Tuesday, November 26, 2013

புகைவண்டி அனுபவம்

பொதுவா நான் தினமும் காலை 7.55 மணிக்கு புகைவண்டியை எடுத்து 9.00/9.05க்கு அலுவலகத்துக்குள் நுழைவேன். போன மாதத்தில் இருந்து புகைவண்டிகளுக்கான நேர அட்டவணையை மாற்றிவிட்டார்கள். எனக்கு இந்த புது அட்டவணை முழுமையாக பிடிபடாததால 7.51 வண்டியை தான் எடுக்கிறேன். அதை விட்டால் 7.54க்கு ஒரு வண்டி இருக்கும் என்று தெரியும். இன்று காலை எந்திரிக்கவே கொஞ்சம் லேட்டாகி விட்டது. அதனால அடிச்சு புடிச்சு கிளம்பினேன். அப்பவே தெரியும் 7.51 வண்டியை பிடிக்க முடியாதுன்னு. சரி எப்படியும் 7.54 வண்டியையாவது பிடித்துவிடலாம்னு வேக வேகமா வீட்டிலிருந்து காரை எடுத்துக்கிட்டு போனேன். சிக்னல் கிட்ட வரும்போது தான், சரியா சிகப்பு விளக்கு விழுந்துச்சு. நடக்கிறவங்களுக்கான சிக்னல் வந்துச்சு. பார்த்தா யாரும் ரோட்டை கடக்கிற மாதிரி தெரியலை. யாரோ ஒரு பிரகஸ்பதி, ரோட்டை கடக்கிறதுக்கான பொத்தானை அமுக்கிவிட்டுட்டு, சிக்னல் வருகிற வரைக்கும் காத்திருக்காமல் வண்டிகள் வராத நேரம் பார்த்து சாலையை கடந்து போய் விட்டார் போல இருக்கு (இந்த மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் அபராதம் போட மாட்டேங்குறாங்க!!!). ஒரு வழியா நான் காரை கொண்டு போய் நிறுத்திட்டு, புகைவண்டி நிலையத்துக்குள்ள நுழையும்போது, ஒரு வண்டி வந்து நின்னுச்சு. நானும் 7.54 வண்டி தான் வந்துடுச்சுன்னு, ஓடிப்போய் உள்ளே ஏறி உட்கார்ந்தேன். எனக்கு எப்பவுமே அலுவலகத்துக்கு போகும்போதும்,வரும்போதும் தமிழ் புத்தகம் படிக்கும் வழக்கம் உண்டு. அது மாதிரி, இன்னைக்கு காலையிலும் இங்கு உள்ள நூலகத்திலிருந்து எடுத்த “பாண்டிமா தேவி” புத்தகத்தை படிக்க ஆரம்பிச்சுட்டேன். கொஞ்ச நேரம் போன பிறகு தான் தலையை தூக்கி வெளியே பார்த்தேன். அப்ப வண்டி ஒரு ஸ்டேஷன்ல நின்னுக்கிட்டு இருந்துச்சு. பார்த்தா அது “லிவர்பூல்” ஸ்டேஷன். நான் இருக்கும் “இங்கில்பர்ன்” ஸ்டேஷன்லேருந்து சிட்டிக்கு போறதுக்கு ரெண்டு வழி இருக்கும். ஒரு வழி ஏர்போர்ட் வழியா செல்லக்கூடிய வழி. மற்றொன்று சுற்றிக் கொண்டு போகும் வழி. இரு வழிக்கும் கிட்டதட்ட 20 நிமிடம் வித்தியாசம் இருக்கும். அதனால சிட்டிக்கு போறவங்க எல்லோரும் ஏர்போர்ட் வழியில தான் போவாங்க. ஆனா நான் இன்னைக்கு ஏறிய வண்டியோ சுற்று வழியில செல்லக்கூடிய வண்டி. இந்த மாதிரி தப்பா எறிட்டா, “கிளென்பீல்ட் ஸ்டேஷன்ல” (எங்க ஸ்டேஷன்லேருந்து ரெண்டாவது ஸ்டேஷன்) இறங்கிக்கிட்டு மாறிப்போகலாம். ஆனா நானோ புத்தகம் படிக்கிற ஆர்வத்துல, அந்த ஸ்டேஷனை விட்டுட்டேன். இனி ஒண்ணும் பண்ண முடியாது, லேட் ஆனது, ஆனது தான்னு மறுபடியும் அந்த புத்தகத்தை படிக்க ஆரம்பிச்சேன். அப்ப எனக்கு முன்னாடி உள்ள சீட்ல ஒரு பெண்மணி வந்து உட்கார்ந்தாங்க. 

நானும் மும்முரமா அந்த கதையை படிச்சுக்கிட்டு இருக்கும்போது, யாரோ தமிழ்ல பேசுற மாதிரி சத்தம் கேட்டுச்சு. புத்தகத்திலிருந்து தலையை தூக்கி, சுத்தி பார்வையை ஓட விட்டா, தமிழ்க்காரங்க யாரும் இருக்கிற மாதிரி தெரியலை. மறுபடியும் புத்தகத்துல தலையை நுழைச்சுட்டேன். திருப்பியும் கொஞ்ச நேரத்துக்கெல்லாம், “வேணாம், வேணாம், சொல்றேன் கேளு” அப்படின்னு சினிமால பேசுற மாதிரி வசனம் கேட்டுச்சு. ஒரு வேளை நம்ம போன் தான் அன்லாக் ஆகி, யூடியூப் ஏதாவது ஓபன் ஆயிடுச்சான்னு ஒரு சின்ன சந்தேகம். போனை எடுத்துப்பார்த்தா, அது ரொம்ப சமர்த்து பாப்பாவா லாக் ஆகியேயிருந்தது. கொஞ்ச நேரம் காதை தீட்டிக்கிட்டு உத்துக்கேட்டேன், சந்தேகமே இல்லை யாரோ தமிழ் படம் பார்த்துக்கிட்டு வராங்கன்னு தெரிஞ்சுது. சுத்திப் பார்த்தா எந்த முகமும் தமிழ் முகமாட்டம் தெரியலை. அப்புறம் யாருடா தமிழ் படத்தை பார்த்துக்கிட்டு வராங்கன்னு, முன்னாடி சீட்டை எட்டிக்கிட்டு பார்த்தா, அந்த பெண்மணி சின்னதா இருக்கிற டி‌வி‌டி ப்ளேயர்ல படம் பார்த்துக்கிட்டு வந்தாங்க. இத்தனைக்கும் அவுங்க அந்த ஒயரை காதுல தான் மாட்டி இருந்தாங்க. ஆனாலும் அவுங்களுக்கு சத்தம் பத்தலை போல, அதனால சத்தம் எவ்வளவுக்கெவ்வளவு வைக்க முடியுமோ, அந்த அளவுக்கு வச்சிருக்காங்க. நல்ல காலம், அவுங்களை யாரும் ஒண்ணும் கண்டுக்கலை. சரி, ஏதாவது ஒரு புது படமா இருக்கும், கொஞ்ச நேரம் அதை பார்த்துக்கிட்டு போகலாம்னு நினைச்சு, நானும் புத்தகத்தை மூடி வச்சுட்டு, எட்டிக்கிட்டு அந்த படத்தை பார்க்க ஆரம்பிச்சேன். பார்த்தா கொஞ்சம் பழைய படம். எம்.எஸ்.பாஸ்கர், கருணாஸ்ன்னு ஒரு காமெடி ஸீன் ஓடிக்கிட்டு இருந்துச்சு. நானும் நல்லா ரசிச்சு பார்த்துக்கிட்டு வந்தேன். அப்ப தான் வண்டி, “கிரான்வில் ஸ்டேஷன்ல” நின்னுச்சு. உடனே அந்த பெண்மணி, அப்படியே அந்த டி.வி.டி. ப்ளேயரை மூடிட்டு எந்திரிச்சாங்க. 

நானும், அடடா, அந்த அம்மா எந்திரிச்சிட்டாங்களே, சரி எந்த ஸ்டேஷன்ன்னு பார்த்தா, ஆஹா, நம்ம இறங்கி வேற வண்டி மாற வேண்டிய ஸ்டேஷன் ஆச்சேன்னு, இறங்கப் பார்த்தா, கதவு மூட ஆரம்பிச்சுடுச்சு. நம்ம உருவம் தான் ரொம்ப சின்ன உருவம் ஆச்சே, அதனால கதவு மூட, மூட நான் வண்டிக்கு வெளியே குதிச்சுட்டேன் (ஒல்லியா இருக்கிறதுனால நிறைய வசதி!!!). அப்பாடான்னு அடுத்த வண்டியை பிடிச்சு ஒரு வழியா 9.30 மணிக்கு ஆபிஸ் போய் சேர்ந்தேன். எங்க டீம்ல எப்பவுமே ஒண்ணு ரெண்டு பேர் கொஞ்சம் லேட்டா வருவானுங்க, இன்னைக்குன்னு பார்த்து எல்லாரும் சீக்கிரமா வந்துட்டானுங்க போல, நான் தான் கடைசியா வந்து என் சீட்ல உட்கார்ந்தேன். 

நான் உட்கார்ந்த உடனே போன், பார்த்தா வீட்டு அம்மணி. “என்னங்க கரெக்டா ஆபிஸ் போய் சேர்ந்திட்டீங்களான்னு” ஒரு விசாரணை. நம்ம வண்டி மாறி ஏறுன விஷயம் தெரிஞ்சு தான் கேக்கிறாளான்னு, மண்டைக்குள்ள ஒரு குடைச்சல். அதெல்லாம் தெரிஞ்சிருக்காதுன்னு மனசை சமாதானம் பண்ணி, “இல்ல இப்பத்தான் ஆபிஸ்குள்ளேயே போறேன்ன்னு” சொன்னேன். “உடனே, ஏங்க அவ்வளவு லேட்ன்னு” ஒரு கேள்வி. நான், “இல்லம்மா, வண்டியை வர்ற வழியில, ரொம்ப நேரம் நிறுத்தி போட்டுட்டாங்கன்னு, அதான் லேட்டு (இங்க அடிக்கடி அந்த மாதிரி நடக்கும்). அதனால  இன்னைக்கு வீட்டுக்கு வரதுக்கு கொஞ்சம் லேட்டாகும்னு ஒரு பிட்டை போட்டேன். சரி, சரி ஒழுங்கா வேலையைப் பார்த்துட்டு வாங்கன்னு சொல்லி வச்சாங்க. நான் மட்டும், கதை படிச்சுக்கிட்டு போனதால வண்டி மாறி ஏறிட்டேன்ன்னு சொல்லியிருந்தேன், அவ்வளவு தான், உங்களுக்கு இதே பொழப்பா போச்சு, கதை புக் படிக்க ஆரம்பிச்சீங்கன்னா, வெளி உலகத்துல என்ன நடக்குதுன்னு கூட தெரியாம கதைக்குள்ளேயே மூழ்கிடுவீங்களேன்னு ஒரே டோஸ் மழை பொழிஞ்சிருக்கும்.


என்னங்க பண்றது, வீட்டு அம்மணிக்கு அப்படி பயப்படுறதுனால தான், இப்படியெல்லாம் பொய் சொல்ல வேண்டியதாக இருக்கு. 

Friday, November 22, 2013

தலைவா திரைப்பட அனுபவம் – அமலாபால் “அண்ணா” என்று சொன்னது


நானும், குடும்பத்தை கூட்டிக்கிட்டு வந்த இன்னொரு நண்பரும், கிளம்பலாம்னு நினைச்சு, வீட்டு அம்மணியை கூப்பிட போனா, அவுங்க எங்களை விட ரொம்ப பிசியா இருந்தாங்க. அவுங்க வந்திருந்த அத்தனை பேர் கூடவும் நின்னு போட்டோ எடுத்துக்கிட்டு இருந்தாங்க. டான்ஸ் பாய்ஸ், எடுபிடிங்கன்னு ஒருத்தர் பாக்கி இல்லாம போட்டோ எடுத்துக்கிட்டு இருந்தாங்க. இவுங்க இப்போதைக்கு வர மாட்டாங்க. அதனால, இயக்குனர் பேக்அப் சொன்ன பிறகே போகலாம்னு முடிவு பண்ணி விஜய் அமலாபால் நடனக்காட்சியை படமாக்கிறதை பார்த்துக்கிட்டு இருந்தேன். நான் முன்பு சொல்லியிருந்த மாதிரி முன்னாள் கதாநாயகி காயத்ரி ரகுராம்” இந்த படத்துக்கு இணை இயக்குனராகவும் இரண்டு பாட்டுக்கு நடன இயக்குனராகவும் பணியாற்றியிருக்காங்க. அவுங்க நடன அசைவுகளை சொல்லிக்கொடுத்தவுடனே, விஜய் எந்த வித தப்புமில்லாம ஆடிடுறாரு, ஆனா அவர் கூட ஆடுற அந்த டான்ஸ் பாய்ஸும் சரி, அமலாபாலும் சரி, ஒழுங்கா ஆடமா, நிறைய டேக் வாங்கினாங்க. மணி கிட்டதட்ட 7.30 மணியாயிடுச்சு, அப்பத்தான் இயக்குனர் பேக்அப் சொன்னாரு. இந்த நடன காட்சியை, அவுங்க கீழே நின்னு எடுத்துக்கிட்டு இருந்தாங்க, நாங்க எல்லாம் மேலே நின்னு பார்த்துக்கிட்டு இருந்தோம். ஐந்தரை,ஆறு மணிக்கு எல்லாம் கூட்டம் சேர ஆரம்பிச்சுடுச்சு. நம்ம மக்களுக்கு எப்படி தான் தெரியுமோ, தெரியலை, பொட்டானிக்கல் கார்டன் உள்ளுக்குள்ள நடக்கிற சூட்டிங்கை பார்க்க வந்துட்டாங்க. இதுல கொடுமை என்னன்னா, நாங்க மதியம் 2.30 மணிக்கு நடிக்கிறதுக்காக சூட்டிங் ஸ்பாட்டை தேடிக்கிட்டு அந்த பொட்டானிக்கல் கார்டன்ல போயிக்கிட்டு இருக்கோம். அப்ப எங்க கூட 5 கல்லூரி மாணவ மாணவியர் கல்லூரிக்கு மட்டம் போட்டுட்டு எங்களோட நடந்து வந்தாங்க. இப்படி நிறைய பேர் இங்க சூட்டிங் நடக்கிறதை தெரிஞ்சுக்கிட்டு வந்துட்டாங்க. இயக்குனர் பேக்அப்ன்னு சொன்னவுடனே, நடிகர் விஜய் கீழேருந்து மேல வர ஆரம்பிச்சாரு. உடனே அவருக்கு பாதுகாவலாக அவருக்கு பக்கத்துல ரெண்டு பேர் வர ஆரம்பிச்சாங்க. மேல வந்தவரு எங்களை பார்த்ததும் சிரிச்சாரு. நாங்க அவர் கிட்ட போட்டோ எடுக்கணும்னு சொன்னவுடனே, எடுத்துக்கலாமேன்னு சொல்லி, பக்கத்துல இருந்தவங்களை பார்த்தாரு. உடனே அந்த ரெண்டு பெரும் கொஞ்சம் தள்ளி போய் நின்னுக்கிட்டாங்க. நான் உடனே என்னோட செல் போனை நண்பரிடம் கொடுத்துட்டு, குடும்பத்தோட அவர் பக்கத்துல போய் நின்னு போடோ எடுத்துக்கிட்டோம். அப்ப பெரிய மகாராணி கீழே நின்னாங்க. சின்ன மகாரணியை நான் தூக்கி வசுக்கிட்டு இருந்தேன். விஜய் கீழே குனிஞ்சு, பெரிய மகாரணியை தூக்கிக்கிட்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்தாரு. 



அப்புறம் நண்பரும் அவரோட குடும்பமும் நின்னு போட்டோ எடுத்துக்கிட்டாங்க. நாங்க போட்டோ எடுக்கிறதை பார்த்து உடனே மக்கள் எல்லாரும் வரிசையா நிக்க ஆரம்பிச்சுட்டாங்க. விஜய்யும் அப்புறம் கொஞ்ச பேருக்கு போட்டோவிற்கு போஸ் கொடுத்துட்டு போயிட்டாரு. நாங்க அப்புறம் இயக்குனர், உதவி இயக்குனர் கிருஷ்ணா, காயத்ரி ரகுராம் இவுங்க கூட எல்லாம் நின்னு போட்டோ எடுத்துக்கிட்டோம். 




இவுங்களோட இருந்ததுனால அமலாபலை பார்க்காம விட்டுட்டோம். சரி பரவாயில்லை இன்னொரு நாள் அவுங்களோட போட்டோ எடுத்துக்கலாம்னு முடிவு பண்ணி கிளம்பி நடக்க ஆரம்பிச்சோம். பார்த்தா அங்க ஒரு கூட்டம் அமலாபால் கூட நின்னு போட்டோ எடுத்துக்கிட்டு இருக்கு. ஆஹா, இங்க தான் இருக்காங்களா, இன்னைக்கே இவுங்களோடையும் போட்டோ எடுத்துடனும்னு கங்கணம் கட்டிக்கிட்டு அவுங்க பக்கத்துல போனோம். நானும் போட்டோ எடுக்கிறதுக்காக வந்து நின்னதை பார்த்த அமலாபால், உடனே என்கிட்ட, “அண்ணா, நம்க்கு இன்னும் சூட்டிங் முடியலை, நாளைக்கும் நாம பார்த்துப்போம் அண்ணா” அப்படின்னாங்க. என்னது!! அண்ணனான்னு எனக்கு ஒரு நொடி இதயமே நின்னுடுச்சு. இப்பத்தான் இவுங்களை ரூட் விட்டுக்கிட்டு இருக்கோம், அதுக்குள்ள அண்ணான்னு சொல்றாங்களேன்னு ஒரு மாதிரியாயிடுச்சு. இதுல எங்க வீட்டு அம்மணி என்னைய பார்த்து ஒரு நக்கலா சிரிச்சாங்க பாருங்க, அது இன்னும் ரொம்பவும் கொடுமையாயிடுச்சு. சரி, பரவாயில்லை இவுங்களோட ரெண்டு மடங்கு வயசாகுது நமக்கு, அங்கிள்ன்னு சொல்லாம, அண்ணான்னு சொன்னாங்களேன்னு மனசை தேத்திக்கிட்டு, “எனக்கு பரவாயில்லை, என்னோட மனைவிக்காக தான் இப்ப போட்டோ எடுத்துகிறேன்ன்னு சொல்லி, வீட்டு அம்மணியையும், ரெண்டு மாகாராணிகளையும் அவுங்க பக்கத்துல நிக்க சொல்லி போட்டோ எடுத்தேன். 


இதுல பெரிய மாகாராணி ஒரே அழுகை, நான் தான் அந்த அக்காவை போட்டோ எடுக்கணும்னு. நான் அது எல்லாம் எடுக்க முடியாதுன்னு சொன்னேன். உடனே இன்னமும் அழ ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் அமலாபால், “எதுக்கண்ணே அவுங்களை அழ வைக்கிறீங்க, அவுங்க எடுக்கட்டும்னு சொல்லி, அவுங்களுக்காக குனிஞ்சு போட்டோவுக்கு போஸ் கொடுத்தாங்க. 


அப்புறம் தான் பெரிய மகாரணிக்கு சிரிப்பே வந்துச்சு. கடைசில நாங்க ஸ்டேஷன் வந்து train எடுத்து ஒரு வழியா வீட்டுக்கு வந்தோம். மறு நாள் வெள்ளிக்கிழமை ஆஃபிஸ் போயிட்டு வீட்டுக்கு வந்தா பிறகு மறுபடியும் 10 மணிக்கு sms, அதாவது மறு நாள் காலையில 10மணிக்கு பழைய இடத்துக்கு (அதாவது எங்க நடன வகுப்பு காட்சியை எடுக்கிறேன்னு சொல்லி, நாங்க லீவு போட்டு காத்திருந்த இடத்துக்கு) வந்துடுங்க. அது வந்து நடனம் கத்துக்கிற மாதிரி காட்சி, அதனால அதுக்கேத்த மாதிரி, tshirt, phant எடுத்துக்கிட்டு வாங்கன்னு மெசேஜ்.  

அந்த நடன வகுப்பு காட்சியை எப்படி எடுத்தாங்கன்னு அடுத்த பதிவுல சொல்றேன்.

தலைவா திரைப்பட அனுபவம் – கதாநாயகிக்கே சிக்கன் சாப்பாடு கிடையாது !!!!

- இன்னும் சொல்கிறேன்


Tuesday, November 19, 2013

இந்த காலத்து குழந்தைகள்


இந்த காலத்துல பிறக்கிற குழந்தைகள் எல்லாம் ஐ-போன், ஐ-பேட், டேப்லேட் போன்றவைகளை பற்றி அம்மாவின் கருவறைக்குள்ளேயே கரைத்துக் குடித்து விட்டு தான் வெளியே வருகிறார்கள் போல. அந்த அளவுக்கு அவர்களின் அறிவு வளர்ச்சி அடைந்து இருக்கிறது. எனக்கு தெரிந்த நண்பர் ஒருவரின் ஒன்றரை வயது குழந்தை, அவருடைய ஐ-போனை ஆண் பண்ணி, பிறகு அன்-லாக் பண்ணி, ஒரு விரலால் தட்டிக்கொண்டு இருக்கும். இன்னொரு நண்பரின் மூன்று வயது குழந்தை, ஐ-போனில் இருக்கும் விளையாட்டை தானாகவே திறந்து விளையாடும். இவர்களை எல்லாம் பார்க்கும்போது எனக்கு மிகவும் ஆச்சிரியமாக இருக்கும். எப்படி இவர்களுக்கு இந்த வயதிலேயே இவ்வளவு அறிவு திறன் இருக்கிறது. இவர்களின் இந்த அபிரிதமான அறிவு வளர்ச்சி எப்படி வருகிறது என்று யோசிக்க தோணும். இவர்களின் இந்த வளர்ச்சி ஒரு புறம் இருந்தாலும், இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பெற்றோர்களாகிய நாம் பதில் சொல்லி மாள முடியாது. அதிலும் அவர்கள் கேட்கும் தர்மசங்கடமான 'அடல்ட் கேள்விகளுக்கு பதில் அளிப்பது என்பது நம்முடைய திறமைக்கு சவால் விடும் காரியமாகும். இவர்கள் கேட்கும் இந்த 'அடல்ட் கேள்விகளுக்கு எப்படி பதில் அளிப்பது என்பது பற்றி ஒரு வார இதழில் வெளி வந்த கட்டுரையை படிக்க நேர்ந்தது.அந்த கட்டுரையில், குழந்தைகள் மன நல மருத்துவர் அந்த மாதிரியான கேள்விகளை மிக அழகாக கையாளலாம் என்று கூறியிருக்கிறார். அதனை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். கண்டிப்பாக இது இளம் பெற்றோர்களுக்கு நன்மையாக இருக்கும் என்று நம்புகிறேன். அவருடைய பதில்களை படியுங்கள்.

''ஃபர்ஸ்ட் நைட்னா என்னம்மா?'' -குழந்தையின் இந்தக் கேள்விக்கு, 'கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் வர்ற முதல் நைட்தான், ஃபர்ஸ்ட் நைட்என்ற சிம்பிளான ஒரு பதில் போதும். சில குழந்தைகள் விடாமல், 'அப்ப என்னம்மா செய்வாங்க?’ என்று கேட்பார்கள். 'அங்கிளும் ஆன்டியும் அதுக்கு முன்ன நேர்ல பேசியிருக்க மாட்டாங்க. அன்னிக்குதான் நிறைய பேசுவாங்க, அவங்களோட லைஃப் பத்தி பிளான் பண்ணுவாங்கஎன்று வயதுக்கு ஏற்றமாதிரி விளக்கம் சொல்லலாம்.

அதேபோல, 'காதல்னா என்ன..?’என்று கேட்டால், 'உனக்கு சாக்லேட், டாய்ஸ் பிடிக்கும்ல. அதேபோல ஒரு அங்கிளுக்கு ஒரு ஆன்டியை பிடிச்சா, அல்லது ஆன்டிக்கு அங்கிளை பிடிச்சா... அது காதல், அன்பு, பிரியம்!’னு சொல்லலாம். இந்தக் கேள்வியை 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கேட்டா, 'ஒரு ஆணுக்கு ஒரு பெண் மீது 25 வயதுக்கு அப்புறம் வர்றதுதான் உண்மையான காதல்!’னு அடிக்கோடிட்டு சொல்லலாம்.

'குழந்தை எப்படிம்மா பொறக்குது?’ - இது அடுத்த கேள்வி. 'கல்யாணம் ஆனவுடனே, அந்த அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கடவுள் குழந்தை கொடுப்பார். அந்தக் குழந்தை 10 மாசமா அம்மா வயித்துக்குள்ள கொஞ்சம் கொஞ்சமா வளரும். அப்புறம் அது பெருசாயிடும், இடம் பத்தாதுல... வயித்துல இருந்து வெளிய வந்துடும்!’ என்று சொல்லுங்கள்.

'எய்ட்ஸ்னா என்னம்மா..?’ என்று கேட்டால், 'ஹெச்..வி-னு ஒரு கிருமியால ஏற்படற நோய். நாம சுத்த பத்தமா இல்லாம இருந்தா, எய்ட்ஸ் நோய் வரும்!’ என்ற அடிப்படை விளக்கம் 10 வயதுவரை போதுமானது.
டி.வி-யில் பார்க்கும் பார் காட்சிகள், பக்கத்து வீட்டுக்காரர் அல்லது உறவுக்காரர் குடித்துவிட்டு சலம்புவதைப் பார்த்து குழந்தைகள் கேள்வி கேட்டால், 'அது கெட்ட தண்ணி. அதைக் குடிச்சா, கெட்ட சந்தோஷம்தான் கிடைக்கும். ஹெல்த் எல்லாம் கெட்டுப்போயிடும். அதனால அதை எப்பவுமே குடிக்கக் கூடாது!’ என்று சொல்லிக் கொடுங்கள்'' என்றார்.

''பொதுவாக குழந்தைகள் தங்கள் பெற்றோர் மற்றும் டீச்சரிடம்தான் முதலில் தங்கள் கேள்விகளை கட்டவிழ்த்துவிடுவார்கள். அதற்கு அவர்களைத் திருப்திப்படுத்தும் விதமாக பதில் சொன்னால்தான், தங்களின் உலகத்தை தொடர்ந்து அவர்கள் உங்களிடம் பகிரப் பழகுவார்கள். ஒருவேளை தங்களுக்குப் பதில் கிடைக்காமல் போனாலோ, பதிலுக்குப் பதிலாக பெற்றோர் டென்ஷன் ஆனாலோ, பக்கத்து வீட்டு அங்கிள், ஆன்டி, டிரைவர் என்று பதில் தேட ஆரம்பிப்பார்கள்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மலிந்து கிடக்கும் இந்தக் காலத்தில், 'ஃபர்ஸ்ட் நைட்னா என்ன அங்கிள்?’ என்று ஏழு வயதுப் பெண் குழந்தை வீட்டு டிரைவரிடம் கேட்பதில் உள்ள விபரீதத்தைப் புரிந்துகொண்டு, குழந்தைகளின் கேள்விகள் எப்போதும் பெற்றோரை நோக்கியே மடை திறக்கும் சூழலை நீங்கள்தான் உருவாக்க வேண்டும்'' என்ற டாக்டர், ''சில குழந்தைகள் ஃப்ரெண்ட்ஸ், பக்கத்து வீடு என்று வெளிப்பழக்கத்தில் சிலசமயம் கெட்ட வார்த்தை கற்று வந்து வீட்டில் பேசுவார்கள். அதைக் கேட்டவுடன் குழந்தையைத் திட்டுவதோ, அடிப்பதோ வேண்டாம். அது பண்பற்ற வார்த்தை என்பதையும், அவ்வாறான வார்த்தைகளைப் பேசுபவர்களை மற்றவர்களுக்குப் பிடிக்காமல் போய்விடும் என்றும் விளக்கமாகச் சொல்லுங்கள். மேலும் குழந்தை யாரிடமிருந்து அந்த வார்த்தையை கற்றுக்கொள்கிறதோ, அவர்களிடம் குழந்தை முன் அதுபோன்ற வார்த்தைகளைப் பேச வேண்டாம் என்று சொல்வதுடன், அவர்களின் பழக்கத்தையும் தவிருங்கள். சக குழந்தைதான் உங்கள் குழந்தைக்கு அந்த வார்த்தைகளைக் கற்றுக் கொடுக்கிறது என்றால், அதன் பெற்றோரிடம் முறையிடுங்கள். தங்கள் பிள்ளை பற்றி சொல்வதை அவர்கள் விரும்பமாட்டார்கள் என்றாலும், சொல்வது உங்கள் கடமை'' என்றார் அழுத்தமாக.

தொடர்ந்தவர், ''அதேபோல ஐந்து வயதுக்குள்ளேயே குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் போன்றவற்றைக் கற்றுத் தர வேண்டும். 13 - 19 வயதிலான காலகட்டம், குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் ரொம்பவே சிக்கலான காலகட்டம். இந்த வருடங்களில் குழந்தைகள், பெற்றோர்கள் எது சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அது வயதின் கோளாறு. அதைப் புரிந்துகொள்ளாமல் மேலும் மேலும் கோபப்பட்டு பெற்றோர்கள் பிள்ளைகளுக்குப் பிடிக்காமல் போகும்படி நடந்து கொள்ளக்கூடாது. அவர்களின் ஹார்மோன் கோபங்களைப் பொருட் படுத்தாமல், அன்பை மட்டுமே தொடர்ந்து தந்து கொண்டிருக்க வேண்டும்'' என்று அழகாக முடித்தார் அந்த மன நல மருத்துவர்.

உண்மையில் இந்த கட்டுரையை படிக்கும்போது, குழந்தைகளின் கேள்விகளுக்கு நாம் எவ்வளவு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று தெரிய வருகிறது. ஒரு நாளைக்கு ஒரு நேரமாவது, நாம் நம் குழந்தைகளோடு சேர்ந்து உணவு உண்ண வேண்டும். அது பெரும்பாலும் இரவு உணவாக தான் அமையும். அப்படி நாம் நம் குடும்பத்தாரோடு சேர்ந்து உணவு உண்ணும்போது, அன்றைக்கு நடந்த நிகழ்ச்சிகளை நாம் பகிர்ந்து கொண்டால், குழந்தைகளும், அவர்களுக்கு நடந்த நிகழ்ச்சிகளை நம்மிடம் மறைக்காமல் பகிர்ந்து கொள்வார்கள். இப்படி பகிர்ந்துக் கொள்ளுவதால் நாம் தான் அவர்களுக்கு உற்ற நண்பர்களாக அதாவது “Best Friend” ஆக இருப்போம். என் தாய் அடிக்கடி சொல்லுவார்கள், ஒரு குழந்தைக்கு உண்மையான ரோல்மாடல் அந்த குழந்தையின் பெற்றோர் தான் என்று. அதனால் தான், பெற்றோர்களாகிய நாம் சரியாக நடந்து கொண்டால், குழந்தைகளும் நல்ல குழந்தைகளாக வளருவார்கள்.


“எல்லா குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கயிலே”.  

Monday, November 18, 2013

பெண்ணிற்குள் ஆண்

ஆணும் பெண்ணும்
சரிசமம் என்றேன் நான்
ஆனால் நீயோ
இல்லை!! இல்லை!!
ஆண் தான் உசத்தி
"ஜான் பிள்ளையானாலும்
அவன் ஆண் பிள்ளை"
என்று சொல்லியிருக்கிறதை
பார் என்றாய். நானோ,
ஆண் பெண்ணிற்குள் தான்
இருக்கிறாள் என்பதை
ஆங்கிலத்தில் "SHE"க்குள்
தான் "HE" இருக்கிறது
என்பதையும்
"WOMAN"க்குள் தான்
"MAN" இருக்கிறது
என்பதையும் எவ்வளவு
அழகாக உணர்ந்து
சொல்லியிருக்கிறார்கள்,
இதை எப்பொழுது தான்
இந்த ஆண்கள்
புரிந்து கொள்வார்களோ
என்று எண்ணி வருந்தினேன்!!!

Friday, November 15, 2013

உலகத் தமிழ் கம்பராமாயண ஆய்வுக் கருத்தருங்கம் – 2014


உலகத் தமிழ் கம்பராமாயண ஆய்வுக் கருத்தருகம் – 2014
(International Research Conference " Kamban in all spheres march 15&16- 2014” Organised by Kamban Tamil Research Centre Karaikkudi)

என்னடா, அடுத்த வருடத்திற்கு தமிழ் சம்பந்தமான ஒரு மாநாடும் கண்ணில் தென்படவில்லையே என்று யோசித்துக்கொண்டிருக்கும்பொழுது தான், நண்பர் திரு. அன்பு ஜெயா “உலகத் தமிழ் கம்பராமாயண ஆய்வுக் கருத்தருங்கம் – 2014” என்ற ஒரு மின்னஞ்சலை எனக்கு அனுப்பினார். ஆஹா, அடுத்த ஒரு ஆய்வுக் கட்டுரையை படைப்பதற்கு நேரம் வந்தாச்சு என்று சந்தோசப்பட்டேன். (உனக்கு கம்பனைப் பற்றி என்ன தெரியும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது, நீங்கள் என்ன கேட்பது!, அந்த கேள்வி எனக்குள்ளேயே இருக்கு. சரி, இந்த கட்டுரையை எழுதுவதற்காகவாது, கொஞ்சம் கம்பராமாயணத்தை படிக்கலாமே என்று இருக்கிறேன்)

 




 

Thursday, November 14, 2013

தமிழ் பாடம் - சிறு குழந்தைகளின் சிறிய நாடகம்

வெளிநாடுகளில் வாழும் நம் தமிழ் குழந்ததகள் ஆங்கிலத்தத தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அது அவர்களின் தவறில்லை. ஏனென்றால் அவர்கள் வளர்கின்ற நாடு, ஆங்கில மொழி பேசும் நாடாகும். ஆனால் அவர்கள் நம் தாய் மொழியான தமிழை மறக்காமல் இருப்பதற்கு, அவர்களை வீட்டிலும், நம் நண்பர்களிடமும் தமிழிலேயே உரையாட வற்புறுத்த வேண்டும். மேலும் அவர்களுக்கு தமிழில் எழுத படிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். இவையெல்லாம்  பெற்றோர்களாகிய நமது கடமை. ஆனால் என்னதான் நாம் வீட்டில் அவர்களுக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தாலும் , அவர்கள் அதை உள்வாங்கி கற்றுக்கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.  இதில் அரிதாக சில குழந்ததகள் விதி விலக்காகும். மேலும் நாமும் கற்றுக்கொடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதனால் அவர்களுக்கு காலப்போக்கில் தமிழ் எழுதப்படிக்க தெரியாமல் போய்விடுகிறது.  இங்கு ஆஸ்திரேலியாவில் நிறைய தமிழ் பள்ளிக்கூடங்கள்  தமிழை சொல்லிக்கொடுக்கும் பணியை பல வருடங்களாக நடத்தி வருகிறது. மேலும் இங்கு 12ஆம் வகுப்பில் தமிழையும் ஒரு பாடமாக எடுத்து இரண்டு யூனிட்டுகள் எழுதுவதற்கும் அரசாங்கம் அனுமதி அளித்திருக்கிறது. தமிழ் படிப்பதற்கு இவ்வளவு வசதிகள் இருந்தும், நிறைய தமிழ் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்ப மறுக்கிறார்கள்.
 
அந்த மாதிரியான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதற்காக, அடியேன் இந்த நாடகத்தை எழுதினேன். ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்கின்ற ஒரு தமிழ் குழந்தை வீட்டில் எவ்வாறு தமிழ் கற்றுக்கொள்கிறது என்பதை நகைச்சுவையோடு இங்கு இரண்டு மேடைகளில் நடித்துக்காட்டியவர்கள்  "பாலர் மலர் ஹோல்ஸ்வோர்தி" தமிழ் பள்ளியின் மலரும் மொட்டுக்கள்" . இந்த நாடகத்தில் நடித்த அனைத்து குழந்தைகளுமே 4வயது முதல் 8வயது வரை உள்ள குழந்தைகள்.
 





 
 கதாப்பாத்திரங்கள்
தந்தையாக – வருண்
தாயாக  – சவிதா
மகளாக – ஓவியா
தமிழ் சொல்லிக்கொடுப்பவராக  – இலக்கியா
தமிழ் பள்ளி முதல்வராக – அக்க்ஷித்


சவிதா: நம்ம பொண்ணுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கிறீங்களா?

வருண்: நான் சொல்லிக்கொடுத்தா, அவ கத்துக்க மாட்டேங்கிறா. அதனால  இந்தியாவிலிருந்து போன வாரம் வந்த இலக்கியா சொல்லித்தறேன்னு சொல்லியிருக்காங்க. பார்க்கலாம், அவுங்க கிட்டையாவது தமிழ் கத்துக்கிறாளான்னு .

(இலக்கியா வருகிறார்)

இலக்கியா: வணக்கம். நல்லா இருக்கீங்களா?

சவிதா: நல்லா இருக்கோம். எங்க பொண்ணுக்கு நல்லா தமிழ் சொல்லிக்கொடுங்க.

இலக்கியா: நல்லா சொல்லிக்கொடுக்கிறேன்.

வருண்: ஓவியா, ஓவியா

(ஓவியா வருகிறார்)

ஓவியா: What Dad?

வருண்: இவுங்க தான் உனக்கு தமிழ் சொல்லி கொடுக்க போறாங்க.

ஓவியா:  Is it! Hey, I am Oviya. How are you? What’s your name?

இலக்கியா: என் பேரு இலக்கியா. நான் உங்களுக்கு முதல்ல அ,,,ஈ சொல்லிக்கொடுக்க போறேன்.

ஓவியா: OK.

இலக்கியா: அ,,  ,,  ,,  ,,  ,  ,

ஓவியா: Stop. Stop. You are Wrong.

இலக்கியா: தப்பா, என்ன தப்பு

ஓவியா: you told only ஒன் ஐ. But there are 2 ’s.  ,ஐய்!!!

இலக்கியா: ஒரு ஐ தான் இருக்கு.

ஓவியா: no no, see  ,,  ,,  ,,  ,  so ,ஐய்!!!

இலக்கியா: ஐயோ! சரி, இதை சொல்லுங்க. அ-அம்மா

ஓவியா: அ-அம்

இலக்கியா: அம் இல்லை, அம்மா, சொல்லுங்க அம்மா.

ஓவியா: no,no am only. we tell மம்மிய மாம், daddyயை dad. So, அம்.

இலக்கியா: ஐயோ,ஐயோ,(தலையில் கை வைத்துக்கொள்கிறார்). சரி, பரவாயில்லை, உங்களுக்கு காய், பழங்கள் எல்லாம் சொல்லித்தறேன்.

 ஓவியா: OK

இலக்கியா: வாழக்காய் – வாழைப்பழம்

           மாங்காய் – மாம்பழம்

ஓவியா:  I will tell one.

இலக்கியா: சொல்லுங்க

ஓவியா: தேங்காய் – தேங்காப்பலம்

இலக்கியா: தேங்காய் பழம் எல்லாம் இல்லை.

ஓவியா: Why இல்லை, வாலக்காய் – வாலப்பலம், then தேங்காய் – தேங்காப்பலம் correct தான்.  

இலக்கியா: (கோபமாக) அப்படி எல்லாம் கிடையாது.

ஓவியா: mum,dad(கோபமாக கத்துகிறார்)

(வருனும்,சவிதாவும் ஓடி வருகிறார்கள்)

வருண்/சவிதா: என்னம்மா,

ஓவியா: She doesn’t know tamil . She is telling wrong. I don’t want to learn.

(கோபமாக எழுந்து போகிறார்)

இலக்கியா: உங்க பொண்ணுக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தா, எனக்கு தமிழ் மறந்துடும்,

சவிதா: என்னங்க, இப்படி ஆயிடுச்சு. எப்படிங்க இவ, தமிழ் கத்துப்பா.

வருண்: எனக்கும் அதான் ஒண்ணும் புரியலை.

(அப்போது அக்க்ஷித் வருகிறார்)

வருண்: வாங்க அக்க்ஷித். எப்படி இருக்கீங்க?

அக்க்ஷித்: நான் நல்லா இருக்கேன். தமிழ் கத்துக்கிறது பத்தி பேசிக்கிட்டு இருந்தீங்க போல?

வருண்: ஆமாம். என் பொண்ணு தமிழ்ல பேசவே மாட்டேங்கிறா, கத்துக்கவும் மாட்டேங்கிறா.

அக்க்ஷித்: அதெல்லாம் கத்துக்க வச்சிடலாம்.

இலக்கியா:  எங்க! இவுங்க பொண்ணுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தா நமக்கு தான் தமிழ் மறந்து போயிடும்.

அக்க்ஷித்: ஆமா, இவுங்க யாரு?

சவிதா: இவுங்க இலக்கியா,

வருண்: இவுங்களும் உங்களை மாதிரி தமிழ் மேல ரொம்ப ஆர்வம் உள்ளவங்க.

(அக்க்ஷித்தும், இலக்கியாவும் வணக்கம் சொல்லிக்கொள்கிறார்கள்)

அக்க்ஷித்: இலக்கியா, நீங்க எங்க தமிழ் பள்ளியில ஆசிரியரா சேர்ந்துடுங்களேன். நான் அங்க தான் முதல்வரா இருக்கேன்.

இலக்கியா: அப்படியா, (யோசிக்கிறார்) சரி, நான் சேர்ந்துடுறேன்.

அக்க்ஷித்: கவலைப்படாதீங்க வருண், பேசாம உங்க மகளை பாலர் மலர் ஹோல்ஸ்வோர்தி தமிழ் பள்ளியில சேர்த்துடுங்க. அங்க அவள் நல்லா தமிழ் கத்துப்பா.

சவிதா: எப்படியோ, அவ தமிழ் கத்துக்கிட்டாபோதும்.  

(ஒரு வருடத்திற்கு பிறகு)

ஓவியா: வணக்கம். என் பேர் ஓவியா சம்பந்தம். நான் தமிழ் பள்ளியில படிக்கிறதுனால, தமிழை சுலபமா கத்துக்கிறேன். வீட்டுலேயும் தமிழ்ல தான் பேசுறேன்.

வருண்/சவிதா: அப்பாடா! இப்பத்தான் எங்களுக்கு நிம்மதியா இருக்கு.

பின் குறிப்பு:  இந்த நாடகத்தை சென்றவாரம் இங்குள்ள SBS வானொலிக்காக பதிவு செய்துவிட்டு வந்தோம்.
இந்த நாடகத்தில் மகளாக நடித்தது அடியேனின் மூத்த மகாராணியாகும்.
 

Friday, November 1, 2013

தலை தீபாவளி - நாடகம்

அனைவருக்கும் என்னுடைய இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.  போன வருட தீபாவளியை நான் தனிமையில கொண்டாடினேன். ஆனா இந்த வருடம் அதுக்கு நேர் மாறாக குடும்பத்தோட கொண்டாடப்போறேன்.  அதுவும் இந்த தீபாவளி எனக்கு கொஞ்சம் விஷேஷமானதும் கூட. ஏன்னா, 15 வருடத்துக்கு முன்னாடி  தலை தீபாவளியை மாமனார் வீட்டோட கொண்டாடினேன். அதற்கு பிறகு, இந்த வருடம் தான் மாமனாரும், மாமியாரும் எங்க வீட்டில எங்களோட தீபாவளியை கொண்டாட போறாங்க. தலை தீபாவளின்னு சொன்னவுடன் தான் போன வருடம் நான் எழுதி, இங்க சிட்னியில் மேடையேற்றிய "தலை தீபாவளி" நாடகம் நியாபகத்துக்கு வருது. அதனால அந்த நாடகத்தை நீங்கள் படிப்பதற்காக இங்கே பதியிறேன்.


தலை தீபாவளி

கதாபாத்திரங்கள்:

  1. ஈஸ்வரன் – மதுரையில் வசிப்பவர்
  2. பார்வதி   – ஈஸ்வரனின் மனைவி
  3. ஆதித்தன் – ஈஸ்வரனின் மருமகன்
  4. ஆராதனா – ஈஸ்வரனின் மகள்
  5. கபிலன்   – ஆதித்தனின் நண்பன்
  6.  முகிலன்  – ஆதித்தனின் மருமகன்
  7. கயல்விழி – ஆதித்தனின் மகள்

முன்னுரை:

இந்த நாடகம் ஒரு குடும்ப நாடகம். இரண்டு தலைமுறையினர் எப்படி தலை தீபாவளியை கொண்டாடுகின்றனர் என்பதை நகைச்சுவையோடு சொல்லப்பட்டிருக்கிறது. மதுரையில், ஈஸ்வரனும், பார்வதியும் வசிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு பெண் ஆராதனா. அவளுக்கு 8 மாதங்களுக்கு முன்பு தான் ஆதித்யனுக்கு திருமணம் செய்து, மெட்ராஸுக்கு அனுப்பிவைத்தார்கள். இனி நடப்பதை பாருங்கள்.

காட்சி – 1:

இடம் - (மதுரை – ஈஸ்வரன் வீடு)
காலம் – 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்.

கதாப்பத்திரங்கள் – ஈஸ்வரன், பார்வதி,

(ஈஸ்வரன் பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறார்).
ஈஸ்வரன்: பாரு, பாரு, கொஞ்சம் காபி கிடைக்குமா?

பார்வதி: இந்த காப்பிக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. ஒரு நாளைக்கு எத்தனை தடவை தான் காப்பி குடிப்பீங்களோ!. ஆமா, ரிட்டையர் ஆகி வீட்டுக்குள்ள, சும்மாதானே இருக்கீங்க. இந்த முறுக்கு மாவை கொஞ்சம் பிழிஞ்சு கொடுக்கிறதுக்கு என்னவாம்?
ஈஸ்வரன்: ஏண்டி, இவ்வளவு பெரிய உருவத்தை வச்சுக்கிட்டு உன்னாலையே பிழிய முடியலைன்னா, என்னால மட்டும் எப்படி பிழிய முடியும்.

பார்வதி: என்னைய மாதிரி உங்களால ஆக முடியலைன்னு, உங்களுக்கு பொறாமை. எப்பவுமே மனசுல வஞ்சனை இல்லாம இருந்தாதான் உடம்பு நல்லா வளரும்.
ஈஸ்வரன்: அப்ப, நான் என்ன கெட்டவன்னு சொல்றியா?

பார்வதி: உங்களை, அப்படி எல்லாம் நான் சொல்லுவேனா. பொம்பளை நானே, என்னைக்காவது உங்க அப்பா அம்மாவைப் பத்தி குறை சொல்லியிருக்கேனா? ஆனா, நீங்க எப்ப பாரு, எங்கப்பாவையே குறை சொல்லிக்கிட்டு இருக்கீங்க.
ஈஸ்வரன்: ஏண்டி, உங்கப்பா சொன்ன சொல்லை காப்பாத்தி இருந்தாருன்னா, நான் ஏன் அவரை குறை சொல்லப் போறேன். தலை தீபாவளிக்கு போடுறேன்னு சொன்ன மோதிரத்தை, அடுத்த தீபாவளிக்கு போடுறேன்னு சொல்லி சொல்லியே, 24 தீபாவளி முடிஞ்சுடுச்சு. இதோ 25வது தீபாவளியும் வரப்போகுது. உங்கப்பா இன்னமும் எனக்கு அந்த மோதிரத்தை போடலை. அப்புறம் நான் உங்கப்பாவை குறை சொல்லாம எப்படி இருக்க முடியும்.

பார்வதி: ஏங்க!!, இன்னமுமா அதை நியாபகம் வச்சிருக்கீங்க? ஏதோ, எங்கப்பாவால போட முடியாம போயிடுச்சு. அதுக்காக நீங்க இப்படி சொல்லிக்காட்டுறது கொஞ்சம் கூட நல்லா இல்லைங்க.
ஈஸ்வரன்: செய்யுறேன்னு சொல்லிட்டு, செய்யலைன்னா, சொல்லித்தானே காட்டுவாங்க. இதுல நாங்க இப்படி பேசக்கூடாதாம். இது எந்த ஊரு நியாயம்.

பார்வதி: நீங்க சொல்லிக்கிட்டே இருங்க. எனக்கென்ன, நான் இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுற போறேன். சரி, சரி, தலை தீபாவளின்னு சொன்னவுடனே தான் எனக்கு நியாபகம் வருது, வர்ற 17ஆம் தேதி தான் தீபாவளி. நம்ம மாப்பிள்ளைக்கு போடுறதுக்கு மோதிரம் வாங்கிட்டீங்களா?
ஈஸ்வரன்: எவடி, இவ. என்னைய என்ன இனா வாயன்னு நினைச்சுக்கிட்டியா, உங்கப்பாவே அவரோட மாப்பிளைக்கு ஒண்ணும் செய்யலையாம், நான் மட்டும் எப்படி என் மாப்பிளைக்கு செய்யுறது.

பார்வதி: அப்ப, மாப்பிளைக்கு மோதிரம் போட மாட்டீங்களா?
ஈஸ்வரன்: மாட்டேன். இத பாரு, துணிமணி எல்லாம் எடுத்துக் கொடுப்போம், போட்டுக்கட்டும். ஆனா, இந்த மோதிரம், அப்புறம் துணிமணி கொடுக்கும்போது, பணம் வச்சுக் கொடுக்கிறது, இதெல்லாம் கிடையவே கிடையாது.

பார்வதி: ஆண்டவா, இந்த மனுசனுக்கு புத்தி ஏன் தான் இப்படி போகுதோ? தீபாவளி அன்னைக்கு என்ன நடக்கப் போகுதோ? பிள்ளையாரப்பா, தீபாவளி நல்ல படியா முடிஞ்சா, உனக்கு ஒரு தேங்காய உடைக்கிறேன்.
ஈஸ்வரன்: அட!அட!, இதுக்கெல்லாம் போயி ஏன்டி கடவுளை கூப்பிடுற. அவருக்கு எவ்வளவோ வேலை இருக்கும். இதுல அவருக்கு லஞ்சம் வேறயா. மனுஷங்களுக்கு லஞ்சம் கொடுத்து கெடுத்தது பத்தாதுன்னு, இப்ப கடவுளுக்கும் லஞ்சம் கொடுக்க ஆரம்பிச்சுட்டீங்களா? இங்கப் பாரு,தீபாவளி அன்னைக்கு எந்தப் பிரச்சனையும் வராது. வந்தாலும் நான் சமாளிச்சுக்குறேன்.

பார்வதி: என்னமோ போங்க, தீபாவளி அன்னைக்கு எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது. அப்படி ஏதாவது வந்துச்சுன்னா, இதோ இந்த மோதிரத்தை கழட்டி, மாப்பிள்ளைக்கிட்ட கொடுத்துடுவேன்.
ஈஸ்வரன்: அப்படி, எதுவும், பண்ணி கிண்ணி, வச்சுறாதேடி. ஆமா இந்த மோதிரத்தை உனக்கு நான் எப்ப போட்டேங்குறதை மறந்துட்டியா?. 

பார்வதி: அது எப்படிங்க மறப்பேன். நம்ம ஆராதனா பொறந்து, நான் ஆஸ்பத்திரில இருக்கும்போது, என்னையும், குழந்தையையும் பார்க்க வந்த நீங்க, ஆசை ஆசையா எனக்கு போட்ட மோதிரமாச்சே.
ஈஸ்வரன்: மறக்காம நியாபகம் வச்சிருக்க. அப்புறம் எப்படிடி அதை மாப்பிள்ளைக்கிட்ட கொடுப்பே?

பார்வதி: அன்னைக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்து, உங்களால சமாளிக்க முடியாலைன்னா, இது தான் அந்த பிரச்சனைக்கு தீர்வு. இதை நியாபகம் வச்சுக்கிட்டு நடந்துக்குங்க. (போகிறாள்)
ஈஸ்வரன்: இப்ப நான் கடவுளை கூப்பிடணும் போல இருக்கே. ஆண்டவா, தீபாவளி அன்னைக்கு மாப்பிள்ளை எந்த பிரச்சனையும் பண்ண கூடாது. எல்லாம் நல்ல படியா முடிச்சுக் கொடுப்பா.

 
காட்சி – 2:
 

இடம் - (சென்னை – ஆதித்தன் வீடு)
கதாப்பத்திரங்கள் – ஆதித்தன், கபிலன்,

(ஆதித்தன் பொன்னியின் செல்வன் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறான். அப்போது கபிலன் உள்ளே வருகிறான்)
ஆதித்தன்: வா, கபிலா. எப்படி இருக்க? உட்காரு.

கபிலன்: நான் நல்லா தான் இருக்கேன் ஆதித்தா. ஆமா , என்ன பொன்னியின் செல்வனா படிச்சுக்கிட்டு இருக்க? எத்தனை தடவை தான் அதை படிப்ப?
ஆதித்தன்: எத்தனை தடவை படிச்சாலும், அலுக்காத ஒரு நாவல்னா, அது இது தான். நீ தான் ஒரு தடவை கூட இதை படிக்கலையே?

கபிலன்: நீயும் நிறைய தடவை சொல்லிட்ட, சரி, இன்னைக்கு கொடு, நான் படிச்சுப் பார்க்குறேன். ஆமா, எங்க தங்கச்சிய காணோம்?
ஆதித்தன்: நாம தான் பட்டாசு எல்லாம் வாங்கிக்கிட்டு மாமனார் வீட்டுக்கு போகனுமாமே. எனக்கு இந்த பட்டாசுன்னாலே அலெர்ஜி ஆச்சே, அதான், அவ வாங்க போயிருக்கா. ஆமா, எங்க உன் வீட்டில ஆள காணோம்?

கபிலன்: பக்கத்து வீட்டு மாமிக்கு, ஏதோ புடவை எடுக்கணுமாம், அதான் இவளையும் கூட்டிக்கிட்டு போயிருக்காங்க.
ஆதித்தன்: சரி, இந்த வருஷம் நம்ம ரெண்டு பேருக்குமே தலை தீபாவளி. நீ எத்தனை நாள் லீவு போட்டிருக்க?

கபிலன்: நான் 4 நாளு லீவு போட்டிருக்கேன்.
ஆதித்தன்: என்னது 4 நாளா! அவ்வளவு நாள் எல்லாம் மாமனார் வீட்டில போய் இருக்க கூடாதுடா. அப்புறம் நம்ம prestige என்னாகுறது? நான் பாரு ரெண்டே நாள் தான் லீவு போட்டிருக்கேன்.

கபிலன்: இல்லடா, தலை தீபாவளிக்கு கூப்பிடுறதுக்காக மாமனார் வந்தபோது, “மாப்பிள்ளை நாலைந்து நாள் லீவு போட்டுக்கிட்டு வாங்க. தீபாவளி அன்னைக்கு ரிலீஸ் ஆகுற மைக்கேல் மதன காமராஜன் படம் போய் பார்க்கலாம். அப்புறம் நல்லா ரெஸ்ட் எடுத்துக்கிட்டு போங்கன்னு சொன்னாருடா.
ஆதித்தன்: அடப்பாவி, படத்துக்கு எல்லாம் வேற போறீங்களா?

கபிலன்: ஆமாண்டா, அப்புறம் எனக்கு மோதிரம் போடுறதுக்கு விரல் அளவு எல்லாம் எடுத்துக்கிட்டு போனாங்க.
ஆதித்தன்: விரல் அளவு எல்லாம் எனக்கு எடுக்கவேயில்லையே!.

கபிலன்: உன் விரல் ரொம்ப சின்ன விரல் இல்ல, அதுனால அவுங்களுக்கே தெரியுமா இருக்கும். ஆமா, என்ன மோதிர விரல்ல பிளாஸ்திரி போட்டிருக்க?
ஆதித்தன்: அது வேற ஒண்ணும் இல்ல, நீ தான் சொன்னியே, என் விரல் ரொம்ப சின்னதா இருக்குதுன்னு. அதனால தேள் கடிச்சிடுச்சுன்னு சொல்லி, பிளாஸ்திரி போட்டிருக்கேன். அப்பதானே பெரிய மோதிரமா போட முடியும்.  

கபிலன்: அட பாவி, இப்படியெல்லாம் வேற யோசிக்கிறியா? பெரிய மோதிரம்னா உனக்கு ரொம்ப லுசா இருக்குமே?
ஆதித்தன்: மோதிரத்துல நூல் சுத்தி போட்டுக்க வேண்டியது தான்.

கபிலன்: ஏன்டா, உனக்கு இந்த வேண்டாத வேலை?
ஆதித்தன்: அதுக்கில்ல மாப்ள, நமக்கு தான் ஹிந்தி தெரியாது. எப்பவாது தேவைப்பட்டா, அந்த மோதிரமாவது போய் சேட்டு வீட்டில ஹிந்தி படிக்கட்டுமே. அப்ப மோதிரம் பெருசா இருந்தா தானே நமக்கு நல்லா இருக்கும்.

கபிலன்: கஷ்டம்டா சாமி. மாமனாருக்கு மொட்டை போடுறதுக்கு எப்படியெல்லாம் யோசிக்கிற. ஆமா, போன வாரம் ஆபிஸுக்கு ஒரு நாள் லீவு போட்டியே, இப்படியெல்லாம் யோசிக்கிறதுக்கு தான் லீவு போட்டியா?
ஆதித்தன்: சும்மா, கிண்டல் பண்ணாதடா.

கபிலன்: சரி, உனக்கு, தலை தீபாவளின்னு ஏன் பேர் வந்துச்சு தெரியுமா?
ஆதித்தன்: அதான், நீ சொல்லிட்டியே, மாமனாருக்கு மொட்டை போடுறதுக்கு எப்படி எல்லாம் யோசிக்கிறேன்னு. மாமனார் தலையை மொட்டை அடிக்கிறதுனால தான் , அதுக்கு தலை தீபாவளின்னு பேர் வந்திருக்கு.

கபிலன்: ச்சி! சும்மா காமெடி பண்ணாதே. கல்யாணம் ஆகி, முதல் தீபாவளியை கொண்டாடுறதுனால, அதுக்கு தலை தீபாவளின்னு பேரு.

ஆதித்தன்: அப்ப ஏன் தலை பொங்கல்ன்னு சொல்றதில்லை?
கபிலன்: டேய், நீ இப்படி எல்லாம் விதண்டாவாதமா கேட்டா, நான் எப்படி பதில் சொல்றது?

ஆதித்தன்: உனக்கு தெரியலைன்னு சொல்லு. பொதுவா நம்ம கலாச்சாரத்துல ஆண்களோட ஆதிக்கம் தான் அதிகமா இருக்கும்.
கபிலன்: ஆமா இல்ல! கல்யாணம் முடிஞ்சவுடனே, பெண்கள் தான் அவுங்க பிறந்த வீட்டை விட்டுட்டு, கணவனோட வீட்டுக்கு வராங்க. ஆண்கள் யாரும் அந்த மாதிரி போறதில்லை இல்லை.

ஆதித்தன்: ஆமா. பையன் வந்து எதுக்கும், பொண்ணு வீட்டில போய் தங்க மாட்டான். எல்லா விஷேசத்தையும், பையன் வீட்டுல தான் கொண்டாடுவாங்க. பொண்ணு வீட்டுக்கும் ஒரு முக்கியத்துவம் கொடுக்கணும்னு தான் கல்யாணம் முடிஞ்சு வர்ற முத தீபாவளியை தலை தீபவாளின்னு சொல்லி பொண்ணு வீட்டுக்கு போய் கொண்டாடுறோம்.
கபிலன்: அட, பரவாயில்லயே, உனக்கு மாமானரை எப்படி மொட்டை போடுறதுன்னு தான் தெரியும்னு நினைச்சேன். இதெல்லாம் கூட தெரிஞ்சிருக்கு.

ஆதித்தன்: நீ வேற, இதெல்லாம் நான் மத்தவங்ககிட்டேருந்து கேட்டு தெரிஞ்சுக்கிட்டது. ஆனா, இது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியாது.
கபிலன்: உண்மையோ இல்லையோ, ஆனா காரணம் நல்லாதான் இருக்கு. சரிடா, நான் கிளம்புறேன். ரொம்பவும் உன் மாப்பிள்ளை முறுக்கு எல்லாம் காட்டாம ஒழுங்கா தலை தீபாவளியை முடிச்சுட்டு ஊர் வந்து சேரு.

ஆதித்தன்: உன்னுடைய அறிவுரைக்கு ரொம்ப நன்றி. இந்தா, இந்த புக் கேட்டியே. பொறுமையா படிச்சுட்டு, அடுத்த பாகத்தை வாங்கிக்கோ.  

காட்சி – 3:
 
இடம் - (மதுரை – ஈஸ்வரன் வீடு)
கதாப்பத்திரங்கள் – ஈஸ்வரன், பார்வதி, ஆராதனா மற்றும் ஆதித்தன்

பார்வதி: ஏங்க, இன்னைக்கு 4 மணிக்கு, பாண்டியன் எக்ஸ்பிரஸ்ல தான் பொண்ணும், மாப்பிளையும் வறேன்னு சொல்லியிருக்காங்க. நீங்க ஸ்டேஷனுக்கு போய் அவுங்களை கூட்டிக்கிட்டு வந்துடுங்க.
ஈஸ்வரன்: ஒண்ணு பண்றேனே, ஒரு தட்டுல வெத்திலை, பாக்கு வச்சுக் கொடு, நான் துண்டை இடுப்புல கட்டிக்கிட்டு ஸ்டேஷனுக்கு போய் அவுங்களை மரியாதையோடு அழைச்சுக்கிட்டு வரேன்.

பார்வதி: அட, இதுவும் நல்லா இருக்கே, (யோசித்துப் பார்த்து சிரிக்கிறாள்).
ஈஸ்வரன்: என்ன சிரிப்பு வேண்டிகிடக்கு.

பார்வதி: இல்ல, நீங்க துண்டை இடுப்புல கட்டிக்கிட்டு, கைல தாம்பூல தட்டை வச்சுக்கிட்டு பவ்யமா நிக்கிறதை கற்பனை பண்ணிப் பார்த்தேன், ரொம்ப காமெடியா இருந்துச்சா, அதான் என்னைய மீறி சிரிச்சுட்டேன். இருங்க நான் போய் தட்டு, வெத்திலை பாக்கு எல்லாம் ரெடி பண்றேன்.

ஈஸ்வரன்: ஏய், இரு, இரு, நான் ஒரு நக்கலுக்கு சொன்னா, அதுக்கு கண்ணு, காது எல்லாம் வச்சு பாக்குற. அதெல்லாம் நான் போகணும்னு ஒண்ணும் இல்ல. அவுங்களே வந்துடுவாங்க.
(அப்போது ஆராதனாவும், ஆதித்தனும் உள்ளே வருகிறார்கள்)

ஈஸ்வரன்,பார்வதி: வாங்க, வாங்க மாப்ள, வாம்மா ஆராதனா.
(ஆதித்தன் தலையை மட்டும் ஆட்டுகிறான். இந்தாங்க இதுல பட்டாசு இருக்கு. (ஆராதனா பையை பார்வதியிடம் கொடுக்கிறாள்)

ஈஸ்வரன்: மாப்பிள்ளை, பிரயாணம் எல்லாம் சௌகரியமா இருந்துச்சா?.
ஆதித்தன்: எல்லாம் நல்லா இருந்துச்சு மாமா.

(அப்போது பார்வதி சோம்பில் தண்ணி கொண்டுவந்து ஆராதனாவிடம் கொடுக்கிறாள். ஆராதனாவும் அதை ஆதித்தனிடம் தருகிறாள். ஆதித்தனும் குடித்துவிட்டு சொம்பை கீழே வைக்கிறான்)
ஈஸ்வரன் சரி மாப்பிள்ளை, நீங்க டையர்டா இருப்பிங்க. ரூம்ல போய் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுங்க.

(ஆதித்தன் போகிறான்)
பார்வதி: என்னம்மா ஆராதனா, எப்படி இருக்க? மாப்பிள்ளை உன்னைய நல்ல கவனிச்சுக்கிறாரா?

ஆராதனா: ரொம்ப நல்லா பார்த்துக்கிறார்மா. என்ன, கொஞ்சம் கோபம் ஜாஸ்தி. வாய்க்கு ருசியா செஞ்சா, நல்லா வெளுத்துக் கட்டுவார்மா.
பார்வதி: அப்படியெல்லாம் சொல்லக் கூடாதாம்மா. அப்புறம் உன் கண்ணே பட்டுடும்.

ஆராதனா: சரிம்மா, நான் இனிமே அந்த மாதிரி சொல்லலை. அப்பா அப்புறம், நாளைக்கு அவர் போட்டுக்கிறதுக்கு துணிமணி எல்லாம் வாங்கிட்டீங்களா? முக்கியமா மோதிரம் வாங்கிட்டீங்களா?
பார்வதி: உம், நல்லா கேளு.

ஈஸ்வரன்: துணிமணி எல்லாம் எடுத்தாச்சு கண்ணு, இந்த மோதிரம் தான் வாங்கலை.
ஆராதனா: என்னது வங்கலையா. நாளைக்கு அவருக்கு மோதிரம் கிடையாதா? அவருக்கு ஏறக்கனவே கோபம் ஜாஸ்தி. இப்ப மோதிரம் இல்லன்னு சொன்னா, அவர் தாம் தூம்னு குதிப்பாரே?

ஈஸ்வரன்: ஆமாடா குட்டி. மோதிரம் வாங்க முடியாம போயிடுச்சு. நீ தான் மாப்பிள்ளையை ஏதாவது சொல்லி சமாதானப் படுத்தணும்.
ஆராதனா: என்னப்பா, இப்படி திடீர்னு ஒரு குண்டை போடுறீங்க. சரி, நான் எப்படியாவது சொல்லி சமாளிக்கிறேன்.

(மறு நாள் காலை. ஆதித்தன் உட்கார்ந்திருக்கிறான். அப்போது ஆராதனா தலையில் துண்டைக் கட்டிக்கொண்டு,காபியோடு வருகிறாள்)
ஆராதனா: அதுக்குள்ளா எந்திரிச்சு பல் விளக்கிட்டீங்களா! இந்தாங்க காபி. பாத்ரூம்ல வெந்நீர் ரெடியா இருக்கு. அப்புறம் தலைக்கு தேச்சுக்கிறதுக்கு எண்ணையும் இருக்க. நீங்க காபி குடிச்சிட்டு, சீக்கிரம் கங்கா ஸ்நானம் பண்ணிட்டு வந்துடுங்க.

ஆதித்தன்: கங்கா ஸ்நானம் பண்ணணும்னா, நான் காசிக்கில்ல போகணும்.
ஆராதனா: சும்மா விளையாடாதீங்க. சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க. அப்பா துணிமணி குடுப்பாங்க. அதை போட்டுக்குங்க.

ஆதித்தன்: ஆமா மோதிரத்தை பத்தி நீ ஒண்ணுமே சொல்லலை. உங்கப்பா வேற , மோதிரத்துக்கு அளவு எடுக்கலை. உம். கொஞ்சம் பெருசா தானே மோதிரம் செஞ்சிருக்காங்க. சின்னதா பண்ணியிருந்தா இந்த விரலுக்குள்ள போகாது.(பிளாஸ்திரி போட்டா விரலை பார்த்துக்கொள்கிறான் ).
ஆராதனா: (தரையைப் பார்த்து, கட்டை விரலால கோலம் போட்டுக்கொண்டு), ஏங்க நான் ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே?

ஆதித்தன்: என்னது! பீடிகை, பலமா இருக்கு. மோதிரத்தை சின்னதா செஞ்சுட்டாங்களா? பரவாயில்லை, நான் சுண்டு விரல்ல போட்டுக்குறேன்.
ஆராதனா:(மெல்லமாக இந்த மனுஷன் மோதிரத்தை விட்டு வெளியே வர மாட்டேங்குறாரே). இல்ல, இல்ல, அப்பா இந்த வருஷம் மோதிரம் போடலையாம், அடுத்த வருஷம் போடுறாங்களாம்.

ஆதித்தன்: (சத்தமாக) என்னது! மோதிரம் இல்லையா. அப்புறம் எதுக்கு என்னைய தலை தீபாவளிக்கு வாங்கன்னு கூப்பிட்டீங்களாம்?
ஆராதனா: மெல்லாமா பேசுங்க, அம்மா, அப்பா காதுல விழுந்துட போகுது.

ஆதித்தன்: (இன்னும் சத்தமாக), நல்லா விழட்டும். இதப் பாரு, மோதிரம் போட்டா, நான் இங்க இருக்கேன். இல்லையா, இதோ இப்பவே நான் கிளம்புறேன். உங்க அப்பா அம்மாக்கிட்ட போய் சொல்லு.
(அதற்குள் சத்தம் கேட்டு, ஈஸ்வரனும், பார்வதியும் வருகிறார்கள்)

ஆராதனா: ஏம்பா, ஒரு மோதிரத்தை செஞ்சிருந்தீங்கன்னா, இவ்வளவு பிரச்சனை வந்திருக்காதில்லை.
ஈஸ்வரன்: மாப்பிள்ளை, கொஞ்சம் பொருத்துக்குங்க. நான் அடுத்த வருஷம் பெரிய மோதிரமா செஞ்சு குடுக்கிறேன்.

(ஆதித்தன் உம்மென்று இருக்கிறான்).
பார்வதி: (ஈஸ்வரனிடம்), ஏங்க, இந்த மோதிரத்தை மாப்பிள்ளைக்கு கொடுங்க. (மோதிரத்தை கழட்டி கொடுக்கிறாள். ஈஸ்வரனோ அதை வாங்காமல் நிற்கிறார்)

ஆதித்தன்: (ஆராதானவை பார்த்து), அந்த மோதிரத்தை எனக்கு தர்மம் பண்ணி, என்னைய அசிங்கப் படுத்துறீங்களா? இது சரி வராது. நான் இப்பவே கிளம்புறேன்.
ஈஸ்வரன்: (பார்வதியிடம்)நீ மடத்தனமா செஞ்சு, மாப்பிள்ளையோட கோபத்தை இன்னமும் அதிகமாக்கிட்ட. மாப்பிள்ளை, அடுத்த வருஷம் கண்டிப்பா மோதிரம் போடுறேன்.

ஆராதனா: ஏங்க, எனக்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிங்குளேன். பிளீஸ்.
ஆதித்தன்: (ஆராதானவை பார்த்து), உன் முகத்துக்காக, நான் பொருத்துக்குறேன். ஆனா, உங்கப்பா கொடுக்குற புது துணியை எல்லாம் போட்டுக்க மாட்டேன். சரி, நான் குளிச்சுட்டு வரேன்.

ஈஸ்வரன்: மாப்பிள்ளை, நீங்க இவ்வவளவு தூரம் இறங்கி வந்ததே போதும்.
(எல்லோரும் போகிறார்கள்)

(ஆதித்தன் உட்கார்ந்திருக்கிறான். அப்போது ஆராதனா தட்டில் பலகாரங்களோடு வருகிறாள்)
ஆராதனா: இந்தாங்க, எங்க அம்மா செஞ்ச பலகாரம்.



ஆதித்தன்: ஆ! வாசனை மூக்கைத் துளைக்குதே. கொடு, கொடு.
(எல்லாத்தையும் நல்லா சாப்பிடுகிறான். அப்போது பார்வதியும்,ஈஸ்வரனும் வருகிறார்கள்)

ஆதித்தன்: இந்த மைசூர்பாகும்,லட்டும் இன்னும் கொஞ்சம் வை.
(உடனே, பார்வதி வேக வேகமா ஓடி, ஆராதனாவிடம் கொடுக்கிறாள்).

ஆராதனா: (அவன் தட்டில் வைத்துக் கொண்டே, ஆமா, அப்படி கோபம் வந்துச்சு, இப்ப என்னடான்னா, வெளுத்துக் கட்டுறீங்க?
ஆதித்தன்: சண்டை வேற, சாப்பாடு வேற. உங்கம்மா செஞ்ச பலகாரம் எல்லாம், எங்கம்மா செஞ்ச மாதிரியே ரொம்ப நல்லா இருக்கு. நாம திரும்பி ஊருக்கு போறதுக்குள்ள, இதெல்லாம் உங்கம்மாக்கிட்டேருந்து கத்துக்கோ.

ஆராதனா: சரிங்க. (அம்மாவிடம் கிட்ட போய்) பாரும்மா, இப்படி சாப்பிடுவாரு, ஆனா உடம்பு மட்டும் வராது. பார்க்கிறவங்களுக்கு, நான் என்னமோ ஒழுங்கா சமைச்சு போடாத மாதிரி தோணும்.
(பார்வதி, ஈஸ்வரனை பார்த்து, நக்கலாக சிரிக்கிறாள். அதற்குள் ஆதித்தனும் சாப்பிட்டு எந்திரிக்கிறான்).

ஆதித்தன்:(ஆராதனாவிடம்), சரி நான் போய் ரெஸ்ட் எடுத்துக்கிறேன், நாளைக்கு ஒரு மணிக்கு நமக்கு train இருக்கு. நியாபகம் இருக்கட்டும்.
பார்வதி: என்னடி, நாளைக்கே கிளம்பனுமா?

ஆராதனா: ஆமாம்மா, அவருக்கு ஆபிஸ்ல லீவு கிடையாதும்மா.
(எல்லோரும் போகிறார்கள்).

(22 வருடம் கழித்து)

காட்சி – 4:

இடம் - (சென்னை– ஆதித்தன் வீடு)
கதாப்பத்திரங்கள் – ஆதித்தன், ஆராதனா, முகிலன், கயல்விழி, ஈஸ்வரன், பார்வதி மற்றும் கபிலன்)

(ஆராதனா அங்கும் இங்கும் போய் கொண்டும், வந்துக் கொண்டும் இருக்கிறாள்.)
ஆதித்தன்: ஆமா, என்ன கால்ல, சக்கரத்தை கட்டிக்கிட்டு திரிஞ்சுக்கிட்டு இருக்கிற?நாளைக்கு தானே தீபாவளி. என்னமோ இன்னைக்கு தான் தீபாவளி மாதிரி திரியிற?

ஆராதனா: நம்ம பொண்ணும், மாப்பிள்ளையும் தலை தீபாவளிக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வராங்க. நான் எல்லாம் செஞ்சு வைக்க வேண்டாமா? ஆமா நீங்க இன்னும் ஏர்போர்ட் போகலையா?
ஆதித்தன்: ஃப்ளைட் 11மணிக்கு தான் லாண்ட் ஆகுது. அவுங்க வெளியே வரதுக்கு எப்படியும் 12வது ஆயிடும். மணி இப்ப 11.30 தான் ஆகுது. நான் கார் எடுத்துக்கிட்டு இப்ப போறேன். சரியா இருக்கும்.

(அப்போது முகிலனும், கயல்விழியும் வருகிறார்கள்)

ஆதித்தனும், ஆராதனாவும்: வாங்க வாங்க. நீங்களே வந்துட்டீங்க?
முகிலன்: Flight one hour earlierஆ லாண்ட் ஆயிடுச்சு. அதான் நாங்களே கால் டாக்ஸி எடுத்து வந்துட்டோம்.

ஆதித்தன்: மாப்பிள்ளை, விமானப் பிரயாணம் எல்லாம் சவுகரியமா இருந்துச்சா?
முகிலன்: எல்லாம் நல்லா இருந்துச்சு அங்கிள். ஆமா, நீங்க எப்படி இருக்கீங்க? அத்தை நீங்க எப்படி இருக்கீங்க?

ஆராதனா: புடவையை இழுத்துப் போர்த்திக்கிட்டு, (மெல்லமாக) நாங்க நல்லா இருக்கோம் மாப்பிள்ளை.
முகிலன்: அட, எதுக்கு இப்படி கூச்சப்படுறீங்க. நானும் உங்களுக்கு ஒரு மகன் தான். அதனால தான் மாபிள்ளையை மருமகன்ன்னு சொல்றோம்.

ஆதித்தன்: அட! அட! பார்த்தியா என் மாப்பிள்ளையை, என்ன அருமையா மருமகனுக்கு விளக்கம் கொடுக்கிறதை. சரிம்மா, கயல்விழி, மாப்பிள்ளையும், நீயும் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு, குளிச்சுட்டு வாங்க. எல்லோரும் சாப்பிடலாம்.
முகிலன்: நோ அங்கிள். இப்ப ரெஸ்ட் எடுத்தா, jetlog அதிகமாயிடும். அதனால நாங்க குளிச்சிடுறோம். கயல், முதல்ல நீ குளிக்கிறியா, இல்ல நான் குளிக்கட்டுமா?

கயல்விழி: நீங்களே, முதல்ல குளிச்சிட்டு வாங்க.
(முகிலன் போகிறான்)

ஆராதனா: என்னமா கயல், ஆஸ்திரேலியா எல்லாம் எப்படி இருக்கு.
ஆதித்தன்: ஏம்மா, நீங்க இருக்கிற இடத்துல நம்ம தமிழ் ஆளுங்க எல்லாம் இருக்காங்களா?

கயல்விழி: ஆஸ்திரேலியா ரொம்ப சூப்பர்ரா இருக்கு. நாங்க சிட்னில இருக்கோம். அங்க நம்ம ஊர்க்காரங்க நிறைய பேர் இருக்காங்க. எங்க வீட்டுக்கு பக்கத்துலேயே தமிழ் பேசுறவங்க இருக்காங்க. அப்புறம் தமிழ் ஸ்கூல் வேற இருக்கு. போன வாரம் தான் நான் அதுல டீச்சரா சேர்ந்திருக்கேன். அதான் உங்களுக்கு போன்ல சொல்ல முடியலை.

ஆதித்தன்: நீ தமிழ் வேற சொல்லிக்கொடுக்கிறியா! பலே! பலே! சரிம்மா, மாப்பிள்ளை உன்னைய எப்படி பார்த்துகிறாரு?
கயல்விழி: அவர் ரொம்ப நல்ல டைப்பா. எதுக்குமே கோபப் படமாட்டாரு. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.

ஆதித்தன்: இதை கேக்குறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அப்புறம் நாளைக்கு மாப்பிள்ளைக்கு கொடுக்கிறதுக்கு, வைர மோதிரம் செஞ்சு வச்சிருக்கேன். போட்டு பார்க்கட்டும். பெருசா இருந்தா நூல் சுத்தி போட்டுக்கட்டும்.
ஆராதனா: என்னது, வைர மோதிரமா. என்கிட்ட கூட சொல்லவே இல்ல.

ஆதித்தன்:உண்கிட்ட சொன்னா? நீ உடனே உங்கப்பாம்மாக்கிட்டே சொல்லுவ. எனக்கு அது பிடிக்கலை. அதனால தான் உன்கிட்ட சொல்லலை.
ஆராதனா: ஏங்க, இன்னமுமா உங்களுக்கு அந்த கோபம் தீரலை.

கயல்விழி: என்ன கோபம்மா?
ஆராதனா: அது ஒண்ணும் இல்லடா, எல்லாம் பழைய கதை.

கயல்விழி: ஏம்பா, மாப்பிள்ளைக்கு மட்டும் தான் மோதிரமா? எனக்கில்லையா?
ஆதித்தன்: உனக்கு தான் கல்யாணத்தன்னைக்கே நிறைய கொடுத்தாச்சே. அதுவும் இல்லாம, மாப்பிள்ளைக்கு தலைதீபாவளி அன்னைக்கு மோதிரம் போடுறது ஒரு சம்பிரதாயம்மா.

கயல்விழி: நான் சும்மா தான்பா கேட்டேன். சரி, அவர் குளிச்சுட்டு வந்துட்டாருன்னு நினைக்கிறேன். நான் போய் குளிக்கிறேன்.
(எல்லோரும் போகிறார்கள். மறு நாள் காலை)

ஆதித்தன்: கயல்விழி,அம்மாக்கிட்ட காப்பி வாங்கிக்கிட்டு, மாப்பிளையை போய் எழுப்பும்மா. அப்புறம் அவர் கங்கா ஸ்நானம் வேற பண்ணனும். நேரம் ஆகுது பாரு.
(அப்போது முகிலன், குளித்து விட்டு துண்டை தோளில் போட்டுக்கொண்டு வருகிறான்)

ஆதித்தன்: அடடா! மாப்பிள்ளை அதுக்குள்ள கங்கா ஸ்நானம் பண்ணிட்டிங்கீளா?
முகிலன்: ஆச்சு அங்கிள்.

ஆதித்தன்: ஆராதனா, கயல்விழி எல்லோரும் வாங்க. வரும்போது, மாப்பிள்ளைக்கு கொடுக்கிறதுக்காக நான் தனியா எடுத்து வச்சிருந்ததை எடுத்துக்கிட்டு வாங்க.
(ஆராதனா, அந்த டிரஸ்ஸை ஆதித்தனிடம் கொடுக்கிறாள்)

ஆதித்தன்: இந்தாங்க மாப்பிள்ளை, தலை தீபாவளிக்காக நாங்க உங்களுக்கு செய்ய வேண்டிய சீர்.
முகிலன்: இந்த formalities எல்லாம் எதுக்கு அங்கிள். சரி, பெரியவங்க நீங்க ஆசைப்பட்டு செய்யுறீங்க, நான் வாங்கிக்கிறேன். அதே மாதிரி நான் சொல்றதை இப்ப நீங்க கேக்கணும். கயல் நாம முடிவு எடுத்ததை சொல்லு.

(அப்போது ஆராதனாவும், ஆதித்தனும் ஒண்ணும் புரியாமல் தங்களுக்குள் பார்த்துக் கொள்கிறார்கள்)
ஆதித்தன்: (பயந்துக்கொண்டே) என்னம்மா, முடிவு கிடிவுன்னு என்னமோ சொல்றீங்க. எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கு.

கயல்விழி: அப்பா, எதுக்கு இப்படி டென்ஷன் ஆகுறீங்க? ஒண்ணும் பயப்பிட வேண்டாம். இந்த தலைதீபாவளியை நாம எல்லோருமா சேர்ந்து ஒரு அநாதை ஆசிரமத்தில போய் கொண்டாடலாம்னு முடிவு எடுத்திருந்தோம். அதை தான் அவர் சொல்றாரு.
ஆதித்தன்: அப்பாடி, இவ்வளவு தானா, நான் கூட என்னமோ ஏதோன்னு பயந்து போயிட்டேன். இது ரொம்ப நல்லா விஷயமா இருக்கே. (முகிலனையே பார்க்கிறார்)

முகிலன்: என்ன அங்கிள், என்னையே பார்க்கிறீங்க?
ஆதித்தன்: இல்ல, என்னோட தலைதீபாவளில இந்த மாதிரி எல்லாம் எனக்கு ஏன் தோனலைன்னு யோசிக்கிறேன்.

ஆராதனா: உக்கும். அப்ப உங்களுக்கு, எங்கப்பா தலையை எப்படி மொட்டை அடிக்கலாம்னு இல்ல யோசிச்சீங்க.

ஆதித்தன்: சரி, சரி, அந்த பழைய கதை எல்லாம் பேசாம நீ சும்மா இரு. ஆமாம், எந்த அநாதை ஆசிரமத்துக்கு நாம போறோம்?
கயல்விழி: தாம்பரத்தில “சிவானந்தா சரஸ்வதி சேவாஷ்ரம்” இருக்குதில்ல. அங்க தான் போய் கொண்டாடலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். இந்தியா வரதுக்கு முன்னாடியே, அந்த ஆஸ்ரமத்தோட பேசிட்டோம்.

ஆதித்தன்: நீங்க பேசுறதை கேக்கும்போது, ரொம்ப சந்தோஷமா இருக்குதும்மா. கண்டிப்பா நாம அங்கேயே உங்களோட தலைதீபாவளியை கொண்டாடுவோம்.
நன்றி வணக்கம்
பின் குறிப்பு: நான் இங்கு மேடையேற்றிய நாடகங்களை எல்லாம் காணொளியாக இந்த வலைப்பூவில் பதிவேற்ற முயன்று வருகிறேன். இன்னும் கொஞ்ச நாட்களில் அவைகளையெல்லாம் நீங்கள் பார்க்க முடியும் என்று நம்புகிறேன்.