Sunday, August 11, 2013

தலைவா – விமர்சனம்


ஆஹா! 1008 பிரச்சனைகளை கடந்து தலைவா படம் வெளிநாட்டிலும் , இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வெளியாகிவிட்டது.இன்னும் தமிழ்நாட்டில் தான் வெளியாவில்லை. நானும் என்னுடன் நடித்த மற்ற நண்பர்களோடு நேற்று மாலை சென்று படத்தை பார்த்தேன். இந்த படம் ஒரு அரசியல் படம், அரசாங்கத்தை விமர்சிக்கக்கூடிய வகையில் வசனகள் இருக்கிறதுன்னு ஒரு புரளியை கிளப்பி இந்த படத்தை தமிழ்நாட்டில சொன்ன தேதிக்கு திரையிடாம பண்ணிட்டாங்க. இதுல வெடி குண்டு மிரட்டல் வேற. அதுக்கும் மேல இந்த படத்துல  எங்கப்பாவையும், தாத்தாவையும் இழிவுப் படுத்தியிருக்காங்கன்னு கோர்ட்ல வேற ஒருத்தர் கேஸ் போட்டிருக்கிறார். இப்படி ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை கிளப்பிய படம். அந்த எதிர்ப்பார்ப்பை எல்லாம் பூர்த்தி செஞ்சுதான்னா, பெரிய கேள்விக்குறி தான் பதில். இந்த படத்துல புதுசா எந்த ஒரு விஷயத்தையும் இயக்குனர் சொல்ல வரலை. இன்னும் சொல்லப் போனா நாயகன், தேவர் மகன், பாட்ஷா, புதிய பறவை போன்ற படங்களை எல்லாம் சேர்த்து அரைச்ச புளிச்ச மாவு தான் இந்த தலைவா. அதில் கொஞ்சம் இந்த காலத்துக்கு ஏற்ப வெளிநாட்டு காட்சிகள். அப்புறம் முக்கியமா நாங்கள் நடித்த நான்கு காட்சிகளும் இடம்பெற்றுவிட்டன. என்ன, எங்களோட வசனங்களில் கொஞ்சம் கையை வச்சுட்டாங்க. அப்புறம் நாங்கள் நடித்த சில காட்சிகளில் கொஞ்சம் நீளத்தையும் குறைத்து விட்டார்கள். ஆனா இப்படி எல்லாம் குறைச்சும் கூட படம் கிட்ட தட்ட மூன்று மணி நேரம் ஓடுது.

25 வருட்டங்களுக்கு முன் பாம்பேயில் ஏற்பட்ட ஒரு கலவரத்தில் சத்யராஜ் தன்னுடைய மகனை நாசரிடம் ஒப்படைக்கிறார். அந்த மகன் தான் விஜய், பின்னாளில் சிட்னியில் மினரல் வாட்டர் கம்பெனியை சந்தானத்துடன் சேர்ந்து நடத்துகிறார். மனசுக்கு பிடித்த வேலையாக , ஒரு நடனப் பள்ளியையும் நடத்துகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் அமலாபாலை சந்தித்து, கண்டவுடன் காதல் கொள்கிறார். இந்த நேரத்தில் சந்தானமும் அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார். சந்தானத்துக்கு போட்டியாக சிட்னியில் 40 வயது பிரம்மச்சாரிகள் ஏழெட்டு பேரும் அமலாபாலை காதலிக்கும் நோக்கத்தில் அவர் பின்னாடி சுற்றுகிறார்கள். இந்த பிரமாச்சாரிகள் கூட்டத்தில் தான் நானும் ஒருவன். சிட்னியில் நடக்கும் நடனப்போட்டியில். விஜய் வெற்றி பெறுவதை தடுக்க வில்லன் குழு சதி செய்ய, அதனை முறியடித்து விஜய் குழுவினர் பரிசுக்கோப்பையை வெல்கிறார்கள். பிறகு அமலா பாலும் விஜய்யை காதலிக்க ஆரம்பிக்கிறார். தன் தந்தைக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுக்கும் நோக்கத்தில் விஜய், அமலா பாலையும் அவரது தந்தை சுரேஷையும் அழைத்துக்கொண்டு மும்பை செல்கிறார். அங்கு நடக்கும் நிகழ்ச்சிகள், அவரை திரும்பியும் சிட்னிக்கு போக விடாமல் தடுக்கிறது. கடைசியில் தன் தந்தையை கொன்ற வில்லனை பழிவாங்குகிறார். இதை தான் இடைவேளைக்கு பிறகு நிறைய வன்முறை காட்சிகளோடு சொல்லியிருக்கிறார்கள்.

இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகி வேற. பாவம் அவர் எண்ணி ஒரு நான்கைந்து காட்சிகளில் தான் வருகிறார். பெரிதாக அவருக்கு வேலை ஒன்றும் இல்லை. முதல் பாதியில் விஜய்யை காதலித்த அமலாபால் என்ன ஆனார் என்பதை நீங்கள் திரையில் பார்த்துக்கொள்ளுங்கள். அவருடைய கதாப்பத்திரம் புதிய பறவையில் சரோஜா தேவியின் கதாப்பாத்திரம் போல் சித்தரிக்கப்பட்டிருக்கும். சத்யராஜுக்கு தம்பியாக பொன்வண்ணன் நடித்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு நாசர் தான் முதலில் நடிப்பதாக இருந்ததாம். சில பல காரணங்களால் அவருக்கு பதில் பொன்வண்ணன் நடித்திருக்கிறார். நாசர் நடித்திருந்தால் இன்னும் அந்த கதாபாத்திரத்துக்கு வலு சேர்ந்திருக்கும். முதல் பாதி வரைக்கும் தலைவா என்ற தலைப்புக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாமல் நகைச்சுவையோடு படம் நகரந்தது. ஆனால் இடைவேளைக்கு பிறகு படம் எப்படா முடியும் என்ற ஒரு அலுப்பு ஏற்படுகிறது.
எப்படிப்பட்ட படம் என்றே தெரியாமல், தலைப்பை மட்டும் வைத்து இது இப்படி தான் இருக்கும் என்று ஒரு வதந்தியை கிளப்பி, அது இப்போது அரசியல் காட்சிகள் எல்லாம் தலையிடக்கூடிய பிரச்கனை ஆனது தான் மிகப்பெரிய நகைச்சுவையே. படத்தில் நகைச்சுவை கம்மியாக இருந்தாலும், தமிழ்நாட்டில் நடக்கும் கூத்துக்கள் தான் இந்த படத்தின் உண்மையான நகைச்சுவை காட்சிகளே. இறுதியாக இயக்குனர் அடுத்த படத்திலையாவது தன் சொந்த சரக்கை நம்பி படம் இயக்கினால் கண்டிப்பாக அந்த படம் நன்றாக இருக்கும்.


பின் குறிப்பு: நான் இனி வரும் பதிவுகளில் என்னுடைய திரைப்பட அனுபவத்தை சொல்லப்போகிறேன். நான் இந்த படத்தில் வருவது வெறும் 2 நிமிடங்களுக்குள் தான். ஆனால் அதற்கு நான் நான்கைந்து நாட்கள் படப்பிடிப்பிற்கு செல்ல வேண்டியிருந்தது. அதிலும் இரு முறை படப்பிடிப்பிற்கு சென்று இரண்டு மணி நேரங்கள் காத்திருந்து கடைசியில் எங்கள் காட்சிகளை எடுக்காமல் திரும்பி சென்ற கதை எல்லாம் இருக்கிறது. 

3 comments: