Sunday, January 19, 2014

வள்ளுவம் வழியில் வாழ்ந்த இறையடியார்கள் – இயற்பகை நாயனார்

இங்கு சிட்னியில் எனக்கு தெரிந்து, SBS வானொலி, தமிழ் முழக்கம் வானொலி, ஆஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் (ATBC), இன்பத் தமிழ்ஒலி என்று ஏகப்பட்ட வானொலி நிலையங்கள் உள்ளன. 2012ஆம் ஆண்டில், நான் தமிழ் முழக்கம் வானொலிக்காக ஒவ்வொரு மாதமும், மூன்றாவது சனிக்கிழமைகளில் 30 நிமிடங்களிலிருந்து 45 நிமிடங்கள் வரையிலான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கினேன். சென்ற வருடம்(2013), வீட்டு அம்மணிக்கு கண்ணில் ஏற்பட்ட பிரச்சனையால், என்னால் அதில் கவனம் செலுத்த முடியவில்லை. இந்த வருடமும் என்னால் முடியாது என்று தான் எண்ணிக்கொண்டிருந்தேன். சகோதரி சங்கீதா அவர்கள், நீங்கள் பத்து நிமிடங்கள் மட்டும் மூன்றாவது சனிக்கிழமைகளில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை வழங்குங்கள் என்று கூறினார். நானும் பத்து நிமிடத்திற்கு என்ன நிகழ்ச்சியை வழங்கலாம் என்று எண்ணிய பொழுது, ஏன் நாம் 63 நாயன்மார்களைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியை வழங்கக்கூடாது என்று ஒரு எண்ணம் தோன்றியது. வெறும் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மட்டும் சொல்லாமல், திருக்குறளோடு ஒப்பிட்டு கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி சங்கீதாவிடம் சொன்னேன். அவர்களும் நன்றாக பண்ணுங்கள். ஆனால் வெறும் சைவத்தை மட்டும் சொல்லாமல், வைஷ்ணவத்தில் வாழ்ந்த ஆழ்வார்கள், மற்றும் இஸ்லாம், கிருத்துவ மதத்தை சார்ந்த இறையடியார்களையும் பற்றி பேசினால் இன்னும் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். அதன்படி நேற்று முதல் நிகழ்ச்சியாக “இயற்பக நாயனார்” வாழ்க்கை வரலாற்றை திருக்குறளோடு பொருத்தி தமிழ் முழக்க வானொலிக்கு வழங்கினேன். அதையே, பதிவாகப் போட்டால் என்ன என்று தோன்றியது. அது தான் இந்த பதிவு. 



“கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்என்று ஔவைப் பாட்டி சொன்னாள். அதற்கு பல காரணங்கள் உள்ளது. அதில் ஒரு முக்கிய காரணம், ஒரு ஊரில், எப்பொழுதும் கோயில் கோபுரமே மிக உயர்ந்த கட்டிடமாக இருக்கும். அதற்குமேல் ஒரு கட்டிடத்தை யாரும் கட்ட மாட்டார்கள். அப்படி கோபுரம் உயரமாக இருக்கும் போது, அதன் கலசங்கள் கோபுர உச்சியில் இருந்துக்கொண்டு, கோவிலுக்குள் நடைபெறும், பூஜைகளுக்கு ஏற்ப சக்தி பெற்று, அந்த சக்தியை காற்றின் மூலம் ஊர் முழுக்க பரப்பச்செய்யும். இதனால், கெட்ட சக்திகள் ஊருக்குள் வர முடியாது. மேலும் அந்த கோபுரத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு, அதாவதுகோபுர தரிசனம் கோடி புண்ணியம்”. நாம் வாழ் நாளில் ஒரு முறையாவது கோபுரத்தைப் பார்த்து வணங்கினால், நம்முடைய பாவ/புண்ணிய கணக்கில், கோடி புண்ணியங்கள் சேரும் என்று ஒரு ஐதீகம். அடுத்து கோயில் என்று ஒன்று இருந்தால், அந்த கோயிலுக்கு, மரத்தால் ஆன தேர் ஒன்று இருக்கும். அந்த தேரின் சிறப்பை அடுத்த இறையடியார் வாழ்க்கையில் பார்க்கலாம்.

    -
புத்தகத்தில்படித்தது.



இனி, இயற்பகை நாயானரின் சரித்திரதிற்குப் போகலாமா.



உலகின் மிக பழமையான நகரங்களில் ஒன்று புகார் () காவேரிபூம்பட்டினம். இது ஆரம்ப கால சோழர் மன்னர்களின் தலைநகரம். அந்த நகரம் கடற்கரையை ஒட்டியுள்ளது. அதனால் அது ஒரு மிகப் பெரிய வாணிப ஸ்தலமாக விளங்கியது. அங்கு ஒரு வணிகர் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். அவர் ஏகப்பட்ட வியாபாரங்களுக்கும், சொத்துக்களுக்கும் சொந்தக்காரராக இருந்தார். அவர் ஒரு பெரிய சிவ பக்தர். அவர் தனக்கு அவ்வளவு சொதுக்கள் இருந்தும், ஆடம்பரமாக வாழாமல், எளிய முறையில் வாழ்ந்து வந்தார். பின் எதற்காக அவ்வளவு சொத்துக்களை சேர்த்தார் என்றால்,

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி 

வேளாண்மை செய்தார் பொருட்டு
”. 


அதாவது, இல்லறத்தைப் போற்றி வாழ்வது என்பது வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து, விருந்தினரை வரவேற்று உதவி செய்வதேயாகும். இந்த திருக்குறளின் நியதிப்படி அவர் சொத்துக்களை சேர்த்தும், காத்தும், வருகின்ற சிவனடியார்களுக்கு, தன்னிடம் இல்லை என்று கூறாமல், இருக்கும் சொத்துக்களை எல்லாம் வாரி வழங்கி வாழ்ந்து வந்தார். கர்ணனின் பரம்பரையில் இருந்து வந்தவரோ என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு தர்மங்கள் செய்து வந்தார்.தன்னிடம் யாசகம் கேட்டு வரும் சிவனடியார்களிடம், இல்லை என்று சொல்லக் கூடாது என்கிற கொள்கையோடு வாழ்ந்தார்.ஒரு நாள், அவர் வீட்டுக்கு ஒரு ஏழை பிராமணர், உடலெல்லாம் திருநீறு பூசிக்கொண்டு, சிவனின் ஐந்தெழுத்து நாமத்தை உச்சரித்துக்கொண்டு வந்தார். அவரைப் பார்த்தவுடன், இயற்பகையாருக்கு மிகவும் மகிழ்ச்சியாகி விட்டது. உடனே, அவரை இன்முகத்துடன் வரவேற்று, உபசரித்தார். ஸ்வாமி, தங்களுக்கு என்ன வேண்டும் என்று கூறினால், நான் அதை தங்களுக்கு கொடுத்து மகிழ்ச்சி அடைவேன் என்றார். அதற்கு அந்த சிவனடியாரும், நான் கேட்கும் பொருளை, நீ தருவதாக கூறி உறுதியளித்தால், அது என்ன பொருள் என்று சொல்லுவேன் என்று கூறினார். இயற்பகையார் ஒரு நொடிக் கூட யோசிக்காமல், நீங்கள் கேட்கும் பொருள் என்னிடம் இருந்தால், அந்த நொடி முதல் அது உங்களுக்கே சொந்தம் என்று கூறி உறுதியளித்தார். அவர் கூறியதைக் கேட்ட சிவனடியாரும் முகமலர்ந்தார். பிறகு கொஞ்சமும் தயங்காமல் ஒரு பொருளைக் கேட்டார். அவர் கேட்ட அந்தப் பொருள் இருக்கே, கண்டிப்பாக யாராலுமே அதைக் கொடுக்க முடியாது. இப்படி ஒரு பொருளையா அந்த சிவனடியார் கேட்பார்!!அந்தப் பொருள் ஒரு விலை மதிப்பில்லாத பெரிய செல்வம்.

அந்த சிவனடியார், உன்னுடைய மனைவியைக் கொடு என்று இயற்பகையாரிடம் கேட்டார். இந்த மாதிரி நம்மிடம் யாராவது கேட்டுயிருந்தால், நாம் அவர்களை வெட்டியேப் போட்டிருப்போம். ஆனால், இயற்பகையாரோ, கொஞ்சமும் அதிர்ச்சி அடையாமல், அதே இன்முகத்தோடு, அவரைப் பார்த்து, நீங்கள் கேட்ட பொருள் என்னிடம் இருப்பதைப் நினைத்து, நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். பிறகு தன் மனைவியிடம் சென்று, நான் வாக்குக் கொடுத்தப்படி, நீ இந்த நொடி முதல் அந்த சிவனடியாருக்குச் சொந்தம் என்று கூறினார். அந்த உத்தமியோ, இதைக் கேட்டவுடன், பேரதிர்ச்சி அடைந்தார்கள். ஆனால் உடனே சுய உணர்வுப் பெற்று, கணவனின் விருப்பத்தை பூர்த்திச் செய்வதே ஒரு நல்ல மனைவியின் கடமை என்று நினைத்து, அந்த சிவனடியாரோடு செல்வதற்கு சம்மதம் தெரிவித்தார்கள். எந்த ஒரு பெண்ணும் ஒப்புக்கொள்ளாத ஒரு விஷயத்தை தன்னுடைய மனைவி தனக்காக ஒப்புக்கொண்டதை எண்ணி, இயற்பகையர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

பிறகு, அவர் அந்த சிவனடியரிடம் சென்று, வேறு ஏதாவது செய்ய வேண்டுமா என்றுக் கேட்டார். அந்த சிவனடியாரும், நான் உன்னுடைய மனைவியைக் கூட்டிக்கொண்டு போகும்போது, உன்னுடைய சொந்தக்காரர்கள் என்னிடம் சண்டைப் போடலாம். அதனால், நீ எனக்கு பாதுகாப்பாக வர வேண்டும் என்றுக் கூறினார். உடனே, இயற்பகையாரும், என் சொந்தக்காரர்கள் யாராவது உங்களை எதிர்த்தால், நான் அவர்களை என் வாளால் வெட்டிப்போடுகிறேன் என்றுக் கூறி தன் வாளையும், கேடயத்தையும் கையில் எடுத்துக்கொண்டு, அந்த சிவனடியாருக்குப், பாதுக்காப்பாகச் சென்றார்.

இந்த விஷயம், அவருடைய சொந்தக்காரர்களுக்கு தெரிந்து விட்டது. உடனே அவர்கள் எல்லோரும், இந்த இயற்பகையாருக்குப் பைத்தியம் தான் பிடித்து விட்டது, இல்லையென்றால் யாராவது தன் மனைவியை பிறருக்கு தானமாக கொடுப்பார்களா!!! என்று கோபப்பட்டார்கள். இந்த அநியாயத்தைத் தடுக்க வேண்டும் என்று எல்லோரும் முடிவு செய்து, ஆளாளுக்கு வாளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுப் போனார்கள். ஊருக்கு வெளியே சொந்தக்காரர்கள், அவர்களைப் பார்த்தார்கள். அந்தக் கூட்டத்தைப் பார்த்து, சிவனடியார் மிகவும் பயந்து விட்டார். நான் எப்படி உன்னைக் கூட்டிக்கொண்டு போகமுடியும் என்று பயந்தவாறு, அந்த உத்தமியிடம் கேட்டார். உடனே, அந்த உத்தமியும், நீங்கள் பயப்பட வேண்டாம் சுவாமி, இவர்களை என் கணவர் வெற்றிக்கொள்வார் என்றுக் கூறித் தைரியமளித்தார். இயற்பகையார், அவர்களை எல்லாம் பார்த்து, இது என் சொந்த விஷயம், இதில் யாரும் தலையிட வேண்டாம். நீங்கள் எல்லாம் திரும்பிப் போங்கள் என்றுக் கூறினார். ஏற்கனவே கோபமாக இருந்த அவர்கள், இவருடைய பேச்சைக்கேட்டு, ரொம்பவும் ஆத்திரமடைந்தார்கள். அவர்கள், நீ இப்படி உன் மனைவியை இன்னொருவரிடம் அனுப்புவதால், நம்முடைய குடும்பத்திற்கு மிகவும் கெட்டப்பெயரை உண்டுப் பண்ணுகிறாய் என்று திட்டினார்கள். தர்மம் செய்ய வேண்டும் தான், அதற்காக தன் மனைவியையே அந்த சிவனடியார் கேட்டார் என்பதற்காக அவருடன் அனுப்பலாமா? வேண்டுமானால் அந்த சிவனடியாருக்கு உன்னிடம் உள்ள வேறு ஏதாவது ஒரு நல்ல பொருளைக் கொடுத்து அனுப்பு என்று யோசனைக் கூறினார்கள். ஆனால், எக்காரணம் கொண்டும் நாங்கள் உன் மனைவியை அவருடன் அனுப்ப விடமாட்டோம் என்று கோபமாக கூறினார்கள். அதற்கு இயற்பகையார், என்னைப் பொறுத்தவரை, சிவனடியார் யாராவது என்னிடம் இருக்கும் ஒருப் பொருளைக் கேட்டால், மறுக்காமல் கொடுத்து விடுவது தான் என் பழக்கம். அதனை என்னால் மாற்றிக் கொள்ள முடியாது என்று கூறி , அவர்களது யோசனையை ஏற்க மறுத்துவிட்டார். சொந்தக்காரர்களும் , சரி இனிமேல் பேசிப் பயனில்லை என்று எண்ணி, எல்லாம் அந்த சிவனடியாரல் வந்தது என்று கோபப்பட்டு, அவரைத் தாக்கப் போனார்கள் . இதனால் மிகவும் ஆத்திரமடைந்த இயற்பகையாரோ, வேறு வழி இல்லாமல், தன் சொந்தக்காரர்களோடு சண்டைப் போட்டார். கடைசியில் சொந்தக்க்காராகள் அனைவரும் மாண்டுப் போனார்கள்.



இதனைப் பார்த்த அந்த சிவனடியார் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, இயற்பகையாரே, நீர் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி விட்டாய் என்று கூறி பரவசப் பட்டார்.

பிறகு வேறு எந்த தடங்களும் இல்லாமல், அவர்கள் சாய்க்காடு என்னும் இடத்தை அடைந்தார்கள். சரி இனிமேல் எந்தத் தொந்தரவும் வராது என்று எண்ணிய சிவனடியார், இயற்பகையாரைப் பார்த்து, உன்னுடயை உதவி இனிமேல் எனக்குத் தேவைப்படாது, அதனால் நீ போகலாம் என்றுக் கூறினார். இதைக் கேட்டு நிம்மதியடைந்த இயற்பகையாரும், சரி நீங்கள் பத்திரமாக செல்லுங்கள். நான் மெதுவாக திரும்பி போகிறேன் என்று கூறி, தன் மனைவியைக் கூட பார்க்காமல் திரும்பி நடந்தார்.

இயற்பகையார், கொஞ்ச தூரம் கூட திரும்பிப் போயிருக்க மாட்டார், அதற்குள்ளே மிகவும் சத்தத்துடன் அந்த சிவனடியார், இயற்பகையாரைக் கூப்பிட்டார். அந்த சத்தத்தைக் கேட்டவுடன், வேறு யாரோ அவர்களைத் தாக்க வந்துட்டார்கள் என்று எண்ணிய இயற்பகையார் மீண்டும் அவர்களை நோக்கி மிக வேகமாக திரும்பி வந்தார். அங்கே, அவருடைய மனைவி மட்டும் இருந்தார்,அந்த சிவனடியாரைக் காணவில்லை. அவருக்கு ஒன்றும் புரியவில்லை. தன் மனைவியிடம் யாராவது வந்து அந்த சிவனடியாருக்கு தொல்லைக் கொடுத்தார்காளா என்று கேட்டார். அந்த அம்மையாரும் யாரும் வரவில்லை, ஆனால் திடீரென்று, அந்த சிவனடியாரைக் காணவில்லை. நான் எங்குத் தேடியும் அவரைக் கண்டுப்பிடிக்க முடியவில்லை என்றுக் கூறினார். இதனால் மிகவும் வருத்தமடைந்த இயற்பகையார், இனி என்ன செய்வது என்று மனம் கலங்கினார்.

அப்பொழுது, ஒரு மிகப் பெரிய அதிசயம் அங்கு நிகழ்ந்தது. இறைவன் சிவபெருமான், பார்வதி தேவியோடு, விண்ணில் தோன்றினார்.

இயற்பகையாரே!!!, உம்முடைய பெருமையை, உலகுக்கு, உணர்த்தவே, யாம் சிவனடியார் வேடம் பூண்டு, உம்மிடம் உம் மனைவியை யாசகம் கேட்டு வந்தோம். உம்முடைய சிவ பக்தி, எம்மை மிகவும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டது. நீ உன் மனைவியாரோடு, எம்மிடம் சேருவாயாக!!! என்று அருள் புரிந்து மறைந்தார். அதற்குப் பிறகு இருவரும் மோட்சம் பெற்று, சிவபெருமானின் காலடியில் சேர்ந்தார்கள். இவரால், மாண்ட உறவினரும் மோட்சம் பெற்றனர். இறைவனே இவருடையப் பெருமையை/கொடைத் தன்மையை உலகிற்கு உணர்த்தினார் என்பது மிக மிகப் பெரிய விஷயம்.

இவருடைய பெயர் சற்று வித்தியாசமாக இருக்கிறதல்லவா!!! ஆனால் இவருடைய சரித்திரத்தைத் தெரிந்துக் கொண்ட பிறகு, இந்தப் பெயர் அவருக்கு சரியாக தான் இருக்கிறது என்று தெரிகிறது. இவரது பெற்றோருக்கு, இவர் பிற்காலத்தில், இயற்கைக்கு எதிராக தன் மனைவியை வேறு ஒருவருக்கு தானமாக வழங்குவார் என்று தெரிந்திருக்கிறது. அதனால் தான் அவருக்குஇயற்பகையார்என்ற பெயரை வைத்திருக்கிறார்கள் போல.

ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில், காவிரிப்பூம்பட்டினத்திலுள்ள, சாயாவனம் எனும் கோவிலில் இயற்பகை நாயனார் விழா நடைப்பெறுகிறது.

அடுத்த மாதம் மூன்றாவது சனிக்கிழமையன்று  வேறு ஒரு இறையடியாரோடு உங்களை சந்திக்கிறேன். 

4 comments:

  1. புத்தகத்தில் படித்தது அருமை...

    இயற்பகை நாயானரின் தகவல்கள் அனைத்தும் சிறப்பு... குறளோடு சொன்னது மேலும் சிறப்பு... நன்றிகள் பல...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. எப்பொழுதும் போல் முதலில் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி தனபாலன்.

      Delete
  2. சிறப்பான தகவல்கள். இதுவரை படித்திராத தகவல்கள்.

    தொடருங்கள்..... தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.
      அடுத்த மாதம் வேறு ஒரு இறையடியாரோடு சந்திக்கிறேன்.

      Delete