அன்பார்ந்த வலைப்பூ நண்பர்களே,
என் தந்தை வழி கொள்ளுத்தாத்தாவாகிய (நாங்கள் பாட்டையா என்று சொல்லுவோம்) சைவ சித்தாந்தச் செல்வர் பெருமைமிகு காரைக்குடி சொக்கலிங்க ஐயா அவர்கள், நூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும், சிதம்பரத்தில் "மெய்க்கண்ட சித்தாந்த வித்தியாசாலை” அமைத்தும் தமிழுக்கும், சைவத்துக்கும் பெருந்தொண்டாற்றியிருக்கிறார்கள். அவர்கள் இயற்றிய ஒரு நூலான "தெய்வத் தமிழ்" மற்றும் அவருடைய மாணவர்களில் ஒருவர் எழுதிய ஐயா அவர்களின் "வாழ்க்கைச் சரித்திர" நூலும் அடியேனிடம் இருக்கிறது. மற்ற நூல்கள் அனைத்தும் சீடம்பரத்தில் இருக்கும் வித்தியாசாலையில் இருக்கிறது.
நான் சென்ற முறை இந்தியா சென்ற பொழுது, காரைக்குடி கம்பன் கழகத்தின் நிர்வாகியான திரு. கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் ஐயா அவர்கள், சிதம்பரத்தில் சொக்கலிங்க ஐயா அவர்கள் எழுதிய நூல்களை பார்க்க நேர்ந்தது, நாம் அவைகளை புதுப்பிக்க வேண்டும் என்று என்னிடம் சொன்னார்கள். மேலும் மின்தமிழ் குழுமத்தில் இருக்கும் நண்பர் திரு. வினைத்தீர்த்தான் அண்ணன் அவர்களும், ஐயா அவர்களின் எழுதிய எல்லா நூல்களையும் இணையத்தில் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது எனக்கு கால அவகாசம் இல்லாததால், நான் அதைப் பற்றி மேற்கொண்டு சிந்திக்காமல் சிட்னி திரும்பிவிட்டேன். இங்கு வந்த பிறகு என்னிடம் இருந்த இரு நூல்களையும், உலக சைவப் பேரவையின் சிட்னி கிளையின் தலைவரான திரு. அருச்சுனமனி அவர்களிடம் படிக்க கொடுத்தேன். அவர்கள் அந்த இரு நூலையும் படித்துவிட்டு, நீங்கள் முதலில் செய்ய வேண்டியது உங்கள் பாட்டையா எழுதிய அனைத்து நூல்களையும் கணினி மயமாக்க வேண்டும். அதுவே மிகப் பெரிய சிவத்தொண்டாகும் என்று கூறி, அவைகளை வெறும் ஸ்கேன் (scan) செய்தால் நன்றாக இருக்காது. அதனால் அந்த நூல்களை அப்படியே தட்டச்சு செய்ய வேண்டும், அதற்கு நானும் உதவி புரிகிறேன் என்று முன்வந்தார்கள். இந்த அரிய பணிக்கு திரு. அன்பு ஜெயா அவர்களும் என்னுடன் கைகோத்துக்கொள்வதற்கு முன் வந்தார்கள்.
நான் முதலில் அவர்களின் சரித்திர நூலை, அப்படியே தட்டச்சு செய்ய ஆரம்பித்துள்ளேன். வாரா வாரம் ஐந்து பக்கங்களை தட்டச்சு செய்ய எண்ணமிட்டிருக்கிறேன். முதலில் இந்த இரு நூல்களையும் தட்டச்சு செய்து, பிறகு இந்தியாவிற்கு செல்லும்போது, மற்ற நூல்களையும் கணினிமயமாக்க வேண்டும். இவையனைத்திருக்கும், அந்த ஈசனின் துணையும், சொக்கலிங்க ஐயா அவர்களின் ஆசியும் என்னுடன் எப்பொழுதும் இருக்கும் என்று நம்புகிறேன்.
இதோ ஐயா அவர்களின் சரித்திர நூலில் முதலில் இருக்கும் முகவுரையும், பதிப்புரையும்.
உ
சிவமயம்
ஸ்ரீமத்
சொக்கலிங்க ஐயா அவர்கள்
சரித்திரம்
ஆக்கியோன்,
ராம. உ. இராமசாமிச் செட்டியார்
உ
கணபதி
துணை.
திருச்சிற்றம்பலம்
சைவ
சித்தாந்தச் செல்வராகிய
ஸ்ரீமத் சொக்கலிங்க ஐயா அவர்கள்
சரித்திரம்.
இரண்டாம் பதிப்பு
இஃது
ஸ்ரீமத்
சொக்கலிங்க ஐயா அவர்கள் மாணக்கர்
காரைக்குடி
ராம.உ.
இராமசாமிச் செட்டியார் அவர்களால்
எழுதப்பெற்றது
சிதம்பரம்
ஸ்ரீ
மெய்கண்ட சித்தாந்த வித்தியாசாலைத்
தருமபரிபாலகர்களால்
காரைக்குடி
திருமகள்
அச்சகத்தில் பதிப்பிக்கப்பெற்றது
குரோதி,ஆவணி.
1964
முதற்பதிப்பு: 1935, 1000.
இரண்டாம்
பதிப்பு: 1964, 1000.
உ
கணபதி
துணை.
முகவுரை
ஸ்ரீமத். சொக்கலிங்க ஐயா அவர்கள் சுத்தாத்துவிதசைவ
சித்தாந்தச் செந்நெறிச் செல்வராய், அந்நெறிக் கண் உறைத்து நின்றும், அந்நெறியே
முத்திநெறி எனப் பிறர்க்குப் போதித்தும், அந்நெறி மேன்மேலும்
ஓங்கிவளர்ந்து, இவ்வுலகம் உய்திபெற வேண்டும் என்னும் நன்னேக்கத்தானே அது விருத்தியாதற்கு
இன்றியமையாத “மெய்க்கண்ட சித்தாந்த
வித்தியாசாலை” அமைத்தும், மற்றுஞ் சிவபுண்ணியங்களைச்
செவ்விது செய்தும், செய்வித்தும், உபகரித்த
உத்தம சிவா புண்ணியசீலராவர்; ஆதலின் அவர்கள் சரித்திரம்
உலகத்தில் விளங்கவேண்டுவது ஆவசியகமெனப் பல பெரியோர்களும்,
சிவநேசர் திருக்கூட்டத்தார்களும், பிற அன்பர்களும் மிக்க
விருப்புடன் ஐயா அவர்களுடைய மாணாக்கர்களிடம் தெரிவித்தார்கள்.
அவ்வின்ப மொழியானது இயல்பாகவே ஐயா அவர்களின் சரித்திரத்தை
எழுத வேண்டும் என்னுங் கருத்துக்கொண்டிருந்த மாணாக்கர்களின் எண்ணத்தை விரைந்து
ஊக்க அவர்கள் யாவரும் ஒருங்கு கூடிச் சிற்றறிவினனாகிய என்னையுன் தம்முள் ஒருவனாக
மதித்து “இப்பணியை நீயே செய்க” என்று கட்டளையிட, யாவரும் ஒருப்பட்டுக் கூறும் அக்கட்டளையை
மறுக்க வொண்ணாமலும், குருவைத் துதித்தல் உத்தம சிவா
புண்ணியமெனக் கருதியும் அதனை மேற்கொண்டு ஐயா அவர்கள் நேரில் சொல்லக்
கேட்டவைகளையும், நேரில் அறிந்தவைகளையும், ஐயா அவர்களுடைய புத்திரர், மாணவர், நண்பர், முதலியோர் சொல்லக் கேட்டவைகளையும், ஒரு கோவைப்படுத்தி இச்சரித்திரம் எழுதலாயிற்று.
இச்சரித்திரத்திற் குறைபாடுகளிருப்பினும் பெரியார்
சரித்திரமானபடியால் நீரைப்பிரித்துப் பாலைக் கொள்ளும் அன்னம்போல் குற்றங்களைந்து
குணமளைத்து பாராட்டும் வண்ணம் உத்தமர்களைப் பிராத்திக்கிறேன். .
சுபம்!
காரைக்குடி இங்ஙணம்,
யுவவரு
ஐப்பசி மீ ராம.
உ. இராமாசாமி.
