இதுவரைக்கும்
என் அத்தை, அதாவது
வீட்டு அம்மணியோட அம்மா மூன்று முறை இங்கு சிட்னிக்கு வந்திருக்காங்க. முதல் தடவை
எங்க முதல் மகாராணி பிறக்கும் சமயத்தில ரொம்பவும் சந்தோஷமா வந்தாங்க. இங்க வந்த
பிறகு தான் அவுங்களுக்கு தெரிஞ்சுது, “சொர்க்கமே என்றாலும்
அது நம்ம ஊரு தான்னு”,அதனால ஆறு மாச விசாவுல வந்துட்டு
ரெண்டே மாசத்துல ஊருக்கு திரும்பி போயிட்டாங்க. போனவுங்க,
சும்மா போகாம இந்த ஊருல எல்லாம் நம்மளால இருக்க முடியாது சாமி, இனிமே நான் இந்த ஊருக்கே வர
மாட்டேன்னு சொல்லிட்டு தான் போனாங்க. ஆனா பாருங்க, ஒரு
இரண்டரை வருஷத்துக்குள்ள எங்களோட இரண்டாவது மகாராணி பிறக்கிற சமயத்துக்கு அவுங்க
திரும்பியும் இங்க வர மாதிரி ஆயிடுச்சு. அந்த தடவை ஐந்து மாசம் இருந்தாங்க. அப்புறம், வீட்டு அம்மணி இரண்டு மகாரணிகளையும் பார்த்துக்க ரொம்ப சிரமப்பட்டதுனால, வேற வழியில்லாம மூணாவது தடவையா இங்க வந்து ஐந்து மாசம் இருந்துட்டு
போனாங்க. அந்த தடவையும், இனிமே உங்க ஊர் பக்கம் தலை வச்சு
படுக்கவே மாட்டேன்னு சொல்லிட்டு போனாங்க(அவுங்க கஷ்டம் அவுங்களுக்கு). மூணு தடவையும்
அவுங்க கரூர்ல இருக்கிற ஒரு டிராவல் ஏஜெண்ட் மூலமாதான் விசாவுக்கு அப்ளை பண்ணி, ஃப்ளைட்
டிக்கெட் போட்டு வந்திருந்தாங்க. மூணு தடவையும் எந்த பிரச்சனையும் இல்லாம
அவுங்களுக்கு விசா கிடைச்சு வந்துட்டு போனாங்க. இந்த ஜனவரி மாசம் வீட்டு
அம்மணிக்கு கண்ல ஆபிரேஷன் நடந்தபோது அவுங்களுக்கு உடம்பு சரியில்லாததுனால, அவுங்களால வர முடியலை. நானே ரெண்டு வாரம் லீவு போட்டு வீட்டை
கவனிச்சுக்கிட்டேன். இப்ப மறுபடியும் இன்னொரு கண்ணுக்கும் ஆபிரேஷன் பண்ணணும்னு
சொல்லிட்டாங்க. எனக்கு என்னடாது, back to square யான்னு தோணுச்சு. நல்ல காலம், வீட்டு அம்மணியோட
அம்மா, எனக்கு அந்த ஊர் பிடிக்கலைன்னாலும் பரவாயில்லை நான் வரேன்னு
சொல்லி, என் வயித்துல பாலை வார்த்தாங்க. உடனே நான் என்
பக்கத்திலிருந்து எல்லா documentsயும் அனுப்பினேன். அவுங்க
அப்பாவும், ரெண்டு
பேருக்குமா சேர்த்து விசாவை அப்ளை பண்ணலாம்னு,மறுபடியும் அதே டிராவல் ஏஜெண்ட் கிட்ட கொடுத்து அப்ளை பண்ண
சொல்லியிருக்காங்க.
