Sunday, March 2, 2014

கோவிந்தா தயாரிக்கும் திரைப்படம் - நாடகம்



தலைவா திரைப்பட அனுபவத்தை முடிக்கும் முன், நான் எழுதி இயக்கி, இங்கு ஒரு மேடையில் அரங்கேற்றிய நாடகமான  "கோவிந்தா தயாரிக்கும் திரைப்படம்" நாடகத்தை உங்களின் பார்வைக்கு பதிகிறேன். இதில் அடியேன் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளராக நடித்திருக்கிறேன். குப்பம்மாவின் கதாப்பத்திரத்துக்கு வேறு நபர் அமையாததால், வீட்டு அம்மணியே அந்த கதாப்பத்திரத்தில் தோன்றிணார் (கூட இனியாவும்).  இந்த நாடகம் நான் படத்தில் தோன்றுவதற்கு முன் எழுதப்பட்ட ஒன்றாகும்.  

இந்த நாடகத்தை இங்குள்ள ஒரு தனியார் தமிழ் நூலகத்தாரின் நிதி வசூல் திரட்டும் நிகழ்ச்சிக்காக அரங்கேற்றம் செய்தோம். அந்த தனியார் தமிழ் நூலகம் இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிட்னியில் இயங்கி கொண்டிருக்கிறது. அந்த நூலகத்தைப் பற்றிய செய்தியை தனி பதிவாக வேறொரு சமயம் எழுதுகிறேன். 


கோவிந்தா தயாரிக்கும் திரைப்படம்

தங்கள் குழந்தைகளின் திருமணத்திற்கு பிறகு, பெற்றோர்கள் அவர்களுடைய வாழ்கையில் தலையிடமால் இருக்க வேண்டும். அப்போது தான், வாழ்க்கையை ஆரம்பிக்கும் அவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்வார்கள். அவ்வாறில்லாமல், பெற்றோர்கள் அவர்களின் வாழ்கையில் மூக்கை நுழைத்தால், பிரச்சனை தான் உண்டாகும். வெளி நாட்டில் வசிக்கும் திருமணமான ஒரு இளம் பெண்ணின் தாயார், தன் மகளின் வாழ்கையில் நுழைந்து, அவளை ஒரு நடிகையாக்கி பார்க்க ஆசைப்படுகிறார். இதனால் அந்த இளம் பெண்ணின் வாழ்கையில் பிரச்சனை வருகிறது, இறுதியில் அந்த பெண்ணின் கணவர், வேறு வழியில்லாமல் தன் மனைவிக்கு மேக்கப் மேன் ஆக அவதாரம் எடுக்கிறார். இனி நடப்பதை பாருங்கள். 


நடிகர்கள்:

பாலுச்சந்தர் – இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர்

அறிவழகன் - உதவி இயக்குனர்

கோவிந்தன் - தயாரிப்பாளர்

பாக்யஸ்ரீ - கதாநாயகி

உமாராணி - கதாநாயகியின் தாயார்

கிராமத்து பெண்மணி – குப்பம்மா

மேக்கப்மேன் – கதாநாயகியின் கணவர்

எ.கே.யெஸ்(எ.கே .செல்வம்) - வில்லன்

கோபாலு – சினிமா பத்திரிக்கை நிருபர்

பிந்து மாஸ்டர் - நடன இயக்குனர்

                        காட்சி 1:
இடம்: இயக்குனர் அலுவலகம்.
கதாப்பாத்திரங்கள்: பாலுச்சந்தர், அறிவழகன், கோவிந்தன், பாக்யஸ்ரீ, உமாராணி





பாலுச்சந்தர்: நல்ல ஒரு கதையை வச்சிருக்கோம். ஆனா ஒரு தயாரிப்பாளர் கூட நம்மளை நம்பி பணம் போட மாட்டேங்குறாங்களே!.
(அப்போது அறிவழகன் தனக்குள் பேசிக்கொண்டு வருகிறான்)

அறிவழகன்: போயும், போயும் இவன்கிட்ட அசிஸ்டன்டா சேர்ந்திருக்கோமே, எல்லாம் நம்ம தலை எழுத்து. இவனை பார்த்தா படம் எடுக்கிற மாதிரி தெரியலையே?, இவன் எப்ப படம் எடுத்து, நம்ம எப்ப தனியா ஒரு படம் பண்றது. ஆண்டவா, இவனுக்கு சீக்கிரம் ஒரு இளிச்சவாயன் ப்ரொடியூசரை கண்ணுல காட்டு.

பாலுச்சந்தர்: ஆமா, எங்க போயி சுத்திட்டு வர, அசிஸ்டன்ட் டைரக்டர்னா கூடவே இருக்கனும். உன்னையெல்லாம் நான் அசிஸ்டன்டா வச்சிருக்கேன் பாரு, எல்லாம் என் தலை எழுத்து.

அறிவழகன்: (மெல்லமாக) உருப்படியா ஒரு ப்ரொடியூசரை பிடிச்சு, படத்தை எடுக்கத் தெரியலை, கேள்வி மட்டும் கேக்குறான் பாரு .
பாலுச்சந்தர்: என்ன முணுமுணுப்பு, சரி, சரி, நான் சொல்லியிருந்தேன் இல்ல, காமெடி ஸீன் எல்லாம் யோசிச்சு வையுண்ணு, என்ன யோசிச்சியா?

அறிவழகன்: அதுக்குதான் தான் சார், பார்க்ல உட்கார்ந்து யோசிச்சுட்டு வரேன்.



பாலுச்சந்தர்: ஏன், துரையால இங்க உட்கார்ந்து யோசிச்சா, கற்பனை ஒண்ணும் வராதோ? சரி, சரி, இந்தா, இந்த ஸ்கிரிப்டை படிச்சுப்பாரு,

(அப்போது ஒருவர் உள்ளே நுழைகிறார்)

கோவிந்தா: ஏங்க, டைரக்டர் பாலுச்சந்தர் இருக்காரா?

அறிவழகன்: சார் தான் பாலுச்சந்தர் ஆமா, நீங்க யாரு?

