நாங்கள்
சிட்னிக்கு வந்த புதிதில், மூன்று நாட்கள் சேர்ந்தார் போல் வந்த ஒரு விடுமுறையின் போது, ஆஸ்திரேலியாவின் தலைநகரமான கான்பராவிற்கு சென்றோம். சிட்னியிலிருந்து கான்பரா
ஏறக்குறைய 290 கிலோமீட்டர். அப்போது என்னிடம் கார் இல்லை. அதனால் ஒரு மாதத்திற்கு முன்பே
பேருந்தில் முன்பதிவு செய்திருந்தேன். ஒரு மாதத்திற்கு முன்பே பதிவு செய்வதால், பயணச்சீட்டின் விலை ஒரு நபருக்கு போக வர வெறும் 30 டாலர் மட்டுமே. இப்படி
முன்பதிவு செய்யவில்லை என்றால் பயணச்சீட்டின் விலை $60 ஆக இருக்கும்.
அப்போது எங்களுடைய மகாராணிகள் பிறக்கவில்லை. அதனால் நாங்கள் இருவர் மட்டுமே கான்பரா
சென்று அங்குள்ள பாராளுமன்றம், தேசிய அருங்காட்சியகம் எல்லாம்
சென்று பார்த்து விட்டு வந்தோம்.
என்னடா, தலைப்புக்கும், இது வரை நான் சொன்னதுக்கும் ஒரு தொடர்பே இல்லையே என்று பார்க்கிறீர்களா, இதோ தலைப்புக்கு வந்துட்டேன். அந்த தேசிய அருங்காட்சியகத்தில் வெவ்வேறு நாடுகளின்
அரிய பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. அந்த சேகரிப்பில் நம் நாட்டை சேர்ந்த
50க்கும் மேற்பட்ட கலைப் பொருட்கள் இருந்தன. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து
நந்தி, திருஞானசம்பந்தர், முருகர், நடராஜர், துவாரபாலகர் போன்ற சிலைகளும் வைக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு சிலைகளுக்கும் கீழே அதனைப் பற்றிய குறிப்புகளும் இருந்தன.
(நந்தி)
(திருஞான சம்பந்தர்)
(திருஞான சம்பந்தர்)
(முருகர்)
(துவாரபாலகர்)
இதையெல்லாம் பார்த்தபோது ,நம் நாட்டிலிருக்கும் கலைப் பொருட்களை இங்கே பார்வைக்கு வைத்திருக்கிறார்களே
என்று எனக்கு பெருமையாக இருந்தது.
சமீபத்தில், பத்திரிக்கையில் ஒரு செய்தியை
படித்தேன். அதாகப்பட்டது இந்த தேசிய அருங்காட்சியகத்தில் இருக்கின்ற வெண்கலத்தாலான
நடராஜர் சிலையை இந்தியாவைச் சேர்ந்த சுபாஷ்கபூர் என்ற பாரம்பரிய பொருட்களை விற்பனை
செய்பவரிடமிருந்து, 56 லட்சம் டாலர் கொடுத்து அந்த அருங்காட்சியகம்
வாங்கி இருக்கிறது. 2012ஆம் ஆண்டில் சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட சுபாஷ்கபூர், ஆஸ்திரேலியாவிற்கு விற்ற நடராஜர் சிலையையும் கடத்தி தான் விற்றேன் என்று ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இதற்காக இவர் மீதான வழக்கொன்று தமிழ்நாட்டில் நடந்து கொண்டு வருகிறது. கடத்தப்பட்ட
இந்த சிலையை இந்திய அரசாங்கம் ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்திடம் திருப்பிக்கொடுக்குமாறு
கேட்டிருக்கிறது. அவர்களும் மறுப்பு தெரிவிக்காமல் திருப்பித்தர ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
(யுனெஸ்கோ
உடன்பாட்டின்படி, ஒரு
நாட்டில் இருந்து சட்டவிரோதமாக ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்யப்படும்
கலைப்பொருட்களை அந்த நாட்டிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் ) உடனடியாக அந்த சிலையை காட்சிப் பொருளிலிருந்து எடுத்து விட்டார்கள்.
இந்த நடராஜர்
சிலையானது ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீபுரந்தான்
கிராமத்தில் சோழர்களால் கட்டப்பட்ட ஸ்ரீ புரந்தான்
ஏரிக்கரை கோவில் என்றும் பிரகதீஸ்வரர் கோவில் என்றும் அழைக்கப்பட்ட சிவன் கோவிலில்
இருந்த வெண்கல சிலையாகும். இங்கிருந்து தான் இந்த சிலை கடத்தப்பட்டிருக்கிறது. அந்த
ஊரில் வசித்து வந்த ஒருவரிடம், இந்த சிலையின் புகைப்படம் இருந்ததைக்கொண்டு போலீசார் ஆஸ்திரேலியாவில் இந்த
சிலை இருப்பதை கண்டுப்பிடித்திருக்கிறார்கள். இந்த சிலை அந்த கிராமத்திற்கு வந்தபிறகு, அதை மீண்டும் கோவிலில் பிரதிஷ்டை செய்து பூஜை செய்ய அந்த ஊர் மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்களாம்.
