Monday, December 30, 2013

திரும்பி பார்க்கிறேன்

சகோதரி ராஜிஅவர்கள் “திரும்பி பார்க்கிறேன்” என்ற தொடர் பதிவில் என்னையும் சேர்த்து விட்டார்கள். அதில் 2013ல் நடந்த அனுபவங்களை எல்லாம் எழுதச் சொல்லியிருந்தார்கள். நான் இதில் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியான தருணங்களை மட்டும் உங்களுடன் சேர்ந்து திரும்பி பார்க்க போகிறேன். காரணம், சின்ன வயதிலிருந்தே, என்னுடைய சோகமான தருணங்களை நான் யாருடனும் பகிர்ந்து கொண்டது கிடையாது. என்னைப் பொருத்த வரையில், எல்லோருக்கும் வாழ்கையில் ஏதாவது ஒரு விதத்தில் கஷ்டம் இருக்கத்தான் செய்யும். இதில் நம்முடைய கஷ்டத்தை அடுத்தவரிடம் பகிர்ந்து அவருக்கு இன்னும் கஷ்டத்தை கொடுக்கக் கூடாது என்பது தான். இந்த கருத்துக்கு நிறைய நண்பர்கள் உடன்பட்டதில்லை. அப்புறம் எதற்கு நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம் என்று கேட்டிருக்கிறார்கள். இதில் உச்சபட்சமாக என்னுடைய அம்மாவே, “டேய், நீ உன் மன பாரத்தை இறக்கி வைக்காமல், உனக்குள்ளேயே வச்சு,அமுக்கிக்கிட்டு  இருக்கிறதுனாலத்தான், நீ வளரவேயில்லை” என்று சொல்லியிருக்கிறார்கள். “சாது மிரண்டால் காடு கொள்ளாது” என்று சொல்லுவது போல, 2012ஆம் ஆண்டில், நான் நெஞ்சுக்குள் அமுக்கி வைத்திருந்த கஷ்டங்கள் எல்லாம் பாரம் தாங்காமல் பொங்கி கவிதையாக வெளி வந்து, கொஞ்சம் மனதை லேசாக்கியது. ஆனால் அந்த கவிதை  பல நண்பர்களின் மனதை பாரமாக்கி விட்டது என்பதை அவர்களின் தொலைப்பேசி அழைப்பின் மூலமாக தெரிந்து கொண்ட பிறகு வருத்தப்பட்டேன். அதனால் தான் நான் மீண்டும் என்னுடைய சோக கீதங்களை வாசிக்கவில்லை. சரி, இனி பதிவிற்குள் செல்வோம்.
 
என்னுடைய ஆய்வுக் கட்டுரைகள் மலேசியா நாட்டில் நடைபெற்ற “உலகத் தமிழ் ஆசிரியர்கள் மாநாட்டு” மலரிலும் - புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்க் கல்வி, சிட்னியில் நடைபெற்ற “உலக இலக்கிய தமிழ் மாநாட்டு” மலரிலும்  - புலவர்களின் பார்வையில் சங்க கால போர்கள்  வெளிவந்தது. இதன் மூலம் எந்த ஒரு ஆய்வுக் கட்டுரையையும் எழுத முடியும் என்ற தன்னம்பிக்கையை நான் பெற முடிந்தது.
 நான் வார இறுதியில் பயிற்றுவிக்கும் தமிழ் பள்ளியில், மாணவர்களை ஊக்குவித்து, அவர்களையும் இங்கு நடைபெற்ற “உலக இலக்கிய தமிழ் மாநாட்டு” மலரில் கட்டுரைகளை படைக்கச் செய்தது. இதன் மூலம் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் குழந்தைகளாலும் தமிழில் கட்டுரைகளை எழுத முடியும் என்று தெரிந்தபோது மிகவும் சந்தோஷமாக இருந்தது.
 
