Showing posts with label சுற்றுலா. Show all posts
Showing posts with label சுற்றுலா. Show all posts

Tuesday, January 21, 2014

உள்ளூர் சுற்றுலா – 2014ஆம் வருடத்திற்கான புத்துணர்ச்சி – இறுதிப் பகுதி

உள்ளூர் சுற்றுலா – 2014ஆம் வருடத்திற்கான புத்துணர்ச்சி – பகுதி-3
அன்றைக்கு இரவு அந்த டர்கிஷ் கெபாபை சாப்பிட்டு முடிச்சவுடனே,அம்மணி கொண்டு வந்திருந்த அரிசியை ரைஸ் குக்கர்ல வச்சு, சாதம் ஆனபிறகு புளிக்காய்ச்சலை போட்டு,புளியோதரையை செய்துவிட்டார்கள். எங்களுக்கு புளியோதரை ரெடி, ஆனா குழந்தைகளுக்கு தயிர் சாதம் பிசையறதுக்கு, தயிர் இல்லையே(அடிக்கிற வெயிலில் தயிரை வீட்டிலிருந்து கொண்டு வந்தால் ரொம்பவும் புளித்து விடும் என்பதால் கொண்டு வரவில்லை. பக்கத்தில் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்து வாங்க மறந்து விட்டோம். மணியோ இரவு பத்தாயிடுச்சு.பக்கத்துல ஒரு இந்திய உணவகம் இருந்தது நியாபகத்துக்கு வந்துச்சு அங்க போய் வெறும் தயிரை மட்டும் கேட்டுப்பார்த்து வாங்கிக்கிட்டு வரலாம்னு போனேன். நல்ல காலம் நான் போன நேரம் உணவகத்துல கணக்கு வழக்கைப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. இன்னும் கொஞ்ச நேரம் லேட்டாகியிருந்தா உணவகத்தை மூடியிருப்பாங்க. இந்த இடத்துல நான் ஆஸ்திரேலியாவிலுள்ள கடைகளைப் பற்றி சொல்லியாக வேண்டும். அதாவது இங்கு இருக்கும் கடைகள் எல்லாம் திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரையும்,மற்றும் வெள்ளிக்கிழமையும் மாலை 7மணிக்கெல்லாம் மூடப்படும். வியாழக்கிழமை மட்டும் சற்று லேட்டாக 9 அல்லது 10மணி வரை திறந்திருக்கும். சனி,ஞாயிறுகளில் எல்லாம் மாலை 4மணிக்கெல்லாம் மூடப்படும். சூப்பர் மார்க்கெட் கடைகள் மட்டும் இரவு தாமதமாக மூடுவார்கள். நாங்கள் இங்கு வந்த புதிதில், இதெல்லாம் தெரிந்தும் சனி ஞாயிறுகளில், பொறுமையாக வீட்டைவிட்டு கிளம்பி ஷாப்பிங் போகலாம்னு போனா, அங்க ஒரு கடையும் திறந்திருக்காது. ரொம்பவே கடுப்பா இருக்கும். நான் டிராக் மாறி போறேன்னு நினைக்கிறேன். இந்த கடைகளைப் பற்றி வேற ஒரு பதிவுல சொல்றேன்.

அந்த உணவகத்துக்குள்ள போய், கொஞ்சம் தயிர்
கிடைக்குமான்னு கேட்டேன். அப்போது கல்லாவில் இருந்த பெண்மணி பணத்தை எல்லாம் எண்ணிக்கொண்டு இருந்தார்.அவருடைய கணவனைப் போல் இருந்தவர், அவருக்கு பக்கத்தில் நின்று கொண்டு, ஹிந்த்தியில் என்னமோ சொல்லிக் கொண்டிருந்தார். அவர்கள் தான் அந்த ஹோட்டலை நடத்துகிறவர்களாம் (கிளம்பும்போது கேட்டுத் தெரிந்துக்கொண்டேன்).

சகோதரர்களே, நன்றாக கவனியுங்கள்,வீட்டில் தான் நாம் நிதித்துறையை பிரதம மந்திரியான மனைவியிடம் கொடுத்துவிட்டு, வெறும் ரப்பர் ஸ்டாம்ப் குத்தும் ஜனாதிபதியாக வலம் வந்துக்கொண்டிருக்கிறோம். வியாபாரத்திலும் அந்த கணவன் தன் மனைவியிடம் நிதித்துறையை கொடுத்து விட்டு, வேலை செய்யும் ஊழியரைப்போல் நான் கேட்ட வெறும் தயிரை எடுத்து வர உள்ள சென்று விட்டார்.

போகும்போது என்னிடம் வெறும் தயிர் மட்டும் போதுமான்னு கேட்டார், நானும் அந்த தயிரோட கொஞ்சம் உப்பையும் கொடுங்கள் என்று சொன்னேன். அவரும் நான் கேட்டதற்கு தலையை ஆட்டிவிட்டு உள்ளே சென்று தயிரை ஒரு சின்ன பிளாஸ்டிக் கண்டெய்னரில் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, உப்பை தயிரில் கலந்திருக்கிறேன் என்று கூறி மூன்று டாலர் வாங்கிக்கொண்டு, அதை மனைவியிடம் கொடுத்தார். நானும் இந்த உணவகத்தில் பெண்மணியின் ஆட்சி தான் நடக்கிறது போலன்னு நினைத்துக்கொண்டு தயிரோடு தங்கியிருக்கும் அறைக்கு வந்து சேர்ந்தேன். மறு நாள் காலையில் தயிர் சாதம், புளியோதரை எல்லாம் எடுத்துக்கொண்டு "CATHEDRAL ROCKS" எனும் இடத்துக்கு போனோம். அதுவும் கியாமா போகிற வழியில் "கியாமா டௌன்ஸ் (KIAMA DOWNS)"எனும் இடத்தில் இருந்தது. ஆஹா, அந்த இடத்தை பார்க்கவே மிகவும் அழகாக இருந்தது.





அங்கே கொஞ்சம் நேரம் இருந்துவிட்டு, பிறகு எங்கே போகலாம்னு நான் "கியாமா சுற்றுலா அலுவலகத்தில்" இருந்து சுட்டுக்கிட்டு வந்த புத்தகக்தை புரட்டிப்பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்போது ஓவியா, அப்பா நாம மறுபடியும் அந்த ப்லோ ஹோல் எடத்துக்கே போகலாம். நேத்து நீங்க எங்களை சீக்கிரம் கூட்டிக்கிட்டு வந்துட்டீங்க, அதனால மறுபடியும் போய் ரொம்ப நேரம் அங்க இருக்கணும்னு சொன்னாங்க.  சரி, அவுங்க ஆசையை என் கெடுப்பானேன்னு, மறுபடியும் கியாமாவிற்கு போய், முதல்ல சாப்பிட ஒரு அருமையான இடமா பார்த்து உட்கார்ந்து சாப்பிட்டோம். எங்களோட புளியோதரை ரொம்ப நல்லா இருந்துச்சு. ஆனா தயிர் சாதம் தான் காலைவாரி விட்டுடுச்சு. புளிப்புன்னா, புளிப்பு அப்படி ஒரு புளிப்பு. அடப்பாவி, இந்த புளிப்புத்தயிருக்குத்தானா மூணு டாலர்ன்னு நினைச்சுக்கிட்டு, தயிர் சாதத்துல மறுபடியும் தண்ணி எல்லாம் ஊத்தி, எப்படியோ ஓவியாவிற்கும் இனியாவிற்கும் கொடுத்தோம். இனியா கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு, அதுக்குமேல சாப்பிட மாட்டேன்னு ஒரே அடம்.



ஏற்கனவே, அவுங்க "தண்ணி குடிச்சா வாந்தி வரும்னு" சொல்லியிருக்கிறதுனால
(அந்த பதிவை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கவும்-தண்ணி குடித்தால் வாந்தி வரும் 
 