கோவிந்தா: என் பேரு கோவிந்தன். எல்லோரும் என்னைய கோவிந்தா, கோவிந்தான்னு செல்லமா கூப்பிடுவாங்க. நான் மதுரை பக்கத்திலுருந்து வரேன்.

பாலுச்சந்தர்: உங்க பேரே ரொம்ப நல்லாயிருக்கு. சரி, சொல்லுங்க, நான் என்ன பண்ணனும்.

கோவிந்தா: எனக்கு ஒரு படம் தயாரிக்கனும்னு ரொம்ப நாள் ஆசை, அதனால ஊர்ல உள்ள வயக்காட்டை எல்லாம் வித்துட்டு படம் எடுக்க சென்னைக்கு வந்திருக்கேன். நீங்க தான் எனக்கு ஒரு படம் எடுத்துக் கொடுக்கனும்.

பாலுச்சந்தர்: கவலையேப்படாதீங்க கோவிந்தா சார், உங்களுக்கு அருமையான ஒரு படம் எடுத்து கொடுக்கிறேன்.


அறிவழகன்: ஆஹா! ஒரு இளிச்சவாயன் மாட்டிக்கிட்டான். பேரை பாரு, கோவிந்தாவாம், 
கோவிந்தா, கோவிந்தான்னு போக வேண்டியது தான்.

கோவிந்தா: ஆமா, உங்க பேரு ரொம்ப வித்தியாசமா இருக்கு. பாலச்சந்தர் கேள்விப்பட்டிருக்கேன், அது என்ன உங்க பேரு பாலுச்சந்தர்.

பாலுச்சந்தர்: அது வேற ஒண்ணும் இல்லை கோவிந்தா சார், பாலச்சந்தரும், பாலுமகேந்திராவும் சேர்ந்து படம் பண்ணினா எப்படியிருக்கும்! அதனாலதான் பாலுச்சந்தர்ன்னு பேரு வச்சுக்கிட்டேன்.

கோவிந்தா: அது சரி, ஆமா, இந்த தம்பி யாரு?
பாலுச்சந்தர்: ஓ! இவனா, என்னோட அசிஸ்டெண்ட்.

கோவிந்தா: அல்லக்கையா!!!

அறிவழகன்: என்னாது! அல்லக்கையா!!!!

பாலுச்சந்தர்: கோவிந்தா சார், அவரு அல்லக்கையெல்லாம் இல்லை, என்னோட உதவி இயக்குனர்.

கோவிந்தா: உதவி இயக்குனரா, இப்படி,புரியிர மாதிரி சொல்லுங்க. (சுந்தரைப் பார்த்து) மன்னிச்சுக்குங்க தம்பி. ஆமா, டைரக்டர் தம்பி நீங்க என்ன படம் எல்லாம் எடுத்திருக்கீங்க?

பாலுச்சந்தர்: நம்ம ரஜினி நடிச்ச சிவாஜி, அப்புறம் எந்திரன், அப்புறம் நண்பன் இதெல்லாம் நான் டைரக்ட் பண்ணினது தான்.

கோவிந்தா: சிவாஜி, எந்திரன் எல்லாம் நீங்க தான் எடுத்தீங்களா? ரொம்ப நல்லா இருந்துச்சுன்னு, ஊர்ல எல்லாம் சொன்னாங்க

அறிவழகன்: (மெல்லமாக), ஐய்யோ, என்னமா, பீலா விடுறான், இந்த அறிவுக்கொழுந்தும், வாயிக்குள்ள ஈ போறது தெரியாம கேட்டுகிட்டு இருக்கு பாரு.

பாலுச்சந்தர்: (அப்பாடி, நம்பிட்டான் மனுஷன்) 
ஆமா, அந்த படங்களையெல்லாம் நீங்க பார்க்கலையா?

கோவிந்தன்: நமக்கு எங்க படம் பார்க்குறதுக்கு எல்லாம் தம்பி நேரம் இருக்கு. கருக்கல்ல வயக்காட்டுக்கு போன, பொழுதுசாஞ்ச பின்னாடி தான் வீட்டுக்கு வர முடியுது. அப்புறம் தம்பி, அதே மாதிரி எனக்கும் ஒரு படம் எடுத்துக் கொடுங்க. அந்த ஒரு படத்துலேயே, நான் பெரிய கோடீஸ்வரன் ஆயிடனும்.

அறிவழகன்: (மெல்லமாக)படத்துல தான் ஒரு பாட்டுலேயே கோடீஸ்வரனாக முடியும். இந்தாளு ஒரே ஒரு படத்தை தயாரிச்சு, கோடீஸ்வரனாகனுமா, வெலங்குன மாதிரி தான் எப்படியோ, இந்த படம் முடிஞ்சவுடனே, நமக்கும், இந்த கோவிந்தா மாதிரி, இன்னொரு கோவிந்தா மாட்டாமையா போயிடுவான்.

பாலுச்சந்தர்: என் கைல ஒரு அருமையான heroine சப்ஜெக்ட் இருக்கு. அதை எடுப்போம். கண்டிப்பா, நீங்க பெரிய கோடீஸ்வரனா ஆயிடுவீங்க.

கோவிந்தா: ரொம்ப சந்தோஷம் தம்பி, ஆமா கதை என்ன?

பாலுச்சந்தர்: நம்ம படத்துல, கதாநாயகி, ஒரு பெரிய சமூக சேவகி, அவுங்க இருக்கிற ஊருக்கு எல்லா நல்லதும் செய்வாங்க. அந்த ஊர் மக்களுக்கு எந்த பிரச்சனைன்னாலும், இவுங்க தான் முன்னாடி நின்னு, அதை தீர்த்து வைப்பாங்க.

கோவிந்தா: ஆமா, நம்ம கதைல வில்லன் எல்லாம் கிடையாதா?

