சிகப்பி ஆச்சி இரவு
உணவை முடித்துவிட்டு மெத்தையை விரித்து, அதில்
உட்கார்ந்துக்கொண்டு, சிவநாமத்தை சொல்ல ஆரம்பித்தபோது தான், முன் அறையில் இருந்த தொலைபேசி அழைத்தது. ஆச்சியோ,
அதை காதில் வாங்காமல், சிவநாமத்தை சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
தொலைபேசியும் விடாமல் அடிக்கவும், சிகப்பி ஆச்சியால், சிவநாமத்தில் கவனம் செலுத்த
முடியவில்லை.
இது தொலைபேசி இல்லை, தொல்லைபேசி, ச்சை, நிம்மதியா
படுக்க போறதுக்கு முன்னாடி சாமி கும்பிட முடியிதான்னு சலிச்சுக்கிட்டு, எழுந்து போயி அந்த தொலைபேசியை எடுத்து,
“ஹல்லோ, ஆரு பேசுறது”?
“ஆத்தா, நான் ராமு பேசுறேன். நல்லா இருக்கீங்க தானே,
உடம்புக்கு ஒண்ணும் இல்லையே?”
“நான் நல்லா இருக்கேன்
தம்பி. அங்க நீ,உண்ணா அப்புறம் என் செல்லப்பேராண்டி அருண் எல்லோரும் நல்லா இருக்கீங்களா?. ஏம்பா ரொம்ப நாளா போன் பண்ணலை?. சரி, எப்ப இந்தியாவுக்கு வர போறீங்க? எனக்கு உங்களை
எல்லாம் பார்க்கணும் போல இருக்குப்பா”
“ஆத்தா, இங்க எனக்கு வேலை ஜாஸ்தி, அதான் முன்ன மாதிரி
அடிக்கடி போன் பண்ண முடியலை. அப்புறம், நம்ம அருண் ஒரு பெரிய
கம்பெனில வேலைக்கு சேர்ந்துட்டான். இப்ப அவனுக்கு கலியாணம் பேசலாம்னு முடிவு
பண்ணியிருக்கோம். ஆத்தா, நீங்க நம்ம பங்காளிங்க, சொந்தக்காரங்க, தெரிஞ்சவுங்க கிட்ட நல்ல பொண்ணா
இருந்தா, சொல்லுங்கன்னு சொல்லிவைங்க. அடுத்த தைக்குள்ள
அவனுக்கு கலியானத்தை முடிச்சுட்டா நல்லதுன்னு இங்க இருக்கிற கோவில் குருக்கள், இவனோட ஜாதகத்தை பார்த்து சொல்லியிருக்காரு”
“நான் நாளைக்கே
எல்லார்கிட்டேயும் சொல்லிவைக்கிறேன். என் பேரனுக்கு என்ன குறைச்சல், அமெரிக்காவிலேயே பொறந்து, நல்லா படிச்சு, கை நிறைய சம்பாதிக்கிறான். நான்,நீன்னு பொண்ணுங்க
வரிசைல நிக்க மாட்டாளுங்க?. நீ கவலையே படாதேப்பா, நான் அவனுக்கு ஒரு நல்ல பொண்ணா பார்த்து வைக்கிறேன். சரிப்பா, வேற ஒண்ணும் இல்லையே, நான் போனை வைக்கிறேன்.”
ஆறு மாதங்கள் கழித்து, அமெரிக்காவில் இருக்கும் ராமு, உண்ணாமலை தம்பதியரின்
ஒரே புதல்வனான அருணாசலத்துக்கும், ஆஸ்திரேலியாவில் இருக்கும்
சுப்பையா மற்றும் செல்லம்மையின் ஒரே புதல்வி சீதாவுக்கும் கண்டனூரில் மிக
விமர்சையாக கலியாணம் நடந்தது. புதுமன தம்பதியர்கள் மூன்று வாரம் தேனிலவை ஐரோப்பா
நாடுகளில் மிகவும் சந்தோஷமாக கழித்து விட்டு அமெரிக்காவிற்கு வந்தார்கள். சீதாவோ, தனக்கு கலியாணம் பேசி முடித்தவுடன், தான் வேலை பார்க்கும் அலுவலகத்தின் அமெரிக்க கிளைக்கு மாற்றல்
வாங்கிக்கொண்டாள். தேனிலவு முடிந்து அமெரிக்கா போன அடுத்த நாளே வேலைக்கு போக
ஆரம்பித்தாள். இதனால் அங்கு எல்லா வேலையும் உண்ணாமாலையே பார்க்கும்படி ஆனது. இப்படியே
மருமகள் வேலைக்கு போவதும், மாமியார் எல்லா வேலையும்
பார்ப்பதுமாக ஐந்து மாதங்கள் சென்றது. ஒரு நாள், உண்ணாமலை
தன் கணவனிடம்,
“ஏங்க, இங்க என்னங்க நடக்குது” என்று கேட்டாள் உண்ணாமலை
“எல்லாமே நல்லா தானே
போயிக்கிட்டு இருக்கு, ஏன் உனக்கு என்ன பிரச்சனை”
என்று திருப்பி கேட்டார் ராமு.
“நான் வீட்டு
வேலையெல்லாம் செய்யுறதுக்கா, அருணுக்கு கலியாணம் பண்ணி
வச்சோம்? ஒரு நாளாவது அவள் என்கூடமாட வேலை செஞ்சிருக்காளா? என்று உண்ணாமலை கோபப்பட்டாள் .
“ஓ! இதான் பிரச்சனையா
உனக்கு, அவ தான் வீக்எண்ட்ல சமையல் எல்லாம் செய்யுறாளே” என்று மருமகளுக்காக
வக்காலத்து வாங்கினார் ராமு.
“எண்ணத்தை செய்யுறா, நான் கல்யாணம் ஆன புதுசுல, வேலைக்கும் போயிக்கிட்டு, உங்கம்மாவை ஒரு வேலையும் செய்ய விடாம நானே,
அம்புட்டு வேலையும் இழுத்துப்போட்டுக்கிட்டு செஞ்சேன். இந்த காலத்து பொண்ணுங்க
எல்லாம், அந்த மாதிரியா இருக்காளுங்க” என்று பொரிந்து
தள்ளினாள்.
“நீ எங்க ஆத்தாவுக்கு
ஒத்தாசையா இருக்கேன்னு, அவுங்களை என்ன பாடு படுத்தின. சரி, இப்ப என்ன செய்யணும்னு நினைக்கிற, பேசாம மகனையும்,மருமகளையும் தனியா வச்சிடலாமா” என்று கேட்டார் ராமு.
“ஆமாங்க, அது தாங்க எல்லாருக்கும் நல்லது, தனியா வச்சாதான்
அப்பப்ப போய் பார்த்துக்கிறதுக்கும் நல்லா இருக்கும். எங்க ரெண்டு
பேருக்குள்ளேயும் சண்டையே வராது” என்றாள் உண்ணாமலை.
“ஆமா, ஆமா, உனக்கு மருமக தனியா இருந்தா தான், அவ கூட சண்டை போடுறதுக்கு வாய்ப்பு வராது. சரி,
நான் இன்னைக்கே அவுங்க கிட்ட இதைப்பத்தி பேசுறேன். அவுங்களுக்கும் ரொம்ப சந்தோஷமா
இருக்கும்” என்றார்.
“என்னைய குறை சொல்லலைன்னா, உங்களுக்கு தூக்கமே வராதே. முதல்ல அவுங்களை தனியா வைக்கிறதுக்கு வழியை
பாருங்க” என்று கூறி, அங்கிருந்து நகர்ந்து போனாள்.
மாலை சற்று தாமதமாக அருணும், சீதாவும் ஒன்றாக வந்தார்கள்.
“வாப்பா அருண், என்ன
இவ்வளவு லேட்டாயிடிச்சு, சரி நான் உங்களுக்கு ஒரு சந்தோஷமான
விஷயம் சொல்லப்போறேன்” என்று பீடிகையோடு ஆரம்பித்தார் ராமு.
