Monday, March 31, 2014

ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சும் பணக்கார நிறுவனங்களான அட்டைப்பூச்சிகள்


அங்காடித்தெரு படத்தை நாம் எல்லோரும் பார்த்திருப்போம்.  அந்த படத்தில் பெரிய வணிக நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களின் நிலமையை அப்பட்டமாக தோலுரித்திருப்பார்கள். மேலும் அவர்கள் நின்று கொண்டே பல மணிநேரம் வேலை செய்வதால், பிற்காலத்தில் அவர்களுக்கு ஏற்படக்கூடிய உடல்நிலை உபாதைகளையும் சொல்லியிருப்பார்கள். அந்த படம் வெளி வந்த போது, இந்த மாதிரி பெரிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் நலனில் கொஞ்சமாவது அக்கறை செலுத்துவார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் நீங்கள் எங்களைப் பற்றி எத்தனை படங்கள் வேண்டுமானாலும் எடுங்கள், நாங்கள் எப்பொழுதும் போல் தான் இருப்போம். யாரும் எங்களை ஒன்றும் பண்ண முடியாது என்று அந்த நிறுவனங்கள் தங்களின் போக்கை சிறிதும் மாற்றிக்கொள்ளவில்லை என்பதற்கு உதாரணம், முகநூலில் வெளிவந்துள்ள இந்த செய்தி.

என்னடா, நீ முகநூலுக்குள்ளேயே போக மாட்டியே அப்புறம் எப்படி உனக்கு இது தெரிந்தது என்று நீங்கள் கேட்பது, எனக்கு கேட்கிறது. உலகத்துலேயே முகநூலில்  ப்ராக்ஸி கணக்கு (proxy account) வைத்திருப்பவன் நானாகத்தான் இருப்பேன். இரு நாட்களுக்கு முன்பு அம்மணி தன்னுடைய முகநூலுக்கு வந்த ஒரு செய்தியை, படித்து காண்பித்தார்கள். அப்பொழுது தான் தெரிந்தது, வறுமையின் காரணமாக பணக்கார நிறுவனங்களிடம் தங்களுடைய வாழ்க்கையை தொலைப்பவர்கள் இருக்கும்வரை, பணக்கார முதலைகள் மாறப்போவதில்லை என்று. அந்த செய்தியை படித்தபோது மனது மிகவும் கனத்துப்போனது.  இதை நீங்களும் படித்திருப்பீர்கள். அப்படி படிக்காதவர்களுக்காக இதோ அந்த செய்தி . 