பாலுச்சந்தர்: இதோ நீங்க கேட்டவுடனே வில்லன் வந்துட்டாரு. நம்ம கதைல வில்லன் ரொம்ப பெரிய பணக்காரன்.  அவன் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி தொடங்குறதுக்கு, ஒவ்வொரு ஊரா போயி, இடம் பார்ப்பான், அப்ப, அவனுக்கு நம்ம கதாநாயகி இருக்கிற ஊர் ரொம்ப பிடிச்சு போயிடும். அதனால அந்த ஊர் மக்களோட விவசாய நிலத்தையெல்லாம் அடிமாட்டு விலைக்கு வாங்கி, கம்பனி ஆரம்பிக்கணும்னு ஆசை. அதுக்கு குறுக்கே நிப்பாங்க நம்ம கதாநாயகி. அந்த வில்லன் அரசாங்கத்தை எப்படியெல்லாம் ஏமாத்துறான்னு கண்டுபிடிச்சு அவனை ஒண்ணும் இல்லாதவனா ஆக்குவாங்க.

கோவிந்தா: ஆமா, இதுல கதாநாயகனே கிடையாதா?

அறிவழகன்: கோவிந்தா சார், மத்த படங்கள்லேருந்து, நம்ம படம் இங்க தான் வித்தியாசப் பாடுது.

கோவிந்தா: எபப்டி வித்தியாசப்படுது?

அறிவழகன்: மத்த படங்கள்ல, கதாநாயகி ஏதோ 4/5 ஸீன்ல வந்து, கதாநாயகனோட ஆடிப் பாடிட்டு போயிடுவாங்க. ஆனா நம்ம படத்துல கதாநாயகனே இல்லாம, கதாநாயகி மட்டும் கதாநாயகன் பண்ற வேலையெல்லாம் பண்ணுவாங்க.

கோவிந்தா: ஆ! வித்தியாசமான படம் தான். டைரக்டர் தம்பி, அப்புறம் என்னாச்சுன்னு சொல்லுங்க.

பாலுச்சந்தர்:  வில்லனோட நடக்குற இந்த போராட்டத்துல அவுங்களோட ஒரே தம்பியை வேற இழந்துடுவாங்க. கடைசில வில்லனை பழிவாங்கி, தானும் இறந்துடுவாங்க. இது தான் கதை. இந்த கதைக்கு கதாநாயகி தான் பெரிய பலமே. அவுங்களுக்கு நல்லா தமிழ் பேச தெரிஞ்சிருக்கணும், அவுங்க நல்லா அழனும், அந்த ஊர் சின்னக் குழந்தைகளோடு டான்ஸ் ஆடனும். எல்லாத்தையும் விட நல்லா நடிக்கத் தெரிஞ்சிருக்கணும். இது எல்லாம் தெரிஞ்ச ஒரு பொண்ணு தான் நான் வலை வீசி தேடனும்.  

கோவிந்தா: ஆஹா, கேக்கவே கதை ரொம்ப நல்லா இருக்கு. இந்த heroine பத்தியெல்லாம் கவலையேப் படாதீங்க. என்னோட தங்கச்சி மக அமெரிக்காவில பிறந்து வளர்ந்தவ, அவ நல்லா தமிழ் பேசுவா, அங்க அமெரிக்காவில நாடகத்துல எல்லாம் நடிச்சிருக்கா, பேசாம அவளையே heroineனா ஆக்கிடுங்க.

பாலுச்சந்தர்: நீங்க சொன்னா மறுபேச்சு ஏது? ஆமா, அவுங்க வந்திருக்காங்களா?

கோவிந்தா: என்னோட தான் வந்தாங்க. வெளியில காத்துக்கிட்டு இருக்காங்க. இதோ போயி கூப்பிடுறேன்.

(கோவிந்தன் போயி பாக்யஸ்ரீயையும், உமாராணியையும் கூட்டிக்கொண்டு வருகிறார்.)

கோவிந்தா: பாக்யஸ்ரீயிடம், இவரு தான்மா நாம எடுக்கப் போற படத்துக்கு டைரக்டர்.

பாலுச்சந்தர்: (கைக்கூப்பி வணக்கம் என்கிறான்)
பாக்யஸ்ரீ: (டைரக்டரிடம் கை கொடுத்து, ஹலோ சொல்கிறார்)

(உமாராணியை யாரும் அறிமுகப் படுத்தாததால்)
உமாராணி: வணக்கம். நான் தான் பப்பியோட அம்மா.

பாலச்சந்தர்: (உமாரணிக்கும்,மற்றவர்களுக்கும் பின்னாடி திரும்பி பார்க்கிறான்)

அறிவழகன்: என்னது! பப்பியா, ஒரு நாயிக்குட்டியையும் காணோம்.

உமாராணி: தம்பி, ரொம்ப தமாஷா பேசுறாரு. நாங்க பாக்கியை செல்லமா பப்பின்னு தான் கூப்பிடுவோம்.   

பாக்யஸ்ரீ: (சிணுங்கிக் கொண்டு), மம்மி, நான் எத்துனு தடவ சொல்லுது, பப்பின்னு கூப்பிடாதேன்னு. பாரு! இது எல்லாம் கிண்டல் பண்ணுது.

உமாராணி: don’t worry pappi. இவுங்க யாரு உன்னைய கிண்டல் பண்றதுக்கு?  இவுங்க எல்லாம் நம்ம தொழிலாளிங்க. எங்க அண்ணன் பணம் போடுறாரு, இவுங்க வேலைப் பார்க்கிறாங்க. (சுந்தரிடம் கோபமாக) இந்தா,இந்த கிண்டல் பண்ற வேலை எல்லாம் இனிமே வச்சுக்காதீங்க.   

கோவிந்தா: (உமாராணியிடம்), இந்தாம்மா தங்கச்சி, நீங்க பாட்டுக்கு எதையாவது ரகளை பண்ணி வைக்காதீங்க, அப்புறம் நம்மளால படம் எடுக்க முடியாம போயிடும். அதனால நீங்க போயி வெளியில இருங்க. நான் தம்பிக்கிட்ட பேசிட்டு வரேன். டைரக்டர் தம்பி, என் தங்கச்சிக்கு, கொஞ்சம் கோபம் ஜாஸ்தி, அதை நீங்க பெரிசு படுத்தாதீங்க. எப்ப நம்ம   ஷூட்டிங் வச்சுக்கலாம்.

