Tuesday, January 7, 2014

சனவரி 6 – வேட்டி தினம்

இப்பொழுதெல்லாம் தினமும் ஏதாவது ஒரு “சிறப்பு தினமாக” உலகில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் நிறைய விழிப்புணர்வு தினங்களும் அடங்கும். இதில் கொடுமை என்னவென்றால், விழிப்புணர்வு தினங்களை காட்டிலும் “காதலர் தினம், மகளிர் தினம், அன்னையர் தினம், தந்தையார் தினம்” போன்ற தினங்களைத்தான் மக்கள் அதிகமாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். என்னடா இவன் அன்னையர் தினத்தை, மகளிர் தினத்தை எல்லாம் கொடுமை என்று சொல்லுகிறானே என்று கோபப்பட்டு நம் சகோதரிகள் என்னைத் திட்டக்கூடும். ஒரு வேளை செலவு பண்ணி என்னை அடிக்கக் கூட வந்தாலும் வரலாம். என்னைப் பொருத்தவரை எல்லாத் தினங்களுமே அவர்களுக்காகத்தானே நாம் அற்பணித்திருக்கிறோம், பிறகு எதற்கு குறிப்பிட்ட ஒரு தினத்தை மட்டும் நாம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் தான் தவிர வேற ஒன்றுமில்லை சகோதரிகளே!!!
 
சரி, விஷயத்துக்கு வருகிறேன். நேற்று நம் தமிழ்நாட்டில் நிறைய இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் வேலை பார்க்கும் ஆண்கள்  எல்லோரும் நம் பாரம்பரிய ஆடையான வேட்டியை அணிந்தபடி வேலைக்கு வந்து “வேட்டி தினமாக” கொண்டாடியிருக்கிறார்கள்.  இதை பத்திரிக்கையில் படித்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பெண்களுக்கு எவ்வாறு சேலை அழகையும் கம்பீரத்தையும்  கொடுக்கிறதோ அதேபோல் ஆண்களுக்கு வேட்டி அழகையும் கம்பீரத்தையும் கொடுக்கிறது.

 

புகப்படம் உதவி: தட்ஸ்தமிழ்

தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்காவது, வேட்டி அணியும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆனால் வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு வேட்டி அணியும் வாய்ப்பு மிக மிக குறைவே. அதனால் தான் நாங்கள் இங்கு கோவிலில் நடக்கும் பூசைகளிலும், விசேச நாட்களிலும் வேட்டியைக் கட்டிக்கொள்வதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு, வேட்டியை கட்டிக்கொள்கிறோம். சென்ற இரண்டு ஆண்டுகளாக நாங்கள் இங்கு “பொங்கல் திருநாளை” வெகு விமர்சையாக கொண்டாடினோம். ஆண்கள் எல்லோரும் வேட்டி கட்டிக்கொண்டு வரவேண்டும் என்று சொன்னோம். அப்போது ஒரு சிலர், எங்களிடம் வேட்டி இல்லை என்று சொன்னார்கள். ஒன்றுக்கு மேல் வேட்டியை வைத்திருப்பவர்கள் எல்லோரும் வேட்டியை கொடுக்கிறோம் என்று சொன்னோம். உடனே, வேட்டி இல்லை என்று சொன்னவர்கள், நீங்கள் வேட்டி கொடுத்தாலும் எங்களுக்கு வேட்டி கட்டத்தெரியாதே என்று ஒரு குண்டைப் போட்டார்கள். சரி, நாங்க உங்களுக்கு வேட்டியை கட்டிவிடுகிறோம் என்று சொன்னபோதும், அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. அப்ப எப்படி இவர்கள் திருமணத்தன்று வேட்டி கட்டாமல் இருந்திருப்பார்கள் என்று எங்களுக்கு பெரிய ஆச்சிரியம். அந்த கேள்விக்கு அவர்கள், திருமணத்தன்று, தாலி கட்டுகிற சமயத்தில், மற்றவர்களின் உதவியால் வேட்டியைக் கட்டி பெல்ட் எல்லாம் போட்டுக்கொண்டு, எப்படியோ சமாளித்தோம். அதற்கு பிறகு, நாங்க வேட்டி பக்கமே தலை வைத்துப் படுக்கவில்லை என்றார்கள். இவ்வாறு தான் வேட்டியணியும் பழக்கம் மறைந்து கொண்டு வருகிறது.

 அடப்பாவிகளா! நம்முடைய பாரம்பரிய ஆடையை கூட எங்களுக்கு கட்டத் தெரியாதுன்னு சொல்றாங்களேன்னு ரொம்பவும் வருத்தமாக இருந்தது. ஏற்கனவே, நம்முடைய பாரம்பரிய விஷயங்கள் நிறைய மறைந்து கொண்டு வருகிறது. வேட்டி அணிவதும் அந்த வரிசையில் போய் சேராமல் இருப்பதற்கு இது போன்ற வேட்டி தினம் கண்டிப்பாக தேவை தான். ஆனால் இதனை எல்லோரும் பின்பற்றுவார்களா????

 

பின் குறிப்பு: இந்த பதிவை நான் நேற்றே எழுதியிருக்க வேண்டும். என்ன பண்ணுவது, நான் விடுமுறை எடுத்து வீட்டில் இருந்ததினால், செய்திகளை படிக்க முடியவில்லை. இன்று அலுவலகத்திற்கு வந்த பிறகு தான் செய்திகளை படிக்க முடிந்தது. அதனால் தான் தாமதமாக இந்த பதிவு.

15 comments:

  1. புது தகவல். நான் 14 வயசான என் அப்புக்கு பட்டு வேட்டி வாங்கி கொடுத்திருக்கேன். விசேச தினங்களில் அதான் கட்டனும். அவனுக்கும் விருப்பம். பெண் குழந்தைகள் கண்டிப்பா பாவாடை தாவணி, பின்னல், குஞ்சலம்தான்

    ReplyDelete
    Replies
    1. கேட்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய நாடகங்களில், 14/15 வயது பெண் குழந்தைகள் சேலை எல்லாம் கட்டி நடித்திருக்கிறார்கள். அதேபோல் பையங்களும் வேட்டி கட்டி நடித்திருக்கிறார்கள்.

      Delete
  2. தாமதமாக இருந்தாலும் நல்லதொரு பகிர்வு... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. //அடப்பாவிகளா! ///
    என்னங்க என்னை இப்படி திட்டுறீங்க எனக்கு கட்டத் தெரியாதுன்னு உங்களுக்கு தெரிஞ்சுதானே நீங்க என்னை இப்படி திட்டுறீங்க. இருங்க இருங்க நீங்க என் பதிவை எல்லாம் படிக்கிறதை உங்க மனைவியிடம் சொல்லித்தாறேன்

    ReplyDelete
    Replies
    1. நீங்க மட்டும் என் மனைவியிடம் சொல்லுங்க, அப்புறம் பாருங்க "இரும்பாலான பூரிக்கட்டையை" நான் உங்கள் மனைவிக்கு அனுப்பி வைக்கிறதை. அதில் அடி வாங்கினால், இன்னும் நன்றாக நீங்கள் வலைப்பூவில் எழுதலாம்,

      Delete
    2. ///"இரும்பாலான பூரிக்கட்டையை"//// நாட்டுல இப்படி பல பேர் கொலைவெறியோட அலையறாங்க போல இருக்கே நாம்தான் இனிமே ஜாகிரதையாக இருக்கணும்

      Delete
  4. வேட்டி தினம் [வெட்டி தினம் அல்ல ;)] - புதிய செய்திக்கு நன்றி.

    ReplyDelete
  5. ஆண்களுக்கு அழகு வேட்டி! சவுகர்யமானதும் கூட! என்ன அவிழாமல் இருக்க ஒரு பெல்ட் போட வேண்டும். கீழ்ப்பாச்சு கட்டினால் அதுவும் தேவையில்லை! நல்ல பகிர்வு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  6. வேட்டி தினம் - புதிய தகவல்.

    இப்போது தில்லியில் அடிக்கும் குளிருக்கு வேட்டிக் கட்டிக் கொண்டு போவது போல யோசித்துப் பார்த்தாலே குளிருது!

    நமது பாரம்பரிய உடை அணிந்து கொள்வதில் ஒரு தவறும் இல்லை. கட்டிக் கொள்ளத் தெரியாது என்பவர்களுக்கு ஒரு வகுப்பு எடுக்க வேண்டியது தான்! :)

    மதுரைத் தமிழன் பார்த்து சூதானமா இருங்க..... இரும்புல பூரிக்கட்டை. யோசிக்கவே டெரரா இருக்கே!

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக வகுப்புத்தான் எடுக்க வேண்டும் . வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  7. திருமணம் முடிந்ததிலிருந்து வேட்டியே கட்டியதில்லை... சென்ற தீபாவளிக்கு வேட்டி கட்டினேன்... இனி ஒவ்வொரு பண்டிகைக்கும் வேட்டி தான் என்று முடிவு செய்திருக்கிறேன்.....

    ReplyDelete
    Replies
    1. நல்ல முடிவு வாழ்த்துக்கள்

      Delete