நண்பர்கள் சிலர் தங்கள் வீடுகளின் பின்புறத்தில் (backyard) இந்த அரணை இருக்கிறது, இது ஒன்றும் பண்ணாது, மேலும் இது இருந்தால் பூச்சிகள் எல்லாம் வராது என்று கூறியிருக்கிறார்கள். அப்பொழுதெல்லாம் நாங்கள் அதனை ஆச்சிரியமாக கேட்டிருக்கோமேயொழிய பெரிதாக எடுத்துக்கொண்டது கிடையாது. ஆனால் நான்கைந்து நாட்களுக்கு முன்பு, இந்த அரணை எங்கள் வீட்டு பின்புறத்தில் காற்றுவாங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்து விட்டேன். இது என்னடா நம்ம வீட்டுக்கும் வந்துவிட்டதே என்று ஒரு நிமிடம் பயந்து போனேன். நான் அதை பார்த்து பயந்ததை விட, இந்த அரணை தன்னுடைய திருமுகத்தை அம்மணிக்கு காட்டினால் என்ன பண்றதுன்னு தான் எனக்கு பெரிய பயமே. ஏன்னா அம்மணி ஒரு சின்ன பல்லியை பார்த்தாக்கூட பத்து வீட்டுக்கும் கேக்கிற மாதிரி ஒரு கத்து கத்துவாங்க. பல்லின்னா அப்படி ஒரு அலர்ஜி. அப்படியிருக்கும்போது இந்த அரணையை பார்த்துட்டா, அதனால எல்லா சாமிக்கிட்டேயும், அம்மணி இதை பார்த்துடக்கூடாதுன்னு வேண்டிக்கிட்டேன். என்னோட வேண்டுதல் வெறும் ரெண்டு நாளைக்கு மட்டும் தான் பலிச்சுது. அந்த ரெண்டு நாளும் அவுங்க கண்ணுக்கு அது தட்டுப்படவே இல்லை. நானும் நிம்மதியா இருந்தேன்.
மூன்றாவது நாள், நான் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து கொண்டிருந்தேன். அம்மணி காயப்போட்ட துண்டை எடுப்பதற்காக பின் பக்கம் போயிருக்கிறார்கள். திடீரென்று "என்னங்க இங்க வாங்க" என்று ஒரு பெரிய சத்தம். நானும் என்னமோ ஏதோன்னு பதறியடிச்சு போய் பார்த்தா, அவுங்க நின்ற இடத்துலேயே நின்றுகிட்டு இருந்தாங்க . என்னைய பார்த்தவுடன், ஏங்க அந்த "blue tongue" நம்ம வீட்டுக்கும் வந்துடுச்சுங்கன்னு ஒரே புலம்பல். சரி உள்ள வா பார்த்துக்கலாம்னு சொன்னா, நான் உள்ள வரமாட்டேன்னு ஒரே அடம். அப்புறம் அவுங்களை கையை பிடிச்சு உள்ள கூட்டிக்கிட்டு வந்தா, இனிமே நான் பின் பக்கம் போக மாட்டேன், காயப்போட்ட துண்டு துணிங்க எல்லாம் நீங்களே போய் எடுத்துக்கிட்டு வாங்கன்னு ஒரே அழிச்சாட்டியம். நானும் உள்ளுக்குள்ள பயத்தை வச்சுக்கிட்டு வெளியில தைரியமா இருக்கிற மாதிரி காமிச்சுக்கிட்டு, போய் காயப்போட்டிருந்த துணி எல்லாம் எடுத்துக்கிட்டு வந்தேன்.
இதுக்குத்தான் பேசாம ஒரு யூனிட்டை (அபார்ட்மெண்ட்டை) வங்கியிருக்கலாம். நீங்க தான் வீடா வாங்கணும் அப்பத்தான் நல்லதுன்னு சொல்லி இந்த வீட்டை வாங்குனீங்கன்னு ஒரே புலம்பல். நீங்க என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது, அந்த ஜந்து வீட்டை விட்டு சீக்கிரம் போயிடனும்னு வேற ஒரு ஆர்டர்.
நானும் மறு நாள் எங்கள் கடையில் இருந்துக்கிட்டு, blue tongue rescue நிறுவனத்தை கூப்பிட்டு, இந்த மாதிரி, இந்த மாதிரி எங்கள் வீட்டில அந்த ஜந்து வந்துடுச்சு, என் மனைவி வீட்டு பின் பக்கத்துக்கே போக மாட்டேன்னு சொல்றாங்க. இப்ப என்ன பண்றதுன்னு கேட்டேன். அதுக்கு அவுங்க ரொம்ப கூலா, அது ஒரு அப்பிராணிங்க. யாரையும் ஒண்ணும் பண்ணாது. உங்க வீட்டுல அது இருக்குதுன்னா, நீங்க ரொம்ப அதிர்ஷ்டம் செஞ்சிருக்கணும். நீங்க சொல்றதை பார்த்தா, அது ஒரு குழந்தை தான். பேசாம நீங்க உங்க வேலையை பாருங்க. அது ஒரு தொந்தரவும் கொடுக்காது. இன்னும் சொல்ல போனா, அது இருக்கிறதுனால உங்கள் வீட்டுக்கு பூச்சி, சிலந்தி எல்லாம் வராதுன்னு சொன்னாங்க. நான் உடனே, நீங்கள் சொல்றது எல்லாம் எனக்கு புரியுதுங்க, ஆனா என் மனைவி அதை பார்த்து ரொம்ப பயப்பிடுறாங்களே, அதனால நீங்கள் யாரையாவது அனுப்பி அதை பிடிச்சுக்கிட்டு போயிடுறீங்களான்னு கேட்டேன். உடனே அவுங்க நோ, நோ, நாங்கள் எல்லாம் யாரையும் அனுப்ப முடியாது. நீங்களே ஒரு பெரிய டப்பாவிலோ இல்ல பிளாஸ்டிக் கவர்லேயோ அதை பிடிச்சு பூங்கா மாதிரி உள்ள எடத்துல ஒரு ஓரமா விட்டுடுங்கன்னு சொன்னாங்க. ஐயையோ இது என்னடா, நம்மளையே பிடிக்கச் சொல்றாங்களேன்னு ஒரே கவலையாயிடுச்சு. நமக்கு சின்ன வயசிலிருந்தே இந்த விலங்கியல் பாடம்னாலே பெரிய அலர்ஜி. விலங்குகளை எல்லாம் படம் வரையிறதே பிடிக்காது, இதுல அதை தொட்டு எப்படி தூக்குறது. என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியலை.