 இந்த ஆண்டின் மிக முக்கியமான மகிழ்ச்சியான தருணம், நான் கனவிலும் நினைத்துப்பார்க்காதது ஒன்று நடந்தது. ஆம், நான் தலைவா படத்தில் நடித்தது. இதற்கு முன்பு வரை, திரைப்படத்துறையை நான் சாதாரணமாகத்தான் நினைத்ததுண்டு. ஆனால் இந்த படத்தில் நடித்த பிறகு, அத்துறையின் மீது ஒரு மதிப்பே வந்து விட்டது. இந்த இடத்தில், நான் இயக்குனர் விஜய்க்கும், நண்பர் அனகன் பாபுவிற்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.
 
சென்ற ஆண்டும் சிட்னியில் ஆறு வெவ்வேறு மேடைகளில் பெரியவர்களுக்கான நாடகங்களை எழுதி, இயக்கி மேடையேற்றினேன். மேலும் ஏழு வெவ்வேறு மேடைகளில் குழந்தைகளுக்கான நாடகங்களையும் எழுதி, அவர்களை நடிக்கவைத்து மேடையேற்றினேன். குழந்தைகளின் நாடகங்களில் “63 நாயன்மார்களின் ஒருவரான அப்பூதி அடிகளின் வாழ்க்கை வரலாறும்” ஒன்று. இதன்மூலம், என்னாலும் நாடகங்களை குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சரி எழுதி இயக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது.
 பதின்னைந்தாவது (15வது) திருமண நாளை வீட்டு அம்மணியின் பெற்றோர்களோடு கொண்டாடியது ஒரு மறக்க முடியாத தருணம். கல்யாணமாகி எத்தனை வருடம் ஆனாலும் என்ன, அமலாபால் மாதிரி யாராவது கண்ணுக்கு தென்பட்டால், படத்தில் பயன்படுத்திய பூவையும்,வாழ்த்து அட்டையையும்    கொடுத்து காதலை சொல்லிவிட வேண்டியது தான். (அதுக்காகத்தான் பத்திரமா அந்த பூவையும், அட்டையையும் வீட்டு அம்மணிக்கு தெரியாம மறைச்சு வச்சிருக்கேன்)
இந்த 15 வருட திருமண வாழ்கையில், வீட்டில் இருக்கும் மனைவி அப்படி என்ன பெருசா வேலை செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணியிருந்த எனக்கு, நான் இரண்டு வாரம் வீட்டு வேலை பார்த்ததில் வீட்டில் இருக்கும் மனைவியின் அருமை புரிந்தது. அதிலும் நான் முழுதாக வீட்டு வேலையை பார்க்கவில்லை, சாப்பாடு எல்லாம் நண்பர்கள் கொடுத்தார்கள். அந்த நண்பர்களுக்கு எல்லாம் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதனால் தான், மகளிர் தினத்தன்று, நான் “பெண்” என்ற ஒரு புதிய ஆத்திச்சூடியை எழுதினேன்.
 
இறுதியாக,ஸ்கூல் பையன் அறிமுகம் கிடைத்தது. அவரின் புண்ணியத்தால் நிறைய நண்பர்கள் அறிமுகமானர்கள். அதனால் அவருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  

பின் குறிப்பு: வீட்டு அம்மணி படிக்க மாட்டாங்கன்னு ஒரு தைரியத்துல அமலாபால் மாதிரி பொண்ணு, காதல்..  அப்படியிப்படின்னு ஏதோ ஒரு flowல எழுதித்தொலைத்துவிட்டேன். தயவு செய்து, யாரும் அவரிடம் சொல்லிடாதீங்க. பிளீஸ்.... !!!

Saturday, December 28, 2013

தலைவா திரைப்பட அனுபவம் – எங்கள் காட்சிகளில் ஏற்பட்ட ஆள் மாறாட்டங்கள்


அந்த நடனம் கத்துக்கிற காட்சி சனிக்கிழமை அன்றைக்கு எடுத்து முடிச்சாங்க. நானும் என்னோட மற்ற மூன்று நண்பர்களும் கடைசியாத்தான் போனோம். அதனால அன்னைக்கு தனியா விஜய் கூட புகைப்படம் எடுக்க முடிஞ்சது.இப்ப நான் ஒண்ணு சொல்லியாகனும், முதல் காட்சியில, நாங்க 10பேர் இருப்போம். அதற்கு பிறகு அடுத்த காட்சியான உணவகக் காட்சியிலும் நாங்க அதே 10பேர் இருப்போம்(இந்த ரெண்டு காட்சியும் ஒரே நாள்ல எடுத்தாங்க). அப்புறம் மூணாவது காட்சியான அந்த ஜாக்கிங் காட்சியில மூன்று பேர் வரலை. ஆனா அதற்கு பதிலா புதுசா ரெண்டு பேர் சேர்ந்தாங்க. மற்ற காட்சிகளிலும் இந்த 9பேருக்கு பதிலா 8 பேர் தான் இருப்போம். எனக்கு ஒரே ஆச்சிரியமா இருந்துச்சு, எப்படி இயக்குனர் இதையெல்லாம் கண்டுக்காம இந்த காட்சிகளையெல்லாம் எடுத்துக்கிட்டு இருக்காருன்னு. எங்களோட மொத்த காட்சியையும் பார்த்தீங்கன்னா, குமுதத்தில வர்ற 6வித்தியாசங்கள் மாதிரி, நீங்க இந்த ஆள் மாறாட்ட வித்தியாசத்தை கண்டுப்பிடிக்கலாம். ஆனா ஒரே ஒரு வித்தியாசம் மட்டும் ரொம்ப கஷ்டப்படாம உங்க கண்ணுக்கு புலப்படும்.

உங்களுக்கு அந்த வித்தியாசம் என்னன்னு தெரிஞ்சுதுன்னா, பின்னூட்டத்துல சொல்லுங்க. இயக்குனர் ஏன் இதுல ரொம்ப சிரத்தை எடுக்கலைன்னா, இவனுங்க வெறும் காமெடி பீஸ் தானே, எதுக்கு அவ்வளவு கஷ்டப்படணும்னு நினைச்சிருப்பாரு”. அதனால இந்த வித்தியாசத்தையெல்லாம் அவரு ஒரு வித்தியாசமாகவே நினைக்கலை.

மறு நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை ஒரு எஸ்‌எம்‌எஸ், நீங்க மறு நாள் சரியா 4மணிக்கெல்லாம் அந்த நடனக் காட்சி எடுத்த இடத்துக்கு வந்துடுங்கன்னு”. எனக்கோ, அரை நாள் லீவு போடலாமா அல்லது 3மணியை போல பர்மிஷன் போட்டு போகலாமான்னு ஒரே யோசனை. பர்மிஷன் போடுறதுல ஒரு சிக்கல் என்னன்னா, நாம கிளம்பலாம்னு நினைக்கும்போது தான், ஏதாவது ஒரு ஏழரை நம்ம தலையில வந்து விழும். அப்புறம் அதை முடிச்சு கொடுக்காம போக முடியாது. இதுக்கு பயந்தே அரை நாள் லீவு போடலாம்னு நினைச்சேன். ஆனா ஏற்கனவே, இந்த படத்துக்காக சம்பளம் வாங்காம வெட்டியா ரெண்டு நாள் லீவு போட்டதே அதிகம்னு, பர்மிஷனே பொட்டுக்கலாம்னு முடிவெடுத்தேன். அப்படி ஏதாவது நமக்கு ஏழரை வந்துச்சுன்னா, அதை அப்படியே படபிடிப்புக்குழுவிற்கு தள்ளிவிடுவோம்னு  ஒரு தைரியமான முடிவெடுத்து ஆபிஸுக்கு போனேன். காலையிலிருந்து, என்ன சொல்லி பர்மிஷன் போடலாம்னு வேலையே பார்க்காம(!!), யோசிச்சுக்கிட்டு இருந்தேன். இவுங்க முன்னாடியே சொல்லியிருந்தா, அதற்கு ஏத்த மாதிரி ஏதாவது ஒரு பொய்யை ஆபிஸில் சொல்லி பர்மிஷன் வாங்கியிருக்கலாம். 11 மணியை போல வெற்றிக்கரமா ஒரு பொய்யை யோசிச்சு, என்னோட மேனேஜருக்கு, “இந்த மாதிரி இன்னைக்கு எனக்கு 4 மணிக்கு dentist appointment இருக்கு, அதனால நான் 3 மணிக்கெல்லாம் இன்னைக்கு கிளம்பிவிடுகிறேன்னு” ஒரு மெயில் அனுப்பிச்சேன். அந்த மேனேஜருக்கு, தான் தான் இந்த கம்பனியை தாங்கிப்பிடிக்கிறதா ஒரு நினைப்பு. அதனால, என்னோட மெயிலைப் பார்த்த உடனே, “ஏன் இதை முன்னாடியே சொல்லியிருக்கலாம் இல்லன்னு” திருப்பி ஒரு பதில் மெயில். அட,கிரகம்புடிச்சவனே!, எனக்கே நேத்து ராத்திரி தாண்டா தெரியும், இதுல, நான் எங்கேருந்து முன்னாடி சொல்றதுன்னு மனசுக்குள்ளே திட்டிக்கிட்டு, “நான் சுத்தமா இன்னையோட appointmentடை மறந்துட்டேன், காலையில அந்த கிளினிக்லேருந்து confirmation போன் வந்தப்புறம் தான் எனக்கே நியாபகம் வந்துச்சுன்னு” ஒரு பிட்டைப்போட்டு,

சரியா 3மணிக்கெல்லாம் ஆபிஸை விட்டு கிளம்பி போனேன். 3.45மணிக்கு அந்த இடத்துக்கு போனா, யாரையும் காணோம், படப்பிடிப்பு நடக்கிற மாதிரியான ஒரு அறிகுறியே காணோம். மற்ற நண்பர்களுக்கு போன் போட்டா, அவுங்களும் நாங்க இன்னும் அரை மணிநேரத்துல வந்துடுவோம்னு சொன்னாங்க. அப்புறம் அந்த உதவி இயக்குனர் கிருஷ்ணாவுக்கு போன் போட்டா,”சார் நீங்க அங்கேயே இருங்க நாங்க இன்னும் ஒரு கால் மணி நேரத்துல வந்துடுவோம்னு சொன்னாரு”. சரின்னு நானும் காத்துக்கிட்டு இருந்தேன். 4.15 மணிக்கு இன்னொரு ஒரு நண்பர் வந்தாரு. 4.30 மணி ஆயிடுச்சு, அந்த நண்பரை தவிர மற்ற நண்பர்களையும் காணோம், படப்பிடிப்பு குழுவையும் காணோம்.

அப்புறம் எத்தனை மணிக்கு, படப்பிடிப்பு குழிவினர்,நண்பர்கள் எல்லாம் வந்தார்கள்னு அடுத்த பதிவுல சொல்றேன்.

- இன்னும் சொல்கிறேன்


Thursday, December 26, 2013

அலுவலகத்தில் - அடுத்தவர் பொருளை பறிக்கும் விளையாட்டு

அனைத்து கிறிஸ்துவ நண்பர்களுக்கும் என்னுடைய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

இந்த கிறிஸ்துமஸ் வந்துவிட்டாலே, அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் பார்ட்டி என்று ஒன்று கொண்டாடுவார்கள். இந்த ஆண்டும் மூன்று வாரங்களுக்கு முன்பு அந்த சடங்கு நிறைவேறியது. நான் இந்த கம்பெனியில் சேர்ந்து மூன்று கிறிஸ்துமஸ் பார்ட்டிகளை கொண்டாடிவிட்டேன். அந்த மூன்று முறையும் படகு சவாரி செய்து அந்த சடங்கை நிறைவேற்றினேன். இந்த வருடம் ஏதாவது புதிதாக ஏற்பாடு செய்திருப்பார்கள் என்று நினைத்திருந்தால், மீண்டும் அந்த படகுச் சவாரியே ஏற்பாடு செய்திருந்தார்கள். எனக்கோ அது போர் அடித்து விட்டது. அதனால் ஒரு பொய்யை சொல்லி, நான் அதிலில் கலந்துக்காமல் இருந்துவிட்டேன். சரி, எல்லோரும் அந்த பார்ட்டிக்கு மதியம் 12மணிக்கு எல்லாம் போய்விடுவார்கள், நாம கொஞ்ச நேரம் பெஞ்ச்சை தேய்த்துவிட்டு, 2மணிக்கெல்லாம் வீட்டுக்கு கிளம்பி போய்விடலாம்னு கணக்கு போட்டு வச்சிருந்தேன். நம்ம போடுற கணக்கு என்னைக்குத்தான் சரியா நடந்திருக்கு. 12மணிக்கு பார்த்தா, 10 பேருக்கு மேல ஆபிஸ்லேயே இருந்தாங்க. என்னன்னு கேட்டா, எங்களுக்கும் படகு சவாரி செஞ்சு போர் அடிச்சுப்போச்சு, அதனால நாங்க போகலைன்னு சொன்னாங்க. எவனும் சீக்கிரமா கிளம்பி போகலை. அப்பத்தான் ரொம்ப மும்முரமா ஆபிஸ் வேலையை பார்த்துக்கிட்டு இருந்தானுங்க. நம்ம மட்டும் சீக்கிரமா கிளம்பி போனா நல்லாயிருக்காதுன்னு எப்பவும் வீட்டுக்கு கிளம்புற மாதிரியே 5.30 மணிக்கு கிளம்பி போனேன்.

இந்த கலாட்டா எப்பவும் டிசம்பர் முதல் வாரத்தில் நடக்கும் கலாட்டா. இன்னொரு கலாட்டா என்னன்னா, கிறிஸ்துமஸுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி நடக்கிற “சீக்ரட் சான்டா (secret santa)” கலாட்டா. அது என்னன்னா, எல்லோரையும் ஒரு பரிசை (10$ அல்லது 15$ குட்பட்ட) பேரை எழுதாமல் நன்றாக கிஃப்ட் பேப்பர் சுற்றி கொண்டுவரச் சொல்லுவார்கள். பிறகு எத்தனை பரிசு வந்திருக்கிறதோ, அதற்கேற்ற எண்ணிக்கைகளை சீட்டெழுதி வைத்திருப்பார்கள். பிறகு எல்லோரையும் ஆளுக்கு ஒரு சீட்டை எடுக்கக் வேண்டும். நமக்கு என்ன எண் (நம்பர்) வந்திருக்கிறதோ அந்த வரிசைப்பாடி தான், நமக்கு பிடித்தாமான பரிசை எடுக்கலாம். ஒன்றாம் எண்ணையுடைய நபர், முதலில் ஏதாவது ஒரு பரிசை எடுத்து, அந்த கிஃப்ட் பேப்பரை கிழித்து எல்லோருக்கும் காமிக்க வேண்டும். பிறகு இரண்டாம் எண்ணையுடைவருக்கான வாய்ப்பு. அவருக்கு முதல் எண்ணுடையவர் வைத்திருக்கும் பரிசு பிடித்திருந்தால், அவரிடமிருந்து அதை பறித்து தான் வைத்துக் கொள்ளலாம். இல்லை, புதிதாக ஒரு பரிசை பிரித்து எல்லோரிடமும் காட்டிவிட்டு வைத்துக்கொள்ளலாம். இப்படியாக ஒவ்வொருவரும் மற்றவர்கள் வைத்திருக்கும் பரிசை பறித்துக்கொள்ளலாம். அல்லது புது பரிசை வைத்துக்கொள்ளல்லாம்.

முதல் சுற்றில் எல்லோருடைய வாய்ப்பும் முடிந்த பிறகு, தாங்கள் வைத்திருந்த பரிசை பறிக்கொடுத்தவர்கள், மீண்டும் ஏதாவது ஒரு பிரிக்காத பரிசை எடுத்துக்கொள்ளலாம், அல்லது மற்றவர்களிடமிருந்து அவர்களுடைய பரிசை பறித்துக்கொள்ளலாம். ஒரு பரிசை மூன்று தடவைக்கு மேல் பறிக்க முடியாது என்று ஒரு சட்டம் வேற.

இப்படியாக எல்லோர் கையிலும் ஒரு பரிசு வந்தவுடன், முதலாம் எண்ணுக்குரியவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு. அவர் தான் வைத்திருக்கும் பரிசு பிடிக்கவில்லை என்றால், மற்றவர்களிடமிருந்து அவருக்கு பிடித்தாமான பரிசை மாற்றிக்கொள்ளலாம். அவருக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை என்றால்,அவர் முதலில் எடுப்பதால், அவரால் யாருடைய பரிசையும் பறிக்க முடியாதாம். அதனால் தான், அவருக்கு கடைசியில் அந்த வாய்ப்பைத் தருகிறார்கள்.  

இப்படி ஒரு விளையாட்டு. இதற்கு பெயர் “secret santa”வாம். எப்படியெல்லாம் யோசித்து ஒரு விளையாட்டை கண்டுப்பிடித்து இருக்கிறார்கள். நானும் நான்கு வருடமாக இந்த விளையாட்டை விளையாடியதில், இந்த வருடம் தான் என் மாகாரணிகள் விளையாடுவதற்கு ஏற்ற ஒரு பொம்மை கிடைத்தது.
இதுவரை, என்னுடைய அலுவலக அனுபவங்களை கீழேயுள்ள பதிவுகளில் பதித்திருக்கிறேன். 


Tuesday, December 24, 2013

பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ் தேர்வில் அதி உயர் புள்ளியைப் பெற்று தேர்ச்சிப் பெற்ற மாணவி

இந்த ஆண்டில் நடந்த பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் தமிழ் பாடத்தில் அதி உயர் புள்ளியைப் பெற்று(Band 6) Minster for Education Adrian Piccoli யிடமிருந்து விருதினைப் பெற்ற பெருமையை பெற்றிருக்கிறார் செல்வி மாதுமை கோணேஸ்வரன். இவருக்கு வலைப்பூ வாசகர்களின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

 


நன்றி: தமிழ்முரசு ஆஸ்திரேலியா
 
ஆஸ்திரேலியாவில் நியு சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் தென்ஆஸ்திரேலியா மாநிலங்களில் பன்னிரெண்டாம் வகுப்பில் தமிழை இரண்டு யூனிட்டுகளாக (2 units)  எடுத்துப்படிக்க அனுமதி உள்ளது. அவர்கள் இரண்டு தேர்வுகள் செய்ய வேண்டும். அதில் ஒரு  தேர்வில்,  மாணவர்கள் “தனி மனிதன், மாறி வரும் உலகம் மற்றும் தமிழ் பேசும் சமூகங்கள்” என மூன்று கருப் பொருள்களில்  ஏதேனும் ஒன்றில் ஒரு வருடத்திற்கு ஆய்வு செய்ய வேண்டும்.  மாணவர்கள் தாங்கள் ஆய்வு செய்ததைப் பற்றி தேர்வாளரோடு(examiner) 8 நிமிடங்களுக்கு விவாதிக்க (Discussion) வேண்டும். அடுத்து,  ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நான்கு திறன்களில் ஒன்றான பேசுதல்(Speaking) தேர்வில், மாணவர்களிடம் தேர்வாளர் பாடத்திட்டத்துக்குட்பட்ட தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் கேள்விகளை கேட்பார். அதற்கு மாணவர்கள்  தமிழிலேயே உரையாட(Conversation) வேண்டும். இந்த உரையாடல் 7 நிமிடங்கள் வரை நீடிக்கும். இந்த வகை தேர்வு வாய்மொழித் தேர்வாகும் (Oral Exam).  

மற்றொரு தேர்வானது, ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நான்கு திறன்களில் மற்ற மூன்று திறன்களான உற்றுக்கேட்டலும் பதிலளித்தலும் (Listening and Responding), வாசித்தலும் பதிலளித்தலும்(Reading and Responding) மற்றும் எழுதுதல் (writing) ஆகியவற்றில் மாணவர்கள் எவ்வாறு பயின்றிருக்கிறார்கள் என்பதை மதிப்பீடு செய்வதாகும். இந்த தேர்வு எழுத்துத் தேர்வாகும் (Written Exam).

இந்த எழுத்துத் தேர்வானது “TOEFL”,”IELTS”,”JLPT” போன்ற தேர்வுகளை மாதிரி வடிவைமக்கப்பட்டிருக்கும். இந்த நான்கு திறன்களில் தேர்ச்சி பெற்றிருந்தாலே, ஆஸ்திரேலியாவில் மொழிப் பெயர்ப்பாளருக்கான தேர்வில் எளிதில் வெற்றி பெற்று மொழிப்பெயர்ப்பாளராக ஆக முடியும்.

இதைத்தான் நான் “புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் கல்வி” என்னும் தலைப்பில் மலேஷியாவில் நடந்த 10வது உலக தமிழ் ஆசிரியர்கள் மாநாட்டுக்கு கட்டுரையை சமர்பித்திருந்தேன்.


இங்கு எனக்கு தெரிந்து நிறைய இந்திய தமிழ் பிள்ளைகள் பன்னிரெண்டாம் வகுப்பு எழுதியிருக்கிறார்கள். ஆனால் தமிழை ஒரு பாடமாக எடுத்து எழுதியிருக்கிறார்களா என்றால் இல்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் நம் இந்திய தமிழ் குழந்தைகள் தமிழை எடுத்து படிக்கிறார்கள். அவர்களை குறை கூற முடியாது. பெற்றோர்கள் தான், அவர்கள் தமிழை எடுத்து படிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். ஆனால் நிறைய பெற்றோர் அதை செய்வது கிடையாது. ”என் பையன் தமிழை படிச்சு என்ன செய்யப் போறான், அவனுக்கு எழுதப் படிக்க தெரிஞ்சிருந்தா போதும்னு.” என்னிடம் நிறைய பெற்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் ஒரு வசதி என்னவென்றால், 10ஆம் வகுப்பு அல்லது 11ஆம் வகுப்பு படிக்கும்போதே, தமிழுக்கான இரண்டு யூனிட்களை படித்து 12ஆம் வகுப்பிற்கான தமிழ் தேர்வை எழுதிட முடியும். பிறகு அவர்கள் 12ஆம் வகுப்பில் மற்ற பாடங்களை மட்டும் படித்தால் போதும். இந்த வசதி இருந்தும் தமிழ் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழை படிக்க ஊக்குவிப்பதில்லை. அப்படியே, அவர்கள் ஊக்குவித்தாலும், பிள்ளைகள் தமிழைப் படிக்காமல் இருப்பதற்கு ஏதாவது காரணங்களை சொல்லி பெற்றோர்களை திசைத் திருப்பி விடுகிறார்கள்.
 
தமிழ்நாட்டிலேயே, “எனக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது” என்று சொல்வது தான் இப்போது நாகரீகமாகி விட்டது. வேற்று மொழியை கற்றுக்கொள்வதற்காக, நம் தாய் மொழியை புறக்கணிப்பது எந்த வகையில் நியாயம்???

