ஒரு வழியா வீட்டு அம்மணிக்கு ஆபிரேஷன் முடிஞ்சிடுச்சு. ஆனா மறு நாள்லேருந்து, எனக்கு வீட்டு வேலை ஆரம்பமாயிடுச்சு.
காலைல நான் எழுந்து குளிச்சு, டீ போட்டு குடிச்சு, அம்மணியை எழுப்பி அவுங்களுக்கு இடது கண்ல(ஆபிரேஷன் பண்ணாத கண்) ஐந்து நிமிட
இடைவெளியில் இரண்டு மருந்து போட்டு, அப்புறம் பாலை கலந்து குடுத்து
முடிக்கும்போது சரியா, சின்ன மகாராணி எழுந்திருப்பாங்க. அவுங்களை
தூக்கி வச்சுக்கிட்டு, அதையும்,இதையும்
காமிச்சு பாலை கொடுத்து முடிச்சு, அப்புறம் குளிப்பாட்டிகிட்டு
இருக்கும்போதே பெரிய மாகாரணி எந்திரிச்சிடுவாங்க. சின்ன மகாரணியை குளிப்பாட்டி முடிச்சு, டிரஸ் போட்டுவிட்டு, பெரிய மகாரணியை கவனிக்க ஆரம்பிக்கணும்.
அவுங்களை ரெடி பண்ணி, காலைல சாப்பிடுறதுக்கு பிரட் கொடுத்து, டே-கேருக்கு(day care) கூட்டிக்கிட்டு போகணும். சின்னவங்களை
வீட்டில விட்டுட்டு போக முடியாது, அதனால அவுங்களையும் கார்ல உட்காரவச்சு
பெல்ட்டை போட்டு, அங்க போனவுடனே அந்த பெல்டை கழட்டி, அவுங்களை தூக்கிக்கிட்டு, பெரியவங்களை கையை புடிச்சு
கூட்டிக்கிட்டு போயி விட்டுட்டு வந்து, மறுபடியும் சின்னவங்களுக்கு
பெல்ட்டை போட்டு, திருப்பி வீட்டுக்கு வந்து , கார்லேருந்து அவுங்களை
இறக்கி விட்டுட்டு, அம்மணிக்கு வலது கண்ல மருந்து விடணும். அதுவும்
சரியா ரெண்டு மணிநேரத்துக்கு ஒரு மருந்தும், நாலு மணி நேரத்துக்கு
ஒரு மருந்தும் போடணும். அதற்கப்புறம் பிரட்
டோஸ்ட் பண்ணி அவுங்களுக்கு சாப்பிட கொடுத்துட்டு, நானும் சாப்பிடுவேன்.
சிங்க்ல இருக்கிற கொஞ்ச பாத்திரத்தை கழுவி, கவுத்துட்டு வந்து
உட்காரலாம்னு பார்த்தா, சின்னவுங்க அப்ப தான் டாய்லெட் போயிருப்பாங்க.
உடனே அவுங்களுக்கு நாப்பியை மாத்திட்டு, அரிசையை எடுத்து குக்கர்ல
வச்சுட்டு அப்பாடான்னு உட்காருவேன். கொஞ்ச நேரத்துலேயே, ரெண்டு
மணி நேரத்துக்கு போட வேண்டிய மருந்துக்கான நேரம் வந்துரும். மறுபடியும் அவுங்களுக்கு
கண்ல மருந்தைப் போட்டுட்டு உட்காருவேன். சின்னவுங்களுக்கு, என்னது
இவன் எப்ப பார்த்தாலும் அம்மாவையே கவனிச்சிக்கிட்டு இருக்கானே, நம்மளை கவனிக்க மாட்டேங்கிறானேன்னு நினைச்சு அழுக ஆரம்பிச்சுடுவாங்க. இவுங்க
அழுவுறாங்களேன்னு தூக்க போனா, என்னைய தூக்க விடமாட்டாங்க. அம்மா
தான் தூக்கணும்னு, ரொம்ப பொறுமையை சோதிப்பாங்க. அப்புறம் எப்படியோ, கஷ்டப்பட்டு அவுங்களை தூக்கிக்கிட்டு, வீட்டுக்கு பின்னாடி
போயி ஆவுங்களோட கொஞ்ச நேரம் விளையாடிட்டு, உள்ள வந்தா மதியம்
சாப்பிடுறதுக்கான நேரம் வந்துடும். உடனே நண்பர்களின் புண்ணியத்தில், அவர்கள் கொடுத்த சாப்படை எல்லாம் எடுத்து சூடு பண்ணி, முதல்ல சின்னவங்களுக்கு குழவா பிசைந்து, ஊட்டி விட ஆரம்பிப்பேன்.