SHARE பண்ணுங்க pls....
சில
நாட்களுக்கு முன்பு சரவணா ஸ்டோர்ஸ்
சென்றிருந்தேன். இரவு 9 மணி.
அதிகக் கூட்டம் இல்லை. நாள்
முழுக்க உழைத்த களைப்புடன்,
வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்த
சிறு புன்னகையுடன்
துணிகளை எடுத்துக் காட்டிக்
கொண்டிருந்தார் அந்தப் பெண்.
மெலிந்த தேகம். மிஞ்சிப்
போனால் 25 வயது இருக்கலாம்.
‘‘எந்த ஊர் நீங்க?’’
‘‘
திருவண்ணாமலை பக்கம்..’’
‘‘
திருநெல்வேலிகாரங்கதான்
நிறைய இருப்பாங்கல்ல..’’
‘‘
இப்போ அப்படி இல்ல...
அவங்கல்லாம் வேற கடைக்குப்
போயிட்டாங்க.. நாங்க
திருவண்ணாமலை பிள்ளைங்க
நிறைய பேரு இருக்கோம். 150
பேராச்சும் இருப்போம்..’’
‘‘தினமும்
எத்தனை மணிக்கு வேலைக்கு வரணும்?’’
‘‘
காலையில 9 மணிக்கு வரணும்.
நைட் 11 மணிக்கு முடியும்.’’
‘‘
அப்படின்னா 14 மணி நேரம்
வருதேங்க.. கிட்டத்தட்ட 2 ஷிப்ட்.
இங்கே ஷிப்ட் கணக்கு எல்லாம்
உண்டா?’’
‘‘
ஷிப்டா... அதெல்லாம்
தெரியாதுண்ணே. 
காலையில
வரணும். நைட் போகனும்.
அவ்வளவுதான்..’’
‘‘சாப்பாடு?’’
‘‘
கேண்டீன் இருக்கு. கொஞ்ச,
கொஞ்ச பேரா போய்
சாப்பிட்டு வருவோம்.’’
‘‘
எத்தனை மணிக்கு தினமும்
தூங்குவீங்க?’’
‘‘12
மணி, 1 மணி ஆகும்.
காலையில எழுந்ததும்
வந்திருவோம்’’
‘‘
தங்குற இடம், சாப்பாடு எல்லாம்
நல்லா இருக்குமா?’’
‘‘அது பரவாயில்லண்ணே.
நாள் முழுக்க
நின்னுகிட்டே இருக்குறோமா...
அதுதான் உடம்பு எல்லாம்
வலிக்கும்.’’
‘‘உட்காரவே கூடாதா?’’
‘‘
ம்ஹூம்.. உட்காரக் கூடாது.
வேலையில
சேர்க்கும்போதே அதை எல்லாம்
சொல்லித்தான் சேர்ப்பாங்க.
மீறி உட்கார்ந்தா கேமராவுல
பார்த்துட்டு சூப்பரவைசர்
வந்திடுவார்’’
- யாரோ ஒரு வாடிக்கையாளருடன்
நீண்ட நேரம் பேசிக்
கொண்டிருப்பதையும்
சூப்ரவைஸர் கேமராவில்
பார்க்கக்கூடும். அதனால் அந்தப்
பெண் இங்கும் அங்குமாக
துணிகளை எடுத்து வைத்தபடியேப்
பேசுகிறார்.
‘‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?’’
‘‘5,500
ரூபாய்.’’
‘‘
வெறும் 5500 ரூபாய்தானா?
வேற
ஏதாவது முன்பணம், கல்யாணம்
ஆகும்போது பணம் தர்றது...
அதெல்லாம் உண்டா?’’
‘‘
இல்லண்ணே... அது எதுவும்
கிடையாது. இதான் மொத்த
சம்பளம்.’’
‘‘இதை வெச்சு என்ன
பண்ணுவீங்க?’’
‘‘
தங்குறது, சாப்பாடு ஃப்ரீ.
எனக்கு ஒண்ணும் செலவு இல்லை.
சம்பளத்தை வீட்டுக்கு கொஞ்சம்
அனுப்புவேன். மீதி பேங்க்
அக்கவுண்டுல போட்டுருவேன்’’
‘‘
எத்தனை வருஷமா இங்கே வேலைப்
பார்க்குறீங்க?’’
‘‘அஞ்சு வருஷம் முடியப்
போகுது.
அப்பவுலேர்ந்து இதே சம்பளம்தான்.
இன்னும் ஏத்தலை..’’
‘‘வேலைக்கு சேர்ந்த முதல்
மாசத்துலேர்ந்து மாசம் 5500
ரூபாய்தான் சம்பளமா?’’
‘‘
ஆமாம்.’’
‘‘யாராச்சும் 10 ஆயிரம் சம்பளம்
வாங்குறாங்களா?’’
‘‘
சூப்ரவைசருங்க வாங்குவாங்க.
அதுவும் பத்து வருஷம்
வேலை பார்த்திருந்தாதான்.
இல்லேன்னா ஏழாயிரம்,
எட்டாயிரம்தான்.’’
‘‘லீவு எல்லாம் உண்டா?’’
‘‘மாசம் ரெண்டு நாள் லீவு உண்டு.
அதுக்கு ஒரு நாளைக்கு 200
ரூபாய் சம்பளத்துலப்
பிடிச்சுக்குவாங்க.’’
‘‘
பிடிச்சுக்குவாங்களா?
அப்படின்னா லீவே கிடையாதா?’’
‘‘
அதான் சொல்றனேண்ணே...
லீவு உண்டு. ஆனால் சம்பளம்
பிடிச்சுக்குவாங்க. அதனால
நாங்க பெரும்பாலும் லீவு போட
மாட்டோம்’’
‘‘
அப்போ ஊருக்குப்
போறது எல்லாம்?’’
‘‘ஆறு மாசத்துக்கு ஒரு தடவை ஒரு வாரம்
ஊருக்குப் போயிட்டு வருவேன்.
அதுக்கு லீவு கொடுப்பாங்க.
ஆனால் அந்த லீவுக்கும் சம்பளம்
கிடையாது’’
‘‘
ஊருக்குப்
போகும்போது இங்கேருந்து துணி எடுத்துட்டுப்
போவீங்களா?’’
‘‘இங்கே விற்குற
விலைக்கு வாங்க முடியுமா?
வெளியில பாண்டி பஜார்ல
எடுத்துட்டுப் போவோம்.
இங்கே எடுத்தாலும் சில சுடிதார்
மெட்டீரியல்
கம்மியா இருந்தா எடுப்போம்’’
‘‘
உங்களுக்கு விலை குறைச்சு தரமாட்டாங்களா?’

‘‘
ம்ஹூம்... அதெல்லாம்
தரமாட்டாங்க. உங்களுக்கு என்ன
விலையோ, அதான் எங்களுக்கும்’’
‘‘உங்களுக்கு எப்போ கல்யாணம்?’’
‘‘
தெரியலை..’’
‘‘
ஊர்ல என்ன பண்றாங்க..’’
‘‘
நெல் விவசாயம்..’’
‘‘
எவ்வளவு நிலம் இருக்கு?’’
‘‘
தெரியலை.. ஆனால்
கம்மியாதான் இருக்கு’’
‘‘
இங்கே இப்படி கஷ்டப்பட்டு வேலைப்
பார்க்குறதுக்குப்
பதிலா சரவணா ஸ்டோர்ஸ்ல
வேலைப்
பார்த்தேன்னு சொல்லி திருவண்ணாமலையி
லேயே ஒரு துணிக்கடையில
வேலை வாங்க முபயாதா?’’
‘‘
வாங்கலாம். ஆனா இதைவிட
கம்மியா சம்பளம் கொடுப்பாங்க.
இங்கன்னா வேலை கஷ்டமா இருந்தாலும்
சாப்பாடும், தங்குறதும் ஃப்ரீ.
சம்பளக் காசு மிச்சம்.
அங்கே அப்படி இல்லையே..’’
‘‘இங்கே எவ்வளவு பேரு வேலைப்
பார்ப்பீங்க?’’
‘‘இந்த ஒரு கடையில மட்டும்
பொம்பளைப் பிள்ளைங்க மட்டும்
800
பேர் இருக்கோம்.’’
‘‘மெட்ராஸ்ல எங்கேயாச்சும்
சுத்திப் பார்த்திருக்கீங்களா?’’
‘‘
ஆவடில எங்க
அக்கா வீடு இருக்கு. எப்பவாச்சும்
ஒரு நாள் லீவு போட்டுட்டுப்
போயிட்டு வருவேன்.’’
-
கனத்த மனதடன் அந்தப்
பெண்ணிடம்
விடைபெற்று நகர்ந்தோம்.
அந்த
தளம் முழுக்கவும், அடுத்தடுத்த
தளங்களிலும் இதேபோன்ற
உழைத்துக் களைத்த பெண்கள்.
அவர்களின்
உழைப்பை உறிஞ்சி எழுந்து நிற்கும்
சரவணா ஸ்டோர்ஸ் என்ற அந்த
பிரமாண்ட கட்டடம் ஓர்
ஆறடுக்கு சவக்கிடங்கு போலதே தோன்றியது.
SHARE பண்ணுங்க(படித்தது)

-  (நன்றி முகநூல்)


எனக்கு ஒன்று மட்டும் புரியலை, அதாவது இந்திய அரசாங்கத்தில் "தொழிலாளர் நலத்துறை அமைச்சகம்"  என்று ஒன்று இருக்கிறது. அந்த துறை இந்த மாதிரி நிறுவனங்களிடம், தொழிலாளர்களின் நலன் பாதுக்காகப்படுகிறதா என்று சரி பார்க்காதா? இல்லை அப்படி பார்க்க வருகிறவர்களிடம், பணக்கார முதலைகள், பணத்தை கொடுத்து சரி கட்டிவிடுகிறார்களா?

வல்லரசு நாடாக ஆவதற்கான முன்னேற்றப்பாதையில் இந்தியா சென்றுக்கொண்டிருக்கிறது என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் எனக்குத் தெரிந்து, இந்தியாவில் பணக்காரர்கள் மட்டும் பணக்காரர்களாகவே இருக்கிறார்கள், ஏழைகள், ஏழைகளாகவே இருக்கிறார்கள். 

இந்த பதிவிற்கு தொடர்பான, என்னுடைய முந்தைய பதிவை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கவும் - 
சுதந்திர இந்தியாவில் கொத்தடிமைகள்


Thursday, March 27, 2014

கம்பராமாயணத்தில் ஒரு துளியை பருகினேன் - கைகேயியின் ஆளுமை (ஆய்வுக் கட்டுரை)

அன்பார்ந்த நண்பர்களே,

கடந்த இரு வாரங்களாக நான் தமிழ் நாட்டில் இருந்தபடியால், என்னால் வலைப்பூவிற்கு வர இயலவில்லை. இன்று இரவு தான் இந்தியாவிலிருந்து சிட்னி திரும்பினேன்.

தமிழ் தாயின் அருளாலும், கம்பனின் ஆசியாலும், நான் கைகேயின் ஆளுமை என்ற கட்டுரையை, காரைக்குடியில் நடந்த கம்பன் விழாவில் படைத்தேன். அந்த விழாவில் பங்குப்பெற்றதனால், நிறைய தமிழ் அறிஞர்களின் அறிமுகம் கிடைக்கப்பெற்றது.

அந்த விழாவைப் பற்றி விரிவாக  வேறு ஒரு பதிவில் எழுதுகிறேன். இப்போது "துறை தோறும் கம்பன்" என்ற புத்தகத்தில் வெளிவந்துள்ள அடியேனின் ஆய்வுக்கட்டுரையை உங்களின் பார்வைக்கு பதிகிறேன். நான் அந்த கட்டுரையை படைக்கும்போது எடுக்கப்பட புகைப்படங்களையெல்லாம், அந்த விழாவைப் பற்றிய பதிவில் வெளியிடுகிறேன்.


கம்பனில் ஆளுமையியல் – கைகேயியின் ஆளுமை
-சொக்கன், சிட்னி,ஆஸ்திரேலியா

 நோக்கம்

      பொதுவாகவே பெண்களிடத்தில் ஆளுமை குணத்திற்கு பதிலாக இரக்க குணம் தான் அதிகமாக காணப்படும். தாங்கள் நினைப்பது கூட மற்றவர்களுக்கு சங்கடத்தை உருவாக்கும் என்று தெரிந்தால், உடனே அந்த நினைப்பை வெளிப்படுத்தாமல் அழித்து விடுவார்கள். ஆனால் கைகேயியோ இதில் முற்றிலும் மாறுப்பட்டு ஆளுமை குணத்தோடு விளங்கி, அனைவரையும் எதிர்த்து தான் நினைத்ததை சாதித்ததுப்பற்றி கம்பன் எவ்வாறு சொல்லியிருக்கிறான் என்று அலசி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.  

