Tuesday, January 17, 2012

உச்சிதனை முகர்ந்தால் - விமர்சனம்

ஈழத்தில் நம் ரத்த பந்தங்கள் பட்ட கஷ்டங்களை, அப்படியே தத்ரூபமாக, எந்த வித மசாலாக்களையும் சேர்க்காமல் தைரியமாக எடுத்ததற்காக இயக்குனர் புகழேந்திக்கு ஒரு மிகப் பெரிய நன்றி.  மட்டக்களப்பு பகுதியில், ஈவு இரக்கம் இல்லாத மிருகங்களின் காமப் பசிக்கு இரையாகி, கருகி போன ஒரு இளம் மொட்டுவின் கதையே இந்த படம்.  இந்த படத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் கண்ணீர் ஆறாக பெருக்கெடுக்கும், இதயம் கனத்து போகும். இந்த அளவுக்கா நம் தமிழ் இனத்தவர்கள் கொடுமை படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று எண்ணி மனது கலங்கும்.  இன்னும் இந்த மொட்டு போல் எத்தனை, எத்தனை ஆயிரம் மொட்டுக்கள், மலர்ந்த உடனே கருகிப் போயிருக்குமோ என்று என்னும் போது, நம் மனது பாறாங்கல்லாகி விடுகிறது. அந்த மொட்டுக்கள் பெண்மையை உணர ஆரம்பிக்கும் பொழுதே, அந்த பாவிகள் அவர்களின் பெண்மையை கசக்கி எறிந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது மனது அப்படியே பதறுகிறது. 

தமிழ் நாட்டில், ஈழச் சகோதரர்களுக்காக ஆதரவு குரல் கொடுத்து வரும் சத்யராஜ் மற்றும் அவரது மனைவி சங்கீதாவிடமும்,  ஆதரவு நாடி, கள்ளத் தோனியில் வருகிறார்கள் 13 வயது புனிதவதியும் , அவரது தாயாரும். இதில் புனிதவதி, வெறி பிடித்த ராணுவத்தினரால் கேங்க் ரேப் செய்யப்பட்டு 5 மாத கர்ப்பமாக இருக்கிறார். அவரைப் பெற்ற தாயோ, தன் மகளுக்கு அந்த வெறியர்களின் மூலம் ஏற்பட்ட அவமான சின்னத்தை கலைக்க வேண்டும் , அதனால் தன் மகளின் உயிருக்கு ஆபத்து என்றாலும் பரவாயில்லை என்று சொல்கிறார். ஆனால் சத்யராஜ் மற்றும் சங்கீதாவின் பிடிவாதத்தால், அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்கிறார். ஒரு பக்கம் தன் மகளின் இந்த நிலமையை எண்ணி அழுவதும், மறு பக்கம் தன் கணவன் உயிரோடு இருக்கிறானா, இல்லையா என்று கவலைப் படுவதுமாக இருக்கிறாள் அந்த தாய். இந்நிலையில், புனிதவதியின் தந்தையை சிங்கள ராணுவம் சுட்டுக் கொன்ற விஷயம் தெரிய வருகிறது. அதனால் அந்த தாய், புனிதவதியை சத்யராஜின் பாதுகாப்பில் விட்டு விட்டு மீண்டும் மட்டக்களப்பிற்கு திரும்பி செல்கிறார். புனிதவதியை மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவருக்கு, புனிதவதிக்கு எய்ட்ஸ் இருப்பது தெரிய வருகிறது. கடைசியில் எய்ட்ஸின் வீரியம் தாங்காமல், புனிதவதி இந்த மண்ணுலகை விட்டு மறைகிறாள்.

இந்த படத்தில் புனிதவதியாக நடித்திருக்கும் நீநிகா, உண்மையிலேயே புனிதவதியாக வாழ்ந்திருக்கிறார். இதில் நடித்த சத்யராஜ், சங்கீதா,நாசர், லக்ஷ்மி, சீமான், மற்றும் திருநங்கையாக நடித்தவர் என அனைவரும் மிக நேர்த்தியாக நடித்துள்ளனர். குறிப்பாக தமிழருவி மானியனின் வசனம், மிக எதார்த்தமாக, அவர்களின் வலிகள் நம் மனதிற்குள் ஊடுருவி செல்லுமாறு எழுதியிருக்கும் பாங்கை பாராட்டப் பட வேண்டும். உதாரணத்துக்கு சங்கீதா கூறும் இந்த வசனம், நம் உள்ளத்தை அப்படியே நொறுங்கச் செய்யும். 

"13 வயசுக் குழந்தை, அவளுக்கு ஒண்ணுமே தெரியலை, அவ பாடு
ஓடுறா, குதிக்கிறா, நமக்கு தான் பயமாக இருக்குது. அந்த குழந்தைக்கு 
போயி இப்படி ஆயிடுச்சுன்னு நினைக்கும் போது அழுகையா வருது.  
ஆனா, அவ அன்னைக்கு தான் வலிச்சுதுன்னு ரொம்ப சாதாரணமா 
சொன்னபோது மனசெல்லாம் ஒடைஞ்சு போயிடுச்சு. "

எல்லோரும் "happy birthday" என்று ஆங்கிலத்தில் பாடும் போது, புனிதவதி மட்டும் "பிறந்த நாள், இன்று பிறந்த நாள்" என்று தமிழில் பாடுவது இருக்கே,  உண்மையாக சாட்டையில் அடித்த மாதிரி இருந்தது. 

பின்னணி இசை மிகவும் அழகாக கையாளப் பட்டிருக்கிறது. டி. இமானின இசையில் "இருப்பாய் தமிழா நெருப்பாய்" என்ற பாடல் நம்மையும் உணர்ச்சிப் பொங்க வைக்கும். 

   "இருப்பாய் தமிழா நெருப்பாய் நீ!
    இழிவாய் கிடக்க செருப்பா நீ!
    ஓங்கி ஓங்கி புயல் அடிக்கிறதே
    ஒரு தீபம் அணையுமுன்னே துடிக்கிறதே
     தினம் பிணங்கள் பிணங்களாய் புதைகிறதே
     எம் பிள்ளையை மண்ணில் புதைப்பார்கள்
     அவள் தாய் மண்ணை அவர்கள் எங்கே புதைப்பார்கள்!!!!"

இறுதியாக, இந்த படத்தை ஒரு முறை கண்டிப்பாக பாருங்கள். நம் தமிழ் சகோதரர்களின் கஷ்டங்களையும், கொடுமைகளையும் வெறும் உதட்டளவு மட்டும் உணராமல், இந்த படத்தை பார்க்கும் இரண்டு மணிநேரமாவது உள்ளத்தளவில் உணருங்கள். 


1 comment:

  1. "உச்சிதனை முகர்ந்தால்" பார்த்ததில்லை ... ஆனால் உங்கள் விமர்சனம் அதன் வலிகளை உணர்த்துகிறது ... படித்து முடிக்கும் வேளையில் இதயமும் கண்களும் உடைந்து அழுகிறது ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete