Showing posts with label ஆய்வுக் கட்டுரைகள். Show all posts
Showing posts with label ஆய்வுக் கட்டுரைகள். Show all posts

Tuesday, January 27, 2015

ஆஸ்திரேலிய தமிழ் ஆசிரியர்கள் மாநாட்டில் படைத்த கட்டுரை



இரண்டு நாட்களுக்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கு முதன் முதலாக தமிழ் ஆசிரியர்கள் மாநாடு வெற்றிக்காரமாக நடைபெற்றது. (முடிந்தால் அந்த நிகழ்வை மட்டும் ஒரு பதிவாக எழுதுகிறேன். ). சிங்கப்பூரிலிருந்தும், கனடாவிலிருந்தும் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களிலிருந்தும் தமிழ் ஆசிரியர்கள்,அறிஞர்கள் வந்திருந்தார்கள். அடியேனும் எங்கள் பள்ளி (பாலர்மலர் தமிழ் பள்ளி ஹோல்ஸ்வோர்தி கிளையின்) சார்பாக, 
மத்திமப் பருவத்து மாணவர்களின் தமிழ் படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் வழிமுறைகள் 
என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி, அதற்கான பவர் பாயிண்ட் பிரசன்டேஷனோடு அன்று மதியம் நடைபெற்ற அமர்வில் படைத்தேன். இந்த கட்டுரையில் நான் கூறியுள்ள யுத்திகள் அனைத்தும், என்னுடைய வகுப்பில் நான் பின்பற்றிய யுத்திகளாகும். அந்த அனுபவத்தின் அடிப்படையில் தான் இந்த கட்டுரையை தயார் செய்திருந்தேன். அதனை உங்களின் பார்வைக்கு பதிவிடுகிறேன். வேறு ஏதேனும் யுத்திகளை பின்பற்ற முடியும் என்றால், தயவுகூர்ந்து,பின்னூட்டத்தில் தெரிவித்தால், எனக்கும், என்னைப் போன்ற வெளிநாட்டில் தமிழ் பயிற்றுவிக்கும் நண்பர்களுக்கும் உபயோகமாக இருக்கும். இங்கே நான் வெளியிட்டுள்ள படங்களைக் கொண்டு தான் பவர் பாயிண்ட் பிரசன்டேஷனை உருவாகியிருந்தேன்.

மத்திமப் பருவத்து மாணவர்களின் தமிழ் படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்
-சொக்கன் பாலர் மலர் தமிழ்ப் பள்ளி ஹோல்ஸ்வொர்தி சிட்னி

அறிமுகம்

புலம்பெயர்ந்த நாடுகளில் வளரும் தமிழ் குழந்தைகள் பெரும்பாலும் தங்களின் மத்திமப் பருவத்தில் தமிழ் படிக்கும் ஆர்வத்தைக் குறைத்துக் கொள்வதுண்டு. ஆஸ்திரேலியாவில் இந்தப் பருவத்தில் தான்> அவர்கள் செலக்டிவ் (selective ) பாடசாலைகளுக்கான தேர்வை எதிர்கொள்வதற்காக> ஓராண்டோ அல்லது இரண்டாண்டுகளோ தமிழ் பள்ளிக்கு விடுப்பு எடுத்துக் கொள்கிறார்கள்.  இந்தச் செய்கையால் அவர்களின் தமிழ் படிக்கும் ஆர்வம் வெகுவாகக் குறைகிறது. அத்தேர்வு முடிந்த பிறகு> பெற்றோர்களின் தூண்டுதலால் தமிழ் பள்ளிக்கு வந்தாலும் அவர்களால் முழுமையாக ஆர்வம் செலுத்த முடிவதில்லை. அவ்வாறு வரும் மாணவர்களின் தமிழ் படிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதற்கான கற்பிக்கும் வழி முறைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் கருவாகும். இந்த கட்டுரையில் நான் மற்றும் எனது சக ஆசிரியர்கள் வகுப்பில் கையாண்ட பல யுக்திகளைப்  பற்றியும் அவற்றைப் பயன்படுத்தி மாணவர்களின் சிந்தனைத் திறன்> எழுத்துத் திறன்> பேச்சுத்  திறன்> உற்றுக்கேட்டு பதில் அளிக்கும் திறன்> வாசித்து பதில் அளிக்கும் திறன் மற்றும் குழுத்திறன் போன்ற திறன்களை எவ்வாறு  மேம்படுத்த இயலும் என்பதைப் பற்றியும் விரிவாகக் காணலாம். 


கணினி வழிப்பாடம்


1. வீட்டுப்பாடம்

இப்பொழுதெல்லாம் பொதுப் பாடசாலைகளில்> மாணவர்கள் பெரும்பாலும் வீட்டுப் பாடங்களை பேனாவைக்கொண்டு எழுதாமல்> கணினியில் தட்டச்சு மூலமாகத்தான் செய்கிறார்கள். அதனால் தமிழ் பள்ளியிலும் கணினி மூலமாக வீட்டுப்பாடங்களை செய்ய வைக்கலாம். ஐம்பது சதவீத வீட்டுப்பாடங்களை பேனாவைக்கொண்டும் மீதி ஐம்பது சதவீதத்தை கணினி வழியில் செய்யச் சொல்வதால்அவர்களுக்கு கணினியைப் பயன்படுத்தி தமிழை தட்டச்சு செய்யும் முறையை  அறிந்து கொள்ள முடியும். தட்டச்சு மூலம் செய்யப்பட்ட வீட்டுப்பாடங்களை ஆசிரியரின் மின்னஞ்சலுக்கு மாணவர்கள் அனுப்புவதால் ஆசிரியர்களுக்கு அதனை திருத்தும் வேலை எளிதாகி விடுகிறது. இதற்கு முதலில் அவர்களுக்கு கணினியைப் பயன்படுத்தி தமிழில் தட்டச்சு செய்வதை கற்றுக்கொடுக்க வேண்டும்(1)

2. ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்தல்

ஆஸ்திரேலியாவில் நிறைய தமிழ் சமூக அமைப்புகள் ஒவ்வொரு வருடமும் ஏதாவதொரு மாநாட்டை நடத்தி>அதில் வெளியிடப்படும் மாநாட்டு மலர்களில் மாணவர்களின் ஆய்வுக்கட்டுரைகளை வெளியிடுகிறார்கள். அந்த கட்டுரைகளை சமர்பிக்க மாணவர்களை தயார் செய்து>அவர்களின் கட்டுரைகளை அந்த மாநாட்டு மலரில் வெளிவருவதற்கு ஏற்பாடு செய்யலாம். இவ்வாறு செய்வதால் அவர்களின் தமிழ் படிக்கும் ஆர்வம் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல்> வருங்காலத்தில் அவர்களுக்கு இந்த அனுபவம் பயனுள்ளதாக இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நடைபெற்ற ஒரு மாநாட்டில் எங்கள் பள்ளியிலிருந்து ஆறு மாணவ மாணவியரின் கட்டுரைகள் வெளிவந்தன(2)
இவ்விரண்டு முறைகள் மூலமாக மாணவர்களின் தமிழ் படிக்கும் ஆர்வத்தைக் அதிகரிப்பதோடு அவர்களின் எழுத்துத் திறனை மேம்படுத்தவும்; முடியும்.

3. தாயகச் செய்திகளை அறிந்து கொள்ளுதல்   

மாணவர்களை வாரத்திற்கு அரை மணி நேரம் கணினியில் தமிழ்ப்; பத்திரிக்கைகளை படித்து தாயகச் செய்திகளில் மிக முக்கிய தலைப்புச் செய்திகளை அறிந்து கொள்ளச் செய்து> அந்த செய்திகளை வகுப்பில் பேசும் நேரத்தில் (speaking time) இரண்டு மணித்துளிகள் பேசச் செய்தல். இதன் மூலம் அவர்களின் படிக்கும் திறனையும்>பேசும் திறனையும் உயர்த்த முடியும். மேலும் அவர்கள் தாயகத்தில் நடக்கும் விஷயங்களையும் அறிந்து கொள்வார்கள்.

4. விடுமுறையில் தமிழ் படிப்பு

பள்ளி விடுமுறைகளில் மாணவர்கள் புத்தகத்தை எடுத்து தமிழ் படிப்பது அபூர்வம்.அதே சமயம் கணினி மூலமாகத் தமிழ் படிக்கச் சொன்னால் அவர்கள் ஆர்வத்தோடு படிப்பார்கள். தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (3) அமெரிக்காவில் இருந்து இயங்கும் தமிழ் கற்றுக்கொடுக்கும் இணையத்தளம் (4), (5)

இதில் ஏதாவதொரு ஒரு இணையத்தளத்தில் ஒரு பகுதியை வீட்டுப்பாடமாக விடுமுறை நாட்களில் படித்து வரச் செய்யலாம்.
வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இரண்டு முதல் நான்கு மாணவர்கள் வரை உள்ள குழுவாகப் பிரித்து ஏதாவதொரு திட்டப்பணியை விடுமுறையில் குழுவாக செய்து வருமாறு சொல்லலாம்.
நான் என்னுடைய வகுப்பில் இம்மாதிரி குழுக்கள்; அமைத்து அவர்களுக்கு இந்தியாவில் ஆறு முக்கிய சுற்றுலாத் தளங்களைப் பற்றி அதாவது சென்னையிலிருந்து எவ்வாறு செல்லலாம்> தங்கும் வசதி> அங்கு முக்கியமாகப் பார்க்கக்கூடியவைகள்> எந்த மாதத்தில் செல்லலாம்> அந்த இடத்தின் வரலாறு என்று விரிவாக எழுதி> அதனை பவர்பாயிண்ட்டில் படைக்கச் சொல்லியிருந்தேன். மாணவர்களும் ஆர்வமாக பங்குக்கொண்டு படைத்தார்கள்.

மற்றுமொரு திட்டப்பணியாக மாணவர்களிடம் ஏதாவதொரு தலைப்பில் உதாரணமாக தங்களின் பெற்றோர்கள் தாயகத்தில் எவ்வாறு பள்ளிப் படிப்பை படித்தார்கள் என்பதைப் பற்றி பேட்டி  எடுத்து அதனை ஒரு கட்டுரையாக எழுதிக்கொண்டு வரச் சொல்லலாம்.
இவ்வாறு விடுமுறையில் அவர்களை தமிழ் படிக்கச் செய்வதோடு அவர்களின் குழுத்திறனையும் திட்டப்பணிகளை படைக்கும் திறனையும் அதிகரிக்க முடியும்.


