மினி சந்திப்பு (நானும் செல்லப்பாவும் டயட் கண்ட்ரோல்...)
முதல் பகுதியை படிக்காதவர்கள் - பகுதி-1
அந்த கடினமான வேலை என்னவென்றால், தீர்க்கதரிசி
அதிரா அவர்கள் கூறியது போல் எல்லோரையும் எப்படி ஒரே நாளில் ஒன்று சேர்ப்பது என்பது
தான். எங்களை ஒன்று சேர்ப்பதற்கு முன்பு, முதலில் கல்லூரியிலிருந்து
அனுமதியைப் பெற்று, கல்லூரி தாளாளர் மற்றும் முதல்வர் அவர்களின்
தேதியையும் அறிந்து கொண்டு, பின்னர் எல்லோரிடமும் மே,ஜூன் மற்றும் ஜூலை ஆகிய மூன்று மாதங்களில் ஏதாவது ஒரு மாதத்தில் விழா நடத்தலாம்
என்று ஒவ்வொரு துறையின் பிரதிநிதிகளிடம் சொல்லி எல்லோரையும் கேட்கச்சொல்லியிருந்தார்கள்.
ஒரு சிலர் மே மாதம் இறுதி வாரத்திலும், ஒரு சிலர் ஜூன் மாதத்திலும்
வைக்கலாம் என்று கூறி குட்டையை குழப்ப ஆரம்பித்து
விட்டார்கள். இறுதியில் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, ஜூன் மாதம் 10ஆம் தேதி என்று முடிவானது.
இங்கு எங்கள் துறையில் படித்தவர்களைப்
பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். நாங்கள் மொத்தம் 21 மாணவ,மாணவியர்கள்
கணிணித்துறையில் பயின்றோம். அதில் இருவர் மாணவிகள். நான் ஆஸ்திரேலியாவிலும், செல்வம், பழனியப்பன் மற்றும் தாமோதரன் மூவரும் சிங்கப்பூரிலும்,வள்ளியப்பன் மற்றும் செல்வதிருப்பதி அமெரிக்காவிலும்,பாண்டி ஐக்கிய அரபு நாடுகளிலும் வசிக்கிறோம்.
தேதி முடிவானவுடன், எங்கள் துறையிலிருந்து 13 பேர் நாங்கள் கலந்துக்கொள்கிறோம்
என்று சொல்லிவிட்டார்கள். நான் மட்டும் இருதலைக் கொள்ளியாகவே நாட்களைக் கடத்திக்கொண்டிருந்தேன்.
அதற்கு காரணம் வியாபாரத்தை விட்டுவிட்டு எப்படி வருவது என்பது தான். நண்பர்கள் ஒவ்வொரு
முறையும் பேசும்போது கண்டிப்பாக வந்துவிடு என்று தூபம் போட்டுக்கொண்டிருந்தார்கள்.
அம்மணி தான் கண்டிப்பாக நீங்கள் கலந்துகொள்ளுங்கள், நான் வீட்டையும், வியாபாரத்தையும் பார்த்துக்கொள்கிறேன் என்று எனக்கு தைரியத்தையும், உற்சாகத்தையும் அளித்து என்னை வழியனுப்பினார்கள்.
என்னுடைய பயணத்திட்டமானது, ஜூன்
5ஆம் தேதி சிட்னியிலிருந்து கிளம்பி சென்னை சென்று, 6,7
இரண்டு நாட்கள் சென்னையில் தங்கி, உறவினர்களை சந்தித்துவிட்டு, ஷாப்பிங் செய்துவிட்டு, 8ஆம் தேதி கரூர்க்கு போய் (மாமனார் வீட்டுக்கு போகாமல் போனால் என்னவாவது!!) அங்கேயிருந்து 9ஆம் தேதி மதியம்
தேவகோட்டைக்கு சென்று, இரண்டு நாட்கள் அங்கே தங்கிவிட்டு, 11ஆம் தேதி இரவு மீண்டும் சென்னைக்கு திரும்பி 12ஆம் தேதி கடைசி நேர ஷாப்பிங்
முடித்துவிட்டு அன்று இரவு சிட்னிக்கு விமானம் ஏறுவது தான் பயணத்திட்டம். நான்
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மொத்தமாக 9 நாட்கள் அம்மணியிடம் வியாபாரத்தையும், வீட்டையும் ஒரு விதமான தைரியத்தில் ஒப்படைத்தேன்.
