Showing posts with label திரை விமர்சனம். Show all posts
Showing posts with label திரை விமர்சனம். Show all posts

Thursday, December 24, 2015

உப்பு கருவாடு திரை விமர்சனம்





நீண்ட நாட்கள் கழித்து ஒரு படத்தை பார்க்க நேர்ந்தது. பொதுவாக இப்பொழுதெல்லாம் படம் பார்ப்பதற்கு நேரம் அமைவதில்லை. ஆனால் திரைப்படங்களின் விமர்சனத்தை மட்டும் படித்து விடுவேன். இந்த படத்தின் விமர்சனத்தை படிக்கும் போது தான் தெரிந்தது, இந்த படத்தின் முக்கிய கருவும், நான் எழுதி மேடையேற்றிய இந்த நாடகத்தின் கருவும் 


ஏறத்தாழ ஒன்று தான் என்று. அதனாலேயே இந்த படத்தை பார்த்தாக வேண்டும் என்று தோன்றியது.  




சரி, இனி இந்த படத்தின் கதை என்னவென்று பார்க்கலாம்.

கருணாகரன் தான் இந்த படத்தின் நாயகன். இயக்கிய முதல் படம் படு தோல்வி, இரண்டாவது படம் பாதியில் நின்று போனது. மீண்டும் ஒரு வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருப்பவர். இதில் தங்கையின் கல்யாணத்துக்காக பணத்தேவை வேறு. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், நண்பர் மயில்சாமி மூலமாக நிபந்தனையுடன் ஒரு படம் இயக்குவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. படத்தின் தயாரிப்பாளர் மீனவ குப்பத்தைச் சேர்ந்த தாதா மற்றும் மீன் வியாபாரியுமான எம்.எஸ்.பாஸ்கர். கருணாகரனுக்கு சாம்ஸ் மற்றும் நாராயணன் இணை மற்றும் உதவி இயக்குனர்கள். தான் எடுக்கப்போகும் படத்துக்கு கதாநாயகனாக சதிஷ் மற்றும் நாயகியாக தன் தோழி ரஷிதாவையும் நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்திருப்பார் கருணாகரன். தயாரிப்பாளரின் அந்த ஒரு நிபந்தனை என்னவென்றால் தன் மகள் தான்  (நந்திதா) கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பது தான். வேறு வழியில்லாமல் அந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டு அந்த மீனவ குப்பத்துக்கு தன் நண்பர்களோடு செல்கிறார். அங்கு படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு படம் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஒத்திகை பார்க்கலாம் என்று எண்ணி கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கும் பயிற்சி கொடுக்கிறார். நடிப்பா அப்படின்னா கிலோ என்ன விலை என்று கேட்கும் நந்திதாவை வைத்து வெற்றிக்கரமாக பயிற்சியை எல்லாம் முடித்து, சாமியாரிடம் (திண்டுகல் சரவணனிடம்) நல்ல நாள் கேட்டு, படப்பிடிப்பை ஆரம்பிக்கிற தினத்தில்  ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சனையில் இருந்து மீண்டு கருணாகரன் அந்த படத்தை எடுத்தாரா இல்லையா என்பதை நகைச்சுவையோடு சொல்வது தான் இந்த உப்பு கருவாடு படம்.  


பொதுவாக ராதா மோகன் படம் என்றால் தயங்காமல் குடும்பத்தோடு பார்க்கலாம் என்ற ஒரு எண்ணம் இருக்கும். அந்த எண்ணம் இந்த படத்திலும் நிறைவேறியிருக்கிறது. இதில் கருணாகரன் தான் கதாநாயகன் என்றாலும், அனைத்து கதாப்பதிரங்களுக்கும் பெயர் கிடைக்கும்படியாக அமைத்திருப்பதன் மூலம் எல்லோருமே இதில் நாயகர்கள் தான். பொன் பார்த்திபனின்  வசனங்கள் இப்படத்தின்  முதுகெலும்பு. இதில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் திரைப்படத்துறையில் நடக்கும் திரைமறைவு காட்சிகளாக நம் கண் முன்னே தெரியும். 

நகைச்சுவை நடிகரான கருணாகரன் மிகவும் சீரியஸ் கதாப்பத்திரத்தில் இதில் தோன்றியிருக்கிறார். நன்றாக நடிக்கக்கூடிய நந்திதா, நடிக்கவே தெரியாத மாதிரி நடித்திருப்பது அருமை. அவர் ஒரு காட்சியில் தன் தாயிடம், “நான் நல்லா நடிச்சேன்னா, நீ ரொம்ப அதிகமா நடிக்கிறன்னு சொல்றாரு. சரி, கொஞ்சமா நடிச்சா, இன்னும் நல்லா நடிக்கணும்னு சொல்றாரு. நான் எப்படித்தான்மா நடிக்கிறதுன்னு” புலம்புவது ஒரு புதுமுக நாயகி இயக்குனரிடம் படும் பாட்டை காட்டுகிறது. 




கருணாகரனின் தோழியாக வரும் “சரவணன் மீனாட்சி” புகழ் ரஷிதா அழகவும் இருக்கிறார் நன்றாகவும் நடித்திருக்கிறார். அதிலும் நந்திதாவிற்கு அவர் நடிப்பு சொல்லித்தரும் காட்சி, ஒரு பனை சோற்றுக்கு ஒரு சோறு பதம். எதற்கு எடுத்தாலும் சகுனம் பார்க்கும் கதாப்பாத்திரமாக மயில்சாமி எந்த ஒரு சத்தம் கேட்டாலும் மணி அடிக்குதுது பார் என்று கலகலப்பூட்டுவதும் , சாமியாராக வரும் திண்டுக்கல் சரவணன் தானும் நடிக்க வேண்டும் என்பதற்காக தனியறையில் மற்ற நடிகர்கள் மாதிரி பேசி பயிற்சி எடுப்பது,அதிலும் குறிப்பாக மேஜர். சுந்தர்ராஜன் மாதிரி வசனம் பேசுவது அருமை. எல்லோரையும் விட, டவுட் செந்திலின் முக பாவனைகள், மற்றும் தப்புத்தப்பாக ஆங்கிலத்தை உச்சரிப்பதும் கண்டிப்பாக நம் வயிற்றை புண்ணாக்கும். உதாரணத்துக்கு “bet” என்பதற்கு “bed” என்று சொல்வதும்,encouragement” என்பதற்கு “engagement” என்று சொல்வதும், “பின்னாடி தட்டுனவுடனே அவள் confuse ஆயிடுவா சார் என்று சொல்வதற்கு பதில் conceive ஆயிடுவா சார்” என்று சொல்லும்போது நம்மால் சிரிப்பை அடக்க முடியாது. மேலும் அந்த மலையாளப்பாடகரிடம் அவர் மாட்டிக்கொண்டு முழிக்கும் காட்சிகள் சிரிப்போ சிரிப்பு. அந்த மலையாளப் பாடகர் வரும் போதெல்லாம் ஓவியாவும், இனியாவும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இது போக எம்.எஸ்.பாஸ்கர் கவிதை சொல்கிறேன் பேர்வழி என்று சொல்லும் கவிதைகள் கூட வெடிச் சிரிப்புகள் தான். 




இப்படி படம் முழுக்க நகைச்சுவையோடு சொல்லியிருந்தாலும், தான் சொல்ல வேண்டிய விஷயத்தை தெளிவாகவும் அழகாவும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராதா மோகன். கண்டிப்பாக குடும்பத்தோடு இந்த படத்தை சிரிச்சு ரசிச்சு பார்க்கலாம். 

Thursday, January 8, 2015

வெள்ளைக்கார துரை – விமர்சனம் (இந்த படத்தை பார்க்கத்தான் வேண்டுமா.....)






இதுவரைக்கும் விக்ரம் பிரபு ஆக்க்ஷன் படத்தில் தான் நடித்து வந்தார், இந்த படத்தில் அவர் காமெடியில் கலக்கியிருக்கார்,மேலும் இந்த வெள்ளைக்கார துரை வெற்றி வாகை சூடும் துரை என்றெல்லாம் தினமலரில்  படிச்சதுனால, சரி இந்த படம் ரொம்பபப.... நல்லாயிருக்கும் போலன்னு நினைச்சு போன வாரம் இந்த படம் பார்த்தேன். காமெடி படம்னு சொல்லி நம்ம பொறுமையை ரொம்பவே சோதிச்சிட்டாங்க. பாதி படத்துக்கு மேல பார்க்க வேண்டாம் என்று தான் நினைத்தேன், சரி, ஸ்ரீதிவ்யாவோட கடந்த கால கதையாவது நல்லா இருக்கும்னு நம்பி மிச்ச படத்தையும் பார்த்து முடிச்சு, ரொம்பவே கடுப்பாகிட்டேன். எப்படி இப்படி ஒரு படத்துக்கு தினமலர் ஆஹா,ஓகோன்னு எழுதியிருக்காங்கன்னு தெரியலை. அப்புறம் தான் இணையத்துல  இந்த படத்தோட விமர்சனத்தை தேடி படிச்சேன்.  ஆஹா,இந்த விமர்சனங்களை எல்லாம் மின்னாடியே படிச்சிருந்தா, இந்த படத்தை பார்க்காம தப்பிச்சிருக்கலாமேன்னு நினைச்சேன். ஓகே, என்னுடைய புலம்பலை நிறுத்திக்கிட்டு இந்த படத்தோட கதைக்கு வரேன்.
வட்டிக்கு பணம் கொடுத்து தொழில் செய்யும் வட்டி வரதனிடம் (ஜான் விஜய்) 15லட்ச ரூபாய் கடன் வாங்கி,அதில் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்கள் விக்ரம் பிரபுவும்,சூரியும். அந்த கடனை அடைக்க முடியாமல் வட்டி வரதனிடம் அடிமையாக சிக்கிக் கொள்கிறார்கள். அந்த வீட்டில் இருக்கும் சின்னம்மாவான ஸ்ரீதிவ்வா மீது விக்ரம் பிரபுவிற்கு காதல் பிறக்கிறது. இந்த அடிமை வாழ்விலிருந்து எவ்வாறு தப்பித்து தன்னுடைய காதலியை கைப்பிடித்தார்  என்பது தான் கதை.



இப்படிப்பட்ட ஒரு கதையில்,நகைச்சுவையை மட்டுமே நம்பி திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் எழில்.  பொதுவாக நகைச்சுவைப் படங்களில் லாஜிக் பார்க்க முடியாது தான் ஆனால் அதற்காக நகைச்சுவை என்ற பெயரில் கதைக்கு சம்பந்தமே இல்லாத, கோமாளித்தனமான காட்சிகளை எல்லாம் வைத்து நமக்கு நகைச்சுவைக்கு பதில் எரிச்சலைத்தான் ஏற்படுத்துகிறார்கள்.



ஒரே ஒரு உதாரணம் மட்டும் சொல்கிறேன். ஒரு காட்சியில், ஜான் விஜய், சூரியிடம் ஒரு வட்டிக்கனக்கு புத்தகத்தை கொடுத்து அதில் ஒருவனுடைய வட்டிக் கணக்கை படிக்கச் சொல்லி,அதை விக்ரம் பிரபுவை வேற ஒரு நோட்டில் எழுதச் சொல்லுவார் (ஒரு நோட்டில் இருப்பதை இன்னொரு நோட்டில் எதற்கு எழுதணும்? அதற்கு தகுந்த காரணங்களும் கிடையாது). அந்த நேரம் பார்த்து சின்னம்மாவான  ஸ்ரீதிவ்வா மாடியிலிருந்து கீழே இறங்கி வருவார். சூரி கணக்கைப் படிக்க, விக்ரம் பிரபுவும் ஸ்ரீதிவ்வாவைப் பார்த்துக்கொண்டே எழுதுவார். ஒரு கட்டத்தில், சூரியை விக்ரம் பிரபுவிடமிருந்து நோட்டை வாங்கி படிக்கச் சொல்லுவார்கள். அதில்,விக்ரம் பிரபுவோ வெறும் கவிதையாக(?) கிறுக்கி வைத்திருப்பார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சூரி, தான் சொன்ன கணக்கை ஞாபகம் வைத்துக்கொண்டு எப்படியோ படித்து முடித்து, அந்த பேப்பரை கிழித்து வாயில் போட்டுக்கொள்ளுவார். இந்த காட்சி எதற்காக வைத்தார் என்ற காரணத்தை இயக்குனருக்கே தெரியுமா என்று தெரியாது. எதோ ஓரிரு காட்சிகள் என்றால் பரவாயில்லை, படம் முழுக்க இந்த மாதிரி தான் நிறைய காட்சிகள் ஏன் வைக்கப்பட்டது என்று புரிந்து கொள்ள முடியாது. இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் அந்த கவிதை விக்ரம் பிரபுவிற்கும்,சூரிக்கு மட்டுமே தெரிந்த விஷயம், ஆனால் விக்ரம் பிரபு ஸ்ரீதிவ்யாவை பார்க்கும்போது,அவர் மிகச் சரியாக அந்த கவிதையை கூறுவார். கடவுளே தாங்க முடியாது.



இதுக்கு நடுவுல இந்த காமெடி கதையில ஒரு ஊமையன் கதாப்பாத்திரம் வேற. அவர் சூரிக்கும் விக்ரம் பிரபுவிற்கும் நண்பனாகி,அவர்களோடு வட்டி வரதனிடம் மாட்டிக்கொள்வார். ஒரே ஒரு காட்சியில் மட்டும் அவர் தனியான ஒரு இடத்தில் அலைபேசியில் இந்தியில்  பேசுவார். கடைசியில் அவரை வட்டியின் ஆட்கள் அடித்தே கொன்று விடுவார்கள். அப்போது தான்  அவர் ஒரு சர்வதேச தீவிரவாதி என்றும் அவருக்கு 17மொழிகள் தெரியும் என்று சொல்லுவார்கள். அப்படி சொல்லுபவர்கள் வேறு யாரும் இல்லை சிபிஐ மற்றும் சர்வதேச போலீஸ் (interpol).  சிபிஐ அதிகாரிகள் மற்றும் இன்டர்போல் அதிகாரிகளும் நேராக வட்டியின் வீட்டிற்கு வந்து இதை சொல்லுவார்கள். அந்த தீவிரவாதியை கொன்றதற்காக வட்டிக்கு அரசாங்கத்திடமிருந்து 50லட்சம் ரூபாய் பரிசு வேறு. கொடுமை. கொடுமை. கிளைமாக்ஸ் காட்சியில் தீவிரவாதிகள் பழிவாங்குவதற்காக வருவதும், சூரியை மனித வெடிகுண்டாக,இல்லை இல்லை மனித ராக்கெட்டாக காண்பிப்பதும் அபத்தத்தின் அபத்தம்.

இடையில ஸ்ரீ திவ்யாவோட கடந்தகால கதை,அதுவும் உப்புச்சப்பு இல்லாத ஒரு கதை தான்.




இப்படி விமர்சனம் முழுக்க எதிர்மறை கருத்துக்களாகவே சொல்கிறாயே, நல்லதாக எதுவுமே இல்லையா என்று கேட்பவர்களுக்கு, "அம்மாடி உன் அழகு" என்ற பாட்டு கேட்க இனிமையாக இருக்கிறது. அப்புறம் ஸ்ரீதிவ்யா,படம் முழுக்க சேலையில் அழகாக தோன்றுகிறார். இந்த படத்துல ஒரே ஒரு ட்விஸ்ட் வேற உண்டு. உண்மையில எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட்ன்னு தான் சொல்லணும் . அம்புட்டுத்தான் எனக்குத் தெரிஞ்ச நல்ல விஷயங்கள்.

பொதுவா நான் எந்த படத்துக்கும் இப்படி ஒரு விமர்சனம் கொடுக்க மாட்டேன். நான் இந்த படத்தை பார்த்து நேரத்தை வீணடித்த மாதிரி நீங்களும் வீணடித்து விடாதிர்கள் என்பதற்காக தான் இப்படியொரு விமர்சனம்.


Tuesday, October 21, 2014

நீ நான் நிழல் – திரைவிமர்சனம்





இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால், நன்மைகள் ஏற்பட்டாலும், தீமைகளும் அளவுக்கதிகமாக ஏற்படத்தான் செய்கிறது. சமூக வலைத்தளங்கள்,அலைபேசி போன்றவைகள் மூலம், பெண்கள் ஏமாற்றப்படுவது ஒருதொடர் கதையாக நடந்து கொண்டு வருகிறது. முகநூல்,ஆன்லைன் சாட்டிங் ,வீடியோ சாட்டிங் மூலம் நடக்கும் குற்றங்களை இந்த படத்தில் நம் கண்முன்னே கொண்டுவருகிறார் அறிமுக இயக்குனர் ஜான் ராபின்சன்.


கதை களம் மலேஷியாவிலும், கோயம்புத்தூரிலும் நடக்கிறது. மலேஷியாவில் இந்தியர்களை குறிவைத்து நடக்கும் தொடர் கொலைகளை கண்டறியும் பணியில் அசிஸ்டண்ட் போலீஸ் கமிஷ்னர் சரத்குமார் ஈடுபடுகிறார். இந்த தொடர் கொலைகளுக்கும் ஆஷா பிளாக் என்ற பெயரில் முகநூல் வைத்திருக்கும் ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்கிறார். இதனிடையில் கோயம்புத்தூரில் இருக்கும் கதாநாயகன் ரோகித்துக்கு மலேஷியாவில் இருக்கும் அதே ஆஷா பிளாக் ஒரு நண்பர் விண்ணப்பம் அனுப்புகிறார். அதனை ஏற்றுக்கொண்ட ரோகித், அவரோடு தொடர்ந்து ஆன்லைன் சாட்டிங்,வீடியோ சாட்டிங் எல்லாம் செய்ய ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் ஆஷாவை காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆஷாவுடைய பிறந்த நாளில் அவரை சந்திப்பதற்காக மலேஷியா சென்றபொழுது, ஆஷா தற்கொலை செய்து கொண்ட விவரம் தெரிய வருகிறது.

ஆஷா ஏன் தற்கொலை செய்து கொண்டார், அந்த தொடர் கொலைகளுக்கு என்ன காரணம், அந்த கொலைகள் எல்லாம் யார் செய்தது, சரத்குமார் அந்த கொலையாளியை கண்டுபிடித்தாரா போன்ற வினாக்களுக்கு, படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.





கதாநாயகி ஆஷாவாக இஷிதா, நம்மை ரசிக்க வைக்கிறார். நகைச்சுவைக்கு, பிளாக் பாண்டி,எம்.எஸ்.பாஸ்கர் இருக்கிறார்கள். ஆனால் சிரிப்பு தான் வரவில்லை. சரத்குமாருக்கு வயதாகிவிட்டது என்பது நன்றாக தெரிகிறது. முன்பு மாதிரி அவரால் போலீஸ் அதிகாரி வேடத்தை மிடுக்குடன் நடிக்க முடியவில்லை.


படத்தின் தலைப்பு இது ஒரு பேய் படம் என்ற மாயையை கொடுக்கிறது. ஆனால் இது ஒரு காதல் கலந்த த்ரில்லிங் படம். இன்னும் சொல்ல போனால், பிள்ளைகளை அதுவும் குறிப்பாக பெண் பிள்ளைகளை சரியாக கவனிக்காமல் விட்டால், அவர்கள் எவ்வாறு சமூக வலைத்தலங்களால் ஏமாற்றப்படுவார்கள் என்பதை விளக்கும் ஒரு விழிப்புணர்வு படம். இந்த படத்தை பார்த்த பிறகு, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் அன்பு செலுத்தி, தினமும் சில மணித் துளிகளை அவர்களுடன் செலவளித்து, அவர்களின் உற்ற நண்பர்களாக மாறினால், அதுவே இந்த படத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும். ஒரு சில குறைகள் இருந்தாலும் பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு விழிப்புணர்வு படம்.  

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். 

Monday, July 7, 2014

சைவம் - விமர்சனம்



தலைவா திரைப்படத்தில் நான் தோன்றுவதற்கு காரணமாயிருந்த இயக்குனர் விஜய்யிடமிருந்து வந்திருக்கும் படம் தான் சைவம். இந்த படத்தை அவருடைய தந்தை தயாரித்திருக்கிறார். பொதுவாக செட்டிநாடு என்றாலே எல்லோருக்கும் நினைவில் வருவது அசைவ உணவு தான். நாட்டுக்கோட்டை நகரத்தார்களில் ஏறக்குறைய 90 சதவீத மக்கள் அசைவம் சாப்பிடுபவர்கள். அவ்வாறு அசைவம் சாப்பிடும் ஒரு நகரத்தார் குடும்பம் சைவமாக மாறுவது தான் இந்த படத்தின் ஒரு வரிக்கதை. ஒரு குறும்படத்துக்கான கருவை எடுத்துக்கொண்டு இரண்டு மணி நேர திரைப்படமாக நமக்கு வழங்கியிருக்கிறார் இயக்குனர். இன்றைக்கு வரும் அனைத்து திரைப்படங்களும் குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் என்று விளம்பரப்படுத்துகிறார்கள். ஆனால் உண்மையாக குடும்பத்துடன் சென்று பார்க்கக்கூடிய படமாக இருப்பது தான் சைவத்தின் மிகப்பெரிய பலம். படத்தில் எந்த ஒரு இடத்திலும் இரட்டை அர்த்த வசனங்களோ, முகம் சுழிக்கக்கூடிய நடனங்களோ என்று எதுவுமே இல்லை. நகைச்சுவை காட்சிகளும், திணிக்கப்படாமல், படத்தோடு ஒன்றி வருவது இயல்பாக இருக்கிறது. ஆனால் அதே சமயம்  திரைக்கதை பலமாக இல்லாததால், ஒரு தொய்வு ஏற்படுவதை உணர முடிகிறது.

கதை என்னவென்று பார்த்தால், செட்டிநாட்டு ஊரான கோட்டையூரில் வசிக்கும் பெரியவர் நாசருக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவர்களில் மகள் துபாயிலும், இரு மகன்கள் வெளியூரிலும் வசிக்க , ஒரு மகன் மட்டும் பெற்றோர்களோடு கூட்டுக்குடும்பத்தில் வசிக்கிறார். மூன்று ஆண்டுகள் கழித்து திருவிழாவிற்காக அனைவரும் ஒன்று கூடுகிறார்கள். அச்சமயத்தில், பேத்தி சாராவிற்கு ஏற்பட்ட ஒரு பிரச்சனையின் காரணமாக, தாங்கள் குலதெய்வத்துக்கு செலுத்தவேண்டிய நேர்த்திக்கடனை செலுத்தாதது நியாபகத்துக்கு வருகிறது. அதன்படி சாமிக்கு நேர்ந்துவிட்ட சேவலை திருவிழாவில் பலி கொடுப்பதாக முடிவு செய்கிறார்கள். அதன் பிறகு அந்த சேவல் காணாமல் போய்விடுகிறது. இறுதியில் அந்த சேவலை கண்டுபிடித்து சாமிக்கு பலி கொடுத்தார்களா என்பது தான் படத்தின் மீதிக்கதை.

சேவலை தேடுகிறோம் என்ற பெயரில், குடும்பத்தில் உள்ளவர்கள் அடிக்கும் கூத்தும், மகளின் பேரனாக வரும் அந்த குட்டிப்பையனும் ரசிக்க வைக்கிறார்கள். அதிலும் குறிப்பாக அவன் “wifi” இருக்கிறதா என்று ஆயாவிடம் கேட்பதும், அதற்கு நாசரின் மனைவி, அவனிடம், “இது சாக்குப்பை, கூடைப்பை”  என்று கூறுவதும், பிறகு வீட்டு வேலைக்காரனும், தன் பங்குக்கு, “இவ என்னோட wife, இவுங்க இராமநாத ஐயாவோட wife, இவுங்க உங்க மாமாவோட wife என்று கூறுவதும் இதற்கெல்லாம் பதிலாக அந்த குட்டிப்பையன் கடுப்பாகி, முகத்தில் கோபத்தை காட்டுவதும் சரியான நகைச்சுவை கலாட்டா. அந்த வீட்டிற்குள்ளேயே மாமன் மகன், அத்தை மகள் இருவரிடமும் நடக்கும் விடலைக்கதால் சுவாரசியம். வருஷம் 16 படத்தில் மற்றவர் முன்னிலையில் கார்த்திக்கும், குஷ்புவுக்கும் இருக்கும் காதல் வெளிப்பட்டு விடுவதுமாதிரியான காட்சி இருக்கும். அதுமாதிரியே இந்தப்படத்திலும் அவர்கள் இருவரின் காதலும் வெளிபட்டுவிடும். இதனால் தானோ என்னவோ வருஷம் 16 படத்தை, இவ்விருவரின் காதல் அத்தியாயம் நியாபகப்படுத்திகிறது போல. நாசரின் பேரனாக இக்கதாப்பாத்திரத்தில் நடிப்பவர் நாசரின் மகனான லுப்துபுதீனாம்.

நாசர் தான் இதில் நாயகன், ஆனால் அவருக்கு அதிகப்படியான வசனங்கள் கிடையாது. நாயகி என்று பார்த்தால், பேத்தியாக வரும் சாரா தான் நாயகி. நிறைய இடங்களில் தன் கண்களாலே பேசி பாராட்டை அள்ளிக்கொள்கிறார். மற்றபடி இப்படத்தில் நடைத்த அனைவரும் தங்களின் பங்கை உணர்ந்து மிகச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு செட்டிநாட்டு வீதிகளையும், வீடுகளையும் அழகாக காட்டியிருக்கிறது.

நான் ஏற்கனவே தலைவா படத்தில், எங்களின் நகைச்சுவைப் பகுதியின் கவனக்குறைவை சுட்டிக்காட்டியிருந்தேன். தலைவா திரைப்பட அனுபவம் – எங்கள் காட்சிகளில் ஏற்பட்ட ஆள் மாறாட்டங்கள்

இந்த படத்திலும் இயக்குனர் சில இடங்களில் அதே தவறை செய்திருக்கிறார். செட்டிநாட்டு வழக்கப்படி தாத்தாவை, ஐயா என்று தான் சொல்லுவார்கள். இதில் ஆரம்பத்தில் மகன் வயிற்றுப் பேரன்கள் இருவரும் , நாசரைப் பார்த்தவுடன் "எப்படியிருக்கீங்க ஐயா" என்று சரியாக சொல்லுவார்கள். பிறகு இருவருக்குள்ளும் பேசிக்கொள்ளும்போது, தாத்தா என்று சொல்லிக்கொள்ளுவார்கள். இதனை நாட்டுக்கோட்டை செட்டியாரான இயக்குனர் எப்படி கோட்டை விட்டார் என்று தெரியவில்லை. மற்றொரு இடத்தில், சேவலை காணோம் என்று புகார் கொடுப்பதற்கு காவல் நிலையம் செல்லுவார்கள். காவல் நிலைய பலகையில் “காவல் நிலையம் மதகுப்பட்டி” என்றிருக்கும் (இயக்குனரின் சொந்த ஊர் மதகுப்பட்டியாகும்). உள்ளே போலீஸ் காவலாளி அவர்களிடம், நீங்கள் எந்த ஊர் என்று கேட்பார், அதற்கு அவர்கள் நாங்கள் கோட்டையூர் என்று சொல்லுவார்கள். கோட்டையூருக்கும், மதகுப்பட்டிக்கும் ஏறக்குறைய 40கிலோமீட்டர் தூரம். அவ்வளவு தூரம் தள்ளி, இவர்கள் இந்த ஊருக்கு வந்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார்களாம். கொஞ்சமாவது லாஜிக் வேண்டும். ஆனால், இயக்குனரும் சரி, அவருக்கு கீழ் இணை மற்றும் உதவி இயக்குனர்கள் யாரும் இந்த மாதிரி சின்ன சின்ன தவறுகளை எல்லாம் கண்டுக்கொள்ளாமல் இருப்பது தான் கொடுமை.

இறுதியாக இந்த படத்தை கண்டிப்பாக குடும்பத்துடன் சென்று ஒரு முறை பார்க்கலாம்.


Sunday, April 27, 2014

தெனாலிராமன் – விமர்சனம்



நான்  இந்த பதிவில் சொன்னமாதிரி - வந்துட்டான்யா... வந்துட்டான்!!!

வடிவேலு மூன்றாண்டு வனவாசத்தை முடித்து தெனாலிராமன் என்ற திரைப்படம் மூலமாக மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்திருக்கிறார். இம்முறை நகைச்சுவை நடிகனாக இல்லாமல், கதாநாயகனாக வந்திருக்கிறார்.




கதை என்னன்னு பார்த்தால், விகட நகரத்தை ஆண்டு வரும் மன்னனுக்கு 36 மனைவிகள் மற்றும் 52 குழந்தைகள். எப்பொழுதும் தன் குடும்பத்தையே பற்றியே சிந்திப்பதால், தன் நவரத்தின அமைச்சர்கள் (அதாவது 9 அமைச்சர்கள்) சொல்லுவதையே வேதவாக்காக எடுத்துக்கொண்டு நாட்டை ஆண்டு வருகிறார். இந்த 9 அமைச்சர்களில் ஒரு அமைச்சரைத் தவிர மற்ற 8 அமைச்சர்களும் ஊழலுக்கு பெயர் போனவர்கள். பணத்துக்காக தங்கள் நாட்டை சீன தேசத்திடம் அடகு வைக்க முயல்கிறார்கள். அதற்கு நேர்மையான அமைச்சர் முட்டுக்கட்டையாக இருப்பதால், சினிமா தர்மப்படி அவரை மற்றவர்கள் கொன்றுவிடுகிறார்கள். இந்த இடத்திற்கு இன்னொரு வடிவேலான தெனாலி ராமன் சில பல போராட்டங்களுக்கிடையில் அமைச்சராக உள்ளே நுழைகிறார். 





இதில் ஒரு முக்கிய ட்விஸ்ட் என்னவென்றால், தெனாலிராமான் புரட்சிப்படையை சேர்ந்தவன். மன்னனைப் பிடிக்காமல், அவனை கொல்ல வேண்டும் என்று வாழ்பவன். இதற்கிடையில் சீன தேசத்தோடு வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டு, அந்த நாட்டின் வர்த்தக ஸ்தலமே, சீன தேசத்து வர்த்தக ஸ்தலம் போல் காட்சியளிக்கிறது. இதையெல்லாம் பார்த்து ஆத்திரப்பட்டு மன்னனை கொல்வதற்காக சந்தர்பத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கையில், மன்னன் ஒரு அப்பிராணி, இதற்கு முழுப்பொறுப்பும் அந்த 8 அமைச்சர்கள் தான் என்று கண்டுப்பிடிக்கிறான் தெனாலிராமன். இப்படி ஒரு நல்லவன் இருக்கும்போது, கெட்டவர்கள் அவன் மீது பழியை சுமத்தவேண்டும் என்பதும் சினிமா நியதி, அந்த நியதிப்படியே தெனாலிராமன் மீது மன்னனுக்கு நம்பிக்கையை இழக்கச் செய்து அவனை மன்னனிடம் இருந்து பிரிக்கிறார்கள் அந்த அமைச்சர்கள். 


இதற்கு நடுவில், தெனாலிராமனுக்கும், மன்னனின் மகளான மீனாட்சி தீக்ஷித்க்கும் காதல் மலறுகிறது. மகளும் தந்தையிடம், தெனாலிராமன் நல்லவன் என்று கூறி அவன் மனதை மாற்றி, தெனாலிராமனை மீண்டும் அரண்மனைக்குள் வருவதற்கு ஏற்பாடு செய்கிறாள். மறுப்பிரவேசம் செய்த தெனாலிராமன் எவ்வாறு மன்னனுக்கு நாட்டுநடப்பை புரியவைக்கிறான் என்பது தான் மீதிக்கதை.

இந்த படம் கிட்டதட்ட 23ஆம் புலிக்சேயின் சாயலை ஒட்டியே எடுத்த மாதிரி இருக்கிறது. அதில் அவர் இரட்டை வேடம் பூண்டிருப்பார். இதிலும் இரட்டை வேடம். அந்த படத்தில் மன்னராக ஒரு கதாப்பாத்திரத்திலும், மன்னனை திருத்தும் இன்னொரு கதாப்பத்திரத்திலும் தோன்றுவார். இந்த படத்திலும் மன்னராகவும், மன்னருக்கு நாட்டு நடப்பை புரிய வைக்கும் மந்திரியாகவும் நடித்திருப்பார். இரண்டு படங்களிலும் மீசை மேலே தூக்கிக்கொண்டிருக்கும். அந்த படத்தில் ஒரு காட்சியில் மன்னன் மந்திரியோடு வேட்டைக்கு செல்லுவான், அப்போது ஒரு கரடி அவன் மீது எச்சிலை துப்பிவிட்டு செல்லும். இந்த படத்திலும் மன்னன் தன் அமைச்சர் பரிவாரங்களோடு வேட்டைக்கு செல்லுவார். ஆனால் கரடியிடம் மாட்டிக்கொள்ளாமல், ஆதிவாசி மனிதர்களிடம் மாட்டிக்கொள்ளுவார்.


(மன்னார் வேட்டைக்கு போகிற காட்சியில், ஓவியா உடனே இப்ப கரடி வரப்போகுது பாருங்கள் என்று கூறினார்!!!).






இந்த படத்தில், அவருக்கு கதாநாயாகியாக நடித்தவரை எந்த அளவிற்கு கவர்ச்சியை காட்டமுடியுமோ அந்த அளவிற்கு கவர்ச்சியை காட்ட வைத்திருக்கிறார்கள். இவரைப் பற்றி பெரிதாக வேறு ஒன்றும் கூற இல்லை.

8 அமைச்சர்களில், மனோபாலாவின் நடிப்பு அருமை.


படத்தின் முக்கிய பலமே வடிவேல் தான். நகைச்சுவை காட்சிகள் அதிகம் இல்லையென்றாலும், தன்னுடைய உடமொழியை வைத்தே படத்தை நகர்த்துகிறார். படம் முழுக்க வசனங்கள் தான் அதிகமாக வருகின்றன. அதனால் இது வடிவேலுவின் படம் என்று சொல்லுவதற்கு கொஞ்சம் கடினம் தான். மொத்தத்தில் ஒரு முறை குடும்பத்தோடு பார்க்கலாம்.



Wednesday, August 21, 2013

555 – விமர்சனம்


படத்தோட தலைப்பை பார்த்தவுடன், இதென்ன சிகரெட் பேர் மாதிரி இருக்கிறதேன்னு யோசிச்சுக்கிட்டே படத்தை பார்க்க ஆரம்பிச்சேன். சிகரெட் பேருக்கும் இந்த படத்துக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. 555ன்னு பொறிக்கப்பட்ட ஒரு லாக்கெட்டினால் பெரிய விபத்து ஏற்படுகிறது. அதனால் தான் இந்த தலைப்பை வைத்து இருப்பார்கள் போல. வில்லனிடமிருந்து, தன்னையும் தன் காதலியையும் காப்பாற்றிக் கொள்ள போராடுகிறார் பரத்.

ஒரு மிக மோசமான விபத்துல பரத் தன்னோட பயணம் செய்த காதலியை பறிகொடுக்கிறார். அந்த அதிர்ச்சியிலிருந்து அவர் மீளாததுனால, அவருக்கு அவருடைய அண்ணன் சந்தானம், மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெறவைக்கிறார். ஒரு கட்டத்துல சந்தானமும், மனநல மருத்துவரும், உங்களுக்கு ஒரு காதலியே கிடையாது, நீங்களே ஒரு கற்பனை கதாப்பாத்திரதை உருவாக்கி, அந்த கதாப்பாத்திரத்தோடு வாழ்ந்து கொண்டு இருக்கீங்கன்னு சொல்றாங்க. சூழ்நிலைகளும் இதற்கு ஏற்றார் போல் அமைகிறது. அதனால் பரத் மட்டும் இல்லை,படம் பார்க்கும் நாமும் தான் குழப்பமடைகிறோம். உண்மையிலேயே அவர் கற்பனை கதாப்பாத்திரத்தோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாரோன்னு சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது. ஆனால் பரத்தோ, இதையெல்லாம் நம்பாமல் நான் சொல்வதெல்லாம் உண்மை. அதை நிரூபிப்பதற்காக தன் காதலியின் வீட்டிற்கு இரவில் செல்கிறார். அங்கு அவரை ஒரு கும்பல் துரத்துகிறது. அந்த கும்பல் எதுக்காக அவரை துரத்துகிறது, காதலி உண்மையிலேயே இருக்கிறாளா என்பதையெல்லாம் ஏகப்பட்ட திருப்பங்களோடு சொல்வது தான் இந்த 555.
இந்த படத்தின் கதாநாயகனே திரைக்கதை தான். நல்ல விறுவிறுப்பாகவும், த்ரில்லிங்காகவும், ஏகப்பட்ட ட்விஸ்ட்களோடு படம் நகர்கிறது. ஆனால் எடுத்துக்கொண்ட மூலக்கரு தான் நம்பும்படியாக இல்லை. 30 வருடங்களுக்கு முன் கவுரவ கொலை செய்யப்பட தன் காதலியின் உருவ அமைப்பில் இருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக கதாநாயகியின்(பள்ளியில் படிக்கிறார்) பெற்றோரை கொன்று, அவரை தத்தெடுத்து வளர்க்கும் வயதான பணக்கார வில்லன், கதாநாயகியின் படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்ய நினைக்கிறாராம். அட கடவுளே! எப்படி தான் இப்படியெல்லாம் யோசிக்கிறாங்களோ!!!!. சில இடங்களில் மிக சாதாரண லாஜிக் கூட இயக்குனருக்கு தெரியவில்லை(இணை இயக்குனர்களுக்கும்,உதவி இயக்குனர்களுக்கும் கூடவா அந்த ஓட்டைகளை தெரியாமல் இருக்கும்!!!). அந்த சாதாரண லாஜிக்கைப் பற்றி சொன்னால், படம் பார்க்கும்போது அந்த விறுவிறுப்பு போய்விடும் என்பதால் அதனை நான் சொல்லவில்லை.  

சந்தானம் ஒரு நகைச்சுவை நடிகாரக இல்லாமல், குணச்சித்திர நடிகராக இதில் நடித்திருக்கிறார். கதாநாயகி மிர்திகா மிகவும் அழகாக இருக்கிறார். பரத்திடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று நம்புவது லூசுத்தனமாக இருக்கிறது. இன்னும் எத்தனை படத்தில் தான், கதாநாயகிகளை இந்த மாதிரி ஒரு லூசுத்தனமான கதாப்பாத்திரமாக காட்டப்போகிறார்களோ?. கதாநாயகியின் வளர்ப்பு அத்தையாக வருபவர், அழகான வில்லி கதாப்பத்திரத்துக்கு மிகவும் பொருத்தமாக இருப்பார். இன்னொரு கதாநாயகி வேற, அவரும் பரத்தை காதலிக்கிறார்.  

இதுல எதுக்காக பரத் ‘6 பேக்’, இல்லையில்லை ‘8 பேக் வச்சிருக்கிறாருன்னு தெரியலை(6 பேக்கா, 8 பேக்கான்னு தெரியலை). ஆனாலும் அதற்காக பரத்தின் உழைப்பு நன்றாக தெரிகிறது.


நன்றாக திரைக்கதையை கொண்டுபோன விதத்துக்காக, இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம்.  

Sunday, August 11, 2013

தலைவா – விமர்சனம்


ஆஹா! 1008 பிரச்சனைகளை கடந்து தலைவா படம் வெளிநாட்டிலும் , இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வெளியாகிவிட்டது.இன்னும் தமிழ்நாட்டில் தான் வெளியாவில்லை. நானும் என்னுடன் நடித்த மற்ற நண்பர்களோடு நேற்று மாலை சென்று படத்தை பார்த்தேன். இந்த படம் ஒரு அரசியல் படம், அரசாங்கத்தை விமர்சிக்கக்கூடிய வகையில் வசனகள் இருக்கிறதுன்னு ஒரு புரளியை கிளப்பி இந்த படத்தை தமிழ்நாட்டில சொன்ன தேதிக்கு திரையிடாம பண்ணிட்டாங்க. இதுல வெடி குண்டு மிரட்டல் வேற. அதுக்கும் மேல இந்த படத்துல  எங்கப்பாவையும், தாத்தாவையும் இழிவுப் படுத்தியிருக்காங்கன்னு கோர்ட்ல வேற ஒருத்தர் கேஸ் போட்டிருக்கிறார். இப்படி ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை கிளப்பிய படம். அந்த எதிர்ப்பார்ப்பை எல்லாம் பூர்த்தி செஞ்சுதான்னா, பெரிய கேள்விக்குறி தான் பதில். இந்த படத்துல புதுசா எந்த ஒரு விஷயத்தையும் இயக்குனர் சொல்ல வரலை. இன்னும் சொல்லப் போனா நாயகன், தேவர் மகன், பாட்ஷா, புதிய பறவை போன்ற படங்களை எல்லாம் சேர்த்து அரைச்ச புளிச்ச மாவு தான் இந்த தலைவா. அதில் கொஞ்சம் இந்த காலத்துக்கு ஏற்ப வெளிநாட்டு காட்சிகள். அப்புறம் முக்கியமா நாங்கள் நடித்த நான்கு காட்சிகளும் இடம்பெற்றுவிட்டன. என்ன, எங்களோட வசனங்களில் கொஞ்சம் கையை வச்சுட்டாங்க. அப்புறம் நாங்கள் நடித்த சில காட்சிகளில் கொஞ்சம் நீளத்தையும் குறைத்து விட்டார்கள். ஆனா இப்படி எல்லாம் குறைச்சும் கூட படம் கிட்ட தட்ட மூன்று மணி நேரம் ஓடுது.

25 வருட்டங்களுக்கு முன் பாம்பேயில் ஏற்பட்ட ஒரு கலவரத்தில் சத்யராஜ் தன்னுடைய மகனை நாசரிடம் ஒப்படைக்கிறார். அந்த மகன் தான் விஜய், பின்னாளில் சிட்னியில் மினரல் வாட்டர் கம்பெனியை சந்தானத்துடன் சேர்ந்து நடத்துகிறார். மனசுக்கு பிடித்த வேலையாக , ஒரு நடனப் பள்ளியையும் நடத்துகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் அமலாபாலை சந்தித்து, கண்டவுடன் காதல் கொள்கிறார். இந்த நேரத்தில் சந்தானமும் அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார். சந்தானத்துக்கு போட்டியாக சிட்னியில் 40 வயது பிரம்மச்சாரிகள் ஏழெட்டு பேரும் அமலாபாலை காதலிக்கும் நோக்கத்தில் அவர் பின்னாடி சுற்றுகிறார்கள். இந்த பிரமாச்சாரிகள் கூட்டத்தில் தான் நானும் ஒருவன். சிட்னியில் நடக்கும் நடனப்போட்டியில். விஜய் வெற்றி பெறுவதை தடுக்க வில்லன் குழு சதி செய்ய, அதனை முறியடித்து விஜய் குழுவினர் பரிசுக்கோப்பையை வெல்கிறார்கள். பிறகு அமலா பாலும் விஜய்யை காதலிக்க ஆரம்பிக்கிறார். தன் தந்தைக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுக்கும் நோக்கத்தில் விஜய், அமலா பாலையும் அவரது தந்தை சுரேஷையும் அழைத்துக்கொண்டு மும்பை செல்கிறார். அங்கு நடக்கும் நிகழ்ச்சிகள், அவரை திரும்பியும் சிட்னிக்கு போக விடாமல் தடுக்கிறது. கடைசியில் தன் தந்தையை கொன்ற வில்லனை பழிவாங்குகிறார். இதை தான் இடைவேளைக்கு பிறகு நிறைய வன்முறை காட்சிகளோடு சொல்லியிருக்கிறார்கள்.

இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகி வேற. பாவம் அவர் எண்ணி ஒரு நான்கைந்து காட்சிகளில் தான் வருகிறார். பெரிதாக அவருக்கு வேலை ஒன்றும் இல்லை. முதல் பாதியில் விஜய்யை காதலித்த அமலாபால் என்ன ஆனார் என்பதை நீங்கள் திரையில் பார்த்துக்கொள்ளுங்கள். அவருடைய கதாப்பத்திரம் புதிய பறவையில் சரோஜா தேவியின் கதாப்பாத்திரம் போல் சித்தரிக்கப்பட்டிருக்கும். சத்யராஜுக்கு தம்பியாக பொன்வண்ணன் நடித்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு நாசர் தான் முதலில் நடிப்பதாக இருந்ததாம். சில பல காரணங்களால் அவருக்கு பதில் பொன்வண்ணன் நடித்திருக்கிறார். நாசர் நடித்திருந்தால் இன்னும் அந்த கதாபாத்திரத்துக்கு வலு சேர்ந்திருக்கும். முதல் பாதி வரைக்கும் தலைவா என்ற தலைப்புக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாமல் நகைச்சுவையோடு படம் நகரந்தது. ஆனால் இடைவேளைக்கு பிறகு படம் எப்படா முடியும் என்ற ஒரு அலுப்பு ஏற்படுகிறது.
எப்படிப்பட்ட படம் என்றே தெரியாமல், தலைப்பை மட்டும் வைத்து இது இப்படி தான் இருக்கும் என்று ஒரு வதந்தியை கிளப்பி, அது இப்போது அரசியல் காட்சிகள் எல்லாம் தலையிடக்கூடிய பிரச்கனை ஆனது தான் மிகப்பெரிய நகைச்சுவையே. படத்தில் நகைச்சுவை கம்மியாக இருந்தாலும், தமிழ்நாட்டில் நடக்கும் கூத்துக்கள் தான் இந்த படத்தின் உண்மையான நகைச்சுவை காட்சிகளே. இறுதியாக இயக்குனர் அடுத்த படத்திலையாவது தன் சொந்த சரக்கை நம்பி படம் இயக்கினால் கண்டிப்பாக அந்த படம் நன்றாக இருக்கும்.


பின் குறிப்பு: நான் இனி வரும் பதிவுகளில் என்னுடைய திரைப்பட அனுபவத்தை சொல்லப்போகிறேன். நான் இந்த படத்தில் வருவது வெறும் 2 நிமிடங்களுக்குள் தான். ஆனால் அதற்கு நான் நான்கைந்து நாட்கள் படப்பிடிப்பிற்கு செல்ல வேண்டியிருந்தது. அதிலும் இரு முறை படப்பிடிப்பிற்கு சென்று இரண்டு மணி நேரங்கள் காத்திருந்து கடைசியில் எங்கள் காட்சிகளை எடுக்காமல் திரும்பி சென்ற கதை எல்லாம் இருக்கிறது. 

Sunday, October 14, 2012

மாற்றான் VS சாருலதா – விமர்சனம்


வீட்டு அம்மணியும், மகாரணிகளும் ஊருக்கு சென்று விட்டதால், படம் பார்க்க நிறைய நேரம் கிடைக்கிறது. முன்பெல்லாம் ஒரு படத்தை பார்த்து முடிக்க கிட்டதட்ட, 10-15 நாட்கள் ஆகும். அதற்குள் அந்த கதையே மறந்து போகும். ஆனால் இப்பொழுதோ, ஒரு படத்தை பார்த்து முடித்து விட்டு தான் அடுத்த வேலையே. இரண்டு வாரத்துக்கு முன்பு, பிரியாமணி  நடித்த சாருலதா படத்தை பார்த்தேன். இதற்கு விமர்சனம் எழுதலாம் என்று நினைக்கும்போது மாற்றானும், இதே மாதிரி ஒட்டிப் பிறந்தவர்களின் வாழ்கையில் நடக்கும் கதை என்று தெரிந்தது. நேற்று தான் மாற்றானை திரை அரங்கில் சென்று பார்த்தேன். சரி, இரண்டு படங்களையும் தொடர்பு படுத்தி ஒரு விமர்சனத்தை எழுதலாம் என்று நினைத்து, இதோ இரு படங்களின் திரை விமர்சனம்.

முதலில், இந்த இரு படங்களின் ஒற்றுமைகளை பார்ப்போம்.

மாற்றானில் சூரியா இரட்டைப் பிறவிகளாக ஒட்டிப் பிறந்திருப்பார்கள். சாருலதாவிலோ ப்ரியாமணி ஒட்டிப் பிறந்திருப்பார்கள். இரு சூரியாக்களுக்கும் காஜல் அகர்வாலின் மீது காதல் வரும். அதே மாதிரி, இரு பிரியாமணிகளுக்கும் ஸ்கந்தாவின் மீது காதல் வரும். இரு படங்களிலும், ஒட்டிப் பிறந்தவர்களில் ஒருவர் இறந்து விடுவார், இன்னொருவரோ, மற்றவரை போல் மாறி விடுவார்.  இரு படங்களிலும் இரட்டையர்களை பிரித்து காட்டுவதற்கு அவர்களின் சிகை அலங்காரத்தில் வித்தியாசத்தை காட்டியிருப்பார்கள். வெவ்வேறு பிரச்சனைகளுக்காக இரண்டு சூரியாக்களும், இரண்டு பிரியாமணிகளும் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்வார்கள். இரண்டு சூரியாக்களும் நடனமாடுவார்கள். அதே மாதிரி, இரண்டு பிரியாமணிகளும் வயலின் வாசிப்பார்கள்.

இவ்வளவு ஒற்றுமைகள் இருந்தாலும், இரு படங்களின் கதைக்களம் முற்றிலும் மாறுபட்ட கதைக்களங்கள்.


