என்னடாது!
சிட்னில போயி ஆட்டோ எல்லாம் இருக்குதான்னு யோசிக்காதீங்க. டாக்ஸி ஸ்டாண்டை தான் அப்படி
சொன்னேன். அந்த டாக்ஸி ஸ்டாண்ட், நான் இருக்கிற இங்கில்பர்ன் ரயில்வே ஸ்டேஷனுக்கு பக்கத்துல இருக்குது. நம்ம
பஞ்சாபி அண்ணாத்தைங்க ரெண்டு பேரு தான் அந்த டாக்ஸி ஸ்டாண்டையே, குத்தகை எடுத்திருக்காங்க. அவுங்க ரெண்டு பேரும் ஒரு பத்து, பன்னிரெண்டு வண்டிகளை வச்சு, நம்ம இந்தியர்களுக்கு டிரைவர்
வேலையை கொடுத்திருக்காங்க. நான் தினமும் காலைல 7.30 மணிக்கு என்னோட காரை கொண்டுப்போய்
ஸ்டேஷனுக்கு கொஞ்ச துரத்துல இருக்கிற பார்க்கிங்ல நிறுத்திட்டு ஸ்டேஷனுக்கு நடந்து
போகும்போது, இந்த டாக்ஸி ஸ்டாண்ட் கண்ணுல படும். உடனே எனக்கு
நம்மூர்ல இருக்கிற ஆட்டோ ஸ்டாண்ட் தான் நியாபகத்துக்கு வரும். அங்க எல்லோரும் ஆட்டோவை
ஓரங்கட்டிட்டு, அரட்டை அடிச்சுக்கிட்டு இருப்பாங்க. யாராவது போயி
ஆட்டோ வருமான்னு கேட்டா, ரெண்டாவதோ, மூணாவதோ
உள்ள ஆட்டோல போயி ஏறிக்க சொல்லுவாங்க. அதே மாதிரி, இங்கேயும்
எல்லோரும் ஒண்ணா நின்னு அரட்டை அடிச்சுக்கிட்டு இருப்பாங்க. யாராவது டாக்ஸி வருமான்னு
கேட்டா, அதே மாதிரி ஏதாவது ஒரு கார்ல ஏறிக்க சொல்லுவாங்க. என்ன!
இங்க பக்கத்துல டீக் கடை எல்லாம் இல்ல, அது தான் வித்தியாசம்.
நான் தினமும் இந்த டாக்ஸி ஸ்டாண்ட்ல இருக்கிறவங்களை பார்க்குறதுனால, ஒண்ணு, ரெண்டு
பேர் என்னைய பார்த்து, “கைசா ஹை”ன்னு கேப்பாங்க. நானும் எனக்கு
தெரிஞ்ச ஒண்ணு ரெண்டு ஹிந்தி வார்த்தைகளை நியாபகம் வச்சு, “அச்சா
ஹை”ன்னு சொல்லுவேன். ஒரு நாள் என்னோட வண்டியை காலைல சர்வீஸுக்கு விட்டுட்டு, சியாந்திரமா ஆபிஸ் முடிச்சு வரும்போது வண்டியை எடுத்துக்கலாம்னு ஆபிஸ் போனேன்.
ஆபிஸ்ல இருக்கிற கடன்காரனுங்க(!) அன்னைக்குன்னு பார்த்து என்னைய ராத்திரி பத்து மணி
வரைக்கும் ஆபிஸ்ல உக்கார வச்சுட்டாணுங்க. அப்புறம் இங்கில்பர்ன் ரயில்வே ஸ்டேஷன் வந்தபோது
மணி 11.30 ஆச்சு. சரி, இந்த நேரத்துல நம்ம
வீட்டுக்கு நடந்து போக வேண்டாம்னு (நடந்தா ஒரு 15-20 நிமிஷம் தான் ஆகும்) நினைச்சு, அந்த டாக்ஸி ஸ்டாண்டுக்கு வந்தேன். அங்க என்னைய பார்த்து “கைசா ஹை”ன்னு கேக்குறவர்
தான் இருந்தாரு. நான் அவரிடம் வீட்டு முகவரியை சொல்லி, வண்டிக்குள்ள
ஏறி உட்கார்ந்தேன். அவர் வண்டியை எடுத்தவுடனே, என்கிட்ட சரளமா
ஹிந்தில பேச ஆரம்பிச்சுட்டாரு. எனக்கோ தர்ம சங்கடமா போச்சு. சரி, வீடு பக்கத்துல தானே இருக்கு, எப்படியாவது சமாளிச்சுக்கலாம்னு
நானும் எனக்கு தெரிஞ்ச “அச்சா ஹை” “டீக்கே” அப்படின்னு மாத்தி
மாத்தி சொல்லிக்கிட்டு வந்தேன். ஒரு நேரத்துல டிரைவர் அண்ணாத்தைக்கு தெரிஞ்சுப் போச்சு, எனக்கு ஹிந்தி தெரியாதுன்னு. அப்புறம் அவர் ஹிந்தில கேட்ட கடைசி கேள்வியை, ஆங்கிலத்துல கேட்டாரு. அவர் கேட்ட கேள்வி, இது தான், அடிக்கடி உங்களுக்கு வேலைல இந்த மாதிரி லேட்டாகுமா,
இல்ல எப்பவாது தானான்னு கேட்டாரு. அவர் இந்த கேள்வியை ஹிந்தியில கேட்டபோது, நான் ரொம்ப புத்திசாலித்தனமா “அச்சா ஹை”ன்னு சொல்லியிருக்கேன்.
அதுல தான் அவர் கடுப்பாயிட்டு, ஆங்கிலத்துல கேட்டாரு. அட! ராமா!
ஆரம்பத்துலேயே, இப்படி புரியிர மாதிரி ஆங்கிலத்துலேயே பேசிக்கிட்டு
வந்திருந்தாருன்னா எவ்வளவு நல்லாயிருந்திருக்கும் . நமக்கு ஹிந்தி தெரியாதுங்கிறதையும்
கண்டுப்பிடிச்சிருக்க முடியாதேன்னு நினைச்சுக்கிட்டேன். அதுக்கப்புறம் வீடு வர்ற வரைக்கும்
அவர் என்கிட்ட ஒண்ணுமே பேசலை. மறு நாள்லேருந்து காலைல அவர் என்னைய டாக்ஸி ஸ்டாண்ட்ல
பார்க்கும்போது, ஆங்கிலத்துலயே “good morning” அப்படின்னு சொல்லுவாரு. (பரவாயில்லை மனுசனுக்கு கற்பூர புத்தி தான்!!)
அன்னைக்கு
நான் ஸ்டேஷன்லேருந்து டாக்ஸி எடுக்கும்போது, சரி, எப்படியும் ஒரு 5$ தான் வரும்னு
நினைச்சேன். கடைசில பார்த்தா, அந்த மீட்டர் 8.50$ரை காட்டுது. என்னாடான்னா, ராத்திரி 10மணிக்கு மேல 20%
கூட கொடுக்கணுமாம். சரி தான், நம்ம ஊர்ல இருக்கிற ஆட்டோ டிரைவருங்க, மீட்டர் போடாம நம்ம கிட்ட கொள்ளை அடிக்கிறாங்கன்னு பார்த்தா, இங்க இருக்கிற டாக்ஸி டிரைவர்களோ, மீட்டர போட்டு நம்மளை
கொள்ளை அடிக்கிறாங்களேன்னு நினைச்சுக்கிட்டேன்.