Friday, May 30, 2014

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - நகர் வளம்சொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை

சொக்கலிங்க ஐயா சரித்திரம் - சிறப்புப்பாயிரம்


நகர் வளம்

இத்தகு வளம்பொருந்திய மங்கலகரமாகிய கீர்த்தி நிறைந்த பாண்டி நாட்டின் கண்ணே, அகத்திய மகாமுனிவர், நெல்வாயில் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளிய சிவலிங்கப் பெருமானுக்கு அபிஷேகஞ் செய்ததேனானது வெள்ளமாகப் பெருக்கெடுத்து வருகின்ற தேனாறு சூழப்பெற்றதும், மதுவொழுகும் மலர்ச் சோலைகள் மணம் பரப்பி வயங்கப் பெற்றதும், கன்னலுங், கமுகும் வேலியாகச் சூழச் செந்நெல் வளர்ந்து செழிக்கும் வயல்கள், தவறாது என்றும் முப்போகமும் விளையப் பெற்றதும், நீர் நிறை கிடங்குகளும், ஏரிகளும் நிலவப்பெற்றதும், திருமகள், கலைமகள் வீற்றிருக்கின்ற செந்தாமரை, வெண்டாமரை மலர்கள் மிகுந்து திகழுந் தடாகங்களும், பொய்கைகளும், ஓடைகளும், கூபங்களும் என்றும் நீர்வளம் நிறையப் பெற்றதும், நால்வகை மலர் நிறை நந்தனவனங்கள், பசுமடம் முதலியவை பாங்கிலுற்றதும், என்றும் மங்களம் நிறைந்த விழாவறா வீதிகளில் தோரண முதலியவை சூழ்ந்து அழகு செய்யப் பெற்றதும், எத்தேசத்தின் எவ்வரும் பொருள்களுந் தன்பாற்கொண்டு தகுதியிர் கொடுக்கும் ஆவணக் காட்சியின் அற்புதம் வாய்ந்ததும், நாட்டுக்கோட்டை மகுடதனவைசியர்கள் வாழப் பெறுவதாகிய இந்திரன் மாளிகை யென்றதிசயிக்கும் பொற்கலசந்திகழ் உப்பரிகைகளும், மாடமாளிகைகளும், வானளாவப் பெற்றதும், சாதுக்கள் மடம் முதலிய மற்ற மடாலயங்கள், அன்ன சத்திரங்கள், வித்தியாசாலைகள், ஔடத சாலைகள் முதலிய அற நிலையங்கள் என்றுங் குறைவின்றி விளங்கி வரப்பெற்றதும், முதல்வராகிய விநாயகராலயங்களும், கிராமதேவதை கோயில், ஐயனார் கோயில், விஷ்ணுவாலய முதலிய ஆலயங்களும் பக்த ஜனங்கள் பக்திசிரத்தையுடன் கொண்டாடி வணங்கிப் போற்றிவரப் பெற்றதும், ஆடவரும், மகளிரும் சகல சம்பத்துக்களுடன் குதூகலமாக வாழ்ந்துவரப் பெறுவதும், சூத்திரர் வைசியர், ஷத்திரியர், பிராமணர் முதலினோர் அவரவர் நெறிதவறாது போற்றிவருகின்ற பொற்பு நிறைவீதிகள் அமையப் பெற்றதும், மறையவர் அத்தியயனஞ் செய்யும் வேதபாடசாலைகளும், சாத்திரபாடசாலைகளும், வைதிக சைவ சீலர்களாகிய ஆதி சைவ சிவாசாரியார்கள் வாழ்ந்து வருகின்ற மாடமாளிகைகளும், சிவாகம பாடசாலைகளும், அறுபத்துமூவராதிய உண்மை நாயன்மார் குருபூசை நடாத்தப் பெற்றுச் சைவமாதவர்கள் வாழ்ந்து வருகின்ற திருமடாலயங்களும், திருமுறைகளாகிய திருவருட் பாசுரங்கள் ஓதப்பெருகின்ற திராவிட வேத பாடசாலைகளும், பக்கத்திற் சூழ்ந்து விளங்கும் பான்மை பெற்றதும், இன்னோரன்ன பன்னருஞ் சிறப்பு வாய்ந்த இந்நகருக்கு மத்தியில் உயிராய் வேத சிவாகம திராவிட வேத புராண பாராயண முழக்கங்களும், மங்கள வாத்திய ஒலிகளும், நிறைந்து நித்திய நைமித்திக காமிய பூசைகள் சிவாகம விதிப்படி பக்தி சிரத்தையுடன் நடாத்தி வரப் பெற்ற நகரச் சிவாலயம் பிரகாசிக்கப் பெற்றதும், அக்கோயிலின் கண்ணே திருத்தொண்டு செய்யும் அடியார்களும் பெரியோர்களும் சேவிக்க உயிருக்குயிராகிய ஸ்ரீ மீனாக்ஷிசுந்தரேஸ்வரர், விநாயகர், சுப்பிரமணியர் முதலிய பரிவார தேவர்களுடன் திருவருள் பொழிந்து அநவரத சாந்நித்திய சருவானுக்கிரக மூர்த்தியாய் விகசிக்கின்ற பெருமை பெற்றதும் யாதெனில்:-