சென்னைல
இருக்கிற ஒரு டிராவல் ஏஜெண்ட் ஆபீஸ் பிராஞ்ச் தான் அந்த கரூர் ஏஜெண்ட் ஆபிஸ். இது
வரைக்கும் அந்த சென்னை ஆபிஸ் தான் அவுங்களுக்கு விசா அப்ளிகேஷன் எல்லாம் fill பண்ணி, vfsக்கு அனுப்பியிருக்காங்க. இப்ப அந்த கரூர்
பிராஞ்ச்சை மூடிட்டாங்க. ஆனா பிராஞ்ச் ஆபிஸ்ல இருந்த அந்த ஏஜெண்ட் அந்த போர்டு
எல்லாம் கழட்டாம, இன்னமும் அந்த ஆபிஸ் இருக்கிற மாதிரியே ஊருக்குள்ள
காமிச்சிருக்காரு. இப்ப சென்னைல இருக்கிற வேற ஒரு டிராவல் ஏஜெண்ட் ஆபிஸ்ல வேலை
பார்க்கிற ரெண்டு பேர் கூட கூட்டு சேர்ந்துக்கிட்டு டிராவல் சம்பந்தமான வேலைகளை
எல்லாம் செஞ்சிக்கிட்டு இருக்காரு அந்த ஏஜெண்ட். இவுங்க
அப்பாவுக்கு இதெல்லாம் தெரியாது. நாலு நாளைக்கப்புறம் அவுங்க அப்பாவுக்கு மட்டும் மெடிக்கல்
பண்ண சொல்லி இமெயில் வந்துச்சு. என்னடாது, இவுங்க அம்மா தானே
இப்ப வர போறாங்க,அதனால அவுங்க மெடிக்கல் பண்ணா தானே, விசா வரும்னு, நானே கரூர்ல இருக்கிற அந்த
ஏஜெண்ட்க்கு போன் பண்னி, இரண்டு பேருக்கும் ஒண்ணா தானே அப்ளை
பண்ணீங்க,அப்ப ஏன் அவுங்க அம்மாவுக்கு மெடிக்கல் பண்ண சொல்லி
வரலைன்னு கேட்டேன். உடனே அவரும் சார், கவலைபடாதீங்க, மேடத்துக்கும் மெடிக்கல் பண்ண சொல்லி இன்னைக்கு இமெயில் வந்துடும்னு
சொன்னாரு. நான், அப்படி வரலைன்னா,
என்னங்க பண்ண போறீங்கன்னு கேட்டா, இன்னைக்கு கண்டிப்பா அந்த
இமெயில் வந்துடும்னு, அடிச்சு சத்யம் பண்ணாத குறையா
சொன்னாரு. ரெண்டு நாள் ஆச்சு ஒண்ணும் வரலை. இங்க ஆபிரேஷன் பண்றதுக்கு நாள் வேற
நெருங்கிக்கிட்டே இருக்கு. ஆனா அவுங்க அம்மாவுக்கு இன்னமும் மெடிக்கல் பண்றதுக்கான
இமெயில் வரவே இல்லை. அதற்கப்புறம் தான் தெரிஞ்சுது, சென்னைல
இருக்கிற அந்த அதிமேதாவிங்க, இவுங்க அம்மாவோட பாஸ்போர்ட்
காப்பியை வைக்காம அனுப்பியிருக்கானுங்க, அதனால அவுங்களோட
அப்ளிகேஷன் ரிஜக்ட் ஆயிடுச்சுன்னு. இவுங்க அப்பா மூணு,நாலு
தடவை சென்னைல இருக்கிற ஏஜெண்ட்டுக்கும்,கரூர்ல இருக்கிற
ஏஜெண்ட்டுக்கும் போன் பண்ணி கேட்டதுனால தான், புண்ணியவானுங்க
திருப்பியும் புதுசா அப்ளை பண்ணிட்டு சொல்லியிருக்கானுங்க. இப்படி ஆயிருக்குன்னு
தெரிஞ்சவுடனே எனக்கு வந்ததே கோபம், உடனே அந்த சென்னைல
இருக்கிற அந்த ஏஜெண்ட்டுக்கு போனை போட்டு முதல்ல அந்தாளோட இமெயில்-ஐடி
வாங்கிக்கிட்டு,ரொம்பவும் ஸ்ட்ராங்கா அந்தாளை திட்டி ஒரு
மெயில போட்டேன். இவ்வளவுக்கும் நடுவுல
ஆபிரேஷனும் முடிஞ்சிடுச்சு. நானும் லீவை போட்டு மறுபடியும் வீட்டு வேலையை பார்க்க
ஆரம்பிச்சேன். ஒரு வாரம் கழிச்சு என்னடாது, இன்னமும் விசாவை
பத்தி ஒண்ணுமே தெரியமாட்டேங்குதேன்னு,அந்த சென்னை
ஏஜெண்ட்டுக்கு போன் பண்ணினா, அந்தாளு போனை எடுக்கவேயில்லை.
