Tuesday, December 17, 2013

தலைவா திரைப்பட அனுபவம் – நடன வகுப்பு காட்சி


இந்த நடனக் காட்சியின் காணொளியை இங்கே பார்க்கவும். 


இயக்குனர் எங்களையெல்லாம் கூப்பிட்டு அந்த நடன வகுப்பு காட்சியை விளக்க ஆரம்பிச்சாரு. எனக்கு உள்ளுக்குள்ள உதற ஆரம்பிச்சிடுச்சு. ஏன்னா, எனக்கு தான் சுட்டுப் போட்டாலும் நடனம் வராதே. ஏழு வருஷத்துக்கு முன்னாடி நான் டோக்கியோவில இருக்கும்போது, வருஷா வருஷம் நடக்கிற பொங்கல் திருவிழாவில நாங்க ஒரு  நாடகம் போடுவோம். அப்படி ஒரு நாடகத்தை எழுதி இயக்கிய நண்பர் ஒருவர்,  ராமராஜன் மாதிரி நடனம் ஆடுங்கன்னு சொல்ல, நானோ பாக்யராஜ் மாதிரி நடனம் ஆடினேன். அவர் கடுப்பாயிட்டாரு. உடனே நான், ஏங்க எனக்கு தெரிஞ்ச ஒரே நடனம் பாக்யராஜ் நடனம் தான், அதனால நாம ராமராஜனுக்கு பதிலா பாக்யராஜ்ன்னு மாத்திடுவோம்ன்னு சொன்னேன். அவரும், இவன் கிட்ட கோவிச்சுக்கிட்டா வேலைக்கு ஆகாதுன்னு நினைச்சு, என்னிடம், ஏங்க ராமராஜன் நடனமும் ரொம்ப ஈஸி தாங்கன்னு, “தைய தக்க, தைய தக்கண்ணு” ஆடி காமிச்சாரு. நாம யாரு!!, நீங்க எப்படி வேணாலும் ஆடுங்க, ஆனா நான் பாக்யராஜ் நடனம் மட்டும் தான் ஆடுவேன்னு ஆடினேன். அவரும் எவ்வளவோ முயற்சி செஞ்சு, கடைசில  ஒண்ணும் வேலைக்கு ஆகலை. அதனால மேடைல நீங்க வரும்போது, ராமராஜன்  பாட்டு வரும், அப்ப கையை மட்டும் ஆட்டுங்க போதும்னு  வெறுத்துப்போய் சொன்னாரு. இப்ப இயக்குனர் அந்த நடனக் காட்சியை சொல்ல, சொல்ல, எனக்கு அந்த வேண்டாத பழைய நினைப்பு எல்லாம் வந்துடுச்சு. எங்க நம்மளால நிறைய டேக் ஆயிடுமோன்னு பயம் வந்துடுச்சு. ஏன்னா, இந்த காட்சியில விஜய்,அமலாபால், சந்தானம்ன்னு எல்லாரும் இருக்காங்க. ஏற்கனவே சந்தானம், எங்களோட முத காட்சிக்கு, நீங்க 400/500 டேக் எடுத்தவங்கதானேன்னு சொல்லி ரொம்ப கடுப்பேத்தினாரு. இந்த காட்சியில நான் ஒழுங்கா நடிக்காம நிறைய டேக் வாங்கினா என்ன பண்றதுன்னு ஒரே பயமாயிடுச்சு. இயக்குனர் சொல்லி முடிச்சவுடனே, நான் தயங்கிக்கிட்டே, சார், எனக்கு நடனம் எல்லாம் ஆட வராதுன்னு” சொன்னேன். அவரும், “அது தாங்க எங்களுக்கு வேணும். நீங்க நடனம் கத்துக்க வந்திருக்கீங்க,அதனால தப்புத்தப்பா ஆடுங்கன்னு” தைரியம் கொடுத்தாரு. அந்த காட்சி என்னன்னா, விஜய் சொல்லிக்கொடுக்கிற நடனப்பள்ளியில அமலாபால் போய் சேருவாங்க. நாங்க தான் அமலாபாலை பின்னாடியே ஃபாலோ பண்ணுகிற கல்யாணமாகாத பிரம்மச்சாரிகள் ஆச்சே, அதனால நாங்களும் விஜய் கிட்ட எங்களையும் அந்த நடனப்பள்ளியில சேர்த்துக்குங்கன்னு கெஞ்சுவோம். அந்த காட்சி தான், நாங்க விஜய் முன்னாடி, முட்டிப் போட்டு, கையை மேல தூக்கி, விஜயிடம்,”தலைவா, நீங்க தான் எங்களுக்கு குரு, எங்களுக்கு டான்ஸ்ன்னா உயிரு. பிளீஸ் எங்களுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுங்கன்னு” சொல்லுவோம்.




