Wednesday, December 10, 2014

சிட்னி மக்கள் மோடியை சந்தித்தது எப்படி ?



சென்ற மாதம் மோடி இங்கு விஜயம் செய்தபோது, சிட்னி வாழ் மக்கள் ஏறக்குறைய பதினாராயிரம் பேர் (16000)அவரை நேரில் சந்தித்து, அவருடயை உரையை கேட்டிருக்கிறார்கள். அவர்கள் எப்படி அவரை சந்தித்தார்கள், என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டன என்பதையெல்லாம் நான் கேள்விப்பட வரையில் சொல்வது தான் இந்த பதிவு.

மோடி சிட்னிக்கு வருகைத்தருவதற்கு ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பு, நான் உறுப்பினராக இருக்கும் மூன்று தமிழ் கழகங்களிலிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் சிட்னிக்கு வருகைத்தரும் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் மாதம் 17ஆம் தேதியன்று (திங்கட்கிழமை), “சிட்னி ஒலிம்பிக் பார்க்கில் இருக்கும் ஆல்போன்ஸ் அரேநா அரங்கில் (ALLPHONES ARENA STADIUM) மாலை உரையாற்ற இருக்கிறார். அவரை நேரில் பார்ப்பதற்கும், அவருடைய உரையை கேட்பதற்கும் உங்களுக்கு ஒரு அரிய பொன்னான வாய்ப்பு காத்துக்கொண்டிருக்கிறது.நீங்கள் இந்த இணையத்தளத்திற்கு (www.pmvisit.org.au) சென்று, நம் கழகத்தின் குறியீட்டு சொல்லை (community organisation code) பயன்படுத்தி முன்பதிவு செய்தால், உங்களுக்கான இலவச நுழைவுச் சீட்டை கழகத்தின் தலைவரிடமிருந்து பிறகு பெற்றுக்கொள்ளலாம் என்றிருந்தது.நானும் வேலையை முடித்து அப்படியே அந்த இடத்துக்கு செல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் வீட்டு அம்மணி, அது என்ன நீங்க மட்டும் அவரை சந்திக்கிறது, நாங்களும் வருவோம் என்று சொன்னார்கள். சரி, அன்றைக்கு நாலரை மணியைப்போல் வேலையிலிருந்து கிளம்பி, வீட்டுக்கு வந்து எல்லோரையும் அழைத்துக்கொண்டு போகலாம் என்று நினைத்து, எனக்கு வந்த 3 மின்னஞ்சல்களிலிருந்து ஒன்றில் மட்டும் முன்பதிவு செய்தேன். அந்த முன்பதிவில் யார் எல்லாம் வருகிறார்களோ அவர்களுடைய தகவல்கள் எல்லாம் கேட்டிருந்தார்கள். எல்லோருடைய தகவல்களையும் பதிவு செய்தேன். அதற்கு பிறகு தான் தெரிந்தது, மோடி உரையாற்றும் இடத்துக்கு மூன்று மணிக்கெல்லாம் வந்து விட வேண்டும் என்று. நான் இதற்காக ஒரு அரை நாள் விடுப்பு எடுத்தால் தான், என்னால் மூன்று மணிக்கெல்லாம் குடும்பத்தையே அழைத்துக்கொண்டு செல்ல முடியும், அதனால், நான் அந்த கழகத்தின் தலைவரை அழைத்து என்னால் வர முடியாது என்று சொல்லிவிட்டேன்.

இந்த நிகழ்வு முடிந்த பிறகு, நண்பர் அனகன் பாபுவிடம் (அவர் ஒரு தமிழ் கழகத்தின் தலைவர்)மற்றும் சில நண்பர்களிடமும் பேசிக்கொண்டிருந்த பொழுது தான் இந்த நிகழ்வுக்கு முன் நடந்த செயல்பாடுகளும், நிகழ்வன்று நடந்த செயல்பாடுகளும் தெரிந்தது .

மோடி ஆஸ்திரேலியா வருவதற்கு ஆறேழு வாரங்களுக்கு முன்,பிரதமர் அலுவலகத்திலிருந்து, சிட்னியில் இருக்கும் ஹிந்து கழகத்திற்கு இந்த நிகழ்வை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஹிந்து கழகத்தில் இருப்பவர்கள், "இந்தியன் ஆஸ்திரேலியன் கம்யூனிட்டி ஃபவுண்டேஷன் (Indian Australian Community Foundation)" என்ற ஒரு புதிய கழகத்தை தொடங்கி www.pmvisit.org.au என்ற இணையத்தளத்தை உருவாக்கியிருக்கிறார்கள். மோடியின் சிறப்புரையை கேட்பதற்கு குறைந்தது பத்தாயிரம் பேர்களையாவது(பொதுமக்கள்) அழைக்க வேண்டும் என்று எண்ணியி, அதற்கு ஏற்ற இடமாக ஆல்போன்ஸ் அரேநா அரங்கை (ALLPHONES ARENA STADIUM) முடிவு செய்திருக்கிறார்கள். இவ்வளவு பேரை அழைப்பதற்கு தாங்களே பொறுப்பு எடுப்பது என்பது இயலாத காரியம் என்பதால், சிட்னியில் இருக்கும் அனைத்து இந்தியக்கழகங்களையும் இந்த நிகழ்வுக்கு வரவேற்பு பங்குதாரர்களாக இணைத்தால், அவர்கள் மூலம் இவ்வளவு பேரையும் ஒருங்கிணைக்க முடியும் என்று நினைத்து அக்கழகங்களின் தலைவர்களை அழைத்து மூன்று முறை கூட்டம் போட்டிருக்கிறார்கள்.பிறகு ஒவ்வொரு கழகத்திற்கும் ஒரு குறியீட்டை வழங்கி, அந்தந்த கழக உறுப்பினர்கள் அவர்கள் சார்ந்த கழகத்தின் குறியீட்டை பயன்படுத்தி முன்பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த ஏற்பாட்டின்படி 21000 பேர் பதிவு செய்திருந்திருக்கிறார்கள்.ஆனால் கிட்டதட்ட 3000 பேர் ஒன்றுக்கு மேற்பட்ட கழகங்கள் மூலமாக பதிவு செய்திருப்பதை கண்டறிந்து அவற்றையெல்லாம் எடுத்துவிட்டு, இறுதியாக 12000 பேருக்கு இலவச நுழைவுச் சீட்டை அந்தந்த கழகங்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். அந்த நுழைவுச் சீட்டிலேயே அவர்களின் இருக்கை எண்ணும் குறிக்கப்பட்டிருந்தது.




இவ்வளவு பணிகளையும் அந்த ஏற்பாட்டாளர்கள் மிகவும் குறைந்த கால அவகாசத்தில் (6 வாரங்களில்) செய்து முடித்திருப்பது மிகவும் பெரிய விஷயம். நவம்பர் 17ஆம் தேதியன்று அந்த பகுதியே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. சரியாக நான்கு மணிக்கு அந்த அரங்கத்தின் பத்து நுழைவு வாயில்களும் திறக்கப்பட்டு, ஒவ்வொருவரின் அடையாளமும் பரிசோதிக்கப்பட்டு உள்ளே அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.ஐந்து மணியிலிருந்து ஆறரை மணி வரை கலை நிகழ்ச்சிகள் அரங்கேறியிருக்கிறது. பிறகு ஆறரை மணியளவில் , மோடி அரங்கத்திற்குள் பிரவேசித்து 90நிமிடங்கள் ஹிந்தியில் உரையாற்றியிருக்கிறார்.




இன்னொரு விஷயம், மெல்போர்ன்லேருந்து (melbourne)220பேர் "மோடி எக்ஸ்பிரஸ் (modi express) என்ற பெயரில் ஒரு புகைவண்டியையே வாடகைக்கு எடுத்து மோடியின் உரையை கேட்பதற்கு சிட்னி வந்திருக்கிறார்கள்.








(படங்கள் உதவி - இணையம்)

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், இந்த நிகழ்வை நேரில் கண்டுகளித்த தமிழர்களில் நிறைய பேருக்கு ஹிந்தி தெரியாது என்பது தான். அவர்களும் சொல்லிக்கொள்கிறார்கள், "நாங்களும் மோடியை சந்தித்து அவர் உரையை கேட்டோம் என்று!!!!".

35 comments:

  1. குறுகிய காலத்தில் ஏற்பாடு....பிரமாதம்.
    கடைசியா...உங்கள் குடும்பம் கலந்துக்காம போயிடுத்தே..

    ReplyDelete
    Replies
    1. நாங்கள் போகாமல் இருந்ததே பரவாயில்லை என்று நினைக்கிறேன். 3மணியிலிருந்து 9மணிவரை அந்த கூட்டத்தில்ஓவியா,இனியாவ வைத்துக்கொண்டு இருப்பது எல்லாம் முடியாத காரியம்,

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  2. இவ்வளவு ஏற்பாடுகள் நடந்திருக்கிறதா....

    அட!

    ReplyDelete
    Replies
    1. பின்ன பிரதம மந்திரி வருகிறார் என்றால் சும்மாவா!!

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  3. அட! மோடிக்கு இத்தனை வரவேற்பா?! ஏற்பாடுகளா? மோடி அலை அங்கும் பரவி விட்டதா?!! ஹிந்தி தெரியாத தமிழர்கள் உட்பட....ம்ம்ம்ம்

    ReplyDelete
    Replies
    1. மோடி அலை இங்கும் பரவி விட்டது, அதற்கு குஜராத் மக்கள் அதிகம் இருப்பதும் ஒரு காரணமோ என்னவோ!

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோஸ்

      Delete
  4. ஏன் இந்த ஆர்வம்...? ஆச்சரியம் தான்...!

    ReplyDelete
    Replies
    1. ஆச்சிரியம் தான்

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டிடி

      Delete
  5. //ஐந்து மணியிலிருந்து ஆறரை மணி வரை காலை நிகழ்ச்சிகள் அரங்கேறியிருக்கிறது.//
    கலை நிகழ்ச்சிகள் என்பது தவறுதலாக தட்டச்சாகிவிட்டது என எண்ணுகிறேன். திருத்திவிடவும்.

    கூட்டம் சேர்க்க இந்தியாவில் செய்வதை (பணம் செலவழிக்காமல்) ஆஸ்திரேலியாவிலும்செய்து இந்தியர்களின் ‘தனித்துவத்தை’ நிரூபித்துவிட்டார்கள் என எண்ணுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தவறுதலான தட்டச்சுப்பிழையை திருத்தி விட்டேன் ஐயா.

      இந்தியர்கள் எங்கிருந்தாலும் அவர்களின் தனித்துவத்தை (இந்த மாதிரி!!) நிருபித்து விடுவார்களே!

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

      Delete
  6. நண்பருக்கு ½ நாள் விடுமுறை எடுத்து மோடியை காணவேண்டும் என்பதற்காக அலுவலகத்தில் ஏதாவதொரு பொய்க்காரணம் சொல்லி மோசடி செய்யாமல் தங்களை உண்மையானவர் என்று நிரூபித்தமைக்கு முதற்க்கண் எமது சல்யூட்.

    குறுகிய காலத்திற்க்குள் இந்தக்கூட்டத்தை கூட்டி சாதனை படைத்த தமிழ் ஆர்வலர்களுக்கும் எமது ஒரு டல்யூட் (சல்யூட் அல்ல டல்யூட்டே) இவர்கள் சாதித்து காண்பித்ததால் பின்நாள் நாட்டில் காரியம் சாதித்துக் கொள்(ல்)வார்கள் 80 வேறு விசயம்.

    ‘’மோடி எக்ஸ்பிரஸ்’’ நல்லகூத்து இந்தமாதிரியான காரியங்களால் இந்திய நாட்டின் சாதாரண குடிமகனுக்கு என்னலாபம் ? இதுதான் எமது கேள்வி.

