(படங்கள் உதவி - கூகிள் ஆண்டவர்)
அமர்நாத் யாத்திரைக்கு, நாம் நினைத்தபடி, நினைத்த நாளில்
எல்லாம் செல்ல முடியாது. ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதத்தில் இருந்து ஆகஸ்ட்
மாதத்தில் சில நாட்கள் வரை தான் அந்த யாத்திரை அனுமதிக்கபடும். இந்த யாத்திரையை
ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் தான் நடத்துகிறது. மற்ற கோவில் ஸ்தலங்களுக்கு செல்வதற்கு, அரசாங்கத்தின் அனுமதி
தேவை இல்லை. ஆனால் இந்த யாத்திரைக்கு, அரசாங்கத்தின் அனுமதியும், மருத்துவச் சான்றிதழும் தேவை. அமர்நாத்துக்கு பக்கத்தில் தான் பாகிஸ்தான்
இருக்கிறது. யாத்ரீகள் என்னும் போர்வையில், தீவிரவாதிகள் நுழையக்கூடாது என்பதற்காகத்தான் அரசாங்கத்தின் அனுமதி வாங்க
வேண்டியுள்ளது. பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள், ஒரு மருத்துவ சான்றிதழ் மற்றும் ஒரு பூர்த்தி செய்த விண்ணப்பம் ஆகியவற்றை
ஜம்மு- காஷ்மீர் வங்கியில் தந்து, பணத்தைக் கட்டினால், ரெஜிஸ்டிரேசன் கம் ஐடென்டிடி ஸ்லிப்(Registration Cum Identity Slip) கிடைக்கும். இது
இருந்தால் தான் நம்மை அமர்நாத் யாத்திரைக்கு அனுமதிப்பார்கள்.
சரி அமர்நாத் யாத்திரையைப் பற்றி கொஞ்சம் தெரிந்துக்
கொண்டோம். இனி காசியின் பெருமையை அடுத்த பகுதியில் பார்க்கலாம்
- புத்தகத்தில் படித்தது.
“இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு”
அதாவது, வீட்டிலுள்ள பொருட்களை காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம்
விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும். இந்த திருக்குறளின் படி, காரைக்கால் அம்மையார் வாழ்ந்து வந்திருக்கிறார், அதனால்
தான் சிவபெருமானும், தன்னுடைய அடியாருக்கு விருந்தோம்புதல்
புரிந்த புனிதவதியாருக்கு உதவி செய்யும் பொருட்டு அவருக்கு முதலில் ஒரு மாங்கனியை வழங்கினார்.
அதை உண்ட பரமதத்தனும் அதன் சுவையில் மயங்கி, அந்த மாங்கனி வந்த விதத்தை அறிந்தான்.
இருப்பினும் காரணத்தை நம்பாமல், மீண்டும் இதே மாதிரி ஒரு
சுவையான கனியைப் பெற்றுத் தரவேண்டும் என்று கூறினான். புனிதவதியாரும் உள்ளே சென்று, இன்னொரு பழம் தந்தருள
வேண்டும், இல்லையேல் என் உரை பொய்யாகும் என்று சிவபெருமானை மனமுருக பிராத்தித்தார்.
