Friday, May 30, 2014

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - நகர் வளம்சொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை

சொக்கலிங்க ஐயா சரித்திரம் - சிறப்புப்பாயிரம்


நகர் வளம்

இத்தகு வளம்பொருந்திய மங்கலகரமாகிய கீர்த்தி நிறைந்த பாண்டி நாட்டின் கண்ணே, அகத்திய மகாமுனிவர், நெல்வாயில் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளிய சிவலிங்கப் பெருமானுக்கு அபிஷேகஞ் செய்ததேனானது வெள்ளமாகப் பெருக்கெடுத்து வருகின்ற தேனாறு சூழப்பெற்றதும், மதுவொழுகும் மலர்ச் சோலைகள் மணம் பரப்பி வயங்கப் பெற்றதும், கன்னலுங், கமுகும் வேலியாகச் சூழச் செந்நெல் வளர்ந்து செழிக்கும் வயல்கள், தவறாது என்றும் முப்போகமும் விளையப் பெற்றதும், நீர் நிறை கிடங்குகளும், ஏரிகளும் நிலவப்பெற்றதும், திருமகள், கலைமகள் வீற்றிருக்கின்ற செந்தாமரை, வெண்டாமரை மலர்கள் மிகுந்து திகழுந் தடாகங்களும், பொய்கைகளும், ஓடைகளும், கூபங்களும் என்றும் நீர்வளம் நிறையப் பெற்றதும், நால்வகை மலர் நிறை நந்தனவனங்கள், பசுமடம் முதலியவை பாங்கிலுற்றதும், என்றும் மங்களம் நிறைந்த விழாவறா வீதிகளில் தோரண முதலியவை சூழ்ந்து அழகு செய்யப் பெற்றதும், எத்தேசத்தின் எவ்வரும் பொருள்களுந் தன்பாற்கொண்டு தகுதியிர் கொடுக்கும் ஆவணக் காட்சியின் அற்புதம் வாய்ந்ததும், நாட்டுக்கோட்டை மகுடதனவைசியர்கள் வாழப் பெறுவதாகிய இந்திரன் மாளிகை யென்றதிசயிக்கும் பொற்கலசந்திகழ் உப்பரிகைகளும், மாடமாளிகைகளும், வானளாவப் பெற்றதும், சாதுக்கள் மடம் முதலிய மற்ற மடாலயங்கள், அன்ன சத்திரங்கள், வித்தியாசாலைகள், ஔடத சாலைகள் முதலிய அற நிலையங்கள் என்றுங் குறைவின்றி விளங்கி வரப்பெற்றதும், முதல்வராகிய விநாயகராலயங்களும், கிராமதேவதை கோயில், ஐயனார் கோயில், விஷ்ணுவாலய முதலிய ஆலயங்களும் பக்த ஜனங்கள் பக்திசிரத்தையுடன் கொண்டாடி வணங்கிப் போற்றிவரப் பெற்றதும், ஆடவரும், மகளிரும் சகல சம்பத்துக்களுடன் குதூகலமாக வாழ்ந்துவரப் பெறுவதும், சூத்திரர் வைசியர், ஷத்திரியர், பிராமணர் முதலினோர் அவரவர் நெறிதவறாது போற்றிவருகின்ற பொற்பு நிறைவீதிகள் அமையப் பெற்றதும், மறையவர் அத்தியயனஞ் செய்யும் வேதபாடசாலைகளும், சாத்திரபாடசாலைகளும், வைதிக சைவ சீலர்களாகிய ஆதி சைவ சிவாசாரியார்கள் வாழ்ந்து வருகின்ற மாடமாளிகைகளும், சிவாகம பாடசாலைகளும், அறுபத்துமூவராதிய உண்மை நாயன்மார் குருபூசை நடாத்தப் பெற்றுச் சைவமாதவர்கள் வாழ்ந்து வருகின்ற திருமடாலயங்களும், திருமுறைகளாகிய திருவருட் பாசுரங்கள் ஓதப்பெருகின்ற திராவிட வேத பாடசாலைகளும், பக்கத்திற் சூழ்ந்து விளங்கும் பான்மை பெற்றதும், இன்னோரன்ன பன்னருஞ் சிறப்பு வாய்ந்த இந்நகருக்கு மத்தியில் உயிராய் வேத சிவாகம திராவிட வேத புராண பாராயண முழக்கங்களும், மங்கள வாத்திய ஒலிகளும், நிறைந்து நித்திய நைமித்திக காமிய பூசைகள் சிவாகம விதிப்படி பக்தி சிரத்தையுடன் நடாத்தி வரப் பெற்ற நகரச் சிவாலயம் பிரகாசிக்கப் பெற்றதும், அக்கோயிலின் கண்ணே திருத்தொண்டு செய்யும் அடியார்களும் பெரியோர்களும் சேவிக்க உயிருக்குயிராகிய ஸ்ரீ மீனாக்ஷிசுந்தரேஸ்வரர், விநாயகர், சுப்பிரமணியர் முதலிய பரிவார தேவர்களுடன் திருவருள் பொழிந்து அநவரத சாந்நித்திய சருவானுக்கிரக மூர்த்தியாய் விகசிக்கின்ற பெருமை பெற்றதும் யாதெனில்:-

