Wednesday, May 29, 2013

பள்ளி மாணவர்களுக்கான தமிழ் போட்டி

தமிழ் நாட்டில இருக்கிற நிறைய குழந்தைகள் தமிழ் எனக்கு எழுத படிக்க தெரியாதுன்னு சொல்றததை தான் விரும்புகிறார்களோன்னு சந்தேகமா இருக்கு. ஏன்னா, போன தடவை நான் சென்னைக்கு போயிருந்தபோது, அக்கம் பக்கத்தில இருக்கிற பள்ளிக் குழந்தைகள் கிட்ட பேச்சு கொடுத்த போது, அவுங்க சர்வ சாதாரணமா, எனக்கு தமிழ் படிக்க தெரியாது,எழுத தெரியாதுன்னு சொன்னாங்க. சரி, குழந்தைகள் தான் அப்படி சொல்றாங்கன்னு பார்த்தா, அவுங்க பெற்றோர்கள், என் குழந்தைக்கு தமிழ் படிக்க தெரியாதுன்னு சொல்லும்போது, அவுங்க கண்ல அப்படி ஒரு சந்தோஷம் தெரியுது. அதற்கு ஏத்த மாதிரி சில பள்ளிகளில், பள்ளிக்கூட வளாகத்துக்குள், தமிழிலே பேச கூடாதுன்னு ஒரு எழுதப்படாத சட்டமே இருக்காம். ஏன் தான் தமிழ் மேல் இப்படி ஒரு கொலை வெறின்னு புரியலை. ஆனா இவ்வளவுக்கும் நடுவுல, விஜய் தொலைக்காட்சியில ஞாயிறு தோறும் ஒரு வார்த்தை ஒரு லட்சம்” அப்படின்னு பள்ளி மாணவர்களுக்காக தமிழ் போட்டி ஒன்றை நடத்துகிறார்கள். தொலைக்காட்சி, தொல்லைக்காட்சியாக தான் இருக்கிறது. அதில் திரைப்படங்களும், திரைப்பாடல்களும், அழுகாச்சியான நீண்ட தொடர்களும் தான் வருகிறது. உருப்படியாக எதுவும் இல்லை என்று சொல்பவர்கள் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டும். அவர்கள் மட்டும் இல்லை, பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளைகளோடு சேர்ந்து இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டும். தமிழின் மேல் நல்ல ஆர்வத்தை தூண்டும் நிகழ்ச்சியாகவும், நிறைய புதிய வார்த்தைகளை கற்றுக் கொள்ள தூண்டும் விதமாகவும் இந்த நிகழ்ச்சி உள்ளது. 





Saturday, May 25, 2013

ஆஸ்திரேலியா விசிட்டர் விசாவும் டிராவல் ஏஜெண்டும்


இதுவரைக்கும் என் அத்தை, அதாவது வீட்டு அம்மணியோட அம்மா மூன்று முறை இங்கு சிட்னிக்கு வந்திருக்காங்க. முதல் தடவை எங்க முதல் மகாராணி பிறக்கும் சமயத்தில ரொம்பவும் சந்தோஷமா வந்தாங்க. இங்க வந்த பிறகு தான் அவுங்களுக்கு தெரிஞ்சுது, “சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு தான்னு”,அதனால ஆறு மாச விசாவுல வந்துட்டு ரெண்டே மாசத்துல ஊருக்கு திரும்பி போயிட்டாங்க. போனவுங்க, சும்மா போகாம இந்த ஊருல எல்லாம் நம்மளால இருக்க முடியாது சாமி, இனிமே நான்  இந்த ஊருக்கே வர மாட்டேன்னு சொல்லிட்டு தான் போனாங்க. ஆனா பாருங்க, ஒரு இரண்டரை வருஷத்துக்குள்ள எங்களோட இரண்டாவது மகாராணி பிறக்கிற சமயத்துக்கு அவுங்க திரும்பியும் இங்க வர மாதிரி ஆயிடுச்சு. அந்த தடவை ஐந்து மாசம் இருந்தாங்க. அப்புறம், வீட்டு அம்மணி இரண்டு மகாரணிகளையும் பார்த்துக்க ரொம்ப சிரமப்பட்டதுனால, வேற வழியில்லாம மூணாவது தடவையா இங்க வந்து ஐந்து மாசம் இருந்துட்டு போனாங்க. அந்த தடவையும், இனிமே உங்க ஊர் பக்கம் தலை வச்சு படுக்கவே மாட்டேன்னு சொல்லிட்டு போனாங்க(அவுங்க கஷ்டம் அவுங்களுக்கு). மூணு தடவையும் அவுங்க கரூர்ல இருக்கிற ஒரு டிராவல் ஏஜெண்ட்  மூலமாதான் விசாவுக்கு  அப்ளை பண்ணி, ஃப்ளைட் டிக்கெட் போட்டு வந்திருந்தாங்க. மூணு தடவையும் எந்த பிரச்சனையும் இல்லாம அவுங்களுக்கு விசா கிடைச்சு வந்துட்டு போனாங்க. இந்த ஜனவரி மாசம் வீட்டு அம்மணிக்கு கண்ல ஆபிரேஷன் நடந்தபோது அவுங்களுக்கு உடம்பு சரியில்லாததுனால, அவுங்களால வர முடியலை. நானே ரெண்டு வாரம் லீவு போட்டு வீட்டை கவனிச்சுக்கிட்டேன். இப்ப மறுபடியும் இன்னொரு கண்ணுக்கும் ஆபிரேஷன் பண்ணணும்னு சொல்லிட்டாங்க. எனக்கு என்னடாது, back to square யான்னு தோணுச்சு. நல்ல காலம், வீட்டு அம்மணியோட அம்மா, எனக்கு அந்த ஊர் பிடிக்கலைன்னாலும் பரவாயில்லை நான் வரேன்னு சொல்லி, என் வயித்துல பாலை வார்த்தாங்க. உடனே நான் என் பக்கத்திலிருந்து எல்லா documentsயும் அனுப்பினேன். அவுங்க அப்பாவும்,  ரெண்டு பேருக்குமா சேர்த்து விசாவை அப்ளை பண்ணலாம்னு,மறுபடியும்  அதே டிராவல் ஏஜெண்ட் கிட்ட கொடுத்து அப்ளை பண்ண சொல்லியிருக்காங்க.

சென்னைல இருக்கிற ஒரு டிராவல் ஏஜெண்ட் ஆபீஸ் பிராஞ்ச் தான் அந்த கரூர் ஏஜெண்ட் ஆபிஸ். இது வரைக்கும் அந்த சென்னை ஆபிஸ் தான் அவுங்களுக்கு விசா அப்ளிகேஷன் எல்லாம் fill பண்ணி, vfsக்கு அனுப்பியிருக்காங்க. இப்ப அந்த கரூர் பிராஞ்ச்சை மூடிட்டாங்க. ஆனா பிராஞ்ச் ஆபிஸ்ல இருந்த அந்த ஏஜெண்ட் அந்த போர்டு எல்லாம் கழட்டாம, இன்னமும் அந்த ஆபிஸ் இருக்கிற மாதிரியே ஊருக்குள்ள காமிச்சிருக்காரு. இப்ப சென்னைல இருக்கிற வேற ஒரு டிராவல் ஏஜெண்ட் ஆபிஸ்ல வேலை பார்க்கிற ரெண்டு பேர் கூட கூட்டு சேர்ந்துக்கிட்டு டிராவல் சம்பந்தமான வேலைகளை எல்லாம் செஞ்சிக்கிட்டு இருக்காரு அந்த ஏஜெண்ட். இவுங்க அப்பாவுக்கு இதெல்லாம் தெரியாது. நாலு நாளைக்கப்புறம் அவுங்க அப்பாவுக்கு மட்டும் மெடிக்கல் பண்ண சொல்லி இமெயில் வந்துச்சு. என்னடாது, இவுங்க அம்மா தானே இப்ப வர போறாங்க,அதனால அவுங்க மெடிக்கல் பண்ணா தானே, விசா வரும்னு, நானே கரூர்ல இருக்கிற அந்த ஏஜெண்ட்க்கு போன் பண்னி, இரண்டு பேருக்கும் ஒண்ணா தானே அப்ளை பண்ணீங்க,அப்ப ஏன் அவுங்க அம்மாவுக்கு மெடிக்கல் பண்ண சொல்லி வரலைன்னு கேட்டேன். உடனே அவரும் சார், கவலைபடாதீங்க, மேடத்துக்கும் மெடிக்கல் பண்ண சொல்லி இன்னைக்கு இமெயில் வந்துடும்னு சொன்னாரு. நான், அப்படி வரலைன்னா, என்னங்க பண்ண போறீங்கன்னு கேட்டா, இன்னைக்கு கண்டிப்பா அந்த இமெயில் வந்துடும்னு, அடிச்சு சத்யம் பண்ணாத குறையா சொன்னாரு. ரெண்டு நாள் ஆச்சு ஒண்ணும் வரலை. இங்க ஆபிரேஷன் பண்றதுக்கு நாள் வேற நெருங்கிக்கிட்டே இருக்கு. ஆனா அவுங்க அம்மாவுக்கு இன்னமும் மெடிக்கல் பண்றதுக்கான இமெயில் வரவே இல்லை. அதற்கப்புறம் தான் தெரிஞ்சுது, சென்னைல இருக்கிற அந்த அதிமேதாவிங்க, இவுங்க அம்மாவோட பாஸ்போர்ட் காப்பியை வைக்காம அனுப்பியிருக்கானுங்க, அதனால அவுங்களோட அப்ளிகேஷன் ரிஜக்ட் ஆயிடுச்சுன்னு. இவுங்க அப்பா மூணு,நாலு தடவை சென்னைல இருக்கிற ஏஜெண்ட்டுக்கும்,கரூர்ல இருக்கிற ஏஜெண்ட்டுக்கும் போன் பண்ணி கேட்டதுனால தான், புண்ணியவானுங்க திருப்பியும் புதுசா அப்ளை பண்ணிட்டு சொல்லியிருக்கானுங்க. இப்படி ஆயிருக்குன்னு தெரிஞ்சவுடனே எனக்கு வந்ததே கோபம், உடனே அந்த சென்னைல இருக்கிற அந்த ஏஜெண்ட்டுக்கு போனை போட்டு முதல்ல அந்தாளோட இமெயில்-ஐடி வாங்கிக்கிட்டு,ரொம்பவும் ஸ்ட்ராங்கா அந்தாளை திட்டி ஒரு மெயில போட்டேன்.  இவ்வளவுக்கும் நடுவுல ஆபிரேஷனும் முடிஞ்சிடுச்சு. நானும் லீவை போட்டு மறுபடியும் வீட்டு வேலையை பார்க்க ஆரம்பிச்சேன். ஒரு வாரம் கழிச்சு என்னடாது, இன்னமும் விசாவை பத்தி ஒண்ணுமே தெரியமாட்டேங்குதேன்னு,அந்த சென்னை ஏஜெண்ட்டுக்கு போன் பண்ணினா, அந்தாளு போனை எடுக்கவேயில்லை. ஆஹா, நம்ம இமெயிலை பார்த்துட்டு அந்தாளு, நம்ம போனை எடுக்கலை போலன்னு நினைச்சுக்கிட்டு, சரி கரூர்ல இருக்கிற ஏஜெண்ட்டுக்கு போன் பண்ணி சென்னைல இருக்கிற அந்த ஏஜெண்ட் போனை எடுக்க மாட்டேங்கிறாருன்னு சொன்னேன். அந்தாளும், ஆமா சார் நானும் பண்ணினேன் அவர் எடுக்க மாட்டேங்கிறார்ன்னு சொன்னாரு. சரி நீங்க சென்னை டிராவல் ஆபிஸ் நம்பர் கொடுங்கண்ணு கேட்டா, நம்பரை தராம வெறும் அந்த ஆபிஸ் பேரை மட்டும் சொன்னாரு (அதுவரைக்கும் எங்களுக்கு அந்த சென்னைல இருக்கிற டிராவல்ஸ் ஆபிஸ் பேர் தெரியவே தெரியாது). சரி, இதுல ஏதோ உள்குத்து இருக்குதுபோலன்னு நினைச்சு, அந்த ஆபிஸ் பேரை நம்ம கூகிள் சாமியார் கிட்ட கொடுத்து கேட்டவுடனே, அந்த ஆபிஸ் போன் நம்பர் தெரிஞ்சுது. உடனே அந்த ஆபிசுக்கு போன் பண்ணி, இன்னாரு இருக்காரா, அவரிடம் பேசணும்னு சொன்னவுடனே, அவுங்க எதுக்கு நீங்க அவரு கிட்ட பேசணும்னு, ஆயிறத்தெட்டு கேள்வி கேட்டு, கனெக்ஷன் கொடுத்தாங்க. நான் அந்தாளை எப்படியெல்லாம் திட்டணும்னு மனசுக்குள்ளேயே ஒத்திகை பார்த்துக்கிட்டு, பேச ஆரம்பிச்சா, நான் அவரில்லைங்கன்னு மறுமுனைல சொன்னாங்க. சரி, அவரு எங்கன்னு கேட்டா, அவர் இறந்து போய் ரெண்டு நாள் ஆகுதுன்னாங்க. எனக்கு முதல்ல ஒண்ணும் புரியலை. ஒரு வாரத்துக்கு முன்னாடி தானே பேசினோம்னு ஒரே குழப்பம். ஹார்ட் அட்டாக்கா  இல்லை ஆக்சிடென்டான்னு கேட்டா, இரண்டும் இல்லை தற்கொலைன்னு சொன்னாங்க. எனக்கு ஒரு நிமிஷம் இதயமே நின்னு போச்சு. . நாம போட்ட இமெயில் தான் அவரை தற்கொலைக்கு தூண்டிடுச்சோன்னு பெரிய சந்தேகம் வந்துடுச்சு. நான் அவருக்கு அனுப்பின மெயிலை மறுபடியும் படிச்சு பார்த்து, ச்சை, ச்சை இந்த மெயிலை படிச்சுட்டு எல்லாம் ஒருத்தன் தற்கொலை எல்லாம் பண்ணிக்க மாட்டான்னு மனசை சமாதானப்படுத்தி, நிம்மதியானேன். ரெண்டு நாள் கழிச்சு அவுங்க அம்மாவுக்கு இ-விசா வந்துச்சு. உடனே மறு நாளே கோயம்புத்தூர்லேருந்து கிளம்பி வரலாம்ன்னு நான் இங்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இணையதளத்தை பார்த்து சொன்னேன். உடனே அவுங்க அப்பாவும், இனிமே இந்த ஏஜெண்ட்டை நம்பி பிரியோஜனமில்லைன்னு, வேற ஒரு டிராவல் ஏஜெண்ட் கிட்ட, கோயம்புத்தூர்லேருந்து சிட்னிக்கு டிக்கெட் போடுங்கன்னு சொல்லியிருக்காங்க. அந்த டிராவல் ஏஜெண்ட்டும் ரொம்ப சீரியஸா, கோயம்புத்தூர்லேருந்து சிங்கப்பூருக்கு ஒரு டிக்கெட்டும், சிங்கப்பூர்லேருந்து சிட்னிக்கு இன்னொரு டிக்கெட்டும் போடணும்னு சொல்லியிருக்கார். இவுங்க அப்பாவுக்கு இவனுங்க உண்மையிலேயே டிராவல் ஏஜெண்ட் தானான்னு பெரிய சந்தேகம் வந்துடுச்சு. அவனுங்க ஆபிஸ்ல உட்கார்ந்துக்கிட்டே, எனக்கு போன் பண்ணி, மாப்பிள்ளை, இவனுங்க இந்த மாதிரி சொல்றாணுங்கன்னு சொன்னாங்க. நானும், மாமா அவனுங்க உங்களை வச்சு தான் முத முதல்ல ஒரு இன்டர்நேஷனல் ஃப்ளைட் டிக்கெட் புக் பண்ண போறாணுங்க போல, அதனால நீங்க முதல்ல அங்கேருந்து கிளம்புங்க, நான் இங்க ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்ணியிடுறேன்னு சொல்லி, ஒரு வழியா டிக்கெட் புக் பண்ணி, ஆபிரேஷன் முடிஞ்சு ஆறு நாள் கழிச்சு அவுங்க அம்மா வந்து சேர்ந்தாங்க.