புனிதவதியாரின் வாக்கு பொய்க்கக்கூடாது என்று
எண்ணி, அவர் கையில் இன்னொரு மாங்கனியை வைத்து அருளினார். அதைக் கண்டவுடன்
புனிதவதியார் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். பிறகு அதைக் கொண்டு வந்து கணவனிடம்
கொடுத்தார். பரமதத்தனுக்கு மிகவும் ஆச்சிரியமாகி விட்டது. அவன் அதை தன் வாயிக்கு
கொண்டு போனபோது, அது அப்படியே மறைந்து விட்டது. இதைத்தான், “கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை” என்று பெரியவர்கள்
கூறுவார்கள் போலும். முதலில் கனியைப் பார்தவுடன், ஆச்சிரியமடைந்த பரமதத்தன், அந்த கனி மறைந்தவுடன், மிகவும் அதிர்ச்சி
அடைந்தான். தன் மனைவியினுடைய சிவ பக்தியால் தான், இந்த அதிசியம் எல்லாம் நடக்கிறது என்று
புரிந்து கொண்டான். இந்த உண்மையை புரிந்துக்கொண்டதால், அவன் தன் மனைவியை
தெய்வமாக பார்க்க ஆரம்பித்து விட்டான். உடனே புனிதவதியாரைப் பார்த்து கை எடுத்து
கும்பிட்டான். தன் மனைவி தெய்வத்தன்மை உடையவர் என்று நம்ப ஆரம்பித்து விட்டான்.
இறைவனுடைய பூரண அருளைப் பெற்ற உன்னை என்னால் இனிமேல் மனைவியாக பார்க்க முடியாது.
உன்னுடன் சேர்ந்து வாழ எனக்கு தகுதி கிடையாது. அதனால் வெளி உலகுக்கு கணவன்
மனைவியாக வாழ்வோம், வீட்டில் தனி தனியாக வாழ்வோம் என்றான். கணவனின் இந்த பேச்சைக் கேட்டவுடன்
புனிதவதியார் மிகவும் மனம் வருந்தினார். கடைசியில், கணவனின் சொல்லை மீறக்கூடாது என்பதற்காக, அவனுடைய
விருப்பத்திற்கு இணங்கி, இருவரும் ஒரே வீட்டில் இருந்து கொண்டு தனி தனியே வாழ்ந்தனர். உறவினர்கள்
யாருக்கும் தெரியாதபடி இந்த வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.
இப்படியாக வாழ்ந்து கொண்டு இருந்த பொழுது, புனிதவதியாரும் உலகப்
பற்றைத் துறந்து வாழும் பக்குவ நிலையை பெற ஆரம்பித்தார். பரமதத்தனோ, இரு விதமான இந்த
வாழ்க்கையை வாழ விரும்பாமல், தன் உறவினர்களிடம் வெளியூர் சென்று பொருள் ஈட்டப்போவதாக கூறினான்.
அவர்களும் அவனுடைய முடிவிற்கு சம்மதம் அளித்தனர். அந்த காலங்களில், வணிகர்கள்
வெளியுருக்குச் சென்று பொருள் ஈட்டுவது* வழக்கம். அதன்படி, ஒரு நாள் , தன் மனைவியிடமும், உறவினர்களிடமும்
விடைப்பெற்று வெளியூருக்குப் புறப்பட்டான், ஆனால் எந்த ஊருக்கு செல்கிறேன் என்று சொல்லவில்லை. அவன் பாண்டிய நாட்டிற்கு
சென்று வாணிபம் செய்ய ஆரம்பித்தான். சிறிது காலத்திற்கெல்லாம் தன் திறமையால் அவன்
அங்கு பெரிய செல்வந்தன் ஆனான். அந்த ஊரில் இருக்கும் ஒரு வணிகர் அவனுடைய செல்வச்
சிறப்பையும், அழகையும் உணர்ந்து, தன் மகளை அவனுக்கு திருமணம் செய்துக் கொடுத்தார்.
