Thursday, February 27, 2014

குழந்தையினால் ஏற்பட்ட தர்மசங்கடம்

இந்த சம்பவம் ஏறக்குறைய 17,18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அப்போது நான் செட்டிநாடு சிமெண்ட் கம்பெனியின் சிமெண்ட் ஆலையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த சமயம். அந்த ஆலை, கரூர்க்கு அருகில் புலியூர் எனும் இடத்தில் இருக்கிறது. ஆலையை விட்டு வெளியே வந்தால் பேருந்து நிற்குமிடம் இருக்கும். ஒரு நாள் திருச்சி செல்வதற்காக அந்த பேருந்து நிற்குமிடத்தில் நின்றுகொண்டிருந்தேன். பேருந்தும் வந்தது, நான் முன்னாடி சென்று ஏறினேன். வண்டிக்குள் சரியான கூட்டம். முன்பக்கம் ஏறிய என்னை கூட்டம் தள்ளி, தள்ளி வண்டியின் நடுப்பக்கத்துக்கு கொண்டு வந்து நிறுத்தியது. அப்போ, எனக்கு முன்னாடி ஒரு பெண்மணி, கைக் குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு நின்றுக்கொண்டிருந்தார்கள். அந்த குழந்தைக்கோ மிஞ்சிப்போனா இரண்டு வயசு இருக்கும். குழந்தையும் அழுது கொண்டு இருந்ததால், அந்த பெண்மணி தோளில் தலையை சாய்க்க வைத்து அதை தூங்க வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த குழந்தையோ தோளில் தலையை சாய்க்காமல், அழுது கொண்டு வந்தது. அந்த பெண்மணிக்கு யாரும் பரிதாபப்பட்டு இடம் கொடுக்கலை. பின்னாடி நின்றுக்கொண்டிருந்த எனக்கு ரொம்ப கஷ்டமாப்போச்சு. யாருக்குமே மனிதாபிமானமே இல்லையேன்னு நினைச்சுக்கிட்டு, அந்த குழந்தையின் அழுகையை நம்மளால நிறுத்த முடியுமான்னு, ரெண்டு கையிலும்  சொடக்கு போட்டு காண்பிச்சேன், அது அழுகையை நிறுத்தலை. அப்புறம் முகத்தை கொஞ்சம் அஷ்டக்கோணலாக்கி, ரெண்டு கையையும் காதுக்கிட்ட வச்சு, கோமாளித்தனமான சேஷ்டைகளை எல்லாம் செஞ்சேன். உடேன குழந்தை அழுகையை நிறுத்தி, என்னைய வச்ச கண்ணு வாங்காம பார்த்து சிரிக்க ஆரம்பிச்சிடுச்சு. எனக்கு ரொம்ப சந்தோஷம். நம்மலாளையும் அழுகிற குழந்தையை சிரிக்க வைக்க முடியுதேன்னு. சரி குழந்தை தான் அழுகையை நிறுத்திடிச்சே, அப்புறம் நம்ம எதுக்கு கோமாளி வேஷம் போடணும்னு, நான் சும்மா நின்னேன். உடனே மறுபடியும் குழந்தை ஆழ ஆரம்பிச்சிடுச்சு. திருப்பியும் நான் கோமாளி வேஷம் போட்டவுடனே, குழந்தை சிரிச்சுது. ஆஹா, இதென்ன பிள்ளையார் பிடிக்க போய் குரங்கு பிடிச்ச கதையா இல்ல இருக்குனு நொந்துக்கிட்டு, கோமாளி வேஷத்தை தொடர ஆரம்பிச்சேன்.
 
என்னோட வலது பக்கத்துல இருக்கிற மூணு பேர் சீட்டுல ஜன்னல் ஓரத்துல உட்கார்ந்திருந்த ஒருத்தர் எந்திரிச்சு, என் பின்னாடி நின்னுக்கிட்டு, என்னைய உட்காரச் சொன்னாரு. எனக்கோ தலையும் புரியலை, வாலும் புரியலை. என்னடா, நமக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமான்னு மனசுக்குள்ள சந்தோசப்பட்டுக்கிட்டு ஓரத்துல உட்கார்ந்தேன். (மற்ற ரெண்டு பேரும் உள்ள தள்ளி உட்கார்ந்தாங்க). எனக்கு இடம் குடுத்தவரும், குழந்தையை வாங்கிக்குங்கன்னு சொன்னாரு. நானும் அந்த பெண்மணிக்கிட்ட, குழந்தையை கொடுங்கன்னு கையை நீட்டினேன். அதுவரைக்கும் நான் பண்ணின சேஷ்டைகளையெல்லாம் சிரிச்சு பார்த்துக்கிட்டு இருந்த குழந்தை, நான் கையை நீட்டினவுடனே, மறுபடியும் ஓன்னு ஒரே அழுகை. அந்த பெண்மணியும், பரவாயில்லைங்க, இது யாரு கிட்டேயும் போகாதுன்னு சொன்னாங்க. அப்பத்தான், எனக்கு இடம் கொடுத்தவருக்கு ஏதோ தப்பு நடந்திருக்குன்னு புரிஞ்சிருக்கும் போல, உடனே அவர் என்னிடம் நீங்க தானே அந்த குழந்தைக்கு அப்பா? அப்படின்னு கேட்டாரு, நான் ஒரு நொடி ஆடிப்போயிட்டேன். என்னடாது, பெரிய வில்லங்கத்தை கூட்டுறதுக்கு தான் நம்மளை உட்கார சொன்னாரோன்னு பயமாயிடுச்சு. என் குழந்தை இல்லைங்கன்னு சொன்னேன். அதுக்குள்ளே பின்னாடி நின்னுக்கிட்டு இருந்த வேற ஒருத்தர், "அது என் குழந்தைங்கன்னு" ஒரு சத்தம் கொடுத்தாரு. என்னடா, ஆளாளுக்கு நம்ம குழந்தையை ஏலம் போடுறாங்கன்னு நினைச்சிருப்பார் போல, பாவம் அவர் நிலமை அப்படியாயிடுச்சு. அப்பத்தான் அந்த மனிதர் ஏன் எனக்கு இடத்தை விட்டுக்கொடுத்தாருன்னு புரிஞ்சுது. நான் உடனே எந்திரிச்சு, அவரையே உட்காரச் சொன்னேன். அவரும் உட்கார்ந்துக்கிட்டு, "சாரிங்க, நீங்க தான் அந்த குழந்தைக்கு அப்பான்னு" நினைச்சுட்டேன்னு" சொன்னாரு. அடப்பாவி, இந்த பால்வடியும் முகத்தை  பார்த்தா கல்யாணம் ஆகி, ஒரு குழந்தைக்கு அப்பா மாதிரியா தெரியுதான்னு, மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டேன்.  அதிலிருந்து பஸ்ல எந்த குழந்தையையும் கொஞ்சுறது கூட இல்லை.
 

Monday, February 24, 2014

ஸ்மார்ட் போர்டு - interactive white board






நான் முன்பே சொல்லியிருந்தத மாதிரி, சிட்னியில் தமிழ் பள்ளிக்கூடங்கள் வார இறுதி நாளான சனிக்கிழமையன்று அரசாங்கப் பள்ளிகளில் இயங்கும். அதற்கு இங்குள்ள அரசாங்கம் அனுமதியளித்திருக்கிறது. அந்த அரசாங்கப் பள்ளியின் வகுப்பறைகளில் இருக்கும் மேசை, நாற்காலி, வெண் பலகை (white board) போன்றவற்றவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழ் வகுப்பு முடிந்தவுடன், அந்த வகுப்பறை முன்பு எவ்வாறு இருந்ததோ, அதே மாதிரி வைத்துவிட்டு செல்லவேண்டும். அந்த வகுப்பறையில் வெண்பலகையோடு, வேறொரு வெண்பலகையும் இருக்கும். அந்த வெண்பலகைக்கு "ஸ்மார்ட் பலகை" அதாவது " interactive white board" என்று பெயராம். நாங்கள் அந்த பலகையை பயன்படுத்த அனுமதியில்லை. (அனுமதித்தாலும், எங்களுக்கு அதை பயன்படுத்த தெரியாது என்பது வேற விஷயம்). நானும் பட்டிக்காட்டான், நகரத்தை சுத்திப்பார்த்த கதையா அடிக்கடி அந்த பலகையை நோட்டம் விட்டத்துண்டு. நான் படித்தது எல்லாம் கரும்பலகையில் தான். எனக்கு வெண்பலகையே, வெளிநாடுகளில் வேலைக்கு வந்த பிறகு தான் தெரியும். அப்படியிருக்க இந்த ஸ்மார்ட் பலகையை உபயோகப்படுத்தி எப்படி குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பார்கள் என்று எனக்கு ஒரே ஆச்சிரியம். நாங்கள் தமிழ் சொல்லிக்கொடுக்கும் அந்த அரசாங்கப் பள்ளியோ ஆரம்பப் பள்ளிக்கூடம் அதாவது ஆறாவது வகுப்பு வரை இருக்கும் பள்ளிக்கூடம்(இங்கு ஆரம்பப் பள்ளியானது பாலர் பிரிவிலிருந்து(Kinder) ஆறாம் வகுப்பு வரை இருக்கும்) . எல்லா வகுப்பு அறைகளிலும் இந்த ஸ்மார்ட் போர்டு இருக்கும்.
 
இந்த ஸ்மார்ட் போர்டை பயன்படுத்துவதைப் பற்றி தெரிந்துக்கொண்டு, பிறகு அதனை உபயோகிப்பதற்கு அந்த அரசாங்கப்பள்ளியின் அனுமதியை கோரலாம் என்று நினைத்த எங்கள் தமிழ் பள்ளியின் முதல்வர்,  அரசாங்கத்தின் பிற மொழிகளுக்கான கல்வியியல் துறையின், கல்வி அதிகாரியை தொடர்புக்கொண்டு, ஸ்மார்ட் போர்டை பயன்படுத்துவதைப் பற்றி ஆசிரியர்களுக்கான ஒரு பயிலரங்கை(Teachers workshop on smart board training)  ஏற்பாடு செய்தார். அந்த கல்வி அதிகாரி ஸ்மார்ட் போர்டை பயன்படுத்துவதற்கு, 30நாட்கள் மட்டும் கட்டணம் இல்லாமல் பயன்படுத்துவதற்கான மென்பொருளை (software) மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்துக்கொண்டு வரச்சொன்னார். அந்த பயிலரங்கோ சென்ற வாரம் நடந்தது. சரியாக 5மணிக்கு அந்த பயிலரங்கு நடக்கும் இடத்துக்கு வரச்சொன்னார்கள்.  அன்று தான் மாலை 3மணிக்கு எங்கள் கம்பெனியின்  மீட்டிங் இருந்தது. நானும் 4மணி வரை அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, கிளம்பி 5மணிக்கெல்லாம் அந்த இடத்துக்கு போய் சேர்ந்தேன். என்னைப்போல் இன்னும் நான்கு ஆசிரியர்களும் வந்திருந்தார்கள். ஸ்மார்ட் போர்டை பயன்படுத்துவதற்கான அடிப்படைகளை மட்டும் கிட்டதட்ட இரண்டரை மணி நேரம் எங்களுக்கு சொல்லிக்கொடுத்தார். எங்கள் மடிக்கணினியில் இருந்த அந்த மென்பொருளைக்கொண்டு, மடிக்கணினியை அந்த ஸ்மார்ட் பலகையாக பாவிக்கவைத்து அவர் சொல்லிக் கொடுத்த விதம் மிகவும் அருமையாகவும், எளிதாகவும் இருந்தது. ஸ்மார்ட் பலகையை கைகளாலும், அதற்குரிய பேனாவாலும் பயன்படுத்தலாம். ஸ்மார்ட் பலகையை பயன்படுத்துவது எளிதாகத்தான் இருக்கிறது. ஆனால் நாம் சொல்லிக்கொடுக்கும் பாடங்களையும், பயிற்சிகளையும் ஸ்மார்ட் பலகையைக்கொண்டு உருவாக்குவது தான் சற்று கடினம். அதுகூட நாம் நேரத்தை ஒதுக்கினால் எளிது தான்.

நான் இதை கற்றுக்கொண்டு வந்து கிட்டதட்ட இரண்டு வாரம் ஆகிவிட்டது. அதற்குப்பிறகு நான் அந்த மடிக்கணினியில் இருக்கும் அந்த மென்பொருளை திரும்பிக்கூட பார்க்கவில்லை. இப்படியிருந்தால் அந்த ஸ்மார்ட் பலகையை இயக்குவது மிகவும் கடினம் தான்.

 
 

விஞ்ஞானம் இன்றைக்கு கல்வித்துறையில் இந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறது என்று நினைக்கும்போது மிகவும் ஆச்சிரியமாக இருக்கிறது. சரி, இங்கே எல்லாப்பள்ளிகளிலும் இந்த ஸ்மார்ட் பலகை இருக்கிறது, அதேமாதிரி நம் தமிழ்நாட்டில் இந்த பலகை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறதா என்று மனதுக்குள் ஒரு கேள்வி எழுந்தது. உடனே கூகிள் ஆண்டவரிடம் இதற்கான பதியளிக் கேட்டேன். அங்கும் ஒரு சில கல்லூரிகளிலும், சில பள்ளிகளிலும் அதுவும் மாநகராட்சி பள்ளிகளிலும் இது அறிமுகப்படுத்தப்பிட்டிருக்கு என்று தெரிந்தவுடன் எனக்கு மிகுந்த ஆச்சிரியத்தையும் சந்தோசத்தையும் அளித்தது. பொதுவாக திருமணமான பெண்கள், பிறந்த வீட்டைக் காட்டிலும் புகுந்த வீடு வசதியாக இருந்தாலும், பிறந்தவீட்டின் பெருமைகளைத்தான் பேச விரும்புவார்கள். அதே மாதிரியான மன ஓட்டத்தைத் தான் எனக்கு கூகிள் ஆண்டவரின் பதில் தந்தது.
 
தமிழ் நாட்டில் ஸ்மார்ட் பலகையை பயன்படுத்தும் கல்லூரிகளைப் பற்றிய செய்தியை இங்கு சென்று பாருங்கள் - ஹிந்து பத்திரிக்கையின் செய்தி

 

Thursday, February 20, 2014

தலைவா திரைப்பட அனுபவம் – கதாநாயகியின் அறிமுகக் காட்சி




3.45மணிக்கு அந்த இடத்துக்கு போனா, யாரையும் காணோம், உதவி இயக்குனர் கிருஷ்ணாவுக்கு போன் போட்டா,”சார் நீங்க அங்கேயே இருங்க நாங்க இன்னும் ஒரு கால் மணி நேரத்துல வந்துடுவோம்னு சொன்னாரு”. சரின்னு நானும் காத்துக்கிட்டு இருந்தேன். 4.15 மணிக்கு இன்னொரு ஒரு நண்பர் வந்தாரு. மணியோ 4.30 ஆயிடுச்சு, படப்பிடிப்பு குழுவோ வர்ற மாதிரி தெரியலை. நானும் அந்த நண்பரும் ரோட்ல நின்னு பேசிக்கிட்டு இருந்தோம். அப்பத்தான் நம்ம கிருஷ்ணா மட்டும் வந்து, சாரி சார், இன்னைக்கு உங்களோட காட்சியை எடுக்க முடியாது. நாங்க பாட்டில் ஃபேக்டரியில எடுத்துக்கிட்டு இருக்கிற காட்சியே இன்னமும் முடியலை. ரொம்ப ரொம்ப சாரி சார்னு சொன்னாரு. நான் ஒண்ணுமே சொல்லாம அவரையே பார்த்துக்கிட்டு இருந்தேன். டைரக்டர் சார், நீங்க வெட்டியா காத்துக்கிட்டு இருக்கவேணாம்னு தான், நேர்ல போய் சொல்லச் சொன்னாருன்னு மறுபடியும் எங்களை சமாதானம் செய்ய பார்த்தாரு. எனக்கோ செமை கடுப்பு, இவுங்களுக்காக இரண்டு நாள் லீவு போட்டு, பத்தாததுக்கு, இன்னைக்கு பர்மிஷன் வேற போட்டு வந்து,இப்படி கழுத்து அறுக்குறாங்களேன்னு ஆயிடுச்சு. அந்த கடுப்புல,, எங்களுக்கு வேற வேலை வெட்டி இல்லாம, உங்க படத்துல நடிக்க வந்தோம் பாருங்க, அது தான் நாங்க செஞ்ச பெரிய தப்பு, இதுல நீங்க எதுக்கு சாரி கேட்கிறீங்க கிருஷ்ணான்னு” முகத்தை சாதாரணமா வச்சுக்கிட்டு சொன்னேன். அப்படி நான் சொன்னவுடனே, கிருஷ்ணா என்னைய கட்டிப்பிடிச்சு, “சார்! உங்க நிலமை எனக்கு புரியுது, எங்களால நாங்க நினைச்சா மாதிரி இங்க சூட்டிங் முடிக்க முடியலை. அதனால தான் இந்த மாதிரி ஆகுது. நீங்க தப்பா எடுத்துக்காதீங்க, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிங்கன்னு” என்னைய சமாதானப்படுத்திட்டு நாங்க திருப்பி கூப்பிடுறோம்னு சொல்லிட்டு போயிட்டாரு. அவர் போன ஒரு அஞ்சு நிமிஷத்துக்குள்ள என்னோட மற்ற மூன்று நண்பர்களும் வந்தார்கள். அவுங்க வந்தபோது மணி சரியா அஞ்சு மணி. என் கூட நின்னுக்கிட்டு இருந்த நண்பர், “என்னங்க உங்களையெல்லாம் 4மணிக்கு வாங்கன்னா, 5மணிக்கு வரிங்க?” இருக்கிறவுங்களை வச்சு அந்த continuity ஷாட் எடுத்து முடிச்சாச்சுன்னு ஒரு குண்டைப்போட்டாரு. உடனே மூணு பேரும், “உண்மையாவா, உண்மையாவான்னு” பதறிப்போய் கேட்டாங்க. அப்புறம் அவுங்கக்கிட்ட, இன்னைக்கு சூட்டிங் கேன்ஸல் ஆயிடுச்சுன்னு சொன்னவுடனே அவுங்களுக்கும் ரொம்ப கடுப்பாயிடுச்சு. அப்புறம் எல்லோரும் வீட்டுக்கு போய் சேர்ந்தோம்.

இது நடந்தது திங்கட்கிழமை. மறுபடியும் புதன்கிழமை இரவு இன்னொரு உதவி இயக்குனர் ராகேஷ்கிட்டேருந்து போன். மறு நாள் வியாழக்கிமை காலைல சரியா 8மணிக்கெல்லாம் உங்களோட காட்சியை முதல்ல எடுக்கிறோம். அதனால இந்த இடத்துக்கு சரியா 8மணிக்கெல்லாம் வந்துடுங்க. லேட் பண்ணிடாதீங்க. 10மணிக்கெல்லாம் முடிஞ்சுடும் அப்படின்னு சொன்னாரு. அந்த வியாழக்கிழமை எங்களுக்கு அரசு விடுமுறை நாள். அதனால பரவாயில்லைன்னு நினைச்சா, அன்னைக்கு நெருங்கிய நண்பரோட மகன் கல்யாணம், கண்டிப்பா வந்துடுங்கன்னு வேற சொல்லியிருந்தாரு. திங்கட்கிழமை அன்னைக்கு நான் டென்ஷன் ஆனேன். புதன்கிழமை வீட்டு அம்மணி டென்ஷன் ஆயிட்டு, சாமி ஆடாத குறை தான் போங்க. “ஏதோ இத்தனை வருஷத்துல நம்மளையும் மதிச்சு, இங்க நடக்கிற ஒரு கல்யாணத்துக்கு கூப்பிட்டிருக்காங்க, இப்பப்பார்த்து, உங்களோட சூட்டிங்.  ஊர்ல நடக்கிற கல்யாணத்துக்கு தான் போக முடியலை. இங்க நடக்கிற கல்யாணத்துக்காவது போகலாம்னு பார்த்த முடியலையேன்னு” ஒரே புலம்பல். 10மணிக்கெல்லாம் முடிஞ்சுடும்னு சொல்றாங்களே(நான்  அவுங்களை அப்பவும் நம்பினேன்!!!!), முடிஞ்சவுடனே நான் கிளம்பி வந்து, உங்களை கூட்டிக்கிட்டு எப்படியும் 12 மணிக்கெல்லாம் போயிடலாம்னு சொல்லி அவுங்களை ஒரு வழியா சமாதானப்படுத்தி, மறு நாள் காலைல 7மணிக்கெல்லாம் கிளம்பி அவுங்க சொன்ன அந்த H.A.R.T(Honda Australia Rider Training) அப்படிங்கிற இடத்துக்கு சரியா 8மணிக்கெல்லாம் போய் சேர்ந்தேன். எங்க வீட்டிலிருந்து அது கொஞ்ச நஞ்ச தூரம் இல்ல, ஏறக்குறைய 65கிலோமீட்டர். அங்கப்போனவுடனே, அதிசயமா, படக்குழுவோட பஸ் இருந்துச்சு, இயக்குனர்,உதவி இயக்குனர், காமிரா மேன் எல்லோரும் வந்து காலை சாப்பாடு சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. கேட்டரிங் பண்றவரு, பெரிய அடுப்பைக் கொண்டுவந்து வச்சுக்கிட்டு, சுட,சுட மசால் தோசையும், சாம்பார்,சட்னி எல்லாம் வச்சுக் கொடுத்துக்கிட்டு இருந்தாரு. நானும் போய் அந்த தோசையை சாப்பிட்டு முடிச்சு மணியைப் பார்த்தா 8.30 மணியாகியிருந்தது. சூட்டிங் ஆரம்பிக்கலை. நான் சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது தான், இயக்குனர் அங்க பக்கத்துல இருந்தவங்கக்கிட்ட, என்னைய காமிச்சு, “சார், படம் ரிலீஸ் ஆனவுடனே, பொட்டியைக் தூக்கிக்கிட்டு கோடம்பாக்கம் வந்துடுவாரு பாருங்க. அவர் நடிச்ச அந்த நடனக் காட்சி ரொம்ப அருமையா வந்திருக்குன்னு” என் தலையில ஒரு கிலோ இஸ் கட்டியை தூக்கிவச்சாரு. இவுங்க பாடு பேசிக்கிட்டே தான் இருக்காங்க, சூட்டிங் ஆரம்பிக்கிற மாதிரி தெரியலை. கிருஷ்ணாவைப் பார்த்து, எப்ப சூட்டிங் ஆரம்பிக்க போறீங்கன்னு கேட்டேன், அதுக்கு அவரும், சார் “கதாநாயகி மேக்கப் போட்டுக்கிட்டு இருக்காங்க, அது கொஞ்சம் கஷ்டமான மேக்கப், அதனாலதான் லேட்டாகிக்கிட்டு இருக்குது. அவுங்க மேக்கப்போட்டுக்கிட்டு வந்தவுடனே, அவுங்களோட ஒரு காட்சியை எடுத்தவுடனே, உங்க காட்சி தான்ன்னு சொன்னாரு. எனக்கு மறுபடியும் கோபம் வந்துடுச்சு. எங்க காட்சியை தானே முதல்ல எடுப்போம்னு சொன்னிங்கன்னு கேட்டேன், அந்த காட்சி, சீக்கிரம் முடிஞ்சிடும், அதனால கவலைப்படாதீங்க, 11மணிக்கெல்லாம் உங்க காட்சியை எடுத்து முடிச்சிடலாம்னு சொன்னாரு. ஆஹா, 10மணியிலிருந்து 11மணியாயிடுச்சே. அந்த கல்யாணத்துக்கு போக முடியாது போல இருக்கேன்னு யோசிச்சு, மறுபடியும், “கிருஷ்ணா, அப்ப எங்க காட்சியை மதியானமா எடுங்க, நான் அந்த கல்யாணத்துக்கு மட்டும் போயிட்டு வந்துடுறேன்னு சொன்னேன்”. அவரும், “சார், மதியானத்துக்கு கார் crashing பண்ற காட்சியை எடுக்கணும், அது எடுக்க ரொம்ப லேட்டாகும். அதனால அதை கடைசியா தான் எடுக்க முடியும். அதை எடுத்து முடிச்சா, இங்க ஆஸ்திரேலியாவில சூட்டிங் முடிஞ்சுது, நாளைக்கு நாங்க எல்லோரும் காலைல கிளம்புறோம். அதனால இன்னைக்கு ஒரு நாள் மட்டும் கொஞ்சம் பொருத்துக்குங்க சார்ன்னு” சொன்னாரு. சரி, இன்னைக்கு அந்த கல்யாணத்துக்கு போகமுடியாதுன்னு முடிவுபண்ணி, அந்த நண்பருக்கு போன் செய்து ஒரு மன்னிப்பை போட்டேன். 9மணிக்கு மேலதான், கதாநாயகியை அறிமுகப்படுத்துகிற காட்சியை எடுக்க ஆரம்பிச்சாங்க.

அதாவது, வரிசையா ஐந்தாறு காரை ரெண்டுப்பக்கமும் பக்கத்துல பக்கத்துல கொஞ்சம் இடைவெளி விட்டு நிக்க வச்சாங்க.




கடைசி கார்ல காமிரா மேன் நிரவ்ஷா காமிராவை வச்சுக்கிட்டு உட்கார்ந்திருந்தாரு. அவர் பக்கத்துல இயக்குனரும் உட்கார்ந்துக்கிட்டு இருந்தாரு. முதல்ல ரிகர்சல் மட்டும் பார்த்தாங்க. அது வரைக்கும் விஜய் வரலை. அதற்கப்புறம் தான் விஜய் வந்தாரு.  இயக்குனர் action சொன்னவுடனே, முன்னாடி முத கார் கிட்ட நின்னுக்கிட்டு இருந்த இணை இயக்குனர் பிரசன்னா, முத காரை போக சொன்னாரு. பின்னாடியே அடுத்த காரும் போக ஆரம்பிச்சுது. அப்பத்தான் அமலாபால், வலது புறத்திலிருந்து ஓடியாரனும். அவுங்க இந்த சைட் போனவுடனே, அடுத்த கார் போகணும். அப்புறம் மறுபடியும் அவுங்க இந்த பக்கம் போகணும். அப்புறமா மறுபடியும் திரும்பி வந்து, விஜய் வர்ற கார்ல மோதி விழுகிற மாதிரி கீழே உட்கார்ந்து எந்திரிக்கணும். இது பண்றதுக்கே அவுங்க நாலைந்து டேக் எடுத்தாங்க. இதுல என்னன்னா, சரியா விஜய் வர்ற கார்ல தான் கீழே உட்காரணும். இதையெல்லாம், பின்னாடி ஒரு கார்ல உட்கார்ந்து படம் பிடிச்சுட்டு, அப்புறம் வலது பக்கத்துல ஒரு மரத்துக்கு பக்கத்துலேருந்து, முன் பக்க காட்சிகளை எடுத்தாங்க. மணி கிட்டதட்ட 11ஆயிடுச்சு.

கொஞ்ச நேரத்துல, எங்களோட அந்த continuity காட்சியை எடுக்கபோறோம், சீக்கிரம் வாங்கன்னு சொன்னாங்க. அடுத்த பகுதியில அந்த continuity காட்சியை, எப்படி continuity இல்லாம எடுத்தாங்கன்னு சொல்றேன். அதுல இன்னொரு கொடுமை என்னன்னா, 20 வருசத்துக்கு முன்னாடி என்னோட கனவுக்கன்னியா ஒருத்தவங்க இருந்தாங்க. அவுங்களை மாதிரி நீங்க இருக்கீங்கன்னு நான் அமலாபால் கிட்ட சொல்லனும்னு சொன்னாங்க. அட! கிரகமே, அவுங்க எங்க!! இவுங்க எங்கன்னு நினைச்சுக்கிட்டே சொன்னேன், நல்லகாலம், அந்த வசனம் எல்லாம் படத்துல வரலை. அதையெல்லாம் அடுத்த பகுதியில சீக்கிரம் சொல்றேன்.

- இன்னும் சொல்கிறேன்


Sunday, February 16, 2014

அப்பூதி அடிகளின் மகனாக ஓவியா

அப்பூதி அடிகள் வாழ்கை வரலாறு நாடகத்தில் அப்பூதி அடிகள் நாடகம் ஓவியா அவரின் மூத்த மகன் திருநாவுக்கரசராக நடித்தார். நான் செய்த ஒரு மிகப் பெரிய தப்பு,  உங்களுக்கு வேட்டி கட்டிவிடுவோம் என்று ஓவியாவிற்கு முன்பே சொல்லாதது தான். அந்த நிகழ்ச்சியன்று அவருக்கு வேட்டி கட்டிவிட்ட பாதிப்பை இந்த புகைப்படத்தை பாருங்கள்.  மேலும்...

குரு வழிபாட்டின் மூலம் இறை தேடல்


ஒவ்வொரு ஊரிலும், வருடா வருடம் கோயில் திருவிழா நடைபெறும். அந்தத் திருவிழாவின் ஒரு நாளில், தேர்த்திருவிழா நடைபெறும். அதாவது, அந்த கோயிலில் இருக்கும் சாமியை தேரில் வைத்து, ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுக்கூடி, அந்தத் தேரை ஊர்வலமாக ஊருக்குள் இழுத்துச்செல்வார்கள். இத்தேர்த்திருவிழா    மூலம், சில நல்ல காரணங்களை நாம் உணரலாம். முதல் காரணம்,   ஊருக்குள் ஒற்றுமை உண்டாகும். எப்படி என்றால், அந்தத் தேரை சில     பேரை மட்டும் வைத்து இழுக்க முடியாது. அதனால், ஊரில் உள்ள     எல்லோரும் இழுக்க வேண்டும். இனால் ஏழை, பணக்காரர் என்ற      வித்தியாசம் மறைந்து அனைவரும் ஒற்றுமையாக வாழ முடியும்.   அடுத்து, ஊருக்குள் கோயில் இருக்கும் நிலையில், ஊரே கோவிலாவது தேர்த்திருவிழாவில் தான். எப்படி     என்றால், வயதானவர்கள், நடமாட முடியாதவர்களை எல்லாம் சாமியே      அவர்களைத் தேடி வருவது என்பது இந்நாளில் தான்.கோவிலின் சிறப்பையும், தேரின் சிறப்பையும் பார்த்தோம். இனி நாம், சிவலிங்கங்களில்,     “காலம் செய்யும் சிவலிங்கத்தைப்பற்றி   அடுத்த இறையடியார் வாழ்க்கையில் பார்க்கலாம்.

-புத்தகத்தில்படித்தது.







சென்ற ஆண்டு இங்கு சிட்னி முருகன் கோவிலில் சைவ மன்றம் சார்பில் சேக்கிழார் விழா நடைபெற்றது. அப்போது, நண்பர்  அருச்சுனமணி அவர்கள் என்னை தொடர்புக்கொண்டு, நாயன்மார்கள் சம்பந்தமாக தமிழ் பள்ளிக் குழந்தைகளை வைத்து ஒரு நாடகம் போடுங்கள் என்று கூறினார். அதில் உருவானது தான் இந்த அப்பூதி அடிகள் வாழ்க்கை வரலாறு நாடகம். இதில் நடிப்பதற்கு நிறைய குழந்தைகள் ஆர்வமுடன் பங்குப்பெற்றமையால். வெறும் வாழ்க்கை வரலாறாக மட்டும் சொல்லாமல் வித்தியாசமாக ஒரு சமயவகுப்பில் அப்பூதியடிகளின் வாழ்க்கையை நாடகமாக நடிக்கச் செய்து, அதன்மூலம் அந்த சமயவகுப்பில் படிக்கும் மாணவர்கள் குரு வழிபாட்டின் மூலம் எவ்வாறு இறைவனை பிராத்திக்க முடியும் என்பதை தெரிந்துகொள்ளுமாறு இந்த நாடகத்தை அமைத்திருந்தேன். ,

குரு வழிபாட்டின் மூலம் இறை தேடல் - நாடகம் 

கதாப்பாத்திரங்கள்
ஆசிரியராக – சஞ்சய்
மாணவர்களாக – லக்ஷ்மி,அகிலன், பிரணவ்,அக்க்ஷித்,ஸ்ரீவட்சன்
அப்பூதி அடிகளாராக – வருண்
மனைவியாக  - இலக்கியா
மகனாக – ஓவியா
திருநாவுக்கரசராக – தர்ஷன்
கிராமத்துக்காரர்களாக – தீக்க்ஷா, சாருண்யா, சவிதா

காட்சி – 1


இடம்: சமய வகுப்பு
கதாபாத்திரங்கள்: சஞ்சய், லக்ஷ்மி,அகிலன், பிரணவ்,அக்க்ஷித்

(மாணவர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். சஞ்சய் வருகிறார். எல்லோரும் வணக்கம் சொல்கிறார்கள்)

சஞ்சய்: வணக்கம். போன வகுப்புல, நாம காரைக்கால் அம்மையாரை பற்றி பார்த்தோம். அவரைப் பற்றி ஒரு கேள்வி. மற்ற நாயன்மார்களிடமிருந்து, அவர் எவ்வாறு சிறப்புடையவராக இருக்கிறார்?

அகிலன்: அவர் மட்டும் தான் உட்கார்ந்திருக்கிறார். மற்ற நாயன்மார்கள் எல்லோரும் நின்று கொண்டிருக்கிறார்கள்.

சஞ்சய்: சரியா சொன்னீங்க அகிலன். வேறு ஏதாவது சிறப்பு இருக்கா?

லக்ஷ்மி: ஆதியும் அந்தமும் இல்லாத அந்த ஈஸ்வரனே, அவரை பார்த்து “அம்மையே” என்று அழைத்தது மிக பெரிய சிறப்பு.  

சஞ்சய்: ஆஹா. மிக சரி. சரி, நாயன்மார்களில் எத்தனை பேர் பெண்கள். யாராவது சொல்ல முடியுமா?

அக்க்ஷித்: 63 நாயன்மார்களில், மூன்று பேர் பெண்கள்.

சஞ்சய்: அவர்கள் யார் என்று சொல்ல முடியுமா?
பிரணவ்: காரைக்கால் அம்மையார்

ஸ்ரீவட்சன்: மங்கையர்க்கரசியார்
லக்ஷ்மி: மற்றும் இசைஞானியார்.  

சஞ்சய்: ரொம்ப நல்லது. சரி, நாம இன்றைக்கு அப்பூதி அடிகள் நாயன்மாரை பற்றி படிக்க போறோம். கொஞ்சம் வித்தியாசமாக, நம் வகுப்பு மாணவர்களே, அவரின் வாழ்க்கையை நாடகமாக நடித்துக்காட்டப் போகிறார்கள். சரி, நாடகத்தை பார்ப்போமா?

(எல்லோரும் ஓரமாக உட்காருகிறார்கள். நாடகம் ஆரம்பாமாகிறது)



காட்சி – 2
இடம்: சோழ நாட்டின் திங்களூரில் உள்ள ஒரு சாலை.

கதாபாத்திரங்கள்: பிரணவ், சாருண்யா, சவிதா மற்றும் தர்ஷன்

(சாருண்யாவும்,சவிதாவும் அந்த சாலையில் நடந்து கொண்டு வருகிறார்கள்)

சாருண்யா: அப்பப்பா, வெயிலின் கொடுமை தாங்க முடியவில்லை.

சவிதா: ரொம்ப தாகமா வேற இருக்கு.

சாருண்யா: இந்த சாலையில், திருநாவுக்கரசர் நாயனார் தண்ணீர் பந்தல்  இருக்கும். அங்க தண்ணீர் குடித்து, நம்ம தாகத்தை போக்கிக்கலாம்.

சவிதா: அதோ தெரியுது. சீக்கிரம் வா.
(இருவரும் அங்கு போய், தண்ணீர் குடிக்கிறார்கள். அங்கு ஏற்கனவே, பிரணவ் தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கிறார். அப்போது ஒரு சிவனடியார் அங்கு வருகிறார்).

தர்ஷன்: (மூவரிடமும்), இந்த தண்ணீர் பந்தலை, இப்பெயரிட்டு செய்தவர் யார். உங்களுக்கு தெரியுமா?

தீக்க்ஷா: இந்த தண்ணீர் பந்தல் மட்டும் இல்லை, இந்த ஊரில் இருக்கும் அறச்சாலைகள், குளங்கள், எல்லாவற்றுக்கும் அப்பூதி அடிகள் என்பவர், திருநாவுக்கரசுநாயனார் என்னும் பேரிலேயே செய்திருக்கிறார்.

சவிதா: அவருடைய பிள்ளைகளுக்கும் திருநாவுக்கரசர் என்று தான் பெயர் வைத்திருக்கிறார்.

சாருண்யா: அது மட்டுமா, அவருடைய வீட்டில் உள்ள பசுக்களுக்கும்,கன்றுகளுக்கும் திருநாவுக்கரசர் என்று தான் பெயர் இட்டு அழைக்கிறார்.

தர்ஷன்: அவர் எவ்விடத்தில் இருக்கிறார். நான் அவரை சந்திக்க வேண்டுமே.

மூவரும்: அவருடைய இல்லம் பக்கத்தில் தான் 
இருக்கிறது. வாருங்கள் நாங்கள் வழி காட்டுகிறோம்.



காட்சி – 3
இடம்: அப்பூதி அடிகளின் இல்லம்.
கதாபாத்திரங்கள்: வருண், இலக்கியா,ஓவியா மற்றும் தர்ஷன்

வருண்: (கை எடுத்து கும்பிட்டுக்கொண்டு), திருநாவுக்கரசு” , “திருநாவுக்கரசு”, “திருநாவுக்கரசு” (என்று கும்பிடுகிறார்)

ஓவியா: தந்தையே, எனக்கு ஏன் திருநாவுக்கரசு என்று பெயர் வைத்தீர்கள்?

வருண்: திருநாவுக்கரசர் சமய வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளை பார்த்து, வியந்து அவரிடம் பக்தி கொண்டு, அவரையே குருவாக ஏற்றுக் கொண்டேன். அவர் மேல் இருக்கும் பக்தியால் தான், உன் பெயரை மூத்த திருநாவுக்கரசர் என்றும், உன் தம்பியை இளைய திருநாவுக்கரசர் என்றும் பெயரிட்டு அழைக்கிறேன்.

ஓவியா: நல்லது தந்தையே.
(அப்போது சிவனடியார் வீட்டு வாயிலில் வந்து நிற்கிறார். இலக்கியா வெளியில் இருந்து வீட்டுக்குள் வரும்பொழுது, அந்த சிவனடியாரை பார்க்கிறார்)

இலக்கியா: உள்ளே வாருங்கள் சுவாமி.

(சிவனடியார், இலக்கியாவை தொடர்ந்து உள்ளே வருகிறார்)

இலக்கியா: ஏங்க. சிவனடியார் ஒருவர் வெளியில் நின்றுக்கொண்டிருந்தார், நான் அவரை உள்ளே அழைத்து வந்தேன்.

(இலக்கியா மற்றும் ஓவியா உள்ளே சென்று விட்டார்கள்).

வருண்: (சிவனடியாரை பார்த்து) வர வேண்டும், வர வேண்டும் சுவாமி.

தர்ஷன்: நாம் வரும் வழியில், தண்ணீர் பந்தலைக் கண்டும், நீர் செய்துவரும் தருமங்களை கேட்டும், உம்மை காண விரும்பி இங்கு வந்தோம்.

வருண்: மிக்க மகிழ்ச்சி சுவாமி. அடியேன் ஏதோ என்னால் முடிந்ததை செய்கிறேன்.

தர்ஷன்: நீர் வைத்த தண்ணீர் பந்தலில், உம்முடைய பெயரை எழுதாது, வேறு ஒருவரின் பெயரை எழுதியதற்கு காரணம் யாது?

வருண்: (கோபமாக) பாதகர்களாகிய சமணர்களோடு சேர்ந்து பல்லவராஜன் செய்த அக்கிரமங்களை சிவபக்தி வலிமையினாலே ஜெயித்த தொண்டரது பெயரா, வேறு ஒருவர் பெயர். அப்பெருமானின் பெயர் கூட தெரியாமல், நீர் எப்படி சிவனடியாராக இருக்க முடியும். நீர் யார், எங்கே இருக்கிறீர் சொல்லும்.

தர்ஷன்: திருநாவுக்கரசர் மேல் நீர் வைத்திருக்கும் அன்பை பார்த்து, யாம் பூரிப்பு அடைகிறோம். அடியேன் தான் அந்த திருநாவுக்கரசர்.

வருண்: என்ன காரியம் செய்து விட்டேன். என் குருவிடமா நான் கோபப்பட்டேன். குருவே என்னை மன்னித்து பொருத்தருளும்.

(அப்பூதி அடிகள், திருநாவுக்கரசரின் பாதங்களில் விழுந்து வணங்குகிறார். உள்ளே சென்று, மனைவியையும் மகனையும் அழைத்து வந்து அறிமுகப்படுத்தி , அவர்களையும் வணங்க சொல்கிறார்).

இலக்கியா: சுவாமி, தங்கள் இருந்து, அமுதுண்டு தான் செல்ல வேண்டும்.

தர்ஷன்: நல்லது. நான் அமுதுண்ட பிறகே விடைபெறுகிறேன்.

