Wednesday, October 30, 2013

தலைவா திரைப்பட அனுபவம் – ஜாக்கிங் காட்சி

தலைவா திரைப்பட அனுபவம் – படப்பிடிப்பிற்கு வந்து காத்திருந்து திரும்பி சென்றது

ஏப்ரல் 17ஆம் தேதி நாங்க காத்திருந்து, எங்களோட காட்சியையும் சூட்
பண்ணாம  நாங்களும் எல்லார் கூடவும் போட்டோவும் எடுத்துக்காம வீட்டுக்கு திரும்பி வந்தோம். அன்றைக்கு இரவு 10 மணிக்கு ஒரு sms, மறு நாள் மதியம் 2.30 மணிக்கு பொட்டானிக்கல் கார்டனுக்கு ஜாக்கிங் துணிமணியோட வந்துடுங்க அப்படின்னு. மறு நாளாவது நம்மளை வச்சு படம் எடுப்பானுங்களான்னு எனக்கு சந்தேகம். ஏற்கனவே ஒரு நாள் லீவு வெட்டியா போயிடுச்சு. மறு நாளும் லீவு வேஸ்டா போக கூடாதேன்னு பயம். சரி, முழுக்க நனஞ்சாச்சு, இனி முக்காடு போட்டு என்ன பிரயோஜனம்னு மனசை தேத்திக்கிட்டேன். மறு நாள் மற்ற மூன்று நண்பர்களோடையும் பேசி, அந்த இடத்துக்கு போறதுக்கு train தான் வசதின்னு முடிவு பண்ணி, மறுபடியும் ஒரு பெரிய படையோடு கிளம்பி போனோம். மற்ற இரண்டு நண்பர்களோட குடும்பம் மட்டும் வரலை. நான் என் குடும்பத்தையும், மற்ற நண்பர் அவரோட  குடும்பத்தையும், மற்றும் எங்களின் பொதுவான நண்பரின் குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு போனோம். trainல போற வழியில பார்த்தா, அப்படி ஒரு மழை பெய்ய ஆரம்பிச்சுது. ஆஹா, ஜாக்கிங் காட்சியை எடுக்கிறேன்னு சொன்னாங்க, இப்படி மழை பெய்யுதே, இன்னைக்கும் கோவிந்தா தான்னு நினைச்சோம். நல்ல வேளை நாங்க அங்க 2.15 மணிக்கு “circular quay” என்ற இடத்துக்கு போய் இறங்கும்போது, மழை விட்டிருந்துச்சு. அங்கேருந்து ஒரு ஐந்து நிமிடம் நடந்தால், அந்த பொட்டானிக்கல் கார்டன் வந்துடும். ஆனா அவ்வளவு பெரிய பார்க்ல, இவுங்க எங்க சூட்டிங் வச்சிருக்காங்கன்னு எங்களுக்கு தெரியலை. அந்த பார்க்குக்கு உள்ள நடந்து போய் பார்க்கலாம், எப்படியும் அவ்வளவு பெரிய கூட்டம் கண்ல பட்டுடும்னு ஒரு நம்பிக்கைல நடக்க ஆரம்பிச்சோம். நடந்தோம்,நடந்தோம், நடந்துக்கிட்டே இருந்தோம் சூட்டிங் நடக்கிற அறிகுறியே காணோம். நாங்க ராகேஷுக்கும், கிருஷ்ணாவுக்கும் போன் மேல போன் போட்டோம். அவுங்களுக்கும் சரியான இடத்தை சொல்ல தெரியலை. கிட்டதட்ட முக்கால் மணி நேரத்துக்கும் மேல நடந்து அவுங்க இருக்கிற இடத்தை கண்டுப்பிடிச்சு போனோம். அங்க அவுங்களோட பஸ் நின்னுக்கிட்டு இருந்துச்சு. அடப்பாவிகளா! ஒழுங்கான அட்ரஸ் சொல்லியிருந்தா, நாங்களும் கார் எடுத்துக்கிட்டு வந்திருப்போமே, இவ்வளவு தூரம் நடந்திருக்க வேண்டாமேன்னு நினைச்சோம். கிருஷ்ணா வந்து எங்களையெல்லாம் ஜாக்கிங் டிரஸ் மாத்திக்கிட்டு வாங்கன்னு சொன்னாரு. நாங்க எங்க மாத்துறதுன்னு கேட்டோம். அவர் உடனே அந்த பஸ்ல போய் மாத்திக்கிட்டு வாங்கன்னு சொன்னாரு. உடனே எங்க நண்பர்கள்ல ஒருத்தர், ஏங்க, இந்த கேரவன் எல்லாம் கிடையாதான்னு கேட்டாரு. கிருஷ்ணா அப்படியே அந்த நண்பரை ஒரு பார்வை பார்த்துட்டு, ஹீரோவுக்கே இங்க அந்த வசதி எல்லாம் கிடையாதுன்னு சொன்னாரு. அந்த நண்பரும் பரவாயில்லை, நாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம். ஆனா எங்களை ஜாக்கிங் பண்ண சொல்லி ரொம்ப தூரம் ஓட சொல்லாதீங்க, ஏற்கனவே, நாங்க 7 கடல், 7 மலையை தாண்டி வந்த மாதிரி ஒரு மணிநேரம் நடந்து வந்திருக்கோம்னு சொன்னாரு. கிருஷ்ணாவும் அப்படி எல்லாம் ஒரேடியா ஓட சொல்லமாட்டோம். ஷாட், ஷாட் தான் எடுப்போம்னு சொல்லிட்டு போயிட்டாரு. நாங்களும் ஜாக்கிங் டிரஸ் எல்லாம் பஸ்ஸுக்குள்ளேயே மாத்திக்கிட்டு வெளியே வந்தோம். அப்ப தான் இந்த படத்துக்கான ஸ்டில் போட்டோகிராபர் எங்க கிட்ட வந்து, என்னங்க நீங்க நேத்து காணாம போயிட்டீங்க, விஜய் சார் சூட்டிங் முடிஞ்சவுடனே, போட்டோ எடுத்துக்கிறதுக்கு உங்களை கூட்டிக்கிட்டு வர சொன்னாரு. நானும் வந்து பார்த்தா, ஒருத்தரையும் காணோமேன்னு” சொன்னாரு. நாங்களும் அவரிடம், நீங்க எல்லாரும் தான் சூட்டிங் முடிய 6.30 மணி ஆகும்னு சொன்னீங்க, அதனால காபி குடிக்க போயிட்டோம்னு சொன்னோம். இன்னைக்கு முடிஞ்சா போட்டோ எடுத்துக்க பாருங்கன்னு சொல்லிட்டு அவர் போயிட்டாரு. நாங்களும் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து சேர்ந்தோம். அசோசியட் டைரக்டர் பிரசன்னா, எங்களையெல்லாம் கூட்டிக் கழித்து பார்த்து, “எங்க இன்னும் மூணு பேரை காணோம்னு கேட்டாரு. எங்களுக்கு தெரியாதுன்னு சொன்னவுடனே, அவர் இயக்குனர் கிட்ட போய் சொன்னவுடனே, இயக்குனரும் பரவாயில்லை அட்ஜஸ்ட் பண்ணிக்கிலாம்னு சொல்லிட்டு, எங்களுக்கு டயலாக் சொல்லிக்கொடுக்க சொன்னாரு. அப்ப புதுசா ஒரு ரெண்டு பேர் வந்தாங்க. அவுங்க இதுக்கு முன்னாடி எடுத்த ரெண்டு காட்சியிலும் இல்லை. அவுங்களையும் இந்த காட்சியில சேர்த்துக்கிட்டு அவுங்களுக்கும் ஒரு வரி டையலாக் சொல்லிக்கொடுத்தாரு பிரசன்னா. ஒரு தடவை மட்டும் எல்லாருக்கும் சொல்லி கொடுத்துட்டு அவரும் போயிட்டாரு. இந்த காட்சிக்கு தேவையான லைட்டிங்க்ஸ் எல்லாம் ரெடி பண்ணிக்கிட்டு இருந்தாங்க. இதுக்கு நடுவுல, நடிகர் விஜய் வந்து ஒரு சேரை, கடலைப் பார்த்து போட்டு ஒரு குடையை புடிச்சு உட்கார்ந்துகிட்டு, தனிமையில இனிமை காண ஆரம்பிச்சுட்டாரு. யாரும் அவர் பக்கத்துல போக கூட இல்லை. இந்த காட்சிக்கு, உள்ளூர் வெள்ளைக்கார கலைஞர்கள் சில பேர் பக்காவான ஜாக்கிங் காஸ்ட்யூம்ல வந்திருந்தாங்க. (அவுங்களுக்கு தான் ஒரு நாளைக்கு குறைஞ்ச பட்ச சம்பளம் 100 டாலர்ன்னு தெரிஞ்சுது). மணியோ 4மணியாயிடுச்சு. இன்னும் ஒரு ஷாட்டும் எடுக்கலை. இருட்டு வேற தலை காட்ட ஆரம்பிச்சுது. ஆகா, இன்னைக்கும் நம்ம பொழப்பு, நாய் பொழப்பாகிடும் போல இருக்கேன்னு நினைச்சுக்கிட்டோம். எங்க நண்பர்களுக்கு எல்லாம் ஒரே கோபம். இன்னைக்கு மட்டும் நம்ம காட்சியை எடுக்காம விடட்டும், அதுக்கப்புறம் இவுங்க கூப்பிடுற அன்னைக்கு நாம வரவே கூடாதுன்னு ஒரு தீர்மானம் வேற போட்டாங்க. இப்படி நாங்க தீர்மானம் போட்டுக்கிட்டு இருக்கும்போதே, அங்க விஜய்யும், அமலாபாலும் ஜாக்கிங்ல சந்திச்சிக்குற மாதிரியான காட்சியை ஒரு 4/5 டேக்ல எடுத்து முடிச்சாங்க. அதாவது விஜய் வந்து ஒரு பத்தடி ஒடுற மாதிரியும் அமாலாபால் சைட்லேருந்து ஓடி வர மாதிரியும் எடுத்தாங்க. அப்ப அந்த வெள்ளைக்காரங்க ஓடனும். அவ்வளவு தான். அதற்கு அப்புறம் இயக்குனர் விஜய்யும், அமாலாபாலும் மேட்டு மேல ஏறி போய் நிக்க சொல்லிட்டு, எங்களை எல்லாம் மேடு ஆரம்பமாகிற இடத்துல நின்னுக்கிட்டே மூச்சு வாங்குற மாதிரி ஜாக்கிங் பண்ண சொன்னாரு. நாங்களும் நின்னுக்கிட்டே மூச்சுவாங்கி ஜாக்கிங் பண்ணிக்கிட்டு இருந்தோம். அப்ப அமலாபால் மேலேயிருந்து கீழே எங்க கிட்ட வந்து பேசுற மாதிரியும், நாங்க அவுங்க கிட்ட பேசுற மாதிரியும் ஒரு மூணு நாலு டேக்ல அந்த காட்சியை எடுத்தாங்க. நாங்களும், அப்பாடா, இந்த காட்சியும் முடிஞ்சிடுச்சு,இன்னும் அந்த டான்ஸ் கிளாஸ் காட்சி தான் இருக்குன்னு நினைச்சோம். ஆனா, அப்புறம் தான் சொன்னாங்க, இந்த காட்சியோட continuity காட்சி எடுக்கணும். நாங்க அப்புறம் சொல்றோம்னு சொன்னாங்க.

