Friday, March 7, 2014

பெண்ணியத்தைக் காத்து - உண்மையான சுதந்திரக்காற்றை சுவாசிப்போம்



அன்று நாம் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி வென்று சுதந்திரக்காற்றை சுவாசித்தோம். ஆனால் இன்றோ அந்தக்காற்றில் காமுகர்களின் விஷச் சுவாசம் கலந்துவிட்டபடியால், நம்முடைய சகோதரிகளால் சுதந்திரக்காற்றை நிம்மதியாக சுவாசிக்க முடியவில்லை. மகாத்மா காந்தி அவர்களின் கூற்றுப்படி பார்த்தால், நாம் இன்னும் உண்மையான சுதந்திரக்காற்றை சுவாசிக்கவில்லை, பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளைப் பார்த்துக்கொண்டே தான் சுதந்திரக்காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு பெண் என்றைக்கு தனியாக யாருடைய துணையுமின்றி நள்ளிரவில் நடந்து வருகிறாளோ அன்று தான் நாம் உண்மையான சுதந்திரக்காற்றை சுவாசிப்போம். ஆனால் அது என்றைக்கு நடக்கும் என்று தான் தெரியவில்லை.

அன்றைக்கு பெண் அடுப்படியிலேயே முடங்கிக்கிடக்கவும், பிள்ளைகளை பெற்றெடுக்க மட்டுமே பயன்படும் ஒரு மனித ஜடமாகவும் தான் பார்க்கப்பட்டாள். ஆனால் இன்றோ நிலமை வேறு. பெண்களால் முடியாதது எதுவுமில்லை. அவர்கள் உள்ளே நுழையாத துறை என்று ஒரு துறையும் இல்லை,அதனால் பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைத்து விட்டது, பாரதி கண்ட புதுமைப் பெண்களாக இன்று பெண் இனம் இருக்கிறது என்று மார் தட்டிக்கொள்கிறோம். ஆனால் உண்மையிலேயே அவர்களுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டதா? அவர்களுக்கு அடுப்படியை விட்டு வெளியே வருவதற்கு வேண்டுமானால் சுதந்திரம் கிடைத்திருக்கலாம். ஆனால் காமுகர்களிடமிருந்து என்றைக்கு அவர்களுக்கு விடுதலை கிடைக்கப்போகிறது?.


பெண்கள் அடக்க ஒடுக்கமாக ஆடை அணியாமல், பார்ப்பவர்களின் மனதை சலனப்படச் செய்வதால் தான், அவர்களுக்கு எதிரான அநீதிகள் அதிகமாக நடக்கிறது என்று பரவலாக ஒரு பேச்சு இருக்கிறது. அந்த கூற்று உண்மையானால், பிறகு ஏன் வயதுக்கு கூட வராத,உலகம் என்றால் என்னவென்று தெரியாத இளம் மொட்டுக்கள் சீரழிக்கப்படுகிறார்கள்? குடிசையில் பெற்றோருடன் உறங்கும் பத்து வயதேயான குழந்தையை, தூக்கிக்கொண்டு போய் சீரழித்து, கொன்று மரத்தில் நிர்வானமாக தொங்க விட்டதற்கு, அந்த குழந்தை உடுத்திய ஆடை தான் காரணமா? வேலைக்குச் சென்று, திரும்பி வரும் வழியில் சீரழித்து கொலை செய்தது, அவரின் ஆடையால் தானா? அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியவர்களையும் இந்த மிருகங்கள் விட்டு வைப்பதில்லை. இப்படி வயது வித்தியாசமின்றி பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகள் எல்லாவற்றிற்கும் காரணம் அவர்களின் உடுப்பு தான் என்றால் அது வெறும் நொண்டிச்சாக்காகும்.


உண்மையை சொல்லவேண்டுமென்றால், பார்க்கும் ஒவ்வொரு பெண்ணையும், தன் தாயாகவும், சகோதரியாகவும் பார்க்க தவறுவதால் தான் பெண்களுக்கு எதிராக ஏற்படும் அநேக கொடூரங்களுக்கும் காரணம். அதனால் மகளிர் தினமான இன்று பெண்ணியத்தைக்காப்போம் என்று சங்கல்பம் எடுத்துக்கொண்டு, உண்மையான சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஆரம்பிப்போம். 