பாலுச்சந்தர்: அடுத்த புதன்கிழமை நிறைஞ்ச அமாவாசை. அன்னைக்கே படத்துக்கு பூஜையை போட்டு ஷூட்டிங்க ஆரம்பிச்சுடுவோம்.

கோவிந்தா: சரி, நாங்க அப்ப போயிட்டு வரோம். (எல்லோரும் போகிறார்கள்)

பாலுச்சந்தர்: (சுந்தரிடம்), டே! இங்க என்னடா நடக்குது. இந்த பொண்ணுக்கு தமிழ் தெரியுமான்னே தெரியலை. இதுல இவ ஆத்தா, பெரிய பத்ரகாளியா வேற இருப்பா போல. இதுங்களை வச்சு நான் படம் டைரக்ட் பண்ணுண மாதிரி தான்.

அறிவழகன்: கவலைப் படாதீங்க சார், நாம இவுங்களை வச்சே படத்தை எடுத்து முடிச்சுடலாம்.

காட்சி 2:

கதாப்பாத்திரங்கள்: பாலுச்சந்தர், அறிவழகன், கோவிந்தன், பாக்யஸ்ரீ, மேக்கப்மேன், உமாராணி, குப்பம்மா,

(பாக்யஸ்ரீ சேலை உடுத்தியிருக்கிறார். அவருக்கு மேக்கப்மேன் ஒரு கையில் கொடையை பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் மேக்கப் போட்டுக்கொண்டிருக்கிறார். உமாராணியும், கோவிந்தாவும் உட்கார்ந்துக் கொண்டிருக்கிறார்கள். பி.சி.கண்ணன், காமிராவை வைத்துக்கொண்டு ஆங்கில் பார்த்துக் கொண்டிருக்கிறார்)



பாலுச்சந்தர்: அறிவழகன், ஹீரோயினுக்கு டயலாக் எல்லாம் கொடுத்துட்டியா?

அறிவழகன்: ஆச்சு சார். அவுங்க மேக்கப் போட்டுக்கிட்டு வந்தாங்கன்னா நேரா டேக்குக்கே போயிடலாம் சார்.

பாலுச்சந்தர்: அப்புறம் அந்த குப்பம்மா வந்தாச்சா?

அறிவழகன்: வந்துட்டாங்க சார்.

(அறிவழகன் போய் ஹீரோயினிடம்)

அறிவழகன்: மேடம்! எல்லோரும் ரெடியா இருக்காங்க. சீக்கிரம் வாங்க.



உமாராணி: அதான் பார்க்குற இல்ல, அவள் என்ன சும்மாவா இருக்கா, மேக்கப் எல்லாம் நல்லா போட்டா தானே, ஸ்கிரீன்ல நல்லா அழகா தெரிவா. அப்புறம் அவள் கனவுக்கன்னியா ஆகி, இங்கிருக்கிற ரசிகர்கள் அவளுக்கு கோவில் எல்லாம் கட்ட வேண்டாமா!

அறிவழகன்: (தலையில் கை வைத்துக் கொண்டு, மெல்லமாக), நடிக்க வந்து இன்னும் காமிரா முன்னாடியே நிக்கலை, அதுக்குள்ள ரசிகர்கள் கோவில் கட்டுவாங்களா? கர்மம்டா சாமி, (என்று புலம்பிக் கொண்டு போகிறான்)

பாலுச்சந்தர்: (ஹீரோயினைப் பார்த்து, சத்தமாக என்னமா! ரெடியாயிட்டியா, டேக்குக்கு போலாமா)

பாக்யஸ்ரீ: ரெடியாகுது. சார், இதோ வந்துடுது சார்.

பாலுச்சந்தர்: ஐயோ, ஏம்மா உனக்கு தமிழே 
தெரியாதா?

பாக்யஸ்ரீ: அமெரிக்கால, tamil  படிச்சு சார். உப்ப, கொஞ்சும் கொஞ்சும் மறந்துச்சு சார்.

உமாராணி: என் பப்பி நல்லா தானே தமிழ் பேசுறா, ஏன் இந்த தமிழுக்கு என்ன குறைச்சல்?

பாலுச்சந்தர்: உங்க பொண்ணை ஒண்ணும் கேக்கலம்மா, நீங்க போயி உட்காருங்க. அறிவழகன், அந்த குப்பம்மாவை ரெடியா இருக்கச் சொல்லு. எல்லோரும் ரெடியா, டேக்க்கு போலாமா? (எல்லோரும் ரெடி என்று சொல்கிறார்கள்)

அறிவழகன்:  ஸீன்-1, ஷாட்-1,டேக்-1

பாலுச்சந்தர்: Action!!


குப்பம்மா: அம்மா, அரசாங்கத்துல எனக்கு சுயதொழில் பண்றதுக்காக கொடுத்த பணத்தை இன்னும் அந்த ஆபிஸ் ஆளுங்க கொடுக்காம 6 மாசமா அலைய விடுறாணுங்கம்மா. கட்டைல போறவனுங்க. நீங்க தாம்மா அந்த பணம் கிடைக்கிறதுக்கு வழி பண்ணனும்.

பாக்யஸ்ரீ: கவலேப் படாது குப்பம்ஸ். உங்க பொனத்தை ஏற்பாடு  பண்ணுது. அந்தப்புரம் நாயிங்களை ஒரு விழாவாக்குறேன்.

பாலுச்சந்தர்: கட்!கட் கட்!. என்னம்மா பேசுறீங்க? ஒண்ணுமே புரியலே.

பாக்யஸ்ரீ: நான் நல்லு தானே பேசுது.

பாலுச்சந்தர்: கிழிச்சிங்க! சுந்தரு, டயலாக்கை, கொஞ்சம் சொல்லிக் கொடுய்யா. எனக்கே மறந்துப் போச்சு.

அறிவழகன்: மேடம். நல்லா கவனிச்சுக்குங்க. “கவலைப்படாதீங்க குப்பம்மா. நான் உங்களுக்கு அந்த பணம் கிடைக்க ஏற்பாடு பண்றேன். அந்த புறம்போக்கு நாயிங்களை ஒரு வழியாக்குறேன். ஓகேவா மேடம். சொல்லிப் பார்க்குறீங்களா, இல்ல டேக்குக்கு போலாமா.

