவேயில்லை). அப்புறம் தான்
தெரிஞ்சுது, அவர் வீடியோ ரெகார்டிங் பண்றாருன்னு. சரின்னு, அவர் நிக்க சொன்ன இடத்துல நின்னு மறுபடியும் என்னைப்பற்றி சொல்லி முடிச்சேன்.
வெளியே வருவதற்கு முன்னாடி அந்த இணை இயக்குனர், சார், உங்க போன் நம்பரை சொல்லுங்க, நாங்க நாளைக்கு படப்பிடிப்பை ஆரம்பிச்சுடுவோம், அதனால
கண்டிப்பா இந்த வாரத்துல உங்களை கூப்பிடுவோம்னு சொன்னாரு. நானும் என் போன் நம்பரை கொடுத்திட்டு
வெளியே வந்தேன்.
நான் வெளியில வந்தவுடனே, என்னோட பெரிய மாகாராணி, அப்பா! நீங்க மட்டும் நிறைய டிராமால நடிக்கிறீங்க, நான்
ரெண்டு டிராமால மட்டும் தான் நடிச்சிருக்கேன், அதனால நானும் உங்களோட
நடிக்கணும்னு ஒரே அழுகை. (எனக்கே இயக்குனர் சொன்னதை நம்புறதா, வேண்டாமான்னு ஒரே சந்தேகம், இதுல இவுங்க வேற நடிக்கணுமாம், என்ன பண்றது!!!) அவுங்க அழுறதைப் பார்த்த வீட்டு அம்மணி, சின்ன மகாரணியை என்கிட்ட கொடுத்துட்டு, அவுங்க பெரிய
மகாரணியை கூட்டிக்கிட்டு, அந்த அறைக்குள்ள போய், இயக்குனரிடம் இந்த படத்துக்கு, குழந்தை நட்ச்சத்திரம்
தேவைப்படுமான்னு கேட்டிருக்காங்க. அவுங்க இந்த படத்துக்கு தேவை இல்லை. இருந்தாலும்
உங்க குழந்தையை பேச சொல்லுங்கன்னு சொல்லி, பெரிய மகாரணியிடம்
அவுங்களைப் பற்றின கேள்விகள் எல்லாம் கேட்டு அதை வீடியோ ரெகார்டிங் பண்ணிக்கிட்டாங்க.
அதற்கு பிறகு தான், பெரிய மகாராணி முகத்துல சிரிப்பே வந்துச்சு.
அப்புறம் நாங்க ஒரு வழியா வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.
எங்களுக்கு அந்த வெள்ளிக்கிழமையிலிருந்து அடுத்த திங்கட் கிழமை
வரைக்கும் ஈஸ்டர் விடுமுறை. இந்த லீவுல நம்மளை படப்பிடிப்புக்கு கூப்பிட்டாங்கன்னா
பரவாயில்லை,
ஆபிஸுக்கு லீவு போட வேண்டாமேன்னு நினைச்சுக்கிட்டு வியாழக்கிழமை வரைக்கும் இருந்தேன்.
போன் ஒன்றும் வரவே இல்லை. எனக்கோ வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும்
கான்பெரால, நண்பர்கள் எல்லோரும் ஒன்று கூடுறதுனால, அங்க போக வேண்டியிருந்தது. படக்குழுவிடமிருந்து போன் வந்தா, போக வேண்டாம்னு நினைச்சேன். வியாழக்கிழமை இரவு வரை போன் வரலை. அதனால மறு நாள்
காலைல நான் குடும்பத்தோட கிளம்பி கார்ல கான்பெரா போனேன். அங்க போய் இறங்கி மதிய சாப்பாடை
சாப்பிட ஆரம்பித்த போது தான் போன் வருது, இந்த மாதிரி நாளைக்கு காலைல இந்த இடத்துக்கு சரியா 10 மணிக்கு வந்துடுங்கன்னு.
நான் இருக்கும் இங்கில்பர்ன்னுக்கும் கான்பெராவுக்கும் 250 கிலோமீட்டர். என்ன பண்றதுன்னு
ஒண்ணும் புரியலை. சரி, எப்படியும் நாலைந்து காட்சில நடிக்கணும்னு
சொல்லியிருக்காங்க, அதனால இந்த முத காட்சி படப்பிடிப்பில கலந்துக்காம
அடுத்த காட்சியோட படப்பிடிப்பில் கலந்துக்கலாமான்னு ஒரு யோசனை உள்ளுக்குள்ள ஓடிணுச்சு .
நான் என்ன முடிவு எடுத்தேன்னு அடுத்த பதிவுல சொல்றேன்.
தலைவா திரைப்பட அனுபவம் - முதல் காட்சிக்கு தயாரானது
தலைவா திரைப்பட அனுபவம் - முதல் காட்சிக்கு தயாரானது
- இன்னும் சொல்கிறேன்
(https://www.facebook.com/rakshith.sk.31/posts/254307321385973?comment_id=974134¬if_t=like)
ReplyDeleteஎனது இனிய நண்பர் சரவணன் (ஸ்கூல் பையன் - http://schoolpaiyan2012.blogspot.com/) முக நூலில் பகிர்ந்து கொண்டதன் மூலம் உங்கள் தளம் அறிந்தேன்... தொடர்கிறேன்...
தொடர வாழ்த்துக்கள்...
தங்களின் அறிமுகம் கிடைத்தது மிக்க சந்தோஷம். நானும் தங்களை பின் தொடர்கிறேன்.
ReplyDelete