தலைவா படத்தில் இடைவேளைக்கு பிறகு வரும் காட்சிகளை என்னுடைய விமர்சனத்தில்
நான் குறிப்பிட்டு சொல்லவில்லை. பொத்தாம் பொதுவாக இந்த படம் நாயகன் போன்ற படங்களின்
சாயல் இருக்கிறது என்று கூறியிருந்தேன். ஏற்கனவே இந்த படம், நிறைய தமிழ் படங்களின்
கலவை என்ற பேச்சு இருக்கிறது. மேலும் இந்த படத்தின் கதை ஒரு தொலைக்காட்சி சீரியலின்
கதை என்றும் சொல்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி, நான் ஏற்கனவே சொல்லியிருந்தது போல்,
இந்த படம், காலம் சென்ற என்னுடைய தந்தை மற்றும் தாத்தாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டிருக்கு.
படத்தில் அவர்களை களங்கப்படுத்துவது மாதிரி காட்சிகள் இருக்கின்றன,அதனால் இந்த படத்தை
வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கர்ணன் என்ற ஒருவர் கோர்ட்டில் மனு தாக்கல்
செய்திருக்கிறார். இவர் குறிப்பிட்டுள்ள அந்த இருவரை பற்றியும் ஒரு பத்திரிக்கை ஆராய்ந்து
ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. அதை படித்த பின், இந்த பதிவை போடலாம் என்று ஒரு
எண்ணம் தோன்றியது(நன்றி ஜூனியர் விகடன்). தலைவா படத்தில் சத்யராஜ் மற்றும் விஜய்யின்
கதாப்பத்திரங்கள் தன்னுடைய தாத்தாவான எஸ்.எஸ்.கந்தசாமி சேட்
மற்றும் தன்னுடைய தந்தையான எஸ்.கே.ராமசாமி சேட் ஆகியோர்களைப் போல் உள்ளது என்று கூறியிருக்கிறார்.
இது எந்த அளவுக்கு உண்மை என்று பார்ப்போம்.
எஸ்.எஸ்.கந்தசாமி சேட்
சுமார் நூறாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிலிருந்து மும்பையில் இருக்கும் தாராவி பகுதிக்கு
குடியேறி, தோல் பதனிடும் தொழிலை செய்து வந்திருக்கிறார். பின்னாளில் அவர் ஒரு தோல்
பதனிடும் தொழிற்சாலையையே நடத்தி, அதில் நம் தமிழர்களுக்கு நிறைய வேலை வாய்ப்பை கொடுத்திருக்கிறார்.
தன்னுடைய தொழிற்சாலையில், தொழிலாளிகளுக்கு சரியான சம்பளமும் கொடுத்திருக்கிறார். அதே
மாதிரி மற்ற தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும் சரியான சம்பளம் கிடைப்பதற்கு
வழி வகுத்திருக்கிறார். தாராவியில் தமிழர்களுக்கென ஒரு பிள்ளையார் கோவிலை அமைத்திருக்கிறார்.
இப்படி தான் அவர் அங்குள்ள மக்களின் தலைவனாக உயர்ந்திருக்கிறார். அவருடைய வளர்ச்சி
பிடிக்காதவர்கள், அவரை கொலை செய்திருக்கிறார்கள்.
தலைவா படத்தில்
சத்யராஜ் என்ன வேலை செய்கிறார் என்று சொல்லவில்லை. அவர் அங்கு நடக்கும் அநீதிகளை தட்டிக்
கேட்கிறார். தன்னுடைய மகனை கூடவே வைத்திருக்கவில்லை. அந்த பகுதி மக்களுக்கு பாதுகாவலனாக
இருக்கிறார். அவ்வளவு தான்.
எஸ்.கே.ராமசாமி
சேட் தன் தந்தை இறந்த பிறகு, அவருடைய இடத்தில் இருந்து அதே மாதிரி மக்களுக்கு நல்லது
செய்து வந்தார். அவர் மும்பை உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு மிகப்
பெரிய வெற்றி பெற்று, சிவசேனா கட்சிக்கு ஆதரவு தந்து, மேயர் பதவியை அந்தக் கட்சிப்
பெறுவதற்கு உதவி புரிந்தார். அந்த உதவியின் காரணமாகத்தான், இன்று சிவசேனா கட்சியில்
தமிழர்கள் உறுப்பினர்களாகவும் உயர்ந்த பொறுப்புகளில் இருக்கவும் முடிகிறது. அவர் தமிழ்நாட்டிற்கு
வந்திருந்தபோது மாரடைப்பால் மரணம் அடைந்திருக்கிறார். மும்பையிலுள்ள தமிழர்களின் போராட்டத்தால்,
அவருக்கு சொந்த ஊரில் இறுதிச் சடங்கை நடத்தாமல், மும்பையில் இறுதிச் சடங்கு நடைப்பெற்றது.
இதில் விஜய், தன்
கண் முன்பே தந்தை கொல்லப்பட்டதை தொடர்ந்து, தன் தந்தையின் ஸ்தானத்திற்கு வந்து, மக்களுக்கு
நல்லது செய்கிறார். ஆனால் அவர் தேர்தலில் எல்லாம் நிக்கவில்லை. அநியாயங்களை தட்டிக்
கேட்கிறார். இறுதியில் தன் தந்தையை கொன்றவனை பழி வாங்குகிறார். அவ்வளவு தான்.
பார்ப்போம், அந்த
மனு விசாரணைக்கு வரும்போது, இயக்குனரும்,தயாரிப்பாளரும் என்ன சொல்கிறார்கள் என்று.
ஒருவேளை திரைமறைவு காட்சிகள் அரங்கேறி, கோர்ட் படி ஏறாமலே வழக்கு வாபஸ் பெற்றாலும்
ஆச்சிரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
No comments:
Post a Comment