“சீர்தரு காரென் மேகமார் சோலை
     திகழ்பல மாடங்கள் சசூழ்ந்து
ஆர்தரப் பொழிந்தே யழகுசெய் வளத்தா
     லையெனுஞ் சுந்தர மமைந்த
நேர் திகழ் குடியென் புரமிது மருத
     நிலத்தில்வாழ் பதியெனும் பொருள்கொள்
பார்புகழ் மேக சுந்தர புரமாப்
     பகர்திருக் காரையம் பதியே.”

“திருவள ரிளையாற் றங்குடி மாற்றூர்
     திகழ்தரு வைரவ னிரணி
புரமகிழ் பிள்ளை யார்பட்டி நேமம்
     புகழிருப் பைக்குடி சூரை
மருவிவாழ் வுறுவே லன்குடிக் கோயில்
     வளமிகு காணியாட் சியதாம்
உரிமையிற் போற்று முயர்நக
     ரத்தா ரோங்கிவாழ் காரையம் பதியே.”

--------------
(அடுத்து வர இருப்பது - முதலாம் அதிகாரம்.உற்பத்தி)

பின்குறிப்பு:   பாடலில் கடைசி எட்டு வரிகளில், நகரத்தார்களின் ஒன்பது கோவில்களைப் பற்றி சொல்லப்பட்டிருக்கு. அவை:
இளையாத்தங்குடி, மாத்தூர், வைரவன் கோயில், இரணிகோயில், பிள்ளையார்பட்டி, நேமம் கோயில், இலுப்பைக்குடி, சூரக்குடி, வேலங்குடி

12 comments:

 1. நன்றி நண்பரே
  தொடர்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி ஜெயக்குமார் சார்

   Delete
 2. //எரிகளும் நிலவப்பெற்றதும், //? ஏரிகள் ? என்று நினைக்கிறன்..
  ஒரு செழுமையான வாசிப்பு அனுபவம் சொக்கன் நன்றிகள்
  வெகுநாட்களுக்கு முன் கிராமத்தில் பிரிந்த எனது தாத்தா காலத்திற்கு ஒரு கால யந்திரத்தில் உட்கார்ந்து போன மாதிரி இருக்கு..
  நன்றிகள் தொடருங்கள்..

  ReplyDelete
  Replies
  1. எழுத்துப்பிழையை திருத்தி விட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு மிக்க மிக்க நன்றி.

   மிக்க மகிழ்ச்சி திரு.மது.

   Delete
 3. நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி

   Delete
 4. தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சுரேஷ்,

   Delete
 5. நன்றாகவே எழுதியுள்ளீர்கள் சகோ பண்டைய காலத்தை கண் முன்னே கொண்டு வந்தீர்கள்.புதியவையும் கூட நன்றி வாழ்த்துக்கள் ....!

  ReplyDelete
  Replies
  1. ஐயையோ!! சகோ, இது நான் எழுதவில்லை. சொக்கலிங்க ஐயாவின் மாணவர்களில் ஒருவர் 1935ஆம் ஆண்டில் இதை எழுதினார். நான் கணினியில் தட்டச்சு மட்டும் தான் செய்கிறேன்.

   தங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி.

   Delete
 6. பகிர்வுக்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திரு.வெங்கட் சார்.

   Delete