Saturday, December 29, 2012

காதல் கீதம் - 8

 பகுதி - 7  
ஜானகி சென்ற சிறிது நேரத்திற்கு பிறகு அடைக்கப்பன் சென்றான். இவர்கள் இருவரும் சென்ற பிறகு, ஜானகி தந்தையின் நெருங்கிய நண்பரும், கூட  வேலை பார்பவருமான முத்து எழுந்து போனார். அவர் அன்று சிவகங்கைக்கு ஒரு வேலையாக வந்து, அந்த வேலை முடியாததால், அந்த பூங்காவில் வந்து உட்கார்ந்திருந்தார். அவர் உட்கார்ந்திருப்பது தெரியாமல், ஜானகியும், அடைக்கப்பனும் அவருக்கு முன்னால் உள்ள பெஞ்சில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இவர்கள் பேசிய அனைத்தையும் கேட்ட முத்து, தன் வேலையை முடித்துக்கொண்டு, நேராக தன் டிபார்ட்மெண்டுக்கு சென்று, ஜானகியின் தந்தை நாராயணனை தேடினார். அவரும் வேலையை முடித்து, வீட்டிற்கு கிளம்புவதற்கு தயாராக இருந்தபோது முத்துவைப் பார்த்தார்.

“என்ன முத்து, நீ இன்னைக்கு லீவு தானே போட்டிருந்த?” என்று கேட்டார் நாராயணன்.

“ஆமா நாராயணா, நீ இப்ப வீட்டுக்கு தானே போறே?, உன்னைய பார்த்து பேசுறதுக்கு தான் நான் இப்ப வந்தேன்” என்றார் முத்து. 

“சரி, வா என்னோட வேண்டிலேயே பேசிக்கிட்டு வீட்டுக்கு போலாம்” என்றார் நாராயணன்.

இல்லை நாராயணா, இது கொஞ்சம் முக்கியமான விஷயம், வெளியில இருக்கிற டீ கடைல போய் பேசுவோம்” என்று கூறி, டீ கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

நாராயணனும் ஏதோ முக்கியமான விஷயம் என்று எண்ணிக்கொண்டு ஆலைக்கு வெளியில் இருக்கும் டீ கடைக்கு முத்துவோடு போனார்.
முத்து, ரெண்டு டீயை ஆர்டர் பண்ணிவிட்டு, பின்னாடி இருந்த பெஞ்சில் போய் உட்கார்ந்தார், பின்னாடியே வந்த நாராயணனும்,அவர் எதிரில் உட்கார்ந்து,

“என்ன முத்து, அப்படி முக்கியமான விஷயம்” என்றார்.

அவரையே பார்த்துக்கொண்டிருந்த முத்து, “கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட்ல வேலை செய்யுறதுக்கு, மெட்ராஸ்லேருந்து வந்திருக்கிற தம்பியை பத்தி நீ என்ன நினைக்கிற?” என்று கேட்டார் முத்து.

“யாரு, அந்த அடைக்கப்பன் தம்பியா?, அந்த பையன் ரொம்ப நல்ல பையனாத்தான் இருக்கான்” என்றார் நாராயணன்.

அவன் உனக்கு சொந்தமா” என்று கேட்டார்.

“ஒரு வகைல பார்த்தா அந்த பையன் தூரத்து சொந்தம் தான். என் தங்கச்சி மாப்பிள்ளையோட மாமா பையன் தான் இந்த அடைக்கப்பன். ஆமா எதுக்கு இப்ப அந்த பையனை பத்தி கேக்குற? என்றார் நாராயணன்.

“விஷயம் இருக்கு, இன்னைக்கு சிவகங்கைக்கு போயிருந்தேன் இல்ல, அங்க ஹாஸ்பிடல்ல என்னோட ரிபோர்ட் கிடைக்கிறதுக்கு 1 மணி நேரம் ஆகும்னு சொன்னாங்க. அதனால பக்கத்துல இருக்கிற பூங்காவில போய் உட்கார்ந்து இருந்தேன். கொஞ்ச நேரம் கழிச்சு எனக்கு பின்னாடி ரெண்டு பேர் வந்து உட்கார்ந்து பேச ஆரம்பிச்சாங்க. பெண்ணோட குரல் ரொம்ப பழக்கபட்ட குரலாட்டம் இருந்துச்சு. மெதுவா திரும்பி பார்த்தா, அவுங்க எனக்கு முதுகை காட்டிக்கிட்டு உட்கார்ந்திருந்தாங்க. அப்புறம் தான் தெரிஞ்சுது, அந்த பொண்ணு வேற யாரும் இல்ல, நம்ம ஜானகி,அந்த பையனும் அடைக்கப்பண்ணு” சொன்னார் முத்து.

“அவுங்க ரெண்டு பேரும் காதலிக்கிறாங்களா” என்று கேட்டார் நாராயணன்.

“ஆமா, ஆனா அவுங்க பேசிக்கிட்டதிலிருந்து என்ன தெரிஞ்சுதுன்னா, ஜானகி படிப்பை முடிச்சதும், உங்கிட்ட அந்த பையனை கல்யாணம் பண்ணிக்க இஷ்டம்னு சொல்லுவான்னு நினைக்கிறேன்” என்றார் முத்து.

“உனக்கு தெரியும் இல்ல முத்து, நான் அவளை எப்படி எல்லாம் வளர்த்தேன்னு, கடைசில அவளும் இப்படி காதல், கத்திரிக்காய்ன்னு விழுந்துட்டாளே” என்று வருத்தப்பட்டார் நாராயணன்.

“இதுல வருத்தப்படுறதுக்கு என்ன இருக்கு நாராயணா. இந்த காலத்துல காதல் எல்லாம் ரொம்ப சர்வ சாதாரணமா ஆயிடுச்சு. ஆனா, நம்ம ஜானகி யாரோ ஊர் பேர் தெரியாதவனை காதலிக்கலை. ஒரே இனத்துல, அதுவும் உனக்கு நல்லா தெரிஞ்ச பையனைத்தான் காதலிச்சிருக்கா. அதோட அவுங்க ரெண்டு பேரும் ரொம்ப கண்ணியமா தான் பழகுறாங்க. பேசாம அந்த பையனுக்கே அவளை கட்டி வச்சிடேன்” என்றார் முத்து.

“இவ இன்னமும் படிப்பையே முடிக்கலை. அதுக்குள்ள கல்யாணத்தை எப்படி பண்றது. முதல்ல இந்த வாரம் சிதம்பரத்துக்கு பொண்ணு பார்க்க போறோம். அது நல்ல படியா அமைஞ்சுதுன்னா, அப்புறம் இவளைப் பற்றி யோசிக்கலாம். அதோட அந்த பையனைப் பத்தியும் இன்னும் நல்லா விசாரிக்கணும்” என்றார் நாராயணன்.

“ஆமா, அந்த பையன் வீடு உங்க கோவில் கிடையாது தானே. அதை முதல்ல தெரிஞ்சுக்க” என்றார் முத்து.

“அவுங்க எங்களோட கோவில் கிடையாது அது நல்லா தெரியும். எனக்கு என்ன மனசு கஷ்டமா இருக்குதுன்னா, நான் ஒரு நல்ல மாப்பிள்ளையா அவளுக்கு தேடணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். அப்பா, உங்களுக்கு அந்த சிரமம் எல்லாம் வேண்டாம்னு, இவளே ஒரு மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்திட்டா. உம். எல்லாம் கலி காலம்” என்று சலிச்சுக்கிட்டார் நாராயணன்.   

“இங்க பாரு நாராயணா, இன்னும் கொஞ்சம் நாள் போயிருந்தா நீயே அந்த பையனைப் பத்தி விசாரிச்சு, மாப்பிள்ளையாக்கிக்கிட்டு இருப்ப. அதனால, ஜானகியைப் பத்தி தப்பா நினைக்காமா ஆக வேண்டியதை பாரு.  உனக்காக நான் அந்த பையனைப் பத்தி விசாரிச்சு சொல்றேன். உன் பையன் கல்யாணம் முடிஞ்சவுடனே, இவுங்க கல்யாணத்தையும் நடத்தி, அந்த தம்பியையும் நம்ம ஃபேக்டரிலேயே வேலையை மாத்திக்க வச்சுட்டா, அப்புறம் உன் பொண்ணு உன்னைய விட்டு எங்கேயும் போகமாட்டா” என்றார் முத்து.   

“சரி முத்து, இந்த விஷயத்தை யாருக்கிட்டேயும் சொல்லாதே. நானே வீட்டுல இதை பத்தி பேசபோறதில்லை. பையன் கல்யாணம் முடிஞ்ச பிறகு தான் இதைப் பத்தி வாயே திறக்கப்போறேன்” என்றார் நாராயணன்.

“என்ன நாராயணா நீ பேசுற, நான் போய் இதை யாருக்கிட்டையாவது சொல்லுவனா?. ஜானகியும் எனக்கு ஒரு மக மாதிரி தான். நீ கவலையே படாதே. சரி கிளம்பலாம் வா” என்றார் முத்து.

நாராயணன், தன் மகளைப் பற்றி எண்ணிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தார். அங்கு ஜானகி அடுப்படியில் தன் தாய்க்கு உதவியாக வேலை செய்துக் கொண்டிருந்தாள். தந்தையை பார்க்த்தவுடன்,காபி போட்டு எடுத்துச் சென்றாள்.

“இந்தாங்கப்பா காபி” என்று கூறி காபியை கொடுத்தாள்.

நாராயணன் சிறிது நேரம் அவளிடமிருந்து காபியை வாங்காமல், அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். இந்த பூனையும் பால் குடிக்குமான்னு சொல்ற மாதிரி இருந்துக்கிட்டு, இவளும் காதலிக்கிறாளேன்னு உள்ளுக்குள் வருத்தப்பட்டுக் கொண்டார்.

“என்னப்பா, புதுசா பார்க்கிற மாதிரி பார்க்கிறீங்க. முதல்ல காப்பியை வாங்கிக்குங்க” என்றாள் ஜானகி.

காபியை வாங்கிக்கொண்டு, “ஒண்ணும் இல்லம்மா, முதல்ல உங்க அண்ணனுக்கு கல்யாணத்தை முடிக்கலாமா, இல்ல உனக்கு முடிக்கலாமான்னு யோசிக்கிறேன்” என்றார் நாராயணன்.

“என்னப்பா இது, நான் இன்னமும் படிப்பையே முடிக்கலை. அதுக்குள்ள எனக்கு எதுக்கு கல்யாணம். முதல்ல அண்ணனுக்கு முடிங்க”, அப்புறம் எனக்கு பார்க்கலாம்” என்றாள்.

“சரிம்மா, உங்கண்ணனுக்கு, இந்த இடம் முடிஞ்சுடும்னு நினைக்கிறேன். அப்படி முடிஞ்சிருச்சுன்னா, கல்யாணத்தை உடனே வச்ச்சுகிற மாதிரி இருக்கும். அதனால, நீ பாட்டுக்குன்னு இன்னைக்கு உன் ஃப்ரெண்ட்டை பார்க்க போன மாதிரி, அடிக்கடி போகாதே, கல்யாண வேலை எல்லாம் நிறைய இருக்கு” என்றார்.

“சரிப்பா” என்று கூறிவிட்டு தன் அறைக்குள் சென்றாள். அவளுடைய மனதோ,அப்பாவுக்கு எதாவது விஷயம் தெரிஞ்சிருக்குமோ என்று குழம்பியது. அப்பாவுக்கு தெரிஞ்சிருக்காது, நாமா தான் யாருக்கும் தெரியாம காதலிக்கிறோமே என்று உடனே மனதை சமாதானப்படுத்தினாள்.  

வெள்ளிக்கிழமை அன்று, அடைக்கப்பன் லீவு போட்டு, மெட்ராஸுக்கு போனான். சனிக்கிழமை ஜாகியின் வீட்டில், ஜாகியின் பெற்றோர், ஜானகி, சிதம்பரம் மற்றும் அவர்களின் அப்பத்தா எல்லோரும் மெட்ராஸுக்கு சிதம்பரத்திற்கு பொண்ணு பார்க்க கிளம்பி நேராக ஜானகியின் அத்தைப் பெண் உண்ணாவின் வீட்டுக்கு சென்று இறங்கினார்கள். அன்று காலை 11மணிக்கு வடபழனி கோவிலில் சிதம்பரத்திற்கு பெண் பார்ப்பதாக ஏற்பாடாகியிருந்தது. சிதம்பரம் வீட்டில் எல்லோருக்கும் பெண்ணைப் பிடித்து விட்டது. உடம்பு சரியில்லாமல் இருக்கும் அந்த பெண்ணின் ஆயாவிற்கு, தன் பேத்தியின் கல்யாணத்தை சீக்கிரம் பார்த்து விட வேண்டும் என்பதால், கலியானத்தை ஒரு மாதத்திற்குள் முடித்து விட வேண்டும் என்று அந்த பெண் வீட்டார், ஜானகியின் வீட்டில் சொன்னார்கள். ஜானகியின் வீடும், அதற்கு ஒத்துக் கொண்டது. ஆனால், சிதம்பரத்திற்கு மட்டும், இதில் வருத்தம். அவன் நினைத்தது, திருமணத்திற்கு ஒரு ஆறு மாதங்களாவது இருக்கும், அதற்குள் பெண்ணிடம் அடிக்கடி தொலைபேசியில் பேசி, காதலை வளர்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி இருந்தான். பெண் பார்த்து முடித்து, மீண்டும் உண்ணாவின் வீட்டிற்கு வந்தார்கள். அங்கே, அடைக்கப்பன் ஜானகிக்காக காத்துக் கொண்டிருந்தான். 
பகுதி - 9 
                                            - [தொடரும்]

Wednesday, December 19, 2012

அலுவலக கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்


ஒவ்வொரு வருஷமும் இங்கு ஏறக்குறைய எல்லா அலுவலகங்களிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கொண்டாடப்படும். எங்கள் அலுவலகமும் இதற்கு விதிவிலக்கில்லை. ஆனா என்ன! கழுதை கெட்டா குட்டிச் சுவருங்கிற மாதிரி ஒவ்வொரு வருஷமும் டிசம்பர் மாதத்தில் முதல் அல்லது இரண்டாவது வெள்ளிக்கிழமையில் மதியம் 12.30 மணியிலிருந்து மாலை 5 மணி வரை படகு சவாரி செய்வதே எங்கள் அலுவலகத்தின் ஆஸ்தான கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாயிடுச்சு. சென்ற வருடம் படகு சவாரில ஒரு மேஜிக் கலைஞர் வந்து சீட்டுக்கட்டை மறைக்கிறது , வாயிலிருந்து எடுக்கிறது அப்படி இப்படின்னு நிறைய அஜால் குஜால் வேலை எல்லாம் செஞ்சு காமிச்சாரு. அதோட சரியா 1.30 மணிக்கெல்லாம் சாப்பாடு கொடுத்தாங்க. என்ன, சைவ சாப்பாடு, அப்படி ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. இந்த வருஷம் சரியா 12.30 மணிக்கு படகுல எறினோம். பொதுவா விருந்தோம்பலுக்கு நம்ம தமிழர்கள் தான் பேர் போனவர்கள். ஆனா, நம்ம தமிழர்களையே தூக்கி சாப்பிடுகிற மாதிரி, படகுக்குள்ள கால வச்சவுடனே, உங்களுக்கு குடிக்கிறதுக்கு பீர் வேணுமா, இல்ல வைன் வேணுமா, இல்ல ஷாம்பெயின் வேணுமா அப்படின்னு கேட்டாங்க. சாராயத்தை குடிக்காதவங்களிடம், ஜூஸ் வேணுமா, கோக் வேணுமான்னு கேட்பாங்காண்ணு பார்த்தா, ஒண்ணும் கேக்கவே காணோம். சரி, வாயுள்ள புள்ளை தான் புழைச்சுக்கும்ன்னு சொல்ற மாதிரி, நானே ஆரஞ்சு ஜூஸ் கேட்டு வாங்கிக்கிட்டேன். 

கொஞ்ச தூரம் போனவுடனே, படகை ஓரம் கட்டி நிறுத்திட்டாங்க. சரி, சாப்பாட்டுக்கு தான் நிறுத்தியிருக்காங்க போல, இந்த வருஷம் சைவ சாப்பாடு எப்படி இருக்கப் போகுதோன்னு, கவலைப்பட்டுக்கிட்டு இருக்கும்போது, எங்க படகுக்கு பக்கத்துல ஒரு வாடகை படகு(water taxi) வந்து நின்னுச்சு. அதிலேருந்து ஒருத்தர் நிறைய சாமான்களை எல்லாம் எடுத்துக்கிட்டு எங்க படகுக்கு வந்தாரு. அப்ப தான் சொன்னாங்க, நீங்க துப்பாக்கி சுட்டு பழகுவதற்கு இவர் வந்திருக்காருன்னு. எனக்குள்ள தூங்கிக்கிட்டு இருந்த ஆசை, அதாங்க ஒரு சின்ன துப்பாக்கியை கைல புடிச்சு சுட்டுப் பார்க்கணும் அப்படிங்கிற ஆசை தலை தூக்கி பார்த்துச்சு. இன்னைக்கு ஒரு சின்ன துப்பாக்கியை கைல வச்சு, வித விதமா போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக்கணும் அப்படின்னு நினைச்சுக்கிட்டேன். கொஞ்ச நேரத்துல அவர் ஒரு பெரிய ஸ்கோர் போர்ட் எல்லாம் செட் பண்ணினாரு. கடைசில துப்பாக்கியை எடுத்தாரு பாருங்க, அது நம்ம தமிழ் சினிமால காட்டுவாங்களே, போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல, ஒரு போலீஸ், ஆளு உயரத்துக்கு ஒரு துப்பாக்கியை வச்சுக்கிட்டு நின்னுக்கிட்டு இருக்கிற மாதிரி, அது மாதிரி தான் இருந்துச்சு அவர் வச்சிருந்த துப்பாக்கியும். இந்த துப்பாக்கி சுடுறதுக்கு பேரு “லேசர் சூட்டிங்” ன்னு சொன்னாங்க. 

அதாவது ஒரு சின்ன பிளாஸ்டிக் clayவை மேல பறக்க விடுவாங்க, அது தண்ணிக்குள்ள விழுறதுக்குள்ள, நாம அதை சுடனும். அந்த துப்பாக்கில புல்லட், கில்லட் எல்லாம் ஒண்ணும் கிடையாது. அந்த துப்பாக்கியே லேசர் துப்பாக்கியாம். நாம குறிப்பார்த்து அந்த பிளாஸ்டிக் clayவை சுட்டோம்னா, துப்பாக்கியிலிருந்து லேசர் கதிர் வீச்சு, அந்த clayல போயி பட்டா, நமக்கு புள்ளிகள் கிடைக்கும். அந்த புள்ளிகள், ஸ்கோர் போர்டுல தெரியும். சுட ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, லேசர் சூட்டிங்கை நடத்துறவரு ஏகப்பட்ட விதி முறைகளை சொன்னாரு. அதுல முக்கியமானது என்னன்னா, எங்க படகுக்கு பக்கத்துல வேற ஏதாவது ஒரு படகு போனா, அந்த படகுல இருக்கிறவங்களை பார்த்து, தூப்பாகியை நீட்டக் கூடாதாம். ஏன்னா அவுங்க பயந்திடுவாங்களாம் (இந்த டம்மி துப்பாக்கிக்கே இப்படியா!!!). இதுல தண்ணிக்குள்ள விழுற அந்த clayயை எடுக்கிறதுக்கு, ஒரு குட்டி படகுல ஒருத்தர் காத்துக்கிட்டு இருந்து பொறுக்கி போடுவாரு.


ஐந்து, ஐந்து பேரா, நாங்க போயி அந்த clayயை சுட்டோம். ஒவ்வொருத்தருக்கும் எட்டு ரவுண்ட் கொடுத்து, யார் அதிக புள்ளிகள் எடுக்கிறாங்கன்னு பார்த்தாங்க. அந்த காலத்துல இந்த மாதிரி ரெட்டை குழல் துப்பாக்கி எல்லாம் வச்சுக்கிட்டு எப்படி தான் வேட்டைக்கு போனாங்களோ, சரியான கனம் அந்த துப்பாக்கி, நானும் எப்படியோ 5 ரவுண்டை தாக்குப் புடிச்சுட்டேன், அதற்கப்புறம் ஒரு 3 ரவுண்ட் ரொம்ப கஷ்டமா போச்சு. எப்படியோ, 8 ரவுண்டை முடிச்சு 11 புள்ளிகளோட வெளியே வந்தேன். (நிறைய பேர் 20 புள்ளிகளுக்கு மேல எடுத்தாங்க. அதிக பட்சம் 24 புள்ளிகள்). இந்த ஆட்டம் முடியும்போது மணி 3.30, உடனே நாலைந்து பேர் தண்ணில நீச்சல் அடிக்கிறோம்னு படகுலேருந்து குதிச்சு, நீச்சல் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இங்க எனக்கா பசி வயித்தை கிள்ளுது. வெளியே சொல்றதுக்கும் கஷ்டமா இருந்துச்சு. என்னடாது, எவனுக்குமே பசிக்கதான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கும்போது, நீச்சல் அடிச்சு முடிச்சு ஒரு அம்மணி, எப்ப மதிய சாப்பாடுன்னு படகுகாரங்க கிட்ட கேட்டாங்க, அவுங்களும், சாப்பாடு எல்லாம் கிடையாதுன்னு சொன்னாங்க.

அடப்பிபாவிகளா! இப்படி சாப்பாடு இல்லாம பண்ணிட்டீங்களேன்னு நொந்து போய் வெறுமன ஆரஞ்சு ஜூஸா வாங்கி வாங்கி குடிச்சு வயித்தை நிரப்பிக்கிட்டு, படகிலிருந்து இறங்கினவுடனே,hungry jacks” கடைல போய் ஒரு சைவ பர்கர் வாங்கி சாப்பிட்டு வீட்டுக்கு வந்தேன்.

Tuesday, December 11, 2012

காதல் கீதம் - 7

பகுதி - 6
அடைக்கப்பன், சரிங்க நான் வீட்டுக்கு வரேன் என்று சொல்லி போனை கட் பண்ணினான். (மனதுக்குள்) நாம ஜானகியோட பழகுறது தெரிஞ்சிருக்குமா? நேத்து தானே ஜானகி ஸ்டடி ஹாலிடேசுக்கு வீட்டுக்கு வந்திருக்கா. சரி, தெரிஞ்சிருந்தா எப்படியாவது சமாளிப்போம் என்று எண்ணிக்கொண்டான்.

என்ன அடைக்கப்பா, “யாரிடமிருந்து போன்” என்று கேட்டாள் பூங்குழலி.

அதற்கு அடைக்கப்பன், “ஜானகியோட அப்பாவிடமிருந்து, என்கிட்ட ஏதோ பேசனுமாம், வீட்டுக்கு கூப்பிட்டிருக்காரு” என்றான்.

“அதுக்குள்ள, உங்க விஷயம் தெரிஞ்சிருக்குமா” என்றாள் பூங்குழலி.

“அதான், எனக்கும் தெரியலை. தெரிஞ்சிருந்தா எப்படியாவது சமாளிச்சுக்க வேண்டியது தான்” என்றான் அடைக்கப்பன்.

அன்று மாலை வேலை முடித்து, ஜானகியின் வீட்டுக்கு சென்றான் அடைக்கப்பன். அங்கு அவனுக்கு வரவேற்பு பலமாக இருந்தது.

ஜானகியின் தந்தை, ஜானகி, இங்க வாம்மா என்றார்.

ஜானகி வந்தவுடன், அடைக்கப்பனிடம், “தம்பி இவ தான் என் பொண்ணு, பேரு ஜானகி, பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் கடைசி வருஷம் படிக்கிறாள்” என்றார்.

அடைக்கப்பன், ஜானகியிடம் வணக்கம் என்றான்.

ஜானகியும், பதிலுக்கு வணக்கம் கூறினாள்.

ஜானகியிடம் அவளுடைய தந்தை, “தம்பியும் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சுட்டு, future softwaresல வேலை செய்யுறார். நம்ம ஃபேக்டரிக்கு சாஃப்ட்வேர் பண்ணிக் கொடுக்கிறதுக்காக வந்திருக்காரு. இவரு வேறு யாரும் இல்லை, உன் பெரிய அத்தைப் பொண்ணு உண்ணாவோட செட்டியார் இருக்காரு இல்லை, அவரோட சித்திப் பையன் தான் என்று அடைக்கப்பனைப் பற்றி ஒரு பெரிய அறிமுகத்தை சொல்லி முடிச்சாரு.

ஜானகியும் ஒன்றும் தெரியாதவள் போல கேட்டுக் கொண்டாள்.

அவளுடைய தந்தை, அடைக்கப்பனிடம், தம்பி இவ ஸ்டடி ஹாலிடேசுக்காக வந்திருக்கா. ஏதோ டிஜிட்டல் பிரின்சிபல்ஸ்ன்னு, ஒரு சப்ஜெக்ட் இருக்காமே, ரொம்ப கஷ்டமா இருக்காம். நீங்க கொஞ்சம் தினமும் வந்து சொல்லிக் கொடுக்க முடியுமா என்றார்.

அப்போது தான், அடைக்கப்பன் நிம்மதி அடைந்தான். (மனதுக்குள்) நம்ம ஆளு பயங்கிரமான ஆளா இருக்கா!, தினமும் சந்திக்கிறதுக்கு வழி செஞ்சுட்டாளேன்னு சந்தோஷப் பட்டு, அதை வெளிக் காட்டாமல், அந்த பேப்பர்ல தான், நான் யூனிவர்சிட்டி ரேங்க், அதனால சொல்லிக் குடுக்கிறதுல ஒரு பிரச்சனையும் இல்லை. நாலையிலிருந்து தினமும்  சியாந்திரம் 5.30 மணியிலிருந்து, 6.30 மணி வரை சொல்லிக் கொடுக்கிறேன் என்றான் அடைக்கப்பன்.

“ரொம்ப நன்றி தம்பி” என்றார் ஜானகியின் தந்தை.

ஜானகியும் ரொம்ப நன்றிங்க என்றாள்.

“இதுக்கு போயி எதுக்கு நன்றியெல்லாம் சொல்லிக்கிட்டு, எனக்கு தெரிஞ்சதை சொல்லிக் கொடுக்கப்போறேன், அவ்வளவுதான்” என்றான் அடைக்கப்பன்.

நாளைக்கு வறேன்னு சொல்லி அங்கிருந்து கிளம்பினான்.

மறு நாள் அடைக்கப்பன் வேலை முடித்து, ஜானகியின் வீட்டுக்கு போனான். வரவேற்பறையில் ஜானகி புத்தகமும், கையுமாக தயாராக இருந்தாள். அடைக்கப்பனும் அவளுக்கு பாடத்தை சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தான். இடையில் அவனுக்கு பலகாரமும், காபியும் ஜானகியின் அம்மா கொண்டு வந்து கொடுத்தார்கள்.

பின்னர், ஜானகி மெல்லிய குரலில், பார்த்தீங்களா, இந்த ஏற்பாடே என்னோடது தான். எப்பூடி! என்றாள்.

அதற்கு அடைக்கப்பனும், “அம்மா தாயே! உன் அளவுக்கு எனக்கு சாமர்த்தியம் எல்லாம் கிடையாது” என்று கூறினான்.

“இன்னும் 2 வாரத்திற்கு நாம தினமும் சந்திச்சுக்கலாம். அதுக்கப்புறம் செமெஸ்டர் லீவுல தான் நாம எப்படி சந்திச்சுக்கலாம்னு தெரியல“ என்றாள் ஜானகி.

“முதல்ல பரீட்சையை முடி, அதுக்கப்புறம் எப்படி பார்க்கலாம்னு யோசிக்கலாம்” என்றான் அடைக்கப்பன்.

பாடங்களை படித்துக்கொண்டு, நடு நடுவில் இருவரும் மெல்லமாக தங்கள் காதலை யாருக்கும் தெரியாமல் வளர்த்துக் கொண்டிருந்தார்கள்.

இப்படியே, இரு வாரமும் தொடர்ந்தது. ஜானகி கல்லூரிக்கு போவதற்கு முதல் நாள்,

ஜானகி, “நான் நாளைக்கு காலேஜுக்கு போகனும். திருப்பியும் ரெண்டு வாரம் கழிச்சு தான் உங்களை பார்க்க முடியும்” என்றாள்.

“நீ நம்மோட காதலைப் பற்றி யோசிக்காம நல்லா செமெஸ்டர்  செஞ்சுட்டு வா என்றான்” அடைக்கப்பன்.

“நான் செமெஸ்டரை முடிச்சுட்டு வந்தவுடன, நாம சிவகங்கை பார்க்ல சந்திக்கலாம். உங்ககிட்ட அப்ப நான் நிறைய பேசனும் என்றாள்” ஜானகி.

“நீ, திருப்பியும் இங்க வந்தவுடனே, எப்பவும் போல எனக்கு போன் பண்ணி சொல்லு, நான் ஆபிஸ்ல பர்மிஷன் போட்டு வந்து விடுறேன்” என்றான் அடைக்கப்பன்.

அதற்கப்புறம் இரண்டு வாரம் கழித்து, ஜானகி பரீட்சை முடித்து படமாத்தூருக்கு திரும்பினாள்.

அடைக்கப்பன் வேலை செய்துக் கொண்டிருக்கும் பொழுது, ஜானகி போன் பண்ணி, பூங்குழலியிடம் பேசினாள்.

பூங்குழலி, “அடைக்கப்பா உன் ஆளு இன்னைக்கு சியாந்திரம் நான்கு மணிக்கு சிவகங்கை பார்க்ல உனக்காக காத்துக்கிட்டு இருக்காளாம்” என்றாள்.

அடைக்கப்பனும் தன் டிபார்ட்மெண்ட் மேனேஜரிடம் பர்மிஷன் சொல்லி விட்டு, சிவகங்கை பார்க்குக்கு சென்றான்.

அடைக்கப்பன், “ரொம்ப நேரமா காத்துக்கிட்டு இருக்கியா ஜானகி” என்றான்.

“இல்லை, நானும் இப்பத்தான் வந்தேன்” என்றாள் ஜானகி.

“சரி வா, யாரும் பார்க்குறதுக்கு முன்னாடி அந்த பெஞ்ச்ல போயி உட்காரலாம்” என்று கூறி ஜானகியுடன் நடந்து அங்கிருந்த ஒரு பெஞ்ச்சில் போய் உட்கார்ந்தான் அடைக்கப்பன்.

“எப்படி எக்ஸாம் எல்லாம் செஞ்ச?” என்று கேட்டான்.

“நல்ல செஞ்சிருக்கேன். எப்படியும் இந்த செமெஸ்டர்ல எண்பது சதவீதத்துக்கும் மேல வரும்” என்றாள் ஜானகி.

“எங்க நீ என்னைய காதலிக்க ஆரம்பிச்சதுனால, படிப்பில கவனத்தை சிதற விட்டுடுவியோன்னு பயந்தேன்” என்றான் அடைக்கப்பன்.

“பொதுவா எல்லோரும் சொல்லுவாங்க, காதலிக்க ஆரம்பிச்சா நம்மளால படிக்க முடியாதுன்னு, ஆனா நான் உங்களை காதலிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தான் நல்லா படிக்க முடியுது” என்றாள் ஜானகி.

“உண்மையான காதல் எப்பவுமே நம்மளை மேல தூக்கி தான் விடுமே தவிர கீழே இறக்காது” என்றான் அடைக்கப்பன்.

“என்னோட நெருங்கிய தோழிகளுக்கு எல்லாம் பெரிய ஆச்சிரியம் என்னன்னா, கிட்ட தட்ட ஆறு மாசமா நாம காதலிச்சாலும், உங்க விரல் கூட என் மேல பட்டதே இல்லையா, எப்படி உங்களால அப்படி காதலிக்க முடியுதுன்னு கேட்கிறாங்க” என்றாள் ஜானகி.

“என்னைய பொருத்தவரைக்கும் ஜானகி, “கல்யாணத்துக்கு முன்னாடி வர்ற காதல்ல, கண்ணும் மனசும் தான் கலக்கனும். அத விட்டுட்டு ஸ்பரிசிக்கிறது, முத்தம் கொடுக்கிறது இதெல்லாம் உண்மையான காதலே இல்லேன்னு சொல்வேன். இந்த காதல்ல, உடம்பு உள்ள நுழையவே கூடாது” என்றான்.

“கல்யாணதுக்கு அப்புறம் வர்ற காதல் எப்படி இருக்கனுமாம்” என்று கேட்டாள் ஜானகி.

“கல்யாணத்துக்கு அப்புறம் வர்ற காதல்ல, மனசோட உடம்பும் சம்பந்தப்பட்டிருக்கு. முதல்ல மனசு ரெண்டும் இரண்டறக் கலந்தாத்தான், ஈருடல் ஓர் உடலாகும். இங்கேயும் மனசு தான் முதல்ல, அதக்கப்புறம் தான் உடம்பு. மனசு ரெண்டும் கலக்காம, உடம்பு மட்டும் கலந்ததுன்னா, அதுல காதல் இருக்காது, காமம் மட்டும் தான் இருக்கும்” என்றான் அடைக்கப்பன்.

“அப்பா! விட்டா காதலுக்கு இலக்கணமே எழுதுவீங்க போல. இப்படி நீங்க பேசுறதை கேக்கும்போது, என் மனசுல நீங்க உயர்ந்து கிட்டே போறீங்க. சரி, இன்னைக்கு ஏதாவது ஒரு கவிதையை சொல்லுங்களேன்” என்றாள் ஜானகி.

“இந்தப் பூக்களை வைத்து ஒரு கவிதை சொல்கிறேன் கேள்” என்று கூறி, கவிதையை சொல்ல ஆரம்பித்தான் அடைக்கப்பன்.


           “உலகத்துலே தாங்கள் தான்

           மிக அழகானவர்கள் என்று

           கர்வம் கொண்டு தலை

           நிமிர்ந்து நிற்கும் இந்த

           பூக்கள் உன்னைக் கண்டவுடன்

           தங்களை விட அழகான ஒரு

           பூ இருக்கிறதா என்று வியந்து

           கர்வப்பட்டதற்காக வெட்கப்பட்டு

           தலை குனிந்துக்கொண்டன”.

“ஆஹா!, அருமை அருமை. என்னைய விட அழகானவங்க எல்லாம் இருக்காங்களே” என்றாள் ஜானகி.

“காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுங்கிற மாதிரி, என் கண்ணுக்கு நீ தான், உலக அழகி” என்றான் அடைக்கப்பன். 

“என்னைய புகழ்ந்தது போதும், என்னோட கடைசி செமெஸ்டர் முடிஞ்சவுடனே, நம்மோட விஷயத்தை வீட்டுல சொல்லிடலாம்” என்றாள் ஜானகி.

“நம்ம கல்யாணத்தைப் பற்றி கவலைப் படாதே, ரெண்டு பேரும் ஒரே இனங்கிறதுனால ஒரு பிரச்சனையும் இருக்காது” என்றான் அடைக்கப்பன்.

“அப்படித்தான் நானும் நினைக்கிறேன்பா, எங்க வீட்டுல உங்க மேல ஒரு நல்ல அபிப்பிராயம்” இருக்கு.

“ஐயா மேல யாருக்கு தான் நல்ல அபிப்பிராயம் இருக்காது” என்றான் அடைக்கப்பன்.

“நினைப்பு தான் புழைப்ப கெடுக்கும்னு சொல்லுவாங்க. சரி முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டேன் பாருங்க! எங்க அண்ணனுக்கு பொண்ணு பார்க்க நாங்க இந்த சனிக் கிழமை சென்னைக்கு போறோம் “ என்றாள் ஜானகி.

“ஓ! அப்படியா, அப்ப நான் எங்க சென்னை ஆபிஸ்ல வேலை இருக்கிற மாதிரி ஒரு ஸீன் போட்டு, வெள்ளிக்கிழமையே சென்னைக்கு போறேன். நீங்க எப்ப மணி வீட்டுக்கு, அதான் உங்க அத்தை பொண்ணு வீட்டுக்கு வருவீங்கன்னு சொல்லு,அப்ப நான் உங்க எல்லாரையும் எங்க வீட்டுக்கு கூப்பிடுறேன். எங்க வீடும் பக்கத்துல தான் இருக்கு” என்றான் அடைக்கப்பன்.

“சரிப்பா, வந்து ரொம்ப நேரம் ஆச்சு, வீட்டுல சிவகங்கைக்கு போயி ஃப்ரெண்டை பார்த்துட்டு வறேன்னு சொல்லிட்டு வந்தேன், அதனால நான் கிளம்புறேன். சென்னைல பார்க்கலாம்” என்று கிளம்பினாள் ஜானகி .

“சரி, பார்த்து போயிட்டு வா, நான் இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு கிளம்புறேன்” என்றான் அடைக்கப்பன்.

இவர்கள் இருவரும் உட்கார்ந்திருந்த பெஞ்ச்சுக்கு பின்னாடி உள்ள பெஞ்ச்சில் உட்கார்ந்து இவர்களோட உரையாடல் எல்லாத்தையும்  கேட்டுக் கொண்டிருந்த ஒரு உருவம், இவர்கள் போன பின்பு மெதுவாக எழுந்து போனது.
- [தொடரும்]                                                                                    பகுதி - 8

Wednesday, December 5, 2012

வெள்ளிக்கிழமை மஜா

வெள்ளிக்கிழமை மஜான்னவுடனே,நீங்க என்னையப்பத்தி தப்பா நினைக்க வேண்டாம்(நான் ரொம்ப நல்ல பையனாக்கும்!!!). வெள்ளிக்கிழமை மாலை வேளைகளில், எங்கள் அலுவலகத்தில் நடக்கும் கூத்தைப் பற்றி தான் இந்த பதிவு. நம்ம நாட்டில் தண்ணி அடிக்கிறது தப்பு, உடம்புக்கு கெடுதல்ன்னு சொல்லுவாங்க. ஆனா இங்க தண்ணி அடிக்காம இருந்தா, அது உலக மகா தப்புன்னு நினைக்கிறாங்க. எங்கள் அலுவலக பேன்ட்ரில (சின்ன சமையலறை) குளிர்சாதன பெட்டி இருக்கும். அதுல சாப்பிடுகிற பொருள் இருக்கோ இல்லையோ, பீர் பாட்டில்,வைன் பாட்டில் மட்டும் நிறைய இருக்கும். வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி ஆனா போதும், சமையலறைக்கு போய் ஆளாளுக்கு பீர் எடுத்து குடிக்க ஆரம்பிச்சிடுவாங்க. ஒரு சில பேர், அப்பத்தான் ரொம்ப மும்முரமா வேலை பார்க்கிற மாதிரி, பீர் பாட்டிலை எடுத்துக்கிட்டு, அவுங்க இடத்துக்கு வந்து ஒரு கையில பாட்டிலை பிடிச்சு குடிச்சுக்கிட்டே, வேலை பார்ப்பாங்க. ஆஹா, அவுங்க குடிச்சுக்கிட்டே வேலை பார்க்கிற அழகை என்னன்னு சொல்றது. 

இதுல, குடிக்காம இருக்கிற என்னைய பார்த்து, நீ குடிக்க மாட்டியான்னு இளக்காரமா ஒரு கேள்வி வேற கேட்டுத் தொலைப்பாங்க. சரி, இவுங்க முன்னாடி நாம சும்மா இருக்காம, கோக்கையாவது குடிக்கலாம்னு பார்த்தா, படு பாவிங்க, ஒரு கோக் கூட வாங்கி வச்சிருக்க மாட்டானுங்க. கோக்கையும் கொஞ்சம் வாங்கி வையுங்கன்னு சொன்னா, பீருக்கு மிக்ஸிங் தேவையில்லை, அதனால கோக் எல்லாம் வாங்கி வைக்கிறதில்லைன்னு சொல்லிட்டாணுங்க. சரி, நமக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான்னு நினைச்சுக்கிட்டேன். இவனுங்க மட்டும் ஓசியில வயிறு முட்ட தண்ணி அடிக்கலாமாம், ஆனா தண்ணி அடிக்காம இருக்கிற என்னைய மாதிரி ஆளுங்களுக்கு, கோக் கூட கிடையாதாம். இது எந்த ஊர் நியாயம்னு தெரியலை. போன வெள்ளிக்கிழமை நடந்தது தான் பெரிய கொடுமை. எல்லோரும் வேலை பார்க்கிற மும்முரத்துல, தண்ணி அடிக்கிறதை மறந்துட்டாங்க(எப்படி இவனுங்க ஓசியில கிடைக்கிற தண்ணியை மறந்துட்டாணுங்கன்னு எனக்கு பெரிய சந்தேகம்). ஆனா, ஒரே ஒரு பிரகஸ்பதி மட்டும் சரியா நியாபகம் வச்சுக்கிட்டு, சமையலறைக்கு போய் பீரை எடுத்தாரு. தான் மட்டும் குடிச்சா தப்புன்னு நினைச்சாரோ என்னவோ, ஒரு சின்ன தள்ளு வண்டில நிறைய பீர் பாட்டிலை எடுத்து வச்சுக்கிட்டு, ஒவ்வொருத்தரிடமும் போய் டோர் சர்வீஸ் பண்ணிக்கிட்டு இருந்தாரு. என் டேபிள் கிட்ட வந்தவுடனே, இன்னைக்கும் உனக்கு கோக் கிடையாதுன்னு நக்கலா சொல்லிட்டு போனாரு. ஒரு நல்லவனைப் பார்த்து, இப்படியெல்லாம் நக்கல் பண்ணக்கூடாதுன்னு ஒரு பொது அறிவு கூட இல்லாம போச்சே! இது தான் கலி காலமோ!!!!

பீருக்கு பேர் போன ஊரு ஆஸ்திரேலியான்னு சொல்லுவாங்க. ஆனா அதுக்காக அலுவலகத்திலேயே குடிக்கிற அளவுக்கான்னு நினைக்கத் தோணுது.

Saturday, December 1, 2012

காதல் கீதம் - 6

       பகுதி - 5
காரைக்குடி வந்தவுடன், ஜானகியும் அடைக்கப்பனை ஒரு பார்வை பார்த்து விட்டு பின் தஞ்சாவூர் செல்லும் பஸ்ஸில் ஏறப் போனாள். அவள் பின்னாடியே சென்ற அடைக்கப்பன், ஜானகியை பார்த்து,

ஜானகி, அடுத்த பஸ்ல போறீங்களா என்றான்.

ஜானகியும், அடைக்கப்பனை கேள்வியோடு பார்த்தாள்.

அடைக்கப்பனோ, உங்க கூட கொஞ்சம் பேசனும் என்றான்.

“என்னிடம், பேசுவதற்கு என்ன இருக்கிறது” என்றாள் ஜானகி.

“உங்க கூட தனியா பேசனும், அப்படியே அந்த ஹோட்டல்ல காபி குடிச்சுக்கிட்டே பேசலாமா” என்றான்.

எனக்கு காபி குடிக்கிற பழக்கம் இல்லைங்க என்றாள்.

“ஒரு பேச்சுக்கு காபின்னு சொன்னேங்க. சரி, ஜூஸ் குடிச்சுக்கிட்டே  பேசலாம்” என்று கூறி நடந்தான்.

ஜானகியும் அவன் பின் தொடர்ந்தாள்.

அந்த ஹோட்டலில் கூட்டம் அவ்வளவாக இல்லாமல் இருந்தது. இருவரும் கடைசியில் இருந்த இருக்கைகளில் எதிர் எதிரே அமர்ந்தனர்.

“ஜானகி எனக்கு சுத்தி வளைச்சு பேசத் தெரியாது. நான் உங்களை கல்யாணம் பண்ணிக் விரும்புகிறேன்” என்றான் அடைக்கப்பன்.

ஜானகி அடைக்கப்பனையே கொஞ்ச நேரம் சலனமின்றி பார்த்துக் கொண்டிருந்தாள். அடைக்கப்பனோ அவள் என்ன பதில் சொல்லப் போகிறாளோ என்பதை விட, அவள் மனதில் என்ன ஓடுகிறது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேர மௌனத்திற்கு பிறகு,

ஜானகி, “இதை சொல்றதுக்கா உங்களுக்கு இவ்வளவு நாள் ஆச்சு” என்றாள்.

“என்ன சொல்றீங்க” என்று முதலில் புரியாமல் கேட்டு, பிறகு அவள் சொன்னதோட அர்த்தம் புரிந்து ரொம்பவும் சந்தோஷம் அடைந்தான் அடைக்கப்பன். “அப்ப, உங்களுக்கும் என்னைய பிடிச்சிருக்குன்னு சொல்றீங்களா” என்றான்.

“அதான் சொல்லிட்டேனே, இன்னும் வேற சொல்லனுமா. எப்ப உங்களை முதல் முதல்ல பார்த்தேனோ, அப்பவே உங்களை எனக்கு பிடிச்சுப் போச்சு. ஆமா, அந்த கல்யாணத்துல என்னைய விட எவ்வளவோ பேர் அழகா இருந்தாங்களே, ஏன் என்னைய மட்டும் அப்படி பார்த்துக்கிட்டு இருந்தீங்க”? என்று கேட்டாள்.  

“இங்க பாருங்க ஜானகி, உண்மையான காதல் அழகை பார்த்து வர்றது இல்லை. ஒரு பெண்ணை பார்த்தவுடன், இந்த பெண் நமக்கு மனைவியா வந்தா நல்லா இருக்குமேன்னு மனசு சொல்லும். நானும் எத்தனையோ பொண்ணுங்களோட பேசியிருக்கேன், பழகியிருக்கேன். ஆனா உங்களை  முதல் முதல்ல பார்த்த அந்த நொடியிலேயே, கல்யாணம் பண்ணிக்கிட்டா, உங்களை தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு என் மனசு சொன்னுச்சு”.   

“என் விழிகளுடன் உன் விழிகள்
கலந்த அந்த நொடியில்,
என் இதயத்தில்
மொட்டாக இருந்த காதல் பூ
மலர்ந்தது”.

என்று ஒரு கவிதையை வேற சொன்னான்

“அட! அருமையா கவிதை எல்லாம் சொல்றீங்க. உங்களுக்கு கவிதை எல்லாம் எழுத வருமா? எனக்கு கவிதைன்னா ரொம்ப பிடிக்கும்” என்றாள் ஜானகி.

அதற்கு அடைக்கப்பன், “நீங்க வேற ஜானகி, உங்களை பார்த்த பிறகு தான், எனக்குள்ள கவிதையே ஊற்றெடுக்க ஆரம்பிச்சது. அதுக்கு முன்னாடி எல்லாம் கவிதையை படிக்க மட்டும் தான் தெரியும்” என்றான்.

“அருமையா கவிதை எல்லாம் சொல்ல தெரியுது, ஆனா காதலை சொல்றதுக்கு மட்டும் சீக்கிரமா சொல்லத் தெரியலை” என்றாள் ஜானகி.

“நான் தான் சீக்கிரமா சொல்லலை. நீங்களாவது முதல்ல சொல்லியிருக்கலாம் இல்ல” என்றான் அடைக்கப்பன்.

“அது எப்படி நான் முதல்ல சொல்றது. என்ன தான் பொண்ணுங்க முன்னேறியிருந்தாலும், சில விஷயங்கள்ல ஆம்பிளைங்க தான் முதல்ல இருக்கனும்னு நினைப்பாங்க. அதனாலதான் என்னால உங்க கிட்ட என் காதலை சொல்ல முடியலை. இப்ப நீங்க என் பின்னாடியே வந்தபோதே நினைச்சேன், காதலை தான் சொல்லப் போறீங்கன்னு. ஆனால் காதலிக்கிறேன்னு சொல்லாம, கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னீங்க பாருங்க, அதுலேயே எனக்கு உங்களை ரொம்பவும் பிடிச்சு போச்சு” என்றாள் ஜானகி.

“நீங்க இன்னமும் படிச்சுக்கிட்டு இருக்கீங்க. இதுல, நான் காதலிக்கிறேன்னு சொல்லி, உங்க மனசை கலைக்க கூடாது. இப்ப உங்களுக்கு படிப்பு தான் ரொம்ப முக்கியம். அதனால தான் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன். உங்க படிப்பு முடியுற வரைக்கும் காத்திருப்போம்” என்றான் அடைக்கப்பன்.

“அப்ப, நம்ம பார்க்க, பேசிக்க முடியாதா” என்றாள் ஜானகி.

“அப்படியில்லை, நாம பார்க்கலாம், பேசலாம். ஆனா அடிக்கடி பேசிக்க வேண்டாம். நீங்க என்கிட்ட பேசனும்னு நினைச்சீங்கன்னா, இந்தாங்க இது எங்க கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட்டோட நம்பர். இதுல கூப்பிட்டு, பூங்குழலிக்கிட்ட பேசி, பக்கத்துல யாரும் இல்லன்னா என்கிட்ட கொடுக்க சொல்லுங்க” என்றான்.

“ஓ! உங்க கூட வந்திருக்காங்களே அவுங்க பேரு தான் பூங்குழலியா!!. அவுங்களுக்கு நீங்க என்னைய காதலிக்கிறது தெரியுமா” என்றாள் ஜானகி.

“அவளுக்கு நல்லா தெரியும். இன்னமும் சொல்லப் போனா, நான் இன்னைக்கு உங்க கூட பேசிக்கிட்டு இருக்கிறதுக்கு அவ தான் காரணம். தைரியமா, நீங்க அவ கிட்ட பேசலாம். அவ யாருக்கிட்டேயும் சொல்லமாட்டாள்” என்றான் அடைக்கப்பன்.

“நான் பேசனும்னு நினைச்சா, இந்த மாதிரி பண்ணலாம். ஆனா, நீங்க பேசனும்னு நினைச்சா, எப்படி பேசுவீங்க” என்று கேட்டாள்.   

“அதற்கும் ஒரு வழி வச்சிருக்கேன். நீங்க பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் மூணாவது வருஷம் தானே படிக்கிறீங்க. உங்களுக்கு “Digital Principles” எடுக்குற மைதிலியும் நானும் கிளாஸ்மேட்ஸ் தான். அதனால வெள்ளிக்கிழமையே அவளுக்கு போன் பண்ணி சொல்லிடுறேன். நீங்க ஞாயிற்றுக்கிழமை ஹாஸ்டல்லேருந்து அவ வீட்டுக்கு வந்துடுங்க. நாம பேசிக்கலாம்” என்றான்.

“அட! அட! என்ன ஒரு முன்னேற்பாடு, பயங்கிரமான ஆளா இருக்கீங்க. ஆமா, இன்னும் என்ன, என்னைய நீங்க, வாங்கன்னுக்கிட்டு. சும்மா நீ, வான்னே சொல்லுங்க” என்றாள். 

“சரிடி ஜானகி, இனிமே உன்னைய நீ, வான்னே கூப்பிடுறேன்” என்றான் அடைக்கப்பன்.

“ஏய், இதானே வேணாங்குறது, இந்த ஆம்பிளைங்களே இப்படித்தான், இடத்தை கொடுத்தா மடத்தை பிடிப்பீங்க. இந்த “டி” போடுற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க” பொய் கோபம் காட்டினாள்.  

“அப்பா!, என்னமா கோபம் வருது. சும்மா விளையாடினேன். தப்பா எடுத்துக்காதே” என்றான் அடைக்கப்பன்.

“சரிப்பா, ரொம்ப நேரம் ஆயிடுச்சு. நான் கிளம்புறேன்” என்று கிளம்பினாள் ஜானகி.

“சரி ஜானகி, போயிட்டு வா, ஒழுங்கா படி, நான் அடிக்கடி எல்லாம் உன்னோட பேச மாட்டேன். முதல்ல மைதிலி கிட்ட பேசி . அப்புறமா உன்னோட பேசுறேன். 3 மாசத்துல உனக்கு ஸ்டடி ஹாலிடேஸ் வரும் இல்ல, அப்ப நாம சந்திக்கலாம்” என்றான் அடைக்கப்பன்.

ஜானகியை தஞ்சாவூருக்கு பஸ் ஏற்றிவிட்டு, அடைக்கப்பனும் படமாத்துருக்கு சந்தோஷமாக திரும்பிச் சென்றான்.

பூங்குழலி அவனிடம், “என்ன அடைக்கப்பா, என்ன ஆச்சு, “காயா, பழமா” என்றாள்.

அதற்கு அடைக்கப்பன், “எல்லாம் பழம் தான். அவ எப்போதாவது போன் பண்ணுவா, பக்கத்துல யாரும் இல்லன்னா, என்னிடம் கொடு” என்றான்.

“அப்படி போடு அரிவாளை, எப்படியோ அவ படிப்பை முடிச்சவுடனே கல்யாணத்தை பண்ணிக்கோ” என்றாள் பூங்குழலி.

“சரிம்மா, நீ சொன்னபடியே நடக்குறேன். இந்த விஷயத்தை யாருக்கிட்டேயும் சொல்லாதே, நான் போயி சுரேஷுக்கு  போன் பண்ணி சொல்லிட்டு வரேன்” என்று சொல்லி கிளம்பி போனான்.

மறு நாள் பூங்குழலி, “அடைக்கப்பா உனக்கு போன்” என்றாள்.

“யாரு, ஜானகியா” என்றான் அடைக்கப்பன்.

“அடாடா, காதலிக்க ஆரம்பிச்சவுடனே, பெத்தவங்களை மறந்துடுவீங்களே!. போன்ல ஜானகியோட மாமியார்” என்றாள்.

உடனே, “அடைக்கப்பன் போனை வாங்கி, சொல்லுங்கம்மா” என்றான்.

“அடைக்கப்பா எப்படி இருக்கே? வேளா வேளைக்கு ஒழுங்கா சாப்பிடுறியா”?

“நல்லா இருக்கேன்மா, ஆமா என்ன திடீர்னு போன் பண்றீங்க”?

“ஆமா நேத்து நீ, காரைக்குடிக்கு போயிருந்தியா”?

(மனதுக்குள்) நம்ம போனது எப்படி அம்மாவுக்கு தெரிஞ்சிருக்கும் என்று எண்ணிக் கொண்டு, “ஆமாம்மா ஒரு ஃப்ரெண்ட்டை பார்க்க போயிருந்தேன்”.

“நீ காரைக்குடி பஸ் ஸ்டண்ட்ல நின்றுக்கொண்டிருந்ததை, நம்ம பங்காளி வீட்டு மணி ஐயா பார்த்திருக்காங்க. அவுங்க தான் போன் பண்ணி சொன்னாங்க. நம்ம வீட்டுக்கு போயிட்டு வந்தியா”?.

“இல்லம்மா, எனக்கு நேரம் இல்ல. அடுத்த தடவை போனா, கண்டிப்பா வீட்டுக்கு போயிட்டு வரேன். சரிம்மா, அப்பாவை கேட்டதா சொல்லுங்க, நான் போனை வச்சுடுறேன்”.

அடைக்கப்பன் போனை வைத்தவுடன், “என்ன அதுக்குள்ள வில்லன் வந்தாச்சா” என்றாள் பூங்குழலி.

“ஆமாம் பூங்குழலி, நல்ல காலம், நான் ஜானகி கூட இருந்ததை அவரு பார்க்கலை. இந்த வயசானவங்களுக்கு இதுவே பொழப்பா போச்சு. யாரு வந்தா என்ன, போனா என்ன. நான் வந்ததை மெனக்கட்டு போன் பண்ணி சொல்லியிருக்காரு. இனிமே காரைக்குடிக்கு போகும்போது கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கனும்” என்றான் அடைக்கப்பன்.

மூன்று மாதங்கள் சென்றது. இந்த மூன்று மாதத்தில், அடைக்கப்பனும், ஜானகியும் மாறி மாறி போன் பேசி தங்கள் காதலை வளர்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு நாள் மதியம், அடைக்கப்பன் வேலை செய்துக் கொண்டிருக்கும்போது, ஜானகியின் தந்தை நாராயணனிடமிருந்து போன் வந்தது.

“அடைக்கப்பன், இன்னைக்கு வேலை முடிச்சு ரூமுக்கு போகும்போது, கொஞ்சம் வீட்டுக்கு வந்துட்டு போக முடியுமா. உங்க கூட கொஞ்சம் பேசனும்”.

“சரிங்க நான் வீட்டுக்கு வரேன்” என்று சொல்லி போனை கட் பண்ணினான். (மனதுக்குள்) நாம ஜானகியோட பழகுறது தெரிஞ்சிருக்குமா? நேத்து தானே ஜானகி ஸ்டடி ஹாலிடேசுக்கு வீட்டுக்கு வந்திருக்கா. சரி, தெரிஞ்சிருந்தா எப்படியாவது சமாளிப்போம் என்று எண்ணிக்கொண்டான்.

[தொடரும்]                                                          பகுதி - 7                                                 

Friday, November 23, 2012

காதல் கீதம் - 5

பகுதி - 4

அடைக்கப்பன் ஜானகியின் வீட்டில் நன்றாக சாப்பிட்டு விட்டு அவளின் தந்தையிடமும், தாயிடமும் சொல்லிக் கொண்டு கிளம்ப எத்தனித்தான். ஆனால் அவன் மனதோ, ஜானகியை பார்க்காமல் வர மாட்டேன் என்று சண்டித்தனம் பண்ணியது. எப்படி ஜானகியை பார்த்து விட்டு கிளம்புவது என்று அவன் மூளையும் சாப்பிட்ட சாப்பாட்டுக்கு சுறு சுறுப்பாக யோசிக்க் ஆரம்பித்தது. அப்பொழுது தான் அவனுக்கு, ஜானகியின் அறைக்குள் அவள் அப்பத்தாள் சென்றது நியாபகம் வந்தது. உடனே அவள் தந்தையிடம் அப்பத்தாவிடம் சொல்லிக் கொண்டு வருகிறேன் என்று கூறி, அந்த அறைக்குள் சென்று, அப்பத்தாவிடம், ஜானகியிடமும் போய் வருகிறேன் என்று கூறினான். ஜானகியும் சரிங்க என்று கூறி தலை அசைத்தாள். ரொம்ப நாள் கழித்து, ஜானகியை பார்த்த உடன், அடைக்கப்பனுக்குள் ஒரு புதிய உற்சாகம் ஊற்றெடுத்தது.

ஒரு நாள், அடைக்கப்பன் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஜானகியின் அண்ணன் சிதம்பரம் அங்கு வந்தான்.

சிதம்பரம்,”என்ன அடைக்கப்பன் எப்ப படமாத்தூருக்கு வந்தீங்க” என்று கேட்டான்.

அடைக்கப்பனும், “நான் வந்து இரண்டு வாரம் ஆச்சு, நீங்க தான் ஏதோ ட்ரைனிங்குக்கு போயிருந்தீங்களாமே” என்றான்.

“ஆமாம் அடைக்கப்பன், ட்ரைனிங் முடிச்சு நேற்று தான் வந்தேன். அதான் உங்களை பார்த்துட்டு வரலாம்னு வந்தேன். எப்படி இருக்கு எங்க ஊரு” என்று கேட்டான் சிதம்பரம்.

(மனதுக்குள் “உன்னோட தங்கச்சி மட்டும் இல்லன்னா, எவன் இந்த காட்டுக்குள்ள வருவான் என்று நினைத்துக் கொண்டு). “ரொம்ப நல்லா இருக்கு அதுவும் ஃபேக்டரிகுள்ள இருக்கிற காலனிக்கு போயிட்டா, அது ஒரு தனி உலகமா இருக்கு. எனக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவமா இருக்குது” என்று கூறினான் அடைக்கப்பன்.

“மெட்ராஸ்ல இருக்கிறவங்களுக்கு இந்த ஊர் பிடிக்கவே பிடிக்காது. பரவாயில்லையே, உங்களுக்கு பிடிச்சிருக்கு ஆச்சிரியமா இருக்கு. சரி, அடிக்கடி வீட்டுக்கு வாங்க” என்று கூறிவிட்டு சென்றான் சிதம்பரம்.

சிதம்பரம் சென்ற பிறகு, “அடைக்கப்பா, உனக்கு போன், மெட்ராஸ் ஆபிஸ்லேருந்து சுரேஷ் பேசுறான்” என்றாள் பூங்குழலி.

“சொல்லு சுரேஷ் எப்படி இருக்கே?”

“நான் நல்லா இருக்கேன். ஆமா உன் ஆளை பார்த்து பேசுனியா?”

“அவளை அவள் வீட்டில் போய் பார்த்துட்டு வந்தேன். ஆனால் பேசலை”.

“இப்படியே, அவ கிட்ட உன் காதலை சொல்லாம இருந்த, அவளை நீ மறந்துட வேண்டியது தான். அவளுக்கு காலேஜ் திறக்கிறதுக்கு முன்னாடி சொல்லிடு. அப்புறம் அவள் காலேஜ் போயிட்டா, உன்னால சொல்ல முடியாது”.

“நீ வேற பயமுறுத்தாதே, எப்படியாவது அவள் காலேஜ் போறதுக்கு முன்னாடி சொல்லிடுறேன்”.

“அவ கிட்ட  உன் காதலை சொன்ன உடனே, நீ எனக்கு சொல்லணும் என்ன. சரி நான் வச்சுடுறேன்”.

அடைக்கப்பன் போனை வைக்கும் போது, பூங்குழலி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

பூங்குழலி, “அடைக்கப்பா இங்கே என்ன நடக்குது. யாரு காலேஜ் போறதுக்கு முன்னாடி, என்ன சொல்லப் போற”, என்கிட்ட சொல்லலாம்னா சொல்லு என்றாள்.

அடைக்கப்பனோ, “நீ யாரிடமும் சொல்லாதே என்று சொல்லி, தான் ஜானகியை காதலிக்கும் விஷயத்தை சொன்னான்”.

பூங்குழலியும், “அதானே பார்த்தேன், “சோழியன் குடுமி சும்மா ஆடுமா” சேகர் வராம நீ வரும்போதே நினைச்சேன், இப்படி ஏதாவது இருக்கும்னு. அதனலாதான், இப்ப நீ பொண்ணுங்க கிட்ட எல்லாம் சரியா பேசுறது இல்லையா. எப்படியோ நல்லா இருந்தா சரி. ஆமா, எப்ப உன் ஆளை காட்டப் போறே”  என்றாள்.

அடைக்கப்பனும், “நேரம் வரும்போது காட்டுறேன்” என்றான்.

ஒரு நாள் அடைக்கப்பன் இரவு 2 மணி வரை வேலை பார்த்து விட்டு, தன் அறைக்கு சென்று படுத்தான். அவன் தங்கி இருக்கும் அந்த காலனியானது ஃபேக்டரிக்கு பின் புறத்தில் கட்டப்பட்டிருந்தது. அங்கு தான் தொழிலாளிகளுக்கும்,அதிகாரிகளுக்கும் வீடு இருக்கிறது. திருமணமாகாத இளைஞர்கள் dormitoryயில் தங்கிக் கொள்வார்கள். அடைக்கப்பன் மாதிரி வெளியூரிலிருந்து வருபவர்கள் விருந்தினர் மாளிகையில் தங்கிக் கொள்வார்கள். அடைக்கப்பனும், பூங்குழலியும் விருந்தினர் மாளிகையில் தனித் தனி அறையில் தங்கி இருந்தனர். ஜானகியின் வீடு, அந்த விருந்தினர் மாளிகைக்கு பின்னாடி தான் உள்ளது. ஜானகியின் வீட்டில் இருப்பவர்கள், வெளியே போகும்போது, விருந்தினர் மாளிகையை கடந்து தான் செல்ல வேண்டும். இரவு 2 மணிக்கு வந்து படுத்ததால், காலை லேட்டாக 10 மணிக்கு எழுந்து, விருந்தினர் மாளிகையின் வாசலில் நின்றுக் கொண்டு பல் விளக்கிக் கொண்டிருந்தான். அந்த நேரம் பார்த்து தான், ஜானகியும் அவள் தாயும் அந்த வழியே வந்தார்கள்.