மந்திராலோசனையில் எடுத்த முடிவு

     தசரதசக்ரவர்த்தி தன் மகன் இராமனுக்கு முடிசூட்ட வேண்டும் என்று எண்ணி மந்திராலோசனை சபையை கூட்டுகிறான். அங்கு அவனது அனைத்து அமைச்சர்களும், குலகுருவான வசிஷ்டரும் இருக்கிறார்கள். மன்னன் தான் நினைத்ததை மந்திர சபையோரிடம் இவ்வாறு தெரிவிக்கிறான்.

'ஆதலால் இராமனுக்கு அரசை நல்கி , இப்
பேதைமைத்து ஆய் வரும் பிறப்பை நீக்குவான் ,
மா தவம் தொடங்கிய வனத்தை நண்ணுவேன் ;
யாது நும் கருத்து ? ' என இனைய கூறினான் .   
(அயோ. மந்திரப்படலம் – 30)

அதாவது, இராமனிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டு, நான் பிறவி நோய்க்கு மருந்தான தவ வாழ்க்கையை மேற்கொள்ளலாம் என்று இருக்கிறேன். உங்கள் கருத்து என்ன என்று அமைச்சர்களிடம் கேட்கிறான். அதற்கு அமைச்சர்களும், குரு வசிஷ்டரும் ஒப்புதல் அளிக்க, அங்கு அந்த மந்திராலோசனைப் படி, இராமனுக்கு முடிசூட்டுதல் என்று முடிவு எடுக்கப்பட்டது. நாட்டின் மன்னன், மந்திரிகள் மற்றும் ராஜகுரு எல்லோரும் சேர்ந்து எடுத்த இந்த முடிவை மிகவும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்ட கைகேயி, பின்னர் கூனியின் பேச்சுத் திறனால் மனமாற்றமடைந்து, தனியாளாக தான் நினைத்ததை அடைந்தே தீருவது என்ற ஆளுமை குணத்தால் மந்திரிசபையில் எடுத்த அந்த முடிவை எவ்வாறு மாற்றினாள் என்று பார்ப்போம்.

கைகேயியின் உறுதி வாய்ந்த மொழி

 நன்று சொல்லினை ! நம்பியை நளிர் முடி சூட்டல் ,
துன்று கானத்தில் இராமனைத் துரத்தல் , இவ் இரண்டும்
அன்று அது ஆம் எனில் , அரசன் முன் ஆர் உயிர் துறந்து
பொன்றி நீங்குதல் புரிவென் யான் ; போதி நீ ' என்றாள்”.
                              (அயோ.மந்தரை சூழ்ச்சிப் படலம்-84)


கைகேயி மந்தரையிடம், நீ எனக்கு சொல்லியபடி, என் கணவனிடம் பரதனுக்கு முடிசூட்டுங்கள் என்றும், இராமனை காட்டுக்கு அனுப்புங்கள் என்றும் இரு வரங்களை  கேட்பேன். இந்த வரங்களை எம்மன்னவன் எனக்கு கொடுக்கவில்லையென்றால், அக்கணமே அவன் முன்னிலையில் என்னுயிரை விடுவேன். இதுவே என்னுடைய துணிவு என்கிறாள்.
இதிலிருந்தே தெரிகிறது, கைகேயி எந்த அளவிற்கு நெஞ்சுரம் வாய்ந்தவள் என்று. தன்னுடைய ஆசை நிராசையாகிவிட்டால், தன் உயிரையும் மாய்த்துக்கொள்ள நினைக்கும் அந்த துணிவை அவளிடம் காண முடிகிறது.

தான் நினைத்ததை சாதிக்க கைகேயி கையாண்ட முறை

கூனி போனபின் , குல மலர்க் குப்பை நின்று இழிந்தாள் ;
சோனை வார் குழல் கற்றையில் சொருகிய மாலை ,
வான வார் மழை நுழைதரு மதி பிதிர்ப்பாள் போல் ,
தேன் அவாவுறு வண்டினம் அலமரச் , சிதைத்தாள்
                                         (அயோ. சூழ்வினைப் படலம் – 1)


விளையும் தன் புகழ் வல்லியை வேர் அறுத்து என்ன ,
கிளை கொள் மேகலை சிந்தினள் ; கிண்கிணியோடும்
வளை துறந்தனள் ; மதியினில் மறுத் துடைப்பாள் போல்
அளக வாள் நுதல் அரும் பெறல் திலதமும் அழித்தாள்
                                         (அயோ. சூழ்வினைப் படலம் – 2)


தா இல் மா மணிக் கலன் மற்றும் தனி தனி சிதறி ,
நாவி நன் குழல் நால் நிலம் தைவரப் பரப்பிக் ,
காவி உண் கண்கள் அஞ்சனம் கான்றிடக் கலுழாப் ,
பூ உதிர்ந்தது ஓர் கொம்பு எனப் , புவி மிசைப் புரண்டாள்
                                         (அயோ. சூழ்வினைப் படலம் – 3)

கைகேயி மலர் மஞ்சத்திலிருந்து கீழே இறங்கி, தான் தலையில் சூடியிருந்த மலர்களை எல்லாம் பிய்த்து எறிந்தாள். தன்னுடைய இடையில் அணிந்திருந்த மேகலையை அறுத்து வீசினாள். பாததத்தில் அணிந்திருந்த கிண்கிணியையும், கை வளையல்களையும் கழற்றி எறிந்தாள். தான் அணிந்திருந்த இரத்தின ஆபரணங்களை எல்லாம் வீசி எறிந்தாள். தன் கூந்தலைப் பிரித்து தரையில் பரந்து விரிந்து கிடக்குமாறு செய்தாள். கண்களில் பூசியிருந்த அஞ்சனம் கரைய அழுதாள். இலைகளும், பூக்களும் நீங்கிய வெற்று மரம் போல் தரையில் வீழ்ந்தாள்.

கணவன் மகிழ்ச்சியாக இருக்கின்ற நேரத்தில் மனைவி தனக்கு வேண்டியதை கேட்டு தான் நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ளுவாள். ஆனால் இங்கு கைகேயியோ தன் கணவன் மகிழ்ச்சியாக இருக்கின்ற இந்த நேரத்தில் தான் நினைத்ததை சாதித்துக்கொள்ள முடியாது என்று உணர்ந்திருக்கிறாள். அதனால் தான் அவனுடைய அந்த மகிழ்ச்சியான தருணத்தை மாற்றுவதற்கான வழிகளில் இறங்கினாள். அவளுக்கு தெரியும், தன் கணவன் தன்னிடம் வந்து இராமனுக்கு முடிசூட்டுதலைப்  பற்றி சொல்லுவான் என்று. அதனால் அவன் வரும்போது அவனுடைய மனநிலையை மற்றும் வகையில் அலங்கோலமாக தரையில் வீழ்ந்திருந்தாள்.

அன்னது கண்ட அலங்கல் மன்னன் , அஞ்சி ,
`'
என்னை நிகழ்ந்தது ? இஞ் ஞாலம் ஏழில் வாழ்வார்
உன்னை இகழ்ந்தவர் மாள்வர் ! உற்றது எல்லாம்
சொன்னபின் என் செயல் காண்டி ! சொல்லிடு ! '' என்றான் .                             (அயோ.சூழ்வினைப் படலம் – 9)

மற்ற மனைவியரைக் காட்டிலும் தான் அதிகமாக நேசிக்கும் கைகேயின் அரண்மணக்கு மிகவும் மகிழ்ச்சியாக வந்த தசரதன் அவள் இருந்த கோலத்தைப் பார்த்ததும் துடித்துப்போய் “உனக்கு என்ன நடந்தது?” என்று மனதில் பயம் ஆட்கொள்ள கேட்கிறான்.

