“ஏங்க
உங்க நண்பர் செந்திலோட தம்பிக்கு நாளைக்கு தானே கல்யாணம்?” என்று கேட்டாள்
அர்ச்சனா.
“ஆமா அர்ச்சனா. நம்மளால தான் போக முடியலை. கண்டிப்பா
குடும்பத்தோட வறேன்னு வேற சொல்லியிருந்தேன்.” என்றான் முருகன்.
“வரலைன்னு போன் பண்ணி சொல்லிட்டீங்களா?”
“நேத்தே போன் பண்ணிட்டேன். அவனை காட்டிலும் அவன் தம்பிக்கு
தான் ரொம்ப வருத்தம்” என்றான் முருகன்.
“சரி நாளைக்கு கல்யாணம் முடிஞ்ச பிறகு அவருக்கு போன் பண்ணி
பேசிடுங்க” என்றாள் அர்ச்சனா.
“போன் பண்றதை விட, நாளைக்கு போஸ்ட் ஆபிஸ் போய் ஒரு வாழ்த்துத்
தந்தியை கொடுத்துட்டு வரேன்” என்றான்.
“என்னது தந்தியா, அதுவும் இந்த காலத்துல!, பேசாம ஒரு போன்
பண்ணிங்கன்னா வேலை முடிஞ்சுடும். கல்யாண மாப்பிள்ளைக்கும் சந்தோஷமா இருக்கும். அதை
விட்டுட்டு பெருசா தந்தி கொடுக்க போறாராம்” என்று சலித்து கொண்டாள் அர்ச்சனா.
அதற்கு முருகன், “போன் பண்ணி பேசுனா, கொஞ்ச நாள்ல மறந்துடுவாங்க.
இதுவே ஒரு தந்தி கொடுத்தா, அது ஒரு ஞாபக பொருளா இருக்கும். நம்ம கல்யாணத்துக்கு வந்த தந்திகளை
இன்னமும் நான் பத்திரமா வச்சிருக்கேன்” என்றான்.
“அந்த அழகை தான் நான் பார்த்திருக்கேனே. என்னமோ பண்ணுங்க”
என்று அங்கிருந்து நகர்ந்தாள் அர்ச்சனா.
மறு நாள் மாலை கல்யாண சத்திரத்தில், “டேய் சந்தோஷ், இந்தா உனக்கு ஒரு வாழ்த்துத் தந்தி வந்திருக்கு” என்றான் செந்தில்.
“என்னது வாழ்த்துத் தந்தியா!!!” யாரு அண்ணா அனுப்புனது?” என்று கேட்டான் கல்யாண
மாப்பிள்ளை.
“என்னோட நண்பன் முருகன் தான் அனுப்பியிருக்கான்” என்றான் செந்தில்.
ஒரு வாரம் சென்ற பிறகு, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள் அர்ச்சனாவும்,முருகனும். அப்போது வீட்டின் அழைப்பு மணியோசை கேட்டு அர்ச்சனா எழுந்து முருகனை
எழுப்பினாள்.
“என்னங்க! யாரோ வீட்டு பெல் அடிக்கிறாங்க. போய் பாருங்க” என்றாள்.
முருகனோ,”நீ போய் பாரு அர்ச்சனா” என்று கூறிவிட்டு, போர்வையை இழுத்திப்
போர்த்திக்கொண்டான்.
அர்ச்சனாவும் வாசல் கதவின் அருகில் வந்து, “யாரது”
என்று கேட்டாள்.
“மேடம், தந்தி” என்றான் போஸ்ட்மேன்.
“என்னங்க தந்தி வந்திருக்கு. கொஞ்சம் சீக்கிரம் வாங்களேன்” என்று
உள்ளே திரும்பி குரல் கொடுத்தாள்.
“நமக்கு தந்தியா!!” என்று ஆச்சிரியமாக கேட்டுக்கொண்டே வாசலுக்கு
வந்தான் முருகன்.
“நமக்கு யார் தந்தி கொடுக்க போறாங்க, ரெண்டு பேருக்கிட்டேயும்
செல் போன் இருக்கு. எதுவாயிருந்தாலும் அதுலேயே சொல்லிடுவாங்களே. எதுக்கு தந்தி கொடுக்கணும்.
ஏதாவது கேட்ட செய்தியா இருக்கப் போகுது. பயமா இருக்குங்க. நீங்களே வாங்குங்க” என்றாள்
அர்ச்சனா.
“தந்தின்னாலே கெட்ட செய்தி தானா? சரி நான் போய் தந்தியை வாங்குறேன்”
என்று கதவைத் திறந்து கையெழுத்து போட்டு தந்தியை பெற்றுக்கொண்டான்.
“தந்தி இறந்து விட்டது” என்று அந்த தந்தியில் இருந்தது.
“என்னது, தந்தி இறந்து விட்டதா?” என்னடி ஒண்ணுமே புரிய மாட்டேங்குது.
யாராவது சும்மா விளையாடுறாங்களா?” என்று அவளிடம் தந்தியை கொடுத்தான்.
“ஆமா, தந்தி இறந்து விட்டதுன்னு தான் போட்டிருக்கு”. எவனோ வேலை வெட்டி இல்லாதவன்
தான் இந்த மாதிரி கிறுக்குத் தனமா ஏதாவது செய்வான். சரி, வாங்க
போய் படுப்போம் என்று கூறி படுக்கையறைக்கு சென்றாள்.
மறு நாள் காலை, ஒரு கையில் காபியோடு, மற்றொரு கையில் பத்திரிக்கையோடு
வரவேற்பறையில் உட்கார்ந்து பத்திரிக்கையை படிக்க ஆரம்பித்தான் முருகன். அதில் முதல்
பக்கத்தில், இந்திய தபால் துறை, தனது 150 ஆண்டு கால தந்தி சேவையை, இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியை சமாளிக்க முடியாமல் நிறுத்திக்கொண்டது. மேலும்
கடந்த ஒரு வார காலத்தில் தந்தி சேவையை உபயோகப் படுத்திய தனது வாடிக்கையாளர்களுக்கு
“தந்தி இறந்துவிட்டது” என்று கடைசியாக ஒரு துக்கச்செய்தி தந்தியை கொடுத்து, தனது தந்தி சேவையை நிறுத்திக்கொண்டது என்று போட்டிருந்தது.
பின் குறிப்பு: இது தான் என்னுடைய 100வது பதிப்பு. நம் இந்திய
தபால் துறை,
பாரம்பரியம் மிக்க தந்தி சேவையை நிறுத்திக்கொண்டதின் பின்னனியில் இந்த கதை புனையப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment