Monday, February 20, 2012

சம்பந்தம் ஏன் சொக்கன் ஆனான்

ரொம்ப பேருக்கு ஒரு சந்தேகம், நான் ஏன் சொக்கன்னு பேரை மாத்திக்கிட்டேன்னு .  இப்பத்தான் கதையெல்லாம் எழுத ஆரம்பிசிருக்கீங்க, அதுக்குள்ள புனைப் பெயரான்னு நீங்க கேக்கிறது தெரியுது. புனைப் பெயர் எல்லாம் கிடையாதுங்க. என் அப்பா வழி கொள்ளுத் தாத்தாவோட பேரு சொக்கலிங்கம். அவர் அந்த காலத்தில் தமிழுக்கும், சைவத்துக்கும் பெருந்தொண்டு புரிந்தவர். அதனாலேயே அவரை "திரு. சொக்கலிங்க ஐய்யான்னு" சைவ உலகத்துல கூப்பிட்டாங்க. தன் வாழ்நாளில் 108 நூல்களை படைத்து "சைவ சித்தாந்த வித்தகரா" வாழ்ந்தவர் .

 எனக்கு, சிட்னியில் கிடைக்கப் பெற்ற நல்ல தமிழ் நண்பர்கள் மூலம் ஏதோ இராமர் இலங்கை செல்ல  பாலம் கட்ட உதவிய அனிலைப் போல , புலம் பெயர்ந்து வாழும் நம் தமிழ் சமுதாயத்துக்கு மிகவும் சொற்ப அளவில் பங்களிப்பை அளிக்கிறேன்னு ஒரு மனத்திருப்தி.  இந்த மனத்திருப்தியோட நாம வாழ்ந்து விடக் கூடாது, அந்த பங்களிப்பை இன்னும் அதிகம் ஆக்கனும். அதுக்கு நம்ம கொள்ளுத்தாத்தாவோட பேரை வச்சுக்கிட்டா,அந்த பங்களிப்பு இன்னும் அதிகம் ஆகும்னு நினைச்சு தான் அந்த பேரை நான் வச்சுக்கிட்டேன். ஒவ்வொரு தடவையும் அந்த பேரை படிக்கும் போதும்,  மற்ற நெருங்கிய நண்பர்கள் கூப்பிடும் போதும், தமிழ் உலகுக்கு இன்னும் நிறைய செய்யணும்னு ஒரு உத்வேகம் வருது. அந்த பேர் எனக்கு ஒரு உற்சாக மருந்தா அமைஞ்சிருக்கு .
இது தாங்க சம்பந்தம் சொக்கனாக மாறின கதை.
பின் குறிப்பு: எனக்கும் என் பேருக்கும் ஒரு பெரிய ராசிங்க. நான் பிறந்தப்ப, எனக்கு வச்ச பெயர், என் தாத்தாவின் பேரான - திருநாவுக்கரசு. 6 வயதுக்கு பிறகு, என் தந்தையின் வேண்டுகோளின் படி, என் பெரியப்பா எனக்கு சம்பந்தம்னு பேரை மாத்துனாங்க. ரொம்ப வருஷம் அந்த பேரே நிலைச்சிருந்தது. நான் UKவுக்கு போன போது , என் பெயரை அங்கு இருந்த துரை மாருங்க எல்லாம் ரொம்பவே கொலை பண்ணுனதுனால,நானேஅவுங்க சுலபமா என்னை கூப்பிடுறதுக்கு,"SAM"னு மாத்திக்கிட்டேன். இப்போ அந்த "SAM" தான் அலுவலகத்தில் எனக்கான  பேர்.  என்னோட பேரு இவ்வளவு மாற்றம் அடைஞ்சதுனால, கடைசில எனக்கு எந்த பேரு நிலைக்கப் போகுதுன்னு எனக்கே தெரியலை.

Tuesday, February 14, 2012

காதலர் தின வாழ்த்து

திருமணத்துக்கு முன் காதலிப்பவர்களுக்கும், திருமணத்துக்கு பின் தன் துணையை காதலிப்பவர்களுக்கும், காதலில் தோற்றவர்களுக்கும், காதலில் வெற்றிப் பெற்றவர்களுக்கும் என அனைவருக்கும் எனது காதலர் தின வாழ்த்துக்கள். காதல்னு சொன்னா எப்பவும் எனக்கு ஒரு நகைச்சுவை துணுக்கு தான் நியாபகத்துக்கு வரும்.

ஆசிரியர், மாணவர்களிடம் காதலுக்கும், அன்புக்கும் என்ன வித்தியாசம்னு கேட்கிறார். அதற்கு ஒரு மாணவன், சார் நீங்க உங்க பெண்ணிடம் வைத்திருப்பது அன்பு. நான் உங்க பெண்ணிடம் வைத்திருப்பது காதல்னு சொல்றான்.

சரி, என்னுடைய முதல் கவிதையை இந்த காதலர் தினத்தில் பதிக்கிறேன். (அது கவிதை என்று நீங்கள் ஒத்துக்கொள்ளும் பட்சத்தில்)

     காதல் என்றால்
     என்னவென்று தெரியாமல்
     வாழ்ந்து வந்தேன்
     என்னவளை பார்க்கும் வரை.

Tuesday, February 7, 2012

டோக்கியோவில் நண்பருக்கு ஏற்பட்ட நிலநடுக்க அனுபவம்


ஜப்பான்னு சொன்னா எல்லாருக்கும் உடனே நியாபகத்துக்கு வருவது நிலநடுக்கமும், சுனாமியும் தான். அந்த அளவுக்கு இந்த ரெண்டும் அங்க மிகப் பிரபுலம். நாங்களும் டோக்கியோவில கிட்டதட்ட 5 வருடங்கள் குப்பை கொட்டினோம்.

ஒரு நாள் இந்திய உணவகத்தில், நானும் என் விட்டு அம்மணியும் ஒரு புது தமிழ் நண்பரை சந்திச்சோம். 6 மாச IT பிராஜக்ட்டுக்காக இந்தியாவிலிருந்து அங்கு வந்திருக்காரு. பார்த்தா அவரும் நாங்க இருக்கிற suburbல தான் குடியிருக்காருன்னு தெரிஞ்சுது, பேசிக்கிட்டு இருக்கும்போது, அவர் திடீர்னு, டோக்கியோவில எல்லாம் அடிக்கடி நிலநடுக்கம் வரும், பார்த்து பத்திரமா இருந்துக்கோன்னு ஊர்ல எல்லோரும் பயமுறுத்துனாங்க. இங்க நான் வந்து 1 மாசம் ஆகுது, ஆனா ஒரு நிலநடுக்கத்தையும் காணோம். அந்த நிலநடுக்க அனுபவத்தை அனுபவிக்கனும்னு எனக்கும் ஒரே   ஆசையா இருக்கு.  (ஆசைப்படுறதுக்கு ஒரு அளவு இல்லையா. என்னவெல்லாம் ஆசைப்படனும்னு ரூம் போட்டு யோசிப்பாங்க போல) ஆனா அந்த நிலநடுக்கம் எப்ப தான் வருமோன்னு ஆதங்கப்பட்டாரு. ஏங்க, நாங்க இப்பத்தான் கொஞ்ச நாளா, அந்த பயம் இல்லாம சந்தோஷமா இருக்கோம். உங்களுக்கு ஏங்க இந்த விபரீத ஆசையெல்லாம்னு கேட்டேன். அதற்கு அவர், நிலநடுக்கத்தை அனுபவிச்சாதாங்க, ஊர்ல போயி அது எப்படி இருந்துச்சுன்னு அனுபவப்பூர்வமா சொல்ல முடியும்ன்னாரு.

