Thursday, March 28, 2013

காதல் – பிறந்த நாள் வாழ்த்து


“நீங்கள் மட்டுமா
ஒரு இடத்திலிருந்து
இன்னொரு இடத்திற்கு
புலம் பெயர்வீர்கள்
நானும் கூட தான்
புலம்பெயர்வேன் என்று கூறி
என் இதயம் உன்னிடமல்லவா
புலம்பெயர்ந்து விட்டது”
    

நாம் காதலிக்க ஆரம்பித்து கிட்டதட்ட ஒரு வருடம் முடியும் தருவாயில், என் பிறந்த நாள் வந்தது. உன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும், அதனால் உனக்கு என்ன பரிசு வேண்டும் என்று நீ கேட்டாய். நானோ, உன் கைகளை கொண்டு எனக்கு எந்த பரிசையும் தர வேண்டாம். உன் செவ்விதழ்களைக் கொண்டு, என் கருத்த இதழ்களை செவ்விதழ்களாக மாற்று என்று கூறினேன். அதற்கு நீயோ, “ஆ, அஸ்கு, புஸ்கு,அப்பள வடை” என்று பழிப்பு காட்டினாய். நானோ, மிட்டாய் கிடைக்காத குழந்தை மாதிரி முகத்தை வைத்துக் கொண்டிருந்தேன். அதை பார்த்த நீ, சரி போனா போகுது என்று என் கன்னத்தில் உன் இதழ்களால் ஒத்தடம் கொடுத்தாய். பிறகு, இருவரும் கோவிலுக்கு சென்றோம், அங்கு இருந்த குருக்களிடம் என் பெயருக்கு அர்ச்சனை செய்யுமாறு கூறினாய். உடனே நான், என் பெயருக்கு வேண்டாம், அவள் பெயருக்கே அர்ச்சனை செய்யுங்கள் என்று கூறினேன். அதற்கு நீ, ஏண்டா, உனக்கு தானே இன்னைக்கு பிறந்த நாள், அப்புறம் எதுக்கு என் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என்று கேட்டாய். நானோ, என் இதயமே உன்னிடத்தில் தான் இருக்கிறது, நீ நன்றாக வாழ்ந்தால் தானே, நான் உயிர் வாழ முடியும், அதுக்காக தான் என்று கூறினேன். அந்த குருக்களும், இப்போது இருக்கிற இதே அன்பு, நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட பிறகும் மாறாமல் இருந்தால், கண்டிப்பாக நீங்கள் நூறாயுசு வாழ்வதற்கு , இந்த இறைவன் உங்களுக்கு துணையிருப்பான் என்று கூறி, இருவர் பேருக்கும் அர்ச்சனை செய்து நம்மை வாழ்த்தி, அந்த பிறந்த நாளை ஒரு மறக்க முடியாத பிறந்த நாளாக்கி விட்டார். 

Sunday, March 24, 2013

காதல் கீதம் – 11

பகுதி - 10
மறு நாள் காலையில், அவன் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது, அவன் தந்தை போன் பண்ணி, நீ ஒரு நாள் லீவு சொல்லிட்டு, இன்னைக்கு ராத்திரியே கிளம்பி மெட்ராஸுக்கு வா என்று கூறினார். 

அவனும், அன்றிரவே மெட்ராஸுக்கு கிளம்பி போனான். காலையில் வீட்டில் போய் இறங்கி, குளித்து காலை சிற்றுண்டி சாப்பிட்டு முடித்தவுடன், அவனுடைய தந்தை அவனிடம்,

“ஏண்டா, இது எத்தனை நாளா நடக்குது” என்று கேட்டார்

“எதுப்பா”

“ஆதாண்டா, நீ ஒரு பொண்ணை விரும்புறது”

“அப்பா, அது யாரோ ஒரு பொண்ணு இல்லப்பா, நம்ம மணியோட சொந்தக்கார பொண்ணுப்பா” என்றான் அடைக்கப்பன்.

“அது எல்லாம் எங்களுக்கு தெரியும். எனக்கு தான் இந்த காதல் கத்திரிக்காய் எல்லாம் பிடிக்காதுன்னு உனக்கும் தெரியும் தானே. தெரிஞ்சும் நீ, காதலிச்சிருக்கேன்னா, என்னடா அர்த்தம்” என்று கோபப்பட்டார்.

“அப்பா, நான் வேற ஜாதி பொண்ணை காதலிச்சிருந்தா நீங்க கோபப்படுறதுல அர்த்தம் இருக்கு. எப்படியும் நீங்க எனக்கு ஒரு செட்டிய வீட்டு பொண்ணை தான் கல்யாணம் பண்ணி வைப்பீங்க, அது ஏன் இந்த ஜனாகியா இருக்க கூடாது?” என்று திருப்பி கேட்டான் அடைக்கப்பன்.

“ஏங்க அவன் சொல்றதிலும் என்ன தப்பு இருக்குங்க” என்று இருவருக்கும் இடையில் புகுந்தாள் அவன் தாய்.