ஆஹா, நம்ம இமெயிலை பார்த்துட்டு அந்தாளு, நம்ம போனை எடுக்கலை போலன்னு நினைச்சுக்கிட்டு, சரி கரூர்ல
இருக்கிற ஏஜெண்ட்டுக்கு போன் பண்ணி சென்னைல இருக்கிற அந்த ஏஜெண்ட் போனை எடுக்க
மாட்டேங்கிறாருன்னு சொன்னேன். அந்தாளும், ஆமா சார் நானும்
பண்ணினேன் அவர் எடுக்க மாட்டேங்கிறார்ன்னு சொன்னாரு. சரி நீங்க சென்னை டிராவல்
ஆபிஸ் நம்பர் கொடுங்கண்ணு கேட்டா, நம்பரை தராம வெறும் அந்த
ஆபிஸ் பேரை மட்டும் சொன்னாரு (அதுவரைக்கும் எங்களுக்கு அந்த சென்னைல இருக்கிற
டிராவல்ஸ் ஆபிஸ் பேர் தெரியவே தெரியாது). சரி, இதுல ஏதோ
உள்குத்து இருக்குதுபோலன்னு நினைச்சு, அந்த ஆபிஸ் பேரை நம்ம
கூகிள் சாமியார் கிட்ட கொடுத்து கேட்டவுடனே, அந்த ஆபிஸ் போன்
நம்பர் தெரிஞ்சுது. உடனே அந்த ஆபிசுக்கு போன் பண்ணி, இன்னாரு
இருக்காரா, அவரிடம் பேசணும்னு சொன்னவுடனே, அவுங்க எதுக்கு நீங்க அவரு கிட்ட பேசணும்னு,
ஆயிறத்தெட்டு கேள்வி கேட்டு, கனெக்ஷன் கொடுத்தாங்க. நான்
அந்தாளை எப்படியெல்லாம் திட்டணும்னு மனசுக்குள்ளேயே ஒத்திகை பார்த்துக்கிட்டு, பேச ஆரம்பிச்சா, நான் அவரில்லைங்கன்னு மறுமுனைல
சொன்னாங்க. சரி, அவரு எங்கன்னு கேட்டா,
அவர் இறந்து போய் ரெண்டு நாள் ஆகுதுன்னாங்க. எனக்கு முதல்ல ஒண்ணும் புரியலை. ஒரு
வாரத்துக்கு முன்னாடி தானே பேசினோம்னு ஒரே குழப்பம். ஹார்ட் அட்டாக்கா இல்லை ஆக்சிடென்டான்னு கேட்டா, இரண்டும் இல்லை தற்கொலைன்னு சொன்னாங்க. எனக்கு ஒரு நிமிஷம் இதயமே நின்னு
போச்சு. . நாம போட்ட இமெயில் தான் அவரை தற்கொலைக்கு தூண்டிடுச்சோன்னு பெரிய
சந்தேகம் வந்துடுச்சு. நான் அவருக்கு அனுப்பின மெயிலை மறுபடியும் படிச்சு பார்த்து, ச்சை, ச்சை இந்த மெயிலை படிச்சுட்டு எல்லாம்
ஒருத்தன் தற்கொலை எல்லாம் பண்ணிக்க மாட்டான்னு மனசை சமாதானப்படுத்தி, நிம்மதியானேன். ரெண்டு நாள் கழிச்சு அவுங்க அம்மாவுக்கு இ-விசா
வந்துச்சு. உடனே மறு நாளே கோயம்புத்தூர்லேருந்து கிளம்பி வரலாம்ன்னு நான் இங்க சிங்கப்பூர்
