Saturday, March 30, 2019

கல்லூரியின் 25ஆம் ஆண்டு-நினைவுகளின் ஓர் சங்கமம் - 1

தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி, கணினித்துறை  - 1993ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், நான் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்லத் தயாரானோம்.  சிலர் முதுநிலை படிப்பு படிப்பதற்கும், சிலர் வேலை தேடுவதற்கும் பிரிந்து சென்றார்கள். நானும் வேலை தேடுவதற்காக அவர்களை விட்டு பிரிந்து  சென்றேன். அப்படி இப்படி என்று இப்போது 25 ஆண்டுகள் முடிந்து விட்டது. 25ஆண்டுகள்  முடிந்ததையொட்டி,  எங்களுடன்  படித்த அனைத்துத் துறை நண்பர்களும் இதனை ஒரு விழாவாக கொண்டாட வேண்டும் என்று முடிவெடுத்து சென்ற ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் தேதி கொண்டாடினார்கள். அதில் நானும் கலந்து கொண்டேன்.  அந்த விழாவைத்தான் ஒரு குறுந்தொடராக பதிவிடுகிறேன்.
இந்த இடைப்பட்ட 25 ஆண்டுகளில் ஏறக்குறைய முதல் 15 ஆண்டுகள் வரை ஒரு சில நண்பர்களுடன் தொடர்பில் இருந்தேன். அதுவும் மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி மூலமாவாகவும் தான். நேரில் சந்திக்கவில்லை.  கடைசி 10 ஆண்டுகள் , வெறுமையின் காரணமாக (அப்பொழுது தான் என்னுடைய தாயார் என்னை விட்டு பிரிந்த காலம்) அந்த ஒரு சில நண்பர்களோடும் நான் தொடர்பை துண்டித்துக்கொண்டேன். மனது வேறு எதிலும் ஈடுபாடு இல்லமல் இருந்த காலகட்டம் அது. அந்த துக்கத்திலிருந்து வெளியே வருவதற்காக, தமிழை மட்டும் நண்பனாக ஆக்கிக்கொண்டேன். அதாவது தமிழ் பள்ளியில் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்துக்கொண்டும், குறுநாடகங்களை எழுதி மேடைகளில் நெறியாள்கை செய்து கொண்டும், வலைப்பூவில் எழுதிக்கொண்டும் இருந்தேன். 

சென்ற வருடம் ஆரம்பத்தில் எங்கள் கல்லூரியின் இயற்பியல் துறை, கணிதத்துறை, கணிணித்துறை நண்பர்கள் எல்லாம் சேர்ந்து 25ஆம் ஆண்டு விழாவை நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து ஒரு whatsup குழுவை ஆரம்பித்து, தங்களுடன் பயின்ற மாணவர்களை எல்லாம் அதில் சேர்க்க ஆரம்பித்தார்கள். 

இந்த சமயத்தில் தான் இங்கு இருக்கும் நண்பரின் முலமாக  சிங்கப்பூரில் இருக்கும் நண்பர்  பழனியப்பனோடு மீண்டும் தொடர்பில் இருக்க ஆரம்பித்தேன். பழனியப்பன் என்னையும் அந்த குழுவில் இணைத்து விட்டார்.  ஒவ்வொரு துறையில் இருந்து குறைந்தது இரண்டு பேரை விழா ஏற்பாட்டாளர்களாகவும், அந்த துறையின்  பிரதிநிதிகளாகவும் நியமித்து விழாவிற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தார்கள். விழா நாளன்று ஆண்கள் எல்லோரும் ஒரே மாதிரியான டிஷர்ட்டும், பெண்கள் எல்லோரும் ஒரே மாதிரியான புடவையையும் அணிய வேண்டும் அன்று முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளையும், மறுபுறம் அன்றைக்கு காலை,மதியம்,மாலை நேரங்களில் என்ன மாதிரியான உணவு வகைகள்  இருக்க வேண்டும் என்றும் அதற்கான ஏற்பாடுகளையும், அடுத்து ஆசிரியர்களுக்கு  என்ன மாதிரியான நினைவுப்பரிசை வழங்க வேண்டும் என்று வேலைகள் அனைத்தையும் ஏற்பாட்டாளர்கள் மும்முரமாக பார்க்கத் தொடங்கினார்கள். இந்த  வேலைகள் எல்லாம் கூட அவர்களுக்கு கடினமாக இருந்திருக்காது, ஒரே ஒரு வேலையைத் தவிர, அது என்னவென்றால்....
---தொடரும் 

11 comments:

 1. அது என்ன?

  தொடர்கிறேன்.

  ReplyDelete
 2. ஆவலுடன் காத்திருக்கிறேன்...

  ReplyDelete
 3. ////அது என்னவென்றால்....?????/////
  அது என்னவென்று எனக்கு தெரியும் அடுத்த பதிவை படித்துவிட்டு எது என்னவென்று சொல்லுகிறேன்

  ReplyDelete
 4. அழகிய கெட்டுகெதர்.

  //ஒரே ஒரு வேலையைத் தவிர,//
  எல்லோரையும் எப்படி ஒரு நாளில் ஒன்று சேர்ப்பது என்பதுதானெ அது?:)

  ReplyDelete
 5. படித்த கல்லூரியில் மீண்டும் காலடி எடுத்துவைப்பதைப் போன்ற மகிழ்வு வேறேது
  தொடருங்கள் நண்பரே
  தங்களின் மகிழ்வினைப் பகிர்ந்து கொள்ளக் காத்திருக்கிறேன்

  ReplyDelete
 6. கல்லூரி நண்பர்களுடனான சந்திப்பு. மகிழ்ச்சி.

  மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

  ReplyDelete
 7. நல்லதொரு சந்திப்பு. மகிழ்ச்சி தரும் தருணங்கள் இல்லையா..

  அது என்ன என்று தெரிந்து கொள்ளத் தொடருகிறோம்

  துளசிதரன், கீதா

  ReplyDelete
 8. 6 முறை இது போன்ற சந்திப்பில் கலந்துகொண்டதால் ஏற்பட்ட அனுபவத்தில் சொல்கிறேன். நிச்சயம் அந்த சந்திப்பு,கவலை ஏதும் இல்லாத இனிமையான மாணவர் பருவத்திற்கு உங்களை இட்டுச் சென்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.சுவையான அந்த அனுபவங்களை அறியவும் அந்த கடினமான வேலை என்னவென்று அறியவும் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 9. இனிய மகிழ்வான சந்திப்பு. தொடர்கிறோம்

  துளசிதரன்

  ReplyDelete
 10. ஆஹா இப்போதுதான் இதைப்படிக்கிறேன்... நண்பரே சொல்லவேயில்லே...

  ReplyDelete
 11. -நினைவுகளின் ஓர் சங்கமம் ...அருமை....

  ReplyDelete