பாக்யஸ்ரீ: இல்லா சார், நாம டேக்குக்கு  போலாம்.

அறிவழகன்:  ஸீன்-1, ஷாட்-1,டேக்-2

பாலுச்சந்தர்: Action!!

குப்பம்மா: அம்மா, அரசாங்கத்துல எனக்கு சுயதொழில் பண்றதுக்காக கொடுத்த பணத்தை இன்னும் அந்த ஆபிஸ் ஆளுங்க கொடுக்காம 6 மாசமா அலைய விடுறாணுங்கம்மா. கட்டைல போறவனுங்க. நீங்க தாம்மா அந்த பணம் கிடைக்கிறதுக்கு வழி பண்ணனும்

பாக்யஸ்ரீ: கவலோப்படாதீங்க குப்பம். நான் உங்கல்கு, உங்கல்கு(யோசிக்கணும்)  பணம் ஏற்பாடு பண்து. அந்த புறம்பாக்கு நாயிங்களை ஒரே ஒரு ஒரு (யோசிக்கணும்)வழியில போறேன். 

பாலுச்சந்தர்: கட்!கட் கட்!. (தலயில் அடித்துக் கொள்கிறான்) இப்ப தானே சொல்லிக்கொடுத்தாரு. ஏம்மா,ஒழுங்கா படிக்காமா என் கழுத்தை அறுக்கிறீங்க?

பாக்யஸ்ரீ: (அழுகிறார்).

உமாராணி: ஐயோ, பப்பிக் கண்ணு, ஏண்டா அழுவுற, அந்த டைரக்டர் என்னடா சொன்னான்.

பாக்யஸ்ரீ: நான் நல்லு தான் சொல்லுது. அந்த டைரக்டரு, திட்டுது என்னைய.

உமாராணி ஏய் டைரக்டரு, நான் கூட என் பொண்ணை திட்டினதில்லை நீ என்னையா என் பொண்ணை அழவே வச்சுட்டே. இன்னொரு தடவை என் பொண்ணு அழுதுச்சு, அப்புறம் நடக்குறதே வேற.



கோவிந்தா: டைரக்டர் தம்பி, அவள் நல்லா சொல்லுவா, இன்னொரு ஒரு சான்ஸ் கொடுங்க. இந்தா உமா, நீ தள்ளிப் போயிரு. பாக்யா குட்டி, நீ சினிமாவில நடிக்கணும் தானே. ஒழுங்கா அந்த டயலாக்கை மனப்பாடம் பண்ணி சொல்லுடா தங்கம்.

பாக்யஸ்ரீ: சரி மாமா, நானு கஸ்டுபட்டு சொல்லுது.

(பாக்யஸ்ரீ போயி உட்கார்ந்து மேக்கப்மேனை கூப்பிட்டு மறுபடியும் மேக்கப் போட்டுக்கொள்கிறாள்)

பாக்யஸ்ரீ: மம்மி, டயலாக் சொல்ளூ, சொல்லு, ஒரே thirstyயா இக்கு. ஜூஸ் வேணும் மம்மி.

உமாராணி: ஏய்! கிளாப் பாய், போயி 2 ஃபிரெஷ் மேங்கோ ஜூஸ் கொண்டு வா.



அறிவழகன்: மெல்லமாக,  ஒரு ஷாட்டும் முடியல,அதுக்குள்ள ஜூஸ் வேணுமாம், கொடுத்து வச்ச மகராசிக. (ஆடியன்ஸை பார்த்து) என்ன கொடுமை சார் இது!!!

அறிவழகன்: மேடம்! ரெடியா ...

பாக்யஸ்ரீ: ரெடி.

அறிவழகன்:  ஸீன்-1, ஷாட்-1,டேக்-3

பாலுச்சந்தர்: Action!!

குப்பம்மா: அம்மா, அரசாங்கத்துல எனக்கு சுயதொழில் பண்றதுக்காக கொடுத்த பணத்தை இன்னும் அந்த ஆபிஸ் ஆளுங்க கொடுக்காம 6 மாசமா அலைய விடுறாணுங்கம்மா. கட்டைல போறவனுங்க. நீங்க தாம்மா அந்த பணம் கிடைக்கிறதுக்கு வழி பண்ணனும்

பாக்யஸ்ரீ: “கவலைப்படாது குப்பம். நான் உங்கள்க்கு பணம் கெடக்க ஏற்பாடு பண்றேன். அந்த போக்கு நாயிங்களை ஒரு வழியாக்குறேன்.

பாலுச்சந்தர்: கட்! ஷாட் ஓவர்.

அறிவழகன்: சார், சரியாவே சொல்லலை சார்.

பாலுச்சந்தர்: டப்பிங்ல, பார்த்துக்கலாம்யா. இந்த அளவுக்கு சொன்னதே போதும். இவுங்களோட போக போக மாரடிக்கிறதுக்கு எனக்கு தெம்பு வேணும்யா.  பேக்அப்!!

கோவிந்தா: என்ன சார், அதுக்குள்ள பேக்அப் சொல்லிட்டீங்க. ஒரு ஷாட் தானே எடுத்திருக்கோம்.

பாலுச்சந்தர்: கோவிந்தா சார், இதுக்கு மேல என்னால இன்னைக்கு முடியாது. இப்பவே எனக்கு நாக்கு தள்ளிடிச்சு. நாளைக்கு பார்த்துக்கலாம்.

காட்சி 3:

கதாப்பாத்திரங்கள்: பாலுச்சந்தர், அறிவழகன், கோவிந்தன், பாக்யஸ்ரீ, மேக்கப்மேன், உமாராணி, பிந்து மாஸ்டர், ஏ.கே.யெஸ். கோபாலு

(பாக்யஸ்ரீக்கு மேக்கப்மேன் ஒரு கையில் கொடையை பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் மேக்கப் போட்டுக்கொண்டிருக்கிறார். உமாராணியும், கோவிந்தாவும் உட்கார்ந்துக் கொண்டிருக்கிறார்கள். பி.சி.கண்ணன், காமிராவை வைத்துக்கொண்டு ஆங்கில் பார்த்துக் கொண்டிருக்கிறார்)

கோவிந்தா: டைரக்டர் தம்பி, இன்னைக்கு என்ன எடுக்கப் போறோம்.