அவுங்க சாப்பிட்ட வரை போதும்னு சாப்பாட்டுக்கடையை ஏறக்கட்டி, அந்த ப்லோ ஹோலுக்கு போனோம். எங்க நல்ல நேரம் அன்றைக்கும் தண்ணீர் நல்லா மேலே எழும்பி வந்துச்சு. கொஞ்ச நேரம் அங்கேயே இருந்துவிட்டு, வீட்டுக்கு போகலாம்னு கிளம்பினோம். போகும்போது "GRAND PACIFIC DRIVE" வழியாக போய் அந்த "SEA CLIFF BRIDGE" யையும் பார்த்துக்கொண்டு போகலாம்னு முடிவெடுத்து அந்த "GRAND PACIFIC DRIVE" ஸைன் போர்டை பார்த்துக்கொண்டே போனோம். அப்படி போகும்போது என்ன பிரச்சனை என்றால், இரண்டு மூன்று பாதைகள் பிரியும்போது அந்த ஸைன் போர்ட் இருக்காது. அந்த மாதிரி சமயங்களில் எல்லாம் ஒரு குத்து மதிப்பா வண்டியை ஓட்டிக்கிட்டு போனேன். ஒரு வழியா ஊர்,உலகத்தை எல்லாம் சுத்தின பிறகு, அந்த ப்ரிட்ஜும் கண்ணுல தென்பட்டுச்சு.





 
அந்த இடத்தை பார்க்தவுடனே ஆஹா, இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தது வீண் போகலைடா சாமின்னு நினைக்க தோணுச்சு. இத்தனைக்கும் இந்த ப்ரிட்ஜ் வெறும் 660 மீட்டர் தான். ஆனாலும் கண்ணுக்கு அப்படி ஒரு அழகான விருந்தை அந்த ப்ரிட்ஜ் கொடுத்துச்சு. வண்டியை ஓரங்கட்டுறதுக்கு கொஞ்சம் இடம் விட்டுவச்சிருந்தாங்க. அந்த இடத்துல வண்டியை ஓரங்கட்டிட்டு, இறங்கி புகைப்படம் எல்லாம் எடுத்துக்கிட்டு 4.30 மணியைப்போல வீடு வந்து சேர்ந்தோம்.
 
அந்த மூன்று நாளும் ஒரு வித்தியாசமான அனுபவமாகவும், இந்த வருடத்திற்கான ஒரு புத்துணர்ச்சியாகவும் அமைஞ்சது.

Friday, January 17, 2014

உள்ளூர் சுற்றுலா – 2014ஆம் வருடத்திற்கான புத்துணர்ச்சி – பகுதி-3


உள்ளூர் சுற்றுலா – 2014ஆம் வருடத்திற்கான புத்துணர்ச்சி – பகுதி-2


நாங்க அன்றைக்கு வெளியில் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று நினைத்து புளியோதரையும், தயிர் சாதத்தையும் செய்துக்கொண்டு வரலை. இத்தாலியன் உணவகமோ அல்லது இந்திய உணவகமோ பக்கத்தில் இருக்கும் என்று அந்த கியாமாவின் முக்கிய கடைவீதியில் தேடிக்கொண்டு நடக்க ஆரம்பித்தோம். பார்த்தா அந்த வகையான உணவகங்கள் கண்ணுக்கு தென்படவேயில்லை.  அப்புறம் ஒரு தாய்லாண்ட் உணவகத்துக்குச் சென்று, நான் ஒரு “vegetarian fried rice” காரமாக வேண்டும் என்றும், அம்மணியோ, சாதமும், “coconut creamமோடு இருக்கும் chicken” வேண்டும் என்றும் சொன்னோம். நாங்க ஆர்டர் பண்ணியாச்சு, ஓவியாவிற்கும், இனியாவிற்கும் என்ன சொல்லலாம் என்பது தான் ஒரு பெரிய மில்லியன் டாலர் கேள்வியாகி விட்டது. கடைசியில் அவர்களுக்கு வெள்ளை சாதமும், தயிரும் கொண்டு வாருங்கள் என்றோம். அதற்கு அவர்கள் சாதம் மட்டும் இருக்கு என்று சொல்லி, வெறும் வெள்ளை சாதத்தை மட்டும் கொண்டு வந்தார்கள். ஒரு வழியா அவர்களுக்கு அந்த வெள்ளை சாதத்தோடு, சிக்கன் மற்றும் என்னுடைய உணவில் இருந்த காய்கறிகளையெல்லாம் வைத்து அவர்களை சாப்பிட வைத்தோம். என்னோட உணவு நல்ல காரமாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டு அந்த ஃப்ரைடு ரைஸை சாப்பிட்டால், அதில் கொஞ்சம் கூட காரமே இல்லை. அடப்பாவிகளா, காரம் ரொம்ப வேண்டாம் என்று சொல்லியிருந்தால் எப்படி செய்திருப்பார்கள் என்று யோசித்துக்கொண்டே எப்படியோ கஷ்டப்பட்டு அதை சாப்பிட்டு முடிச்சேன். அப்பத்தான் நம்ம பாரம்பரிய உணவான புளியோதரையும், எலுமிச்சை சாதமும், தயிர் சாதமும் “எங்களையா உதாசீனப்படுத்தின, நல்லா அனுபவி மகனே,அனுபவின்னு சொல்லாம சொல்லி சிரித்த மாதிரி எனக்கு தோணுச்சு.

 

சாப்பிட்டு முடிச்ச பிறகு, என்னுடைய நடைப் பயிற்சியை அங்கேயும் தொடர்ந்தேன். நடக்கும்போது அங்க இருந்த ஒரு சில கடைகளில் அம்மணி உள்ளே சென்று, தனக்கு வேண்டிய பாசி,மணிகளையெல்லாம் வாங்கிக்கொண்டார். அப்போது ஓவியா ஒரு அருமையான கேள்வியை கேட்டார்.

“ஏம்பா நான் ஏதாவது வேணும்னு கேட்டா வாங்கிக்கொடுக்க மாட்டேங்கிறீங்க ஆனா அம்மாவுக்கு மட்டும் அவுங்க கேக்குறது எல்லாம் வாங்கிக்கொடுக்கிறீங்க”

உனக்கு நான் வேணாம்னு சொன்னா, கொஞ்ச நேரத்துல நீ சமாதானம் ஆயிடுவ, ஆனா உங்கம்மா அப்படியான்னு, சொல்லலாம்னு நினைச்சேன், ஆனா உடனே அந்த எண்ணத்தை தண்ணியைவிட்டு கழுவிட்டேன். அந்த கேள்விக்கு வேற எந்த பதிலும் சொல்லாம, ஓவியாவிற்கும், இனியாவிற்கும் இரண்டு பொம்மைகளை வாங்கிக்கொடுத்து பக்கத்துல இருந்த பார்க்குக்கு போய், அவுங்களை கொஞ்ச நேரம் விளையாட விட்டோம்.

அப்புறம் அங்கிருந்து ஒரு ஐந்து மணியைப் போல கிளம்பி “BASS POINT” அப்படிங்கிற ஒரு சின்ன தீபகற்பகத்துக்கு போனோம். அது கியாமாவிலிருந்து திரும்பி wollongong போகிற வழியில் “shell harbour village” என்னும் ஊரில் இருக்கிறது. அந்த இடத்துக்கு போய் சேரும்போது 5.45 மணியாகிவிட்டது. நாங்கள் வெயில் காலத்தில் போனபடியால் (dec,jan,feb மாதங்கள் இங்கு வெயில் காலம்) உள்ள போவதற்கான கதவு மூடவில்லை. அந்த கதவு வெயில் காலங்களில் இரவு 7.30 மணிக்கும், குளிர் காலங்களில் மாலை 6மணிக்கு மூடுவார்களாம். அந்த இடத்தில் பாறைகளுக்கிடையில் எல்லாம் தண்ணீர் இருந்ததை  பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. மேலும் இந்த இடம் "SCUBA DIVING"க்கு பெயர் போன இடம். நீ "SCUBA DIVING" பண்ணினாயா என்று தயவுசெய்து என்னை கேட்டு விடாதீர்கள். எனக்கு கடப்பாறை நீச்சல் மட்டும் தான் தெரியுமாக்கும்.

 
 












ஒரு மணி நேரம் அங்கிருந்துவிட்டு, திரும்பி நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தோம். இரவு உணவுக்கு நான் முன்பே பக்கத்தில் பார்த்து வைத்திருந்த ஒரு "டர்கிஷ் கெபாப் (TURKISH KEBAB)" உணவகத்துக்குப் போய் வெஜிடேரியன் கெபாபை (Vegetarian kebab) வாங்கிக்கொண்டு வந்து அறையில் சாப்பிட்டோம். ஆனா, சும்மா சொல்லக்கூடாது, நான் இங்கு சிட்னியில் அதே வெஜிடேரியன் கெபாபை நிறைய இடங்களில் சாப்பிட்டு இருக்கிறேன், ஆனா இந்த இடத்தில் சாப்பிட்ட ஒரு திருப்தி வேறு எங்கேயும் வந்ததில்லை. அந்த அளவிற்கு ரொம்ப நல்லா இருந்துச்சு.