உ
சிவமயம்
உலகம்பட்டி
சித்தாந்த
சைவ நிலையம்
ஸ்ரீலஸ்ரீ
இலக்குமண சுவாமி அவர்கள்
மதிப்புரை
நீர்வளம், நிலவளம், பொருள்வளம் நிறைந்த காரையம்பதியில்
தனவைசிய மரபில் இற்றைக்கு எழுபத்தெட்டு ஆண்டுகட்குமுன் திருவவதாரம் செய்து தமது
இளம்பருவத்திற்றனே இலக்கணவிலக்கியம், சித்தாந்த சாத்திர
முதலிய கருவிநூல், அறிவு நூல்களை உத்தமாசிரியர் முன் ஐயம்
திரிபறக்கற்றுத் தெளிந்து புலவர் திலகமென யாவரானும் மதிக்கப்பெற்று
திருப்புத்தூர்த் தலபுராணம் ஆதிய பல தலபுராணங்களையும்,
இறைவன்மீதும், இறைவன் அடியார் மீதும் பலபிரபந்தங்களையும்
பாடியும், பலகட்டுரை நூல்களியற்றியும்,
சிவாகம விதிப்படி பெருமைமிக்க சிவாசாரியாரிடத்தில் சமயவிசேட நிருவாண தீக்கைகள்
பெற்று சிவபூசை சிவாலய சேவைகளையிடையிறாது செய்தும், தம்மை
வந்தடைந்த நன்மாணாக்கர்களுக்கு அவரவர் மதி நுட்பம் நோக்கி கருவிநூல், அறிவு நூல்களை மனத்தெளிவுறப்போதித்தும், பெரிய
அவைக்களங்களில் அரியேறு போன்று வீற்றிருந்து சைவ வீரத்துடன் பிரசங்கமாரி பொழிந்து
உலகாயதம், பாஞ்சராத்திரம், ஏகான்மவாதம்
முதலிய புறச்சமயங்களைக்கண்டித்து சிவமே பரம்பொருள் என நாட்டியும், சமய அரசாய் விளங்கும் நம் சைவத்தை யாங்கணும் பரவச்செய்தற் பொருட்டு
சிதம்பரத்தில் பொய் கண்ட கன்ற மெய்கண்டார் பெயரால் ஓர் வித்தியாசாலை நிறுவியும், என்றும் மாறாத சிவ வேடப் பொலிவுடன், சித்தாந்த ஞானச் சிவானுபூதிச்செல்வராய்
நிலவியிருந்து பிரமோ தூ தவவருடத்தில் சுத்த சாட்குண்ணிய பரமபதியாகிய
சிவபரஞ்சுடரின், திருவடிப் பேறெய்திய தவப் பெரியாராகிய
ஸ்ரீலஸ்ரீ, சொக்கலிங்க ஐயா அவர்களின் மாணாக்கருள் தலைசிறந்து
விளங்குபவராயும், கல்விச்செல்வம்,பொருட்செல்வம்
நிறையப்பெற்றவராயும், அதிவிரைவில் செய்யுளியற்றும் புலமைத்
திறம்வாய்க்கப் பெற்றவராயும், சிவபத்தி, அடியார்பத்தி, குருபத்தியிற் சிறந்து
விளங்குபவராயும், காரையம்பதிவாசராயும் உள்ள திருவாளர் ராம.
உ. இராமாசமிச்செட்டியாரவர்கள் இனிய செந்தமிழ் வசன நடையில் எழுதியுள்ளார்கள்.
இச்சரித்திரத்திற்கண்ட நிகழ்ச்சிகளுள் ஒன்றேனும் புனைன்துரையன்று. இத்தவப்பெரியார்
பெருமையை இச்சரிதத்தானும் இதன் பிற்பகுயிலுள்ள இரங்கற்பாக்கள், அனுதாப உரைகளானும் நன்குணரலாகும்.
"தேசிகர் தம்மைச் சிவநேசர் தம்மையும்
ஈசனெனவே உளத்துளெண் "
எனச்
சைவசமய நெறியிற் கூறியாங்கு சிவனடியவரைச் சிவனெனவே கண்டு வழிபட வேண்டுவது
மரபாகலின் இப்பெரியார் சரிதத்தைச் சிவசரிதமாகவேயெண்ணி சிவநேசச் செல்வரனை வரும்
ஏற்று அன்போடுபடித்துப் பாராட்டி இறைவன் அருட்பேற்றிற்குரியவராகி இன்புற்று
வாழ்வாராக.
உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
பதிப்புரை
இந்நூலின் முதற்பதிப்பு நீண்டகாலத்திற்கு முன்பே முற்றும்
செலவாகிவிட்டமையாலும், சைவ சமயத்தின் உண்மை நெறியைத் தம் வாழ்வில் சரியை,
கிரியை, யோகம், ஞானம் ஆகியவற்றை
முறையாகக் கைக்கொண்டு வாழ்ந்த பெருமானாரின் வரலாறு கற்றுணந்தார்க்கும்
மற்றவர்களுக்கும் வழிகாட்டியாகும் என்ற கருத்தாலும் இவ் விரண்டாம் பதிப்பு
வெளிவருகிறது. முதற் பதிப்பின் விரிவான அனுபந்தத்தின் சிற்சில பகுதிகள் மட்டும்
இப்பதிப்பில் சேர்க்கபெற்றுள்ளன.
அன்பர்களுக்கு ஐயா அவர்களின் வரலாறு சிறந்த வழிகாட்டியாக
விளங்கிச் சைவமும் தமிழும் தழைத்தினி தோங்கத் தில்லை வெளியில் எல்லையில்
நடம்புரியும் நடராஜப்பெருமான் நல்லருள் துணைபுரிவதாக.
இப்பதிப்பைச் சிறந்த முறையில் அச்சிட்டுத் தந்த காரைக்குடி
திருமகள் அச்சகத்தாருக்கு எங்கள் நன்றி உரியதாகுக.
சிதம்பரம் மெ. சி.
வி.
27-8-1964 தருமபரிபாலகர்கள்
(அடுத்த பகுதி - சிறப்புப்பாயிரம்)
சிறப்பான ஆக்கம்..
ReplyDeleteமுயற்சிக்குப் பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..
தங்களின் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அம்மா.
Deleteதங்களின் சீரிய பணி போற்றப்பட வேண்டிய பணி ஐயா
ReplyDeleteதமிழுக்கு தாங்கள் செய்யும் மிகப் பெரியத் தொண்டாக இப்பணி அமையும்
என்பதில் ஐயமில்லை.
வாழ்த்துக்கள் நண்பரே
தங்களின் கனிவு கலந்த வார்த்தைகள் என்னை இன்னும் ஊக்கப்படுத்துகிறது ஜெயக்குமார் சார்.
Deleteதங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
வாழ்த்துக்கள்! சிறப்பான சீரிய பணி! தொடருங்கள்!
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி சுரேஷ்.
Deleteதட்டச்சு செய்வதுடன், scan-செய்தும் வைத்தல் புத்தகவடிவில் அவை இருந்ததற்கான சரித்திரம் பாதுகாக்கப்படும். மேலும், தட்டச்சுப் பிழைகள் பின்னர் கண்ணுபிடிக்க நேர்ந்தால் திருத்துவது எளிதாக இருக்கும். இல்லையெனில் நம் பழைய இலங்கியங்களில் காணப்படும் பாடபேதங்கள் ஊருடுவ வாய்ப்புகள் உண்டு. தங்கள் பணி சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களுடைய பாராட்டுக்களுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அன்பு ஜெயா சார்.
Deleteநீங்கள் சொல்வது நல்ல யோசனை தான். ஆனால் அந்த புத்தகத்தின் பைண்டிங்கை எடுத்து விட்டு scan செய்ய வேண்டும். இல்லையென்றால் வரிகளின் கடைசி எழுத்துக்கள் மறைந்து விடுகின்றது.
மிக நல்ல முயற்சி ...
ReplyDeleteதொடர்கிறீர்களா இல்லையா?
தங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி மது.
Deleteநான் நேரம் கிடைக்கும்போது எல்லாம் தட்டச்சு செய்து கொண்டு தான் இருக்கிறேன். அவைகளை வாரத்திற்கு ஒரு நாள் இங்கு பதிவாக போடுகிறேன்.
நல்ல முயற்சி.... ஸ்கேன் செய்தும் வைத்துவிடுங்கள்..... எத்தனை பக்கங்கள் - எனக்கும் ஸ்கேன் செய்து அனுப்பி வைத்தால் நானும் நேரம் கிடைக்கும்போது தட்டச்சு செய்து தருகிறேன்.
ReplyDeleteதங்களுடையவாழ்த்துக்கு மிக்க நன்றி வெங்கட் சார்.
Deleteசிறிய புத்தகங்கள் தான். இந்த புத்தகம் 70 பக்கங்கள். மற்றொரு புத்தகம் 110 பக்கங்கள். இந்த புத்தகத்தை பைண்டிங்கை எடுத்துவிட்டு தான் scan செய்ய வேண்டும். இரண்டாவது புத்தகத்தை scan செய்து அனுப்புகிறேன் (அது scan செய்தால் நன்றாக தான் இருக்கிறது).
தங்களின் உதவிக்கு மிக்க நன்றி
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteபின்னூட்டம் நேரடியாகப் பதிவாகிவிடுகிறது.
ReplyDeleteகருத்தை நீக்க வேண்டுகிறேன்!
நன்றி!
தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
Deleteமுதலில், இவ்வளவு ஆழமாக படித்தமைக்காக என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
தாங்கள் கூறியிருப்பதை எல்லாம் நான் மீண்டும் சரி பார்த்து பிழை இருக்குமாயின் திருத்திவிடுகிறேன்.
ஐயா வணக்கங்கள்.
ReplyDeleteநலம்.நலமே தழைக.
தங்கள் பாட்டனாரின் நூல்கள் விற்பனைக்கு கிடைக்கிறதா?
தெரிவித்துதவிட வேண்டுகிறேன். நன்றிகள்.
அடியேனது வாட்சப் எண்:9952806121.
அடியேன்
ReplyDeleteஸ்ரீகணநாத நாயனார் நூலகம்
மு.ஜெயக்குமார் -
39/22 கிருஷ்ணாபுரம் முதல்தெரு
திருச்சிராப்பள்ளி. -- 620008.