“இவனா ஒரு பெண்ணை தேடிக்கிறதுக்கு, பெத்தவங்கன்னு நாம எதுக்கு இருக்கோம்” என்று கேட்டார்.

“அவன் ஒண்ணும் மத்த பசங்களை மாதிரி வேற யாரையோ காதலிக்கலை. நமக்கு தெரிஞ்ச குடும்பத்து பொண்ணை தான் காதலிக்கிறான். அந்த பொண்ணும் ரொம்ப நல்ல பொண்ணா தான் தெரியிது” என்று பதிலுரைத்தாள்.

“எல்லாம் நீ கொடுக்கிற செல்லம் தான், அவனை இப்படியெல்லாம் பண்ண வைக்குது. சரி நான் இப்ப என்ன பண்ணனும்” என்று சற்று கீழிறங்கி வந்தார்.

“அந்த பொண்ணும் அடுத்த மாசத்துல படிப்பை முடிக்க போகுது. நாம நம்ம மணிக்கிட்ட, நம்ம பிள்ளையோட ஜாதகத்தை கொடுத்து, அந்த பொண்ணோட ஜாதகத்தை கேப்போம்”

“எனக்கு என்ன ஒரே கஷ்டம்னா, நமக்கு இருக்கிறது ஒரே புள்ள, அவனுக்கு நான் ஒரு நாலைந்து இடத்துல அலைஞ்சு, நல்ல குணமுள்ள ஒரு பொண்ணை கட்டி வைக்கணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். என்ன, இப்ப அது முடியாது.” என்று வருத்தப்பட்டார்.

“இங்க பாருங்க, நமக்கு அவன் சந்தோஷம் தானே முக்கியம். அதனால ஆக வேண்டிய காரியத்தை பார்ப்போம்.”.

“சரிடா, இதை கேக்குறதுக்காக தான் நான்,உன்னைய இன்னைக்கே வர சொன்னேன். நீ இன்னைக்கு ராத்திரி கிளம்பு, நானும் உன் அம்மாவும் மேக்கொண்டு ஆக வேண்டிய வேலைகளை பார்க்கிறோம்” என்றார் அவனிடம்.

அடைக்கப்பனுக்கோ, உள்ளுக்குள் ஒரே சந்தோஷம். அதை வெளியே காட்டாமல். ரொம்ப தாங்க்ஸ்மா, ரொம்ப தங்க்ஸ்ப்பா என்று கூறி வெளியே போனான்.

மறு நாள் மீண்டும் படமாத்தூருக்கு சென்று வேலையில் மூழ்கினான். 

பிறகு வந்த ஒரு மாதமும் ஜானகிக்கு கடைசி செமெஸ்டெர் பரீட்சை என்பதால், அவனால் ஜானகியை பார்க்க முடியவில்லை. ஜானகிக்கும் பரீட்சை முடிந்த இரண்டு வாரத்திற்கு பிறகு ஒரு நாள் மணியும்,உண்ணாவும்,அடைக்கப்பனின் பெற்றோரும் படமாத்தூருக்கு ஜானகியின் வீட்டுக்கு வந்து, ஜனாகியை தங்கள் வீட்டு மருமகளாக ஆக்கிக் கொள்ள ஆசைப்படுவதாக கூறினார்கள். ஜானகியின் தந்தை நாராயணனுக்கு, இவர்களின் காதல் தெரிந்திருந்த படியால், அவரும் சம்மதித்தார். இரு வீட்டாரும் தங்கள் வழக்கப்படி,ஜாதகம் மாத்திக்கொண்டார்கள். ஜாதகத்தை பார்த்துவிட்டு மேற்கொண்டு நடக்கலாம் என்று முடிவு எடுத்தனர்.

அதன்பிறகு, அடைக்கபப்பனும், ஜானகியும் தங்களுக்கு திருமணம் நிச்சயம் நடக்கப்போகிறது என்று மிகுந்த சந்தோசத்துடன் இருந்தார்கள்.

கிட்டதட்ட பத்து நாள் கழித்து, ஒரு நாள் அடைக்கபனுக்கு,அவனுடைய தந்தை, உடனே  வருமாறு கூப்பிட்டார். அவனும் தன் வீட்டிற்கு போனான்.

“அடைக்கப்பா, மனசை தளர விடாதே, உனக்கும் ஜானகிக்கும் கலியாணம் நடக்காது” என்றார் அவன் தந்தை.

“என்னப்பா சொல்றீங்க. திடீர்னு குண்டை தூக்கி போடுறீங்களேன்னு” அதிர்ச்சியோடு கேட்டான் அடைக்கப்பன்.

“உங்க ரெண்டு பேருக்கும் ஜாதகம் பொருந்தலைப்பா” என்றாள் அவன் தாய்.

“என்னம்மா, இந்த காலத்துலேயும் ஜாதகம் அது இதுன்னுட்டு. உங்களுக்கு ஜானகியை பிடிக்கலை, அது தான் ஏதாவது ஒரு காரணம் சொல்றீங்க” என்று கோபப்பட்டான்.

