சிட்னியில் தலைவா படத்தின் கடைசி நாள் சூட்டிங்கில், படம் எப்போது வெளி வரும் என்று இயக்குனர் விஜய்யிடம் நாங்கள் கேட்டபோது, ஜூன்15 அன்று வெளி வரும் என்று சொன்னார். கொஞ்ச நாள் கழித்து, நடிகர் விஜய் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி அன்று படம் வெளிவரும் என்று சொன்னார்கள். அதற்கு பிறகு ஜூலை 15ஆம் தேதி வெளிவரும் என்று சொன்னார்கள். கடைசியில் ஆகஸ்ட் 9ஆம் தேதி தான் தலைவா படம் வெளி வரும் என்று தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் என்று ஊடகங்கள் வெளியிட்டிருந்தது.
“நீ நடித்த படம் எப்போது வெளிவருகிறது”(என்னமோ நான் தான் அந்த படத்தின்
கதாநாயகன் மாதிரி!!!!!) என்று கேட்கும் நண்பர்களிடம் எல்லாம் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளிவரும்
என்று சொல்லிக்கொண்டிருந்தேன். அதனை உறுதி செய்கிற மாதிரி, என்னுடன் நடித்த நண்பர்
ஒருவர் நேற்று எனக்கு போன் பண்ணி, நாம நடித்த படம் ஆகஸ்ட் 9ஆம் தேதி “Reading Cinemas”ல
வெளிவர இருக்கிறது. படத்துக்கான டிக்கெட் இந்தியன் ஸ்டோர்ஸ்ல விற்க ஆரம்பித்து விட்டார்கள்.
நாம அந்த படத்துக்கு போட்ட காஸ்ட்யூமையே, போட்டுக்கிட்டு போய் அந்த படத்தை பார்ப்போம்
என்று கூறினார். நானும் நம்முடன் நடித்த மற்ற நடிகர்களிடம் சொல்லிவிடுகிறேன் என்று
சொன்னேன். இன்றைக்கு காலையில் ஆபிஸ் வந்து பத்திரிக்கையை படித்தால், தலைவா படம் வெளிவரும்
தேதி , இன்னும் தள்ளிப் போவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்று போட்டிருந்தது. அட கடவுளே! இன்னும்
தள்ளிப் போகப் போகுதான்னு (சிட்னி வாழ் தமிழர்களான நாங்க நடிச்சதுல,யாருக்கோ பிடிக்கலை
போல!!!) அந்த செய்தியை படித்தேன். பிரச்சனை என்னவென்றால், படத்துக்கு தணிக்கை குழு
யு/ஏ சான்றிதழ் கொடுத்திருக்காங்க. ஆனால் படத்தை தயாரித்தவர்களோ யு சான்றிதழ் தான்
வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு தணிக்கை குழுவினர், படத்தில் வன்முறைக்
காட்சிகள் அதிகமாக இருக்கிறது, அதனால் யு/ஏ சான்றிதழ் தான் கொடுக்க முடியும். யு தான்
வேண்டுமென்றால், சில காட்சிகளை நீக்குங்கள் என்று கூறியிருக்கிறார்கள். அதற்கு படம்
சம்பந்தப்பட்டவர்களோ, கோடிக்கணக்கில் செலவு செய்து எடுத்த அந்த காட்சிகளை நீக்க முடியாது
என்று கூறியிருக்கிறார்கள். இப்போது ரிவைசிங் கமிட்டிக்கு
இந்தப் படத்தை அனுப்பி யு சான்று பெறும் முயற்சியில் தீவிரமாகியுள்ளார்
தயாரிப்பாளர், அதனால் படம் வெளிவருவதில் இன்னும் தாமதமாகலாம் என்று அந்த செய்தியில் இருந்தது.
கொஞ்ச நாளைக்கு முன்பு தான் தலைவா படத்துக்கு
தணிக்கை குழுவினர் யு சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள் என்று ஒரு செய்தியை
படித்தேன். கடைசில அந்த செய்தியில் உண்மை இல்லையாம். அடப்பாவிகளா !!!! கிசு கிசுக்கள்
எல்லாம் படிச்சிருக்கோம். அதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை அப்படிங்கிறது, அந்த செய்தியில்
சம்பந்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் தான் தெரியும். ஆனா, இந்த தணிக்கை சான்றிதழ் பற்றி
எல்லாம் ஒரு பொய்யான செய்திகளை எப்படி பரப்புறாங்கன்னு தான் தெரியலை. பிறகு அந்த நண்பரை
போனில் கூப்பிட்டு, என்னங்க, நேற்று தான் நீங்க சொன்னிங்க, ஆனால் இன்னைக்கு படம் வெளிவரும்
தேதி தள்ளிப்போகலாம்னு போட்டிருக்கேன்னு கேட்டேன். அதற்கு, அவர் ரொம்ப கூலாக, நடிகர்
விஜய் நடிச்ச காட்சிகள் எல்லாம் வெட்டிட்டு, நாம நடிச்ச காட்சிகள் மட்டும் வந்தாலும்
ஆச்சிரியப்படுவதற்கு இல்லை அப்படின்னு சொன்னாரு. நான் உடனே, எப்படிங்க உங்களால, இப்படியெல்லாம்
பேச முடியுதுன்னு கேட்டேன். அதற்கு அவர், நாம நடிச்ச எந்த காட்சியிலும் வன்முறையே இல்லையே
அப்படின்னாரு (என்னமோ நாங்க படம் முழுக்க வர மாதிரி அவருக்கு நினைப்பு).
சரி, பார்ப்போம் ஆகஸ்ட் 9ஆம் தேதி படம் வெளிவருகிறதா இல்லை இன்னும் தள்ளிபோகுதான்னு.