வகுப்பறையில் பின்பற்றப்படும் யுக்திகள்



மத்திம பருவத்தில் மாணவர்களின் தொடர்ச்சியாக தமிழ் பள்ளிக்கு வருவதற்கும்தமிழ் படிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதற்கும் வகுப்பறையில் கையாளப்படும் புதிய முறைகள் பெரும் பங்கு வகிக்கிறது. என்னுடைய வகுப்பில் நான் கையாண்ட சில யுத்திகளை இங்கு பார்க்கலாம்.

1. பட்டிமன்றம்



பொதுவாக இந்த வயது மாணவர்களுக்கு தாங்கள் கூறும் கருத்துக்கள் தான் சரியாக இருக்கும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும். பெற்றோர்களோ நண்பர்களோ மாற்றுக் கருத்து கூறினால் அவற்றை எதிர்த்து தங்களின் கருத்துக்கு பலம் சேர்க்கும் விதமாக பதிலுரைப்பார்கள். இந்த எண்ணத்தை உபயோகித்து அவர்களின் பேச்சுத் திறனை அதிகரிக்க வகுப்பில் பட்டிமன்றம் நடத்தலாம். என்னுடைய வகுப்பில் ஒவ்வொரு பருவத்திலும் ஒரு வகுப்பில் பட்டிமன்ற நிகழ்ச்சியை நடத்திவிடுவேன். எந்தெந்த மாணவர்கள் எந்தத் தலைப்பில் பேச வேண்டும் என்பதையும் அவர்களிலிருந்து ஒரு தலைவரையும் தேர்ந்தெடுத்து அவர்கள் தயார் செய்வதற்கு இரு வாரங்களும் அளித்துவிடுவேன்.

இந்த யுக்தி மூலம் அவர்களின் சிந்தனைத் திறன்> குழுத்திறன் மற்றும் பேச்சுத் திறன் ஆகியவைகளை மேம்படுத்த முடியும்.

2. மாணவர்களே பாடங்களுக்குப் பயிற்சியைத் தயாரித்தல்

வகுப்பில் பாடங்களை நடத்தி முடித்த பிறகு அந்த பாடத்திற்கான பயிற்சியை மாணவர்களையே தயாரிக்க சொல்லுதல். அவர்களும் ஆர்வமாக தங்களின் சிந்தனைத் திறனை உபயோகித்து கேள்விகளைத் தயாரிப்பார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் ஆறாம் வகுப்பை எடுத்தபொழுது> பாடப்புத்தகம் தான் இருந்தது> பயிற்சி புத்தகம் வெளியிடப்படவில்லை . அதனால் நான் பாடத்தை எடுத்து முடித்த பிறகு> வீட்டுப்பாடமாக மாணவர்களை அந்த பாடத்திலிருந்து கேள்விகளையும் அதற்கான பதில்களையும் எழுதிக்கொண்டு வரச்சொல்லி, கேள்விகளை தயாரிப்பதற்கும் சில விதிமுறைகளை கூறினேன். உதாரணத்திற்கு ஒரு கேள்விக்கான விடை ஒரு வரியிலும் மற்றொரு கேள்விக்கான விடை குறைந்தது இரு வரிகளிலும் மற்றுமொரு கேள்வி ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும் என்று சொல்லியிருந்தேன். ஒவ்வொருவரும் தாம் எழுதிக்கொண்டு வரும் கேள்விகளை பலகையில் எழுதச் சொல்லி மற்றவர்களை அந்த கேள்விகளையும் அதற்கான பதில்களையும் வகுப்பில் எழுதினார்கள் இவ்வாறு செய்ததால் அந்த பாடத்தைப் பற்றிய முழுமையான விளக்கத்தை  அவர்களால் அறிந்து கொள்ள முடிந்தது. இப்பொழுது பயிற்சி புத்தகங்கள் இருந்தாலும் இந்த யுக்தியை வகுப்பில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன்.

3. உற்றுக் கேட்டு பதில் அளிக்கும் பயிற்சி


மேல்நிலை வகுப்பில் இருக்கும் ஒரு தேர்வானது உற்றுக் கேட்டு பதில் அளிக்கும் தேர்வாகும் (listening and responding). இதற்கான பயிற்சியை தொடங்கும் முன்> அன்றைக்கு எடுக்கப்பட பாடத்திலிருந்து ஒரு பத்தியை ஆசிரியர் ஒரு நிமிடத்துக்கு வாசிக்க வேண்டும். மாணவர்கள் அந்த ஒரு நிமிடமும் கவனமாக கேட்க வேண்டும். ஒரு நிமிடம் முடிந்தவுடன் அவர்கள் அடுத்த ஒரு நிமிடத்திற்கு தாங்கள் கேட்ட சொற்களை எழுத வேண்டும். இப்படி சில வாரங்கள் பயிற்சி அளித்து விட்டு பிறகு தெரியாத பாடத்திலிருந்து இந்த பயிற்சியை மேலும் சில வாரங்களுக்கு தொடர வேண்டும். இவ்வாறு செய்வதால் அவர்களுக்கு உற்றுக் கேட்டு பதில் அளிக்கும் திறனை வளர்த்துக்கொள்ள முடியும். பிறகு மேல்நிலை வகுப்புகளில் நடக்கும் இந்த தேர்வு மாதிரி அவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம்.