“சீர்தரு காரென் மேகமார் சோலை
     திகழ்பல மாடங்கள் சசூழ்ந்து
ஆர்தரப் பொழிந்தே யழகுசெய் வளத்தா
     லையெனுஞ் சுந்தர மமைந்த
நேர் திகழ் குடியென் புரமிது மருத
     நிலத்தில்வாழ் பதியெனும் பொருள்கொள்
பார்புகழ் மேக சுந்தர புரமாப்
     பகர்திருக் காரையம் பதியே.”

“திருவள ரிளையாற் றங்குடி மாற்றூர்
     திகழ்தரு வைரவ னிரணி
புரமகிழ் பிள்ளை யார்பட்டி நேமம்
     புகழிருப் பைக்குடி சூரை
மருவிவாழ் வுறுவே லன்குடிக் கோயில்
     வளமிகு காணியாட் சியதாம்
உரிமையிற் போற்று முயர்நக
     ரத்தா ரோங்கிவாழ் காரையம் பதியே.”

--------------
(அடுத்து வர இருப்பது - முதலாம் அதிகாரம்.உற்பத்தி)

பின்குறிப்பு:   பாடலில் கடைசி எட்டு வரிகளில், நகரத்தார்களின் ஒன்பது கோவில்களைப் பற்றி சொல்லப்பட்டிருக்கு. அவை:
இளையாத்தங்குடி, மாத்தூர், வைரவன் கோயில், இரணிகோயில், பிள்ளையார்பட்டி, நேமம் கோயில், இலுப்பைக்குடி, சூரக்குடி, வேலங்குடி

Wednesday, May 28, 2014

ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 3 (பாடம் கற்றுக் கொடுக்கும் முறை)
இந்த பதிவுல ஓவியாவின் பள்ளிக்கூடத்தில் ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்கள் எவ்வாறு சொல்லிக்கொடுக்கப்படுகிறது என்று பார்க்கலாம். இங்கே நான் ஒரு விஷயத்தை சொல்லியாக வேண்டும். அதாவது வகுப்பறைக்குள் நடப்பதை ஓவியா ஞாபகம் வைத்து சொல்வதையும், வகுப்பில் அவர்கள் பயன்படுத்துகின்ற பயிற்சி தாள்களையும் வைத்து தான் நான் இங்கே எழுதுகிறேன். மேலும்......

Sunday, May 25, 2014

கண்ணிற்குள் பிரஷர் (Glaucoma) – ஒரு எச்சரிக்கைஹை பிரஷர், லோ பிரஷர் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் கண்ணிற்குள் பிரஷர் இருப்பதை நம்மில் நிறைய பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். அதற்கு ஆங்கிலத்தில் Glaucoma என்று சொல்லுவார்கள். அந்த வார்த்தையை தமிழ் படுத்தினால் – கண் நீர் அழுத்த நோய் என்று வருகிறது. வீட்டு அம்மணிக்கு ஏற்பட்ட இந்த பிரச்சனையையின் மூலம் எனக்கு தெரிந்த விஷயங்களை இங்கு எச்சரிக்கை பதிவாக பகிர்ந்து கொள்கிறேன். முதலில் இந்த Glaucoma என்றால் என்ன என்று பார்ப்போம்.

Glaucoma என்றால் என்ன:
நம் கண்ணில் உள்ள முன் பகுதியில் இருக்கும் அறையில் சுரக்கும் நீரின் அழுத்தம் அதிகரித்தால், அதற்கு Glaucoma என்று பெயர். சாதாரணமாக ஒரு மனிதனின் கண்ணுக்குள் சுரக்கும் நீரின் அழுத்தம் 16mm HGயிலிருந்து 20 mm HGக்குள் இருக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள். இந்த அழுத்தம் கூடும்போது தான் இந்த Glaucoma பிரச்சனை உருவாகுகிறது.

Glaucoma வகைகள்:
இந்த நோய் நிறைய வகைகளை கொண்டு பிரிக்கலாம். ஆனால் குறிப்பாக இரண்டு வகைகள் தான் முக்கியமாக கருதபப்டுகிறது. "திறந்த கோண கண் அழுத்த நோய் (Open-Angle Glaucoma)" மற்றும் “மூடிய கோண கண் அழுத்த நோய் (Angle-Closure Glaucoma)”.

Glaucomaவை கண்டறிதல்:
இந்த நோயை எவ்வாறு கண்டறியலாம் என்றால், முதலில் நாற்பது வயதை தாண்டிய அனைவரும் கண்டிப்பாக இரண்டு வருடத்திற்கு ஒரு முறையாவது கண்களை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். அப்போது கண் அழுத்தத்தையும் மருத்துவரிடம் சொல்லி பார்க்க வேண்டும். ஒரு வேளை கண் அழுத்தம் தேவைக்கேற்ப அதிகமாக இருந்தால், மருத்துவர்களே “Field Test” என்று ஒரு டெஸ்ட் செய்து அதில் பார்வை எந்த அளவிற்கு இழக்கப்பட்டிருக்கு என்று கண்டுப்பிடிப்பார்கள்.(ஃபீல்ட் டெஸ்ட் செய்வது)

ஏற்படும் பதிப்புகள்:
இந்த நோய்க்கு “பதுங்கும் பார்வைத் திருடன்” (“The Sneak Thief of Sight”) எர்னு வேறு ஒரு புனைப் பெயரும் இருக்கிறது. அதாவது ஏறக்குறைய 40% சதவீத பார்வை பறிபோகிற வரைக்கும் ஒருவரால் இந்த நோய் தனக்கு வந்திருக்கு என்று கண்டுப்பிடிக்கக முடியாதாம். இந்த நோய் ஒருவருக்கு வந்துவிட்டால், நீரழிவு நோய் மாதிரி, இந்த நோயை குணப்படுத்த முடியாது, ஆனால் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளலாம். இந்த நோயினால் பார்வை இழப்பு ஏற்பட்டுவிட்டால், மீண்டும் இழந்த பார்வையை திரும்ப பெற முடியாது. அதற்கு காரணம், கண்ணில் சுரக்கும் நீரின் அழுத்தமானது கூடும்போது, அந்த அழுத்தமானது, பார்வை நரம்பைத் (Optic Nerve) தான் பாதிக்கிறது. இதனால் முதலில் ஓரப்பார்வை (side vision) பாதிக்கப்பட்டு, பிறகு படிப்படியாக நேர் பார்வையும் (tunnel vision) பாதிக்கப்பட்டு, கடைசியில் கண்ணை குருடாக்கிவிடும். இந்த நோயினால் முதலில் ஓரப்பார்வை பாதிக்கப்படுவதால், நம்மால் அதனை எளிதாக உணர்ந்து கொள்ள இயலாது. இந்த நோய் வந்துவிட்டால், பிறகு கண்ணுக்கு வரக்கூடிய கண் புரை நோய் (Cataract) போன்ற நோய்கள் கண்டிப்பாக வந்தே தீருமாம்.

சிகிச்சை முறைகள்:
இந்த நோய் ஒருவருக்கு இருக்கிறது என்று கண்டுப்பித்து விட்டால், அதன் வீரியத்தைப் பொறுத்து சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. ஆரம்ப கட்ட நிலையில், கண்டுப்பிடிக்கப்பட்டால், கண் சொட்டு மருந்து(Eye Drops) பரிந்துரைக்கப்படுகிறது. 


இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், ஒரு நாள் கூட தவறாமல் மருத்துவர்கள் குறிப்பிட்ட நேரப்படி கண்ணுக்கு அந்த சொட்டு மருந்துகளை போட்டுக்கொள்ள வேண்டும். சில சமயம் மாத்திரைகளும் பரிந்துரைக்கப்படுமாம். ஆனால் இங்குள்ள மருத்துவர்கள், மாத்திரைகளை அதிகம் பரிந்துரைப்பதில்லையாம், ஏனென்றால், அந்த மாத்திரைகளினால் பக்க நிகழ்வுகள் (side effects) அதிகம் ஏற்படுவதால் தானாம். இதற்கு அடுத்த நிலையில் இருப்பவர்களுக்கு, லேசர் முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நோயின் தாக்கம் அட்வான்ஸ் கட்டத்துக்கு போயிருந்தால் டிராபேகுலெக்டமி அறுவை சிகிச்சை (Trabectome Surgery)” முறையை பயன்படுத்தி, அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவருவார்கள்.
பொதுவாக நாம் எல்லோரும் உடம்பிற்குத் தான் வருடத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்கிறோம். ஆனால் கண்களுக்கும் நாம் முக்கியத்துவம் கொடுத்து பரிசோதித்துக்கொள்ள வேண்டும். மூக்கு கண்ணாடி அணிபவர்கள் இரண்டு வருடத்துக்கு ஒரு முறையாவது கண்களை பரிசோதித்துக்கொள்வார். ஆனால் கண்ணாடி அணியாத பெரும்பாலானவர்கள், கண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே இல்லை. நான் ஆரம்பத்தில் சொன்னபடி இந்த  நோய் ஒரு “பதுங்கும் பார்வைத் திருடன்”. அதனால் நாம் விழிப்புடன் நம் கண்களை பரிசோதித்துக்கொண்டு இந்த திருடனிடமிருந்து நம் கண்களை பாதுக்காத்துக் கொள்வோம்.