    லாபம் அரசியல்வாதிகளுக்கே... ஆம் அடுத்த ஆட்சியும் நமதே எனகணிப்பார்கள், தலைக்கணம் கூடும் (இப்பத்தெரியுதா ? அரசியல்வாதிகளுக்கு தலைக்கணத்தை ஏற்றி வைத்த குற்றவாளிகள் மக்கள்தான் என்று) இத்தனை நாளில் அப்படி என்ன மாற்றம் வந்து விட்டது இந்தியாவில் எந்த ஒரு அரசியல்வாதி வந்தாலும் உலகம் சுற்றும் வாலிபனாக, அல்லது வாலிபியாக மாறிவிட்டு இந்தியக்குடிமகனின் கடன் தொகை மா(ற்)றி விடுகிறது மட்டும் நிதர்சனமான உண்மை உண்மையானவரே...

    இந்த நிகழ்வை நேரில் கண்டுகளித்த தமிழர்களில் நிறைய பேருக்கு ஹிந்தி தெரியாது என்பது தான். அவர்களும் சொல்லிக்கொள்கிறார்கள், "நாங்களும் மோடியை சந்தித்து அவர் உரையை கேட்டோம் என்று" ஹி ஹி இதுவும் நல்லகூத்துதான்.

    இரண்டு தினங்கள் முன்பு அபுதாபியில் என்னமோ உலகநாயகன்னு சொல்றாங்களே.. (நல்லவேளை தமிழ் வார்த்தை என்பதலால் வேற்று நாட்டுக்காரனுக்கு அர்த்தம் தெரியாததால் நாம் பிழைத்தோம்) அவருதாங்க கமல்ஹாசன் அவரு வந்து கலந்து கொண்டார் (நிகழ்வு எனது ரூமிலிருந்து இரண்டு தெரு தள்ளி) ரூமில் மலையாளி, தெலுங்கர் உள்பட அனைவரும் போனார்கள் என்னை வரவில்லையா ? எனக்கேட்டவனை நான் கேட்ட கேள்வியை இங்கு எழுதமுடியாது அவர்கள் திரும்பி வரும்போது இரண்டு பதிவுகள் எழுதி முடித்து விட்டேன் அதில் ஒன்றின் தலைப்பு விரைவில் வரும் ’’நீ இன்னும் பாமரனே’’ நான் போகவில்லை காரணம் அவரும் என்னைப்போல, எனது நண்பர் உண்மையானவரைப்போல, ஒரு சராசரி மனுஷன்தானே என்னஒண்ணு அவருடைய வேலை நடிக்கிறது, என்னோட வேலை அலுவலகத்தில் அவருக்கு கூடுதல் சம்பளம் எனக்கு கூடாத சம்பளம் (குறிப்பு நான் கமல்ஹாசனின் வித்தியாசமான சிந்தனைகளை, கவிதைகளை, நடிப்புகளை ரசிப்பவன் மட்டுமே எவனுக்கும் அடிமை அல்ல) என்இன தமிழ் நடிகனுக்கே எனது மரியாதை இப்படினா ? வேற ஒருத்தனா இருந்தால் ? ? ? என்ன கருத்துரை இன்னும் நீ.........................ளு........................ம்.

    ReplyDelete
    Replies
    1. இதில் தமிழ் ஆர்வலர்கள் மட்டும் இல்லை நண்பரே, இந்திய ஆர்வலர்கள் தான் முக்கிய பங்களித்திருப்பது. நீங்கள் சொல்வது உண்மை தான், பின்னாளில் அவர்கள் இந்தியாவில் காரியங்களை சாதித்துக்கொள்ள முடியுமே

      அரசியல்வாதிகளுக்கு தலைக்கனத்தை மட்டும் இல்லை, ஆட்சிப் பீடத்திலும் ஏற்றி வைப்பது குற்றவாளி மக்கள் தானே. என்றைக்கு தங்கள் உரிமைக்கு காசு வாங்காமல் நல்லவர்களுக்கு வாக்களிக்கிறார்களோ அன்றைக்கு தான் நம் நாடு திருந்தும்.

      "//நல்லவேளை தமிழ் வார்த்தை என்பதலால் வேற்று நாட்டுக்காரனுக்கு அர்த்தம் தெரியாததால் நாம் பிழைத்தோம்)//" - சரியான நகைச்சுவை தான்.
      தாங்கள் எவனுக்கும் அடிமை இல்லை என்று கூறி தலை நிமிர்ந்து நிற்கிறீர்கள் - வாழ்த்துக்கள் நண்பரே.

      இவ்வளவு பெரிய கருத்துரையே தங்களை எப்படிப்பட்டவர் என்று சொல்லிவிட்டதே,

      வருகைக்கும் நீண்ட கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
      தங்களின் வலைச்சர ஆசிரியப்பணிக்கு வாழ்த்துக்கள்

      Delete
  7. மிக அழகாய், விளக்கமாய் எழுதியிருக்கிறீர்கள்!

    பொதுவாய் இந்த மாதிரி நிகழ்ச்சிகள் அயல்நாடுகளில் சகஜம்! சிறிய பிரபலங்களுக்குக்கூட நல்ல வரவேற்பிருக்கும். சில பிரமுகர்களுக்கு வரவேற்பும் உண‌ர்ச்சிப்பிரவாகங்களும் சற்று தூக்கலாக இருக்கும். இதற்கு காரணங்கள் நிறைய! அதில் ஒன்று, தமிழ்நாட்டை, இந்திய நாட்டை பல்வேறு காரணங்க‌ளுங்காக பல வருடங்கள் பிரிந்து தனிமையில் வாடுபவர்களுக்கு இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் ஒரு பூஸ்ட் மாதிரி! ஏதோ நம் சொந்த பந்தங்கள் வந்த மாதிரி! சிலருக்கு இது ஒரு பொழுது போக்கு. இயந்திர வாழ்க்கையை தினமும் வாழ்பவர்களுக்கு இரு சில‌ மணி நேரங்கள் சற்று மாறுதலான நிமிடங்கள் கொஞ்ச நேரம் ரீசார்ஜ் செய்வது போல!! இதற்கப்பால் தேசப்பற்று, ஊர்ப்பற்று முக்கிய காரணம்! நம் நாட்டிலிருந்து வருபவர்களுக்கு 'சப்போர்ட்' செய்ய வேண்டும் என்ற முனைப்பு!

    ReplyDelete
    Replies
    1. "// நம் நாட்டிலிருந்து வருபவருக்கு சப்போர்ட் செய்ய வேண்டும் என்ற முனைப்பு //" - உண்மை தான் அம்மா
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா

      Delete
  8. மோடி எக்ஸ்பிரஸ் சை விட வேகமாக போகிறது உங்க பதிவு!!
    **இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், இந்த நிகழ்வை நேரில் கண்டுகளித்த தமிழர்களில் நிறைய பேருக்கு ஹிந்தி தெரியாது என்பது தான். அவர்களும் சொல்லிக்கொள்கிறார்கள், "நாங்களும் மோடியை சந்தித்து அவர் உரையை கேட்டோம் என்று!!!!". ** ஹா...ஹா....ஹா....நல்ல நகைச்சுவைதான் !

    ReplyDelete
  9. மோடி கூட்டதிற்கு போகாமல் நொண்டி சாக்கா சொல்லுறீங்க... இருங்க இருங்க நெக்ஸ்ட் டைம் இந்தியா வரும் போது நீங்க கஸ்டம்சல நிறைய வரி தீட்ட சொல்லுறேன்

    ReplyDelete
    Replies
    1. நீங்க மோடியை கலாய்த்து எழுதுறது அவருக்கு தெரியும்,அதனால அவர் உங்க பேச்சசை நம்ப மாட்டாரு.
      நான் அவரோட கூட்டத்துக்கு போகலைன்னாலும், அவர் இங்கு வந்ததைப் பற்றி எழுதிட்டேன் இல்ல, அதனால அவர் நான் இந்தியா வரும்போது எனக்கு வரியே போடமாட்டாரு.

      Delete
  10. மோடி பேச்சு புரிந்தால் என்ன புரியாவிட்ட என்ன எல்லாம் ஒன்ணுதான். அவர்தான், தான் சொன்னதை செய்யப் போறது இல்லையே

    ReplyDelete
    Replies
    1. அட, ஆமா இல்ல - அதான் உங்க பதிவுலேயே சொல்லிட்டீங்களே...