4. ஒரு நிமிட தேர்வு



வகுப்பில் அடிக்கடி ஒரு நிமிட தேர்வை நடத்தினால்> மாணவர்களும் தேர்வா! என்று யோசிக்கமாட்டார்கள். மேலும் ஆசிரியருக்கு மாணவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்கும் எளிதாக இருக்கும். அதாவது வகுப்பின் இடையே தெரிந்த பாடத்தையும் பிறகு தெரியாத பாடத்தையும் ஒரு நிமிடம் அனைவரையும் வாசிக்கச் சொல்ல வேண்டும். அந்த ஒரு நிமிடத்தில் அவர்கள் எத்தனை வார்த்தைகளை படித்தார்கள் என்று அவர்களையே எண்ணிப்பார்க்கச் செய்து குறித்துக்கொள்ளச் சொல்ல வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு வாரமுமோ அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையோ செய்தால் மாணவர்களின் வாசிக்கும் திறனை எளிதாக அறிந்து கொள்ள முடியும். மேலும் அவர்களுக்கு இது ஒரு தேர்வு என்ற எண்ணம் தோன்றாது. இதில் மற்றுமொரு விஷயத்தையும் ஆசிரியர் தெரிந்து கொள்ள முடியும். அதாவது ஒவ்வொரு மாணவனையும் வரிசையாக வாசிக்கச் சொல்லாமல், மாற்றி மாற்றி வாசிக்கச் சொன்னால்>  மாணவர்கள் வகுப்பை உன்னிப்பாக கவனிக்கிறார்களா என்று கண்டு பிடித்து விடமுடியும். இதே போல் எழுத்துத் தேர்வை நடத்தினால், ஒரு நிமிடத்தில் அவர்களால் எத்தனை வார்த்தைகள் எழுத முடிகிறது என்றும் அறிந்து கொள்ள முடியும்.


5. பேச்சுப் பயிற்சி


பொதுவாக இந்த வயது மாணவர்கள் அதிகம் தமிழில் பேசமாட்டார்கள். எங்கே நாம் தவறாக பேசிவிடுவோமோ என்ற பய உணர்ச்சி அவர்களிடம் அதிகமாக இருக்கும். அந்த பய உணர்ச்சியைப் போக்கி> அவர்களை சரளமாக தமிழில் பேச வைப்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு வார கால அவகாசமாளித்து அவர்களுக்கு பிடித்த தலைப்பில் மூன்று மணித்துளிகள் முதல் ஐந்து மணித்துளிகள் வரை அவர்களை பேசr; சொல்ல வேண்டும். உதாரணத்திற்கு அவர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படத்திற்கான விமர்சனம்> மிகவும் பிடித்த நடிக நடிகையர்> மிகவும் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி போன்ற தலைப்புகளில் பேச வைக்கலாம்.

6. புதிர் விளையாட்டுக்கள்

வகுப்பில் மாணவர்களை மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபடச் செய்வதே இந்த புதிர் விளையாட்டுக்கள் தான். ஒவ்வொரு வகுப்பிலும் கடைசி பத்து அல்லது பதினைந்து மணித்துளிகள் இதற்காக ஒதுக்கினால் மாணவர்கள் ஆர்வத்தோடு ஒவ்வொரு வாரமும் பள்ளிக்கு வருவார்கள். குழுக்களாக பிரித்து இந்த விளையாட்டை விளையாடுவதால் மாணவர்களின் குழுத்திறனை மேம்படுத்த முடியும்.

     சொல்வளத்தை அதிகப்படுத்துதல்

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குழுக்களைப் பிரித்து சொல்வளத்தை அதிகப்படுத்தும் விளையாட்டை விளையாடுதல். அதாவது வீடு என்று சொன்னவுடன் உங்களுக்குத் தெரிந்த சொற்களை இரண்டு நிமிடத்திற்குள் எழுதுங்கள் என்று சொல்ல வேண்டும். அந்த அந்த குழு எழுதிய சொற்களின் எண்ணிக்கையை புள்ளிகளாக கணக்கிட்டுக்கொள்ள வேண்டும். இந்த மாதிரி காய்கறிகள்> குடும்பம் என்று கூறி இறுதியாக அதிக புள்ளிகளைப் பெற்ற குழு வெற்றிப்பெற்றதாக அறிவிக்கலாம்.

     தனித்தனியாக உள்ள சொற்களை வாக்கியமாக அமைத்தல்

     இரண்டு அல்லது மூன்று திருக்குறளை தாளில் எழுதி ஒவ்வொரு சொல்லாக வெட்டி எல்லாவற்றையும் ஒரு கவரில் போட்டு  ஒவ்வொரு குழுவிடமும் தந்து திருக்குறளை கண்டுப்பிடிக்கச் செய்வது. திருக்குறள் என்று தான் இல்லை வேறு ஏதாவது நீள வாக்கியங்களையும் இவ்வாறு செய்யலாம்.  

முடிவுரை

மேற்குறிப்பிட்டுள்ள யுக்திகளைப் பயன்படுத்திக் கற்பிப்பதால் மத்திம பருவத்து மாணவர்களுக்கு தமிழின் மீது ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. இவற்றில் சில யுக்திகள் மேல்நிலை வகுப்புக்கான பயிற்சியாகவும் விளங்குகிறது. இக்கட்டுரையானது தமிழ் தெரியாத இளைஞர்களுக்குத் தமிழ் கற்றுக்கொடுக்கவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.


சான்றுக் குறிப்புகள் / References
3.      http://tamilvu.org/

  



Friday, September 5, 2014

இணையம் வழி சமயக்கல்வி கற்றலும் கற்பித்தலும் - சிட்னி சைவ மாநாட்டில் படைக்கப்பட்ட கட்டுரை












அடியேன் முதன் முதலாக ஒரு ஆன்மீக மாநாட்டில் கலந்து கொண்டு இறைவனுடைய அனுக்கிரகத்தால் ஒரு கட்டுரையை சமர்பிக்க நேர்ந்தது. அந்த கட்டுரையானது விழா மலரிலும் வெளி வந்திருக்கிறது. இப்படி ஒரு ஆன்மிக மாநாட்டை இங்கு நடத்தப்போகிறார்கள் என்று ஆரம்பத்தில் தெரிந்தபொழுது, நம்முடைய சைவ சமயத்தைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாதே, அதனால், நம்மால் கட்டுரை எல்லாம் எழுத முடியாது என்று தான் எண்ணியிருந்தேன். ஈசனின் கருணையால், சமயக்கல்வி பற்றிய கட்டுரைகளும் எழுதலாம் என்று தெரிய வந்த போது,நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. "இணையம் வழி சமயக்கல்வி கற்றலும் கற்பித்தலும்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதலாம் என்று முடிவெடுத்தேன். என்ன தான், நான் கணிணித்துறையில் வேலை செய்து கொண்டிருந்தாலும், இந்த காலத்து தொழில் நுட்பங்களான ஜாவா (java...) போன்றவைகளில் எனக்கு பரிச்சயம் கிடையாது (நான் ஆதி காலத்து தொழில்நுட்பமான cobol தொழில் நுட்பத்தில் தான் வேலை பார்த்து கொண்டிருக்கிறேன்). அதனால் சமயக்கல்விக்கு இணையத்தளத்தை உருவாக்குவதை பற்றி கூறவில்லை. ஆனால் வருங்காலத்தில், அவ்வாறான ஒரு இணையத்தளத்தை உருவாக்குவதற்கு இக்கட்டுரை உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் இக்கட்டுரையை படைத்தேன். 
அதனை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். 

இணையம் வழி சமயக்கல்வி கற்றலும் கற்பித்தலும்
                            சிட்னி சொக்கன்
முன்னுரை

     “வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
     யாண்டும் இடும்பை இல.”

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திடுவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவர்க்கு உலகத்தில் துன்பம் ஒரு போதும் இல்லை என்று திருக்கறளில் சொல்லியிருப்பது போல், துன்பக்கடலானது நம்மை சூழாமல் இருப்பதற்கு இறைவனை நினைக்க வேண்டும் என்று அடுத்த தலை முறையினருக்கு நாம் சொல்லிக்கொடுக்க வேண்டும். தாயகத்திலும் சரி, புலம் பெயர்ந்து வாழுகின்ற நாடுகளிலும் சரி, சமயப் பள்ளிகள் மூலம் சமயக்கல்வியை நாம் சொல்லிக்கொடுத்துக்கொண்டு வருகிறோம். இன்றைய தொழில்நுட்ப உலகில், சமயத்தை சொல்லிக்கொடுப்பதற்கு சமயப்பள்ளிகள் மட்டும் போதுமா என்று பார்த்தால், கண்டிப்பாகப் போதாது . தொழில் நுட்பத்தையும்  பயன்படுத்தி சமயக் கல்வியை சொல்லிக்கொடுத்தால் தான், ஓரளவிற்கு நாம் வெற்றி பெற முடியும். இந்த நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பப் புரட்சியால், இன்றைக்கு நமக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய பரிசு இணையம். சமயக்கல்வியை கற்றுக்கொள்ளவும், கற்பிக்கவும் இணையம் எவ்வாறு பயன்படுகிறது என்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இணையம் வழி கற்றுக்கொள்ளுதல்
     சமயம் சார்ந்த தகவல்களை இன்று ஏராளமான இணையத் தளங்களில் (website) காணமுடிகிறது. அவைகளையெல்லாம் ஒருங்கிணைத்து, “சமய இணைய நூலகம்” என்று ஒன்றை சமய அமைப்புகள் நிர்வாகித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது அடியேனின் கருத்தாகும். இதனால் எதிர்காலத்தில் சமயம் சார்ந்த அனைத்து இணையத்தளங்களும் ஒரே இடத்தில் காணப்படும். இனி, சமயத் தகவல்களை அளித்து, சமயக்கல்வியை கற்றுக்கொள்வதற்கு பயன்படும் சில இணையத்தளகளைப் பார்ப்போம்.

இறை வழிப்பாட்டைப் பற்றி இத்தளத்தில் காணமுடிகிறது. அதாவது, இறைவனை தொழும் முறை, திருநீற்றை பயன்படுத்தும் முறை, உருத்திராக்கம், சிவலிங்கங்கள், சரியை, கிரியை, யோகம் ஞானம் போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.

அறுபத்திமூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு, வழிபாடு, சிவ ஆகமகுறிப்புகள், ஆன்மீக வகுப்பறை போன்றவற்றை இத்தளத்தில் காணலாம்.

இத்தளத்தில் அறுபத்திமூன்று நாயன்மார்களின் புராணம் மற்றும் சைவ சித்தாந்த சாத்திரங்களும் காண முடிகிறது.

பன்னிரு திருமுறைகளையும் படிக்கவும், கேட்கவும் இத்தளம் உதவுகிறது.