அவுங்க பசிக்கு ஒரு நாலு வாய் மட்டும் வாங்கிக்கிட்டு, அப்புறம்
சாப்பிட மாட்டேன்னு ரகளை பண்ணுவாங்க. மறுபடியும் அவுங்களை தூக்கிக்கிட்டு வீட்டுக்கு
பின்னாடி போயி காக்கா, குருவி எல்லாம் காமிச்சு, எப்படியோ கஷ்டப்பட்டு கொடுத்து முடிச்சுடுவேன். சில நாள்ல, அதுல கொஞ்சத்தை வச்சுடுவாங்க. உடனே அம்மணி, உங்களுக்கு
அவளை டாக்கிள் பண்ண தெரியலை. நானாயிருந்தா எப்படியாவது அவளுக்கு ஊட்டி விட்டுடுவேன்னு
புலம்புவாங்க (சின்னவங்க ஒழுங்கா சாபிடலையாம்!!). அப்புறம் தட்டுல அவுங்க கேக்கிறதை
எல்லாம் எடுத்து வச்சு கொடுத்துட்டு, நானும் சாப்பிட்டு முடிச்சு, மறுபடியும் அந்த பாத்திரங்களை எல்லாம் கழுவி முடிச்சா, பெரியவங்களை கூப்பிட போற நேரம் வந்துடும்,அவுங்களை போயி
கூட்டிக்கிட்டு வந்து, ரெண்டு மகாரணிகளுக்கும்,அம்மணிக்கும் பாலை கொடுத்து, அப்புறம் நான் டீயை போட்டு
குடிச்சு, வீட்டுல இருக்கிற நொறுக்குத் தீனியை ரெண்டு பேருக்கும்
சாப்பிட கொடுத்து மறுபடியும் அம்மணிக்கு கண்ணுல மருந்தை போட்டுவிட்டு உட்கார்ந்தா, ரெண்டு மகாரணிகளுக்குள்ள சண்டை வந்துடும், அந்த சண்டையை
பஞ்சாயத்து பண்ணி முடிச்சு, ராத்திரிக்கு நண்பர்கள் கொடுத்த மாவை
வச்சு தோசையை எல்லோருக்கும் ஊத்திக் கொடுத்து,ஊட்டிவிட்டு,நாங்க சாப்பிட்டு முடிச்சு, அந்த பாத்திரதை எல்லாம் கழுவி
வச்சா படுக்கிற நேரம் வந்துடும். மறுபடியும் கண்ணுக்கு மருந்து போட்டுட்டு, ரெண்டு பேரையும் தூங்க வச்சுட்டு, சரி, நாம போய், இந்த வலைப்பூவுக்கு எதாவது கிறுக்கலாம்னு
யோசிப்பேன். அது வெறும் யோசிப்போட முடிஞ்சிடும். ஏன்னா கண்ணு ரெண்டும் என்னைய தூங்க
வைன்னு கெஞ்ச ஆரம்பிச்சிடும்.அப்புறம் எங்கேருந்து கணினி பக்கம் போறது, அதனால நானும் தூங்க போயிடுவேன். இதுல நடுவுல மூணு நாலு தடவை துனியெல்லாம்
துவைச்சு காயப்போட்டு, அப்புறம் மடிச்சு வைக்கணும். வீடு ரொம்ப
குப்பையா இருக்குனு, அம்மணி ஒரே புலம்பல், அதை நான் இந்த காதுல வாங்கி அந்த காதுல வெளியே விட்டுடுவேன். ஒரு நாள் அவுங்களுக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு, நானே
எப்படியோ வீட்டை முழுக்க கூட்டுரேன்னாங்க. ஐயையோ, வம்பா போச்சேன்னு
நினைச்சுக்கிட்டு (அவுங்க ஒரு நாலு வாரத்துக்காவது குனியக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க), அதனாலே நானே வீட்டை கூட்டினேன். இதுல பெரிய மகாராணி வாரத்துல மூணு நாள் தான்
டே-கேருக்கு போவாங்க. மத்த நாள்ல எல்லாம் வீட்டுல தான் இருப்பாங்க. அப்ப, ரெண்டு பேரையும் பார்த்துக்கிறது இருக்கே, அப்பப்பா!
நாக்கு தள்ளிடும்.
அந்த ரெண்டு வாரத்துல தான் தெரிஞ்சுது, வீட்டு வேலையும் ஒண்ணும்
சாதாரணமானது இல்லைன்னு. நான் ஆபிஸ்ல இருக்கும்போது, மெயில், தினமலர், விகடன்ன்னு இப்படி எல்லாத்தையும் பாத்துக்குவேன்.
ஆனா அந்த ரெண்டு வாரமும், என்னால ஒண்ணு கூட பார்க்க முடியலை.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி, இந்தியாவில வீட்டு வேலை பார்க்கும்
மனைவிக்கு, கணவன் சம்பளம் தர வேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டுவர
போறாங்கன்னு பேப்பர்ல படிச்சேன். கணவன் வெளியில போய் சம்பாதிக்கிறான், மனைவி வீட்டில் இருந்து, வீட்டை கவனிச்சுக்கிறாங்க, இதுல எதுக்கு மனைவிக்கு சம்பளம்னு யோசிச்சேன். ஆனா,
இந்த ரெண்டு வாரம் வீட்டை கவனிச்சுக்கிட்டதுல, அவுங்களுக்கும்
சம்பளம் முக்கியம்னு தெரிஞ்சுக்கிட்டேன். அது அவுங்களை உற்சாகப்படுத்தும். மேலும் அவுங்களுக்கு நாமளும் சம்பாதிக்கிறோம்னு ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கும்.
அதனால நான் அடுத்த மாசத்திலிருந்து அவுங்களுக்கு ஒரு சம்பளத்தை போட்டுக் கொடுக்கலாம்னு
முடிவு பண்ணிட்டேன்.