Monday, June 25, 2012

அமெரிக்காவில் அடியேன் - 1

நானும் மஸ்கட்,சிங்கப்பூர்,மலேஷியா,லண்டன்,ஜப்பான்,தென்கொரியா, ஆஸ்திரேலியா இப்படின்னு பல நாடுகளுக்கு போயிருந்தாலும், அமெரிக்காவுக்கு மட்டும் போக கூடிய வாய்ப்பு அமையலை. ச்சீ, ச்சீ இந்தப் பழம் புளிக்கும்னு நானும் விட்டுட்டேன். அப்பத்தான் ஒரு நண்பர் அமெரிக்காவில இருக்கிற ஒரு தமிழ் கல்விக் கழகம் உலக அளவுல தமிழ் கல்வி சம்பந்தமா ஒரு மாநாடு நடத்துறாங்க, நீங்க அதுல ஒரு ஆய்வுக் கட்டுரையை படைக்கிறீங்களான்னு கேட்டாரு. நானும் ஒரு ஆர்வக் கோளாறுல ஒத்துக்கிட்டு எப்படியோ ஆய்வுக் கட்டுரையின் சுருக்கத்தை அனுப்பிட்டேன். அப்புறம் முழுக்கட்டுரையையும் எழுதும்போது தான் தெரிஞ்சுது, தெரியாமல் இதுல காலை விட்டுடோம்னு. இருந்தாலும், எப்படியோ ஒரு வழியா அந்த கட்டுரையை எழுதி முடிச்சேன். மாநாடு நடத்துறவுங்க என்னோட கட்டுரையை தெரிவு செஞ்சு, அமெரிக்காவுக்கு போகனுங்கிற என்னோட நெடு நாள் ஆசையை நிறைவேத்திட்டாங்க. இந்திய குடிமகன்கிறதுனால விசா வாங்கியாகனும். ஒரு சுப முகூர்த்த நாள்ல, சிட்னில இருக்கிற அமெரிக்க தூதரகத்துக்கு போனேன். முதல்ல 9வது மாடிக்கு போனேன். ஷூவை எல்லாம் கழட்டி செக் பண்ண பிறகு, மொபைல் போனை ஆஃப் செய்து அவுங்ககிட்ட கொடுக்கனுமாம். அட கஷ்டகாலமேன்னு போனை கொடுத்துட்டேன்.       (என்ன(!) முக்கியமான கால்ஸ் எல்லாம் மிஸ் ஆகும் பரவாயில்லை, அமெரிக்காவுக்கு போகனும்னா, இதையெல்லாம் தியாகம் பண்ணித்தானே ஆக வேண்டியிருக்குது!!!). .அப்புறம் 58வது மாடிக்கு போயி நம்மளோட கைரேகைய கொடுக்கனுமாம். அதுவும் முதல்ல 4 விரல்ல உள்ள ரேகையும் அப்புறம் கட்டை  விரலுக்குள்ள ரேகையும் கொடுத்துட்டு , அங்க உட்கார்ந்திருக்கிற கூட்டத்துல போயி ஐக்கியமாகிடனுமாம். நானும் கைரேகையை எல்லாம் கொடுத்துட்டு, அந்த கூட்டத்துல போயி உட்கார்ந்து, எப்படா நம்மளை கூப்பிடுவாங்கன்னு காத்துக்கிட்டு இருந்தேன்.  ரொம்ப நேரம் கழிச்சு, ஒரு ஆபிசர் அம்மா என்னைய கூப்பிட்டாங்க. நானும் அவுங்க முன்னாடி போயி நின்னேன். எதுக்கு அமெரிக்காவுக்கு போறீங்கன்னு கேட்டாங்க. நானும் இந்த மாதிரி, இந்த மாதிரி, அமெரிகாவில தமிழ் கல்வி மாநாடு ஒண்ணு நடக்குது. அதுக்கு என்னையும் மதிச்சு  கூப்பிட்டிருக்காங்க, அதுக்காக போறேன்னு சொன்னேன். அப்ப நீங்க என்ன தமிழ் வாத்தியாரான்னு ஒரு கேள்வி கேட்டாங்க. அடடா, இவுங்க நம்மளை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்களேன்னு நினைச்சு, சனிக்கிழமைல மட்டும் என்னோட ஆத்ம திருப்திக்கு தமிழாசிரியரா சேவை செய்யுறேன். வயித்து பொழப்புக்கு கம்ப்யூட்டரை கட்டிக்கிட்டு அழுகிறேன்னேன். உடனே அந்த அம்மாவும் பயபுள்ள ஒழுங்கா தான் பதில் சொல்றான்னு புரிஞ்சுக்கிட்டாங்க. ஏன்னா, அந்த அப்ளிகேஷன்ல நான் என்ன வேலை பண்றேன்னு எழுதியிருக்கிறேனே!. சரி, எத்தனை வருஷமா கம்ப்யூட்டரை கட்டிக்கிட்டு அழுறீங்கன்னு கேட்டாங்க. அது ஆச்சு ஒரு 20 வருஷமான்னேன். உடனே அந்த அம்மா ரொம்ப குஷியாகி (ஒரு இளிச்சவாயன் மாட்டிக்கிட்டான், இவன்கிட்ட என்ன கேள்வி வேனாலும் கேட்கலாம்னு நினைச்சுட்டாங்க. அது மட்டும் இல்ல, என்னோட பால் வடியும் முகத்தை பார்த்து,  இவன்கிட்ட, நம்மளோட சந்தேகத்தை எல்லாம் தீர்த்துக்கலாம்னு நினைச்சுட்டாங்க போல). நீங்க தினமும் ஆபீஸுக்கு போனவுடனே என்ன பண்ணுவீங்கன்னு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கன்னு, கம்ப்யூட்டர்ல வேலை பார்க்குறவன் கிட்ட கேக்கக்கூடாத கேள்வியை கேட்டாங்க. இவுங்க கிட்ட போயி, காலைல போனவுடனே மெயில், பேப்பர் எல்லாம் படிச்சுட்டு தான் வேலை செய்ய ஆரம்பிப்பேன்னு சொல்ல முடியுமா. அதனால என்னமோ 8 மணி நேரமும் வெறும் வேலையை மட்டும் பார்க்குற மாதிரி கொஞ்சம் பீலா எல்லாம் விட்டேன். பாவம் அந்த அம்மா நான் சொன்னதை எல்லாம் ஆச்சிரியமா கேட்டு நம்பிட்டாங்க.அப்புறம், பாஸ்போர்ட் டோக்கியோவிலா வாங்கினிங்க? டோக்கியோவில எத்தனை வருஷம் இருந்தீங்கன்னு கேட்டாங்க. நானும் கிட்டதட்ட ஒரு அஞ்சு வருஷம்னேன். உடனே அந்த அம்மா, சிட்னில எத்தனை வருஷமா இருக்கீங்கன்னு கேட்டாங்க? அதுக்கும் அஞ்சு வருஷமா இருக்கேன்னேன். இவ்வளவு நேரமா, நான் சொன்னதுக்கு எல்லாம் ஆச்சிரியமா என்னைய பார்த்து தலையெல்லாம் ஆட்டிக்கிட்டு இருந்தவுங்களுக்கு, திடீர்னு ஏதோ சந்தேகம் வந்திருக்கும் போல, சந்தேகமா என்னையே வச்ச கண்ணு வாங்காம பார்த்தாங்க. எனக்கு அவுங்க சந்தேகமாதான் பார்க்கிறாங்கன்னு புரியலை. நாம ரொம்ப அழகா இருக்கோம் போல, அதனால தான் நம்பளை அப்படி  பார்க்கிறாங்கன்னு நினைச்சேன். ரொம்ப நேரமா, என்னைய பார்தது மட்டுமில்லாம, என்னோட பாஸ்போர்ட்ல இருக்கிற எல்லாப் பக்கத்தையும் வேற பார்த்தங்களா, அப்பத்தான், என்னோட மரமண்டைக்கு புரிஞ்சுது, நாம அழகா இருக்கோம்னு அவுங்க பாக்கலை, ஏதோ சந்தேகம் வந்துடுச்சு, அதான் அப்படி பார்த்திருக்காங்கன்னு. அவுங்களுக்கு என்ன சந்தேகம் வந்திருக்கும்னு நானும் யோசித்துப் பார்த்தேன், “ஒவ்வொரு நாட்டிலும் 5 வருஷம் தான் இவன் இருப்பான் போல, இப்ப அமெரிக்காவில போயி வேலை தேடிப்பானோன்னு சந்தேகம் வந்திருக்கும்னு நினைச்சேன்”, அப்ப நம்ம அமெரிக்காவுக்கு போற கனவு, கனவாவே போயிடுமோன்னு எனக்கு பயம் வந்துடுச்சு. கொஞ்ச நேரம் கழிச்சு, உங்களுக்கு குடும்பம் இருக்கான்னு கேட்டாங்க. ஏன் இல்லாம, ஒரே ஒரு மனைவியும், ரெண்டே ரெண்டு குழந்தைகளும் இருக்காங்கன்னு சொன்னேன். திருப்பியும் என்னைய பார்த்தாங்க, அப்புறம் அவுங்களே இல்லன்னு தலையை ஆட்டிக்கிட்டாங்க. எப்படியோ ஒரு வழியா தெளிஞ்சு, உனக்கு விசாவை கொடுக்கிறோம்னு சொன்னாங்க. அப்புறம் தான் எனக்கு உயிரே வந்துச்சு. ரொம்ப நன்றியம்மா சொல்லி வெளியே வந்தேன்.
அட கிரகமே, விசாவுக்கே இவ்வளவு கஷ்டமா இருக்கே, அங்க போனா, இன்னும் எவ்வளவு கஷ்டம் வருமோன்னு பயமாயிடுச்சு. "வல்லவனுக்கு  புல்லும் ஆயுதம்கிற மாதிரி", என்ன கஷ்டம் வந்தாலும் நம்ம மூளையை வச்சு சமாளிச்சுக்கலாம்னு ஒரு குருட்டு தைரியத்துல, அமெரிக்கா போறதுக்கு விமானத்துல எறிட்டேன்.  அடுத்த பதிவுல இன்னும் சொல்றேன்.
                                                                                                                                              பகுதி-2

Wednesday, June 20, 2012

முதல் விமான பயணம்

செப்டெம்பர் 12,1997 அன்னைக்கு தான் நான் மஸ்கட் போக வேண்டிய நாள். சென்னையிலிருந்து பாம்பேக்கு உள்ளூர் விமானத்திலும் பாம்பேலேருந்து மஸ்கட்டுக்கு சர்வதேச விமானத்திலும் போகனும். ஒரு வாரத்துக்கு முன்னாடியே புதுசா துணிமணிகளை எல்லாம் வாங்கி தைச்சு, ஒரு பெட்டிய புதுசா வேற வாங்கி, அதுல எல்லாம் வச்சு வெளிநாடு போறதுக்கு தயாராயிட்டேன். சாப்பாடுக்கு அங்க மெஸ் இருக்கிறதுனால மத்த மூட்டை முடிச்சுக்கு எல்லாம் வேலை இல்லாம போயிடுச்சு. என்னைய வழி அனுப்ப, மாமா, மாமி, சித்தி, சித்தப்பான்னு சொந்தக்காரங்க எல்லாரும் வந்து இருந்தாங்க. நானும், சென்னை விமான நிலையத்தை ஒரு பட்டிக்காட்டான் பட்டினத்தை சுத்திப் பார்த்த மாதிரி சுத்திப் பார்த்துட்டு, பாம்பே போற “இந்தியன் ஏர்லைன்ஸ்” விமானதுக்குள்ள போயி ஏறி உட்கார்ந்தேன். எல்லோரும் கொண்டு வந்திருந்த கைப் பெட்டியை, தலைக்கு மேல உள்ள இடத்துல வச்சாங்க. எனக்கோ, இந்த பெட்டிங்க எல்லாம் கணம் தாங்காம நம்ம மேல விழுந்தா என்னாகுறதுன்னு பயம் வந்துடுச்சு. மனசுக்குள்ள இருந்த பயத்தை வெளியே காட்டாம என்னோட இருக்கைல உட்கார்ந்துக்கிட்டு இருந்தேன். அப்பத்தான், எல்லோரும் இருக்கைல இருக்கிற பெல்ட் போட்டுக்குங்கன்னு அறிவிச்சாங்க. எனக்கோ அந்த பெல்ட்ட போட்டுக்கத் தெரியலை. அப்ப, விமான உதவியாளர்கள் எல்லோரும் எதையோ பிடிக்கப் போற மாதிரி ரொம்ப வேகமா நடந்துக்கிட்டு இருந்தாங்க. அழகான இளம் பெண்கள் எல்லாம் உதவியாளர்களாக இருப்பாங்கன்னு மற்ற நண்பர்கள் மூலமா கேள்விப்பட்டிருந்தேன். ஆனா, இந்த விமானத்துல அப்படி யாருமே இல்லை. எல்லோரும் வேலையிலிருந்து ஓய்வு பெறுகிற வயசுல இருந்தாங்க. பரவாயில்ல, ஏதோ ஒரு பெண் உதவியாளரை கூப்பிட்டு, நமக்கு அந்த பெல்ட்ட போட்டு விடச் சொல்லலாம்னு நினைச்சு,  பக்கத்துல யாராவது வறாங்களான்னு வழி மேல் விழி வச்சு காத்துக்கிட்டு இருந்தேன். அதுக்குள்ள என் பக்கத்து இருக்கைல உட்கார்ந்திருந்தவரு, நான் திரு திருன்னு முழிச்சுக்கிட்டு இருந்ததைப் பார்த்து, என்ன தம்பி, பெல்ட்ட போடத் தெரியலயான்னு கேட்டு, எனக்கு அதை இப்படித்தான்  போடணும்னு சொல்லி போட்டு வேற விட்டுட்டாரு. எனக்கோ ச்சைன்னு போச்சு. அவரை நான் உதவிக்கு கேட்கவே இல்லை. ஆனா என்னமோ மற்றவர்களுக்கு உதவி புரிவதற்காகவே தான் பிறந்த மாதிரி, அந்த மனிதர் எனக்கு உதவி பண்ணி, என் ஆசைல மண்ணை அள்ளிப் போட்டுட்டாரு.  கடைசில எப்படியோ நல்ல படியா மஸ்கட் வந்து சேர்ந்தேன். மஸ்கட் விமான நிலயத்துல இறங்குனவுடனே, திரும்பவும் உள்ளுக்குள்ள இருந்த பட்டிக்காட்டான் வெளியில வந்துட்டான். முதல் முதல்ல ஒரு சர்வதேச விமான நிலயத்தை பார்க்கும்போது ரொம்பவும் பிரமிப்பா போச்சு. புதுசா ஒரு இடத்துக்கு யாராவது போனங்கன்னா, அவரை கூப்பிடறதுக்கு வந்தவரு கைல அவர் பேரு எழுதின அட்டைய வச்சுக்கிட்டு நிக்கிற மாதிரி எத்தனை படங்கள்ல பார்த்திருப்போம், நானும் வெளியில வந்தவுடன,யாராவது நம்ம பேர் உள்ள அட்டைய வச்சுக்கிட்டு நின்னுக்கிட்டு இருக்காங்களான்னு சுத்தி சுத்தி பார்த்தேன். அப்பத்தான் ஒரு விசில் சத்தம் கேட்டு திரும்பினேன். ஓரத்துல இந்தியர் ஒருத்தர் நின்னுக்கிட்டு, சைகைல என்னைய கூப்பிட்டாரு. கிட்ட போனா, நீங்க தானே சம்பந்தம்னு கேட்டாரு. ஆமான்னு சொன்னவுடனே, என் பின்னாடி வாங்கன்னு வண்டிக்கு கூட்டிக்கிட்டு போனாரு. வண்டில போய்க்கிட்டு இருக்கும்போது, எப்படிங்க என்னைய அடையாளம் கண்டுப் பிடிச்சீங்கன்னு கேட்டேன். அதென்ன பிரமதாம்னு, என்னோட பாஸ்போர்ட் காப்பியை காண்பிச்சாரு. அட! பய புள்ளைங்க ரொம்பவே உஷாராக தான் இருக்கங்கான்னு நினைச்சுக்கிட்டேன்.
வேற ஒரு பதிவுல நான் அந்த மஸ்கட் வாழ்க்கையைப் பத்தி எழுதிறேன். உண்மையிலே ராஜ வாழ்க்கையின்னா, அது தாங்க. வேலைக்கு போக ஆரம்பிச்சு கிட்டதட்ட20 வருஷ வாழ்க்கைல அந்த மாதிரியான ஒரு வாழ்க்கை திரும்பவும் எனக்கு கிடைக்கலை. அந்த வாழ்க்கையைப் பற்றி சொல்றதுக்கு முன்னாடி, என்னோட முதல் அமெரிக்க அனுபவத்தை உங்களுடன் அடுத்த பதிவுல பகிர்ந்துக்கிறேன்.  

Friday, June 1, 2012

காதல் – காதலியை முதன் முதலில் சந்தித்த தினம்


    “என் விழிகளுடன் உன் விழிகள் 
     கலந்த அந்த நொடியில்,
     என் இதயத்தில்
     மொட்டாக இருந்த காதல் பூ
     மலர்ந்தது”.


வழக்கம் போல இந்த ஆண்டும், திருவிழாவுக்காக ஊருக்கு வந்தேன். ஒவ்வொரு வருடமும், திருவிழாவிற்கு வருவதற்கு முன், எப்படியாவது எனக்கான தேவதையை கண்டுப்பிடித்து விட வேண்டும் என்ற முனைப்போடு வருவேன். ஆனால் அந்த நினைப்பு நிறைவேறாமலே வேலைப் பார்க்கும் ஊருக்கு திரும்புவேன். இந்த முறை கண்டிப்பாக அந்த நினைப்பு நிறைவேறும் என்று உள்மனசு சொல்லிக்கொண்டிருந்தது. இந்த வருடமாவது, என் தேவதையை கண்ணில் காட்டுங்கள் என்று இறைவனிடம் கோரிக்கையை வைத்து,ஊரில் வலம் வந்தேன். நேற்று வரை, என் கோரிக்கைக்கு இறைவன் செவி சாய்க்கவில்லை. இன்று தான் கடைசி நாள். திருவிழாவோ களை கட்டியிருந்தது. நானும் மற்ற நண்பர்களோட நடந்து கொண்டிருந்தபொழுது, எதிரில் நீ தோழிகளோடு நடந்து வந்து கொண்டிருந்தாய். அப்போது உன் நெற்றியிலிருந்து சில முடிக்கதிர்கள், எங்கே தென்றல் தங்கள் எஜமானியின் முகத்தை தீண்டிவிடுமோ என்று பயந்து முகத்தின் அருகே தென்றலை தீண்டவிடாமல் அரணாக பாதுக்காத்துக் கொண்டிருந்தது. நீயும் அந்த முடிக்கதிர்களை உன்னுடைய மென்மையான விரல்களால் வருடிக் கொடுத்து, முகத்தை பாதுகாத்தது போதும் என்று தூங்க வைத்த நொடியில், உன் விழிகள் என் விழிகளோடு கலந்தது. அந்த நொடியில் தான் என் இதயத்தில் காதல் பூ மலர்ந்தது. நான் என் இதயத்தில் காதல்  மலர்ந்ததில் பரவசப்பட்டுக்கொண்டிருந்த பொழுது, நீ என்னை கடந்து சென்று விட்டாய். சுயஉணர்வு பெற்ற நான் உன்னை காணாமல் ஊர் முழுக்க சுற்றி தேடினேன். கடைசியில் உன்னைக் கண்டுப்பிடிக்க முடியாமல் ஏமாற்றத்தோடு ஊர் திரும்பினேன்.
 நீ என் கண்களில் இருந்து மறைந்திருக்கலாம். ஆனால் என் இதயத்தில் அழியா ஓவியமாய் இடம் பெற்றுவிட்டாய்.