விஜய் கூட போட்டோ எடுக்கறதுக்காக நாங்க எல்லாரும் கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணிப்பார்த்தோம். ஆனா, அதுக்குள்ள மறுபடியும் விஜய்யும் அமலாபாலும் டான்ஸ் ஆடுற மாதிரியான காட்சியை எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. மணியோ 6.30 ஆயிடுச்சு. நல்லா இருட்டவும் ஆரம்பிச்சுடுச்சு. ஒரு சில நண்பர்கள் எல்லாம் கிளம்பி போயிட்டாங்க. நானும், குடும்பத்தை கூட்டிக்கிட்டு வந்த இன்னொரு நண்பரும், கிளம்பலாம்னு நினைச்சு, வீட்டு அம்மணியை கூப்பிட போனா, அவுங்க எங்களை விட ரொம்ப பிசியா இருந்தாங்க.

அப்படியென்ன பிசியா இருந்தாங்கன்னு, நான் அடுத்த பதிவுல சொல்றேன்.
- இன்னும் சொல்கிறேன்


Wednesday, October 23, 2013

கணவன் மனைவியிடம் மிக முக்கியமாக எதிர்ப்பார்ப்பது - தொடர்ச்சி

சென்ற வருட ஆரம்பத்தில் “கணவன் மனைவியிடம் மிக முக்கியமாக எதிர்ப்பார்ப்பது” என்ற ஒரு பதிவை பதித்திருந்தேன் -

கணவன் மனைவியிடம் மிக முக்கியமாக எதிர்ப்பார்ப்பது 

அதனோட தொடர்ச்சியாக இந்த பதிவை பதிகிறேன். வேலை வெட்டி இல்லாதவங்க, மனைவி எப்படியெல்லாம் இருந்தால் கணவனின் நெஞ்சில் நீங்க இடம்பிடிக்க முடியும்னு சொல்லியிருக்காங்க. அதை நானும் வேற வேலை இல்லாம படிச்சு(!) இங்க பதிவு செய்திருக்கிறேன்.

1. பேச்சை குறையுங்கள்:  கணவன்மார்கள் கூறும் பெரிய புகார் இது தான். என் மனைவி வாயைத் திறந்தா பேசிக்கிட்டே இருப்பாள் என்பது தான். அதனால் தேவையில்லாத பேச்சைக் குறைப்பது நல்லது பெண்களே

2. ஷாப்பிங்:  ஷாப்பிங் என்ற வார்த்தையைக் கேட்டாலே பல கணவன்மார்கள்  தெறித்து ஓடுகிறார்கள். காரணம் கடை
,  கடையாக ஏறி இறங்க வேண்டுமே. பெண்களே ஷாப்பிங் போகும் போது சக பெண்களுடன் செல்லுங்கள் இல்லை என்றால் கணவரை அழைத்துச் சென்றால் அவரை அலைக்கழிக்காதீர்கள்.

3. சீரியல் மோகம் டிவி சீரியலே கதி என்று கிடக்காதீர்கள். சீரியல் விளம்பரத்திற்கு நடுவே கணவனுக்கு சாப்பாடு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் சீரியலை பார்த்து அழுவது கணவன்களுக்கு எவ்வளவு எரிச்சலூட்டும் விஷயம் என்று தெரியுமா
?

4. புரணி வேண்டாமே கணவரிடம் பிற பெண்களைப் பற்றியும்
, அவர்கள் வீட்டில் நடப்பவை பற்றியும் புரணி பேசாதீர்கள். ஆண்களுக்கு பிடிக்காத விஷயம் இந்த புரணி.
5. நண்பர்களுடன் கணவன்மார்களை அவர்களின் நண்பர்களுடன் நேரம் செலிவட அனுமதியுங்கள். நான் ஒருத்தி வீட்டில் இருக்கேன் என்ன நீங்க நண்பர்களோட வெளியே போகிறது என்று கேட்காதீர்கள்.


பின் குறிப்பு: பத்திரிக்கையில் படித்ததை தான் நான் இதில் பதித்திருக்கிறேன். என்னோட சொந்த கற்பனை இல்லை என்பதை இங்கே தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.(எல்லாம் ஒரு தற்காப்புக்காகத் தான்)

கண்டிப்பாக அடுத்த பதிவு திரைப்பட அனுபவ பதிவு தான்.

Thursday, October 17, 2013

கண்ணம்மாப்பேட்டை - மேடை நகைச்சுவை நிகழ்ச்சி

இதுவரை சிட்னியில், ஐந்து  நகைச்சுவை குறு நாடகங்களையும்  ஒரு மேடை நகைச்சுவை நிகழ்ச்சியையும் எழுதி அரங்கேற்றியிருக்கிறேன். இது தவிர குழந்தைகளுக்கான குறு நாடகங்கள் தனி.

அதில் "கண்ணம்மாபேட்டை" என்ற இந்த நகைச்சுவை மேடை நிகழ்ச்சியை உங்களின் பார்வைக்கு பதிகிறேன்.

நம் எல்லோருக்கும் சிங்காரச் சென்னையில் கண்ணம்மாப்பேட்டை என்றால் "ஒரு சுடுகாடு" என்று தான் நியாபகத்துக்கு வரும்.  ஆனால் அதுவும் ஒரு ஏரியா. அந்த ஏரியாவில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறேன்.



இடம் - (கண்ணம்மாப்பேட்டை, அம்பேத்கார் தெரு, முனியம்மா கையேந்திபவன் இட்லி கடை)

(முனியம்மா உட்கார்ந்து கொண்டு இட்லி அவிக்கிறார். அப்போது பிளேடு பக்கிரி வருகிறார்)
முனியம்மா – என்னா! அரை பிளேடு, எப்படி கீறே?

பக்கிரி – முனிமா, உனக்கு கொய்ப்பு ரொம்ப ஜாஸ்தியா பூச்சு. இன்னொரு தபா அரை பிளேடுன்னு, கூப்பிட்டாங்காட்டியும், பொம்பளைன்னு பாக்க மாட்டேன்,செவுளு எகிறிடும்.

முனியம்மா – மன்சுக்கோ அண்ணாத்தே, இதுக்கு போய் கோச்சுக்கினுகிரீயே. ஆமா எப்படி கீறே?

பக்கிரி – நான் நல்லா கீரேன் தங்காச்சி. சரி, உன் வாவாரம் எப்டி போயிக்கினுகீது ?

முனியம்மா – அதை ஏன் கேக்குற? இந்த புறம்போக்கு பேமானிங்க எல்லாம் கடன்ல துன்னுட்டு போகுதுங்க. அதுங்ககிட்ட காசை வாங்குறதுக்குள்ள பேஜாரா கீது.

பக்கிரி – நீ, கரார சொல்லு தங்காச்சி, கடன் சொன்னா கட்டைல அடிப்பேன்னு.

முனியம்மா – ஆமா அண்ணாத்தே, இனிமேங்காட்டி, அப்படி தான் சொல்லப் போறேன்.
பக்கிரி – சரி, முனிமா, எனக்கு ஒரு 10 இட்லியை கொடு, நான் துன்றேன், ரொம்ப வவுத்தை பசிக்குது.

முனியம்மா – உனக்கு எல்லாம் இட்லி கொடுக்க முடியாது.
பக்கிரி – நான் கடன்ல துன்னாமாட்டேன் தங்காச்சி. இந்தா 10 இட்லிக்கு காசு.

முனியம்மா – அதுக்கில்லை அண்ணாத்தே! நீ பாட்டுக்குன்னு, இங்க இட்லியை தின்னுட்டு உன் ஊட்ல போய் ஒண்ணும் துன்ன மாட்டேங்கிரியா, உன் சம்சாரம் இங்க வந்து என்னாண்ட சண்டை போடுது. பெரிய ரௌசா கீதுபா.

பக்கிரி – ஐயே, அவ செய்ற இட்லியை மனுஷன் துண்ணூவானா. ஒண்ணு தெரிமா, அவளுக்கு கோவம் வந்தா, அவ செஞ்ச இட்லியால தான் என்னைய அடிப்பா. முனிமா, இன்னொரு தபா, அவ உன்கிட்ட ராங்கு பண்ணா, பேசாம நீ ரெண்டு போடு போட்டு அவளை ஊட்டுக்கு அனுப்பு.

முனியம்மா – என்னய்யா நீ, பொண்டாட்டிய அடக்க தெரில. சரி, சரி, இந்தா இட்லியை நல்லா துண்ணு (இட்லி தருகிறார்). ஆமா, எங்க உன் கூட்டாளி பாக்ஸர் பாலு, ரொம்ப நாலா, கடையாண்ட காணோம்.
பக்கிரி – ஐய, உனக்கு மேட்டர் தெரியாதா, அவன் சினிமால நடிச்சிக்கிணுக்கிறான்.

முனியம்மா – மெய்யாலுமா, அண்ணாத்தே, அண்ணாத்தே, அவருக்கிட்ட சொல்லி, எனக்கு ஒரு சான்ஸ் வங்கி கொடேன்.
பக்கிரி – அட போம்மே. அந்த பொறம்போக்கு, எனக்கே ஒரு சான்ஸ் வங்கி தர மாட்டேண்கிறான்.  

(அப்போது பாக்சர் பாலு வருகிறார்)
பாலு – ஹலோவ், ஹௌவு ஆரு யூ?

பக்கிரி – என்னா, பாக்சரு, பெரிய, பெரிய இங்கிலிசு எல்லாம் பேசிக்கினு கீற?
பாலு – வாட் ஐ யாம் ஒன்லி இசுமாலு இங்கிலீஷ்.

பக்கிரி – அட்ரா! அட்ரா, பெரிய ஹீரோ ஆவுரியோ இல்லையோ, இங்கிலிசு வெளுத்துக் கட்டுற. ஆமா, உன் கைல எத்துன படம் வச்சுக்கினுகீற?
பாலு – டூ ஃபிலிம் அப்புரங்காட்டி ஒரு ஆடு ஃபிலிம்.

பக்கிரி – அடப் பாவமே, உனக்கு ஏண்டா இந்த பொய்ப்பு?
பாலு – வாட் பாவம், ஐ நாட் understood,

பக்கிரி – ஏண்டா, போயும், போயும் ஆடு கூடவா நடிச்சிக்கினுகீற?, நான் கூட நீ அஞ்சலி , அப்புறம் ஏன் தங்காச்சி, இந்த நெடு நெடுன்னு ஓசரமா ஒரு பொண்ணு இருக்குமே அது யாரு?

முனியம்மா – ஆங்! அந்த பொண்ணா, அது அனுஷ்கா அண்ணாத்தே.
பக்கிரி – ஆமா, அனுஷ்கா கூட எல்லாம் நடிக்கிரியாக்கும்னு பார்த்தா, கஸ்மாலம், ஏண்டா ஆடு கூட எல்லாம் நடிக்கிற?

பாலு – நோ நோ, யூ mistakifying மி. யூ நாட் know ஆடு பிலிம்ஸ்.ஆதான்பா இந்த சோப்பு, பவுடர், காம்ப்ளான், இந்த மாதிரி பபிலிம்ஸ்.
பக்கிரி – ஓ! விளம்பரப் படமா, என்னா படம்டா? அப்புறம், உன் பைய தொழிலை மறக்காம இந்த சோப்பு, பவுடர் எல்லாம் தள்ளிக்கிட்டு வந்துடு என்னா!

பாலு – யூ, ஆல்வேஸ் selfinished.
பக்கிரி – என்னாது, self எல்லாம் சுட்டுக்கினு வந்துட்டியா. என்னாப்பா, உன் தோஸ்து நானு, எனக்கு ஒரு செல்ஃபை சுட்டுக்கிட்டு வந்துக் கொடேன்.

பாலு – யூ. Are ரொம்ப புவர் இங்க்லிஷ்.
பக்கிரி – ஏய், ஆரைப் பார்த்து புவர்ன்னு சொல்ற, நானா புவரு. இங்க பாரு எத்தனை மோதிரம் போட்டுக்கிணுக்கிறேன், செயினு போட்டுக்கிணுக்கிறேன்.

பாலு – நோ, நோ யூ நாட் knowing மி இங்கிலீஷ். மை ஆல்சோ நாட் knowing before பட் after after supririor.
பக்கிரி – ஓ! இதான் மேட்டரா, அப்போ, இங்கிலிசு தெரிஞ்சா சூப்பர்வைசர் ஆயிடலாங்கிற. சரிப்பா, நானும் என் தொழிலலை விட்டு இங்கிலிசு கத்துக்கிறேன். இந்த போலீஸ் மாமா நாயிங்களுக்கு மாமூல் வெட்டியே தாவு தீருது.

பாலு – சொன்னா, ஆங்கர் படுற. இங்கிலீஷ் படிச்சா ஹை ஆயிடுவ, மீ மாதிரி.
பக்கிரி – என்னா நைனா, கொயப்புற. அப்ப என்னடான்னா, இங்கிலிசு படிச்சா, சூப்பர்வைசர் ஆலான்னு  சொன்ன, இப்பங்காடியும் என்னாடான்னா உயரமா ஆலங்குற?

பாலு – again, again யூ are mistaking, அதான் புவர்ன்னு சொன்னேன்.

பக்கிரி – டேய் மாப்ள, புவர்ன்னு மட்டும் சொல்லாதே,எனக்கு கெட்ட கோவம் வரும். நான் அடுத்தவன் பர்ஸை லவட்டுனாலும், சொந்த வூட்டுல இருக்கேன். தெரிஞ்சுக்கோ .
பாலு – (தலையில் அடித்துக்கொண்டு) டேய், போடாங்க, உன் மூஞ்சில என் பீச்சாங்கையை வைக்க, இங்க புவர்னா ஏழை இல்லை. உனக்கு இங்கிலீஷ் knowing avvalvau satisfy இல்ல. இதெல்லாம் இங்க்லிஷ்ல ஃப்ரேஸ்.  
பக்கிரி – ஃப்ரேஸ்னா, ஓ! பிரேஸ்லெட்டா. போன வாரம் தான் ஒருத்தண்ட பிரேஸ்லெட்டை ஆட்டைய போட்டேண்டா.

பாலு – oh! My God, save myself. டேய் அந்த பிரசேலேட் இல்லடா, இது different. யுவர் ஹெட் இஸ் having kalisand
பக்கிரி – இங்கிலிசு வாத்தியாரே, எனக்கு சினிமா சான்ஸ் எல்லாம் வேண்டாம். கொஞ்சம் உன் இங்கிலிசை கத்துக் கொடேன்பா,

முனியம்மா – நீ அப்புறம் இங்கிலிசை கத்துக்கோ, பாலு அண்ணாத்தே, ரொம்ப நாள் கைச்சு கடையாண்ட வந்துகிற, இங்க குந்திக்கினு, இட்லியை துண்ணு.
(அப்போது “சவுண்ட்” சரசு வருகிறாள்)

சரசு – இந்தாம்மே, இட்லி கொடு.
(முனியம்மா தட்டில் இட்லி வைத்துக் கொடுக்கிறார்)

பக்கிரி – டேய், உன் இங்கிலிபிசை, எனக்கு கொஞ்சுண்டு கத்துக் கொடேன். நானும் என் சம்சாராத்தாண்டை போயி, படம் காட்டுறேன்.
பாலு – I have time no. Each day morning வேற சூட்டிங். Evening வேற சூட்டிங். Sorry, I very very busy.

பக்கிரி – இப்ப, என்னா சொல்ல வர்ற, இங்கிலிபீசு கத்துக்கொடுக்க முடியாதுங்கிறியா?
பாலு – yes. yes you சரியா understood.

பக்கிரி – டேய் மவனே, இன்னொரு தபா, என்னாண்ட நீ இங்கிலிபீசு பேசுன, அப்புறம் உனக்கும் எனக்கும் ராங்கா பூடும்.
(அப்போது சரசு சாப்பிட்டு எழுந்து போகிறாள்)

முனியம்மா – ஏய், ஏய், இந்தாம்மே துன்னுட்டு, துட்டு கொடுக்காம நீ பாட்டுக்கு போயிக்கினுக்கீற?
சரசு – ஆங்! என்னாத்துக்கு துட்டு கொடுக்கோனும்.

முனியம்மா – என்னாத்துக்கா, இட்லியை துன்னயில்ல, அதுக்கு தான்.
சரசு – யாரண்ட துட்டு கேக்குற, நான் யாரு தெரிமா?

முனியம்மா – ச்சீ கஸ்மாலம், நீ யாரா வேணா இரு. துட்டை வச்சுட்டு, அந்தாண்டை நகரு.
சரசு – ஏய் கைதை, ஆரப்பாத்து  கஸ்மாலாம்னு சொல்ற, நீ தான் கஸ்மாலம். புளியந்தோப்பாண்ட வந்து பாரு, இந்த “சவுண்ட்” சரசுஆருன்னு தெரியும்.

முனியம்மா – ஐயே! நீ ஓசில துன்ற கேசா! அதான் உடம்பு இப்படி கீது.
சரசு – இன்னொரு வாட்டி, என்னையப் பத்தி தப்பா பேசுன,செவுலு பிகிலாயிடும். (மெல்லமாக) இந்த தடிப் பசங்க, அதுக்குள்ள போயித் தொலஞ்சுட்டாணுங்க. இல்லைன்னா இதை இங்கேயே பாடை கட்டியிருக்கலாம்.

பக்கிரி – புளியந்தோப்பு சவுண்ட் சரசுன்னா பெரிய கொம்பா, துட்டு கொடுக்காம துன்னுட்டு, ஆருக்கிட்ட சவுண்ட் விடுற?
பாலு – I will police call.

பக்கிரி – டேய், டமிலு, டமிலு.
பாலு – இப்ப துட்டை வைக்கப்போறியா இல்லாங்காட்டி போலீசை இட்டாரட்டுமா.

பக்கிரி – மாமு, நீ என்ன போலீசை இட்டாந்துக்கினு, இதோ நம்ம ஏட்டு கனகாம்பரமே வந்துகிணு கீது.
(அப்போது ஏட்டு ஏகாம்பரம் வருகிறார்)

பாலு – என்னா, ஏட்டு கனகாம்பரம் எப்படி கிற? மாமுலு ஜாஸ்தியா வந்துகிணு கீது போல.
ஏட்டு – டேய், என் பேரு கனகாம்பரம் இல்ல, ஏகாம்பரம்னு எத்தன தபா சொல்லிக்கிறேன். ச்சை, நீ தொழிலை வுட்டுபுட்டு நடிக்க போயிட்ட. எப்பவாச்சும் ஒரு தபா என்னாண்ட மாட்டாமலா பூடுவே, அன்னைக்கு வச்சுக்கிறேன் கச்சேரியை.

முனியம்மா – முதல்ல இந்த கச்சேரியை கவனி ஏட்டு. இதோ இது துன்னுட்டு, துட்டு கொடுக்காம போது.
(ஏட்டு அந்தப் பக்கம் நகர்கிறார். அப்போது பக்கிரி அவரின் மணிப்பர்சை லவட்டிக்கொள்கிறான்)

ஏட்டு – என்னாம்மே! துன்னுட்டு துட்டுக் கொடுக்காம போறியா?
சரசு – நீ தான் ஏட்டா!, என்ன மப்டில வந்துக்கினியா. ஆமா எந்த டேஷனு. (யோசிக்கிறார்) கண்ணம்மாப்பேட்டைல K2 டேஷன் தான் இருக்கு. (உடனே போன் எடுத்து டயல் பண்ணுகிறார்)

ஏட்டு – (குழப்பமாக) ஏய், ஏய், ஆரு நீ? ஆருக்கு போன் போடுற?
சரசு – ஊம், உன் கமிஷனருக்கு. நான் ஆருன்னா கேட்ட? நான் தான் புளியந்தோப்பு சவுண்ட் சரசு.

ஏட்டு – நீங்க தான் புளியந்தோப்பு சவுண்ட் சரசா, அதை முன்னாலே சொல்லா கூடாதா, ஆமா நீங்க இங்க எப்படி?
சரசு – எனக்கு பயந்துக்குனு, அந்த முட்டை ரவி இங்க வந்து ஒளிஞ்சுக்கினு இருந்தான். வுடுவாளா இந்த சரசு, அதான் பசங்களை கூட்டிக்கிட்டு வந்து அவன் ஜோலியை முடிச்சேன். பசங்க அவன் கூட்டாளியை ஸ்கெட்ச் போடுறதுக்கு பூட்டாணுங்க, எனக்கு பசிச்சிதா அதான் இந்த கஸ்மாலத்தாண்ட வந்து இட்லியை துன்னேன். இது என்னடான்னா துட்டு கேக்குது.

ஏட்டு – நீங்க போங்க. நான் பார்த்துக்கிறேன்
சரசு – நான் ஆருங்குறதை, இதுக்கிட்டேயும், அந்த பேமானிங்க கிட்டேயும் சொல்லு.

(சரசு போகிறாள்)
ஏட்டு – (மெல்லமாக) ச்சை, இவளுக்கு மேட்டர் முடிக்க, நம்மா ஏரியா தான் கிடச்சுதா, ஐயோ, இனி அந்த இன்ஸ்பெக்டரு நம்ம கழுத்தை அறுப்பானே.

முனியம்மா – என்னா ஏட்டு, எனக்கு பஞ்சாயத்தை பண்ணுவன்னு பாத்தா, அதை போகவிட்டுட்டே.
ஏட்டு – (கோபமாக) அவ என்ன சொன்னான்னு கேட்ட இல்ல, அது புளியந்தோப்பு தாதா. உன் நல்ல நேரம் அது உன்னைய ஒண்ணும் பண்ணலை . இனிமேங்காட்டி அதுக்கிட்ட வச்சுக்காதே. சரி, நான் வரேன்.

(ஏட்டு போகிறார், முனியம்மா தலையில் கையை வைத்துக் கொள்கிறாள்)
பக்கிரி – தங்ச்சி, இந்த உன் துட்டு, ஏட்டுக்கிட்டேருந்து லவட்டுனது.

முனியம்மா – எட்டுக்கிட்டையே, உன் கைவரிசையை காட்டிட்டியா அண்ணாத்தே.
பக்கிரி – தொழிலின்னு வந்தா ஏட்டு என்னா, பெண்டாட்டி என்னா, எல்லார்க்கிட்டேயும் கைவரிசையை காட்டிடுவான் இந்த பக்கிரி.

பாலு – ஏய், பக்கிரி, பர்சு கனமா இருக்கு. வா வா டாஸ்மார்க்குக்கு போலாம்.
(இருவரும் போகிறார்கள்)

Tuesday, October 15, 2013

தலைவா திரைப்பட அனுபவம் – படப்பிடிப்பிற்கு வந்து காத்திருந்து திரும்பி சென்றது

நாங்கள் நடித்த இரண்டு காட்சிகளை மார்ச் மாதம் 30 ஆம் தேதியும், ஏப்ரல் 1 ஆம் தேதியும் ஷூட் பண்ணினார்கள். பிறகு 10 நாள் கழித்து கூப்பிடுகிறோம் என்று சொன்னவர்கள், ஏப்ரல் 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு போன் செய்து 16,17,18 தேதிகளில் தொடர்ச்சியாக படப்பிடிப்பு இருக்கும் அதனால் அந்த மூன்று நாட்களும் கண்டிப்பாக படப்பிடிப்புக்கு வந்து விடுங்கள் என்று கூறினார்கள்.  தொடர்ச்சியாக மூன்று நாட்கள் லீவு எடுக்க முடியுமா என்று எங்களுக்கு ஒரே குழப்பம். தெரியாத்தனமாக மாட்டிக்கிட்டோமா என்று நானும் என் நண்பர்களும்  பேசி கொண்டோம். அதில் ஒரு நண்பர், ராகேஷுக்கு “குறுகிய காலத்துக்குள் எங்களால் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை எடுக்க முடியாது” என்று ஒரு SMS அனுப்பி, எங்களையும் அனுப்ப சொன்னார். மற்ற மூன்று பேரும் அதே மாதிரி அனுப்பினோம். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ராகேஷிடமிருந்து 17ஆம் தேதியும், 18ஆம் தேதியும் மட்டும் வந்தால் போதும் என்று ஒரு SMS வந்தது. மூன்று நாட்களுக்கு இரண்டு நாட்கள் பரவாயில்லை என்று முடிவு எடுத்து, நான் அலுவலகத்தில் இரண்டு நாள் விடுமுறை சொல்லிவிட்டேன். 16 ஆம் தேதி இரவு 10 மணிக்கு போன் செய்து, மறு நாள் marrickville என்ற இடத்தில் 2 மணிக்கு சூட்டிங் என்று சொன்னார்கள். அடப் பாவிகளா! இதை மின்னாடியே சொல்லியிருந்தா, ஒன்றரை நாள் மட்டும் லீவு போட்டியிருக்கலாமேன்னு நினைக்க தான் முடிஞ்சுது. விஜய் கூட போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வீட்டு அம்மணியும் மற்ற இரண்டு நண்பர்களின் துணைவியரும் பேசி வைத்துக்கொண்டார்கள். அதனால மறு நாள் சூட்டிங்க்கு  மறுபடியும் குடும்பத்தை கூட்டிக்கொண்டு போனேன். அந்த இடம் ஷூட்டிங்க்கு தேவையான சாமான்களை(settings) வாடகைக்கு விடுகிற இடமாம். அந்த இடத்தின் கீழ்தளம் வெறும் சாமான்களாக நிரப்பப்பட்டு இருக்கும். மேல் தளத்தில் ஒரு பெரிய வரவேற்பறையும் உள்ளுக்குள் ஒரு சின்ன அறையும் இருக்கும். (அந்த இடத்தில் தான் நாங்கள் நடனம் கத்துக்கிற காட்சியும், விஜய்யும் அமலாபாலும் நடனம் ஆடுகிற காட்சியும் இடம்பெறும்). நான் அந்த இடத்துக்கு போய் சேர்ந்த சிறிது நேரத்திற்கெல்லாம் மற்ற நான்கு நண்பர்களும் வந்து சேர்ந்து விட்டார்கள். அப்போது மேல் தளத்தில் அந்த நடனக் காட்சியை ஷூட்டிங் பண்ணிக்கொண்டிருந்தார்கள். அதனால், எங்களையெல்லாம் (நடிகர்களான நாங்கள் நால்வர் தவிர எங்களின் நான்கு குடும்பங்களும், வேறொரு நண்பரும் அவரின் குடும்பமும் பெரிய கூட்டமாக போயிருந்தோம்) மேலே போக வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். அதனால் நாங்கள் எல்லோரும் கீழே நின்று கொண்டிருந்தோம். கிட்டதட்ட இரண்டு மணி நேரத்திற்கு பிறகு அதாவது நான்கு மணியளவில் கிருஷ்ணா கீழே வந்து, “ரொம்பவும் சாரிங்க, இன்னும் அந்த ஸீன் முடியலைங்க, அதனால உங்களோட ஸீன் இன்றைக்கு எடுக்க முடியாது, நாளைக்கு எடுக்கிறோம் என்று ரொம்பவும் வருத்தப்பட்டுக்கிட்டு சொன்னார். எங்களுக்கு வந்ததே கோபம். நாங்க எல்லோரும், “நீங்க சொன்னீங்கன்னு தான் லீவு போட்டுட்டு வந்தோம். இப்ப என்னடான்னா, எங்களோட ஸீன் எடுக்க முடியாதுன்னு சொல்றீங்க. என்னங்க இப்படி பண்றீங்கன்னு” ரொம்பவும் கோபமாக கேட்டோம். அவரும் ரொம்ப சாரிங்க, சாரிங்கன்னு சொன்னதையே திருப்பி, திருப்பி சொல்லிக்கிட்டு இருந்தாரு. கடைசில எப்படியோ சமாதானமாகிட்டோம்(வேற வழி!!!!). குடும்பத்தையே கூட்டிக்கிட்டு வந்த நண்பர்கள் ரெண்டு பேரும், கிருஷ்ணாவிடம், “சரிங்க ஷூட்டிங் தான் இல்லாம போயிடுச்சு. நாங்க எல்லோரும் விஜய் கூட ஒரு போட்டோவது எடுத்துக்கிட்டு போறோம், அதுக்கு ஏற்பாடு பண்ணுங்கன்னு சொன்னாங்க. உடனே அவரும், நான் விஜய் சார் கிட்ட சொல்றேன். கண்டிப்பா நீங்க போட்டோ எடுத்துக்கிறதுக்கு நான் முயற்சி பண்றேன். ஆனா, அந்த காட்சி எடுத்து முடிச்சவுடனே தான் எடுக்க முடியும்னு சொல்லிட்டு போயிட்டாரு. நாங்களும் சரி வந்தது வந்தாச்சு, போட்டோவையாவது குடும்பத்தோட விஜய் கூட, அமலாபால் கூட எல்லாம் எடுத்துக்கலாம்னு காத்துக்கிட்டு இருந்தோம். மணியோ ஐந்தரை ஆயிடுச்சு. அப்ப இன்னொரு உதவி இயக்குனர் ராகேஷ் கீழே இறங்கி வந்தாரு, அவரிடம் அந்த காட்சி எனுத்து முடிச்சாச்சா, இன்னும் எவ்வளவு நேரமாகும் அப்படின்னு கேட்டோம். அவரும் இன்னும் எப்படியும் ஒரு மணி நேரமாவது ஆகும்னு சொன்னாரு. சரி, நாங்களும் அதுக்குள்ள ஒரு காப்பியை குடிச்சுட்டு வந்துடலாம்னு, கொஞ்சம் பக்கத்துல இருக்கிற mcdonaldsக்கு போய், காப்பியெல்லாம் குடிச்சுட்டு சரியா 6.30 மணிக்கெல்லாம் வந்தோம். பார்த்தா அந்த இடமே காலியாக இருந்துச்சு, ஷூட்டிங்குக்கு வந்த பஸ் எல்லாம் காணோம். சரி, நாம வரதுக்குள்ள போயிட்டாங்க போல. அட கடவுளே, லீவு போட்டு, வெட்டியா ரெண்டு மணியிலிருந்து கால் கடுக்க நின்னுக்கிட்டு இருந்து ஒரு பிரயஜோனமே  இல்லாமே போயிடுச்சேன்னு, நொந்து நூடுல்ஸ் ஆயிட்டோம். இதுல என்ன ஒரு கொடுமைன்னா, நாங்களாவது நடிக்கிறதுக்காக லீவு போட்டு வந்தோம். ஆனா அந்த ரெண்டு நண்பர்களோட துணைவியாரும், எங்களோட ஷூட்டிங்கை பார்க்கிறதுக்கும், விஜய் கூட போட்டோ எடுத்துக்கிறதுக்காகவும், லீவு போட்டு வந்திருந்தாங்க. கடைசில ஒரு காப்பியினால போட்டோ எடுக்கிறது கெட்டுப் போச்சு.

அப்புறம், எப்ப எங்களோட ஷூட்டிங் நடந்துச்சு, நாங்க எப்படி அவுங்க கூட எல்லாம் போட்டோ  எடுத்தோம், இதுல அமாலாபால் வேற என்னைய “அண்ணான்னு” சொன்னது எல்லாம் அடுத்த பதிவுல சொல்றேன்.
 

                                        -    இன்னும் சொல்கிறேன்


Friday, October 11, 2013

அவசரமான உலகமடா!!!!

இன்றைய உலகில் மனிதர்கள் எவ்வளவு வேகமாக போய் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு நான் இன்று பத்திரிக்கையில் படித்த ஒரு செய்தியே சான்று.

 

துபாயில் ஒரு தம்பதி தங்களது ஐந்து வயதுக் குழந்தையுடன் டாக்சியில் துபாய் விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார்கள். எங்கே விமானத்தை தவற விட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் (அவசரத்தில்) டாக்ஸியிலிருந்து இறங்கி வேக வேகமாக தாங்கள் கொண்டு வந்திருந்த மூட்டை முடிச்சுகளையெல்லாம் தூக்கிக்கொண்டு விமான நிலையத்துக்குள் சென்று, மூன்று போர்டிங் பாஸை வாங்கியிருக்கிறார்கள். அப்பொழுது தான் அந்த மூன்றாவது போர்டிங் பாஸுக்கு சொந்தமான தாங்கள் பெற்றெடுத்த குழந்தையை டாக்ஸியிலேயே விட்டுவிட்டு வந்தது தெரிந்தது. உடனே, அலறி அடித்து விமான நிலைய போலீசாரிடம் முறியிட்டு இருக்கிறார்கள். பிறகு போலீசாரும் அந்த டாக்ஸியை கண்டுப்பிடித்து விமான நிலையத்திற்கு வர வைத்து குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். இரண்டு மணி நேரம் நடந்த இந்த களேபரத்தில், அந்த குழந்தை எந்த வித கவலையுமின்றி தூங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அந்த டாக்ஸி ஓட்டுனருக்கும் பின்னாடி ஒரு குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது தெரியவில்லை. கடைசியில் அந்த தம்பதி, தாங்கள் போக வேண்டிய விமானத்துலேயே போனார்களா என்று தான் தெரியவில்லை.
 

இன்றைய நவீன உலகில், மனிதர்கள் எல்லாம் அவசர அவசரமாக தான் செயல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியும். அதற்காக பெற்ற குழந்தையையே மறக்கும் அளவுக்கு அவசரமாக செயல்படுவார்கள் என்று நினைத்து பார்க்க முடியவில்லை.  

Wednesday, October 9, 2013

தலைவா திரைப்பட அனுபவம் – உணவகத்தில் சாப்பிடும் காட்சி – தொடர்ச்சி


இன்னொரு உதவி இயக்குனர் ராகேஷ் வந்து, இந்த காட்சியோட “continuity” காட்சி எடுக்கணும். அது நாளைக்கோ இல்லை நாளை மறு நாளோ இருக்கும். அதனால எல்லோரும் இதே காஸ்ட்யூம்ல வந்துடுங்கன்னு சொன்னாரு. எப்படியோ முத நாள் சூட்டிங் ஒரு வழியா முடிஞ்சுது. நானும் எங்க வீட்டு ஆளுங்களையெல்லாம் கூட்டிக்கிட்டு வீடு வந்து சேர்ந்தேன். அன்றைக்கு இரவு, எனக்கு போன் மேல போன், சூட்டிங் எப்படி போச்சு, விஜய்,அமலாபால் கூட எல்லாம் நடிச்சீங்களா, நீங்க எப்படி நடிச்சீங்கன்னு ஒரே விசாரிப்பு தான். ஆஹா, இந்த துண்டு துக்கடா கதாப்பாத்திரத்தில நடிச்சதுக்கே இவ்வளவு போனான்னு ரொம்பவும் சந்தோஷமா இருந்துச்சு.  யார், யார் கிட்டேருந்தோ போன் வருது, ஆனா வர வேண்டிய படக்குழுவினரிடமிருந்து போனே வரலை. அப்புறம் 10 மணி போல, நாளை மறு நாள் அதாவது திங்கட்கிழமை காலைல சரியா 7.30 மணிக்கு அந்த உணவகத்துலேயே சூட்டிங்ன்னு sms வந்துச்சு. இங்க அந்த சமயத்துல ஈஸ்டர் விடுமுறை (வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை), அதனால ஆபிஸுக்கு லீவு போட வேண்டாம்னு ஒரு நிம்மதி.  

திங்கட்கிழமை, நாங்க எல்லாம் வரலைன்னு வீட்டு அம்மணி சொல்லிட்டாங்க. அதனால நான் மட்டும் 7 மணிக்கு வீட்டை வீட்டு கிளம்பி, 7.45 மணிக்கு அந்த உணவகத்துக்கு போனேன். சனிக்கிழமை கொண்டு போன காஸ்ட்யூம்(!) பேக்கை கார்லேருந்து எடுக்கவேயில்லை. (அந்த பேக் சூட்டிங் முடியுற வரைக்கும் கார்லேயே தான் இருந்துச்சு.). அங்க பார்த்தா, ரெண்டு பேர் மட்டும் சரியா 7.30 மணிக்கு வந்து காத்துக்கிட்டு இருந்தாங்க. அப்புறம் கொஞ்ச நேரத்துல மற்ற நண்பர்கள் எல்லாம் வந்து சேர்ந்துட்டாங்க 8.30 மணிக்கு தான் படக்குழுவினரோட பஸ் வந்துச்சு. பஸ்லேருந்து, இயக்குனர், உதவி இயக்குனர்கள், மத்தவங்கன்னு எல்லோரும் இறங்கினாங்க. 10 நிமிஷத்துக்குள்ள, அந்த உணவகத்துக்கு பின்னாடி இருக்கிற இடத்துல சாப்பாடு கடையை திறந்துட்டாங்க. எங்களையும் நீங்களும் வந்து சாப்பிடுங்கன்னு சொன்னாங்க. நாங்களும் பின்னாடி போய், வரிசையில நின்னு, இட்லி, வடை, பொங்கல், சாம்பாருன்னு, ஒரு கட்டு கட்ட ஆரம்பிச்சோம். நான் அன்னைக்கு தான் ரொம்ப, ரொம்ப நாளைக்கு அப்புறம் காலைல, விதவிதமா சாப்பிட்டேன். கூட ஒரு ரெண்டுஇட்லியும், இன்னும் கொஞ்ச பொங்களையும் சாப்பிட்டு இருப்பேன், ஆனா, அதுக்குள்ள பயம் வந்துடுச்சு, எங்க, நல்லா சாப்பிட்டுட்டு, வந்த வேலையை பார்க்காம, தூக்கம் வந்துடுச்சுன்னா, என்ன பன்றதுன்னு, அதனால கொஞ்சம் அளவோடு தான் சாப்பிட்டேன். அப்ப தான் ரெண்டு மூணு பேர் பேசிக்கிட்டது காதுல விழுந்துச்சு. என்னன்னா, டான்ஸ் பாய்ஸ்ல இருக்கிற ஒரு மூணு பேர் அவுங்க தங்கியிருக்கிற அறைக்குள்ளேயே, தம் அடிச்சிருக்காங்க. அது கடைசில அபராதம் கட்டுகிற அளவுக்கு போயிடுச்சு. நாங்களும் யாருங்க அது அப்படின்னு ஒருத்தர் கிட்ட கேட்டோம், அவரும் கொஞ்சம் தள்ளி நின்னுக்கிட்டு இருந்த ஒரு ரெண்டு பேரை காமிச்சு, “நான், அவனுங்க கிட்ட ரூமுக்குள்ள தம் அடிக்காதீங்கடா, ஏதாவது பிரச்சனையாகிட போகுதுன்னு சொன்னேன், கேக்க மாட்டேன்னுட்டாணுங்க”, அப்படின்னாரு. எங்களுக்கு கொஞ்சம் தள்ளி, பழைய நடிகர் “சுரேஷ்” உட்கார்ந்து மேக்கப் போட்டுக்கிட்டு இருந்தாரு. மொட்டை தலையை மறைச்சு, நல்லா விக் எல்லாம் வச்சுக்கிட்டு இருந்தாரு. எங்களுக்கு டிபன் பரிமாறினவரு, அவரு கிட்ட, சுரேஷ் சார் சாப்பிட வாங்கன்னு கூப்பிட்டாரு, உடனே மேக்கப் போட்டுக்கிட்டு இருந்த சுரேஷும், இதோ வரேன்னேன்னு சொல்லிக்கிட்டு அங்கேருந்து எந்திரிச்சாரு. உடனே, “காக்காயிக்கு முக்குல வேர்க்கிற” மாதிரி, உள்ளேயிருந்து வெளியே வந்த இயக்குனர், சுரேஷிடம், “சார், நீங்க உள்ள வந்து சாப்பிடுங்கன்னு” உள்ள கூட்டிக்கிட்டு போயிட்டாரு. அப்புறம் நாங்க சாப்பிட்டு முடிச்சு 9.30 மணிக்கு, எங்களோட continuity ஷாட் எடுக்க ஆரம்பிச்சாங்க. அங்க விஜய் இல்லை,சந்தானம் இல்லை, அமலாபால் இல்லை, நாங்களும் அந்த டான்ஸ் பாய்ஸ் மட்டும் தான் உள்ளுக்குள்ள இருந்தோம். அமாலாபாலுக்கு பதில், அந்த பல்லவி(காஸ்ட்யூம் டிசைனர்) அவுங்க அமலாபால் போட்டிருந்த அதே காஸ்ட்யூம் போட்டுக்கிட்டு இருந்தாங்க. என்னடா இவுங்க இருக்காங்களேன்னு பார்த்தா, அவுங்க அமாலாபாலுக்கு டூப்பாம். நாங்க திருப்பியும்,”மஞ்ச கலரு ஜிங்குச்சா, பச்சை கலரு ஜிங்குச்சா, சிகப்பு கலரு ஜிங்குச்சான்னு” கத்த ஆரம்பிச்சோம். எங்களை குளோசப் ஷாட் எல்லாம் எடுத்தாங்க. ஒரு வழியா 11 மணியை போல, அந்த காட்சியை எடுத்து முடிச்சாங்க. நாங்களும் அந்த ரூம் விட்டு வெளியே வந்தோம். அன்றைக்கும் அந்த உணவகத்துல சூட்டிங் பார்க்கிறதுக்காக கூட்டம் வந்து இருந்துச்சு. எல்லோரும் எங்களை என்ன சீன் எடுத்தாங்க, விஜய் உள்ள இருக்காரா,அமலாபால் இருக்காங்களான்னு” கேள்வி கேக்க ஆரம்பிச்சுட்டாங்க. 10 நிமிஷத்துக்குள்ளேயே, கிருஷ்ணன், எங்களிடம் வந்து “இன்னைக்கு அவ்வளவு தான், இன்னும் பத்து நாள் கழிச்சு கூப்பிடுறோம்” அப்படின்னாரு. நாங்க உடனே பத்து நாள் கழிச்சா, அப்படின்னு கேட்டோம், அதற்கு அவர், “சந்தானம் நாளைக்கு இந்தியா போறாரு, அவர் திரும்பி வந்ததுக்கு அப்புறம் தான் உங்களோட காட்சியை எடுக்க முடியும். நீங்க இன்னும் ரெண்டு நாளைக்கு வர வேண்டியதாக இருக்கும்ன்னு சொன்னாரு.

கடைசில  ரெண்டு நாள் எல்லாம் நாங்க போகலை, நாலு நாள் போனோம். அதுல ரெண்டு நாள் எங்களை வர சொல்லி, மூணு மணி நேரம் காக்க வச்சுட்டு, எங்க காட்சியை எடுக்காமலே, திரும்பி போக சொன்னாங்க. அதை பற்றியெல்லாம் அடுத்த பதிவுல சொல்றேன்.   

தலைவா திரைப்பட அனுபவம் – படப்பிடிப்பிற்கு வந்து காத்திருந்து திரும்பி சென்றது

-    இன்னும் சொல்கிறேன்


Saturday, October 5, 2013

தலைவா திரைப்பட அனுபவம் – உணவகத்தில் சாப்பிடும் காட்சி – விஜய்யை நாங்கள் காக்க வைத்தது


எங்க அறைக்குள்ள,அதாவது சூட்டிங் ஸ்பாட்டுக்குள்ள விஜய் வந்தாரு. அவர் வந்தவுடனே, மத்த டான்ஸ் பாய்ஸ் எல்லாரும் எந்திரிச்சு நின்னு வணக்கம் சொன்னாங்க. எங்க குரூப்லேருந்தும் ஒரு சிலர் எந்திரிச்சு நின்னாங்க. விஜய்யும் எங்களை எல்லாம் பார்த்து சிரிக்கலாமா வேண்டாமான்னு ஒரு பார்வை பார்த்துக்கிட்டு போய் அவர் உட்கார வேண்டிய இடத்துல போய் உட்கார்ந்தாரு. நானும் விஜய் இப்பத்தான் வராரு போலன்னு நினைச்சேன். ஆனா அதற்கப்புறம் தான் தெரிஞ்சுது, அவர் ரொம்ப மின்னாடியே வந்து, அங்க இருந்த கூட்டத்துனால, பக்கத்துல இருந்த ஒரு ஹோட்டல்ல ரூம் போட்டு தங்கியிருந்திருக்காருன்னு. உடனே இயக்குனர் அவரு கிட்ட போய் காட்சியை சொல்லிக்கிட்டு இருந்தாரு. விஜய்யும், தலையை மட்டும் ஆட்டி கேட்டுக்கிட்டு இருந்தாரு. சரி, ஒரு ரிகர்சல் பார்த்துடலாம்னு இயக்குனர் சொல்ல, ரெடியா இருந்த நாங்க, மஞ்ச கலரை கொண்டு வாங்க மேடம், சிகப்பு கலரை கொண்டு வாங்க மேடம்ன்னு கத்த ஆரம்பிச்சோம். 


அந்த சமயத்துல சந்தானம், இயக்குனர் கிட்ட, சார் அந்த குரூப்லேருந்து யாராவது ஒருத்தர், “வெள்ளை கலர்ல ஏதாச்சும் இருக்கான்னு கேக்கட்டும் அப்படின்னாரு. இயக்குனரும் என்னோட நண்பர் ஒருவரை அந்த மாதிரி கேக்க சொன்னாரு. அந்த நண்பரும் உட்கார்ந்தபடியே கேட்டாரு. சந்தானம், எந்திரிச்சு நின்னு கேளுங்கன்னு சொன்னாரு. இயக்குனரும் மண்டையை ஆட்டிக்கிட்டு, அந்த நண்பரை எந்திரிச்சு நின்னு கேக்க சொன்னாரு. அந்த நண்பரும் கையை தூக்கிக்கிட்டு,”வெள்ளை கலர்ல ஏதாச்சும் இருக்கான்னு” கேட்டுட்டு உட்கார்ந்தாரு. உடனே சந்தானம், “வெள்ளை கலர்ல, உன் லங்கோடு தான் இருக்கு, வேணுமான்னு திருப்பி அதுக்கு பதில் கொடுத்தாரு. அதற்கு பிறகு அமலாபால் விஜய் கிட்ட போய் “உங்களுக்கு என்ன வேணும்” அப்படின்னு கேப்பாங்க. அந்த நேரத்துல செஃப்பா (chef) நடிக்கிறவரு, எங்களுக்கு பரிமாற வருவாரு, நாங்க உடனே “நீ வேண்டாம்யா, எங்களுக்கு அவுங்களை (அமலாபாலை) வரச் சொல்லுன்னு” அவரை திருப்பி அனுப்புவோம். அந்த செஃப்பா நடிக்கிறவரு, சந்தனத்தோட மேக்கப் மேன் தான். அவரு தெலுங்கு போல, அதனால தமிழ் உச்சரிப்பு கொஞ்சம் சரியா வரலை. அவர் வசனத்தை தப்பு தப்பா சொன்னதுனாலேயே, ரெண்டு மூணு தடவை டேக் எடுத்தாங்க. நம்ம சந்தானத்துக்கு கொஞ்சம் கோபம் வந்துடுச்சு. அவரைப்பார்த்து நக்கலா பேசுனாரு. பாவம் அவரும் அதை கேட்டுக்கிட்டு ஒண்ணும் சொல்லாம நடிச்சாரு. “பக்கத்துல ஆஸ்பத்திரி இருக்கான்னு” அந்த செஃப்பிடம் கேட்கணும். அதை இயக்குனர், அந்த டான்சர் பாய்ஸ்லேருந்து யாராவது கேளுங்கன்னு சொன்னாரு. உடனே, சந்தானம் நானே அதையே கேக்கிறேன்னு, அந்த பசங்களுக்கு வாய்ப்பையே தர விடலை. அப்பத்தான், நான் நினைச்சுக்கிட்டேன், இந்த சினிமால ஒருத்தன் முன்னேறுவது ரொம்ப கஷ்டம்னு. அதற்கு பிறகு, நாங்க பத்து பேர் உட்கார்ந்து இருந்த டேபிளை சின்னதாக்கி, ஒரு நாலு பேரை எந்திரிக்க சொல்லிட்டாங்க. அதாவது என்னோட வரிசைல, நானும் இன்னும் ரெண்டு பேரும்,அதே மாதிரி எதிர் வரிசைல மூணு பேரு மட்டும் உட்கார்ந்திருந்தோம். காமிரா மேன், காமிராவோட வந்து எங்களுக்கு பக்கத்துல வந்து உட்கார்ந்து ஷூட் பண்ண ஆரம்பிச்சாரு. மறுபடியும் நாங்க ஆறு பேரும் மட்டும் கத்த ஆரம்பிச்சோம். திருப்பியும் அமலாபால் விஜய் கிட்ட போறதும், நாங்க அவுங்களை கூப்பிடறதும்னு, ஒரு 5/6 டேக் எடுத்தாங்க. எங்களுக்கே ரொம்ப போர் அடிச்சிடுச்சு. ஆனாலும் எடுத்துக்கிட்டே தான் இருந்தாங்க. அப்ப தான், இயக்குனர் ஒரு சின்ன பிரேக் விட்டாரு. ஒரு பத்து நிமிஷம் பிரேக் எடுத்துக்குங்க, மறுபடியும் நாம இதே ஷாட் எடுக்கணும் அப்படின்னாரு. நாங்களும் அந்த அறையை விட்டு வெளியில வந்தோம்.  

பார்த்தா வெளியில ஒரே கூட்டம். நாங்க உள்ளுக்குள்ள நடிச்சுட்டு(கத்திட்டு!!) வந்ததுனால, நிறைய பேர் எங்க கிட்ட, விஜய்யை பக்கத்துல இருந்து பார்த்தீங்களா?பேசினிங்களா? அப்படின்னு ஒரே கேள்வி மயம் தான் போங்க!. அதுக்குள்ள விஜய்யும் அந்த அறையை விட்டு வெளியில வந்தாரு. உடனே கூட்டம் அவருக்கிட்ட போய் ஆட்டோகிராப் வாங்கிறதும், போட்டோ எடுக்கிறதும்னு, அந்த இடமே போர் களம் மாதிரி ஆயிடுச்சு. இதுல எங்க வீட்டு அம்மணியும், பசங்களை கூட்டிக்கிட்டு போய் விஜய்யை பார்த்து பேசிட்டாங்க. அதுல அவுங்களுக்கு அப்படி ஒரு சந்தோஷம். இந்த களேபிரத்துல, என்னோட ரெண்டு நண்பர்கள் வெளியில போய் காபி குடிச்சிட்டு வந்திடலாம்னு போயிருக்காங்க. எனக்கு தெரியாது. கொஞ்ச நேரத்துக்குள்ள, எங்களை எல்லாம் அந்த கிருஷ்ணா வரச் சொல்லி கூப்பிட்டாரு. நாங்களும் உள்ள போய் உட்கார்ந்தோம். விஜய், சந்தானம், அமலாபால்ன்னு எல்லோரும் வந்தாச்சு, பார்த்தா, அந்த ரெண்டு பேர் மட்டும் வரலை, உதவி இயக்குனர்,துணை இயக்குனர் எல்லாம் வந்து அந்த ரெண்டு பேர் எங்கன்னு கேட்க, நாங்க அவுங்களுக்கு போன் போட, அவுங்க ரெண்டு பேரும் இதோ வந்துக்கிட்டே இருக்கோம்ன்னு சொன்னாங்க. இயக்குனர் வந்து டேக்குக்கு போலாமான்னு கேக்க, உதவி இயக்குனர்கள் எல்லாம், சார் இன்னும் ரெண்டு பேர் வரணும்னு தயங்கியபடியே சொன்னாங்க. உடனே, இயக்குனரும், யார் அந்த ரெண்டு பேர், அவுங்க எங்க இருக்காங்கன்னு கேள்வி மேல கேள்வி கேட்டு, அவுங்களை சீக்கிரம் வரச் சொல்லுங்கன்னு சொல்லி, ரொம்ப டென்ஷன் ஆயிட்டாரு. நேரம் தான் போகுதே தவிற, இவுங்க ரெண்டு பேரும் வந்த பாடில்லை. எல்லோரும் அவுங்க ரெண்டு பேருக்காக காத்துக்கிட்டு இருந்தோம். இயக்குனர் வேற, விஜய் கிட்ட போய் “சாரி சார், இதோ சூட்டிங் ஆரம்பிச்சுடலாம்னு” பம்மிக்கிட்டு இருந்தாரு. கிட்டதட்ட 15 நிமிஷம் கழிச்சு, அவுங்க ரெண்டு பேரும் அரக்க பரக்க ஓடியாந்தாங்க. இதுல காரை வேற பார்க்கிங் பண்ண இடம் கிடைக்காம “NO PARKING”ல நிப்பாட்டிட்டு வந்திருக்காங்க. உடனே இயக்குனர் அவுங்களை பார்த்து, ஏன் சார் எங்க போறீங்கன்னு சொல்லிட்டு போக வேண்டாமா, அப்படியே போனாலும் சீக்கிரம் வர வேண்டாமான்னு” கோவிச்சுக்கிட்டாரு.  அவுங்க ரெண்டு பேர்ல ஒருத்தர் எல்லாரையும் பார்த்து “சாரிங்க,கொஞ்சம் லேட்டாயிடுச்சுன்னு” ஒரு மன்னிப்பை போட்டாரு. அப்புறம் மறுபடியும் அதே கத்துற கதையை தொடர்ந்தோம். ஒரு வழியா, இயக்குனர் கடைசில “பேக்அப்” அப்படின்னாரு. சரி, நாங்களும் இந்த காட்சி முடிஞ்சிடுச்சுன்னு நினைச்சோம். அப்ப தான், இன்னொரு உதவி இயக்குனர் வந்து, இந்த காட்சியோட “continuity” காட்சி எடுக்கணும். அது நாளைக்கோ இல்லை நாளை மறு நாளோ இருக்கும். அதனால எல்லோரும் இதே காஸ்ட்யூம்ல வந்துடுங்க. இன்னைக்கு போட்டிருக்கிற எதையும் மாத்திடதீங்கன்னு சொல்லி, எங்களை எல்லாம் ஜெயில் கைதி மாதிரி (அதாவது ரெண்டு கையையும் X மாதிரி)  நிக்க சொல்லி போட்டோ எடுத்துக்கிட்டாரு.

மறுபடியும் இந்த காட்சியை எப்போ எடுத்து முடிச்சாங்கன்னு அடுத்த பதிவுல சொல்றேன்.

தலைவா திரைப்பட அனுபவம் – உணவகத்தில் சாப்பிடும் காட்சி – தொடர்ச்சி
-    இன்னும் சொல்கிறேன்


Wednesday, October 2, 2013

தண்ணி குடித்தால் வாந்தி வரும்

என்னது! தண்ணி குடிச்சா வாந்தி வருமா, எந்த தண்ணியைன்னு(!!) நீங்க சந்தேகப்பட்டு கேட்கிறது புரியிதுங்க. நல்ல தண்ணி தாங்க. அதை நான் சொல்லலைங்க, எங்க சின்ன மாகாரணி தாங்க சொல்லியிருக்காங்க.

தினமும் ராத்திரி அவுங்களுக்கு நான் தான் சாப்பாடு கொடுக்கணும். சனி ஞாயிறுகளிலும் நான் தான் அவுங்களை காலையில எழுப்பி பல்லை விலக்கி,குளிப்பாட்டி, சாப்பாடு கொடுக்கணும். (எல்லாம் அவுங்க அம்மா ட்ரைனிங். இந்த வயசுலேயே பக்காவா கத்துக்கிட்டு அதையே விடாம ஃபாலோ பண்றாங்க!!!!). ஒரு வருஷம் முன்னாடி வரைக்கும் சின்ன மகாராணி, ரொம்ப சமர்த்தா சாப்பிடுவாங்க. அதனால அவுங்களுக்கு சாப்பாடு ஊட்டுறதுக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா அதே சமயம், பெரிய மாகாராணிக்கு சாப்பாடு கொடுக்கிறது இருக்கே, அது தான் உலகத்துல உள்ள மிகப் பெரிய கஷ்டமான வேலையே. சரி, சின்னவங்களை பார்த்து, பெரியவங்களும் ஒழுங்கா சாப்பிட ஆரம்பிச்சுடுவாங்கன்னு கொஞ்சம் நப்பாசையோடு காத்துக்கிட்டு இருந்தோம். ஆனா நடந்ததோ அப்படியே உல்டா, பெரியவங்களைப் பார்த்து சின்னவங்களும் ஒழுங்கா சாப்பிடாம நம்மளை உண்டு இல்லைன்னு பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. அதுவும் கஷ்டப்பட்டு அவுங்களுக்கு சாப்பாடு கொடுத்து முடிச்ச பிறகு, தண்ணியை கொடுத்து குடிக்கவைக்கிறதுக்குள்ள, நம்ம தொண்டை தண்ணி வத்திப்போயிடும். 

இன்னைக்கு ராத்திரியும், நான் தான் அவுங்களுக்கு பொங்கலை ஊட்டினேன். கொஞ்ச பொங்கலை ரொம்ப நேரமா சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. ஒரு கட்டத்துல பொங்கலை வாயில வச்சுக்கிட்டு இருமினாங்க. அதனால நான் அவுங்க கிட்ட தண்ணியை கொடுத்து குடிக்க சொன்னேன். தண்ணி பாட்டிலை வாய் கிட்ட கொண்டு போனவுங்க, உடனே என்கிட்ட கொடுத்து, “அப்பா, தண்ணி குடிச்சு வாமிட் வரும்”னு சொன்னாங்க. முதல்ல எனக்கு புரியலை. என்ன சொல்றீங்கன்னு திருப்பி கேட்டேன், திருப்பியும் ““அப்பா, தண்ணி குடிச்சு வாமிட் வரும்”னு சொன்னாங்க. ஆஹா! ஏழரையை ஆரம்பிச்சுட்டாங்கன்னு நினைச்சுக்கிட்டு, யாருடா சொன்னாங்கன்னு கேட்டேன். அதுக்கு “ஜெயா”ன்னு சொன்னாங்க. (ஜெயான்னு ஒருத்தவங்க கிட்ட தான் அவுங்க இரண்டு நாள் டே கேர் போறாங்க). என்னது! ஜெயா சொன்னாங்களான்னு! நான் திருப்பி கேட்டேன். “yap” அப்படின்னாங்க. (அந்த இரண்டு நாளும் அங்க போறதுனால, வெறும் இங்கிலீஷ் வார்த்தை தான் வாயிலிருந்து வரும்). உடனே, பக்கத்துல சாப்பிட்டுக்கிட்டு இருந்த அவுங்க ஐயா, எப்படி,மாத்தி சொல்றா பாருங்க, சியாந்திரம், இவுங்களை கூப்பிட போகும்போது, தண்ணியை ஒழுங்கா குடிக்காததுனால ரொம்ப கோவிச்சுக்கிட்டேன்னு எங்க கிட்ட ஜெயா சொன்னாங்கன்னு அவுங்க ஐயா சொன்னாங்க. ஆஹா, தண்ணியை குடிக்காம இருக்கிறதுக்கு என்னவெல்லாம் யோசிக்கிறாங்கன்னு நினைச்சு, எப்படியோ அதையும் இதையும் சொல்லி, தண்ணியை குடிக்க வச்சேன்.


இப்பவே (இரண்டே கால் வயசுக்கே!) எனக்கு கண்ணு கட்டுதே, இன்னும் போகப்போக!!!!!!!!