இந்த காட்சியை எடுக்குறதுக்காக முதல்ல எங்களை எல்லாம் வரிசையா நிக்கச் சொன்னாங்க. நான் வந்து முத வரிசையில நின்னுக்கிட்டு இருப்பேன். அப்புறம் அப்படியே முட்டி போடச் சொல்லி, . கையை தூக்கி மேல காட்டச் சொன்னாங்க. காமிரா எங்களுக்கு பின்னாடி இருந்துச்சு. முதல்ல சரியா வரலை. எல்லாரும் ஒரே நேரத்துல முட்டி போடலை. உடனே டைரக்டர் நான் ஒண்ணு,ரெண்டு, மூணு சொல்லுவேன். மூணு சொன்னவுடனே நீங்க முட்டி போட்டு கையை மேல துக்கணும்னு சொன்னாரு. அப்புறமும் சரியா வரலை, பின்னாடி இருக்கிறவங்களோட கை, முன்னாடி இருக்கிறவங்களோட தலையை மறைக்குதுன்னு, அந்த கைகளையெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணி, சரியா தூக்கச் சொன்னாங்க. 4/5 டேக்குக்கு அப்புறம் அந்த காட்சி சரியா வந்துச்சு. இதுல விஜய் எங்களுக்கு முன்னாடி நிக்கணும். இன்னும் சரியா சொல்லனும்னா, எனக்கு முன்னாடி நின்னு(அவரோட முகத்துக்கு நேரா நீட்டிக்கிட்டு இருக்கிற கை, என்னோட கை), என்னைய அவர் பார்த்துக்கிட்டு இருப்பாரு. அவரும் பாவம் அந்த காட்சி முடியுற வரைக்கும் பேசாம நின்னுக்கிட்டு இருந்தாரு. இப்ப வசனம். படத்துல எல்லாரும் ஒண்ணா சொல்லுவோம். ஆனா காட்சி எடுக்கும்போது, இந்த வசனங்களையே தனித்தனியா சொல்லச் சொன்னார்கள். முத வசனமே என்னோடது தான். “தலைவா நீங்க தான் எங்களுக்கு குரு.” இந்த வசனத்தை நான் முகத்தை அப்பாவியா(!!) வச்சுக்கிட்டு(எல்லாம் வீட்டு அம்மணிக்கு எதிர்ல நின்னு பேசிப் பேசி பக்கமாயிடுச்சு)  சொன்னவுடனே, விஜய் சிரிசிட்டாரு. உடனே, “சாரி, சாரி இன்னொரு டேக் போயிடலாம்னு சொன்னாரு”. அவர் சிரிச்சவுடனே, எல்லோரும் “சாம் (ஏன் சாம்ன்னு கூப்பிடுறாங்கன்னு இந்த பதிவுல சொல்லியிருக்கேன் - சம்பந்தம் ஏன் சொக்கன் ஆனான் ), அவர் சிரிக்கிற அளவுக்கு என்ன பண்ணினீங்கன்னு” கேக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு ரெண்டு டேக் ஒவ்வொருத்தரா வசனம் சொல்ற மாதிரி எடுத்தாங்க. அப்புறம் இயக்குனர் என்ன நினைச்சாரோ, எல்லோரையும் ஒண்ணா சொல்ல சொல்லி எடுத்தாரு. ஆனா அப்படியுமே நாங்க நாலு டேக் வாங்கினோம்.

இப்ப, நடனம் கத்துக்கிற மாதிரியான காட்சி.  இந்த காட்சிக்கு, முன்னாடி நின்ன மாதிரியே நிக்கணும். ஆனா, முதல் வரிசையில நடுவுல அமலாபால் நிப்பாங்க. அவுங்களுக்கு ரெண்டு பக்கமும் டான்சர் பாய்ஸ் நிப்பாங்க, அப்புறம் நான் அமாலாபாலுக்கு இடதுபுறத்துல அந்த டான்சர் பாய்க்கு பக்கத்துல நிப்பேன். அந்த மாதிரி மூணு வரிசைல நாங்க நிப்போம். இந்த ஷாட்ல விஜய் கிடையாது. இன்னொரு டான்சர் தான் எங்களுக்கு சொல்லிக்கொடுப்பவரு. அவரு ஒன்,டூ, த்ரீ ஃபோர், ஃபைவ் ,சிக்ஸ் ,செவன் ,எய்ட் அப்டின்னு சொல்லுவாரு. அப்ப எல்லோரும் டான்ஸ் மூவ்மென்ட் பண்ணனும். அப்படி பண்ணிக்கிட்டே, அமலாபால் பக்கத்துல போறதுக்கு ட்ரை பண்ணனும். அதாவது, எங்களுக்கு பக்கத்துல இருக்கிற அந்த டான்சரை தள்ளிட்டு அமாலாபாலுக்கு பக்கத்துல போகணும். உடனே அந்த டான்சர் பாய்ஸும் எங்களை தள்ளிட்டு, அவுங்க அமலாபால் பக்கத்துல போவாங்க. இப்படியே ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு நடக்கும். இதுல நான் ரொம்ப ஒல்லியா இருக்கிறதுனால, எனக்கு பக்கத்துல இருந்த டான்சர் நான் அமலாபால் பக்கத்துல போனவுடனே, என்னைய தூக்கி ஒரு சுத்து சுத்தி இறக்கி விடுவாரு. இயக்குனருக்கு அது ரொம்ப பிடிச்சுப்போச்சு. அப்படியே பண்ணுங்கன்னு சொன்னாரு. எனக்கு தான் டான்ஸ் வராதே, அதனால நான் ஒரு தலை ராகத்துல வர்ற “கூடையில கருவாடு” பாட்டுல வர்ற ஸ்டெப்ஸ் தான் போட்டேன். ஒரு வழியா இந்த காட்சியையும் 4 டேக்ல எடுத்தாங்க. இந்த காட்சியை எடுத்ததுக்கு அப்புறம், இயக்குனர், காமிரா மேன், அமலாபால் எல்லோரும் அந்த காட்சியை போட்டுப்பார்த்தாங்க. அப்ப இயக்குனரும், அமாலாபாலும், என்னையப் பார்த்து, அவரு, நல்லா காமெடியா ஆடியிருக்கறேன்னு பேசிக்கிட்டாங்க. உடனே,நாங்களும் போய் பார்த்தோம். நான் போட்ட ஸ்டெப்ஸ் ரொம்ப காமெடியா இருந்துச்சு.




அதற்கு பிறகு, அடுத்த ஷாட் – அதாவது சந்தானம் வந்து அமலாபாலிடம் பேசுகிற காட்சி. அவர் உள்ள என்ட்ரியாவதையே மூணு டேக் எடுத்தாங்க. அப்புறம் அவர் எங்கக்கிட்ட வந்து “ஸ்டாப்ன்னு” சொன்னவுடனே, நாங்க எல்லாம் அப்படியே நிக்கணும். அதை ஒரு ஷாட்டா எடுத்தாங்க. அப்புறம் அவர் நான் ஒரு ஸ்டெப் போடுறேன்னு சொல்லி போய் குதிக்கிற மாதிரி ஆக்க்ஷன்  பண்ணுவாரு, நாங்க அப்படியே காதைப் பொத்திக்கணும். இதையே 7/8 டேக் எடுத்தாங்க. அதற்கு பிறகு தான், அந்த டான்சர் ஒரு கையை கீழே ஊனிக்கிட்டு டான்ஸ் பண்றதை தனியா ஷூட் பண்ணினாங்க.

ஒரு வழியா இந்த நடனக் காட்சி முடிஞ்சிருச்சுன்னு சொன்னாங்க. இன்னும் ஒரு continuity காட்சி மட்டும் பாக்கியிருக்கு, நீங்க திங்கள் கிழமையோ, செவ்வாய்க்கிழமையோ வர வேண்டியிருக்கும். நாங்க எப்பன்னு சொல்றோம்னு சொன்னாங்க. நான் அந்த காட்சிக்காக ஆபிஸ்ல பர்மிஷன் போட்டு போனேன். அன்னைக்கு என்ன நடந்ததுன்னு அப்புறம் சொல்றேன்.  
- இன்னும் சொல்கிறேன்


6 comments:

  1. ///நான் தயங்கிக்கிட்டே, “சார், எனக்கு நடனம் எல்லாம் ஆட வராதுன்னு” சொன்னேன். //

    உங்க வூட்டுகாரம்மா கட்டையை எடுக்கும் போது (பூரிக்கட்டை அல்ல தாளக்கட்டையைங்க) நீங்க நல்லாவே டான்ஸ் ஆடுவிங்களே அது கேமரா முன்னால் நிற்கும் போது மறந்து போச்சா அல்லது அம்மணி அங்க இல்லாததால் டான்ஸ் ஆட வரலையா?

    ReplyDelete
    Replies
    1. நீங்க வேற வூட்டுக்காரம்மா கட்டையை (தாளக்கட்டையை) எல்லாம் எடுக்க வேண்டாம். அவுங்க எதிர்ல நின்னாலே, நான் டான்ஸ் ஆட்டிடுவேனே. அவுங்க எதிர்ல நிக்காததுனால தான், நான் "கூடையில கருவாடு" பாட்டுல வர்ற மாதிரி ஸ்டெப்ஸ் போட வேண்டியதாப் போச்சு.

      Delete
  2. ஹிஹி... டான்ஸ் ஆடுறதுல எல்லாருமே ராமராஜன், பாக்யராஜ் தான்... கத்துக்காத வரை... ரொம்ப சுவாரஸ்யமா சொல்லிருக்கீங்க....

    ReplyDelete
  3. பாக்யராஜோட ஒப்பிடும்போது ராமராஜன் கொஞ்சமாவது டான்ஸ் ஆடுவாரு. அந்த டான்ஸ் கூட எனக்கு ஆடத் தெரியாது. இதை தெரிஞ்சுக்கிட்ட என் பெரிய பொண்ணு என்னிடம், "அப்பா, நீங்க டான்ஸ் ஆடுங்கப்பா, நான் பார்க்கணும்னு" அடிக்கடி ரகளை பண்ணுவாங்க.

    ReplyDelete
  4. சுவாரஸ்யம்....

    //எல்லாம் வீட்டு அம்மணிக்கு எதிர்ல நின்னு பேசிப் பேசி பழக்கமாயிடுச்சு)//

    அதானே! :)

    ReplyDelete
    Replies
    1. எல்லாருடைய வீட்டிலும் நடக்கிறது தானே!!!!

      Delete