பின் குறிப்பு: இந்த பதிவு என்னுடைய 200வது பதிவு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்ன எழுதப்போகிறோம் என்று தெரியாமல் இந்த வலைப்பூவை தொடங்கினேன். இன்று இந்த 200வது பதிவு ஒரு விழிப்புணர்வு பதிவாக இருக்க வேண்டும் என்று எண்ணி இந்த பதிவை எழுதினேன்.


Thursday, May 22, 2014

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - காப்பு மற்றும் நாட்டு வளம்
சொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை

சொக்கலிங்க ஐயா சரித்திரம் - சிறப்புப்பாயிரம்


சிவமயம்
கணபதி துணை

ஸ்ரீமத் சொக்கலிங்க ஐயா அவர்கள்
சரித்திரம்.
-------------------------

காப்பு.
கணபதி வணக்கம்.

செம்பொன்மணி மாடமுயர் காரை யென்னுந்
     திருநகரிற் றிருவவதா ரஞ்செய் தோங்கி
அம்புவியிற் பெரியோர்கள் போற்றி செய்ய
     ஆதரவி னீரிரண்டு நெறியுங் காட்டி
நம்புநூல் பலவியற்றி விளக்கி யாண்ட
     நங்கள்குரு சொக்கலிங்க தேசி கன்றான்
இம்பர்வரு மாக்கதையிங் கியம்ப வின்சொல்
     இனியபொரு ளுதவியருள் சுமுக தேவே!


அனுகூல விநாயகர் துதி.

சீரி னேங்கு திருநகர்க் காரையிற்
பாரி னேங்கனு கூலப் பரம்பொருள்
தாரி னேங்கு கயமுகன் றண்மலர்
நேரி னேங்கிமுன் னின்றருள் செய்யுமே.நாட்டு வளம்

சிவபெருமான், சீவர்களை உய்யக் கொண்டருளுகின்ற உத்தமமாகிய இந்தப் புவனியின் கண்ணே, சைவசமய பரமாச்சாரியர்களாகிய நால்வருள், முத்தமிழ் விரகர் தம்பிரான் றேழர், முனிவர் வாகீசர், என மூவர் திருவாய் மலர்ந்தருளிய திராவிடவேதப் பதிகங்கள் பெற்ற விசிட்டத் தலங்கள் பலவற்றுள் :-

“கூடலா டானை பூவணஞ் சுழிய
     றிருத்தலங் கானை குற்றாலம்
ஏடக மாப்ப னூரிரா மேசம்
     பராசலம் பிரான்மலை சாலி
வாடியே போற்றுந் திருப்புன வாயில்
     வளமுறு தலங்கள்பன் னான்குங்
கூடிய வுயிர்போற் கொண்டிடு சீர்த்தி
     குலவிடும் பெருமைபெற் றதுவும்.”

“சீரோங்கிய மணிவாசகப் பெருமான்றிரு வாக்காம்
பாரோங்கிய பதிகத்தலம் பலவற்றுளுங் கூடல்
பேரோங்குமுத் தரகோசமங் கைவா தவூர் பெரிதாம்
நேரோங்கிடு துறைமுன்றல நிலவத்திகழ் வதுவும்.”

சமயவிசேட நிருவாண ஆசாரிய தீக்ஷா குருமார்கள் விளங்கப்பெருவதும், பிரம ஷத்திரிய வைசிய சூத்திரர் முதலியோர் அவரவர்கள் வருணாசார தருமப்படி ஒழுகிவரப் பெறுவதும், பிரமசரிய கிருஹஸ்த வானப்பிரஸ்த  சந்நியாச ஆச்சிரமங்களையுடையவர்கள், தங்கள் சீலங்குறைவில்லாமல் நடந்துவரப் பெறுவதும், சரியை,கிரியை,யோக ஞானவான்கள் சாலோக, சாமீப, சாரூப, சாயுச்சிய பதவிகளுக்குரியவர்களாய்ப் பொலியப் பெறுவதும், அறம், பொருள், இன்பம், வீடு என்னும் புருஷார்த்தங்களைக் கொடுக்கத்தக்கதும், பாண்டிய அரசர்கள் சொக்கேசருடைய திருவருளால் செங்கோல் செலுத்தி அரசாளப் பெற்றதும், சச்சிதானந்த ஸ்வரூபர்களாகிய ஸ்ரீமீனாக்ஷி என்னும் தடாதகைப் பிராட்டியாரும், சோமசுந்தரக் கடவுளாகிய சுந்தரபாண்டியரும், ஸ்கந்த மூர்த்தியாகிய உக்கிரகுமார பாண்டியரும் தன்னகத்தே ஒருங்கிருந்து அற்புதமாய் அரசாளப் பெற்றதும், முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்னும் முச்சங்கங்களில் சுந்தரேசப் பெருமானும் தெய்வத்தன்மை வாய்ந்த வித்துவசிரோமணிகளும் வீற்றிருந்து செந்தமிழாராய்ச்சி செய்து சிவபரத்துவம் விளக்கப் பெற்றதும், தெய்வத்தன்மை பொருந்திய இனிய செந்தமிழ் மொழியாகரராய்ச் சிவ பிரானை யொத்த அகத்திய மகாமுனிவர் விலங்குகின்ற பொதியமாமலை தன்னிடத்திற் பிராசிக்கப் பெறுவதும், அறுபத்து நான்கு திருவிளையாடல்களை அற்புதக் காட்சியாய்ப் பொற்புற நடித்தருளிய சுந்தரேசப் பெருமான் எழுந்தருளியிருக்கின்ற திருவாலவாய்த் திருக்கோயில் போலியப்பெற்று வைகை நதி சூழ்ந்த துவாத சாந்தபுரமாகிய மதுரைமா நகரமானது தனக்குத் திருமுக மண்டலமாய்த் திகழப் பெறுவதும்,  யாதெனில் : -

“மழைமதி மூன்று பெய்து வளர்நதிப் பொருனைசூழ்ந்து
உழுதொழில் வளங்கள் யாவு முயர் ந்திடக்குடிகண்மல்கி
பழகுமுத் தரும மோங்கிப் பல்கிட நிலவி யீசன்
பழம்பதி யாக நீடும் பாண்டிநன் னாடேயாகும்“

Tuesday, May 20, 2014

வீட்டில் சமையலறை எங்கே இருக்கிறது
திருமணத்திற்கு முன்பும் சரி, பின்பும் சரி, எனக்கும் சமையற்கட்டிற்குமான தூரம் ரொம்பவே அதிகம். திருமணத்திற்கு முன்பு, அம்மாவிற்கு ஏதாவது உதவி செய்யலாம் என்று சமையலறைக்கு போனால், உனக்கு ஏண்டா, இந்த வேலையெல்லாம். நீ போய் உட்காரு, நான் உனக்கு வாய்க்கு ருசியா செய்றேன், நீ நல்லா சாப்பிடுன்னு சொல்லியே, என்னை சமையற்கட்டு பக்கம் விட்டதே இல்லை அவர்கள். திருமணத்திற்கு பிறகு, அம்மணியிடம், என் அம்மா, அவனுக்கு வாய்க்கு ருசியா சாப்பிடத்தான் தெரியும், அதனால அவனுக்கு நல்லா சமைச்சுக் கொடு என்று கூறிவிட்டார்கள். இதனால் அம்மணியும் என்னை சமையலறை பக்கம் விட்டதே இல்லை. ஆனா அவுங்க மனசுக்குள்ள, நான் சமைச்சு அவுங்க சாப்பிடணும்னு ஒரு ஏக்கம் இருந்திருக்கும் போல,அது எனக்கு தெரியாது.

எங்களுக்கு திருமணம் நடந்து சரியாக பத்து வருடங்கள் 13 நாட்கள் கழித்து தான் ஓவியா பிறந்தார்கள். முதல் முறையாக அம்மணி கருவுற்றிருக்கும் போது, சரி,இவ்வளவு வருடங்கள் கழித்து உண்டாகியிருக்கிறார்கள், அதனால் அவுங்களுக்கு பிடிச்சதை செய்யணும்னு நினைச்சு, நானும் ஆசையாக உனக்கு என்ன வேணும் சொல், வாங்கித்தருகிறேன் என்று தெரியாத்தனமாக கேட்டுவிட்டேன்.  அம்மணியும், எனக்கு ஒன்றும் வாங்கித் தர வேண்டாம், தினமும் நானே சமைத்து, சமைத்து போர் அடித்து விட்டது, அதனால் இன்றைக்கு மட்டும் நீங்கள் சமைத்து நான் சாப்பிட வேண்டும் என்று சொன்னார்கள் (இப்ப புரியுதா, அவுங்க மனசுக்குள்ள இருந்த ஆசை எந்த நேரத்துல வெளிப்பட்டிருக்குன்னு!!!). 


அடடா, வேலில போற ஓனானை வேட்டியில மடிச்சு வச்சுக்கிட்டோமேன்னு மனசுக்குள்ள புலம்பி, சரி இந்த ஆசையை நான் நிறைவேற்றி வைக்கிறேன்னு சொல்லி, ஒரு சுப முகூர்த்த நாள் அன்றைக்கு, சமையலறைக்குச் சென்று எப்படியோ ஒரு மாதிரி சாம்பார் சாதம் செய்தேன்.  இதுல நான் ஒன்று  கண்டிப்பாக சொல்லியாக வேண்டும். என்னன்னா, எங்கள் அம்மாவின் சமையலில் கொஞ்சம் காரம் தூக்கலாகவே இருக்கும். அப்படியே நானும் சாப்பிட்டு பழகி விட்டேன். திருமணத்திற்கு பிறகு, அம்மணியின் சமையலில் காரம் என்பது ரொம்ப ரொம்ப கம்மியாகவே இருக்கும். கேட்டால், எங்கள் வீட்டில் யாரும் உங்களை மாதிரி, மிளகாய்த் துளை கொட்டி சாப்பிட மாட்டோம் என்று பதில் சொல்லுவார்கள். இன்னும் மீறிக் கேட்டால், பக்கத்துல மிளகாய்த்தூளை தண்ணீரில் கலக்கி வைத்து விடுகிறேன், வேண்டிய அளவிற்கு அதை ஊற்றி சாப்பிடுங்கள் என்று பதில் கூறி வாயை அடைத்துவிடுவார்கள். நான் சமைக்க ஆரம்பித்தபோது இந்த விஷயம் உடனே நியாபகத்துக்கு வந்தது. அதனால் நானும் ரொம்பவும் பார்த்து, பார்த்து காரத்தைப் போட்டு அந்த சாம்பார் சாதம் செய்து அவர்களுக்கு கொடுத்து, ஆவலோடு அவர்கள் சாப்பிடப் போவதை ரசித்து பார்க்க ஆரம்பித்தேன். 


அவர்கள் ஒரு ஸ்பூன் தான் எடுத்து வாயில் வைத்தார்கள். உடனே முகம் அஷ்டகோணலாகி விட்டது, “ஐயோ, பேசாம நானே இதை செய்திருக்கலாம், இப்படி வாய்க்கு விளங்காம செஞ்சிருக்கீங்களே, உங்களுக்கு தெரியாததை எல்லாம் செய்யாதீங்கன்னு சொன்னேன் இல்லன்னு ” ஒரே புலம்பல். (எனக்குத்தான் எதுவுமே செய்யத் தெரியாதே!!!,) நல்லாத்தானே செஞ்சோம்னு நானும் ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டா, உப்பும் இல்லாம, காரமும் இல்லாம, சப்புன்னு இருந்துச்சு. எங்கடா தப்பு நடந்திருக்கும்னு யோசிச்சா, காரத்தை கம்மியா போட்டதுனால, உப்பையும் ரொம்ப கம்மியா போட்டிருந்திருக்கிறேன். அது சப்புன்னு ஆயிடுச்சு. அப்புறம் இரண்டு பெரும் எப்படியோ கொஞ்சத்தை முழுங்கி, மிச்சத்தை தூக்கிப் போட்டுட்டோம். அதற்கு பிறகு, அவர்கள் என்னைய சமைக்க சொல்லாம, எப்படியோ கஷ்டப்பட்டு அவுங்களே சமைச்சாங்க. அவுங்களுக்கு அப்ப எட்டு மாசம்னு நினைக்கிறேன், மீண்டும் ஒரு நாள் அவுங்க, நான் திருப்பியும் ரிஸ்க் எடுக்கிறேன் (நான் சமைக்கிறது, அவுங்களுக்கு ரிஸ்க்காம்!!!!), நீங்க இன்னைக்கு மட்டும் கொஞ்சம் ஒழுங்கா பார்த்து சமைக்கிறீங்களா, என்னால இன்னைக்கு ஒண்ணுமே செய்ய முடியலைன்னு சொன்னாங்க. நானும், சரி இந்த முறையாவது ஒழுங்காக செய்யணும்னு நினைச்சு, அதே சாம்பார் சாதத்தையே நல்லா செய்து கொடுத்தேன். இந்த முறை அவுங்க இரண்டு வாய் சாப்பிட்டார்கள். ஆகா, நல்லா இருக்கு போலன்னு நினைச்சேன், உடனே அவுங்க கண்லேருந்து தண்ணி வர ஆரம்பிச்சுடுச்சு, என்னன்னு பார்த்தா, போன தடவை காரம் கம்மியா போட்டதுனால, இந்த தடவை, மிளகாய்த்தூளை கொட்டியிருக்கேன். அந்த இரண்டு வாய் சாப்பிட்டதோட, கை எடுத்து கும்பிட்டு, தயவுசெய்து, நீங்க இனிமே சமைக்கவே வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அப்ப நான் சமையலறைக்குள் நுழைந்தது தான், இப்ப எனக்கு எங்கள் வீட்டில் சமையலறை எங்கே இருக்குதுன்னே மறந்து போச்சு. 

Saturday, May 17, 2014

ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 2 (வகுப்பறை)


போன பதிவுல ஓவியாவின் பள்ளிக்கூடம் பற்றி பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த பதிவில், அவருடைய வகுப்பறை எவ்வாறு இருக்கிறது என்று பார்க்கலாம். மேலும்......

Thursday, May 15, 2014

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - சிறப்புப்பாயிரம்சொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை

சிவமயம்
சிறப்புப்பாயிரம்
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துத்
தமிழ் சொற் பொழிவாளர்
மகிபாலன்பட்டி

பண்டிதமணி. உயர் திரு. மு. கதிரேசச்
செட்டியாரவர்கள்
இயற்றியது.


பன்னிருசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் .

தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னை
           யுணறுஞ் சைவ நெறி
சார்ந்து வாழ்ந்த பெருந்தகையான் தமிழ் நூல்
           பலவுந் தகவுணர்  ந்தோன்
செம்மை நலஞ்சால் காரைநகர்த் திருவார்
           தனவை சியமரபு
திகழத் தோன்றிச் சிவபதமே சிரத்திற்
           கணியாப் பூண்டவன்சீர்
மும்மை யுலகும் புகழ்ந்தேத்து முதியோன்
           எங்கள் சொக்கலிங்க
முனிவன் சரிதக் கடலினிறை முகந்து
           தெளித்தான் யாவனெனின்
மெய்ம்மை வழுவா நெறி நின்று விமலன்
           அடிக்கட் பத்திமிக
மேவும் இராம சாமியெனும் விநய
           குணஞ்சால் நல்லோனே.


  தேவகோட்டை, சிவாகம சங்கம்
திரு. பொ. முத்தைய பிள்ளை அவர்கள்
இயற்றியது.


பூவுலகில் மேலாந்தென் பாண்டி நாட்டில்
     பொருளோங்கு காரைமா நகரின் கண்ணே
மேவுதன வணிகர்குல விளக்காய்த் தோன்றி
     மிகுசைவ சித்தாந்த மெய்ம்மை தேறி
யாவுமாஞ் சிவனைமனத் திருத்திப் பூசித்
     தெப்பொழுதுந் தனையடுத்த அன்பர் யார்க்கும்
ஆவலுடன் நூல்கள் பல பாடஞ் சொல்லி
     அருந்தமிழுஞ் சைவமுமே லோங்கச் செய்த           (க)
சொக்கலிங்க அய்யாவின் சரிதந் தன்னைத்
     தோற்றமுதல் முறைப்படுத்தித் தூய வாக்கால்
மக்களெல்லாம் உய்யும்வணம் வசன மாக
     வழங்கினான் அய்யாவுக் கணுக்க ராகித்
தக்கமரி யாதையுடன் தொண்டு செய்து
     சாத்திரங்கள் பலகேட்டுச் சைவம் பேணி
மிக்கமகிழ் காரைவா ழிராம சாமி
     மேலவனாந் தனவணிக மரபு ளோனே.                     (உ)
காரைக்குடி
சித்தாந்த சைவப் பெருஞ்செல்வர்
ஸ்ரீமத். ராம. சொ. சொக்கலிங்கச்
செட்டியாரவர்கள்

மாணாக்கருள் ஒருவரும் தேவகோட்டை
சைவப்பிரகாச வித்தியாசாலைத் தலைமையாசிரியருமாகிய
சொ. வேலுச்சாமிக் கவிராயர் அவர்கள்
இயற்றியது.


சீராரும் பாண்டிவள நாட்டின் மேன்மை
     திகழ்காரை மாநகரின் வடபாலிற்சேர்
பேராரு நன்முத்துப் பட்ட ணத்திற்  
     பிறங்குமியாழ்ப் பாணத்தார் மனையின் முல்லைத்
தாராரும் வைசியர்தங் குலமெந் நாளுந்
     தாரணியி லோங்கவவ தரித்தோன் நல்லூர்க்
கேராரும் ஆறுமுக நாவ லர்கோ
     னிணையின்மகிழ் மீக்கூரப் பெருகுந் தொண்டன். 

அன்னவன்றன் மருமகன்பொன் னம்ப லப்பே
     ரறிஞனறந் திகழ்க்கூட றனைநீங் காது
மன்னுசுந்த ரேசனடி தொழுமெய் யப்ப
     சுவாமிவளர் வன்றெண்ட மணியன் னேர்பாற்
பன்னுதமிழ் நூல்பலவும் விளங்கக் கற்றேன்
     பகர்கல்வி யறிவொழுக்கச் சிறப்பு முற்றேன்
தன்னையடை மாணாக்க ருள்ளங் கொள்ளத்
     தக்கவகை நூல்பலபோ திக்குஞ் சான்றேன்.

வேதசிவா கமவழிச்சித் தாந்த மெய்ந்நூல்
     விதிமுறையோர்த் துளங்கொண்டு மேலாஞ்ச் சைவ
போதநிலை தரப்பெறீஇ மனித யாக்கை
     கிடைத்ததரன் பூசனையைப் புரிதற் கென்றே
காதலுறு சமயமுதற் றீக்கை மூன்றுங்
     கனிந்தவுளத் தொடும்பெற்றுப் பெரும்பே றென்றே
போதுமுத லானபொருள் பலவுங் கொண்டு
     புனிதசிவ பூசைமுறை புரியுஞ் சீலன்.