      Delete
  11. விரிவான தெளிவான பகிர்விற்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  12. நண்பரே எனக்கு ஒரு விசயம் புரியவில்லை
    பிரதமர் என்பவர் இந்தியா முழுமைக்குமானவர்
    வாக்க அளித்தவர்களுக்கும் அவர்தான் பிரதமர்
    வாக்கு அளிக்காதவர்களுக்கும் அவர்தான் பிரதமர்
    ஒரு நாட்டின் பிரதமர் பேசுவது அனைத்து மக்களையும்
    சென்று சேர வேண்டுமல்லவா?
    அதுவும் குறிப்பாக வெளி நாடுகளில் சென்று பேசும் போது
    எதற்காக இந்தியில் பேச வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை
    நாட்டிற்குப் பொதுவானர், அனைவரும் அறியும் வண்ணம்
    பொது மொழியில் அல்லவா பேச வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. அவர் குஜராத்தியில் பேசியிருந்தால், நீங்கள் சொல்வது பொருந்தும். அவர் ஹிந்தியில் தான் பேசியிருக்கிறார். நம் தமிழர்களுக்கு மட்டும் தான் ஹிந்தி தெரியாது. நாம் தான் அந்த மொழியை கற்றுக்கொள்ளாமல் விட்டுவிட்டோம். அதற்காக நான் தமிழை படிக்காமல் ஹிந்தியை படித்திருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஹிந்தியையும் படித்திருக்கலாம் என்று சொல்கிறேன். கூடுதலாக ஒரு மொழியை அதுவும் நம் நாட்டில் எல்லா மாநிலங்களிலும் பரவலாக பேசப்படும் மொழியை கற்றுக்கொள்வதால் ஒரு தவறும் இல்லை என்று தான் சொல்கிறேன்.

      இந்த இடத்தில் அவர் ஆங்கிலத்தில் பேசியிருந்தால் எடுபட்டிருக்காது. அதே சமயம் அவர் இங்குள்ள நாடாளுமன்றத்தில் ஹிந்தியில் பேசாமல், ஆங்கிலத்தில் தான் பேசியிருக்கிறார்.

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார்.

      Delete
  13. குழந்தைகளை வைத்துக் கொண்டு ரொம்ப கஷ்டம். நீங்க மட்டும் போயிருக்கலாம்....:)

    ReplyDelete
    Replies
    1. நான் மட்டுமாவது போயிருக்கலாம். ஆனால் மோடியை பக்கத்தில் இருந்து பார்த்திருக்க முடியாது. அங்கு சென்ற நண்பர்கள் எல்லாம் சொன்னது, மேடைக்கும் ,நமக்குமான தூரம் ஏறக்குறைய 400-500 மீட்டர் ஆகும். அதனால் மோடியை சரியாக பார்க்க கூட முடியவில்லை என்பது தான். இதை கேட்ட பிறகு, நாம் செல்லாமல் இருந்தது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று தோன்றியது.

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  14. அங்கேயும் கூட்டம் தானா சேராது கூட்டத்தான் வேண்டும்னு சொல்லுங்க!

    ReplyDelete
    Replies
    1. இங்கு இருக்கும் குஜராத்தி சமுகத்தினர் மட்டுமே ஒரு பெரிய கூட்டமாக தானாக சென்றிருப்பார்கள். ஆனால் பாதுகாப்பு காரணங்களால், அந்தந்த கழகங்கள் மூலமாக கூட்டத்தை சேர்க்க வேண்டியதாகி விட்டது.

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

      Delete
  15. வணக்கம்
    மக்கள் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.. நிகழ்வை மிக அருமையாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  16. விழா ஏற்பாடு பிரமாண்டமானது

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  17. உள்ளது உள்ளபடி பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

      Delete
  18. வலைச்சரத்தில்...

    http://blogintamil.blogspot.ae/2014/12/blog-post_12.html

    ReplyDelete
  19. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete