Sunday, June 22, 2014

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - முதலாம் அதிகாரம் - உற்பத்தி

சொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை

சொக்கலிங்க ஐயா சரித்திரம் - சிறப்புப்பாயிரம்

முதலாம் அதிகாரம்.
உற்பத்தி

இத்துணைச் சிறப்புவாய்ந்த உத்தமர் வாழுங் காரை மாநகரின் கண்ணே, நாட்டுக் கோட்டை நகரத்தார் என்று வழங்குகின்ற அரதண மகுடதன வைசியர் குலத்திலே, பெருங்குடியில், குலசேகரபுரமும் இராஜ நாராயணபுரமும் பூர்வ பூம்புகார்க் காணியாகவும், இளையாற்றக்குடியும், மருதங்குடியான பிள்ளையார்பட்டிக் கோவிலும் பாண்டிநாட்டுக் காணியாகவுமுடைய திருவேட்பூருடையார் கோத்திரத்திலே (பட்டத்திலே) யாழ்ப்பாணத்தார் வீடு என்று வழங்குங் குடும்பத்திலே ராம.கு.ராம. இராமநாதச் செட்டியாரும் அவர் மனைவியார்  முத்துக்கருப்பியம்மையாரும்  செய்த தவப்பயனாய் வேதசிவாகம புராணேதிகாச முதலாகிய சகலசாஸ்திரசாரமாகிய சுத்தாத்வைத சைவ சித்தாந்த சன்மார்க்கத்தைவிருத்தி செய்து நிலை நாட்டும் பொருட்டு, ஐயா* (* - ஐயா அவர்கள் எனவரும் இடங்களில் எல்லாம் சொக்கலிங்க ஐயா அவர்கள் எனக் கொள்க) அவர்கள் பூர்வ பட்சச் சதுர்த்தி திதியும் அஸ்த நட்சத்திரமும் சித்த யோகமும் அமிர்த கரணமும் கூடிய சுபதினத்தில் துலா லக்கினத்தில் திருவவதாரஞ் செய்தார்கள்.

இந்த அருமைப் புதல்வருக்கு மாதா பிதாக்கள் சாதகன்ம முதலிய சடங்குகளும் மகிழ்ச்சியுடன் செய்து “சொக்கலிங்கம்” என்று யாவரும் புகழும்படி பரிசுத்தமாகிய அழகிய திருநாமஞ் செய்தார்கள்.

இப்பெயர் ஆதியில் சொக்கலிங்கச் செட்டியார் அவர்கள் என்றும், பின்னர், சுத்தாத்துவைத சைவ சித்தாந்தச் செல்வராகிய சொக்கலிங்க ஐயா அவர்கள் என்றும், சிறப்பாக ஐயா அவர்கள் என்றும் வழங்கி வருகின்றது.

ஐயா அவர்களுக்கு முன்பின் சகோதரர்கள் இருவரும் சகோதரிகள் நால்வரும் உளரானார்கள்.

ஐயா அவர்கள் இளமைப் பருவத்திலேயே கல்வி கற்றுக்கொள்ளுதலில் மிக்க ஊக்கமுடையவர்களாய் உபாத்தியாரிடத்தில் தமிழ் ஆரம்பக் கல்வி கற்றுவரலானார்கள். நகர தன வைசியர்களின் கிரமப்படி ஐயா அவர்கள் உரிய பருவத்திலே “கார்த்திகைப் பதுமை” என்கின்ற சடங்கு செய்யப்பெற்று அஸ்வாரூடராய் விநாயகராலயஞ் சென்று விநாயகப்பெருமானைத் தரிசனஞ் செய்விக்கப் பெற்றார்கள். பள்ளிக்கூட உபாத்தியாயரிடத்திற் படிக்கவேண்டிய ஆரம்பக் கல்விகற்று முற்றிய பின்பு, தமிழ் இலக்கண இலக்கிய நூல்கள் கற்று வருங்காலத்தில் மாதாபிதாக்கள் கட்டளைப்படி குடும்பக்காரியங்களைப் பார்த்துக்கொண்டு ஒழிவு நேரங்களில் அறுபத்து மூவர் மடத்துக்கு போக்குவரவு வைத்துக்கொண்டிருந்தார்கள். இதனைப் பிதா அறிந்து வரவரக் கல்வி விருத்தியடைந்து வருதலையும் சிவபக்தி மிகுந்து வருதலையும் நோக்கி இனிக் குடும்பத்தைக் கவனியாமல் அதீத நிலையிற் சென்றாலுஞ்ச் செல்லக்கூடும் என்று நினைத்து ஐயா அவர்கள் மடத்துக்கு போய் வருதலைத் தடை செய்ய நினைத்தார்கள். ஐயா அவர்கள் அதையறிந்த பின்பு வீட்டுக் காரிய சம்பந்தமாக வெளியிற்போகுஞ் சமயத்தில் பிதாவுக்கு தெரியாதபடி மடத்துக்கு போய் வந்துகொண்டிருந்தார்கள். சிறிது காலஞ் சென்றபின் அதுவும் பிதாவுக்குத் தெரிந்து சிறிது கோபமுண்டாகி, ஐயா அவர்கள் இரகசியமாக மடத்துக்குப் போகுஞ் சமயம் பார்த்து, அங்கே போய் செய்கிறதை பார்த்து வருவோமென்று கருதி பிதாவானவர் மறைவாய்ப் போய் பார்க்குஞ் சமயங்களில் ஐயா அவர்கள் சில சமயங்களில், அனுகூல விநாயகர் தரிசனஞ் செய்து கொண்டு பூசை செய்வதையும், சில சமயம் கந்த புராண முதலிய சிவபுராணப் பிரசங்கஞ் செய்து வருதலையும் பார்த்து மிகுந்த சந்தோஷமடைந்து  தாம் வந்தது ஐயா அவர்களுக்கு தெரியாமல் வீட்டுக்குத் திரும்பி விடுவார். பிதாமானவர் இப்படி இரகசியமாகப் போய்ப் பார்த்து வந்தபின் மிக்க உவகையுடையவராய் இவ்வுத்தமமாகிய காரியத்திற்குத் தடை செய்யக்கூடாதென்று கருதி ஐயா அவர்கள் நோக்கம்போல் விடுத்து மகிழ்ச்சியடைந்திருந்தார்.

உடுமலைப்பேட்டை என்னும் ஊரில் வியாபார முறையில் பிதா முதலினோரிருந்து நடத்திவந்த காலத்தில் ஐயா அவர்கள் சிறு பிரயத்திலே அவ்வூருக்குப் போய் அவர்களோடு கடையிற் சிலகாலமிருந்து பின்பு ஊருக்கு வந்தார்கள். பின்பு யாழ்பாணத்துக்கும் சொந்தக் கடைக்கு வியாபார முறையை உத்தேசித்து பதினேழாவது வயசு முதல் பல தடவைகளில் போய் வந்தார்கள். அக்காலத்திற்றான் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலவர்களை யடுத்துச் சிஷ்யராக இருந்தார்கள். அவ்விஷயம் மூன்றாம் அதிகாரத்தில் விளக்கப்படும்.
முதலாம் அதிகாரம் முற்றுப்பெற்றது.

இரண்டாம் அதிகாரம்
இல்வாழ்க்கை

--------------------------

16 comments:

 1. Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார்

   Delete
 2. நல்லது தொடருங்கள் சகோ ! வாழ்த்துக்கள் ...! நான் இவரை பற்றி அறிந்தது இல்லியே.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

   ஐயா அவர்களுடைய சிறப்பை நானே சில வருடங்களுக்கு முன்பு தான் முழுதாக தெரிந்து கொண்டேன். அதுவரையில், கொள்ளுத்தாத்தா, சைவ சித்தாந்தத்தில் ஈடுபட்டவர் என்னும் அளவில் தான் தெரிந்து வைத்திருந்தேன்.

   Delete
 3. மாபெரும் மகானாகிய ஐயா அவர்களின் வாழ்கை வரலாற்றை பகிர்தமைக்கு மிக்க நன்றி திரு. சொக்கன் ஐயா..

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

   Delete
 4. சொக்கலிங்க ஐயாவின் சரிதம் அருமை! தொடருங்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்

   Delete
 5. சொக்கலிங்க ஐயா பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். சரித்திரம் தெரியாது. ஆனால் இப்போது தெரிந்து கொள்ள முடிகிறது.
  தொடருங்கள். நல்ல பகிர்வு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் ஐயாவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் என்று தெரியும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

   தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 6. சிறப்பான சரித்திரப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா

   Delete
 7. நல்ல விசயத்தை தொடங்கி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் நண்பரே.....

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

   Delete
 8. சைவச் சித்தாந்த செல்வர் சொக்கலிங்க ஐயா பற்றிய பகிர்வுக்கு மிகவும் நன்றி சொக்கன்.

  ReplyDelete
 9. தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள். அவர் பற்றி நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.

  ReplyDelete