“அப்பா, நாங்களும் உங்களுக்கு ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லப்போறோம். முதல்ல, நீங்க சொல்லுங்க “ என்றான் அருண்.
“நாங்க உங்களை
தனியா வைக்கலாம்னு முடிவு
பண்ணியிருக்கோம்” என்று கூறினார் ராமு.
“இது எப்படிப்பா, எங்களுக்கு சந்தோஷமான விஷயமாகும். ஆமா எங்களை ஏன் தனியா பிரிக்கிறீங்க”
என்று கோபமாக கேட்டான் அருண்.
“இல்லப்பா, நம்ம சமுகத்துல இது சகஜம்பா, அதோடு, நீங்க சின்னஞ் சிறுசுங்க, வாழ்க்கையை இப்பதான்
ஆரம்பிச்சிருக்கீங்க. தனியா இருந்தா தான் பொறுப்பு வரும். குடும்பத்தை எப்படி
நடத்தணும்னு தெரிஞ்சுப்பீங்க. சரி, இப்ப உங்களோட சந்தோஷமான
விஷயத்தை சொல்லுங்க” என்றார்.
“அப்பா, நீங்க ஐயாவாக போறீங்க. இன்னைக்கு தான் டாக்டர் கிட்ட போய் செக் பண்ணிட்டு
வரோம் என்றான் அருண்.
“ரொம்ப ரொம்ப
சந்தோசமானா விஷயத்தை தான் சொல்லியிருக்கீங்க” என்று சந்தோஷப்பட்டார் ராமு.
“ஆமா அத்தை, நீங்க அப்பத்தாவாக போறீங்க. குழந்தை உண்டாகுற வரைக்கும் நான் வேலைக்கு
போறது,அதற்கப்புறம் வேலையை விட்டுட்டு,
வீட்டோடையே இருந்து எல்லா வேலையும் செஞ்சுக்கிட்டு,
அத்தைக்கு ரெஸ்ட் கொடுக்கணும்னு கல்யாணத்துக்கு முன்னாடியே முடிவு பண்ணி வச்சிருந்தோம். அத்தையும் மாமாவும் கூட இருந்து
குழந்தையை நல்லபடியா வளர்த்தா போதும்னு நினைச்சோம்” என்றாள் சீதா.
“ரொம்ப சந்தோஷம் ஆத்தா, நீ உண்டாயிருக்கிறது. ஆமா என்னமோ புதுசா எல்லாம் பேசுற?” என்று மாமியாருக்கே
உரிய சந்தேகத்தோடு கேட்டாள் உண்ணாமலை.
“அத்தை, நான் தான் ஆஸ்திரேலியாவில, அப்பத்தா, ஐயா, ஆயா, ஐயா, இல்லாம வளர்ந்தேன். எங்க குழந்தைக்கு நீங்க இங்கேயே இருக்கீங்க. அதனால
நாலு நல்லது கெட்டது எல்லாம் சொல்லி வளர்த்துக்கொடுங்க. என்னதான் பெத்தவங்க நாங்க
வளர்த்தாலும், வீட்டுல பெரியவங்க இருந்து வளர்க்கிற மாதிரி
வராது. அதனால எங்களை தனியா போக சொல்லாதீங்க. எல்லோரும் கூட்டுக் குடும்பமா ஒண்ணா
இருப்போம் அத்தை” என்று தன் கருத்தை சொன்னாள் சீதா.
உண்ணாமலை மனதுக்குள், நமக்கு நல்ல மருமகள் தான் கிடைத்திருக்கிறாள் என்று எண்ணி பூரித்துப்
போனாள்.
ராமுவோ, உனக்கு நல்ல மருமகள் கிடைத்து விட்டாள். ஆனா பாவம் எங்க ஆத்தாதான்.
அவுங்களுக்கும் இந்த மாதிரி ஒரு நல்ல மருமகள் கிடைத்திருந்தால் எப்படி
இருந்திருக்கும் என்று உள்ளுக்குள் எண்ணி, ஏக்கப் பெருமூச்சு
விட்டார்.