சகோதரிகளே, கீழே குறிப்பிட்டுள்ள எண்களை குறித்துவைத்துக்கொள்ளுங்கள். மற்ற சகோதரிகளுடனும் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.    

(நன்றி ஜூனியர் விகடன்)

ஃபேஸ்-புக், ட்விட்டர் போன்ற சமூக வலை​தளங்களில் யாராவது மர்ம நபர்கள் பெண்களைப் பற்றி ஆபாச போட்டோவையோ செய்திகளையோ பரப்பினால், அதுபற்றி சென்னை சைபர் க்ரைம் போலீஸ் பிரிவுக்குத் தகவல் தெரிவிக்கலாம். சென்னை வேப்பேரியில் உள்ள கமிஷனர் ஆபீஸில் உதவி கமிஷனர் ஜான்ரோஸ் தலைமையில் இந்தப் பிரிவு செயல்படுகிறது.

இதன் போன் நம்பர்: 044 23452350.

ஏதேனும் குற்றங்கள் என்றால், அவசர உதவி போன் எண் 100-க்கு தகவல் சொல்லலாம். அல்லது, எஸ்.எம்.எஸ். என்றால், 95000 99100 எண்ணுக்குத் தகவல் அனுப்பலாம்.

ஐ.டி. நிறுவனங்கள் அதிகம் உள்ள ஏரியாக்களின் காவல் நிலைய போன் நம்பர்கள்.

கேளம்பாக்கம்: 044 27474274.
தாழம்பூர்: 044 274 35 301.





14 comments:

  1. காவல்துறை பற்றிய தகவலுக்கு நன்றி சகோ! ஆடையால்தான் பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுறாங்கன்னு சொல்றது படு அபத்தம்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

      Delete
  2. அருமையான பகிர்வு! ஆடைதான் பெண்களின் பாலியல் தொந்தரவுக்கு காரணம் என்பது நொண்டிச்சாக்கு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சுரேஷ்.

      Delete
  3. அவசியமான பதிவு சகோ!
    இந்த நம்பர்களை குறித்துவைத்திருக்கிறேன்
    என் மாணவிகளுக்கு சொல்ல.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!
      கண்டிப்பாக சொல்லி, விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

      Delete
  4. சரியாகச் மிகச் சரியாகச் சொன்னீர்கள்... தனி மனித ஒழுக்கம் வளர வேண்டும்... அருமையான கருத்துக்களுக்கு பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி டிடி. சரியா சொன்னீங்க, தனி மனித ஒழுக்கம் வளர வேண்டும் என்று.

      Delete
  5. பெண் விடுதலைக்காக போராடிய பாரதி இருந்திருந்தால் கயவர்களை கண்டு கொதித்திருப்பார். தங்கள் ஆதங்கம் கண்டு பெரும் மகிழ்ச்சி யடைந்தேன். ஆடை மீதும் பழியை போட்டு அட்டகாசமும் செய்யும் ஆடவரை கடுமையாக தண்டிக்க வேண்டும். நல்ல தகவல்.

    பாதுகாப்புகுரிய தகவல்களையும் பகிர்ந்து கொண்டமை சிறப்பே, நன்றி சகோ! வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ!

      நம் நாட்டில் பெண்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தும் கயவர்களுக்கு தண்டனை வழங்கும் சட்டத்தை இன்னும் கடுமையாக்க வேண்டும்.

      Delete
  6. Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா

      Delete
  7. தனி மனித ஒழுக்கம் இல்லாமை தான் மிகப் பெரிய காரணம்......

    சிறப்பான பகிர்வு. பாராட்டுகள்.

    ReplyDelete
  8. "மகாத்மா காந்தி அவர்களின் கூற்றுப்படி பார்த்தால், நாம் இன்னும் உண்மையான சுதந்திரக்காற்றை சுவாசிக்கவில்லை, பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளைப் பார்த்துக்கொண்டே தான் சுதந்திரக்காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்".
    முற்றிலும் உண்மை...!

    ReplyDelete