  
சாருலதா - திகில் படமான 'சாருலதா' தாய்லாந்தில் வெளியான 'அலோன்' என்ற படத்தின் தழுவலாகும். சாருவும், லதாவும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள். இருவருமே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, எந்த நிலையிலும் பிரியக்கூடாது என்று உறுதியோடு வளர்கின்றனர். சாதுவான குணம் கொண்ட பெண்ணாக சாருவும், முரட்டுக் குணம் கொண்ட பெண்ணாக லதாவும் வளர்கிறார்கள். இருபது வயது வரை எந்தப் பிரச்சனையயும் இல்லை. அதன் பின் ஸ்கந்தாவை பார்த்த முதல் பார்வையிலே காதலில் விழுகிறார் லதா. எங்கே தன் காதலால், சாருவை பிரிய நேர்ந்துவிடுமோ என்று அஞ்சி, தன் காதலை மனதுக்குள்ளேயே புதைத்து விடுகிறார். இது தெரியாமல், ஸ்கந்தா சாருவை காதலிக்க, சாருவும் அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார். இதை அறிந்த லதாவோ “நான் உனக்காக என் காதலை குழி தோண்டி புதைத்தால், நீங்கள் இருவரும் எனக்கா துரோகம் செய்கிறீர்கள்” என்று சாருவோடு சண்டை போடுகிறார். இந்த சண்டையில், அசந்தர்ப்பமாக இருவரில் ஒருவர் இறந்து விடுகிறார். இன்னொருவர் ஸ்கந்தாவை திருமணம் செய்துக் கொள்ள நினைக்கையில், இறந்தவரின் ஆவி தன்னோடு ஒட்டிப் பிறந்த சகோதரியை பயமுறுத்தி, அவளை நிம்மதியில்லாமல் செய்கிறது. இறந்தது யார், அந்த ஆவி அவர்கள் இருவரையும் சேர்ந்து வாழ அனுமதித்ததா என்ற கேள்விகளுக்கு இறுதியில் விடை கிடைக்கிறது. இந்தப் படத்தை தூக்கி நிறுத்தியிருப்பதே பிரியாமணியின் நடிப்பு தான். இரண்டு கதாபாத்திரங்களை தன் உடல் அசைவுகளின்  மூலம் வித்தியாசப்படுத்தி பிரமாதமாக நடித்திருக்கிறார். தான் ஒரு தேசிய விருது வாங்கிய நடிகை என்பதை மீண்டும் அந்த இறுதிக் காட்சியில் நிருபித்திருக்கிறார். இயக்குனர் பொன் குமரனுக்கு இது முதல் படம். தன் முத்திரையை படிக்க முயற்சித்து, அதில் சிறிதளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.



மாற்றான் – அகிலனும், விமலனும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள். இவர்கள் இப்படி பிறப்பதற்கு, இவர்களின் தந்தை தான் காரணம். சூர்யாவின் தந்தை ஒரு மரபணு ஆராய்ச்சியாளர். தனக்கு பிறக்கப் போகும் குழந்தை பல சக்திகள் கொண்டதாக பிறக்க வேண்டும் என்று நினைத்து, தனது மனைவிக்கு டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பிறக்கச் செய்கிறார். அந்த ஆராய்ச்சியின் தோல்வியால் ஒரு இதயம், இரு உடல் என்று இரட்டை குழந்தை ஒட்டி பிறக்கிறது.இந்நிலையில், ஏழ்மையில் இருக்கும் அவர், குழந்தைகளுக்கான பால் பவுடர் ஒன்றை தயாரித்து அதன் மூலம் பெரிய கோடீஸ்வரனாகிறார். குறுகிய காலத்தில் அந்த நிறுவனம் அடையும் வளர்ச்சியை கண்டு, போட்டி நிறுவனங்கள் அந்த பால் பவுடர் தயாரிக்கும் முறையை அறிய முயற்சிக்கிறார்கள்.  ரஷ்யாவில் இருந்து வரும் ஒரு பெண்ணும், சூர்யாவின் அப்பாவுடைய பால்  பவுடர் நிறுவனத்தை உளவு பார்க்கிறார். இதற்கிடையில் அந்த நிறுவனத்தில் மொழி பெயர்ப்பாளராக பணிபுரியும் காஜல் அகர்வாலுக்கும். இரட்டை சூர்யாவில் அமைதியான சூர்யாவுக்கும் காதல் ஏற்படுகிறது. சூர்யாவின் அப்பாவுடைய பால் பவுடர் நிறுவனத்தைப் பற்றி தகவலை சேகரிக்கும் அந்த ரஷ்ய பெண் கொல்லப்படுகிறார். கொலை செய்யப்பட்ட அந்த பெண், இறப்பதற்கு முன்பு தான் சேகரித்த தகவல்களை ஒரு பென்டிரைவில் காப்பி செய்து அதை விழுங்கி விடுகிறார். அந்த பென்டிரைவ்  சாதுவான சூர்யாவிடம் கிடைக்கிறது. அந்த பென்டிரைவ்வை  கைபற்ற நினைக்கும் ஒரு கும்பல் சூர்யாவை தாக்குகிறது. இந்த தாக்குதலில் சாதுவான சூர்யா இறந்துப் போகிறார். பிறகு உயிரோடு  இருக்கும் இன்னொரு சூர்யாவிடம் அந்த பென்டிரைவர் கிடைக்கிறது. அதை வைத்து சூர்யா என்ன செய்தார்? சூர்யாவின் அப்பா தயாரிக்கும் பால் பவுடரில் அப்படி என்ன இருக்கிறது? என்பதுதான் மீது கதை. ஓட்டிப் பிறந்த இரட்டையர்களாக வரும் அகிலன் விமலன் கதாபாத்திரங்களில் சூர்யா சும்மா பூந்து விளையாடியிருக்கிறார்”.  ஒட்டிப் பிறந்த இருவரும் நடனமாடுகிறார்கள், சண்டை போடுகிறார்கள். இந்த படத்துக்காக சூர்யா ரொம்பவும் சிரமப்பட்டிருப்பது நன்றாக தெரிகிறது. ஒரு சூர்யா இறந்தவுடன், உயிரோடு இருக்கும் இன்னொரு சூரியா முதன்முதலில் தானாக நடக்கும் காட்சி ஒன்றே போதும், எந்த அளவுக்கு அவர் கஷ்டப்பட்டிருக்கிறார் என்று கூற. படம் பார்க்கும் நமக்கே ஒரு சூரியாவை மட்டும் பார்க்கும்போது, இன்னொரு சூரியாவை காணோமே என்று ஏங்க வைத்திருப்பது, இந்தப் படத்துக்கு கிடைத்த பெரிய வெற்றி. ஒளிப்பதிவு நம் கண்களுக்கு பெரிய விருந்தையே அளிக்கிறது. இந்தப் படத்தில் மிகவும் சிரமமான ஒன்று சண்டைக் காட்சிகளும் நடனக் காட்சிகளும் தான்.  சிறப்பாக நடித்த பெருமை சூர்யாவுக்கு போனாலும், அது நிறைவேறக் காரணமாக இருந்த பீட்டர் ஹெய்ன் மற்றும் நடன இயக்குனர்கள் பிருந்தாவும் தினேஷும் பாராட்டுக்குரியவர்கள்.  முதல் பாதி மிகவும் விறுவிறுப்பாகவும், நகைச்சுவையாகவும் நகர்கிறது. ஆனால் இரண்டாம் பாதியை ரொம்பவும் இழுத்து, எப்ப தான் படம் முடியுமோ என்று என்ன வைக்கிறது.

ஆக மொத்தத்தில், இரு படங்களையுமே சூரியாவுக்காகவும்,பிரியாயமணிக்காகவும் பார்க்கலாம்.