Thursday, January 5, 2012

மயக்கம் என்ன திரைப்படமும் ஒரு ஆங்கில பெண்மணியும்

பொதுவாக நான் திரையரங்குக்கு சென்று படம் பார்ப்பதில்லை, காரணம் எங்கள் வீட்டு மகாராணிகளை வைத்துக் கொண்டு எங்களால் படம் பார்க்க முடியாது என்பதால் தான். அதனால் torrents இல் டவுன்லோட் பண்ணி ஒரு படத்தை நானும் என் வீட்டு அம்மணியும் ஒரு வாரம் பார்ப்போம். ஆனால் இப்போது வீட்டு அம்மணியும், மகாராணிகளும் ஊருக்கு போயிருப்பதால்(நிம்மதியாக) திரையரங்குக்கு சென்று படம் பார்க்கலாம் என்று எண்ணி   நண்பர்களுடன் மயக்கம் என்ன என்னும் படத்திற்கு சென்றேன். அங்கே ஒரு 10 பேர் இருந்தார்கள். சரி நாமும் அந்த ஜோதியில் ஐக்கியமாவோம் என்று நாங்கள் அமர்ந்தோம். சற்று நேரத்தில்,  ஒரு வெள்ளைக்கார பெண்மணியும்,  அவருடைய 2 குழந்தைகளும் வந்தார்கள்.  எங்களுக்கோ ஒரே ஆச்சிரியம். சரி அவர்கள் திரையரங்கு மாறி வந்திருப்பார்கள்நம்மை எல்லாம் பார்த்தவுடன்  போய் விடுவார்கள் என்று நினைத்தோம்.  ஆனால் அவரோ எங்களை எல்லாம் பார்த்து சிரித்து  கொண்டு வசதியாக உட்கார்ந்து கொண்டார்கள். அந்த குழந்தைகளோபெரிய!! பாப்கார்ன் பாக்கெட்டை மடியில் வைத்துக்கொண்டு  கொறித்துக் கொண்டிருந்தார்கள். நிமிடம் ஆனது, அவர்கள் எழுந்து போகிற மாதிரி தெரியவில்லை. போதாக்குறைக்கு அந்த பெண்மணியோ அடிக்கடி கை கடிகாரத்தை பார்த்து, எப்படா படத்தை போடுவார்கள் என்று ஆர்வத்தோடு உட்கார்ந்து இருந்தார்கள். சரி தான், ரஜினிக்கு ஜப்பான் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறாகள். அது போல அவருடைய மாப்பிள்ளைக்கு இங்கு சிட்னியில் வெள்ளைக்கார ரசிகர்கள் இருக்கிறார்கள் போல என்று நினைத்துக் கொண்டேன். அதிலும் இந்த பெண்மணி தான் ரசிகர் மன்ற தலைவி போல ஏன்னா, இந்த படம் திரையிடப்பட்ட முதல் காட்சிக்கே வந்து விட்டார்களே. சரி படம் முடிந்தவுடன், அவர்கள் குடும்பத்தை ஒரு புகைப் படம் எடுத்து தனுஷுக்கு அனுப்பலாம் என்று நினைத்திருந்தேன். படம் ஆரம்பிக்க ஒரு சில நிமிடங்கள் இருக்கும் தருவாயில், அந்த ஆங்கில குடும்பத்துக்கு முன் வரிசையில் இருந்த தம்பதி, அவர்களிடம் ஏதோ கூறினார்கள். உடனே அந்த வெள்ளைக்கார பெண்மணி முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு எங்களை நோக்கி கையை அசைத்து விட்டு சென்று விட்டார்கள். அடடா, தனுஷுக்கு கொடுப்பினை அவ்வளவுதான் போல இருக்கு. அவர்கள் புகைப்படத்தை தனுஷுக்கு அனுப்பலாம் என்ற ஆசை, நிராசையாக போயி விட்டதை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டு படத்தை பார்க்க ஆரம்பித்தேன். சை, அந்த தம்பதி அப்படி என்ன தான் சொல்லி அவர்களை வெளியேற்றி இருப்பார்கள், என்று ஒரு பக்கம் மண்டைக்குள் குடைந்து கொண்டிருந்தது. சரி, இடைவேளையில் அவர்களிடமே கேட்டு விடலாம் என்று இருந்த எனக்கு, அவர்கள் இடைவேளையில் மாயமாக மறைந்து விட்டார்கள். சரி, நாம தான் ஏதோ தப்புக் கணக்கை போட்டுட்டோம் போல. தனுஷுக்காவது, வெள்ளைக்கார ரசிகர்களாவது என்று ஒரு வழியாக மனதை சாந்தப்படுத்திக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். 

1 comment:

  1. "மயக்கம் என்ன" படத்தின் டைட்டலை கேட்ட உடனே ஏதோ மலையாள "பிட்டு" படமோ என நினைத்தேன் .... தனுஷ் படம் என்று நீங்கள் சொன்ன பிறகுதான் கொஞ்சம் ஆசுவாசப்படுதிக் கொண்டேன் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete