Showing posts with label உடல் ஆரோக்கியம். Show all posts
Showing posts with label உடல் ஆரோக்கியம். Show all posts

Monday, November 24, 2014

நவம்பர் மாதம்–இல்லை! இல்லை!! இது மவம்பர் மாதம்(ஆண்களின் உடல் ஆரோக்கியம்)


 
 

ஆண்களுக்கு ஏற்படக்கூடிய புரோஸ்டேட் புற்றுநோயைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக “மவம்பர் (Movember Foundation)” என்னும் ஒரு தன்னார்வல தொண்டு நிறுவனம் , இங்கு ஆஸ்திரேலியாவில் ஆண்களை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர்  மாதம் முழுவதும் மீசையை மழிக்காமல் வளரக்கச்  சொல்லி இதில் பங்குப்பெறுமாறு அழைக்கிறது. அதன்படி இந்த விழிப்புணர்வில் பங்குபெறும் ஆண்கள், முதலில் அந்த நிறுவனத்தின் இணையத்தளத்தில் தங்களை பதிவு செய்து கொண்டு , அந்த இணையத்தளத்தில் , ”MO SPACE” என்று ஒரு பக்கத்தை உருவாக்கிக்கொண்டு, நவம்பர் மாதம் முழுவதும் மீசையை வழிக்காமல் இருப்பார்கள். இப்படி அவர்கள் தங்களின் முக அழகை மாற்றிக் கொண்டு,இந்த விழிப்புணர்வில் பங்குபெறுவதால். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களின் நண்பர்கள்,உறவினர்கள்,உடன் பணிபுரிபவர்கள் என எல்லோரும் அவரின் அந்த இணையத்தள பக்கத்திற்கு சென்றோ அல்லது அவரிடம் நேரிடையாகவோ பணத்தை அன்பளிப்பாக அளிப்பார்கள். இப்படி இந்த விழிப்புணர்வில் பங்குபெற்ற அனைவரின் மூலமாக கிடைக்கும் பணத்தை எல்லாம் அந்த தொண்டு நிறுவனம், ஆண்களின் புரோஸ்டேட் புற்றுநோய்க்கான ஆராய்ச்சிக்கு அளித்துவிடும். இதில் ஆண்கள் மட்டும் பங்கு பெறுவதில்லை, பெண்களும் பங்குக்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள், ஓட்டு மீசையை வைத்துக்கொண்டு, இந்த விழிப்புணர்வில் பங்குக்கொள்கிறார்கள். இதில் பங்குபெறும் ஆண்களை “MOBROS” என்றும் பெண்களை “MOSISTAS” என்றும் அழைக்கிறார்கள்.  

இந்த விழிப்புணர்வில் எனக்கு தெரிந்த தமிழ் நண்பர்கள் யாராவது பங்கேற்றிக்கிறார்களா என்று பார்த்த பொழுது, இதோ நான் இருக்கிறேன் என்று கூறி நண்பர் திரு.ஜவஹர்லால் நேரு அவர்கள் சென்ற ஆண்டு இந்த விழிப்புணர்வு மாதத்தில் கலந்துகொண்டு எடுத்த புகைப்படத்தை அனுப்பினார். (இவர் பொதுவாக மீசையை மழிப்பவர்).  

 




பெண்களுக்கு வரும் மார்பகப் புற்று நோயைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஆண்களுக்கு வரும் இந்த புரோஸ்டேட் புற்று நோயைப் பற்றி நான் இது வரை கேள்விப்பட்டதில்லை. இந்த நோய் வராமல் எவ்வாறு தடுக்கலாம் என்பதைப் பற்றி இணையத்தளத்திலும், மருத்துவ நண்பரிடமும் படித்து கேட்டதை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

ஆண்களுக்கு வயதாகும்போது, இந்த புரோஸ்டேட் சுரப்பியில் பிரச்சனைகள் ஏற்படும். அவ்வாறு பிரச்கனைகள் ஏற்படாமலிருக்க அந்த மருத்துவ நண்பர் கூறிய அறிவுரைகள் என்னவென்றால்,

·         தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். (இந்த தண்ணீர் தான் நம்முடைய உடம்புக்கு எவ்வளவு நல்ல வேலைகளை செய்கிறது)

·         இருக்கமான உள்ளாடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். மேலும் இறுக்கமான உள்ளாடைகளை அணிந்து கொண்டு,ஜீன்ஸ் பாண்ட் அணிவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். (இதுக்குத்தான் நம்மூரில் அந்த காலங்களில் பட்டாப்பட்டி டிரௌசரை அணிந்து வேட்டியை அணிந்துகொண்டார்களோ!!!)

·         சில படங்களில், நகைச்சுவை என்ற பெயரில்,”நான் உள்ளாடையை அணியவில்லை என்று கூறுவார்கள்” அப்படி உள்ளாடை அணியாமல் இருக்க்மான பாண்ட் அணிந்தாலும் இந்த புரோஸ்டேட் கேன்சர் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாம்.

·         ஆண்களாகிய நாம் எப்பொழுதும் அலைப்பேசியை பாண்ட் பாக்கெட்டில் தான் வைத்திருப்போம். அலைப்பேசியிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு மூலமாகவும் இந்த நோய் வரக்கூடிய அபாயம் உள்ளது (அடக்கடவுளே. அப்புறம் எங்க தான் அந்த போனை வைத்துக்கொள்வதாம்!!!)

·         புகைப்பிடிப்பதுனாலும் இந்த நோய் வருமாம்(புகைப்பிடிப்பதால் எந்த நோய் தான் வராது!!!!)

·         கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவு வகைகளை தவிர்க்து விட வேண்டும். அதாவது இந்த ஜங்க் உணவுகளை தவிர்க்து விட வேண்டும்.

·         பழங்கள்,காய்கள் போன்றவற்றை தினமும் சாப்பிட வேண்டும்.

·         உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும். அதாவது BMI (Body Mass Index) சரியாக இருக்க வேண்டும்.

 
இங்கு, வருடந்தோறும் ஒரு மாதம் முழுவதும் இந்த நோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் எத்தனை பேர் இந்த விழிப்புணர்வை பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பது கேள்விக்குறியே.

 
பின்குறிப்பு:

பல வருடங்களுக்கு முன் நான் லண்டனுக்கு சென்றபோது, அங்குள்ளவர்களைப் பார்த்து, எனக்கும் மீசையை எடுத்தால் என்ன என்று ஒரு விபரீத ஆசை தோன்ற, நானும் உடனே மீசையை எடுத்துவிட்டேன். எடுத்த பிறகு தான் தெரிந்தது, ஏண்டா எடுத்தோம்னு, ஏன்னா, என் முகத்தை கண்ணாடியில் பார்க்கவே சகிக்கலை. போதாக்குறைக்கு என்னுடன் பணிபுரிந்த தமிழ் நண்பர்கள் எல்லாம், டேய், நாங்க தினமும் உன்னைய பார்த்து, அணு அணுவாக செத்துக்கிட்டு இருக்கோம். ஏதாவது செய்து, சீக்கிரம் மீசையை வளர்த்துக்கோன்னு சொல்லி கடுப்படித்தார்கள்”. இப்ப அதை நினைச்சு பார்க்கும்போது, நண்பர் கில்லர்ஜி தான் நியாபகத்துக்கு வந்தாரு. அவருடைய புகைப்படத்தை பார்த்தபோது, எப்படித்தான் இப்படி மீசையை உரம்போட்டு வளர்க்கிறாரோன்னு தோணுச்சு. இவர் நவம்பர் மாதம் மட்டும் இங்கு வந்தால், இவர் தான் அதிகமான அன்பளிப்பை அந்த தொண்டு நிறுவனத்துக்கு வழங்கியிருப்பார். அவரை புகைப்படத்தில் பார்க்காதவர்கள் இங்கு சென்று அவரைப் பார்க்கவும் - கில்லர்ஜியின் புகைப்படம்

Sunday, May 25, 2014

கண்ணிற்குள் பிரஷர் (Glaucoma) – ஒரு எச்சரிக்கை



ஹை பிரஷர், லோ பிரஷர் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் கண்ணிற்குள் பிரஷர் இருப்பதை நம்மில் நிறைய பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். அதற்கு ஆங்கிலத்தில் Glaucoma என்று சொல்லுவார்கள். அந்த வார்த்தையை தமிழ் படுத்தினால் – கண் நீர் அழுத்த நோய் என்று வருகிறது. வீட்டு அம்மணிக்கு ஏற்பட்ட இந்த பிரச்சனையையின் மூலம் எனக்கு தெரிந்த விஷயங்களை இங்கு எச்சரிக்கை பதிவாக பகிர்ந்து கொள்கிறேன். முதலில் இந்த Glaucoma என்றால் என்ன என்று பார்ப்போம்.

Glaucoma என்றால் என்ன:
நம் கண்ணில் உள்ள முன் பகுதியில் இருக்கும் அறையில் சுரக்கும் நீரின் அழுத்தம் அதிகரித்தால், அதற்கு Glaucoma என்று பெயர். சாதாரணமாக ஒரு மனிதனின் கண்ணுக்குள் சுரக்கும் நீரின் அழுத்தம் 16mm HGயிலிருந்து 20 mm HGக்குள் இருக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள். இந்த அழுத்தம் கூடும்போது தான் இந்த Glaucoma பிரச்சனை உருவாகுகிறது.

Glaucoma வகைகள்:
இந்த நோய் நிறைய வகைகளை கொண்டு பிரிக்கலாம். ஆனால் குறிப்பாக இரண்டு வகைகள் தான் முக்கியமாக கருதபப்டுகிறது. "திறந்த கோண கண் அழுத்த நோய் (Open-Angle Glaucoma)" மற்றும் “மூடிய கோண கண் அழுத்த நோய் (Angle-Closure Glaucoma)”.

Glaucomaவை கண்டறிதல்:
இந்த நோயை எவ்வாறு கண்டறியலாம் என்றால், முதலில் நாற்பது வயதை தாண்டிய அனைவரும் கண்டிப்பாக இரண்டு வருடத்திற்கு ஒரு முறையாவது கண்களை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். அப்போது கண் அழுத்தத்தையும் மருத்துவரிடம் சொல்லி பார்க்க வேண்டும். ஒரு வேளை கண் அழுத்தம் தேவைக்கேற்ப அதிகமாக இருந்தால், மருத்துவர்களே “Field Test” என்று ஒரு டெஸ்ட் செய்து அதில் பார்வை எந்த அளவிற்கு இழக்கப்பட்டிருக்கு என்று கண்டுப்பிடிப்பார்கள்.



(ஃபீல்ட் டெஸ்ட் செய்வது)

ஏற்படும் பதிப்புகள்:
இந்த நோய்க்கு “பதுங்கும் பார்வைத் திருடன்” (“The Sneak Thief of Sight”) எர்னு வேறு ஒரு புனைப் பெயரும் இருக்கிறது. அதாவது ஏறக்குறைய 40% சதவீத பார்வை பறிபோகிற வரைக்கும் ஒருவரால் இந்த நோய் தனக்கு வந்திருக்கு என்று கண்டுப்பிடிக்கக முடியாதாம். இந்த நோய் ஒருவருக்கு வந்துவிட்டால், நீரழிவு நோய் மாதிரி, இந்த நோயை குணப்படுத்த முடியாது, ஆனால் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளலாம். இந்த நோயினால் பார்வை இழப்பு ஏற்பட்டுவிட்டால், மீண்டும் இழந்த பார்வையை திரும்ப பெற முடியாது. அதற்கு காரணம், கண்ணில் சுரக்கும் நீரின் அழுத்தமானது கூடும்போது, அந்த அழுத்தமானது, பார்வை நரம்பைத் (Optic Nerve) தான் பாதிக்கிறது. இதனால் முதலில் ஓரப்பார்வை (side vision) பாதிக்கப்பட்டு, பிறகு படிப்படியாக நேர் பார்வையும் (tunnel vision) பாதிக்கப்பட்டு, கடைசியில் கண்ணை குருடாக்கிவிடும். இந்த நோயினால் முதலில் ஓரப்பார்வை பாதிக்கப்படுவதால், நம்மால் அதனை எளிதாக உணர்ந்து கொள்ள இயலாது. இந்த நோய் வந்துவிட்டால், பிறகு கண்ணுக்கு வரக்கூடிய கண் புரை நோய் (Cataract) போன்ற நோய்கள் கண்டிப்பாக வந்தே தீருமாம்.

சிகிச்சை முறைகள்:
இந்த நோய் ஒருவருக்கு இருக்கிறது என்று கண்டுப்பித்து விட்டால், அதன் வீரியத்தைப் பொறுத்து சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. ஆரம்ப கட்ட நிலையில், கண்டுப்பிடிக்கப்பட்டால், கண் சொட்டு மருந்து(Eye Drops) பரிந்துரைக்கப்படுகிறது. 


இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், ஒரு நாள் கூட தவறாமல் மருத்துவர்கள் குறிப்பிட்ட நேரப்படி கண்ணுக்கு அந்த சொட்டு மருந்துகளை போட்டுக்கொள்ள வேண்டும். சில சமயம் மாத்திரைகளும் பரிந்துரைக்கப்படுமாம். ஆனால் இங்குள்ள மருத்துவர்கள், மாத்திரைகளை அதிகம் பரிந்துரைப்பதில்லையாம், ஏனென்றால், அந்த மாத்திரைகளினால் பக்க நிகழ்வுகள் (side effects) அதிகம் ஏற்படுவதால் தானாம். இதற்கு அடுத்த நிலையில் இருப்பவர்களுக்கு, லேசர் முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 



இந்த நோயின் தாக்கம் அட்வான்ஸ் கட்டத்துக்கு போயிருந்தால் டிராபேகுலெக்டமி அறுவை சிகிச்சை (Trabectome Surgery)” முறையை பயன்படுத்தி, அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவருவார்கள்.




பொதுவாக நாம் எல்லோரும் உடம்பிற்குத் தான் வருடத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்கிறோம். ஆனால் கண்களுக்கும் நாம் முக்கியத்துவம் கொடுத்து பரிசோதித்துக்கொள்ள வேண்டும். மூக்கு கண்ணாடி அணிபவர்கள் இரண்டு வருடத்துக்கு ஒரு முறையாவது கண்களை பரிசோதித்துக்கொள்வார். ஆனால் கண்ணாடி அணியாத பெரும்பாலானவர்கள், கண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே இல்லை. நான் ஆரம்பத்தில் சொன்னபடி இந்த  நோய் ஒரு “பதுங்கும் பார்வைத் திருடன்”. அதனால் நாம் விழிப்புடன் நம் கண்களை பரிசோதித்துக்கொண்டு இந்த திருடனிடமிருந்து நம் கண்களை பாதுக்காத்துக் கொள்வோம்.

பின் குறிப்பு: இந்த பதிவு என்னுடைய 200வது பதிவு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்ன எழுதப்போகிறோம் என்று தெரியாமல் இந்த வலைப்பூவை தொடங்கினேன். இன்று இந்த 200வது பதிவு ஒரு விழிப்புணர்வு பதிவாக இருக்க வேண்டும் என்று எண்ணி இந்த பதிவை எழுதினேன்.


Thursday, January 23, 2014

கொலஸ்ட்ரால் - தொடர்ச்சி

 

சென்ற வாரம் மீண்டும் உணவியலரை (Dietician) போய் சந்தித்தேன். அவர் முதல் தடவையே ஒரு பேப்பரை கொடுத்து, அடுத்த முறை வரும்போது, நீங்கள் தினமும் என்ன என்ன சாப்பிட்டீங்கன்னு எழுதிக்கிட்டு வரணும்னு சொல்லியிருந்தாங்க. அதனால நானும் தினமும் காலையில பிரட்டு இல்லன்னா சீரியல்ஸ், மதியம் சாதமும், கொழம்பும், காய்கறிகளும், இரவு இட்லி,தோசை இல்லன்னா பீட்ஸா, பாஸ்தான்னு சாப்பிட்டேன்னு அதில எழுதி கொண்டுபோயிருந்தேன். நீங்க எந்த அரிசியில சாதம் சாப்பிடுறீங்கன்னு கேட்டாங்க. நானும் பாஸ்மதி அரிசியில தான் சாப்பிடுறேன்ன்னு சொன்னேன். பாஸ்மதி அரிசியெல்லாம் அவுங்களுக்கு தெரிஞ்சிருக்கு. ஆனா இந்த இட்லி,தோசையைப் பத்தி தான் அவுங்களுக்கு ஒண்ணும் தெரியலை. இங்கிருக்கிற சில வெள்ளைக்காரர்களுக்கு தோசையைப் பற்றி தெரிஞ்சிருக்கு. ஆனா என் அதிர்ஷ்டம், இந்த அம்மாவிற்கு தோசை,இட்லி பற்றியெல்லாம் ஒண்ணுமே தெரியலை. அப்புறம் ஒரு வழியா அரிசியை ஊற வைக்கிறதிலிருந்து, இட்லி ஊத்துறது, தோசையை வார்த்துறது வரைக்கும் அவுங்களுக்கு புரிய வச்சேன். அவுங்க உடனே, நீங்க வந்து பாஸ்மதி அரிசியில தான் இதெல்லாம் சாப்பிடுறீங்க, அதனால ஒண்ணும் பிரச்சனையில்லைன்னு சொன்னாங்க. அப்பத்தான் எனக்கு புரிஞ்சுது, ஆஹா இந்த அம்மா, இட்லி,தோசை எல்லாம் கூட பாஸ்மதி அரிசியில தான் செய்வோம்னு நினைச்சுக்கிட்டாங்க போல. அட கடவுளே! சரி, மறுபடியும் முதல்லேருந்து ஆரம்பிப்போம்னு, நாங்க சாதத்துக்கு பாஸ்மதி அரிசியும், இந்த மாதிரி இட்லி, தோசைக்கு வேற அரிசியும் தான் பயன்படுத்துவோம். அதுவும் எங்க ஊர்ல, சாதத்துக்கு கூட வேற அரிசியும், பிரியாணிக்கு மட்டும் தான் பாஸ்மதி அரிசியும் பயன்படுத்துவோம்னு அவுங்களுக்கு விளங்கிற மாதிரி சொன்னேன்னு நினைச்சேன். ஆனா அவுங்க தலையைப் பிடிச்சுக்கிட்டு, உங்களோட  சாப்பாட்டு  விஷயத்துல இவ்வளவு குழப்பமான்னு கேட்டுட்டு (இன்னும் கேட்டா நமக்கு தலைவலியை உண்டு பண்ணிடுவான்னு நினைச்சுக்கிட்டாங்க போல!!!), ஒரு பேப்பரை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொடுத்தாங்க. அதுல, எந்த எந்த பொருட்கள்ல அதிகமா "GLYCAEMIC INDEX", எது எதில அந்த " GLYCAEMIC INDEX" குறைவா இருக்குதுன்னு போட்டிருந்துச்சு. நம்மா சாப்பிடுகிற பொருட்கள்ல அந்த " GLYCAEMIC INDEX" குறைவா இருக்கிற மாதிரி பார்த்துக்கனுமாம்.

அந்த பட்டியல் தான் இது.

 இங்க பால் வந்து ரெண்டு வகையா கிடைக்கும். ஒண்ணு வந்து "FULL CREAM", இன்னொன்னு வந்து "LITE MILK / SKIM MILK". அதாவது என்னன்னா, "FULL CREAM" வந்து, நல்லா கெட்டியா, கொழுப்புச்சத்து எல்லாம் எடுக்காம இருக்கும், இன்னொரு பால் வந்து, மொட்டைத் தண்ணியா, கொழுப்புச்சத்து கொஞ்சம் கூட இல்லாம வாய்க்கு விளங்காம இருக்கும். நான் முன்னாடியெல்லாம் அந்த "FULL CREAM" பால்ல தான்  காபியோ,டியோ குடிப்பேன். (நல்லா கவனிச்சுக்குங்க, போட்டுக்குடிப்பேன்னு சொல்லலை, ஏன்னா போட்டுக் கொடுக்கிறது வீட்டு அம்மணியோட வேலையாச்சே!!!) போன தடவைவே, நீங்க "LITE MILK" தான் குடிக்கணும்னு சொன்னாங்க. அதனால நானும் அந்த "LITE MILK"ல டீயை குடிச்சேன். கடவுளே, வாய்க்கு விளங்கலை. டீயே இந்த நிலமைன்னா, காபி எப்படியிருக்கும்னு நினச்சுக்கிட்டு, சரி,இனிமே டீக்கு தடா போட்டுட வேண்டியது தான் போலன்னு முடிவெடுத்தேன். நல்ல காலம், நண்பர் அண்ணா சுந்தரம், கொலஸ்ட்ராலுக்காகவே ஒரு பால் இருக்குது அதை வாங்கி குடிங்கன்னு சொன்னாரு. அந்த பாலோட பேரு "HEART ACTIVE" . இப்ப இதுல தான் டீ குடிக்கிறதே. பரவாயில்லைன்னு தான் சொல்லணும்.

 
 
அப்புறம் அவுங்க ஒரு நாளைக்கு ரெண்டு பழமாவது சாப்பிடணும்னு சொன்னாங்க. போன தடவை பாலுக்கு வேட்டு வச்சாங்க, இப்ப தயிருக்கு வேட்டு வச்சுட்டாங்க. அந்த வீணாப்போன தண்ணிப்பால் தயிரைத்தான் தான் சாப்பிடணுமாம். அம்மணி எப்பவும் கெட்டியான பாலைக் காய்ச்சித்தான் தயிர் செய்வாங்க, இப்ப அந்த "HEART ACTIVE" பால்லேருந்து நேத்து தான் தயிர் உறைய வச்சிருக்காங்க. பார்ப்போம், அந்த தயிர் எப்படியிருக்குன்னு.

பாட்டி வைத்தியம் -  இதுக்கு நடுவுல என் நண்பரோட மாமனார் ஊரிலிருந்து வந்தவர், எனக்கு கொலஸ்ட்ரால் இருக்குதுன்னு கேள்விப்பட்டவுடனே, அம்மணிகிகிட்ட இட்லி ஊத்தும்போது, முணு, நாலு இட்லியில பூண்டை தோலுரிச்சு போட்டுடுமா, அதுவும் இட்லியோட வெந்துடும். அந்த இட்லிகளை அவர் சாப்பிடட்டும். அப்புறம் கொலஸ்ட்ராலை நீங்க தான் தேடணும்னு சொன்னாரு. அடுத்த வாரத்திலிருந்து தான் அதை முயற்சி செய்து பார்க்கணும்.

 
 



Sunday, December 22, 2013

Controlling Bad cholesterol - உடலில் உள்ள கெட்ட கொழுப்பை தடுக்கும் முறைகள்

நான் 40 வயது வரைக்கும் உடம்பைப் பற்றி யோசிக்காமல் இருந்து விட்டேன் (உடற்பயிற்சி என்றால் என்ன, என்று கேட்கும் அளவில் தான் இருந்தேன்). 40 வயதுக்கு பிறகு தான் உடம்பைப் பற்றிய பயம் வந்தது. அதனால் இந்த ஆண்டு ஆரம்பத்தில் மருத்துவரிடம் சென்று முழு உடல் பரிசோதனையை செய்தேன். அப்போது இந்த சக்கரை, கொலஸ்ட்ரால் இதெல்லாம் எதுவிமில்லை என்று சொல்லிவிட்டார்கள். அதனால் கொஞ்சம் நிம்மதியாக இருந்தேன். இரண்டு வாரத்திற்கு முன்பு மீண்டும் முழு உடல் பரிசோதனையை செய்யும்போது, கொலஸ்ட்ரால் 6.2 இருக்கிறது. 5.2க்குள் தான் இருக்க வேண்டும். அதனால் நீங்கள் உணவியலரை (Dietician) சந்தித்து, அவரின் அறிவுரைப்படி, உங்களின் உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்று என்னுடைய மருத்துவர் எடுத்துரைத்தார்.

அதன்படி, நேற்று அந்த உணவியலரை சந்தித்தேன். அவர் உங்களுடைய உடம்பில் கெட்ட கொழுப்பு அதிகமாக உள்ளது, நீங்கள் மது அருந்துவது இல்லாததால், உங்களுடைய தினசரி உணவு முறைகளை சொல்லுங்கள் என்றார். நானும் என்னுடைய உணவு முறைகளை சொன்னேன். அவர் எல்லாத்தையும் கணினியில் பதிவேற்றிக்கொண்டு, என்னிடம் இரண்டு தாள்களை கொடுத்தார். அதில் கொழுப்புச் சத்து சம்பந்தமான உணவுத்திட்டம் இருந்தது. எதெல்லாம் உடம்பில் கெட்ட கொழுப்பை (LDL கொலஸ்ட்ரால்) உருவாக்கக்கூடியது, எதெல்லாம் நல்ல கொழுப்பை(HDL கொலஸ்ட்ரால்) உருவாக்கக்கூடியது என்று குறிப்பிட்டு இருந்தது.




நான் சைவம் என்பதால், அந்த உணவியாலர் அசைவ உணவு வகைகளை அடித்து விட்டார்.



இதனை பார்த்து, நீங்களும் அதன்படி உங்களின் உணவு பழக்கங்களை மாற்றிக்கொண்டு, இந்த கெட்ட கொழுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ளுங்கள். 
 

இப்போதெல்லாம் நான் மதியம் அலுவலகத்தில் உணவு சாப்பிட்டுவிட்டு, கோவிலில் வெளிப் பிரகாரம் வருவது மாதிரி 20 நிமிடங்களுக்கு அலுவலகம் உள்ள சாலையை 3 முறை பிரகாரமாக வருகிறேன். பிறகு இரவு உணவு சாப்பிட்டு விட்டு. வீட்டிற்கு பின்னால் இருக்கும் இடத்தில் 108 சுற்று சுற்றி வருகிறேன். தினமும் இதையெல்லாம் கோவிலில் செய்துக்கொண்டிருந்தால் புண்ணியமாவது கிடைக்கும்!!


அடுத்த மாதம் மீண்டும் நான் அந்த உணவியலரை சந்திப்பேன். அப்போது அவர் கூறும் விஷயங்களை இந்த பதிவின் தொடர்ச்சியாக பதிகிறேன்.



கொலஸ்ட்ரால் வரும் முன் காப்போம்!!!!!