(பாலுச்சந்தர், சைகையில்  அறிவழகனிடம் கோவிந்தாவைப்  கூட்டிக்கிட்டு போக சொல்கிறான்)

அறிவழகன்: இங்க வாங்க கோவிந்தா சார், நான் சொல்றேன். அவர் ஏற்கனவே கோபமா இருக்காரு. இதுல நீங்க வேற. இன்னைக்கு என்ன எடுக்கப்போறோம்னா, நம்ம கதாநாயகி ரொம்ப சந்தோஷமா இருக்காங்க, அதனால அவுங்க வயக்காட்டில ஆடிக்கிட்டு வராங்க. ஆமா, உங்க தங்கச்சிப் பொண்ணுக்கு, டான்ஸ் வருமா, இல்ல அதுவும் தமிழ் பேசுற மாதிரி தானா?

கோவிந்தா: என்ன தம்பி, இப்படி கேட்டுப் புட்டிங்க, அவள் அமெரிகாவில பரதநாட்டியம் எல்லாம் கத்திருக்கா.

அறிவழகன்: பார்போம், என்ன பண்ண போறாங்கன்னு.

பாலுச்சந்தர்: (நடன இயக்குனரிடம்) இங்க பாருங்க பிந்து மாஸ்டர், அந்த பொண்ணுக்கு தமிழ் வரமாட்டேங்குது. Atleast அவ டான்ஸாவது ஒழுங்கா பண்ணனும்.

பிந்து மாஸ்டர்: கவலைப் படாதீங்க சார், அவளை எப்படியும் நல்லா ஆட வச்சிடுறேன்.

பிந்து: மேடம், நான் சொன்ன ஸ்டெப் எல்லாம் நல்லா நியாபகம் இருக்குல்ல.

(பாக்யஸ்ரீ தலையை ஆட்டிக் கொள்ள வேண்டும்)

அறிவழகன்:  ஸீன்-2, ஷாட்-1,டேக்-1

பாலுச்சந்தர்: Action!!

(பின்னனியில் பாட்டு, ஒலிக்க, பாக்யஸ்ரீ, தப்பு தப்பாக நடனம் ஆடுகிறார்).

பாலுச்சந்தர்: கட்!கட் கட்!.. என்னம்மா, டான்ஸும்  வராதா உனக்கு.

அறிவழகன்: மேடம், என்னமோ நீங்க பரதநாட்டியம் எல்லாம் கத்துக்கிட்டிங்களாமே!!

பாக்யஸ்ரீ: six ageல தான் கத்துக்கிட்டேன். அப்பும் கக்கலை.

அறிவழகன்: சரியாப் போச்சு.

பாலுச்சந்தர்: பிந்து, டேக் போறதுக்கு முன்னாடி, கொஞ்சம் சொல்லிக் கொடுங்க.

(பிந்து மாஸ்டரும் சொல்லிக் கொடுக்க, மீண்டும் , பாக்யஸ்ரீ  தப்பு தப்பாக நடனம் ஆடுகிறார். ஒரு கட்டத்தில் கீழே விழுந்து விடுகிறார்) 

உமாராணி: ஓடியாறுகிறார், பப்பிம்மா என்ன ஆச்சும்மா அடி பட்டுடுச்சா.

பிந்து: (கடுப்புடன்) அடியெல்லாம் ஒண்ணும் படலை.

பாக்யஸ்ரீ: மம்மி, leg ரொம்ப வலிக்குது.

உமாராணி: யோவ் டைரக்டரு, என் பொண்ணு இதுக்கு மேல டான்ஸ் ஆட மாட்டா. நீ வேணும்னா டூப்பை வச்சு இந்த டான்ஸை எடுத்துக்கோ. நீ வந்து ரெஸ்ட் எடுத்துக்கோடா குட்டி.

பிந்து: டைரக்டர் சார், என்னால அந்த பொண்ணுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுக்க முடியாது. அதனால லாங் ஷாட்ல டூப்பை வச்சு எடுத்துக்கலாம்.

பாலுச்சந்தர்: ஐயோ, கடவுளே, நான் எப்படி படத்தை எடுக்கப் போறேனோ!!. அறிவழகன், அடுத்த ஷாட்டுக்கு ரெடி பண்ணுயா.


(பாலுச்சந்தர் போயி உட்காருகிறான்)

உமாராணி: மேக்கப்மேன்,ஒழுங்கா கொடையை பிடி. கிளாப் பாய் நீ கொஞ்சம் விசிறிவிடு.

(அப்போது, தமிழ் பத்திரிக்கையின் நிருபர் கோபாலு வருகிறார்)

கோபாலு: (பாக்யஸ்ரீயிடம்) வணக்கம்மா, நான் தமிழ் பத்திரிக்கையின் நிருபர் கோபாலு. உங்களோட ஒரு பேட்டி வேணுமே.

பாக்யஸ்ரீ: பெட்டி, I mean interview, good. Good. நானு ரெடி.

கோபாலு: உங்க பேரு பாக்யஸ்ரீயா, இல்ல பப்பியா?

பாக்யஸ்ரீ: நோ , பப்பி, ஒன்லி பாக்யஸ்ரீ. மம்மி என்ன, சொல்லம்மா, பப்பி,பப்பி குப்புடுது.

கோபாலு: ஏங்க உங்களுக்கு தமிழ் ஒழுங்கா வராதா?

பாக்யஸ்ரீ: (கோபமாக)I can talk tamil, I can walk tamil, i know very well tamil. உங்கல்கு என் டவுட்?

கோபாலு: உங்களுக்கு நல்லாவே தமிழ் தெரியுதும்மா. ஆமா, நீங்க ஒழுங்கா நடிக்காம, நிறைய டேக் வாங்கி, டைரக்டரை டார்ச்சர் பண்றீங்களாமே? அப்படியா?