ஜானகியின் தாயார் அவனைப் பார்த்து, “என்ன தம்பி உடம்புக்கு முடியலையா, வேலைக்கு போகாம இருக்கீங்க” என்று கேட்டார்.

அடைக்கப்பனோ, “அது எல்லாம் ஒன்றும் இல்லை, இதோ இப்பக் கிளம்பி விடுவேன்” என்று கூறினான்.

அந்த அம்மாளும், “சரி தம்பி” என்று கூறிவிட்டு அவனைத் தாண்டி நடக்க ஆரம்பித்தார்கள்.

ஜானகியும், 10 மணிக்கு அவன் பல் விளக்கும் கோலத்தைப் பார்த்து சிரித்து விட்டு சென்றாள்.

அடைக்கப்பனுக்கோ, ஜானகியைப் பார்த்தது ஒரு பக்கம் சந்தோஷமாகவும் இருந்தது. ஆனாலும் 10மணிக்கு, அவர்கள் வரும்போது பல் விளக்கிக் கொண்டிருந்தது, சற்று சங்கடமாகவும் இருந்தது. ஏன் இவ்வளவு லேட்டாக எழுந்தோம் என்று சொல்லாமல் போய் விட்டோமே என்று தன்னையே நொந்துக் கொண்டான். அவனுக்கு ஜானகி தன்னைப் பார்த்து ஏளனமாக சிரித்தாளா, இல்லை தன்னைப் பார்த்த சந்தோசத்தில் சிரித்தாளா என்று  புரியவில்லை. சரி, எப்படி நினைச்சிருந்தாலும் பரவாயில்லை. நம்மளைப் பார்த்து சிரித்து விட்டாள், அது போதும் என்று எண்ணிக் கொண்டு, அவசர, அவசரமா ஒரு காக்காக் குளியலைப் போட்டு, மெஸ்ல போய் அரக்க பறக்க சாப்பிட்டு ஆபிஸ் போனான். ஆனால், அவனால் ஒழுங்காக வேலை பார்க்க முடியலை. ஜானகியின் நினைப்பாகவே இருந்தான். அதனால் வேலையை தப்பு தப்பாக செய்துக் கொண்டிருந்தான். கஸ்டமர் ரெகொர்டை தப்பாக அப்டேட் செய்து விட்டான். எதேச்சியாக அதனைப் பார்த்த, கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட் மேனேஜர்,

“என்ன அடைக்கப்பா, என்ன இப்படி தப்பா அப்டேட் பண்ணிட்டீங்க” என்றார்.

உடனே சுதாரித்த அடைக்கப்பன், “சாரி ஸார், நேற்று ராத்திரி வேலை முடிச்சு போறதுக்கு 2 மணியாச்சு, காலைல இருந்து ஒரே தலைவலியாவும், மயக்கமாகவும் இருக்கு” என்றான்.

அந்த மேனேஜர், “முதல்ல போய் நல்லா ரெஸ்ட் எடுத்துவிட்டு நாளைக்கு வாங்க” என்றார்.

அடைக்கப்பனும் இது தான் சாக்கு என்று , தன் அறைக்கு திரும்பி, கட்டிலில் படுத்துக் கொண்டு, அன்று காலையில் நடந்த நிகழ்ச்சியை அசை போட ஆரம்பித்தான். மீண்டும் ஜானகியை நினைக்க ஆரம்பித்தவுடன், அவன் மனதுக்குள் ஒரு ஹைக்கூ கவிதை உதித்தது.

     “உன் வாய் சிரித்ததில் உன் பற்கள்,

     என் கண்களை கூசச் செய்தது.

     உன் முகம் மலர்ந்ததில் உன் கண்கள்,

     என் இதயத்தை நொறுங்கச் செய்தது”.

 சில நாட்கள் சென்றது, அடைக்கப்பனால், ஜானகியை பார்க்கத்தான் முடிந்ததே தவிர, அவளுடன் பேச முடியவில்லை. ஜானகிக்கு கல்லூரி திறக்கின்ற நாளும் நெருங்க ஆரம்பித்தது. ஒரு முறை சிவகங்கைக்கு அடைக்கப்பனும், பூங்குழலியும் மற்ற சில நண்பர்களும் படம் பார்க்க சென்ற போது, ஜானகியும் அவள் குடும்பமும் படம் பார்க்க வந்திருந்தார்கள். அப்போது பூங்குழலிக்கு ஜானகியை காட்டினான். பூங்குழலியும், “நீ நல்ல பெண்ணைத்தான் தேர்வு செய்திருக்கிறாய், சீக்கிரம் உன்னுடைய காதலை சொல்லு, உனக்கு கூச்சமா இருந்தால்  நான் தூது செல்லட்டுமா” என்று கேட்டாள்.

அடைக்கப்பனும், “எதற்கு வேண்டுமானாலும் தூது இருக்கலாம், ஆனால் காதலுக்கு மட்டும் தூது இருக்க கூடாது, நான் எப்படியாவது அவளிடம் என் காதலை சொல்லி விடுகிறேன்” என்று கூறினான்.   

ஒரு நாள், அடைக்கப்பன் மும்முரமாக ப்ரோக்ராம் எழுதிக் கொண்டிருக்கும் போது, வெளியே போயிருந்த பூங்குழலி, வேக வேகமாக அடைக்கப்பனிடம் சென்று,

“அடைக்கப்பா, சீக்கிரம் வெளியே வா” என்றாள்.

“நான் இந்த ப்ரோக்ராம்ல, முக்கியமான கால்குலேஷன் எழுதிக்கிட்டு இருக்கேன், இப்ப என்னால வர முடியாது” என்றான்.

“ஐயோ அடைக்கப்பா, தலை போற காரியம், சீக்கிரம் வா” என்று விடாப்பிடியாக அவனை வெளியே வரவைத்தாள்.

அடைக்கப்பனும், பூங்குழலியோட ஃபேக்டரிக்கு வெளியே வந்து பார்த்த போது, ஜானகியும், அவள் தந்தையும் பக்கத்திலிருக்கும் பஸ் ஸ்டாப்பில் நின்றுக் கொண்டிருந்தார்கள். ஜானகியை காலேஜுக்கு வழி அனுப்புவதற்காக அவள் தந்தை நின்றுக் கொண்டிருந்தார்.

பூங்குழலியும், “அடைக்கப்பா, அவள் காலேஜுக்காக தஞ்சாவூர் போகப் போறாள். இது தான் சரியான சந்தர்பம், நீயும் அவளோட போய் உன் காதலை சொல்லிவிடு. சிவகங்கைல வேண்டாம். வேற எங்கையாவது பஸ் மாறுவதற்காக நிக்கும் போது பேசு” என்று கூறினாள்.

அடைக்கப்பனுக்கும், பூங்குழலி சொல்வதில் அர்த்தம் இருப்பதாக தோன்றியது. இப்ப விட்டா, அப்புறம் மறுபடியும் அவள் விடுமுறைக்கு வரும் போது தான் காதலை சொல்ல முடியும். அதனால இப்பவே சொல்லிடலாம் என்று எண்ணினான். அதற்கு ஏற்றார் போல, சேல்ஸ் டிபார்ட்மெண்டில் வேலை பார்க்கும் அவன் நண்பன் ஆபிஸ் வேலையாக சிவகங்கை போவதற்கு பைக்குடன் ஃபேக்டரியிலிருந்து வெளியே வந்தான்.

“பூங்குழலி, நீ மேனேஜர்கிட்ட அவசரமா நான் காரைக்குடி வரைக்கும் போறேன் மதியம் வந்து விடுகிறேன் என்று சொல்லிவிடு” என்று சொல்லி தன் நண்பனின் பைக்கில் ஏறிக் கொண்டு சிவகங்கை பஸ் ஸ்டாண்டுக்கு சென்றான்.

அடைக்கப்பன், ஜானகிக்காக சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் காத்துக் கொண்டிருந்தான்.

ஜானகியும் படமாத்தூரிலிருந்து சிவகங்கை வந்து சேர்ந்தவுடன், இவனைப் பார்த்து விட்டாள். ஆனால் பார்க்காத மாதிரி, காரைக்குடிக்கு போகும் பஸ்ஸில் ஏறினாள். அடைக்கப்பனும் அந்த பஸ்ஸிலேயே ஏறி, ஜானகி உட்கார்ந்திருக்கும் சீட்டிற்கு இடதுபுறமாக இருக்கும் சீட்டில் அமர்ந்துக் கொண்டான். பஸ்ஸும் காரைக்குடி வந்து சேர்ந்தது. ஜானகியும், அடைக்கப்பனை ஒரு பார்வை பார்த்து விட்டு பின் இறங்கி, தஞ்சாவூர் செல்லும் பஸ்ஸில் ஏறப் போனாள். அவள் பின்னாடியே சென்றான் அடைக்கப்பன்.    
[தொடரும்]                                                            பகுதி - 6