மூடுன ஒரு ஆபிஸ் பேரை வச்சுக்கிட்டு, ஒருத்தர் தொழில் பண்ணிக்கிட்டு இருக்கிறார்னா, நம்ம நாட்டில எப்படி வேணும்னாலும் தொழில் பண்ண முடியுங்கிறதை இல்ல இது காட்டுது. இந்தாள் எல்லாம் வரியே கட்டமாட்டாருன்னு தான் நினைக்கிறேன். ஆக மொத்தத்துல எதுல தான் போலின்னு ஒரு வரைமுறையே இல்லாம போச்சு, இதிலேருந்து நான் கத்துக்கிட பாடம் என்னன்னா, தன் கையே தனக்கு உதவிங்கிற மாதிரி, டிராவல் ஏஜெண்டை நம்பாம நாமளே நமக்கு தேவையானதை செஞ்சுக்கணும்கிறது தான். அடுத்த தடவை நீங்க இரண்டு பேரும் இங்க வருவதற்கு நானே அப்ளை பண்றேன்னு சொன்னேன், அவ்வளவுதான் அவுங்க அப்பா போன்லேயே, மாப்பிள்ளை தயவு செய்து இனிமே எங்களை அங்கே கூப்பிடாதீங்கன்னு ஒரே புலம்பல்.

Saturday, May 18, 2013

பதினோராவது திருமணப்பொருத்தம்

நான் அப்ப கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயம். திருமணத்துக்கு ஜாதகம் பார்க்கும்போது, பத்துப்பொருத்தம், பத்துப்பொருத்தம்னு சொல்றாங்களே, அது என்னன்னு எப்படியாவது தெரிஞ்சுக்கணும்னு ஒரே மண்டை குடைச்சல். அப்ப எல்லாம், இந்த “கூகுள் சாமியாரை” பற்றி யாருக்கும் தெரியாது.அதனால எந்த ஒரு விஷயத்தையும் தெரிஞ்சுக்கணும்னா, ரொம்பவும் சிரமப்பட்டு தான் தெரிஞ்சுக்க முடியும். யாராவது ஒரு ஜோசியர் கிட்ட பத்துப்பொருத்தத்தை கேட்டு தெரிஞ்சுக்கலாம்னா, மனசுக்குள்ள கொஞ்சம் தயக்கம். இதை போய் எப்படி ஒரு ஜோசியர் கிட்ட கேட்கிறதுன்னு(அந்தாள் நம்மளை பத்தி தப்பா நினைச்சுட்டா!!!!). அதனால ஒரு நாள் நூலகத்துல போய், திருமணப்பொருத்தம் பார்ப்பது எப்படின்னு ஒரு புத்தகத்தை தேடி கண்டுபிடிச்சு படிச்சுப்பார்த்தேன். ஆனா நம்ம மரமண்டைக்கு ஒண்ணும் புரியலை. அப்புறம் மனசுக்குள்ள இருந்த தயக்கத்தை தூக்கிப்போட்டுட்டு, என் நண்பன் தங்கியிருந்த மான்சன்ல, தங்கியிருந்த ஒரு ஜோசியர்கிட்ட போய், தயங்கி தயங்கி அதை கேட்டேன். உடனே என்னைய அவர் ஒரு லுக் விட்டாரு பாருங்க. அட! கிரகமே! இந்த கருமத்துக்கு தான், இதையெல்லாம் கேக்கக்கூடாதுன்னு நினைச்சேன். ஆசை யாரை விட்டதுன்னு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டு, நானும் அப்பாவியா முகத்தை வச்சுக்கிட்டு அவர் முகத்தை பார்த்துக்கிட்டு இருந்தேன். அவரும் என்னைய பார்த்து என்ன நினைச்சாரோ, என்ன தம்பி, அதுக்குள்ள திருமணப் பொருத்தத்துக்கு வந்துட்டீங்கன்னு கேட்டாரு. அவரு சாதாரணமா தான் கேட்டாரு. ஆனா எனக்கு தான் அவரு நக்கலா கேக்கிற மாதிரி தோணுச்சு. எனக்கு ஜாதகம் பார்க்கிறதுக்கு கத்துக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. எனக்கு தெரிஞ்சவுங்க எல்லோரும் நீ முதல்ல திருமணப் பொருத்தம் பார்க்க கத்துக்க, அப்புறம் ஜாதகம் பார்க்க கத்துக்கலாம்னு சொன்னாங்க, அதனால தான் நான் திருமணப் பொருத்தத்தை கத்துக்கலாம்னு வந்தேன்னு ஒரு பிட்டை போட்டேன். அந்த ஜோசியரும் நான் சொன்னதை நம்பி, அப்படியா தம்பி, ஜாதகம் பார்க்கிறது ஒண்ணும் பெரிய விஷயமே இல்ல, நிறைய கூட்டல், கழித்தல், அப்புறம் முக்கியமா நட்சத்திரங்கள்,ராசிகள்ன்னு தெரிஞ்சிருந்தா போதும், சுலபமா கத்துக்கலாம்னு சொல்லி, நாளான்னிக்கு வாங்க, நிறைஞ்ச அமாவாசை. முதல்ல திருமணப்பொருத்தம் பார்க்கிறது எப்படின்னு சொல்லித்தறேன்னு சொன்னாரு.

அமாவாசை அன்னைக்கு, நானும் என்னோட ஒரு நண்பன் சேகரும் அவரோட அறைக்கு போனோம். அவருக்கிட்ட என்னோட நண்பனும் கத்துக்கணும்னு ஆசைப்படுறான்னு சொன்னேன். அதுக்கென்னா, பேஷா கத்துக்கொடுத்தா போச்சுன்னு சொல்லி முதல்ல அந்த பத்துப்பொருத்தம் என்னன்னு சொன்னாரு.

நட்சத்திரப்-பொருத்தம்: (ஆயுள் ஆரோக்கிய விருத்தி) 
கணப்பொருத்தம்:  (மங்களம்)
மகேந்திரப் பொருத்தம்:  (சம்பத்து விருத்தி)
ஸ்திரீ தீர்க்கம்:   (சகல சம்பத் விருத்தி)
யோனிப் பொருத்தம்:  (தம்பதிகளின் அன்யோன்ய நட்பு - மகிழ்ச்சியான சிற்றின்ப உறவு)
ராசிப் பொருத்தம்: (வம்ச விருத்தி)
ராசி அதிபதிப்-பொருத்தம்:   (சந்ததி விருத்தி)
வஸ்யப்-பொருத்தம்:   (அன்யோன்ய வசியம் - இணைபிரியா அன்பு)
 ரச்சுப் பொருத்தம்:  (தீர்க்க சுமங்கையாய் இருப்பது)
வேதைப்-பொருத்தம் (இடையூறு அற்ற இன்ப வாழ்க்கை)

அவர், இந்த பொருத்தம் அனைத்துக்கும் விரிவா விளக்கம் கொடுத்தவுடனே, என் கூட இருந்த நண்பன் என்னிடம், டே!, பார்த்தியா அந்த பொருத்தத்தை சொல்லவே இல்லை அப்படின்னான். நானும் ஆமாண்டா, நீ அப்பவே சொன்னே, நான் தான் உன் பேச்சை கேக்கலை அப்படின்னேன். அந்த ஜோசியருக்கு நாங்க பேசுறது ஒண்ணும் புரியலை. என்ன தம்பி இன்னொரு பொருத்தம்ன்னு கேட்டாரு. என் நண்பனும், அது உங்களுக்கு தெரிஞ்சிருக்காதுன்னு சொன்னான். உடனே, அந்த ஜோசியரும், தம்பிகளா, மொத்தம் 12 பொருத்தம் இருக்கு, ஆனா, பொதுவா எல்லோரும் இந்த பத்துபொருத்தம் தான் பார்ப்பாங்க. அந்த இரண்டு பொருத்தம் வந்து – நாடிப்பொருத்தம் அப்புறம் விருஷம்னு சொல்லி அதுக்கு விளக்கமும் வேற கொடுத்து, நான் ஒண்ணும் ஒரு சாதாரண ஜோசியன் இல்லைன்னு சொல்லாம சொன்னாரு. அப்புறமும், நான் ஐயா, பேர் பொருத்தம்னு ஒண்ணு இருக்கு, அது உங்களுக்கு தெரியலைன்னு சொன்னேன். அவர் ரொம்ப குழம்பி போய், அப்படி ஒரு பொருத்தம் இல்லையே, நீங்க numerology பத்தி சொல்றீங்களா, அதுல கூட இந்த மாதிரி கிடையாதேன்னு சந்தேகமா சொன்னாரு.

உடனே, என் நண்பனுக்கு ரொம்பவும் கோபம் வந்துடுச்சு, இதுக்கு தான் நான் அப்பவே சொன்னேன், கேட்டியா நீன்னு கோவிச்சுக்கிட்டான். நானும், எனக்கு மட்டும் என்னடா இவரைப் பத்தி தெரியும்னு கோபமா சொன்னேன். எங்க ரெண்டு பேரோட கோபத்தை பார்த்து அவருக்கும் ரொம்ப கோபம் வந்துடுச்சு, இப்ப அந்த பேர் பொருத்தம்னா என்னன்னு சொல்லுங்க, இல்லன்னா இடத்தை காலி பண்ணுங்கன்னு சத்தமா  சொன்னாரு. நான் உடனே, அது வந்து ஐயா, ஆங்கிலத்துல FLAMESன்னு இருக்குல்ல அதை வைச்சு தான் இந்த பேர் பொருத்தம் பார்க்கிறதுன்னு சொல்லி அதை விளக்க ஆரம்பிச்சேன். புதுசா ஒண்ணு கத்துக்க போற நம்பிக்கையில அவரும் நான் சொல்றதை எல்லாம் ரொம்பவும் கவனமா எழுத ஆரம்பிச்சாரு.

முதல்ல ஒரு பேப்பர்ல FLAMESன்னு எழுதுங்க. அப்புறம் ஆங்கிலத்துல பையனோட பேரை எழுதி, கீழே பொண்ணோட பெயரையும் எழுதுங்க. அப்புறம் ரெண்டு பேர்ல உள்ள பொதுவான எழுத்துக்களை எல்லாம் அடிச்சிடுங்க.அப்புறம் மிச்சம் இருக்கிற எழுத்துக்களையெல்லாம் கூட்டி, என்ன தொகை வருகிறதோ, அந்த தொகைக்கான எழுத்தை வைத்து, அவர்களுக்கு திருமணம் செய்யலாமா, அவர்கள் எவ்வாறு குடும்பம் நடத்துவார்கள்னு தெரிஞ்சுக்கலாம்ன்னு சொன்னேன். உதாரணமாக அந்த கூட்டுத்தொகை 12 வந்தால், அந்த எழுத்து "S" - அவர்களுக்குள் திருமண பந்தம் கூடவே கூடாது.

F  - FRIEND
L  - LOVE
A  - AFFECTION
M  - MARRIAGE
E  - ENEMY
S  - SISTER

இதுல
Friend - திருமணத்துக்கு பிறகு இருவரும் நல்ல தோழமையோடு பழகுவார்கள்
love - ரெண்டு பேரும் திருமணம் செய்துக்கொண்டு காதலிப்பார்கள்
Affection - இருவரும் தன் துணையின் மீது அதிக பாசம்,அன்பு வைத்திருப்பார்கள்
Marriage - இருவரும் எல்லோரையும் போல குடும்பம் நடத்துவார்கள்
Enemy - இருவருக்குள்ளேயும் அடிக்கடி சண்டை வரும்
Sister - இருவருக்கும் திருமணம் செய்யவே கூடாது
  
இப்படி அவருக்கு, நாங்கள் புரிய சொல்லி முடித்தோம், அவ்வளவு தான் அவருக்கு வந்ததே கோபம், என்னைய என்ன கேனப் பயல்னு நினைச்சீங்களாடா, ஏதோ சின்னப் பசங்களாக இருக்கீங்க, இப்பவே ஜாதகத்தை பத்தி தெரிஞ்சுக்கணும்னு தோனியிருக்கேன்னு சந்தோசப்பட்டா, என்னைய வச்சு காமெடியா பண்றீங்கன்னு ஒரே சத்தம். முதல்ல இடத்தை காலி பண்ணுங்க, இன்னொரு தடவை என்னோட ரூமுக்கு வாங்க அப்புறம் தெரியும் சேதின்னு, சரியான காட்டு கத்தல். நாங்களும் எங்களோட வேலை முடிஞ்சுதுன்னு சத்தம் போடமா வெளியே வந்துட்டோம்.

உண்மையிலேயே, எங்க நண்பர்களுக்குள்ள ஒரு சின்ன பந்தயம், அதாவது அந்த ஜோசியரை கலாயிக்க முடியுமா,முடியாதான்னு. நானும் சேகரும்,அவரை கலாயிச்சு காட்டுறோம்னு கோதாவுல இறங்கிய சம்பவம் தான் மேல சொன்ன விஷயம். நாங்க அந்த FLAMESயை எப்படி உபயோக படுத்துவோம்னா, எங்க பேரோட, எங்களுக்கு பிடிச்ச பொண்ணு பேரை போட்டு, பொதுவான எழுத்துக்களை எல்லாம் அடிச்சு, மிச்சம் உள்ள எழுத்துக்களை கூட்டி, அந்த தொகைக்கான எழுத்துக்கு என்ன பயன்னா -

Friend - அந்த பெண்ணோடு வெறும் நட்பு மட்டும் தான்
love - கண்டிப்பாக அந்த பெண்ணும் நம்மை காதலிப்பாள்
Affection - ஒரு தலை காதலில் தான் முடியும்
Marriage - அந்த பெண் நம் வாழ்க்கை துணைவி ஆவாள்               
Enemy – நட்பு கூட ஏற்படுத்திக் கொள்ள முடியாது
Sister - அந்த பெண் நம்மோடு பழகி, கடைசியில் அண்ணா என்று சொல்லிவிடுவாள்.

இதையே, நானும் என் நண்பனும் கொஞ்சம் மாற்றி அந்த ஜோசியரை கலாயித்தோம்.

பி.கு: இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, அந்த ஜோசியர் எங்கள் இருவரையும் பார்க்கும்போது எல்லாம், ஏண்டா, உங்க போதைக்கு என்னைய ஊறுகாயா ஆக்கிட்டேங்களேன்னு ஒரே புலம்பல். அப்புறம் அவரிடம் போய் ஒரு பெரிய மன்னிப்பை போட்டு, சமாதானப் படுத்தியது தனி கதை.





Wednesday, May 15, 2013

பவர் (இழந்த) ஸ்டாரின் கதை - 3


நான் மக்களுக்கு என்னால் முடிஞ்ச உதவிகளை செய்கிறேன்னு பேட்டி தான் கொடுப்பாரு. உண்மையில, இவரோட மருத்துவமனைல வேலை பார்க்கும் 24 ஊழியர்களுக்கு மூன்று மாத சம்பள பாக்கியாம். அந்த 24 பேரும் காவல் துறையின் உதவியை நாடியிருக்கிறார்கள். இது போறாதுன்னு, நிறைய செக் மோசடி வழக்குகளில் சிக்கி, ஜாமீனில் வெளிவருவது தான் இவருடைய சிறந்த பொழுதுபோக்காகும். தற்போது ரூ. 20 கோடி கடன் வாங்கித்தருவதற்கு ரூ.50 லட்சம் கமிஷன் பெற்று ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டு முதலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு அந்த சிறை என்ன புண்ணியம் பண்ணிச்சோ தெரியலை, அவர் அங்கேயிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பாட்டார். இந்த வழக்கில் இருந்து வெளியே வருவதற்குள், மீண்டும்,மீண்டும் அவர் மீது புதிய வழக்குகள் பாய்வதினால், தன்னுடைய “பவரால்” ஒன்றும் செய்ய இயலாத நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.


இவரைப்பற்றிய இன்னொரு சுவாரசியமான செய்தியை படிக்க நேர்ந்தது. சுந்தரபாண்டியன் படத்துல ஒரு காட்சி. இவர் நடித்த லத்திகா படத்தின் போஸ்டர் ஒட்டியிருக்கும். “ஏய், யாரு போட்டோவை, எங்க வந்து ஒட்டியிருக்க”? என்று கூறியபடி பவர் ஸ்டாரின் போஸ்டரை ஒருவர் கிழிப்பாரு. இந்த காட்சியை படத்துல பார்த்தவங்களுக்கு சாதாரண காட்சியா தான் தெரியும். திரைக்கு பின்னால நடந்ததுன்னு, நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். அந்த மாதிரியான ஒரு கதை இந்த காட்சிக்கு பின்னாடி இருக்கு. இந்த படத்தை சென்சார் அதிகாரிகள் பார்த்துட்டு, டாக்டர் சீனிவாசன் போஸ்டரை கிழிக்கிற மாதிரி ஒரு காட்சி இருக்கு, அதனால அவருக்கிட்டேயிருந்து ஒரு நோ-அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் வாங்கிட்டு வாங்கன்னு கூறியிருக்கிறார்கள். அந்த படத்தை இயக்கிய இயக்குனருக்கும், ஆஹா, சென்சார்ல ஒரு பிரச்சனையும் வராதுன்னு இல்ல நினைச்சோம், இப்ப இப்படி ஒரு குண்டை தூக்கி போடுறாங்களேன்னு குழம்பி, தனக்கும், பவர் ஸ்டாருக்கும் பொதுவான ஒரு நண்பரிடம், அந்த நோ-அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் வாங்குகிற வேலையை கொடுத்திருக்காரு. அந்த நண்பரும் இந்த விஷயத்தை பத்தி பவர் ஸ்டாரிடம் பேசியிருக்காரு. பவர் ஸ்டாருக்கு வந்ததே கோபம், “என் போஸ்டரையே கிழிப்பானுங்க, அதுக்கு நான் நோ-அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் தரணுமான்னு, வானத்துக்கும்,பூமிக்கும் எகிறி குதிச்சிருக்காரு. எகிறி குதிக்கிறதோட நிக்காம, அவனுங்க எப்படி படத்தை ரிலீஸ் பண்றாங்கன்னு பாக்கிறேன்னு வேற பேசி, அந்த பொதுவான நண்பரை திருப்பி அனுப்பியிருக்காரு. அந்த நண்பரும், இந்த மாதிரி ஒரு பெருந்தன்மையான(!!) மனுஷனோடவா நாம, சகவாசம் வச்சிருந்தோம்னு, ரொம்ப நொந்து போயி. சரி, இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்கலாம்னு யோசிச்சு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர், தொல்.திருமாவளவனுக்கு போன் அடிக்க, அவரும், கவலையை விடுங்க, நான் பார்த்துக்கிறேன்னு, தைரியம் கொடுத்திருக்காரு. இந்த உரையாடல் நடந்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம், அந்த நண்பரை, நம்ம பவர் ஸ்டார் போன்ல கூப்பிட்டு, “இந்த சின்ன விஷயத்துக்கு போயி அண்ணன் வரைக்கும் போயிட்டிங்களே, நேரா ஆபிஸ் போங்க என் பி.எ., என்னோட கையெழுத்து போட்ட லெட்டர் பேட் ஒண்ணு கொடுப்பாரு, என்ன வேணும்னாலும் எழுதிக்குங்க. எனக்கு “நோ-அப்ஜெக்ஷன்” ன்னு சொன்னாராம்.

அன்னைக்கே அவரோட உண்மையான முகத்தை கிழிச்சிருக்காங்க, ஆனா அது தெரியாம, நம்ம தமிழ் திரையுலகமும், ஊடகத்துறையும் அவரை தூக்கி விட்டு, ஹீரோவாக்கி விட்டுட்டாங்க. இப்ப அவர் வெளியே வருவாரா மாட்டாரான்னு, அவரை வைத்து படம் எடுக்கும் திரையுலகத்தினர் வழி மேல் விழி வைத்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

-முற்றும்


Friday, May 3, 2013

பவர் (இழந்த) ஸ்டாரின் கதை - 2



பவர் ஸ்டாரின் லத்திகா படம் வெளி வந்த பிறகு கட் அவுட், வித்தியாசமான போஸ்டர், படத்தை 100 நாட்களுக்கு மேல் ஓட வைத்தது போன்ற அலப்பறைகளால்,


ஊடகத்துறையின் கண்களுக்கு உறுத்தலாக அமைந்தார். அதனால் அவரை பேட்டி எடுக்கிறேன் என்ற பேரில், அவரை கலாய்க்க ஆரம்பித்தார்கள். அப்படி ஒரு பேட்டியை இங்கே பாருங்கள்.


இது போதாதென்று தொலைக்காட்சியில், சிறந்த நிகழ்ச்சிகளில் ஒன்றான நீயா நானாவில், பவர் ஸ்டாரை அழைத்து,அவரை எந்த அளவுக்கு மட்டம் தட்ட முடியுமோ அந்த அளவுக்கு மட்டம் தட்டினார்கள். ஆனால் இதற்கெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் தனக்கே உரிய பாணியில் சிரித்துக்கொண்டே பதில் அளித்தார். இதனால் ஒரே நாளில் ஒரே நிகழ்ச்சியில் விளம்பரமில்லாமல், பணம் செலவழிக்காமல் புகழின் உச்சுக்கு சென்று விட்டார்.
பிரபலமாவதற்கு பொதுவாக இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று. மற்றவரை தாழ்த்தியும்,தரக்குறைவாகவும்,கேலியாகவும் பேசுதல். மற்றது, தன்னைத்தானே இழிவுபடுத்திக்கொள்ளுதல் . இதில், நம்ம பவர் ஸ்டார் இரண்டாவது  வழியை தேர்ந்துடுத்துக்கொண்டார்.
லத்திகா படத்திற்கு பிறகு, திரையுலகமே திரும்பி பார்க்கிற மாதிரி, ஒரே நேரத்தில் நான்கைந்து படங்களுக்கு பூஜை போட்டார். அதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் - ஆனந்த தொல்லை(இவரு நடிக்கிறதே தொல்லை,இதுல ஆனந்த தொல்லை வேறையா!!!). கோச்சடையான் வெளிவரும் நாளில் இந்த படத்தை(அதாங்க இந்த தொல்லைய தான்!) வெளியிடுவேன்னு வேற சொல்லியிருக்காரு.