ஒளி, ஒலி வடிவத்தில் நாயன்மார்களின் கதைகளை இத்தளத்தில் காணலாம். குழந்தைகளுக்கு நாயன்மார்களின் கதையை, இத்தளத்தைக் கொண்டு காண்பித்தால், அவர்கள் எளிதில் நாயன்மார்களைப் பற்றி தெரிந்து கொள்வார்கள்.  

ஒலி வடிவில் தேவாரத்திருமுறைகளை பதிவிறக்கம் செய்வதற்கு இத்தளம் உதவுகிறது.

தேவாரப்பாடல் பாடப்பெற்ற 276 திருத்தலங்களைப் பற்றிய தகவல்களை இத்தளத்தில் காண முடிகிறது. மேலும் அத்திருத்தலங்களுக்கு செல்வதற்கான வழித்தடங்கள், முகவரி போன்றவைகள் இதில் இருக்கிறது. இந்த இணையத்தளத்தைக் கொண்டு, அத்திருத்தலங்களுக்கு எல்லாம் எளிதாக சென்று இறைவனை தரிசிக்க முடியும்.

முருகக் கடவுளுக்கான ஒரு இணையத்தளமாக இந்த இணையத்தளம் காணப்படுகிறது.

சமயம் சம்பந்தமான புராண கதைகளை இத்தளத்தில் காண முடிகிறது.
இத்தளங்களின் மூலம் வீட்டிலிருந்தபடியே சமயம் சார்ந்த தகவல்களை எல்லாம் தெரிந்து கொள்ள இணையம் வழி வகுக்கிறது. இது போல் இன்னும் பல தளங்கள், சமயம் சார்ந்த கல்வியை வழங்கி வருகிறது.

இணையம் வழி கற்பித்தல்
      மேற்சொன்ன அனைத்து இணையத்தளங்களும் பெரியவர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பெற்றிருக்கிறது. அவர்கள் அவற்றைப் படித்து, தங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கலாம். சமயப்பாடசாலைக்கும் குழந்தைகளை அனுப்பலாம். ஆனால் இன்றைய குழந்தைகள் அவ்வாறு படிப்பதைக் காட்டிலும் கணினி வழியாக தாங்களே படிப்பதைத்தான் அதிகம் விரும்புகிறார்கள். இங்குள்ள பள்ளிக்கூடங்களிலும் அதனைத்தான் ஊக்கப்படுத்துகிறார்கள். மேலும் எல்லா நாடுகளிலும் சமயப்பாடசாலை இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. அதனால் சமயத்தை கற்பிப்பதற்கு, இணையத்தின் பயன்பாடு இன்றியமையாததாகி விட்டது. தமிழையும், ஆங்கிலத்தையும் கற்றுக்கொடுக்கும் இணையத்தளங்களைப் போல், சமயக்கல்விக்கு அம்மாதிரியான இணையத்தளங்களை உருவாக்கி கற்றுக்கொடுக்க முடியும் என்று நம்புகிறேன். மொழிகளை கற்றுக்கொடுக்கும் சில இணையத்தளங்களை பார்ப்போம்.

ஆஸ்திரேலியாவில் ஆரம்ப பள்ளி மாணவர்களிடம் “bug club” என்கிற இணையத்தளம் பிரபலமாக இருக்கிறது. அந்த இணையத்தளத்தில் பெரிய புத்தகம்(big book) வடிவிலான புத்தகங்களை வாசித்து அல்லது கேட்டு, ஒவ்வொரு பக்கத்திலும் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கக்கூடிய வசதியும் உள்ளது. இதனுடைய பயன்பாடு பெரும்பாலும் சிறிய குழந்தைகளுக்குத்தான்.



இம்மாதிரியான ஒரு இணையத்தளத்தை உருவாக்கி, அதில் இறைவனை வழிபடும் முறை, கடவுளின் படங்கள் போன்றவைகளையெல்லாம் ஏற்றி அதற்கேற்ப கேள்வி பதில்களை தயாரிக்கலாம். இதன்மூலம் சிறிய குழந்தைகள் சமயக்கல்வியை படிப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்த முடியும்.

இந்த தளம், சிறு குழந்தைகளுக்கான கதைகள், பாடல்கள் எல்லாம் பயிற்சியுடன் அமைக்கப்பெற்றிருக்கிறது. இம்மாதிரி ஒரு தளத்தை வடிவமைத்து, நாயன்மார்களின் கதைகள், திருவிழா நிகழ்ச்சிகள் போன்றவற்றை அதில் ஏற்றி, அதற்கேற்ப பயிற்சிகளை உருவாக்கலாம்.
சமயக்கல்வியை நடத்தும் பாடசாலைகள் அங்கு நடத்தப்படும் பாடங்களை இணையத்தளத்திலோ அல்லது குறைந்தபட்சம் வலைப்பூவிலோ பதிவேற்றம் செய்தால், உலகத்தில் யார் வேண்டுமானாலும் படிக்க முடியும். உதாரணமாக http://www.southasia.sas.upenn.edu/tamil/les.html இந்தத்தளத்தில் ஒவ்வொரு வகுப்பிற்கான தமிழ் பாடத்திட்டத்தை எல்லோராலும் படிக்க முடியும்.

http://anbujaya.com/index.php/2013-06-07-10-15-17/2013-06-07-10-17-17 இந்தத்தளத்திலும் தமிழ் கற்றுக்கொடுப்பதற்கான உத்திகள் கையாளப்பட்டிருக்கிறது. இந்த தளங்களை மாதிரி சமயக்கல்வியை சொல்லிக்கொடுப்பதற்கான பாடத்திட்டங்களை இணையத்தளத்தில் ஏற்றினால் எல்லோராலும், எங்கிருந்தும் சமயக்கல்வியை இணையத்தின் மூலம் கற்க முடியும்.