இந்த ஒரு
சிலையை கண்டுப்பிடித்து விட்டார்கள். இன்னும் எத்தனை எத்தனை ஐம்பொன் சிலைகள் எல்லாம்
இப்படி நம் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறதோ!!! இந்த அருங்காட்சியகத்திலும், மற்ற நாடுகளின் அருங்காட்சியகத்திலும்
இருக்கின்ற நம் தெய்வச் சிலைகள் எல்லாம் சட்டப்பூர்வமாகத்தான் வாங்கப்பட்டிருக்கிறதா
என்பது அந்த இறைவனுக்கே வெளிச்சம்!!!!.
பின் குறிப்பு: அந்த அருங்காட்சியகத்தில், புகைப்படம் எடுப்பதற்கு அனுமதியில்லை. மேலே உள்ள புகைபடங்கள் அனைத்தும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.
உண்மை தான்... இறைவனுக்கே வெளிச்சம்...!
ReplyDeleteஉண்மை தான் டிடி.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டிடி.
வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட கோஹினூர் வைரம் நம் நாட்டுக்கு எப்போ வருமோ ?(வாங்கலாம்னு ஐடியா )
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜீ.
Deleteஅது இந்தியாவிற்கு வந்து, உங்களை மாதிரி யாரோ ஒருத்தர் வாங்கிட்டங்களாம்!!!!!!
இங்கிருந்து கடத்தப்பட்ட சிலைகள் ஏராளம் இருக்கும். பலவற்றின் புராணம் நமக்கே தெரியாதுதான்.
ReplyDeleteஉண்மை தான் ஸ்பை.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
இறைவனுக்கே அல்வா கொடுத்து கடத்திவிடுகிறார்கள்
ReplyDeleteஇறைவனும் அந்த அல்வாவை வாங்கிக்கிட்டாரே!!!!!
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜயக்குமார் சார்.
இறைவனுக்கே இந்த நிலை என்றால் நாம் எமாத்திரம்.
ReplyDeleteஉண்மை தான் சகோதரி.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
பாதுகாப்பு குறைபாடுகளால் பல அரிய சிலைகள் இப்படி திருடு போகின்றன! திரும்பி வரும் நடராஜர் சிலை மகிழ்ச்சியை தருகிறது! நன்றி!
ReplyDeleteஇந்த சிலை எவ்வாறு திருடப்பட்டது என்று ஒரு பத்திரிக்கையில் படித்தேன். நீங்கள் சொல்வது உண்மை தான். நிறைய கோவில்களில் பாதுகாப்பே ஒரு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.
Deleteஇந்தியாவில் இருக்கும் வரை தான் அந்த சிலை கடவுளாக கருதப்படுகிறது ஆனால் அதே சிலை கடல் கடந்து மேலைநாடுகளுக்கு செல்லும் போது கலைப் பொருளாகவே கருதப்படுகிறது .கடவுளுக்கே இந்த நிலைமை என்றால் ?
ReplyDeleteநீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான்.
Deleteஎன்னைப் பொறுத்தவரை, நாம் நம் தாய்நாட்டில் இருந்தால் தான், முதல் தர குடிமகனாகக் கருதப்படுவோம்.
அருமையான தகவல். காலத்திற்கேற்ற பதிவு. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள் சொக்கன்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.
Deleteஎத்தனை எத்தனை சிலைகள் இப்படித் திருடு போனது.... இன்னமும் போய்க் கொண்டிருக்கிறது!
ReplyDeleteஉண்மை தான் வெங்கட் சார். இந்த சிலை கடத்தலை எப்படித்தான் தடுக்கப்போகிறார்களோ!!!
Deleteநம் நாட்டின் பொக்கிஷமான கோஹினூர் வைரமே இந்நொரு நாட்டின் மஹாராணியின் மணிமுடியை அலங்கரிக்கிறதே..
ReplyDelete(யுனெஸ்கோ உடன்பாட்டின்படி, ஒரு நாட்டில் இருந்து சட்டவிரோதமாக ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்யப்படும் கலைப்பொருட்களை அந்த நாட்டிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் )
யுனெஸ்கோ என்ன செய்தது??
தங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி அம்மா.
Deleteஇந்த விஷயத்துல, யுனெஸ்கோ என்ன தான் செய்கிறதோ தெரியலை.