பாக்யஸ்ரீ: நோ, நோ, who said that, நான் நினைக்கு, என்னோட வச்சி புடிக்காம திரிஷா,நயன்தாரா சொல்லும்.

கோபாலு: (மெல்லமாக) ஒரு எழவும் புரியலை. ஆமா நீங்க கவர்ச்சியா நடிப்பிங்களா?

பாக்யஸ்ரீ: கவுச்சி, நோ, நோ, my role model is sneha, நானு கொடம்ப பங்கு நடிக்குது.

கோபாலு: OK, OK(மெல்லமாக – காதிலிருந்து ரத்தம் வராம இருந்தா சரி). ஆமா உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சாமே. ரெண்டு குழந்தைங்க வேற இருக்காம். அதுவும் உங்க மேக்கப் மேன் தான் உங்க கணவராம். Industryla பேசிக்கிறாங்க.

பாக்யஸ்ரீ: (அவரை முறைக்க வேண்டும்) மம்மி, இந்த ஆளு, என்னமு சொல்லுது. Telling lies.

உமாராணி: ஏய், யாரு நீ, என்ன, என்னனோமோ கேக்குற? நீ கிசு கிசு எழுதுற பத்திரிக்கைக்காரன் தானே. உன் பேரு என்ன கோவாலுவா?

கோபாலு: கோவாலு இல்ல மேடம், கோபாலு.

உமாராணி: வாலோ, பாலோ எது வேணா இருந்துட்டு போ, இனிமே என் பப்பிக்கிட்ட, இந்த மாதிரி ஏடா கூடமா, கேள்வி கேட்ட(!), மகனே நீ தொலைஞ்ச. முதல்ல எடத்தை காலிப் பண்ணு.

கோபாலு: உண்மைய கேட்டா, உங்களுக்கு இவ்வளவு கோபம் வருதா? நாளைக்கு,சினிமா. Comல போயி பாருங்க. நான் என்ன எழுதியிருக்கேன்னு.

(கோபாலு போகிறார்)

பாலுச்சந்தர்: அறிவழகன், அடுத்த ஷாட்டுக்கு ரெடி பண்ணிட்டியா?

அறிவழகன்: ஆச்சு சார், வில்லன் ஏ.கே.யெஸ் ரெடியா இருக்காரு.

அறிவழகன்:  ஸீன்-3, ஷாட்-1,டேக்-1

பாலுச்சந்தர்: Action!!

(ஏ.கே.யெஸ்ஸும், பாக்யஸ்ரீயும் எதிர் எதிரில் நிற்கிறார்கள்)

ஏ.கே.யெஸ்: (ரொம்ப சத்தமாக) ஏ, ஏ. யாருக்கிட்ட மோதுறேன்னு தெரியுதா?

பாலுச்சந்தர்: கட்!கட் கட்!.. என்னையா! எதுக்கு இப்படி கத்துற?

ஏ.கே.யெஸ்: சார், நான் தானே வில்லன், வில்லன்னா இப்படி தானே கத்தணும்.     

பாலுச்சந்தர்: யோவ், நீ படிச்சவன்யா, பெரிய பணக்காரன் வேற. அதனால  பண்றது வில்லத்தனம்னு தெரியாம பண்ணனும். ஒழுங்கா உனக்கு கொடுத்த வசனத்தை மட்டும் பேசு.

ஏ.கே.யெஸ்: சரி, சார், டேக்குக்கு போலாம் சார்.

அறிவழகன்:  ஸீன்-3, ஷாட்-1,டேக்-2

ஏ.கே.யெஸ்: நீங்க தான் இந்த ஊருக்கு நல்லது பண்றவங்களாம்மா, நீங்க ஏம்மா இப்படி கஷ்டபடணும். நீங்க ஊன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க, உங்களையே இங்க கட்டுற சாஃப்ட்வேர் கம்பெனிக்கு சி.இ.ஓவா ஆக்கிடுறேன். என்ன சொல்றீங்க?

பாக்யஸ்ரீ: ஏய், தென்ன, என்கு, வலைய வாங்குது? நானு உன் மொக்க, மொக்க துறையை கிளி கிளி பொது.  

பாலுச்சந்தர்: கட்!கட் கட்! இப்படி ஒவ்வொரு ஸீனுக்கும், ஏம்மா, என் கழுத்தை அறுக்குற? யோவ், அறிவழகன், என்னையா டைலாக்கை சொல்லிக்கொடுத்த? ச்சை, எனக்குன்னு வந்து மாட்டுது பாரு.

அறிவழகன்: மேடம், உங்களுக்கு தொண்டை கிழிய சொல்லிக் கொடுத்தும், என்னைய திட்டு வாங்க வைக்கறீங்களே!!!. இன்னொரு தடவை சொல்றேன் ஒழுங்கா கேளுங்க.

பாக்யஸ்ரீ: சரி, சார்.

அறிவழகன்: ஏய், என்னையா விலைக்கு வாங்க பாக்குற, நான் உன் முகத்திரையை கிளி, கிளின்னு கிளிக்கிறேன் பாரு. சரியா சொல்றீங்களா?

பாக்யஸ்ரீ: ஓகே சார்.

அறிவழகன்:  ஸீன்-3, ஷாட்-1,டேக்-3

பாலுச்சந்தர்: Action!!

ஏ.கே.யெஸ்: நீங்க தான் இந்த ஊருக்கு நல்லது பண்றவங்களாம்மா, நீங்க ஏம்மா இப்படி கஷ்டபடணும். நீங்க ஊன்னு ஒரு வார்த்தை   சொல்லுங்க, உங்களையே இங்க கட்டுற சாஃப்ட்வேர் கம்பெனிக்கு சி.இ.ஓவா ஆக்கிடுறேன். என்ன சொல்றீங்க?

பாக்யஸ்ரீ: ஏய், தொன்ன, என்கு, விலைய வாங்குது? நானு உன் மொக்க, துறையை கிளி கிளின்னு பாரு.  