“ஏண்டா, பிடிக்காமதான் நாங்க ஜாதகம் எல்லாம் பார்த்தோமாக்கும். இதோ பாருப்பா, உன் சந்தோஷம் தான் ங்க சந்தோஷம். ஒண்ணுக்கு மூணு ஜோசியர் சொல்லிட்டாங்க. அதோட ஜானகி வீட்டுலேயும் ஜாதகம் பார்த்த இடத்தில இந்த ரெண்டு பேருக்கும் கலியாணம் பண்ணாதீங்கன்னு  சொல்லி இருக்காங்க”  என்று விளக்கினார் அவன் தந்தை. .

“ஏம்பா, அப்படி பார்த்தா, வெளி நாட்டுல இருக்கிறவங்க எல்லாம் ஜாதகம் பார்த்தா கல்யாணம் பண்ணிக்கிறாங்க” என்று கேட்டான்

“அவுங்க கலாச்சாரம் வேற, நம்ம கலாச்சாரம் வேற. உங்க ரெண்டு பேருக்கும் கலியாணம் பண்ணக்கூடாதுன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும் உங்களுக்கு கலியாணம் பண்ணி வச்சு, பின்னாடி ஏதாவது பிரச்சனை வந்தா என்னப்பா பண்றது” என்று கூறினார்.

“அம்மாண்டா, உங்கப்பா சொல்ற மாதிரி, பின்னாடி எதுவும் பிரச்சனை வரக்கூடாது. நீ நூறு வயசுக்கும் சந்தோஷமா இருக்கணும். உனக்கு வேற நல்ல இடத்துல பொண்ணு பார்க்கிறோம்பா. ஜானகியை மறந்துடுப்பா” என்றாள் அவன் தாய்.

“ஈஸியா சொல்லிட்டீங்க, அவளை மறந்துடுங்கன்னு. நான் எவ்வளவு நம்பிக்கையா இருந்தேன் தெரியுமா, ரெண்டு பெரும் ஒரே இனம், அதனால ஒரு பிரச்சனையும் வராதுன்னு, இப்படி கடைசில ஜாதகத்து மேல பழியை போட்டுடிங்களே “ என்று புலம்பினான்.

“இங்க பாருடா, நிறைய பேருக்கு, அவுங்க விரும்புனவங்களை கலியாணம் பண்ணிக்க முடியாத சூழ்நிலை உருவாயிடும். இனி நமக்கு அவ்வளவு தான், வாழ்க்கையே போச்சுன்னு நினைச்சுக்காம வேற யாரையாவது கலியாணம் பண்ணிக்குவாங்க. அதனால நீயும் அவளை மறந்துட்டு வேற ஒரு பொண்ணை கலியாணம் பண்ணிக்கோ” என்று எடுத்துரைத்தார் அவனுடைய தந்தை.

அடைக்கப்பனும், வேண்டா வெறுப்பாக, இருவரின் அறிவுரைகளையும் கேட்டுக்கொண்டு, அன்று இரவு படமாத்தூருக்கு பஸ் ஏறினான். மறு நாள் காலை ஆபிஸுக்கு போன மறு நிமிடம், ஜானகியின் வீட்டுக்கு போன் பண்ணினான். ஜானகி தான் எடுத்தாள்.

“ஜானகி, நாம வழக்கமா சந்திக்கிற சிவகங்கை பார்க்குக்கு சியாந்திரம் வரியா? உன் கூட நிறைய பேசணும்”.

“சரிப்பா நான் வரேன்”

மாலை இருவரும் சிவகங்கை பூங்காவில் சந்தித்தார்கள்.

“உங்க வீட்டில என்ன சொல்றாங்க ஜானு என்று கேட்டான் அடைக்கப்பன்.

“எங்க வீட்டிலையும், ஜாதகத்துமேல பழியை போடுறாங்கப்பா” என்றாள் ஜானகி.

“பேசமா நாம யாருக்கும் தெரியாம ரிஜிஸ்டர் மேரேஜ் பன்னிக்கலாமா” என்றான்.

“எனக்கு அதுல உடன்பாடு இல்ல. நம்ம கல்யாணம் எல்லோருடைய சம்மதத்திலும் தான் நடக்கணும்னு நினைக்கிறேன். ” என்றாள் அவள்.

“நீ நினைக்கிறது சரி, ஆனா நமக்கு கல்யாணம் நடக்காது போல இருக்கே” என்றான் அவன்.

“பேசாம நாம ரெண்டு பெரும் பிரியிறது தான் சரிப்பா”

“எப்படி உன்னால அப்படி சொல்ல முடியுது. எனக்கு உன்னைய மறக்கணும்னு நினைச்சாலே கஷ்டமா இருக்கு”

“எனக்கு மட்டும் உங்களை மறக்கிறது அவ்வளவு ஈஸியா என்ன? என்ன பண்றது, நம்ம அம்மா, அப்பா நம்மளோட நல்லதுக்கு தானே சொல்றாங்க. நாம கல்யாணம் பண்ணிக்கிட்டு, நாளைக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்தா, அப்புறம் என்ன பண்றது”.

“நீ சொல்றதும் சரி தான், இந்த சமாதானத்தை புத்தி கேட்டுகிது, ஆனா மனசு கேக்க மாட்டேங்குதே. நாம பிரியிறதை தவிர வேற வழி இல்லையா” என்று ஆதங்கத்தோடு கேட்டான்.

“எனக்கு தெரிஞ்சு இல்லப்பா. நீங்க சொன்ன மாதிரி, நாம யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனா என்ன நம்மளை பெத்தவங்களோட மரியாதை போயிடும். பிள்ளைங்களை வளர்க்கத் தெரியாம வளர்த்திருக்காங்கன்னு அவுங்களுக்கு ஒரு பேர் உண்டாகும். பெத்தவங்களோட மனசை காயப்படுத்தி நாம நம்ம வாழ்க்கையை தொடங்க வேண்டாங்க” என்று நிதானமாக பதிலுரைத்தாள்”.

“சரிப்பா, நீ சொல்ல, சொல்ல என் மனசுக்கு தெளிவு கிடைக்குது. சரி, நாளைக்கும் நாம இதே இடத்தில சந்திச்சு, நாம எடுத்த புகைப்படங்களையும், கடிதங்களையும் தீயிட்டு அழிச்சிடலாம். நீயும் உங்கப்பாம்மா சொல்றவரை பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ, நானும் எங்கப்பாம்மா சொல்றவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றான் அடைக்கப்பன்.

“சரிப்பா, உங்க கூட பழகின இந்த நாட்கள் ரொம்பவும் இனிமையான நாட்கள்பா, என்னதான் நான் வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும், மனசுல ஓரத்துல உங்களோட பழகின இந்த நாட்கள் பதிஞ்சு போயிடும்”.

“ஆனா, அதுவும் காலப்போக்குல அழிஞ்சுடும். எல்லாத்தையும் மறக்கிற சக்தி, காலத்துக்கு தான் இருக்கே. சரி, நீ கிளம்பு. நாளைக்கு மறக்காம எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வந்துடு” என்றான்.

இருவரும் கிளம்பி போனார்கள். அதற்கு பிறகு, இரண்டு மாதத்தில், அடைக்கப்பன் வேற வேலையை தேடிக்கொண்டு, மெட்ராஸுக்கே போய் விட்டான். ஆறு மாதத்திற்கு பிறகு, அடைக்கப்பன், ராயவரத்தை சேர்ந்த தெய்வானையை கலியாணம் செய்துக்கொண்டான். ஜானகியும் கண்டனுரை சேர்ந்த நாகப்பனை திருமணம் செய்துக்கொண்டாள்.


பழைய நியாபகங்களிலிருந்து, மீண்டு இவ்வுலகுக்கு வந்த அடைக்கப்பன், 
அன்னைக்கு நாம ஈஸியா ஜானகிக்கிட்ட சொன்னோம், காலம் எல்லாத்தையும் மறக்கடித்து விடும்னு, ஆனா 15 வருஷம் கழிச்சும், நம்மளால ஜானகியை மறக்க முடியலையே. இப்ப அவள் இன்னொருவருடைய மனைவி, அவளை நினைக்க கூடாதுன்னு, புத்தி சொன்னாலும், பாழாப்போன இந்த மனசு திடீர்,திடீர்னு என்னைக்காவது ஒரு நாள் அவளை நினைக்குதே. இதை தான் சொன்னார்களோ, முதல் காதலை மறக்க முடியாது, அது எப்பவும் நம்ம மனசுல ஒரு ஓரத்துல இருக்கும்னு. சரி, முடிந்த வரை, அவளை நினைக்காம இருக்க முயற்சிப்போம் என்று மனசுக்குள் உறுதி எடுத்துக்கொண்டு, தலையை ஜன்னலுக்கு வெளியே நீட்டி, கடவுளே, “ஜானகி எங்கே இருந்தாலும் நல்லா இருக்கணும்” என்று வேண்டிக்கொண்டு, குளிக்க போனான்.

-முற்றும்

Thursday, March 14, 2013

காதல் கீதம் - 10


பகுதி- 9
அடைக்கப்பனும், ஜானகியை முதன் முதலில் பார்த்ததிலிருந்து, அவளை விரும்புவது வரைக்கும் மறைக்காமல் எல்லாவற்றையும் சொல்லிமுடித்தான்.


“ஏண்டா இவ்வளவு விஷயம் நடந்திருக்கா. எல்லா விஷயத்தையும் என்கிட்ட மறைக்காமல் சொல்லுவ, இதை மட்டும் எப்படிடா மறைச்ச” என்று கேட்டாள்.

“இல்லம்மா, நான் காதலிக்கிறேன்னு சொன்னா, நீ என்ன சொல்லுவியோன்னு பயந்து தான் உன்கிட்ட மறைச்சேன்” என்றான்.

“இப்ப நான் என்ன சொல்லனும்னு நீ எதிர் பார்க்கிற?” என்று கேட்டாள்.

“நீங்க எப்படியும் நம்ம இனத்துல ஒரு பொண்ணை பார்த்து எனக்கு கல்யாணம் பண்ணப்போறீங்க. ஜானகியும் நம்ம இனம் தான். பேசாம அவளையே எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருங்களேன்” என்று மென்று முழுங்கினான் அடைக்கப்பன்.

“உம். அந்த பொண்ணு,அவுங்க குடும்பமும் நல்லவங்களாக தான் தெரியிராங்க. ஆனா, அப்பா இதுக்கு ஒத்துக்கணுமே. உங்கப்பாவுக்கு காதல்னாலே பிடிக்காதே” என்று கவலைப்பட்டாள் அவன் அம்மா.

“அம்மா, அம்மா பிளீஸ்மா, நீ தான்மா அப்பாக்கிட்ட, அவுங்க குடும்பத்தை பற்றி எடுத்துச் சொல்லணும். நான் காதலிக்கிறதை அப்படியே மறைச்சிடுமா” என்றான்.

“என்னால எல்லாம் உங்கப்பாக்கிட மறைக்க முடியாது. பார்ப்போம் நான் நேரம் காலம் பார்த்து சொல்றேன். அது வரைக்கும் நீ கொஞ்சம் அடக்கி வாசி. அந்த பொண்ணுக்கும் இது கடைசி செமெஸ்டெர், நீ பாட்டுக்கு அவளோட அடிக்கடி பேசி, அவ படிப்பை கெடுத்திடாதே” என்றாள்.

“ரொம்ப தாங்க்ஸ்மா. இல்லம்மா, நான் அப்படியெல்லாம் பண்ண மாட்டேன்” என்று வாக்குறுதி கொடுத்தான்.

அன்று இரவு அடைக்கப்பனும் படமாத்தூருக்கு கிளம்பி போனான். ஒரு மாதம் கழித்து, சிதம்பரத்தின் கலியாணத்திற்கு, அவர்கள் ஃபேக்டரியிலிருந்து எல்லோரும் காலையிலேயே போய் தலையை காமித்து விட்டு வந்தார்கள். அடைக்கப்பன் மட்டும் காலையில் போனால் கூட்டமாக இருக்கும், ஜானகியை பக்கத்தில் ஈடுந்து பார்க்க முடியாது என்று நினைத்து, மதியமாக நேராக சிதம்பரத்தின் சொந்த ஊரில் இருக்கும் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அங்கு தான் மாலை பெண் அழைப்பு நடைபெறும். இவனை பார்த்த மாமா மாகன் மணி,

“என்னடா, இப்ப வர? ஏன் காலையிலே வரலை” என்று கேட்டான்.

“காலையில எங்க கம்ப்யூட்டர் சிஸ்டம் டவுன்ல இருந்துச்சு. அதை சரி பண்ணிட்டு இப்ப தான் வரேன்” என்று பதிலுரைத்தான் அடைக்கப்பன்.

அப்போது, ஜானகியும் அவள் தாயாரும் “வாங்க” என்று அவனை கேட்டுவிட்டு போனார்கள். போகும்போது ஜானகி மட்டும் இவனை திரும்பி பார்த்து, புன்னகைத்து விட்டு போனாள். பெண் அழைப்பு சடங்குகள் எல்லாம் நடந்துக்கொண்டிருக்கும்போது, அடைக்கப்பனும், ஜானகியும் மட்டும் கண்களால் பேசிக் கொண்டிருந்தார்கள். நடு, நடுவில் ஜானகி தன் அத்தை பெண் உண்ணா அருகில் உட்கார்ந்திருக்கும்போது, அடைக்கப்பனும், உண்ணாவிடம் சென்று பேசுகிற மாதிரி, ஜானகியிடமும் பேசிவிட்டு வந்தான். அங்கு ஜானகியின் இன்னொரு அத்தை பெண், வள்ளியும், இவர்கள் அடிக்கும் கூத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சிறிது  நேரத்தில் வள்ளி, ஜானகியை இழுத்துக்கொண்டு போய்,

“எப்படி உங்க வீட்டுல சொல்லப் போற” என்று ஜானகியிடம் கேட்டாள்.

அதற்கு ஜானகி,”இன்னொரு ரெண்டு மாசத்துல எனக்கு பரீட்சை முடிந்துடும். அப்புறம் சமயம் பார்த்து சொல்லணும்” என்றாள்.

அப்போது அந்த பக்கமாக நடந்த உண்ணா,

“என்னடி சமயம் பார்த்து சொல்லணும்” என்று கேட்டாள்.

உடனே ஜானகி, மழுப்பும் விதமாக”அது ஒண்ணும் இல்ல உண்ணா” என்று இழுத்தாள்.

வள்ளியோ, “உண்ணாவோட உதவி தான் இப்ப தேவை, அதனால மறைக்காம அவட்ட சொல்லு” என்று ஜானகியிடம் கூறினாள்.

“உங்களுக்குள்ள எண்ணங்கடி நடக்குது” என்று கேட்டாள் உண்ணா.

“இல்ல, நா வந்து உன் செட்டியாரோட அத்தை பையனை விரும்புறேன்” என்று கூறினாள் ஜானகி.

“யாரு, அடைக்கப்பனையா” என்று வாயைப் பிளந்து கேட்டாள் உண்ணா.
ஆமாம் என்று தலையசைத்தாள் ஜானகி.

“இந்த கூத்து எவ்வளவு நாளா நடக்குது” என்று கேட்டாள்.

“உன் கல்யாணத்திலிருந்து தான்” என்று பதிலுரைத்தாள் ஜானகி.

“என்னது!! என் கல்யாணத்திலிருந்தா?” என்று ஆச்சிரியமாக கேட்டாள் உண்ணா.

“ஆமாம் உண்ணா, விளக்கமா இன்னொரு நாள் சொல்றேன். நீ தான் எங்கப்பாக்கிட்டேயும்,அம்மாக்கிட்டேயும், அவரைப் பற்றியும், அவுங்க குடும்பத்தை பற்றியும் நல்ல விதமா சொல்லணும்” என்றாள் ஜானகி.

“நீ கவலையே படாதே ஜானு, உங்கப்பாம்மாக்கிட்ட அவுங்களைப் பற்றி நான் நல்லா சொல்றேன். இன்னும் நீ, அவுங்க வீட்டூக்கு மருமகளா போக ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும். அவுங்க அம்மா ரொம்ப நல்ல டைப். உன்னைய தன்னோட பொண்ணு மாதிரி பார்த்துப்பாங்க. சரி வா பந்தி பரிமாற” என்று இருவரையும் அழைத்தாள் உண்ணா.

வள்ளியும், ஜானகியும் சாப்பாடு பரிமாறும் இடத்துக்கு போனார்கள். அங்கு அடைக்கப்பன் உட்கார்ந்துக்கொண்டு சாப்பாட்டை ஒரு பிடி பிடித்துக்கொண்டிருந்தான்.

உடனே, வள்ளி ஜானகியிடம் “என்னடி அதுக்குள்ள அவன் சாப்பிட வந்துட்டான். பாரு என்னமா வெழுத்துக்கட்டிக்கிட்டு இருக்கிறதை என்று சொன்னாள்.

“ஏய், மரியாதையா பேசு, அவனிவன்னு சொல்லாதே. அப்புறம் அவர் சாப்பிடுறதை கண்ணு வைக்காதே” என்று கோபப்பட்டாள் ஜானகி.

“அம்மா தாயே, மன்னிச்சுக்கோடி, தெரியாம சொல்லிட்டேன். சரி, நாம போய் அவர் இலைக்கு பரிமாறாம, அடுத்த இலைக்கு பரிமாறுவோமா” என்று நக்கலாக கேட்டாள்.

“ச்சீ போடி, பாவம். சரி, நீ போய் அந்த வரிசையை கவனிச்சுக்கோ, நான் அவரை கவனிச்சுட்டு வரேன்” என்று கூறி அடைக்கப்பன் உட்கார்ந்திருந்த இடத்தை நோக்கி நகர்ந்தாள்.

அடைக்கப்பனை போதும் போதும் என்று சொல்லசொல்ல,அவனுடைய இலையில் எல்லாவற்றையும் இரண்டு மூன்று தடவை வைத்து, அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை இருந்து பிறகு அங்கிருந்து சென்றாள்.

சிதம்பரத்திடமும், அவனுடைய தந்தையிடமும், சென்று வருவதாக கூறி, அடைக்கப்பன் கிளம்பினான். அவர்கள் இருவரும் அவனை அன்று இரவு அங்கேயே தங்கிவிட்டு காலையில் செல்லுமாறு கூறினார்கள். ஆனால் அவனோ, கிடையவே கிடையாது என்று அன்றிரவே அங்கிருந்து கிளம்பி படமாத்தூருக்கு வந்து சேர்ந்தான்.

மறு நாள் காலையில், அவன் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது, உடனே மெட்ராஸுக்கு வருமாறு அவன் தந்தையிடமிருந்து போன் வந்தது.      பகுதி - 11

-    அடுத்த பாகத்தோடு முடிவு பெறுகிறது

Friday, March 8, 2013

மகளிர் தினம்


பெண்

ன்பின் வடிவானவள்
ற்றல் மிகுந்தவள்
ல்லறத்தை இனிமையாக நடத்துபவள்
ன்று எடுப்பவள்
ழைப்பதற்கு தயங்காதவள்
க்கத்தை கொடுப்பவள்
ல்லோரையும் அரவனைப்பவள்
ற்றத்தை நோக்கி முன்னேறச் செய்பவள்
யமின்றி வாழ்க்கையை நடத்துபவள்
ற்றுமையாய் வாழ்பவள்
யாமல் வேலை செய்பவள்
கு போல் மனஉறுதி உள்ளவள்
இவ்வளவு திறமைகளைகளையும்
உள்ளடக்கிய பெண்மையை
வாழ்த்துவோம் இன்று!!!!



