Thursday, March 27, 2014

கம்பராமாயணத்தில் ஒரு துளியை பருகினேன் - கைகேயியின் ஆளுமை (ஆய்வுக் கட்டுரை)

அன்பார்ந்த நண்பர்களே,

கடந்த இரு வாரங்களாக நான் தமிழ் நாட்டில் இருந்தபடியால், என்னால் வலைப்பூவிற்கு வர இயலவில்லை. இன்று இரவு தான் இந்தியாவிலிருந்து சிட்னி திரும்பினேன்.

தமிழ் தாயின் அருளாலும், கம்பனின் ஆசியாலும், நான் கைகேயின் ஆளுமை என்ற கட்டுரையை, காரைக்குடியில் நடந்த கம்பன் விழாவில் படைத்தேன். அந்த விழாவில் பங்குப்பெற்றதனால், நிறைய தமிழ் அறிஞர்களின் அறிமுகம் கிடைக்கப்பெற்றது.

அந்த விழாவைப் பற்றி விரிவாக  வேறு ஒரு பதிவில் எழுதுகிறேன். இப்போது "துறை தோறும் கம்பன்" என்ற புத்தகத்தில் வெளிவந்துள்ள அடியேனின் ஆய்வுக்கட்டுரையை உங்களின் பார்வைக்கு பதிகிறேன். நான் அந்த கட்டுரையை படைக்கும்போது எடுக்கப்பட புகைப்படங்களையெல்லாம், அந்த விழாவைப் பற்றிய பதிவில் வெளியிடுகிறேன்.


கம்பனில் ஆளுமையியல் – கைகேயியின் ஆளுமை
-சொக்கன், சிட்னி,ஆஸ்திரேலியா

 நோக்கம்

      பொதுவாகவே பெண்களிடத்தில் ஆளுமை குணத்திற்கு பதிலாக இரக்க குணம் தான் அதிகமாக காணப்படும். தாங்கள் நினைப்பது கூட மற்றவர்களுக்கு சங்கடத்தை உருவாக்கும் என்று தெரிந்தால், உடனே அந்த நினைப்பை வெளிப்படுத்தாமல் அழித்து விடுவார்கள். ஆனால் கைகேயியோ இதில் முற்றிலும் மாறுப்பட்டு ஆளுமை குணத்தோடு விளங்கி, அனைவரையும் எதிர்த்து தான் நினைத்ததை சாதித்ததுப்பற்றி கம்பன் எவ்வாறு சொல்லியிருக்கிறான் என்று அலசி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.  

மந்திராலோசனையில் எடுத்த முடிவு

     தசரதசக்ரவர்த்தி தன் மகன் இராமனுக்கு முடிசூட்ட வேண்டும் என்று எண்ணி மந்திராலோசனை சபையை கூட்டுகிறான். அங்கு அவனது அனைத்து அமைச்சர்களும், குலகுருவான வசிஷ்டரும் இருக்கிறார்கள். மன்னன் தான் நினைத்ததை மந்திர சபையோரிடம் இவ்வாறு தெரிவிக்கிறான்.

'ஆதலால் இராமனுக்கு அரசை நல்கி , இப்
பேதைமைத்து ஆய் வரும் பிறப்பை நீக்குவான் ,
மா தவம் தொடங்கிய வனத்தை நண்ணுவேன் ;
யாது நும் கருத்து ? ' என இனைய கூறினான் .   
(அயோ. மந்திரப்படலம் – 30)

அதாவது, இராமனிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டு, நான் பிறவி நோய்க்கு மருந்தான தவ வாழ்க்கையை மேற்கொள்ளலாம் என்று இருக்கிறேன். உங்கள் கருத்து என்ன என்று அமைச்சர்களிடம் கேட்கிறான். அதற்கு அமைச்சர்களும், குரு வசிஷ்டரும் ஒப்புதல் அளிக்க, அங்கு அந்த மந்திராலோசனைப் படி, இராமனுக்கு முடிசூட்டுதல் என்று முடிவு எடுக்கப்பட்டது. நாட்டின் மன்னன், மந்திரிகள் மற்றும் ராஜகுரு எல்லோரும் சேர்ந்து எடுத்த இந்த முடிவை மிகவும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்ட கைகேயி, பின்னர் கூனியின் பேச்சுத் திறனால் மனமாற்றமடைந்து, தனியாளாக தான் நினைத்ததை அடைந்தே தீருவது என்ற ஆளுமை குணத்தால் மந்திரிசபையில் எடுத்த அந்த முடிவை எவ்வாறு மாற்றினாள் என்று பார்ப்போம்.

கைகேயியின் உறுதி வாய்ந்த மொழி

 நன்று சொல்லினை ! நம்பியை நளிர் முடி சூட்டல் ,
துன்று கானத்தில் இராமனைத் துரத்தல் , இவ் இரண்டும்
அன்று அது ஆம் எனில் , அரசன் முன் ஆர் உயிர் துறந்து
பொன்றி நீங்குதல் புரிவென் யான் ; போதி நீ ' என்றாள்”.
                              (அயோ.மந்தரை சூழ்ச்சிப் படலம்-84)


கைகேயி மந்தரையிடம், நீ எனக்கு சொல்லியபடி, என் கணவனிடம் பரதனுக்கு முடிசூட்டுங்கள் என்றும், இராமனை காட்டுக்கு அனுப்புங்கள் என்றும் இரு வரங்களை  கேட்பேன். இந்த வரங்களை எம்மன்னவன் எனக்கு கொடுக்கவில்லையென்றால், அக்கணமே அவன் முன்னிலையில் என்னுயிரை விடுவேன். இதுவே என்னுடைய துணிவு என்கிறாள்.
இதிலிருந்தே தெரிகிறது, கைகேயி எந்த அளவிற்கு நெஞ்சுரம் வாய்ந்தவள் என்று. தன்னுடைய ஆசை நிராசையாகிவிட்டால், தன் உயிரையும் மாய்த்துக்கொள்ள நினைக்கும் அந்த துணிவை அவளிடம் காண முடிகிறது.

தான் நினைத்ததை சாதிக்க கைகேயி கையாண்ட முறை

கூனி போனபின் , குல மலர்க் குப்பை நின்று இழிந்தாள் ;
சோனை வார் குழல் கற்றையில் சொருகிய மாலை ,
வான வார் மழை நுழைதரு மதி பிதிர்ப்பாள் போல் ,
தேன் அவாவுறு வண்டினம் அலமரச் , சிதைத்தாள்
                                         (அயோ. சூழ்வினைப் படலம் – 1)


விளையும் தன் புகழ் வல்லியை வேர் அறுத்து என்ன ,
கிளை கொள் மேகலை சிந்தினள் ; கிண்கிணியோடும்
வளை துறந்தனள் ; மதியினில் மறுத் துடைப்பாள் போல்
அளக வாள் நுதல் அரும் பெறல் திலதமும் அழித்தாள்
                                         (அயோ. சூழ்வினைப் படலம் – 2)


தா இல் மா மணிக் கலன் மற்றும் தனி தனி சிதறி ,
நாவி நன் குழல் நால் நிலம் தைவரப் பரப்பிக் ,
காவி உண் கண்கள் அஞ்சனம் கான்றிடக் கலுழாப் ,
பூ உதிர்ந்தது ஓர் கொம்பு எனப் , புவி மிசைப் புரண்டாள்
                                         (அயோ. சூழ்வினைப் படலம் – 3)

கைகேயி மலர் மஞ்சத்திலிருந்து கீழே இறங்கி, தான் தலையில் சூடியிருந்த மலர்களை எல்லாம் பிய்த்து எறிந்தாள். தன்னுடைய இடையில் அணிந்திருந்த மேகலையை அறுத்து வீசினாள். பாததத்தில் அணிந்திருந்த கிண்கிணியையும், கை வளையல்களையும் கழற்றி எறிந்தாள். தான் அணிந்திருந்த இரத்தின ஆபரணங்களை எல்லாம் வீசி எறிந்தாள். தன் கூந்தலைப் பிரித்து தரையில் பரந்து விரிந்து கிடக்குமாறு செய்தாள். கண்களில் பூசியிருந்த அஞ்சனம் கரைய அழுதாள். இலைகளும், பூக்களும் நீங்கிய வெற்று மரம் போல் தரையில் வீழ்ந்தாள்.

கணவன் மகிழ்ச்சியாக இருக்கின்ற நேரத்தில் மனைவி தனக்கு வேண்டியதை கேட்டு தான் நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ளுவாள். ஆனால் இங்கு கைகேயியோ தன் கணவன் மகிழ்ச்சியாக இருக்கின்ற இந்த நேரத்தில் தான் நினைத்ததை சாதித்துக்கொள்ள முடியாது என்று உணர்ந்திருக்கிறாள். அதனால் தான் அவனுடைய அந்த மகிழ்ச்சியான தருணத்தை மாற்றுவதற்கான வழிகளில் இறங்கினாள். அவளுக்கு தெரியும், தன் கணவன் தன்னிடம் வந்து இராமனுக்கு முடிசூட்டுதலைப்  பற்றி சொல்லுவான் என்று. அதனால் அவன் வரும்போது அவனுடைய மனநிலையை மற்றும் வகையில் அலங்கோலமாக தரையில் வீழ்ந்திருந்தாள்.

அன்னது கண்ட அலங்கல் மன்னன் , அஞ்சி ,
`'
என்னை நிகழ்ந்தது ? இஞ் ஞாலம் ஏழில் வாழ்வார்
உன்னை இகழ்ந்தவர் மாள்வர் ! உற்றது எல்லாம்
சொன்னபின் என் செயல் காண்டி ! சொல்லிடு ! '' என்றான் .                             (அயோ.சூழ்வினைப் படலம் – 9)

மற்ற மனைவியரைக் காட்டிலும் தான் அதிகமாக நேசிக்கும் கைகேயின் அரண்மணக்கு மிகவும் மகிழ்ச்சியாக வந்த தசரதன் அவள் இருந்த கோலத்தைப் பார்த்ததும் துடித்துப்போய் “உனக்கு என்ன நடந்தது?” என்று மனதில் பயம் ஆட்கொள்ள கேட்கிறான்.

அவள் நினைத்தப்படியே தசரதனின் மனநிலையானது  மகிழ்ச்சியிலிருந்து மாறி, அஞ்சிய மனநிலைக்குத் தள்ளப்பட்டது.இது தான் சமயம் என்று எண்ணிய கைகேயியும் அவனிடம்

'ஏய வரங்கள் இரண்டின் ஒன்றினால் என்
சேய் அரசு ஆள்வது ; சீதை கேள்வன் , ஒன்றால்
போய் வனம் ஆள்வது ; ' எனப் புகன்று நின்றாள்
------------------------'
(அயோ.சூழ்வினைப் படலம் – 14).

பரதனுக்கு முடிசூட்டவும், இராமனை காட்டிற்கு அனுப்பவும் என்று அந்த இரண்டு வரங்களைக் கேட்கிறாள்.

இ நிலை நின்றவள் தன்னை எய்த நோக்கி
நெய்ந் நிலை வேலவன் , 'நீ திசைத்தது உண்டு ஓ ?
பொய் நிலையோர்கள் புணர்த்த வஞ்சம் உண்டோ ?
அ நிலை சொல் எனது ஆணை உண்மை ' என்றான்
(அயோ.சூழ்வினைப் படலம் – 22).  

அந்த வரங்களை கைகேயியின் வாயிலிருந்து கேட்டவுடன், தசரதன் சோர்ந்துப்போய் மிகவும் துயரப்பட்டு அவளிடம் “உன் மனதை யாரேனும் கலைத்தார்களா,இல்லை உனக்கு புத்தி பேதலித்து விட்டதா” என்று கேட்டான்.

இவன் தனக்கு அந்த வரங்களை கொடுக்க மாட்டான் என்று தெரிந்து கொண்ட கைகேயி அந்த வரங்களை எப்படியாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவனிடம்,

'திசைத்ததும் இல்லை ; எனக்கு வந்து தீயோர்
இசைத்ததும் இல்லை ; முன் ஈந்த இவ் வரங்கள் ,
குசை பரியோய் ! தரின் இன்று கொள்வென் ; அன்றேல் ,
வசை திறம் நின் வயின் வைத்து மாள்வென் ' என்றாள்
(அயோ.சூழ்வினைப் படலம் – 23).

“முன்பே எனக்கு அளித்த அந்த இரண்டு வரங்களைத் தான் நான் இப்போது கேட்கிறேன். கொடுப்பதானால் சரி, இல்லையேல், நான் என் உயிரை மாய்த்துக்கொள்கிறேன்” என்று பதிலுரைத்தாள்.

கைகேயி தன் மனதை  உறுதியாக வைத்திருத்தல்

கைகேயியின் இந்த பதிலைக் கேட்ட தசரதன், இவள் அந்த வரங்களை நம்மிடமிருந்து பெறாமல் விடமாட்டாள் என்று நினைத்து,

கோல் மேல் கொண்டும் குற்றம் அகற்றக் குறி கொண்டார்
போல் , மேல் உற்றது உண்டு எனின் நன்று ஆம் பொறை என்னாக் ,
கால் மேல் வீழ்ந்தான் , கந்து கொல் யானைக் களி மன்னர் ,
மேல் மேல் வந்து முந்தி வணங்க மிடைதாளான்
(அயோ.சூழ்வினைப் படலம் – 29).

துக்கம் தாளாமல் கைகேயியின் காலில் விழுகிறான்.

 இந்த இடத்தில் வேறு எந்த பெண்ணாக இருந்தாலும், தன் நிலையிலிருந்து சற்று மாறி கீழே இறங்கி வந்திருப்பாள். ஆனால் கைகேயியோ, தன் நிலையிலிருந்து சற்றும் கீழே இறங்காமல், மனதை கல்லாக்கிக்கொண்டு, தான் அந்த வரங்களை பெருவதிலேயே குறியாக இருந்தாள்.

தான் கைகேயியின் காலில் விழுந்தும் அவள் மனம் சிறிதும் இறங்காததை கண்ட தசரதன் அவளைப் பார்த்து,

'ஒன்றா நின்ற ஆர் உயிர் ஓடு உம் உயிர் கேள்வர்
பொன்ற முன்னம் பொன்றினர் ; என்னும் புகழ் அல்லால் ,
இன்று ஓர் காறும் எல் வளையார் , தம் இறையோரைக் கொன்றார் இல்லை;கொல்லுதியோ நீ கொடியோளே!'                              (அயோ.சூழ்வினைப் படலம் – 41)

என்று தூற்றுகிறான். அதாவது, கணவனோடு தானும் இறக்கும் பெண்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் நீயோ, கணவனையே கொல்லத்துணிந்து விட்டாய் என்று   அவன் தூற்றுவதைப் பற்றி சிறிதும் மனம் சஞ்சலப்படாத கைகேயி அவனிடம்,

     பாயும் கனல் ஏ போல்
எரிந்து ஆறாது ஏ இன் உயிர்
     
உண்ணும் எரி அன்னாள் .
(அயோ.சூழ்வினைப் படலம் – 47).

“எனக்கு நீ செய்த சத்தியத்தை காத்து அந்த வரங்களை கொடுக்காவிடில், உன்முன்னிலையில் நான் பிராணனை விடுவேன்” என்று தான் முன்னர் சொன்னதையே மீண்டும் நியாபகப்படுத்துகிறாள்.

இவள் கேட்ட வரத்தை கொடுக்காமல் போனால், இந்த கணமே இவள் உயிரைத் துறப்பாள். பிறகு நாம் வாக்கு தவறியவனாகி விடுவோம் என்று எண்ணிக்கொண்டு,

'ஈந்தேன் ஈந்தேன் இவ் வரம் ;
     
என் சேய் வனம் ஆள ,
மாய்ந்தே நான் போய் வான் உலகு
     
ஆள்வென் , வசை வெள்ளம்
நீந்தாய் நீந்தாய் நின் மக
     
னோடும் நெடிது ; ' என்றான் .
(அயோ.சூழ்வினைப் படலம் – 48).  

“நீ கேட்கும் வரத்தைத் தந்தேன்” என்று கூறி அந்த வரங்களை அளித்தான்

வரங்களைப் பெற்றவுடன், தான் நினைத்ததை சாதித்து விட்டோம் என்ற வெற்றிக்களிப்பில் கைகேயி உறங்கச் சென்றாள்.


முடிவுரை

      கைகேயி ஒரு கொடியவள், கணவனை மதிக்காதவள், தான் கேட்ட வரங்களை அளிக்காவிடில் இறப்பேன் என்று கணவனை மிரட்டியவள், பாசம் காட்டி வளர்த்த மகனையே காட்டிற்கு அனுப்பியவள் என்று எண்ணத்தோன்றும். என்னைப்பொருத்தவரை, தன் உரிமையை அதாவது கணவன் தனக்கு முன்பு அளித்த வரங்களை பெறத்தான் தன் ஆளுமை குணத்தை வெளிப்படுத்தினாள் என்று சொல்லுவேன். மேலும் கைகேயியின் இந்த ஆளுமை குணம் நன்மையில் தான் முடிந்துள்ளது. அதாவது அரக்கர்களை அழிக்கவும், இராமனின் புகழை உலகறியச் செய்வதற்கும், ஸ்ரீராமாயணமென்ற காவியம் தோன்றுவதற்கும் கைகேயியின் ஆளுமை குணமே காரணமாயிற்று. (அயோ.மந்தரை சூழ்ச்சிப் படலம்-78). இன்றைக்கு நாட்டில் நடக்கும் பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராக, பெண்கள் கைகேயியை உதாரணமாக்கிக்கொண்டு, தங்களுக்குள் புதைந்திருக்கும் ஆளுமை குணத்தை வெளிப்படுத்தி போராட வேண்டும் என்பதையே இக்கட்டுரை எடுத்துக்காட்டுகிறது. 


15 comments:

  1. ஆளுமை குணத்தை வளர்த்துக் கொள்ள பல உதாரணங்களை ISO பயிற்சி வகுப்புகளில் பாடம் நடத்தி உள்ளேன் என்கிற வகையில் சொல்கிறேன்... தவறாக எண்ண வேண்டாம்... மிரட்டல், வீம்பு, பிடிவாதம், ஆணவம் எல்லாம் சுயநலத்தையே காட்டுகிறதே தவிர ஆளுமை குணம் ம்ஹீம்... அது நன்மையில் முடித்துள்ளது என்பது நல்லதொரு காவியத்திற்கு வேண்டுமானாலும் சரியாக இருக்கலாம்...

    இன்றைக்கு... இன்றைய நாட்டு நடப்பிற்கு... பலரின் கருத்துகளையும் நினைத்துக் கொண்டு குழப்பிக் கொள்ளாமல், பணம், பொருள், சுகம் என்று எதையுமையே எதிர்ப்பார்க்காமல், குடிகாரனை மாற்ற மேற்கூறிய மிரட்டல், வீம்பு, பிடிவாதம், ஆணவம் + முக்கியமாக இந்த சுயநலம் - இந்த ஆளுமைகள் (?) உதவட்டும் என்றே தோன்றுகிறது...

    ReplyDelete
    Replies
    1. ISO பயிற்சி வகுப்புகளில் பாடம் நடத்தியுள்ளீர்கள் என்று தெரியும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

      நீங்கள் சொல்லுவது போல் "//மிரட்டல், வீம்பு, பிடிவாதம், ஆணவம் எல்லாம் சுயநலத்தையே காட்டுகிறது//" இந்த சுயநலம் ஒரு பொதுநலத்திற்காக போராடினால் அது நன்மை தானே!!!

      உதாரணமாக இன்றைக்கு நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறைகளுக்கெல்லாம் அதிமுக்கிய காரணம், இம்மாதிரியான வன்முறைகளுக்கு நம் நாட்டில் உள்ள சட்ட திட்டங்கள் கடுமையானதாக இல்லாமல் இருப்பதே. அதை மிகக் கடுமையாக மாற்ற (மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள சட்டத்திட்டங்கள் போல்) பெண்கள் இந்த சுயநலத்தை, பொதுநல கண்ணோட்டத்தோடு பயன்படுத்தி போராடி வெற்றிப் பெற்றால் நல்லதொரு விஷயமாக கருதப்படும் அல்லவா!!!

      Delete
  2. ம்ம்ம்ம்.... ஊருக்கு வந்தாச்சா? வந்தவுடனே பதிவு எழுதிட்டீங்களே....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஸ்பை. அப்புறம் பதிவு எழுதலைன்னா,என்னப்பன்றது???
      தங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி.

      Delete
  3. இரு வாரங்களாக தமிழகத்தில் இருந்தீர்களா?
    தெரியாமல் போய்விட்டதே நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. நானும் அந்த இரு வாரங்கள் காலில் சக்கரம் கட்டிக்கொண்ட மாதிரி தான் இருந்தது. அதனால் தான் வலைப்பூவில் தெரியப்படுத்தமுடியவில்லை நண்பரே!

      Delete
  4. அட ! சகோவை காணோமே . என்னவோ இதோ என்றுபார்த்தால் நீங்க இங்க தான் வந்தீங்களா? நம்ம ஒரு வெயில் எப்படி சகோ? சட்டையில தீப்புடிச்ச மாதிரி இருந்துச்சா?
    இனியா வும் , ஓவியாவும் நலமா?

    ReplyDelete
    Replies
    1. நம்ம ஊரு வெயிலைப் பற்றி சொல்லவா வேண்டும் சகோ!! இம்முறை வெயில் சற்று கடுமையாகத்தான் இருந்தது. முடிந்தவரை, நான் இந்த கோடைக் காலங்களில் இந்தியா வருவ்பதை தவிர்ப்பேன். ஆனால் இம்முறை தவிர்க்க முடியவில்லை.
      ஓவியாவும் இனியாவும் நலமே.

      Delete
  5. என்ன சகோ நலம் தானே!
    ம்.ம்.ம். பயணம் சென்று வந்தீர்களோ? இனியவும் ஓவியாவும் எப்படி ரசித்தார்களா இல்லை திரும்பி விடுவோம் என்று அழுதார்களா? ரொம்ப சுறுசுறுப்பாகத் தான் இயங்குகிறீர்கள்.மிக்க மகிழ்ச்சி சகோ.
    கத்தியையும் புத்தியையும் நல்ல விடயங்களுக்கு மட்டும் உபயோகித்தல் எல்லோருக்கும் நன்மை பயக்கும். ஆளுமையையும் அழிவுக்கு பயன் படுத்தாது ஆக்கத்துக்கு மட்டுமே பயன் பட்டால் நலமே. கைகேயி தர்ம வழியில் செல்லவில்லை ஆயினும் நிச்சயமாக ராமாயணம் உருவாக காரணமானவர் தான்.நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள் அல்லவா இதுவும் நியாய தர்மங்களை உலகிற்கு கற்பிக்கவே தோன்றியது எனலாம் எப்படியெல்லாம் வாழவேண்டும் எப்படி வாழக்கூடாது என்று வாழ்ந்து காட்டியவர்கள் என்றும் சொல்லலாம்.
    நீங்கள் சொல்வது போல அட்டூழியங்களை தட்டி கேட்க ஆளுமை அவசியமே.
    நல்ல தொரு பதிவு நன்றி சகோ! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அடடா! குடும்பத்தோடு இந்தியா சென்று வந்தோம் என்று தவறாக புரிந்துக்கொண்டீர்கள் போல சகோ!!!

      இம்முறை, நான் மட்டும் தான் இந்தியா சென்று வந்தேன், ஓவியா சென்ற மாதத்திலிருந்து தான் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்திருக்கிறாள். அவளின் பழக்கத்தை மாற்ற விரும்பாததால், நான் மட்டும் சென்று வந்தேன்,

      நான் (டிடி) அவர்களின் கருத்துக்கு பதிலுரைத்த மாதிரி, இன்றைய உலகில் பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் அட்டூழியங்களை தட்டிக் கேட்கவும், சட்டத்தை கடுமையாக மாற்றவும், ஆளுமை மிக மிக அவசியம் தான்.

      தங்களின் விரிவான கருத்துக்கு மிக்க நன்றி சகோ.

      Delete
  6. இந்தியப் பயணம் நன்கு முடிந்ததா? மீண்டும் பதிவுலகிற்கு வந்து பதிவுகள் தொடர்வது கண்டு மகிழ்ச்சி.

    சிறப்பான கட்டுரை....

    பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. இந்தியப் பயணம் நன்றாக முடிந்தது. தங்களுடைய பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி வெங்கட் சார்.

      Delete
  7. அருமையான கட்டுரை. நானும் சிட்னியில்தான் வசிக்கிறேன்.
    கைகேயியைக் குறித்து திரு.கம்பவாரிதியின் பேச்சையும் கேளுங்களேன். முன்பே கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

    https://www.youtube.com/watch?v=htQefVPTCRM

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் முதல் கருத்துக்கும் மிக்க நன்றி.
      திரு. கம்பவாரிதியின் பேச்சிற்கான காணொளியை பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி. நான் அவருடைய பேச்சை சிங்கையில் கேட்டிருக்கிறேன்.

      Delete
  8. மன்னிக்க வேண்டும். தங்கள் கருத்துடன் உடன்பட முடியவில்லை. போரில் வென்றவன் hero தோற்றவன் zero(அல்லது தீவிரவாதி). இக்கருத்து அன்று தொட்டு இன்றுவரை மாறவில்லை. சிவபக்தன் இராவணன் (தமிழ் மன்னன்) தோற்கடிக்கப்பட்டது கவலைக்குரிய விடயம். எனவே கைகேயி கலகம் நன்மையில் முடியவில்லை.

    திண்டுக்கல் தனபாலன் சொன்னது போல் இது மிரட்டல், வீம்பு, பிடிவாதம், ஆணவம் எல்லாம் சுயநலத்தையே காட்டுகிறதே தவிர ஆளுமை குணம் அல்ல.

    ReplyDelete