சிவபெருமா னெருவுனையே பரமாக் கொண்டு
     திகழுள்ளக் கருத்தினிலைச் சீர்மை யாலே
யவனருளே பெருகுபுரா ணங்கண் முன்னா
     அமைதருநூற் றெட்டுநூல் இயற்று மான்றேன்
தவநிறையுந் தில்லைநகர் தனின்மெய் கண்ட
     சித்தாந்த வித்தியா சாலை தாபித்
துவமையிலா ஞானநூ லோது வோர்கள்
     உணவுமுதற் பெறமூலப் பொருளும் வைத்தோன்.


ஆரியநற் றமிழ்வேத பாட சாலை
     யரன்கோவிற் பணிதிருநந் தனமும் வைத்தல்
சீரியவாங் குளந்தோண்டல் கட்டு வித்தல்
     சிறந்தகுரு பூசைபசு மடந்தா பித்தல்
பாரியக லாசாலை பலதா பித்தல்
     பகருமிவை முதலறந்தன் னினத்தாரைக் கொண்
டேருறவே யியற்றுசொக்க லிங்க வாசான்
     ஈசனடி நிழற்கலந்தான் சின்னாண் முன்னர்.

இத்தகையோ னுயர்சரிதம் பேறாம் பூமிக்
     கியலுநல்லோர் குணங்களுரைப் பதுவு நன்றே
இத்தரணி தனிலென்ன ஔவை யாரும்
     இசைத்தனரா லெனவன்னேன் சரிதம் யாரும்
சித்தசிர மஞ்சிறிது மின்றி யோரத்
     தெள்ளியசெந் தமிழ்வசன முறையிற் செய்தான்
உத்தமனாம் ஒருவனவன் யாவ னென்னில்
     உயற்காரை மாநகரி லென்றும் வாழ்வோன்.

துன்னுபுகழ் வைசியர்தங் குலத்தில் வந்து
     தோன்றினேன் சூரைநகர்க் கோயில் கொண்டோன்
மன்னுமர பினிற்கேற்ப வர்த்த கத்தின்
     வளம்பலவுந் தருமநெறி யீட்டும் வல்லோன்
தன்னனைய சொக்கலிங்க தேசி கன்பாற்
     சார்தருமா ணாக்கர்பல ருள்ளும் பத்தி
தன்னருவ மாயமைந்து தமிழி னூல்கள்
     சங்கையின்றி மாயமைந்து சாலக் கற்றேன்.

வருசைவ சித்தாந்த ஞான நூல்கள்
     வளரவன்பா லாராய்ச்சி புரியு மாண்போன்
தருவனப்பு நிறைச்சந்தச் செய்யுண் முன்னாச்
     சார்ந்தபல பாக்கிளினி தியற்றுந் தக்கோன்
பெருகுமவை தனிற்கேட்போ  ருள்ளங் கொள்ளப்
     பிறங்கியிடு கரதலா மலகம் போலத்
தெருள்பெறவே பிரசங்கம் புரியு நல்லோன்
     சிறந்தகுணக் குன்றமாய்த் திகழ்ந்து நின்றேன்.

நித்தியமு மநுட்டான முடிந்த பின்னர்
     நீடியதே வாரமுதன் முறைக ளோதிச்
சித்தமகிழ் வுடன்சிவனைத் தரிச னஞ்செய்
     செந்நெறிக்க ணிலை நிற்குந் திண்மை வாய்ந்தோன்
உத்தமமா குங்காசி விசுவ நாத
     மேலோனைக் கனிட்டசகோ தரனா வுற்றேன்
இத்தலமெ லாம்புகழ் மேன்மை பெற்ற
     இராமசா மிப்பெயர்கொள் எழிற் சீரேரனே.


சிதம்பரம்
ஸ்ரீ மெய்கண்ட சித்தாந்த வித்தியசாலைத்
தருமபரிபாலகருள் ஒருவராகிய
காரைக்குடி
ராம. உ. காசிவிஸ்வநாதான் செட்டியார்
அவர்கள்
இயற்றியது.

செம்பொனுயர் மணிமாடக் காரை தன்னில்
     சிவவர்க்க மானிடனா யவத ரித்து
நம்புபல நூல்கள் சிவ பரமாச் செய்து
     நாட்டுசொக்க லிங்கதே சிகர்க்குக் காதை
இம்பரன்னார் மாணாக்க னிராம சாமி
     யியம்பியுயர் தில்லைவித்தியா சாலை தன்னில்
பம்புநகர்க் காரையனு கூல வைங்கைப்
     பரமர்சன்னி தியினிலரங் கேற்றி னானே.