Friday, February 22, 2019

கருப்பு பணம் - ஆஸ்திரேலியாவில் இருந்து சீனா மீட்குமா?உலகத்தில் பல  நாடுகளில் கருப்பு பணப்புழக்கம் கொஞ்சமாவது இருக்கத்தான் செய்கிறது. அதற்கு  சீனாவும் விலக்கல்ல.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு உள்ள ஒரு புள்ளிவிவரத்தின் படி, கருப்பு பணம் வெளியேறும் நாடுகளின் பட்டியலில் சீனா தான் முதலிடம் பிடித்திருக்கிறது. இந்தியா நான்காவது இடம் தான்.

கோடிக்கணக்கான பணம் சீனாவிலிருந்து வெளியேறி அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா   போன்ற நாடுகளில் தஞ்சமடைந்திருக்கிறது. அவ்வாறு வெளியேறிய பணத்தை உள்ளே கொண்டு வருவதற்கான வேலையை சீன அரசாங்கம் ஆரம்பித்திருக்கிறது .

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் மாநிலத்தில் தான் பெரும்பாலான அந்த கறுப்புப் பணம்  ரியல் எஸ்டேட்  தொழிலில் முடக்கப்பட்டிருக்கிறது என்று அறிந்தவுடன் , சீன அரசாங்கம்  கோல்ட் கோஸ்ட் மாநிலத்தில் உள்ள இரண்டு முன்னாள் காவல் துறை அதிகாரிகளை ஹாங்காங்கில் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனம் மூலமாக வேலைக்கு அமர்த்தியிருக்கிறது. அந்த அதிகாரிகளின் வேலையானது கறுப்புப் பணத்தின் மூலம் வாங்கப்பட்ட சொத்துக்களை கண்டறிந்து, அவற்றை பறிமுதல் செய்து, அந்த சொத்தை விற்று கிடைக்கும் பணத்தை திரும்பி சீனாவிற்கு அனுப்ப வேண்டும். இந்த திட்டத்திற்கு பெயர் தான் "ப்ராஜெக்ட் டிராகன் (Project Dragon )"

இதுவரைக்கும் $80 மில்லியனுக்கான சொத்துக்களை கண்டறிந்திருக்கிறோம். எங்களின் உத்தியானது மிகவும் எளிமையானது மற்றும் சட்டத்துக்கு உட்பட்டதாகும் என்று அந்த இரண்டு அதிகாரிகள் கூறுகிறார்கள். 


பார்ப்போம் இவர்கள் அந்த சொத்துக்களை எல்லாம் மீட்டு, அந்த பணத்தை சீனாவிற்கே திருப்பி அனுப்புகிறார்களா இல்ல நம்ம மோடிஜியின் கறுப்புப் பண மீட்பு திட்டத்ததைப் போல் வெறும் புஸ்வானமாகி விடுமா என்று!!
Thursday, February 14, 2019

காதலர் தினம்

இது ஒரு மீள்பதிவு. இந்த பதிவு எழுதியே ஆறு ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்த பதிவுல அடுத்த வருஷம்   சர்ப்ரைஸா உனக்கு ரொம்ப பிடிச்சதை வாங்கித்தரேன்னு சொல்லியிருந்திருக்கிறேன். இன்னைக்குத்தான் மறுபடியும் இந்த பதிவை படிக்கும்போது அப்படி சொன்னதே நியாபகத்துக்கு வந்தது. ஆனால் இப்பொழுதெல்லாம் அம்மணி இந்த நாளைப் பற்றி நினைக்கிறது எல்லாம் இல்லை. அவர்களுக்கு அதற்கு நேரமும் இல்ல. 


இனி இந்த மீழ் பதிவுக்குள் போகலாம். 

எங்களுக்கு திருமணமான புதுசுல, வீட்டு அம்மணி ஒவ்வொரு காதலர் தினத்துக்கும், “இன்னைக்கு காதலர் தினம், எனக்கு என்னங்க வாங்கிக்கிட்டு வந்திருக்கீங்கன்னு கேப்பாங்க”. நானும் சலிக்காம நமக்கு தான் 365 நாளும் காதலர் தினமாச்சே, அப்புறம் எதுக்கு தனியா, இந்த நாளை வேற கொண்டாடணும்னு சொல்லி ஒண்ணும் வாங்கித்தராம மழுப்பிவிடுவேன். இந்த பதிலையே கேட்டுக்கேட்டு, அவுங்களுக்கும் புளிச்சுப்போயிருக்கும்னு நினைக்கிறேன்,அதனால அந்த மாதிரி கேக்கிறதையே நிறுத்திட்டாங்க. 

இந்த வருஷம் எங்களுக்கு 14வது காதலர் தினம். அடுத்த வருஷம் எதாவது நல்லதா வாங்கிக்கொடுக்கலாம், அதனால இந்த வருஷம் அதற்கு முன்னேற்பாடா, ஒரு ரோசா பூவை வாங்கிக்கொடுக்கலாம்னு நினைச்சு, ஆபிஸ்லேருந்து வரும்போது, ஒவ்வொரு பூக்கடையா ஏறி எறங்கினேன். சொல்லி வச்ச மாதிரி, எல்லா கடன்காரங்களும் ஒத்த ரோசா பூவை பத்து டாலருக்கு விக்கிறாணுங்க. அடப்பாவிகளா, இதுக்கு எங்க வீட்டிலேயே ஒரு பூவை பறிச்சு, அதுக்கு கொஞ்சம் ஜிகினா வேலை பண்ணி, கடைல வாங்கின மாதிரி செட்டப் செஞ்சு அவுங்களுக்கு, காதலோடு கொடுக்கலாமேன்னு நினைச்சு, வீட்டுக்கு வந்தேன்.

ஆனா பாருங்க, எங்க வீட்டுல இருக்குற ஒரு செடிக்கும் நாங்க தண்ணியே ஊத்தமாட்டோம். அப்பப்ப பெய்யுற மழைல தான் அந்த செடிங்க உயிர் வாழ்ந்துக்கிட்டு இருக்கு. வீட்டுக்கு வெளியில இருக்கிற மூணு,நாலு ரோசாச்செடியில, ஒரு பூ கூட பூக்கலை. அந்த செடிங்க எல்லாம், “வா மகனே, நீங்க எங்களுக்கு ஒழுங்கா தண்ணி ஊத்த மாட்டீங்க, ஆனா நாங்க மட்டும் நீங்க நினைக்கிற நேரத்துல பூ பூக்கணுமா, ஆ,அஸ்கு ,புஸ்குன்னு நினைச்சிருக்கும் போல. ஆக மொத்தத்துல வீட்டிலிருந்து பூவை பறிச்சு கொடுக்கலாம்னு நினைச்ச நினைப்புலையும் மண்ணு விழுந்துடுச்சு. 

உம், அப்படி சொல்ல முடியாது, எங்க வீட்டு அம்மணிக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான்னு நினைச்சுக்கிட்டு, வீட்டுக்குள்ள போனேன். கொஞ்ச நேரம் வரைக்கும் பார்த்தேன், அவுங்களா கேக்கிற மாதிரி தெரியலை, அதனால, நானே என்னம்மா, இன்னைக்கு காதலர் தினமாச்சே, நீ ஒண்ணுமே என்கிட்ட கேக்கலை, அப்படின்னு அவுங்க வாயை கொஞ்சம் பிடுங்கினேன். உடனே அவுங்களுக்கு கோபம் வந்துடுச்சு. கல்யாணம் ஆகி இத்தனை வருஷத்துல ஒரு காதலர் தினத்தன்னைக்காவது எனக்கு ஒரு பூவாவது வாங்கிக் கொடுத்திருக்கிங்களான்னு கேட்டாங்க. (அவுங்க கணக்குல கொஞ்சம் வீக், கல்யாணம் ஆகி எத்தனை காதலர் தினம் வந்திருக்குன்னு கரெக்டா சொல்ல தெரியலை!!!). ச்சை, நம்ம வீட்டு பூச்செடிங்க எல்லாம் காலை வாரி விட்டுச்சேன்னு நினைச்சுக்கிட்டு, கோவிச்சுக்காதேடா, அடுத்த வருஷம் இதே நாள்ல சர்ப்ரைஸா உனக்கு ரொம்ப பிடிச்சதை வாங்கித்தரேன்னு சொல்லி ஒரு வழியா அவுங்களை சமாதானப்படுத்தினேன். (இன்னும் ஒரு வருஷம் இருக்குல்ல, அப்ப பார்த்துக்கலாம்னு ஒரு நம்பிக்கை!!!).

உண்மையான காதல் எந்த பருவத்தில வருதுன்னு என் கோணத்தில் கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தேன். 

விடலைப் பருவத்தில்
வருகிற காதலோ
வெறும் இனக் கவர்ச்சியே

திருமணம் முடிந்தவுடன்
தன் துணையின் மேல்
வருகிற காதலில்
காமம் தான் அதிகமாக இருக்கும்

நடுத்தர வயதில்
தன் துணையின் மேல்
வருகிற காதலில்
காமமும் காதலும் சரிசமமாக இருக்கும்

வயதான காலத்தில்  
தன் துணையின் மேல்
வருகிற காதலில்
நூறு சதவீதம் காதல் மட்டுமே இருக்கும்


எல்லோருக்கும் என் இனிய காதலர் தின வாழ்த்துக்கள். 

Sunday, February 10, 2019

அரசுப் பள்ளிக்கு படிப்புச் சீர் வழங்கிய பெற்றோர்

அரசாங்கம் கல்வியை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு முன்பு வரை அரசுப் பள்ளிகளுக்கென்று ஒரு மரியாதை இருந்தது. ஆனால் தனியார் பள்ளிகள் புற்றிசல்  போல் முளைத்த பிறகு மக்களிடம் அரசுப்பள்ளியா  என்று ஏளனம் இருந்து வருகிறது. சமீப காலங்களில் அந்த ஏளனம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்து விட்டது,அதற்கு மிக முக்கிய காரணம்  அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தான். இருந்தும் நிறைய பெற்றோர்கள் தனியார் பள்ளி தான் நல்ல பள்ளி என்கிற எண்ணத்தை  மாற்றிக்கொள்ள மறுக்கிறார்கள். அதனால் தான் இலட்சம் இலட்சமாக பணத்தை தனியார் பள்ளிகளிடம் வாரி இறைத்து தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இந்த பதிவில் வரும் பெற்றோர்களைப் பார்த்து, அரசுப் பள்ளிகளைப் பற்றிய எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். 


இந்த  செய்தியை   எத்தனை பேர் படித்திருப்பீர்கள் என்று  தெரியவில்லை.ஒரு நல்ல விஷயத்தை செய்தவர்களை மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இந்த பதிவு.  

நாகர்கோவிலில் உள்ள கவிமணி தேசிக விநாயகம் அரசு தொடக்க மற்றும் மேல்நிலை பள்ளிக்கு7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து சீர் வரிசையாக வழங்கினர்.  கவிமணி தேசிக விநாயகம் அவர்கள் இந்த பள்ளியில் தான் கல்வி கற்று பின்னர் ஆசிரியராக  பயின்றவராம். இந்த பள்ளியில் மாணவர்கள் கல்வி கற்க தேவையான பொருட்களாக மடி கணினி,பென்சில், தண்ணீர் தொட்டி , இன்வெர்டர், அலமாரி, மின் விசிறி போன்ற 7 இலட்ச ரூபாய்க்கான பொருட்களை பெற்றோர்களும், ஊர் மக்களும்  பட்டாடை உடுத்தி மேல தாளங்களுடன் ஊர்வலமாக வந்து பள்ளிக்கு வழங்கினார்கள். இப்படி ஊர்வலமாக வந்த பெற்றோர்கள் மற்றும் பொது மக்களை ஆசிரியைகள் ஆரத்தி எடுத்து வரவேற்றிருக்கிறார்கள் . 

இவ்வளவையும் செய்த அந்த ஊர் மக்கள் கடைசியில் சொன்ன அந்த வாக்கியம் தான் அவர்கள் எந்த அளவிற்கு அரசுப் பள்ளியின் மீது பாசத்தையும், உரிமையையும் வைத்திருக்கிறாரகள் என்று தெரிகிறது. 

"அரசு மட்டுமே பள்ளிகளை பராமரிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி அனைவரும் அரசு பள்ளிக்கு முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். இன்று எங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு தாயான நாங்கள் தாய் வீட்டு சீதனமாக சீர்வரிசை பொருட்களை அளித்து இருப்பதாக தெரிவித்தனர்."

நான் முன்பு சொன்ன மாதிரி நிறைய பெற்றோர்கள் பணத்தை கொட்டிக்கொடுத்து, பிள்ளைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி சந்தோசம்  அடைகிறார்கள். இந்த பெற்றோர்களும் அரசுப் பள்ளிக்காக பணத்தை செலவழித்திருக்கிறார்கள். ஆனால் இவர்கள் அடைந்த சந்தோஷமும் , மனத்திருப்தியும் அந்த பெற்றோர்கள் அடைந்திருப்பார்களா என்றால் கேள்விக்குறி தான்.