முடிவுரை
     இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில், இணையத்தின் மூலம் தமிழ் மொழி அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறது. அதுபோல் சமயக்கல்வியும் அடுத்தக்கட்டத்தை எட்டும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இணையத்தைப் பயன்படுத்தி சமயவழிக் கல்வியை கற்பிக்க இணையத்தளங்களை உருவாக்குவதில் இக்கட்டுரை உதவியாக  விளங்கும் என்று நம்புகிறேன்.



  

Tuesday, September 24, 2013

எட்டுதொகை நூல்கள்


எட்டுதொகை நூல்கள்

சிரஞ்சீவி மணிவாசகம், ஐந்தாம் வகுப்பு, பாலர் மலர் தமிழ்ப் பள்ளி, ஹோல்ஸ்வோர்தி
இந்த கட்டுரையில் நான் எட்டுதொகை நூல்கள் பற்றி விவரிக்கப்போகிறேன். இதில் எட்டுதொகை என்றால் என்ன, யார் இயற்றியது, எந்த காலகட்டத்தில் நடைபெற்றது, அதில் என்ன இருக்கிறது, அந்த கால சமுதாயத்திற்கு எவ்வாறு பயன்பட்டது, மற்றும் அதனால் எனக்கு என்ன பயன் என்பனவற்றை விரிவாக கீழே வரும் பத்திகளில் காண்போம்.
எட்டுதொகை அல்லது தொகை நூல்கள் என்பவை சங்க இலக்கியத்தில் பலராலும் பல காலகட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒருசேரத் தொகுக்கப்பட்டவை(1).  இவற்றில் பல பாடல்கள், அவற்றை எழுதியவரது பெயர் காணப்படவில்லை. அகத்தையும், புறத்தையும் பற்றி இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. தொழில், அளவு, பாட்டு, பொருள் ஆகியவற்றால் தொகுக்கப் பட்டதால் தொகை எனப் பெயர்பெற்றது.
எட்டுதொகை நூல்களைப் பாடிய புலவர்கள் ஏறத்தாழ ஐநூற்றவர்(2). இதில் பெண்பாற் புலவர்களும் அடக்கம், இவர்கள் பல ஊர்களில் வாழ்ந்தவர்கள். பல்வேறு காலத்தவர்கள். பல்வேறு பிரிவினர்கள். கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தினைச் சங்க காலம் என்பவர். இக்காலதில் வாழ்ந்த புலவர்களே சங்கப் புலவர்கள். இவர்களால் இயற்றப்பெற்றவை சங்கப் பாடல்கள் என்ப்படும். இப் பாடல்களை தமிழ் அறிஞர்கள் பத்துப்பாட்டு, எட்டுதொகை என்ற இரு பெரும் பிரிவாகப் பிரிதள்ளனர். எட்டுதொகை நூல்களை பின்வரும் பாடல் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐந்குறுநூறு
                                                 ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
                                                 கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
                                                 இத்திறத்த எட்டுத் தொகை.
இவெட்டுத் தொகை நூல்களை மூன்று வகையாகப் பிரித்துக்கொள்ளலாம். அகப்பொருள் பற்றிய நூல்கள்: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை மற்றும் அகநானூறு ஆகிய ஆறு நூல்களும். புறப்பொருள் பற்றிய நூல்கள்: பதிற்றுப்பத்து, புறநானூறு ஆகிய நூல்களும் மற்றும் பரிபாடல் ஆகும்.
இப்பாடல்களில் பெருநில வேந்தர்களின் வெற்றிச் சிறப்புகளையும், போர்த்திறமையையும் விவரித்துக் கூறும் பாக்கள் பல; போரைத் தடுத்து அறிவு புகட்டுவன சில; வள்ளல் தன்மையை பாராட்டுவன பல; வருமையின் கொடுமையினை வருணிப்பன சில; மானமுடன் வாழ வழிகாட்டுவன  பல; ஆணும் பெண்ணும் மனம் இணைந்து வாழும் அன்பொழுக்கங்களை எடுத்துரைப்பன சில; வரலாற்றுக் குறிப்பினையும் புராண இதிகாச செய்திகளை குறிப்பிடுவன சில, பொதுவாக பழந்தமிழ் நாட்டின் வரலாற்றினை இதன் மூலமாக அறிகின்றோம்.
நற்றிணையின் அகச்சுவை நிறைந்த பாடல்களில் மக்கள் அறவாழ்வு, மன்னர் கொடை ஆட்சித்திரம், ஓருமைப்பாடு, பழந்தமிழர் பழக்க வழக்கங்கள், உவமைத்திரம், உள்ளுறை உவமம், இறைச்சிப் பொருள், ஆகியவற்றைக் காண்கிறோம்(3). இப்பாடல்களைப் பாடியவர் பழந்தமிழர் பழக்க வழக்கங்கள் சிலவற்றைக் கீழே காண்போம்.
எட்டுத்தொகை  நூல்களைக் குறிப்பிடும் வெண்பாவில் இதனை முதற்கண் நிறுத்தியுள்ளனர். 9 அடி முதல் 12 அடிவரையிலும் இதில் பாடல்கள் அமைந்துள்ளன. இந்நூலை தொகுத்தவர் இன்னார் என்று தெரியவில்லை. தொகைப்பித்தவர் பான்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதியார். திணை என்ற சொல் அகப்பொருள் கூறும் நூல்களுக்கு அமைந்த பெயராகும். திணை என்ற பெயரோடு  நல் என்னும் அடையும் சேர்ந்து நற்றிணை என வழங்குக்கின்றது.
நற்றிணை பாடல்களுக்கு சில எடுத்துக்காட்டை கீழே காணலாம்:
நீர் எவ்வாறு உலக வாழ்க்கைக்கு இன்றியமை யாததோ அவ்வாறே, தலைவி உயிருடன் இயங்கு வதற்குத் தலைவனது அருள் நிறைந்த காதல் நெஞ்சம் இன்றியமையாதது.
                 நீரின் றமையா  உலகம் போலத்
                   தம்மின் றமையா நன்னயந் தருளி  (பாடல்1)
செல்வக் குடியில் பிறந்த பெண் தான் புகுந்த இடத்தில் காணும் வறுமையைப் போக்க தாய் வீட்டை நாடுதல் இல்லை என்னும் சீரிய பண்பைக் கூறுகிறது பின்வரும் அடிகள்.
        கொண்ட கொழுநன் குடிவரன் உற்றெனக்
        கொடுத்த தாதை கொலுஞசோறு உள்ளாள் (பாடல்110)
இதுபோன்ற பகுதிகள் தமிழரின் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தைக் காட்டுகின்றன.
    
