Friday, August 29, 2014

வலைப்பூ உலகை மறந்த அந்த இரு வாரங்கள்


 
வலைப்பூ நண்பர்களுக்கு வணக்கம். கடந்த இரு வாரங்களாக அடியேன் வலைப்பூ உலகை விட்டு சற்று ஒதுங்கியிருந்தேன். “எல்லோரும் நலம் தானே, வேலைப் பளுவா” என்று திரு, துளசிதரன் சார் அன்பாக கேட்டிருந்தார்கள். அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். உண்மையில் வேலைப்பளு எல்லாம் இல்லை. என்னிடம் இருக்கும் ஒரு மிகப்பெரிய கெட்டப் பழக்கம், எந்த ஒரு வேலையையும் முன்கூட்டியே செய்யாமல், கடைசி நேரத்தில் செய்வது தான். இதனால் ஏற்பட்ட பாதிப்பு தான் நான் இரு வாரங்களாக வலைத்தளத்திற்கு வர இயலாமல் போனது.

இங்கு கடந்த இரு வாரங்களாக “ஆஸ்திரேலிய தமிழ் பட்டதாரிகள் சங்கம்” நடத்தும் தமிழ் ஊக்குவிப்பு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஓவியா கவிதை மனனப்போட்டியிலும், வாய் மொழித் தொடர்பிலும் மற்றும் தனி நடிப்பு போட்டியிலும் பங்கேற்றிருந்தார். அதில் முதல் இரண்டை வீட்டு அம்மணி சொல்லிக்கொடுத்து விட்டார்கள். இந்த தனி நடிப்பு போட்டிக்கு (“Mono Acting”) “ஊக்கமது கைவிடேல்” என்ற கருப்பொருளில் ஏதாவது ஒரு தலைப்பில் 3 நிமிடங்கள் முதல் 5 நிமிடங்கள் வரை நடித்துக்காட்ட வேண்டும். அந்த போட்டிக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு தான், ஓவியாவிற்கு ஏற்ற ஒரு சின்ன ஸ்கிரிப்ட்டை தயார் செய்து நடிக்க சொல்லிக்கொடுத்தேன். அவரும் மிக குறுகிய காலத்தில் அந்த தனி நடிப்பு போட்டியில் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தில் வந்து விட்டார். (இவைகளைப் பற்றிய விவரங்களை தனிப்பதிவாக எழுதுகிறேன்).   

இன்று மாலை முதல், ஞாயிறு வரை இங்கு “சைவநெறி மாநாடு” நடக்க இருக்கிறது. இதில் நாளை மாலை நாங்கள் நடிக்கும் “ஈசனின் திருவிளையாடல்” என்ற குறு நாடகம்(25 நிமிடம்) அரங்கேற உள்ளது. சிவபெருமான் புரிந்த 64 திருவிளையாடல்களில், ஒரு திருவிளையாடலை எடுத்துக்கொண்டு, அதனை இன்றைய நடைமுறை வாழ்க்கையோடு கோர்த்து ஒரு நாடகமாக மாற்ற முயற்சித்து,சென்ற வாரம் தான் அந்த முயற்சிக்கு இறுதி வடிவம் கொடுத்தேன். என்னுடைய இந்த கடைசி நேரம் செய்யும் பழக்கத்தால், இதில் நடிக்கிறவர்களையும் நான் சிரமத்திற்கு உள்ளாக்கியிருக்கிறேன். அவர்களும், என்னிடம் ஒன்றும் சொல்ல முடியாமல், நாங்கள் வசனங்களை எப்படியாவது மனப்பாடம் செய்து விடுகிறோம் என்று கூறியிருக்கிறார்கள். நாடகத்துக்கான ஒத்திகையையும் இப்பொழுது தான் ஆரம்பித்திருக்கிறோம். மேலும் நாளைய தினத்தில், மாநாட்டில் நான் எழுதிய கட்டுரையை (“இணையம் வழி சமயக்கல்வி கற்றலும் கற்பித்தலும்”) சமர்பிக்க இருக்கிறேன். அதற்கு தேவையான பவர் பாயிண்ட் பிரசன்டேஷன் (Power point presentation) இன்னும் செய்து முடிக்க வில்லை (இன்றிரவு அதை முடித்து விட முடியும் என்று நம்புகிறேன்!!!).
 
இந்த வாரத்தின் ஆரம்பத்தில் வலைத்தளத்திற்கு வரலாம் என்று நினைத்த பொழுது தான், உடல் நிலை சிறிது சரி இல்லாமல் போய்விட்டது. அலுவலகத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை எல்லாம் போட்டு உடல் நிலையை சீராக்கிக்கொண்டு, இந்த பதிவை எழுதுகிறேன். இனி மீண்டும் அடுத்த வாரத்திலிருந்து வலைத்தளத்திற்கு டிமிக்கி கொடுக்காமல் வருவேன் என்று கூறிக்கொள்கிறேன்.

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்கள்.

Tuesday, August 12, 2014

Why Speak Tamil


 
நாங்கள் ஆஸ்திரேலியாவிற்கு குடியேறிய பிறகு, இங்கிருக்கும் நண்பர்கள் எல்லாம், “நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் ஆங்கிலத்தில் உரையாடாதீர்கள், தமிழிலேயே உரையாடுங்கள். அவர்கள் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த பிறகு தாங்களாகவே ஆங்கிலத்தில் உரையாட ஆரம்பித்துவிடுவார்கள் என்று சொன்னார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம், நம்முடைய ஆக்ஸெண்ட், இங்குள்ளவர்களின் ஆக்ஸெண்டிலிருந்து வேறுபடும். இதனால் குழந்தைகளுக்கு குழப்பம் ஏற்படும் என்பது தான். நாங்களும் இந்த முறையையே பின்பற்ற ஆரம்பித்தோம். வீட்டில் இப்பவும் தமிழில் தான் குழந்தைகளிடம் உரையாடி வருகிறோம். ஓவியாவிற்கு நான்கு வயது வரை ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது. தமிழில் தான் சரளமாக பேசுவார். இந்தியாவிற்கு சென்றபொழுது, அங்குள்ளவர்களுக்கு, அவர் தமிழில் உரையாடுவதை கண்டு ரொம்ப ஆச்சிரியம். இப்பொழுது அவர் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த பிறகு,  மேலும்....

Tuesday, August 5, 2014

ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 5 (3 லிட்டில் பிக்ஸ் (3 little pigs) கதை)

ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 4 (பள்ளியில் கிடைத்த வெகுமதிகள்)




சென்ற வாரம் பள்ளிக்கூடத்தில், 3 லிட்டில் பிக்ஸ் (3 little pigs)  என்ற இந்த கதையை ஒரு வெள்ளைத்தாளில் வரைந்து கொடுத்திருக்கிறார்கள். அதனை மாணவர்கள் கலர் பண்ணி, பிறகு வெட்டி கதையாக சொல்லியிருக்கிறார்கள்.

ஓவியா, வீட்டில் எங்களுக்கு அந்த கதையை சொல்லிக்காட்டினார். அந்த காணொளியை நீங்களும் பாருங்களேன்.  காணொளியை காண...