அவனும், தன் இரண்டாவது மனைவியோடு, இன்பமாக வாழ்ந்து வந்தான். அப்படி வாழ்ந்து வந்த போதும், தன் முதல் மனைவியை
எப்போதும் மறக்காமல், மனதில் அவளை வணங்கி வந்தான். ஒரு நன்னாளில், அவனுடைய இரண்டாவது மனைவி ஒரு அழகான பெண்
குழந்தையைப் பெற்றடுத்தாள். அந்த குழந்தைக்கு, புனிதவதி என்று தன் முதல் மனைவியின் பெயரை
வைத்தான். இப்படி அவனுடைய வாழ்க்கையோ இன்பமாக அமைந்தது. ஆனால், புனிதவதியாரின்
வாழ்க்கையோ, அறவழியில் அமைந்தது. எப்போதும் சிவபெருமானை நினைத்துக்கொண்டும், பூஜை செய்துக்கொண்டும்
வாழ்ந்து வந்தார். பரமதத்தன் பாண்டிய நாட்டில் இருக்கும் செய்தி, புனிதவதியாருக்கும்
அவருடைய உறவினர்களுக்கும், மற்ற வணிகர்கள் மூலம் தெரிய வந்தது. உறவினர்களோ, புனிதவதியாரை
எப்படியும் பரமதத்தனோடு சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைத்து, புனிதவதியாரையும்
அழைத்துக்கொண்டு பாண்டி நாட்டை நோக்கி புறப்பட்டு போனார்கள். பாண்டி நாட்டில்
பரமதத்தன் இருக்கும் நகருக்கு வெளியே உள்ள ஒரு இடத்தில் தங்கி, புனிதவதியார்
வந்திருக்கும் செய்தியை பரமதத்தனுக்கு ஒரு ஆள் மூலம் சொல்லி அனுப்பினர்.
புனிதவதியாரின் இந்த திடீர் வருகையை கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத பரமதத்தன்னோ, என்ன செய்வது என்று
அஞ்சினான். பிறகு தன் இரண்டாவது மனைவியோடும், குழந்தையோடும் புனிதவதியாரைப் போய் பார்த்தான். பார்த்த உடனே மனைவி, மகளுடன்
புனிதவதியாரின் பாதங்களில் விழுந்து வணங்கி எழுந்தான்.
பிறகு புனிதவதியாரைப் பார்த்து, நான் உங்களுடைய
திருவருளால், நலமாக வாழ்கிறேன். இந்தக் குழந்தைக்கு, தங்களின் பெயரையே சூட்டியுள்ளேன். தாங்கள்
தான் எங்களுக்கு அருள் புரிய வேண்டும் என்று கூறினான். தன் கணவனின் செயலைக் கண்டு
புனிதவதியார் அஞ்சி ஒதுங்கி நின்றார். பரமதத்தன் புனிதவதியாரின் காலில்
விழுந்ததைப் பார்த்த உறவினர்களுக்கோ, பெரிய அதிர்ச்சியாகி விட்டது. பரமதத்தனிடம், மனைவியின் காலடியில் விழலாமா? அப்படி விழக் காரணம்
என்ன என்று கேட்டனர். அதற்கு பரமதத்தனோ, பெரியோர்களே! இவர் என் மனைவியாக இருக்கலாம். ஆனால் இவர்கள் தெய்வத்தன்மை
உடையவர்கள். அதனால் தான் காலில் விழுந்தேன். நீங்களும் இவரைப் போற்றி வழிபடுங்கள்
என்று கூறினான். இதைக் கேட்ட அனைவரும் திகைத்து நின்றனர். புனிதவதியாரோ மிகவும் மன
வேதனை அடைந்தார். அழகுத் திருமகளாய், இளமை குன்றாத வடிவழகு பெண்ணாய் காட்சி அளித்த புனிதவதியார், தன் இளமையையும், அழகையும் வெறுத்தார்.
ஒரு பெண் கணவனுக்காக மட்டும் தான் அழகோடும், இளமையோடும் வாழ வேண்டும் என்ற பெண்மையின் இயல்பினை உணர்ந்திருந்த
புனிதவதியார், அந்த நொடியே, சிவபெருமானை நினைத்து, மனம் உருக ஒரு வேண்டுதலை வேண்டினார்.
புனிதவதியார் அப்படி என்ன பிராத்தனை செய்தார்? அந்த ஈசுவரன் அவருடைய
வேண்டுதலை நிறைவேற்றினாரா?
-