நானும் இன்னொரு நண்பரும் இப்ப சாப்பிடலாமா வேண்டாமான்னு யோசிச்சுக்கிட்டு
இருக்கும்போது, கிருஷ்ணா
எங்களை ஷாட் ரெடி வாங்கன்னு கூப்பிட்டாரு. நாங்க அந்த சின்ன அறைக்குள்ள போனோம். அங்க
டேபிள் சேர் எல்லாம் அரேஞ்ச் பண்ணி வச்சிருந்தாங்க. ஐந்து ஐந்து பேர் எதிர்,எதிர்ல வரிசையா உட்கார்ந்தோம். அதுல நான் ஒரு வரிசையில முத ஆளா உட்கார்ந்தேன்.
எங்களோட வலது பக்கத்துல அதே மாதிரி ஒரு எட்டு பேர் எதிர் எதிர்ல உட்காருக்கிற மாதிரி
டேபிள் சேர் போட்டு இருந்தாங்க. அதுல இந்த படத்துல நடிக்கிற டான்சர் பாய்ஸ் உட்கார்ந்திருந்தாங்க.
அதுல ஓரத்துல ஒரு சீட்டுல அஸோசியேட் டைரக்டர் பிரசன்னாவும் அவருக்கு பக்கத்துல சந்தானமும்
உட்கார்ந்திருந்தாங்க. சரி, இணை இயக்குனரும் நடிக்கிறார் போலன்னு
நான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். நீரவ்ஷா வந்து காமிராவை அந்த அறையோட கதவு கிட்ட வச்சுக்கிட்டு
உட்கார்ந்திருந்தாரு. அதாவது அவர் எங்களோட இடது பக்கத்திலிருந்து ஷுட் பண்றதுக்கு ரெடியா
இருந்தாரு. எங்கடா, அமலாபாலை காணோம்னு பார்த்தா, அவருக்கு அவரோட மேக்கப் மேன் மேக்கப் போட்டுக்கிட்டு இருந்தாரு(ரொம்ப பெருசா
எல்லாம் இல்லை, சும்மா முகத்துல பவுடரை அப்பிக்கிட்டு இருந்தாரு.
போதாக்குறைக்கு கண்ணாடியை வேற எடுத்து காமிச்சு, இன்னும் பவுடர்
போடட்டுமான்னு கேட்டுக்கிட்டு இருந்தாரு). அமலாபாலுக்கு பின்னாடி அவருடைய உதவியாளர்
இன்னொரு பொண்ணு சரியா இருந்த அவுங்க தலை முடியை,சுருக்கி விட்டுக்கிட்டு
இருந்தாங்க. இந்த களேபரத்துக்கு நடுவுல இயக்குனர்
விஜய் எங்க கிட்ட அந்த காட்சியை விளக்க ஆரம்பிச்சாரு. அதாவது நடிகர் சசுரேஷும் அவரோட
மகள் அமலாபாலும் இந்த ஹோட்டலை நடத்துறாங்க. அமலாபாலோட ஹோட்டல்னு தெரிஞ்சு, நீங்க எல்லோரும் அவரை பார்க்கிறதுக்காக இந்த ஹோட்டலுக்கு சாப்பிட வறீங்க.
அப்ப சந்தானமும் உங்களுக்கு போட்டியா இங்க சாப்பிட வருவாரு. உங்களுக்கு இங்க இருக்கிற
சாப்பாடு பற்றி ஒண்ணும் தெரியாது . அதனால சிவப்பு கலரை கொண்டுவாங்க, பச்சை கலரை கொண்டுவாங்க,மஞ்சக்கலரை கொண்டுவாங்க அப்படின்னு
நீங்க பாட்டுக்கு கத்திக்கிட்டே இருப்பீங்க. அமலாபால் உங்களுக்கு பரிமாறுவாங்க. அவுங்களை
வேற யாருக்கும் கவனிக்க விடாம நீங்க அவுங்களை கூப்பிட்டுக்கிட்டே இருக்கணும். அவுங்களை
குறிப்பா சந்தானம் பக்கம் போய் பரிமாற விடக்கூடாது, அப்படின்னு
எங்களுக்கு காட்சியை சொல்லி முடிச்சு, சரி நாம ஒரு ரிகர்சல் பார்த்துடலாம்னு
சொன்னாரு. இதுல, கலர் கலரா சாதம் என்னன்னா, “தக்காளி சாதம், புளியோதரை, எலுமிச்சை
சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம்,கொண்டகடலை குருமா இந்த மாதிரி”. இந்த சாதம் வகைகள் எல்லாம் இந்த உணவகத்துல
செய்ய மாட்டாங்க (இந்த உணவகம் ஒரு வடக்கத்திய உணவகம்), அதனால
முதல் நாள் இரவு 10 மணிக்கு, வேறு ஒரு நண்பருக்கு இந்த படக்குழுவினர்
போன் பண்ணி, நாளைக்கு காலைல 9 மணிக்கு எல்லாம் இத்தனை வகையிலும்
கொஞ்சம், கொஞ்சம் செஞ்சு எடுத்துக்கிட்டு வந்துடுங்கன்னு சொல்லியிருக்காங்க.
அந்த நண்பரோட மனைவியும் காலைல எந்திரிச்சு இத்தனை வகைகளையும் செஞ்சு எடுத்துக்கிட்டு
வந்திருக்காங்க.
ரிகர்சல்ல முதல்ல என்னைய இயக்குனர், நீங்க “சிகப்பு கலர்” கொண்டுவாங்கன்னு சொல்லுங்கன்னு
சொன்னாரு, அப்புறம் ஒருத்தரை “மஞ்ச கலர்”, இன்னொருத்தரை “பச்சை கலர்”ன்னு வரிசையா சொல்ல சொன்னாரு. அப்புறம் அமலாபாலிடம், “அம்லா” ரெடியான்னு கேட்டாரு. அவுங்களும் நான் ரெடின்னு சொன்னாங்க.
நீரவ்ஷாவிடம், “நீரவ், நாம
ஒரு ரிகர்சல் பார்த்துடலாம்னு சொல்லி, நான் ஆக்ஷன் சொன்னவுடனே, நீங்க கத்த ஆரம்பிச்சிடணும்னு சொன்னாரு. நாங்களும் அதே மாதிரி கத்தினோம்.
அமலாபால் முதல்ல எனக்கு எதிர்ல இருக்கிற நண்பருக்கு பரிமாறுவாங்க, அப்புறம் வேற ஒருத்தருக்கு பரிமாறுவாங்க, அப்புறம் எனக்கு
பரிமாறுவாங்க அவ்வளவுதான். இந்த காட்சியையே ஒரு 4/5 தடவை ரிகர்சல் பார்த்தோம். அப்புறம்
என்ன நினைச்சாங்களோ தெரியலை, இயக்குனர் அந்த அறைக்குள்ள இருந்தவங்க
எல்லாரையும் பார்த்து, நீங்க போய் சாப்பிட்டு சீக்கிரம் வந்துடுங்கன்னு
சொல்லி லஞ்ச் பிரேக் விட்டாரு. உதவி இயக்குனர்கள், அப்புறம் அந்த
டான்ஸ் பாய்ஸ் எல்லாரும் சாப்பிட போயிட்டாங்க. எங்களுக்கு ஒரே குழப்பம், நாமளும் போய் சாப்பிடலாமான்னு. ஒரு வழியா சரி, நாமளும்
போய் பார்க்கலாம்னு முடிவு பண்ணி நாங்களும் அந்த சாப்பாட்டு அறைக்குள்ள போனோம். இன்னொரு
பெரிய அறைல எல்லோரும் சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. நாங்களும் அந்த வரிசைல போய் நின்னு
பேப்பர் தட்டுல சாப்பாட்டை எடுத்துக்கிட்டு போய் சாப்பிட்டோம். ஆனால் சும்மா சொல்லக்கூடாது, சாப்பாடு ரொம்ப அருமையா இருந்துச்சு. இந்த கேட்டரிங் வந்து நண்பரோட நண்பர்
தான் எடுத்து பண்றாரு. காலையிலும் மதியமும் சைவ சாப்பாடு. அதை அவர் பண்ணிக்கொடுக்கிறதாகவும்.
இரவு அஞ்சப்பர்லேருந்து அசைவ சாப்பாடுன்னு
சொன்னாங்க. பரவ்வாயில்லை, எங்களுக்கும்
சாப்பாடு கொடுத்துட்டாங்க. நாங்களும் நல்லா திருப்தியா சாப்பிட்டோம். படக்குழுவினரோடு
நின்னு சாப்பிட்டது ஒரு வித்தியாசமான அனுபவமா இருந்துச்சு. இயக்குனர், அமலாபால், சந்தானம், நீரவ்ஷா இவுங்க
எல்லோரும் காட்சி எடுக்கிற அறையிலேயே உட்கார்ந்து சாப்பிட்டாங்க. நாங்க சாப்பிட்டு
முடிச்சு மறுபடியும் எங்களோட சூட்டிங் ஸ்பாட்டுக்குள்ள போனோம். நான் போறதுக்குள்ள, எங்க கூட்டத்திலிருந்த வேற ஒருத்தர், என் இடத்துல போய்
உட்கார்ந்துக்கிட்டாரு. ஏற்கனவே, அந்த ரோஸ் கொடுக்கிற காட்சியில, என் பக்கத்துல நின்னவரு, அவர் நிக்க வேண்டிய இடத்துல
நிக்காம என்னைய தள்ளிக்கிட்டு நிப்பாரு. அதையுமே இயக்குனர் ஒரு ரெண்டு மூணு தடவை அவரிடம்
ரொம்ப தள்ளிக்கிட்டு வந்து நிக்காதீங்கன்னு சொல்லி சொல்லி அலுத்துப்போனாரு. இப்ப, இங்க இன்னொருத்தர் என் சீட்டுல வந்து உட்கார்ந்துக்கிட்டு இருக்காரு. எனக்கு என்ன பண்றதுன்னே ஒண்ணும் புரியலை. ஆஹா, நம்ம மக்களுக்கு தான் என்ன ஒரு பேராசைன்னு நினைச்சுக்கிட்டு நின்னேன். அதுக்குள்ள
கிருஷ்ணா அவரிடம் வந்து, சார், நீங்க உங்க
இடத்துல போய் உட்காருங்கன்னு சொன்னாரு. அதற்கப்புறம் தான் அந்த மனிதர் எந்திரிச்சு
போய் அவரோட இடத்துல உட்கார்ந்தாரு. எங்களுக்கு மின்னடி இருக்கிற தட்டுல, எல்லா சாதமும் இருக்கும், ஆனா எடுத்து சாப்பிடக் கூடாது, சாப்பிட மாதிரி நடிக்கணும்னு சொன்னாரு இயக்குனர். நாங்களும் மறுபடியும் கத்துறதுக்கு
ரெடியா இருந்தோம். அப்பத்தான் எங்க அறைக்குள்ள,அதாவது சூட்டிங்
ஸ்பாட்டுக்குள்ள விஜய் வந்தாரு.
தலைவா திரைப்பட அனுபவம் – உணவகத்தில் சாப்பிடும் காட்சி – விஜய்யை நாங்கள் காக்க வைத்தது
தலைவா திரைப்பட அனுபவம் – உணவகத்தில் சாப்பிடும் காட்சி – விஜய்யை நாங்கள் காக்க வைத்தது
- இன்னும் சொல்கிறேன்