அவள் நினைத்தப்படியே தசரதனின் மனநிலையானது  மகிழ்ச்சியிலிருந்து மாறி, அஞ்சிய மனநிலைக்குத் தள்ளப்பட்டது.இது தான் சமயம் என்று எண்ணிய கைகேயியும் அவனிடம்

'ஏய வரங்கள் இரண்டின் ஒன்றினால் என்
சேய் அரசு ஆள்வது ; சீதை கேள்வன் , ஒன்றால்
போய் வனம் ஆள்வது ; ' எனப் புகன்று நின்றாள்
------------------------'
(அயோ.சூழ்வினைப் படலம் – 14).

பரதனுக்கு முடிசூட்டவும், இராமனை காட்டிற்கு அனுப்பவும் என்று அந்த இரண்டு வரங்களைக் கேட்கிறாள்.

இ நிலை நின்றவள் தன்னை எய்த நோக்கி
நெய்ந் நிலை வேலவன் , 'நீ திசைத்தது உண்டு ஓ ?
பொய் நிலையோர்கள் புணர்த்த வஞ்சம் உண்டோ ?
அ நிலை சொல் எனது ஆணை உண்மை ' என்றான்
(அயோ.சூழ்வினைப் படலம் – 22).  

அந்த வரங்களை கைகேயியின் வாயிலிருந்து கேட்டவுடன், தசரதன் சோர்ந்துப்போய் மிகவும் துயரப்பட்டு அவளிடம் “உன் மனதை யாரேனும் கலைத்தார்களா,இல்லை உனக்கு புத்தி பேதலித்து விட்டதா” என்று கேட்டான்.

இவன் தனக்கு அந்த வரங்களை கொடுக்க மாட்டான் என்று தெரிந்து கொண்ட கைகேயி அந்த வரங்களை எப்படியாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவனிடம்,

'திசைத்ததும் இல்லை ; எனக்கு வந்து தீயோர்
இசைத்ததும் இல்லை ; முன் ஈந்த இவ் வரங்கள் ,
குசை பரியோய் ! தரின் இன்று கொள்வென் ; அன்றேல் ,
வசை திறம் நின் வயின் வைத்து மாள்வென் ' என்றாள்
(அயோ.சூழ்வினைப் படலம் – 23).

“முன்பே எனக்கு அளித்த அந்த இரண்டு வரங்களைத் தான் நான் இப்போது கேட்கிறேன். கொடுப்பதானால் சரி, இல்லையேல், நான் என் உயிரை மாய்த்துக்கொள்கிறேன்” என்று பதிலுரைத்தாள்.

கைகேயி தன் மனதை  உறுதியாக வைத்திருத்தல்

கைகேயியின் இந்த பதிலைக் கேட்ட தசரதன், இவள் அந்த வரங்களை நம்மிடமிருந்து பெறாமல் விடமாட்டாள் என்று நினைத்து,

கோல் மேல் கொண்டும் குற்றம் அகற்றக் குறி கொண்டார்
போல் , மேல் உற்றது உண்டு எனின் நன்று ஆம் பொறை என்னாக் ,
கால் மேல் வீழ்ந்தான் , கந்து கொல் யானைக் களி மன்னர் ,
மேல் மேல் வந்து முந்தி வணங்க மிடைதாளான்
(அயோ.சூழ்வினைப் படலம் – 29).

துக்கம் தாளாமல் கைகேயியின் காலில் விழுகிறான்.

 இந்த இடத்தில் வேறு எந்த பெண்ணாக இருந்தாலும், தன் நிலையிலிருந்து சற்று மாறி கீழே இறங்கி வந்திருப்பாள். ஆனால் கைகேயியோ, தன் நிலையிலிருந்து சற்றும் கீழே இறங்காமல், மனதை கல்லாக்கிக்கொண்டு, தான் அந்த வரங்களை பெருவதிலேயே குறியாக இருந்தாள்.