ஏர்லைன்ஸ் இணையதளத்தை பார்த்து சொன்னேன். உடனே அவுங்க அப்பாவும், இனிமே இந்த ஏஜெண்ட்டை நம்பி பிரியோஜனமில்லைன்னு,
வேற ஒரு டிராவல் ஏஜெண்ட் கிட்ட, கோயம்புத்தூர்லேருந்து
சிட்னிக்கு டிக்கெட் போடுங்கன்னு சொல்லியிருக்காங்க. அந்த டிராவல் ஏஜெண்ட்டும்
ரொம்ப சீரியஸா, கோயம்புத்தூர்லேருந்து சிங்கப்பூருக்கு ஒரு
டிக்கெட்டும், சிங்கப்பூர்லேருந்து சிட்னிக்கு இன்னொரு
டிக்கெட்டும் போடணும்னு சொல்லியிருக்கார். இவுங்க அப்பாவுக்கு இவனுங்க உண்மையிலேயே
டிராவல் ஏஜெண்ட் தானான்னு பெரிய சந்தேகம் வந்துடுச்சு. அவனுங்க ஆபிஸ்ல
உட்கார்ந்துக்கிட்டே, எனக்கு போன் பண்ணி, மாப்பிள்ளை, இவனுங்க இந்த மாதிரி சொல்றாணுங்கன்னு
சொன்னாங்க. நானும், மாமா அவனுங்க உங்களை வச்சு தான் முத
முதல்ல ஒரு இன்டர்நேஷனல் ஃப்ளைட் டிக்கெட் புக் பண்ண போறாணுங்க போல, அதனால நீங்க முதல்ல அங்கேருந்து கிளம்புங்க, நான்
இங்க ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்ணியிடுறேன்னு சொல்லி, ஒரு
வழியா டிக்கெட் புக் பண்ணி, ஆபிரேஷன் முடிஞ்சு ஆறு நாள்
கழிச்சு அவுங்க அம்மா வந்து சேர்ந்தாங்க.
மூடுன
ஒரு ஆபிஸ் பேரை வச்சுக்கிட்டு, ஒருத்தர் தொழில் பண்ணிக்கிட்டு இருக்கிறார்னா, நம்ம
நாட்டில எப்படி வேணும்னாலும் தொழில் பண்ண முடியுங்கிறதை இல்ல இது காட்டுது. இந்தாள்
எல்லாம் வரியே கட்டமாட்டாருன்னு தான் நினைக்கிறேன். ஆக மொத்தத்துல எதுல தான் போலின்னு
ஒரு வரைமுறையே இல்லாம போச்சு, இதிலேருந்து நான் கத்துக்கிட பாடம்
என்னன்னா, தன் கையே தனக்கு உதவிங்கிற மாதிரி, டிராவல் ஏஜெண்டை நம்பாம நாமளே நமக்கு தேவையானதை செஞ்சுக்கணும்கிறது தான்.
அடுத்த தடவை நீங்க இரண்டு பேரும் இங்க வருவதற்கு நானே அப்ளை பண்றேன்னு சொன்னேன், அவ்வளவுதான் அவுங்க அப்பா போன்லேயே, மாப்பிள்ளை தயவு
செய்து இனிமே எங்களை அங்கே கூப்பிடாதீங்கன்னு ஒரே புலம்பல்.
No comments:
Post a Comment