மண்ணில் பெண்ணாய் பிறக்க
மாதவம் செய்திடல் வேண்டும்
அதனால் இன்று நான்
இறைவனிடம் வேண்டினேன்
அடுத்த பிறவியில்
பெண்ணாய் பிறக்க வேண்டுமென்று!!!!


Wednesday, March 6, 2013

காதல் கீதம் - 9

பகுதி - 8
சிதம்பரத்திற்கு பெண் பார்த்து முடித்து, மீண்டும் உண்ணாவின் வீட்டிற்கு எல்லோரும் வந்தார்கள். அப்போது அங்கிருந்த அடைக்கப்பனை பார்த்த நாராயணனுக்கு, ஜானகியை பார்க்கத்தான் இவன் வந்திருக்கான் என்று தோன்றியது. அந்த நினைப்பை உண்மையாக்குகிற மாதிரி ஜானகியும், அடைக்கப்பனும் கண்களால் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“அடடே, நீங்க எப்ப தம்பி மெட்ராஸுக்கு வந்தீங்க?” என்று அடைக்கப்பனிடம் கேட்டார் நாராயணன்.

ஜானகியை பார்த்துக் கொண்டிருந்த அடைக்கப்பனோ, இந்த கேள்வியால் தடுமாறி, சுதாரித்துக்கொண்டு அவருக்கு பதில் அளிப்பதற்காக திரும்பினான்.

“எனக்கு இங்க மெட்ராஸ் ஆபிஸ்ல வேலை இருந்ததுனால, நேத்து தான் வந்தேன்” என்றான்.

“நீங்க வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சிருந்தா, உங்களையும் கூட்டிக்கிட்டு போயிருப்போமே” என்று கூறினார் நாராயணன்.

“அதனால என்னங்க பரவாயில்லை. ஆமா எப்ப கல்யாண சாப்பாடு போடப் போறீங்க சிதம்பரம்” என்று கேட்டான் அடைக்கப்பன்.

“அடுத்த மாசமே போட வேண்டியது தான்” என்றான் சிதம்பரம்.
“அவ்வளவு சீக்கிரமாவா” என்றான் அடைக்கப்பன்.

“அது வேற ஒண்ணும் இல்லை தம்பி, பொண்ணோட ஆயா சீக்கிரமா பேத்தியை கல்யாண கோலத்துல பார்க்கணும்னு ஆசைப்படுறாங்க. அதனால தான்” என்று அவனுடைய கேள்விக்கு பதிலுரைத்தார் நாராயாணன்.

“அப்புறம் எங்க வீடும் பக்கத்துல தான் இருக்கு, எல்லோரும் வீட்டுக்கு வாங்க.அம்மாவும் உங்களை வீட்டுக்கு கூப்பிட்டேன்னு சொல்லச் சொன்னாங்க” என்று கூறினான் அடைக்கப்பன்.

அப்போது உண்ணாவும், நானும் மறந்துட்டேன் மாமா, அத்தையும் உங்களை கூட்டிக்கிட்டு வரச்சொன்னாங்க” என்றாள்.

“நாங்க ஐந்து மணியை போல வரோம்” என்று அடைக்கப்பனிடம் கூறினார் நாராயணன்.

அடைக்கப்பனும் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.

மாலை சரியாக ஐந்து மணிக்கு, ஜானகி, சிதம்பரம்,அவர்களுடைய பெற்றோர் மற்றும் உண்ணா எல்லோரும் அடைக்கப்னின் வீட்டிற்கு வந்தார்கள்.

“வாங்க, வாங்க, எல்லோரும் வரணும்” என்றாள் அடைக்கப்பனின் அம்மா.

“சௌக்கியமா இருக்கீங்களா?” என்று கேட்டாள் ஜானகியின் அம்மா.

“ரொம்ப சௌக்கியம், எங்க இவ்வளவு தூரம் வந்துட்டு வீட்டுக்கு வராம போயிடுவீங்களோன்னு நினைச்சேன்”.

“அது எப்படி நாங்க வராம போயிடுவோம், தம்பி வேற கண்டிப்பா வீட்டுக்கு வரணும்னு சொல்லியிருக்கு. ஆமா, எங்க அடைக்கப்பனோட அப்பாவை காணோம்” என்று கேட்டார் நாராயணன்.

“அவுங்க, வேலை விஷயமா வெளியூர் போயிருக்காங்க, நாளைக்கு ராத்திரி வந்துடுவாங்க. ஆமா, பையனுக்கு பேசி முடிச்சுட்டீங்க போல இருக்கு” என்று கேட்டாள் அடைக்கப்பனின் அம்மா.

“ஆமா ஆச்சி, நல்ல இடமா இருந்துச்சு, எங்களுக்கும் பொண்ணை பிடிச்சுப்போச்சு. பேசி முடிச்சுட்டோம். இன்னும் தேதி முடிவு பண்ணலை. பத்திரிக்கையை அனுப்புறோம், கண்டிப்பா அண்ணனை கூட்டிக்கிட்டு வந்துடனும்” என்றாள் ஜானகியின் அம்மா.