அடங்கொக்காமொக்கா!!! நீ ஊர்ல போயி பீலா உடுறதுக்கு இங்க நிலநடுக்கம் வரனுமா, எல்லாம் நேரம் தான்னு மனசுல நினைச்சுக்கிட்டு, உங்க ஆசையை கண்டிப்பா கடவுள் நிறைவேற்றி வைப்பாருப்பான்னு சொல்லி, நாங்க வீட்டுக்கு போனோம்.  
அவரை சந்திச்சு இரண்டு வாரம் கழிச்சு, ஒரு நாள் நாங்க ஷாப்பிங் மால்ல இருக்கும் போது, நிலநடுக்கம் ஏற்பட்டுச்சு. உடனே அங்கிருந்த பெருசுங்க, சிறுசுங்க எல்லோரும் மேஜைக்கு அடியில போயி மறைஞ்சுக்கிட்டாங்க. நாங்களும் எங்களுக்கு ஒண்ணும் ஆக கூடாதுன்னு ஜாதி, மத வித்தியாசம் இல்லாம எல்லா தெய்வத்தையும் வேண்டிக்கிட்டு ஒரு மேஜைக்கு அடியில போயி மறைஞ்சுக்கிட்டோம். ஒரு நிமிஷத்துக்குள்ள அந்த நிலநடுக்கம் நின்னுடுச்சு. நிறைய வாங்கணும்னு போயி, கடைசில ஒண்ணுமே வாங்காம வீட்டுக்கு திரும்பிப் போனோம். அப்பத்தான், எனக்கு அந்த புது நண்பர் நியாபகத்துல வந்தாரு. சரி அவரை போயி பார்த்து, இந்த அனுபவம் எப்படி இருந்துச்சுன்னு கேக்கலாம், அப்படின்னு அவர் வீட்டுக்கு போனோம். அங்க பார்த்தா, அவர் பேய் அறைஞ்ச மாதிரி வீட்டு வாசல்ல உட்கார்ந்திருந்தாரு. அவர் கண்ணுக்கு நாங்க வந்ததே தெரியலை. அப்புறம் தான் எங்களை பார்த்தாரு. என்னங்க நிலநடுக்கம் அனுபவம் எப்படி இருந்துச்சுன்னு கேட்டோம். உடனே , ஐயோ சாமி, நான் இந்தியா போற வரைக்கும் நிலநடுக்கமே வரக்கூடாதுன்னு கை எடுத்துக் கும்பிட்டாரு. ஏங்க அந்த அளவுக்கு பயந்துட்டீங்களா? நீங்க பேசாம தெருவுல வந்து நின்னிருக்க வேண்டியது தானே என்றேன். நான் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலமைல இருந்தேன் என்றார். பிறகு அவரே தொடர்ந்து, எப்பவுமே காக்கா குளியல் தானே குளிக்கிறோம், அதனால இன்னைக்கு, நிதானமா வீட்டுக்குள்ள இருக்கிற டப்ல(tub) குளிக்கலாம்னு குளிக்கும் போது தான் இந்த நிலநடுக்கம் வந்துச்சு. எனக்கு என்னப் பண்றதுன்னே தெரியலை,ரொம்பவே பயந்துட்டேன். சரி, நிலநடுக்கம் போய்டுச்சுன்னு பார்த்தா, இப்ப, ஒரு பெரிய சுனாமியே வந்துடுச்சு என்றார். என்னது, சுனாமியா, சரி தான் நம்மாளுக்கு மறை கழண்டுடுச்சு போலன்னு நினைச்சு, என்னங்க சுனாமி, கினாமின்னு பேசுறீங்க என்றோம். ஆமாங்க. நிலநடுக்கம் நின்ன உடனே, நான் ஊருல இருக்கிற என் ஆளுக்கு(அவருக்கு நிச்சயித்தப் பெண்ணாம்) போன் பண்ணி சொன்னேன். உடனே அவள் ரொம்ப பயந்து போயி, பேசாம நீங்க எதையாவது சொல்லி இந்தியாவுக்கு வந்துடுங்கன்னு சொன்னாள். நான் அப்படி எல்லாம் வரமுடியாதுன்னு சொன்னேன். அதுக்கு அவள், சரி நான் எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற காளியாத்தா கோயில்ல நீங்க நல்ல படியா ஊருக்கு வந்து என்னைய கல்யாணம் பண்ணிக்கணும்னு வேண்டிக்கிறேன்னு சொன்னாள் என்றார். அடாடா உங்க மேல அவுங்களுக்கு என்ன ஒரு பாசம் என்றேன் நான். அட நீங்க வேற அதுக்கப்புறம் தான் அவள் ரொம்ப சர்வ சாதாரணமா, நம்ம கல்யாணம் முடிஞ்சவுடனே நீங்க அந்த கோயில்ல நடக்குற தீ மிதி விழாவில கலந்துக்கிட்டு மொட்டைப் போட்டுக்குங்கோன்னு சொன்னாள் என்றார். அடடா, உங்க வாழ்க்கையில இந்த நிலநடுக்கம் சுனாமியை ஏற்படுத்திடிச்சுன்னு சொல்லி நாங்க வீட்டுக்கு போனோம்.
அதுக்கப்புறம் நான் எங்க நிலநடுக்கம்ன்னு பேப்பர்ல படிச்சாலும் உடனே எனக்கு அந்த நண்பர் தான் நியாபகத்துக்கு வருவாரு.