பாலுச்சந்தர்: நானு! நானு! கிளிக்க போறேநே !! (தலை முடியெல்லாம் கலைச்சு, பயித்தியக்கார சேட்டை எல்லாம் பண்ண வேண்டும்)

அறிவழகன்: சார், சார், என்ன பண்றீங்க.

பாலுச்சந்தர்: ஐ, நீ என்ன பண்ற, நாம ஓடிப் பிடிச்சு விளையாடலாமா? என்னைய பிடி பார்க்கலாம். என்று ஓட வேண்டும்.

அறிவழகன்: கோவிந்தாவையும், பாக்யஸ்ரீயையும் பார்த்து, நல்லா இருந்த டைரக்டரை, இப்படி அநியாயமா படம் எடுக்கச் சொல்லி பயித்தியக்காரனா ஆக்கிட்டிங்களே.

கோவிந்தா: இங்கப்பாரு, நான் எல்லாத்தையும் வித்துட்டு, படம் எடுக்க வந்துட்டேன். அந்த டைரக்டர் பைத்தியக்காரனா ஆனா என்ன, அதான் நீ ஆசிஸ்டண்டு இருக்கியே, நீயே டைரக்டர் ஆகி, இந்தப் படத்தை எடுத்துக் கொடுப்பா.  

அறிவழகன்: என்னது! நானா! நல்லா இருக்கே உங்க விளையாட்டு, ஏற்கனவே ஒருத்தனை பைத்ததியமாக்கிட்டீங்க. இப்ப, என்னைய ஆக்கப் பாக்குறீங்களா? சரி, நான் இந்த படத்தை எடுக்கணும்னா, எனக்கு அந்தாளுக்கு கொடுத்த சம்பளத்தைக் காட்டிலும் கூட கொடுக்கணும். என்ன சரியா?

கோவிந்தா: உனக்கு கூடவே கொடுக்கிறேன். நல்ல படியா இந்த படத்தை முடிச்சுக் கொடுப்பா.
அறிவழகன்: சரி, நானே படம் எடுக்கிறேன்.

காட்சி 4:
(6 மாதத்திற்கு பிறகு)

கதாப்பாத்திரங்கள்: பாலுச்சந்தர், அறிவழகன், கோவிந்தன், பாக்யஸ்ரீ, உமாராணி, 

இடம்: மன நல காப்பகம்

(பாலுச்சந்தரும்,சுந்தரும்,கோவிந்தாவும்பைத்தியங்களாக திரிந்துக்கொண்டிருக்கிறார்கள்)

பாக்யஸ்ரீ: மம்மி, நம்பல் திப்பி, அமெரிக்காவுக்கு போலாம்.

உமாராணி: போலாண்டா பப்பி, உனக்கும் நடிக்க வரலை,அந்த சினிமா நிருபர் வேற உன்னைய பத்தி கிசு கிசு எழுதி, வேற யாரும் சான்சு கொடுக்காத மாதிரி பண்ணிட்டான். எங்க அண்ணனும் பாவம் பைத்தியமாயிட்டாரு. நமக்கு இங்க என்ன வேலை, வா நம்ம அடுத்த ஃப்ளைட்டுக்கே அமெரிக்காவுக்கு போயிடலாம்.

மேக்கப் மேன்: (பாக்யஸ்ரீயிடம்) என் பேச்சை கேட்டிருந்தால், நாம ஒழுங்கா அமெரிக்காலேயே அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக்கிட்டு இருந்திருப்போம். இப்ப பாரு, உங்கம்மா பேச்சை கேட்டு, சினிமால நடிக்கிறேன்னு வந்து, என்னையும் உன் மேக்கப் மேனா இருக்க சொல்லி, கடைசில 3 பேரை பைத்தியமாக்கினது தான் மிச்சம். நமக்கு எது வருமோ அது தான் பண்ணனும். பாரு, என்னோட பொறுமைக்கும் ஒரு அளவு உண்டு,இதுக்கு மேலையும் நீ உங்கம்மா பேச்சை கேட்டுக்கிட்டு இருந்தா, என்னைய மறந்துடா வேண்டியது தான்.

பாக்யஸ்ரீ: சாரிங்க. I will always follow you.

மேக்கப் மேன்: அத்தை, இனிமேலாவது, எங்க வாழ்க்கையில உங்க மூக்கை நுழைக்காதீங்க.

உமாராணி: I am very sorry மாப்பிள்ளை.

நன்றி வணக்கம் 

9 comments:

  1. பாக்யஸ்ரீ டயலாக் அல்லாம் சூப்பருபா...! குவாலிட்டியான போட்டாஸ்...!
    மெய்யாலுமே சோக்கா கீதுபா...!

    ReplyDelete
  2. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி டி‌டி.

    ReplyDelete
  3. மெய்யாலுமே சோக்கா கீதாபா. ரொம்ப டாங்க்ஸ்பா

    ReplyDelete
  4. பால்பாட்டில்ல கேமரா செய்யலுமுன்னு தெரியாதுங்க!!! செஞ்சி வித்தா நல்ல லாபமுங்க!!!

    ReplyDelete
    Replies
    1. அட பால் பாட்டில்னு கண்டுப்பிடிச்சுட்டீங்களே!!!
      இதற்கான புகழ் அனைத்தும் எங்கள் நாடகக் குழுவின் ஆர்ட் டைரக்டர்களான திரு. சபா மற்றும் திரு.பிரேம் அவர்களையே சேரும்.

      Delete
  5. (பாலுச்சந்தரும்,சுந்தரும்,கோவிந்தாவும்பைத்தியங்களாக திரிந்துக்கொண்டிருக்கிறார்கள்)

    திரைக்கதை வசனம் , டைரக்‌ஷன் , பட்ங்கள் அத்தனையும் தங்கள் திறமையை நிரூபிக்கின்றன,,பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டுக்கள் எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது அம்மா.

      படங்கள் மட்டும் நான் எடுக்கவில்லை. அவை அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் ஏற்பாடு செய்த புகைப்படக்காரரின் கைவண்ணம்.

      Delete