.இவருக்கு இளம் நடிகர்கள் மேல இருக்கிற பாசம், அந்த இளம் நடிகர்களுக்கு எல்லாம் இருக்க மாட்டேங்குது. இவரா வலிய போய் அந்த இளம் நடிகர்களிடம் பேச போன கூட, அவுங்க எல்லாம் இவரை பார்த்த உடனே அந்த இடத்தை விட்டு மாயமா மறைந்து போகிறார்களாம். ஆனா ஒண்ணு அந்த இளம் நடிகர்கள் தான் இப்படி பண்றாங்களே ஒழிய, ரசிக பெருமக்கள், இவரை பார்க்கிறதுக்கு அலை,அலையா திரண்டு வராங்க. அதுக்கு உதாரணமா இந்த காணொளியை பாருங்க.


இவருடைய ஒவ்வொரு பேட்டியிலும், நான் மக்களுக்கு என்னால் முடிஞ்ச உதவிகளை, செய்றேன். ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த பணத்தில் வைத்தியம் பார்க்கிறேன் என்று சொல்லுவார். ஆனால், உண்மையில் இவருக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அது என்னன்னு அடுத்த பதிவுல பார்க்கலாம்.  
-தொடரும்


 

Wednesday, May 1, 2013

பவர் (இழந்த) ஸ்டாரின் கதை - 1


ரொம்ப நாளைக்கு முன்னாடி, பத்திரிக்கையில இந்த பெயரை படிச்சபோது, பவர் ஸ்டார் யாருன்னு யோசிச்சதுண்டு. அப்புறம் தான் தெரிஞ்சுது,இந்த அழகான முகத்தை(!!!) உடையவர் தான் பவர் ஸ்டார்ன்னு .


இவரோட உண்மையான பேர் டாக்டர் சீனிவாசன். அப்படி சொன்னா, நிறைய பேருக்கு தெரியாது. அந்த அளவுக்கு தனக்கு தானே வச்சுக்கிட்ட பட்ட பேர் ரொம்ப பிரபலமாயிடுச்சு. ஐம்பது வயதுக்கு மேலாகி, தலையில் முடியெல்லாம் கொட்டி, ஒரு வில்லனை போல தோற்றமளித்த இவரை, சில இயக்குனர்கள் சிறு,சிறு வேடங்களுக்கு நடிக்க அழைக்க, ஆரம்பத்தில் சினிமாவில் நடிப்பதில் பெருமையாக எண்ணி அந்த சிறு வேடங்களில் நடித்தவர். ஒரு கட்டத்தில் தானே கதாநாயகனாக நடித்தால் என்ன என்று எண்ணி, ஒரு உதவி இயக்குனரோட உதவியோடு கதை, திரைக்கதை,வசனம்,இயக்கம் மற்றும் கதாநாயகன்னு இவர் முதல் முதல்ல தயாரித்து நடித்த படம் தான் லத்திகா. இந்த படம் சென்னையில் மட்டும் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. (ஓட வைத்த கதையையே தனி பதிவாக பதியலாம். அந்த படம் பல நாட்கள் யாரும் பார்க்காமலே ஓடிக் கொண்டிருக்கும். அப்படியும் யாராவது துணிந்து அந்த படம் ஓடும் திரையரங்குக்கு போனால், படத்தை இலவசமாக பார்த்து, பிரியாணியையும் சாப்பிட்டு வருவார்கள். திரையரங்கில் அந்த படத்தை ஓட்டுவதற்கு, வடகையையும் கொடுத்து விடுவார், நம்ம தாராள பிரபு).

ஒரு வலைப்பூவுல இவரைப் பத்தி ஒரு செய்தியை படிக்க நேர்ந்தது. ஒரு அசோசியட் இயக்குனர் ஒருவர் இவரிடம், தந்தை,மகன் சம்பந்தப்பட்ட கதையை சொல்லியிருக்கிறார். அந்த கதையை கேட்ட பவர் ஸ்டார், தம்பி, கதை ரொம்ப நல்லா இருக்கு, கட்டாயம் இந்த படம் பண்ணலாம். எனக்கு அப்பாவா, யார் நடிக்க போறாங்கன்னு ஒரு கேள்வியை கேட்டு, அந்த உதவி இயக்குனரை தர்மசங்கடத்துல தள்ளியிருக்கிறார். பின்ன, அந்த உதவி இயக்குனரோ, இவரை அப்பாவா நடிக்க வைக்கலாம்னு நினைச்சு தான், அந்த கதையை சொல்லியிருக்கிராரு.

இப்படி ஆரம்பமான அண்ணாருடைய திரைப்பயணம், கண்ணா லட்டு தின்ன ஆசையா, என்ற ஒரு படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றது. இந்த புகழால் அவர் அடைந்த நன்மைகள் பற்றியும், அவரை எந்த அளவுக்கு ஊடகங்கள் கிண்டல் செய்வதாக நினைத்துக்கொண்டு அவருக்கான பப்ளிசிட்டியை உருவாக்கியது பற்றியும் அடுத்த பதிவுல பார்க்கலாம்.
                                -தொடரும்