சாப்பிட்டு முடிச்சாவுடனே, அம்மணி கொண்டுவந்திருந்த அரிசியை ரைஸ் குக்கர்ல வச்சு, சாதம் ஆனபிறகு புளிக்காய்ச்சலை போட்டு, புளியோதரையை செய்துவிட்டார்கள். எங்களுக்கு புளியோதரை ரெடி, ஆனா குழந்தைகளுக்கு தயிர் சாதம் பிசையறதுக்கு, தயிர் இல்லையே(அடிக்கிற வெயிலில் தயிரை வீட்டிலிருந்து கொண்டு வந்தால் ரொம்பவும் புளித்து விடும் என்பதால் கொண்டு வரவில்லை. பக்கத்தில் வாங்கிக்கொள்ளலாம் என்று நினைத்து வாங்க மறந்து விட்டோம். மணியோ இரவு பத்தாகிவிட்டது.

பிறகு, எவ்வாறு தயிர் சதம் செய்து மறு நாள் கொண்டுப்போனோம் என்பதையும், "CATHEDRAL ROCKS" எனும் இடத்துக்கு போனதையும் வீட்டிற்கு திரும்பி வரும் வழியில், ஊர் உலகம் எல்லாம் சுற்றி "SEA CLIFF BRIDGE" வழியா எவ்வாறு வீடு வந்து சேர்ந்தோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்லி, இத்தொடரை முடிக்கிறேன்.


உள்ளூர் சுற்றுலா – 2014ஆம் வருடத்திற்கான புத்துணர்ச்சி – இறுதிப் பகுதி

 

Friday, January 10, 2014

உள்ளூர் சுற்றுலா – 2014ஆம் வருடத்திற்கான புத்துணர்ச்சி – பகுதி-2

உள்ளூர் சுற்றுலா – 2014ஆம் வருடத்திற்கான புத்துணர்ச்சி – பகுதி-1

இந்த ரோட்டிலேயே ஒரு ஏழுட்டு நிமிடம் நடந்தீங்கன்னா பீச் வந்துடும்னு சொன்னதை நம்பி, நாங்க நடக்க ஆரம்பிச்சோம். ஒரு வழியா 25 நிமிடங்கள் நடந்த பிறகு பீச் கண்ணில தென்பட்டுச்சு.அந்த பீச்ல போய் உட்கார்ந்தவுடனே, ஓவியாவும் இனியாவும் மண்ணில் விளையாட ஆரம்பிச்சாங்க.



இவுங்க மண்ணில் விளையாடுறதை பார்த்தபோது, எனக்கு என் சிறுவயது நியாபகம் தான் வந்தது. அப்போது இவர்கள் விளையாடுகிற மாதிரி பிளாஸ்டிக் பாத்திரங்கள் எல்லாம் கிடையாது, கண்டனூரில் என் ஆயா வீட்டு முன்பு இருக்கும் ஈர மணலில் வெறும் கைகளைக்கொண்டு வீடுக்கட்டி, தண்டவாளம் அமைத்தெல்லாம் விளையாடுவோம். உம்... அதெல்லாம் அந்த காலம்!!!!.

ஒரு மணிநேரம் அங்கே இருந்துவிட்டு, திரும்பி நடந்து அறைக்கு இரவு ஒரு 8.15 மணியைப்போல் வந்து சேர்ந்தோம்.
அறைக்குள்ள வந்தவுடனே, பசின்னா பசி அப்படி ஒரு அகோர பசி. வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த இட்லியும் சட்னியும் சூடு பண்ணி (அறைல மைக்ரோவேவ் ஓவன் மற்றும் சில தட்டுமுட்டு சாமங்களும் இருந்துச்சு) சாப்பிட்டு முடிச்சோம். நாங்க இருந்த அறைல, ஒரு பெரிய குயின் சைஸ் பெட்டும், ஒரு சோபாவும் இருந்துச்சு. நான் அறையை முன்பதிவு செய்யும்போது சோபா கம் பெட் இருக்கும்னு சொன்னாங்க. சரி, இந்த சோபாவைத்தான் பெட்டாக மாத்தணும் போலன்னு நினைச்சுக்கிட்டு, அந்த சோபாக்கூட ரொம்ப நேரமா போராடி, ஒரு வழியா அதை பெட்டா மாத்தி படுத்து தூங்கி மறு நாள் காலைல 7,30 மணியைப் போல எந்திரிச்சோம்.


இது தான் அந்த சோபா


அப்படியிருந்த சோபா தான், இப்படி பெட்டாக மாறியிருக்கு

வீட்டு அம்மணி ஸ்ட்ராங்ககா ஒரு டீ போட்டுக்கொடுத்தாங்க. சரி, பரவாயில்லையே டீ போட்டுக்கொடுக்கிறாங்களேன்னு நினைச்சா, டீ கப்பை கைல கொடுத்துட்டு, பாருங்க நான் இங்க வந்தும் உங்களுக்கு டீ போட்டுக்கொடுக்கிறேன்னு, சொன்னாங்க. நான் ரொம்ப சமர்த்தா, அதை அப்படியே ஒரு காதுல வாங்கி, இன்னொரு காதுல வெளியில விட்டுட்டேன். அப்புறம் எல்லோரும் குளிச்சு, பிரட் சாப்பிட்டுவிட்டு(இதுவும் உபயம் வீட்டு அம்மணி தான்!!!!). ஒன்பது மணியைப்போல கிளம்பி, நாற்பது கிலோமீட்டர் தள்ளியிருக்கிற “கியாமா (KIAMA)”  அப்படிங்கிற இடத்துக்கு போனோம். அந்த ஊர் “ப்லோ ஹோலுக்கு (BLOW HOLE)” மிகவும் பிரசத்திப்பெற்றது.

கடற்கரை ஓரத்துல பாறைகளுக்கு இடையில் ஒரு 25-30 அடி ஆழத்தில் ஒரு பெரிய ஓட்டை இருக்கும். காற்றானது தென்கிழக்கிலிருந்து (South east) விசும்போது, கடல் அலையானது அந்த ஓடையின் வாயிலுக்குள் நுழைந்து, காற்றை அமுக்கும். காற்று அந்த அமுக்கத்திலிருந்து விடுப்படும்போது, பெரிய சத்தத்துடன், வெளிப்படும், அப்போது தண்ணீரும் அடியிலிருந்து மேலே எழும்பும். இது தான் BLOW HOLE.





பாறைகளுக்கு இடையில் உள்ள ஒரு பெரிய ஓட்டை


இந்த ஓட்டையிலிருந்து தான் தண்ணீர் சத்தமாக மேலே எழும்பி வரும்




புகைப்பட உதவி: கூகிள் ஆண்டவர் (இந்த புகைப்படம் மட்டும்)


அங்கு நிறைய பாறைகள் இருந்தது. நான் அந்த பாறைகளுக்கிடையில் எல்லாம் சிறிது தூரம் சென்று புகைப்படங்களை எடுத்தேன்.






அப்புறம் திரும்பி காருக்கு வரும்வழியில், அம்மணி ஓவியாவிடமும், இனியாவிடமும் குளிர் கண்ணாடிகளை கொடுத்து போட்டுக்கச் சொன்னார்கள். ஆனால் அவர்களோ வேண்டுமென்றே, தலைகீழாக திருப்பி போட்டுக்கொண்டார்கள். உடனே அம்மணி அதை ஒரு கிளிக் பண்ணிக்கொண்டார்கள்.  




அன்று நாங்கள் புளியோதரையை அறையிலிருந்து செய்துக்கொண்டு வரவில்லை (புளியோதரை செய்வதற்கு, அரிசி, புளிக்காய்ச்சல் மற்றும் ரைஸ் குக்கர் எல்லாம் கொண்டு வந்திருந்தோம்). வெளியில் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று நினைத்து வந்தது எவ்வளவு பெரிய பிசகாகி விட்டது என்று அப்பொழுது தான் புரிந்தது. அதனை அடுத்த பகுதியான  கடைசிப் பகுதியில் சொல்கிறேன் .

உள்ளூர் சுற்றுலா – 2014ஆம் வருடத்திற்கான புத்துணர்ச்சி – பகுதி-3
 
- தொடரும்  















Monday, January 6, 2014

உள்ளூர் சுற்றுலா – 2014ஆம் வருடத்திற்கான புத்துணர்ச்சி – பகுதி-1

என்னடா, நீ இன்னும் தலைவா படம் அனுபவத்தையே முடிக்கலை, அதுக்குள்ள இன்னொரு தொடர் கட்டுரையை ஆரம்பிச்சுட்டே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. தலைவா தொடர் அதிகபட்சமாக இன்னும் மூன்று பகுதிக்குள் முடிந்து விடும். அந்த தொடர் படம் வெளிவந்தவுடன் தான் ஆரம்பிக்கவேண்டும் என்று நினைத்ததால், இவ்வளவு தாமாதாமாகி விட்டது. இந்த உள்ளூர் சுற்றுலா தொடர் இரண்டு பகுதிகள் தான். அதனால் தான் இதனை ஆரம்பித்து முடித்துவிடலாம் என்று நினைத்தேன்.


2012ஆம் ஆண்டு இறுதியில், அதாவது கிறிஸ்துமஸ் சமயத்தில், ஆறு குடும்பங்கள் சேர்ந்து ஏறக்குறைய 600கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் காஃப்ஸ் ஹார்பர் (“coffs harbour”) என்ற இடத்துக்கு காரில் சென்றோம். அது தான் நான் கார் ஓட்டிச்சென்ற முதல் தொலைத்தூர கார் பயணம். 2013ஆம் ஆண்டு முடிவில், எனக்கு இரண்டு நாட்கள் தான் விடுமுறை இருந்தது. அதனால் எங்குக் செல்ல வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் ஓவியாவோ, நாம் எங்காவது சென்று இரண்டு,மூன்று தங்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்தாள். அதனால் இந்த வருட ஆரம்பத்தில் ஒரு நாள் மட்டும் விடுமுறை எடுத்துக்கொண்டு, வெள்ளிக்கிழமை காலை எங்கள் வீட்டிலிருந்து 60கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வுள்ளாங்காங் (“Wollongong”) சென்று இரண்டு நாட்கள் தங்கி, இன்று மாலை தான் வீடு வந்து சேர்ந்தோம்.

இரண்டு நாட்கள் தங்குறதுன்னு முடிவாகி விட்டது. அதனால எங்க வீட்டு அம்மணி, ரைஸ் குக்கர் முதற்கொண்டு, அரிசி,புளிக்காச்சல், இட்லி,சட்னி என்று ஏகப்பட்ட முட்டை முடிச்சுகளை முதல் நாள் இரவே எடுத்து காரில் வைத்து விட்டார்கள். வெள்ளிக்கிழ்மை காலையில நாங்க அப்படி இப்படின்னு கிளம்பவே 10.30 மணி ஆயிடுச்சு. சரியா 11.30 மணியைப்போல அந்த ஹோட்டலுக்கு போனோம். 2.00 மணிக்கு தான் செக்-இன் செய்ய முடியும். இருந்தாலும் எங்களோட அறைக்குள்ள போயிடலாம் அப்படின்னு ஒரு குருட்டு நம்பிக்கையில, ஹோட்டலுக்கு போனேன். அங்க இப்பத்தான் உங்க அறையை சுத்தம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க, அதனால நீங்க ரெண்டு மணிக்கே வாங்கன்னு சொல்லிட்டாங்க. நம்க்கு எப்பவுமே சரியான நம்பிக்கையே ஒழுங்கா வேலை செய்யாது, இதுல குருட்டு நம்பிக்கை எப்படி வேலை செய்யும்னு நினைச்சுக்கிட்டு, சரி பக்கத்துல இருக்கிற புத்தர் கோவிலுக்கு போகலாம்னு அங்க போனோம்.