“கண்டிப்பா நாங்க வரோம். சரி, பேசிக்கிட்டு இருங்க, நான் காப்பி போட்டுக்கிட்டு வரேன்” என்று எழுந்தாள் அடைக்கப்பனின் அம்மா.

உடனே, உண்ணாவும், ஜானகியும் எழுந்து பின்னாடியே போனார்கள்.

கொஞ்ச நேரத்தில் உண்ணாவும், ஜானகியும், காபியை எல்லோருக்கும் கொடுத்தார்கள்.

“பரவாயில்லை, பொண்ணை நல்லா வளர்த்திருக்கீங்க. காபி எல்லாம் நல்லா போடுறா” என்றாள் அடைக்கப்பனின் அம்மா.

“அவளுக்கு சமையல்ல நல்ல ஈடுபாடு” என்று பதிலுரைத்தாள் ஜானகியின் அம்மா.

“இந்த காலத்து பொண்ணுங்க எல்லாம் கலியாணம் ஆவதற்கு முன்னாடி சமையல் கட்டு பக்கம் வராங்கண்ணா பெரிய அதிசயம் தான்”

மற்றவர்கள் பேசிக்கொண்டிருக்க, மறுபடியும் அடைக்கப்பனும், ஜானகியும் கண்களால் காதல் பாஷை பேசிக்கொண்டிருந்தார்கள்.

“சரி, நாங்க கிளம்புறோம். அவசியம் கலியானத்திற்கு வந்துடுங்க” என்று கூறி எல்லோரும் கிளம்பி போனார்கள்.

அடைக்கபனின் அம்மாவோ அடைக்கப்பனிடம், “ரொம்ப நல்ல குடும்பமா இருக்கு. அதிலும் அந்த ஜானகி, ரொம்ப நல்லா பொண்ணா இருக்கா” என்றாள்.

அடைக்கப்பனுக்கு உள்ளுக்குள் ரொம்ப சந்தோஷம். அதை வெளியே காட்டாமல், “ஏம்மா, காபி போட்டுட்டா, ரொம்ப நல்லா பொண்ணா” என்று வேண்டுமென்றே சீண்டினான்.

“அப்படி இல்லடா, பி.இ. படிக்கிறோம்னு கொஞ்சம் கூட பந்தா இல்லாம, ரொம்ப எளிமையா இருக்கா. அதோட அடுப்படியில, என்னையும் , உண்ணாவையும், நீங்க காபி போடாதீங்க, நானே போடுறேன்னு சொல்லி, ரொம்ப நல்லா காபி போட்டா. அந்த ஆச்சியும் ரொம்ப நல்ல மாதிரியா தான் தெரியிறாங்க. அந்த செட்டியாரும் தேவைக்கு அதிகமா பேசலை. மொத்தத்துல நல்ல குடும்பமா தான் தெரியிது” என்றாள்.

அடைக்கப்பன் மனதுக்குள், நம்ம வேலை ரொம்ப சுலபமா முடிஞ்சுடும்னு எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.

“உனக்கும், இந்த மாதிரி ஒரு குடும்பத்துல பொண்ணை எடுத்தா நல்லா தான் இருக்கும். உம். உனக்குன்னு ஆண்டவன் யாரை எழுதி வச்சிருக்கானோ? என்றாள்.

அடைக்கப்பனோ, தன் காதலை சொல்ல, இது தான் சரியான சமயம் என்று எண்ணிக்கொண்டு,

“ஏம்மா, பேசாம இந்த குடும்பத்துலேயே பொண்ணை எடுத்தா” என்று இழுத்தான்.

“என்னடா சொல்ற என்றாள் அவனுடைய தாய்.

“ஆமாம்மா , பேசாம இந்த ஜானகியையே நீ மருமகளாக்கிக்கிட்டா என்ன?” என்று மீண்டும் கேட்டான்.

அவனையே வைத்த கண் வாங்காமால் பார்த்துக் கொண்டிருந்தாள் அவனுடைய தாய்.

“என்னம்மா அப்படி பார்க்கிற” என்றான் .

“எப்படிடா, உனக்கு இந்த மாதிரியான ஒரு எண்ணம் வந்துச்சு?”

“இல்லம்மா, நீ தான் சொன்னியே, அவுங்க ரொம்ப நல்லவங்களாக இருக்காங்க, அந்த பொண்ணும் ரொம்ப நல்லா பொண்ணா இருக்குதுன்னு, அதனாலதான் இப்படி கேட்டேன்” என்றான்.

“டேய், உன்னைய பத்தி எனக்கு தெரியும், உண்மைய சொல்லு என்றாள்.

அடைக்கப்பனும், ஜானகியை முதன் முதலில் பார்த்ததிலிருந்து, அவளை விரும்புவது வரைக்கும் மறைக்காமல் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, அம்மா என்ன சொல்லப்போறாங்களோன்னு, உள்ளுக்குள் பயந்துகொண்டு, அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தான்.

                                                                  -    தொடரும்