அகத்திணை புறத்திணை என்பன முறையே வீட்டையும், நாட்டையும் குறிப்பன(4). அகம் இன்பத்தினையும் புறம் அறம் பொருள் வீட்டினையும் குறிப்பன. கூர்ந்து கவனித்தால் அகத்தை செம்மைப்படுதுவத்தர்க்குத் துணையாகவே புறம் அமைந்துள்ள தென்பது புலனாகும். புறம் என்பதும் காவல் என்பதும் ஒன்றாகும். அறம் ஒற்றுமைக் காவலாகவும், பொருள் வேற்றுமை காவலாகவும் இருப்பன. எல்லாவுயிருக்கும் இன்பம் ஒன்றே இயல்பாகக் காணப்படுகிறது. அதனாலே, ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியனாரும்.
 
 
எல்லா வுயிர்க்கு மின்ப மென்பது  
    
 தானமர்ந்து வரூஉ மேவற் றாகும் 

என்றருளினர். இன்பமென்பது ஆணும் பெண்ணுமாகப் ஒன்றி வாழ்வது. அதுவே தலையாயதாகும். அவ்வாழ்வு ஓரறிவு முதல் ஐந்தறிவு முதலாகச் சொல்லப்படும் எல்லாவுயிர்களுக்கும் உள்ளது. ஆறறிவு படைத்த நம்முடைய வாழ்க்கையை செம்மைப்படுத்தி  வழிகாட்டுவது அகன் ஐந்திணையாகும்.அகன் ஐந்திணையும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை எனச் சொல்லப்படும், இவை, முறையே அறம், பொருள், இன்பம், வீடு, பேறு என்னும் பயன்களை நல்கும் நிலைக்களமும் ஒழுக்கமும் ஆகும். இவையே பொருளுண்மை காட்டும் நமசிவாய என்னும் நற்றமிழ் மறைப் பொருளுமாகும்.
எட்டுத்தொகை நூல்களைப் பற்றி எழுதிய இந்தக் கட்டுரையில், எனக்கு ஏற்பட்ட பயன்களையும் அனுபவத்தையும் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். மேலே கூறப்பட்டுள்ள நற்றினைப் பாடல்களின் வாயிலாக ஒரு கணவன் மனைவி எவ்வாறு ஒழுக்கமுடன் வாழ வேண்டும் என்பதையும், தனி மனித வாழ்க்கைக்குத் தேவையான ஒழுக்கத்தினையும் அறிந்து கொண்டேன். அது அந்த்தக்கால வாழ்க்கைக்கு மட்டுமல்லாது, இனி வரும் எல்லாக் காலத்திற்கும் பயனுள்ளதாக அமையும் இந்த எட்டுத்தொகைப் பாடல்கள் என்பது என் தாழ்மையான கருத்தாகும்.
எட்டுத்தொகைப் பாடல்களைப் பற்றி கட்டுரை எழுத எனக்கு கிடைத்த வாய்பின் மூலம், இன்னூலைப் பற்றி பெரிய அளிவில் இல்லாவிட்டாலும் சிறிய அளவிலாவது தெரிந்த கொள்ள வாய்புக்கிட்டியதற்கு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மீண்டும் இதேபோல் தமிழின் மற்ற சங்க இலக்கியத்தைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.
சான்றுக் குறிப்புகள்:
·         (1)http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88
·         (2)http://temple.dinamalar.com/news_detail.php?id=17594  
·(3)http://books.google.com.au/books?id=HJLkApp07JsC&printsec=frontcover&source=gbs_ge_summary_r&cad=0#v=onepage&q&f=false (டாக்டர் எம். நாராயணவேலுப்பிள்ளை)
·         (4)tamilvu.org