பொங்கல் அன்று நான் விடியற்காலை(?) 8.30 மணிக்கெல்லாம் எந்திரிச்சுட்டேன். வீட்டில யாரும் இல்லாதனால, மதியமும், இரவும் சாப்பிட வாங்கன்னு நண்பர்கள் சொல்லி இருந்தாங்க. மதியம் வரைக்கும் என்ன பண்ணலாம்னு யோசிக்கும்போது தான், ஏன் நாமளே பொங்கல் வைக்க கூடாதுன்னு ஒரு விபரீத எண்ணம் வந்துச்சு.
உடனே போயி குளிச்சு, நல்லா சுறுசுறுப்பா வந்தேன். யாருக்காவது போன் பண்ணி, பொங்கல் எப்படி செய்யுறதுன்னு கேக்கலாம்னு தோனிச்சு. ஆனா பாருங்க அதுல ஒரு சிக்கல். என்னன்னா, நான் தனியா பொங்கல் செய்யுற விஷயம் ஊர் பூரா பரவிடும். எனக்கு தான் புகழ்ச்சியே பிடிக்காதே. அதனால அந்த போன் பண்ணி கேக்குற எண்ணத்தை விட்டுட்டேன்.
எங்க விட்டு அம்மணி வச்சிருக்காத ரெசிபியா. அதனால ரெசிபி பீரோவிலிருந்து எடுத்துக்கலாம்னு யோசிச்சேன். ஆனா பாருங்க அதுலையும் ஒரு கஷ்டம். என்னன்னா, அவுங்க கிட்ட நீங்க எந்த ஒரு சமயலுக்கும் ரெசிபி கேக்கலாம். அவுங்க சொல்லுவாங்க. என்ன!! அவுங்க கிட்ட இருக்குற ரெசிபி கடல்லேருந்து, உங்க ரெசிபிய தேடி கண்டுப்பிடிச்சு சொல்றதுக்குள்ள, உங்களுக்கு பசி வந்து, அந்த பசி உங்க வயித்த கிள்ளி, கடைசில அந்த பசி வெறுத்துப் போயி உங்களை விட்டு போயிடும். ஒரு ரெசிபியையும் கண்டுப் பிடிக்க முடியாத அளவுக்கு அவுங்க மலை மாதிரி ஏகப்பட்ட ரெசிபியை பிரிண்ட் பண்ணி ஃபைல் போட்டு வச்சுருக்காங்க. அவுங்களாலயே, ஒரு ரெசிபிய கண்டுப் பிடிக்கிறதுக்கு அவ்வளவு நேரம் ஆகும்னா, என்னைய கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.
சரி, நம்மளால அந்த கடலுக்குள்ள மூழ்கி முத்து எடுக்க முடியாது. நாமளே, சக்கரை பொங்கலுக்கு புதுசா ஒரு ரெசிபிய கண்டுப் பிடிச்சிட வேண்டியது தான். இந்த சக்கரை பொங்கல் செய்யுறது என்ன பெரிய கம்பா சூத்திரமான்னு முடிவு பண்ணி, களத்தில இறங்கினேன்.
ஒரு சில்வர் பானைய தேடி கண்டுப் பிடிச்சு, அதுல நிறைய தண்ணிய புடிச்சு அடுப்புல வச்சேன். நம்ம ஒரு ஆளுக்கு நிறைய செய்ய வேண்டாம்னு, அரை ஒழக்கு அரிசியும், அரை ஒழக்கு பருப்பையும் அந்த கொதிக்கிற தண்ணில போட்டு, அது எப்படா பொங்கி வரும்னு அதையே வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்தேன். அப்புறம் தான் நியாபகம் வந்துச்சு, வெல்லத்தை போட மறந்துட்டோமேன்னு, உடனே வீட்டுல இருந்த மண்டை வெல்லத்தை ரொம்ப கஷ்டப்பட்டு தேடி கண்டு பிடிச்சு, அதை தூளா நச்சு பொடியாக்கி, பானையில போட்டேன். பார்த்தா வெள்ளம் பத்தாத மாதிரியே இருந்துச்சா, அடாடா, பொங்கல் நல்லா இனிச்சாதானே, சாப்பிட முடியும்னு, இன்னும் நிறைய வெல்லத்தை பொடியாக்கி போட்டேன். அப்ப அப்ப கரண்டியை போட்டு கிண்டிக்கிட்டு, அடுப்புக்கு பக்கத்துல நின்னுக்கிட்டு, எப்படா பொங்கல் ரெடி ஆகும்னு காத்துக்கிட்டு இருந்தேன். ரொம்ப நேரம் கழிச்சு, ஒரு குத்து மதிப்பா, சரி பொங்கல் ரெடி ஆகியிருக்கும்னு நினைச்சு(?)முந்திரி பருப்பை நெய்யில வறுத்து, நிறைய நெய்யையும் சேர்த்து அந்த சக்கரை பொங்கல போட்டு நல்லா கிண்டி, அந்த பானையை கீழே இறக்கி வச்சேன். சாமிக்கு வச்சு கும்பிடலாம்னு, ஒரு சின்ன கிண்ணத்தில சக்கரை பொங்கல எடுத்து வச்சா, சாதத்தையே காணோம், வெறும் வெல்லமா இருக்கு, நாம போட்ட வெல்லத்துல, சாதம் எல்லாம் கரைஞ்சு போச்சோன்னு, சந்தேகம் வந்துடுச்சு. என்னடா இது, “பிள்ளையார் பிடிக்க போயி குரங்கு பிடிச்ச கதையா ஆயிடுச்சுன்னு, மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு. சரி, இதை சாமிக்கு வச்சு கும்புடாம, முதல்ல இது எப்படி இருக்குனு டேஸ்ட் பண்ணி பத்துடுவோம்னு, ஒரு ஸ்பூன் எடுத்து வாய் கிட்ட கொண்டு போனேன். அப்ப தான் என் மண்டைல ஒரு எச்சரிக்கை மணி அடிச்சுது, வீட்டுல வேற யாரும் இல்ல, நாம இத சாப்பிட்டு, நமக்கு ஏதாவது ஆச்சுன்னா, உடனே வாயிக்கிட்ட கொண்டு போன கை தன்னால இறங்கிடிச்சு. இவ்வளவு வேற செஞ்சாச்சு, என்ன பண்றதுன்னு புரியலை. இதுவே நம்ம ஊரா இருந்தா, மாடு, பூனை, நாய்க்கு எல்லாம் கொடுத்திருக்கலாம்னு தோணுச்சு. ஆஹா நம்ம வீட்டுக்கு ரெண்டு பக்கத்துலையும் இருக்குற வீட்டில தான் பூனையும், நாயையும் வளக்குறாங்களே, பேசாம அதுங்களுக்கு போயி குடுத்துலாம்னு முடிவு பண்னினேன். அதுக்கப்புறம் தான் தோணுச்சு, இந்த பொங்கலை சாப்பிட்டு அதுங்களுக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா, அப்புறம் நம்மள கோர்ட், கேசுன்னு இல்ல அலைய விடுவானுங்க. நாமளே, அத்திப் பூத்த மாதிரி, பொங்கலை செஞ்சிருக்கோம், இதுக்கு பரிசா, கோர்ட், கேசுன்னா போறது. சரி, இந்த பொங்கலுக்கு கொடுப்பினை அவ்வளவு தான்னு மனசை தேத்திக்கிட்டு அவ்வளவு பொங்கலையும் குப்பைல கொட்டிட்டேன்.
இதுலேருந்து, நான் என்ன சொல்ல வரேன்னா, பிரதம மந்திரியை ஊருக்கு அனுப்பிட்டு தனியா இருக்கும் ஜனாதிபதிகளே, நீங்களா எதுவும் புதுசா செய்யுறேன்னு மாட்டிக்காதீங்க, அப்புறம் எனக்கு ஏற்பட்ட நிலமை தான் உங்களுக்கும்.