5ஆம் தேதி இரவு சென்னை வந்தவுடன்
மறு நாள் நண்பர் செல்லப்பவை மட்டும் சந்தித்துவிட்டு (20 ஆண்டுகள் கழித்து இவரை சந்தித்தேன்), பர்சேஸ்
எல்லாம் செய்து கொண்டு, நடுநடுவில் உறவினர்களையும் சந்தித்து
முடித்தேன். 7ஆம் தேதி இரவு நண்பர் சிதம்பரம் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தாரை
சந்தித்தேன். சிதம்பரத்துக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இருவரின் மாமனார்
ஊரும் கரூர் தான். (செல்லப்பா,சிதம்பரம், மற்றும் முத்துகுமார் சென்னையில் வசிக்கிறார்கள்.) செல்லப்பாவும், முத்துக்குமாரும் அசோக் நகரிலிருக்கும்
சரவண பவனுக்கு வந்துவிடுகிறோம் என்று கூறியிருந்தார்கள். அதனால் சிதம்பரம் வீட்டில்
மாலை பலகாரத்தை(?) மட்டும் முடித்துக்கொண்டு நேராக சரவண பவனுக்கு சென்றோம். அங்கு நால்வரும்
இரவு உணவை முடித்துக்கொண்டு சிறிது நேரம் மலரும் நினைவுகளை எல்லாம் அசைபோட்டுவிட்டு
மற்ற மூவரும் என்னை கரூர் செல்லும் பேருந்தில் ஏற்றி விட்டு வீடு திரும்பினார்கள்.
8ஆம் தேதி காலை கரூர் சென்றடைந்தேன். அங்கு அடுத்த
நாள் மதியம் வரை இருந்துவிட்டு, தேவகோட்டைக்கு கிளம்பினேன். கரூரிலிருந்து காரைக்குடி,தேவகோட்டைக்கு செல்வதற்கு பொதுவாக எல்லோரும் திருச்சி வழியாகத்தான் செல்வார்கள்.
ஆனால் நான் அவ்வாறு செல்லாமல் வேறு மார்க்கமாக சென்றேன். நண்பர்கள் சிலர், கல்லூரி நாட்களில் என்னையும் இன்னொருவரையும் இணைத்து காதல் பறவைகள் வந்து விட்டார்கள் என்று கூறுவார்கள். அந்த காதலியை பார்பதற்காகத்தான் நான் வேறு மார்க்கமாக சென்றேன். அந்த காதலி யார் என்று
அடுத்த பதிவில் சொல்கிறேன்.
பி.கு: இந்த பதிவை சென்ற வாரத்தில் இருந்து
எழுத வேண்டும் என்று நினைத்து எழுத முடியாமல் போய் விட்டது . கண்டிப்பாக இன்றைக்கு எவ்வளவு
நேரமானாலும் எழுதிட வேண்டும் என்று நினைத்தேன், காரணம்
நாளைக்கு ஒரு மணி நேரம் கூட தூங்கலாம் (நாளைக்கு டே லைட் சேவிங்க் முடிவடைகிறது, அதனால் கூடுதலாக ஒரு மணி நேரம் கிடைக்கும்). கடந்த இரண்டு நாட்களாக நண்பர்களின் தளத்திற்கு செல்ல இயலவில்லை. நாளை முதல் எல்லோரின் தளத்திற்கு வந்து பின்னூட்டம் இடுகிறேன்.