அந்த புத்தர் கோவிலுக்கு பேர் – “Nan Tien Temple” (இதற்கு, “தெற்கில் ஒரு சொர்க்கம்” என்று சீன மொழியில் அர்த்தமாம். இந்த கோவில் இருப்பதும் சிட்னியின் தெற்கில் தான்). 26 ஏக்கர் பரப்பளவில், 1995ல் இந்த கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த ஊருக்கு, இந்த கோவில் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாகும். 




இந்த கோவில் வளாகத்தில் வெளிப்பிரகாரத்தில்(தரைத்தளத்தில்)  எட்டடுக்கு “பகோடா” (“pagoda”) இருக்கிறது. இந்த பகோடாவிற்கு போவதற்கு நம்மூர் மலைமேல் இருக்கும் கோவில்களுக்கு செல்வது போல், படிகள் ஏறி செல்ல வேண்டும்.



இந்த பகோடாவிற்கு நேர் எதிரில் தான் இந்த புத்தர் சிலை இருக்கிறது.
  
இந்த தரைத்தளத்தில் தான் கார் பார்க்கிங் இருக்கிறது. இந்த தளத்தைச் சுற்றிலும் நிறைய சின்ன சின்ன சிலைகள் அழகாக காட்சியளிக்கிறது. உதாரணத்திற்கு, என் மனதை கவர்ந்த சில சிலைகளின் புகைப்படங்களை கீழே பாருங்கள்.








நாங்கள் நேராக முதலில் மெயின் டெம்பிளுக்குள் சென்றோம். நம்மூர் கோவில்கள் மாதிரி, செருப்பை வெளியில் விட்டுவிட்டு செல்ல வேண்டும். அங்கே ஒரு பெரிய ஹால் மாதிரியான ஒரு அரை இருக்கிறது. மேடையில் ஐந்து புத்தர் சிலைகள் இருக்கின்றன. தரையில் அமராமல் உட்காருவதற்கு ஏற்ற பலகைகள் வைத்திருக்கிறார்கள். அதில் அமர்ந்து கொண்டு பிராத்தனை செய்கிறார்கள். அந்த அறையை சுற்றி 10,000 சிறிய உருவத்திலான புத்தர்களை சுவற்றில் பதித்திருக்கிறார்கள். மண்டபத்திற்குள் யாரும் புகைப்படம் எடுக்க கூடாது. சரி,புகைப்படம் எடுக்க முடியாது போல இருக்கு என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது, நிறைய பேர் வெளியில் நின்று கொண்டு உள்நோக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். நானும் அவர்களைப் பின்பற்றி எடுத்துக்கொண்டேன்.





கோவில் வளாகத்திற்குள் ஒரு அழகான தாமரைக் குளம் உள்ளது.



இதில் இரண்டு வாத்துக்கள் சென்றுக்கொண்டிருந்தன.





 அப்போது ஒரு வாத்து தண்ணீரில் மூழ்கும் போது, நான் கிளிக் செய்தது தான் இந்த படம்.




ஒரு வழியாக நாங்க இந்த கோவிலை சுற்றி பார்த்து முடித்து பிறகு நேரத்தை பார்த்தால், மணி இரண்டாகியிருந்தது. நாங்க ஹோட்டலுக்கு போய் சேர்ந்தபோது மணி இரண்டரை. அறைக்குள்ள போய் கொண்டு போயிருந்த எலுமிச்சை சாதத்தை சாப்பிட்டு, கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு, பீச்சிற்கு போகலாம் என்று கிளம்பினோம். அந்த ஹோட்டல் வரவேற்பறையில் இருந்தவர்களிடம் பீச்சிற்கு எப்படி போக வேண்டும் என்று கேட்டபொழுது, அவர்கள், இங்கேருந்து ஒரு ஏழெட்டு நிமிட நடையில் பீச் வந்துவிடும் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னதை நம்பி நாங்கள் நடக்க ஆரம்பித்தோம்... நடந்தோம்... நடந்துக்கொனேயிருந்தோம்...

எவ்வளவு நேரம் நாங்கள் நடந்து அந்த பீச்சை அடைந்தோம் என்று அடுத்த பதிவில் சொல்கிறேன்.


உள்ளூர் சுற்றுலா – 2014ஆம் வருடத்திற்கான புத்துணர்ச்சி – பகுதி-2