தான் கைகேயியின் காலில் விழுந்தும் அவள் மனம் சிறிதும் இறங்காததை கண்ட தசரதன் அவளைப் பார்த்து,

'ஒன்றா நின்ற ஆர் உயிர் ஓடு உம் உயிர் கேள்வர்
பொன்ற முன்னம் பொன்றினர் ; என்னும் புகழ் அல்லால் ,
இன்று ஓர் காறும் எல் வளையார் , தம் இறையோரைக் கொன்றார் இல்லை;கொல்லுதியோ நீ கொடியோளே!'                              (அயோ.சூழ்வினைப் படலம் – 41)

என்று தூற்றுகிறான். அதாவது, கணவனோடு தானும் இறக்கும் பெண்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் நீயோ, கணவனையே கொல்லத்துணிந்து விட்டாய் என்று   அவன் தூற்றுவதைப் பற்றி சிறிதும் மனம் சஞ்சலப்படாத கைகேயி அவனிடம்,

     பாயும் கனல் ஏ போல்
எரிந்து ஆறாது ஏ இன் உயிர்
     
உண்ணும் எரி அன்னாள் .
(அயோ.சூழ்வினைப் படலம் – 47).

“எனக்கு நீ செய்த சத்தியத்தை காத்து அந்த வரங்களை கொடுக்காவிடில், உன்முன்னிலையில் நான் பிராணனை விடுவேன்” என்று தான் முன்னர் சொன்னதையே மீண்டும் நியாபகப்படுத்துகிறாள்.

இவள் கேட்ட வரத்தை கொடுக்காமல் போனால், இந்த கணமே இவள் உயிரைத் துறப்பாள். பிறகு நாம் வாக்கு தவறியவனாகி விடுவோம் என்று எண்ணிக்கொண்டு,

'ஈந்தேன் ஈந்தேன் இவ் வரம் ;
     
என் சேய் வனம் ஆள ,
மாய்ந்தே நான் போய் வான் உலகு
     
ஆள்வென் , வசை வெள்ளம்
நீந்தாய் நீந்தாய் நின் மக
     
னோடும் நெடிது ; ' என்றான் .
(அயோ.சூழ்வினைப் படலம் – 48).  

“நீ கேட்கும் வரத்தைத் தந்தேன்” என்று கூறி அந்த வரங்களை அளித்தான்

வரங்களைப் பெற்றவுடன், தான் நினைத்ததை சாதித்து விட்டோம் என்ற வெற்றிக்களிப்பில் கைகேயி உறங்கச் சென்றாள்.


முடிவுரை

      கைகேயி ஒரு கொடியவள், கணவனை மதிக்காதவள், தான் கேட்ட வரங்களை அளிக்காவிடில் இறப்பேன் என்று கணவனை மிரட்டியவள், பாசம் காட்டி வளர்த்த மகனையே காட்டிற்கு அனுப்பியவள் என்று எண்ணத்தோன்றும். என்னைப்பொருத்தவரை, தன் உரிமையை அதாவது கணவன் தனக்கு முன்பு அளித்த வரங்களை பெறத்தான் தன் ஆளுமை குணத்தை வெளிப்படுத்தினாள் என்று சொல்லுவேன். மேலும் கைகேயியின் இந்த ஆளுமை குணம் நன்மையில் தான் முடிந்துள்ளது. அதாவது அரக்கர்களை அழிக்கவும், இராமனின் புகழை உலகறியச் செய்வதற்கும், ஸ்ரீராமாயணமென்ற காவியம் தோன்றுவதற்கும் கைகேயியின் ஆளுமை குணமே காரணமாயிற்று. (அயோ.மந்தரை சூழ்ச்சிப் படலம்-78). இன்றைக்கு நாட்டில் நடக்கும் பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராக, பெண்கள் கைகேயியை உதாரணமாக்கிக்கொண்டு, தங்களுக்குள் புதைந்திருக்கும் ஆளுமை குணத்தை வெளிப்படுத்தி போராட வேண்டும் என்பதையே இக்கட்டுரை எடுத்துக்காட்டுகிறது.