சரிங்க, நானே புடிச்சு தூக்கி போட்டுடுறேன்ன்னு சொல்லி போனை கட் பண்னினேன். உடனே அம்மணிக்கிட்டேயிருந்து போன். எங்கள் வீட்டிலிருந்து ரெண்டு வீடு தள்ளி இருக்கிற மராட்டிய நண்பர் வீட்டிற்கு சென்று இந்த விஷயத்தை அம்மணி சொல்லியிருக்காங்க. அந்த நண்பரும் அவரோட மனைவியும், எங்க வீட்டுக்கு பின்னாடி பெரிய ரெண்டு அரணை இருக்குது. அது பாட்டுக்கு அது இருக்கும், நாங்க ஒண்ணும் அதைப் பத்தி கண்டுக்க மாட்டோம். நீங்க என்னடான்னா அந்த சின்ன குழந்தைக்கு போய் இப்படி பயப்பிடுறீங்க. அது ஒண்ணும் பண்ணாதுங்க. அதனால நீங்க கவலைப்படமா போயிட்டு வாங்கன்னு சொல்லியிருக்காங்க. ஆனா எங்க அம்மணி யாரு, அதை பார்த்தாலே எனக்கு ரொம்ப பயமா இருக்குது, என்னைய விட எங்க வீட்டுக்காரருக்கு அது கிட்ட ரொம்ப பயம், அதனால நீங்க கொஞ்சம் வந்து அதை தூக்கி போட்டுடுறீங்களான்னு கேட்டிருக்காங்க. அந்த நண்பரும் நான் இதுக்கு சரியான ஆள் இல்ல, என் மகன் தான் சரியான ஆளு, அவன் பள்ளிக்கூடத்திலுருந்து வந்தவுடனே உங்க வீட்டுக்கு அனுப்புறேன்னு சொல்லியிருக்காரு. அவுங்க பையன் பதினோராம் வகுப்பு படிக்கிறவன். கொஞ்ச நேரத்துல அவனும் அவனுடைய மற்ற இரண்டு நண்பர்களும் (சீன மாணவன் மற்றும் வெள்ளைக்கார மாணவன்) மூவரும் எங்கள் வீட்டிற்கு வந்து ஆளுக்கு ஒரு பிளாஸ்டிக் கவரை வைத்துக்கொண்டு அதைப் பிடிக்க முயன்று, கடைசியில் அதை வெற்றிக்காரமாக பிடித்து பக்கத்திலுள்ள பூங்கா ஓரமாக விட்டுவிட்டு வந்துவிட்டார்கள். (இவர்கள் அல்லவா தைரியசாலிகள்..)
ஒரு வழியாக அந்த அரணை எங்கள் வீட்டை விட்டு போய்விட்டது. அன்றைக்கு இரவு நான் வீட்டுக்கு வந்தவுடன், அம்மணியிடம் அவுங்க அதை பிடிக்கும்போது நீ சில புகைப்படங்களை எடுத்திருக்கலாமே என்று கேட்டேன். நான் அந்த புகைப்படங்களை எடுத்து என்ன பண்றதுன்னு திருப்பி கேட்டார்கள். நீ புகைப்படம் எடுத்திருந்தால், நான் வலைப்பூவில் எழுதுவதற்கு நன்றாக இருந்திருக்கும் என்று கூறினேன். உடனே அவர்கள் அப்படி எழுதணும்னு நினைத்த நீங்கள் நம் வீட்டிலிருந்த அந்த அரணை மட்டுமாவது புகைப்படம் எடுத்திருக்க வேண்டியது தானே என்று கேட்டார்கள். அவர்கள் கேட்டது நல்ல கேள்வி தான், ஆனால் எனக்கு தான் பதில் சொல்ல முடியவில்லை. பின்ன அவுங்களிடம் நான் பயப்பிடாத மாதிரி நடிச்சேன்னு சொல்ல முடியுமா?
பி.கு: அப்ப மேல உள்ள இரண்டு படங்களும் உங்கள் வீட்டில் இருந்த அரணை இல்லையான்னு நீங்கள் கேட்பது எனக்கு கேக்குது. அந்த படங்கள் எல்லாம் கூகிள் ஆண்டவர் உபயம். ஹி.. ஹி...