(இலக்கியா உள்ளே செல்கிறார்)

வருண்: மூத்த திருநாவுக்கரசு, சுவாமி அமுது உண்பதற்கு, தோட்டத்தில் போய், வாழைக் குருத்தை அரிந்து கொண்டு வா.

ஓவியா: என்ன பாக்கியம் செய்தேன் நான். சீக்கிரம் வாழைக் குருத்தை அரிந்துக்கொண்டு வருகிறேன் தந்தையே.



காட்சி – 4
இடம்: அப்பூதி அடிகளின் இல்லம்.
கதாபாத்திரங்கள்: வருண், இலக்கியா,ஓவியா மற்றும் தர்ஷன்

(மூத்த திருநாவுக்கரசை, நாகம் தீண்டுகிறது. இலையை எடுத்துக்கொண்டு எடுத்துக்கொண்டு தாயாரிடம் கொடுத்துவிட்டு கீழே விழுகிறான்)

இலக்கியா: திருநாவுக்கரசு, என்னாச்சு, என்னாச்சு.

(அப்பூதி அடிகள் வருகிறார்)

வருண்: திருநாவுக்கரசு, என்னாச்சு, என்னாச்சு.

இலக்கியா: நம்ம மகனை நாகம் தீண்டி விட்டது. இது தெரிந்தால், திருநாவுக்கரசர் நாயனார், திருவமுது  உண்ணமாட்டாரே.

வருண்: நாம் இதை பற்றி அவரிடம் சொல்ல வேண்டாம்.

(இருவரும் சேர்ந்து மகனை பாயில் படுக்க வைத்துவிட்டு, இலையை எடுத்துக்கொண்டு திநாவுக்கரசரிடம் செல்கிறார்கள். அவருக்கு இலையை வைத்து, அமுதை பரிமாறுகிறார்கள். அப்போது திருநாவுக்கரசர் விபூதியை எடுத்து தானும் பூசிக்கொண்டு, எல்லோருக்கும் பூசி விடுகிறார்)

தர்ஷன்: எங்கே, தங்களுடைய மூத்த மகன். அவனையும் கூப்பிடுங்கள், நான் திருநீற்றை பூசுகிறேன்.

(இருவரும் மௌனமாக இருக்கிறார்கள்)

தர்ஷன்: சீக்கிரம் கூப்பிடுங்கள்.

வருண்: இப்போது அவன் இங்கு உதவான்.

தர்ஷன்: (திடுக்கிற்று), என்ன சொன்னீர்? இதை கேட்டு என் உள்ளம் நடுங்குகிறது. உண்மையை சொல்லுங்கள், என்ன ஆயிற்று.

வருண்: (அழுதுக்கொண்டே) ஐயனே! வாழைக்குருத்து அரிகின்ற பொழுது, நாகம் தீண்டி இறந்து விட்டான். தங்களுக்கு, திருவமுது படைக்கும் பேறு தடைபடக்  கூடாதென்று, அவனை பாயில் சுற்றி வைத்துள்ளோம்.

தர்ஷன்: எம்மேல் கொண்ட பக்தியால், உம்மால் இப்படி செய்ய முடிந்தது. அவ்வுடலை, சிவபெருமான் கோவிலுக்கு கொண்டு வருக.

காட்சி – 5
இடம்: சிவபெருமான் திருக்கோவில்.
கதாபாத்திரங்கள்: வருண், இலக்கியா,ஓவியா மற்றும் தர்ஷன்

தர்ஷன்:  ஒன்றுகொ லாமவர் சிந்தை யுவர்வரை
             ஒன்றுகொ லாமுய ரும்மதி சூடுவர்
             ஒன்றுகொ லாமிடு வெண்டலை கையது 
             ஒன்றுகொ லாமவ  ரூர்வது  தானே.
          
       பத்துக்கொ லாமவர் பாம்பின்கண் பாம்பின்பல் 
          பத்துக்கொ லாமெயி றுந்நெரின் துக்கன 
         பத்துக்கொ லாமவர் காயப்பட் டான்றலை 
        பத்துக்கொ லாமடி யார்செய்கை தானே.

(மூத்த திருநாவுக்கரசு உயிர் பெற்று எழுகிறான். திருநாவுக்கரசர் அவனுக்கு திருநீற்றை பூசுகிறார்).

(எல்லோரும் தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவருக்கும் இறைவா போற்றி என்று கூறிவிட்டு செல்கிறார்கள்)



காட்சி – 6
இடம்: சமய வகுப்பு
கதாபாத்திரங்கள்: சஞ்சய், லக்ஷ்மி,அகிலன், பிரணவ்,அக்க்ஷித், ஸ்ரீவட்சன்

சஞ்சய்: என்ன, நாடகம் நல்லா இருந்ததா?

எல்லோரும் நன்றாக இருந்தது என்று கூறுகிறார்கள்.

சஞ்சய்: அப்பூதி அடிகளின் வாழ்க்கையிலிருந்து நாம என்ன தெரிஞ்சுக்கணும்?

பிரணவ்: நாம தான தர்மங்கள் செய்யும்போது, நம்ம பேரை வெளி உலகத்துக்கு தெரிய படுத்தி செய்ய கூடாது.

அக்க்ஷித்: சிவனடியார்களை நல்லா உபசரிக்கணும்.

அகிலன்: சிவனடியார்களை உபசரிக்கும்போது,நமக்கு துன்பம் வந்தா கூட, அதை பொருட்படுத்தாம, முதல்ல அவுங்களை கவனிக்கணும்.

லக்ஷ்மி: நாம இறைவனிடம் பக்தி செலுத்துவதற்கு, முதல்ல நல்ல குருவை நாம தெரிவு செய்ய வேண்டும்.  பிறகு அவர்களின் வழிகாட்டுதலோடு, நாம இறைவனை பிராத்திக்கலாம்.

சஞ்சய்: எல்லோரும் சரியா சொன்னீங்க, இன்னைக்கு இது போதும், அடுத்த சமய வகுப்புல, நாம வேற ஒரு நயான்மாரை பத்தி பார்க்கலாம்.

முற்றும்