 

Sunday, December 22, 2013

Controlling Bad cholesterol - உடலில் உள்ள கெட்ட கொழுப்பை தடுக்கும் முறைகள்

நான் 40 வயது வரைக்கும் உடம்பைப் பற்றி யோசிக்காமல் இருந்து விட்டேன் (உடற்பயிற்சி என்றால் என்ன, என்று கேட்கும் அளவில் தான் இருந்தேன்). 40 வயதுக்கு பிறகு தான் உடம்பைப் பற்றிய பயம் வந்தது. அதனால் இந்த ஆண்டு ஆரம்பத்தில் மருத்துவரிடம் சென்று முழு உடல் பரிசோதனையை செய்தேன். அப்போது இந்த சக்கரை, கொலஸ்ட்ரால் இதெல்லாம் எதுவிமில்லை என்று சொல்லிவிட்டார்கள். அதனால் கொஞ்சம் நிம்மதியாக இருந்தேன். இரண்டு வாரத்திற்கு முன்பு மீண்டும் முழு உடல் பரிசோதனையை செய்யும்போது, கொலஸ்ட்ரால் 6.2 இருக்கிறது. 5.2க்குள் தான் இருக்க வேண்டும். அதனால் நீங்கள் உணவியலரை (Dietician) சந்தித்து, அவரின் அறிவுரைப்படி, உங்களின் உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்று என்னுடைய மருத்துவர் எடுத்துரைத்தார்.

அதன்படி, நேற்று அந்த உணவியலரை சந்தித்தேன். அவர் உங்களுடைய உடம்பில் கெட்ட கொழுப்பு அதிகமாக உள்ளது, நீங்கள் மது அருந்துவது இல்லாததால், உங்களுடைய தினசரி உணவு முறைகளை சொல்லுங்கள் என்றார். நானும் என்னுடைய உணவு முறைகளை சொன்னேன். அவர் எல்லாத்தையும் கணினியில் பதிவேற்றிக்கொண்டு, என்னிடம் இரண்டு தாள்களை கொடுத்தார். அதில் கொழுப்புச் சத்து சம்பந்தமான உணவுத்திட்டம் இருந்தது. எதெல்லாம் உடம்பில் கெட்ட கொழுப்பை (LDL கொலஸ்ட்ரால்) உருவாக்கக்கூடியது, எதெல்லாம் நல்ல கொழுப்பை(HDL கொலஸ்ட்ரால்) உருவாக்கக்கூடியது என்று குறிப்பிட்டு இருந்தது.
நான் சைவம் என்பதால், அந்த உணவியாலர் அசைவ உணவு வகைகளை அடித்து விட்டார்.இதனை பார்த்து, நீங்களும் அதன்படி உங்களின் உணவு பழக்கங்களை மாற்றிக்கொண்டு, இந்த கெட்ட கொழுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ளுங்கள். 
 

இப்போதெல்லாம் நான் மதியம் அலுவலகத்தில் உணவு சாப்பிட்டுவிட்டு, கோவிலில் வெளிப் பிரகாரம் வருவது மாதிரி 20 நிமிடங்களுக்கு அலுவலகம் உள்ள சாலையை 3 முறை பிரகாரமாக வருகிறேன். பிறகு இரவு உணவு சாப்பிட்டு விட்டு. வீட்டிற்கு பின்னால் இருக்கும் இடத்தில் 108 சுற்று சுற்றி வருகிறேன். தினமும் இதையெல்லாம் கோவிலில் செய்துக்கொண்டிருந்தால் புண்ணியமாவது கிடைக்கும்!!


அடுத்த மாதம் மீண்டும் நான் அந்த உணவியலரை சந்திப்பேன். அப்போது அவர் கூறும் விஷயங்களை இந்த பதிவின் தொடர்ச்சியாக பதிகிறேன்.கொலஸ்ட்ரால் வரும் முன் காப்போம்!!!!!

Friday, December 20, 2013

காலை கழுவும் போலீஸ்!!!–காலில் விழும் மந்திரிகள்!!!!!


நேற்று வழக்கம் போல அலுவலகத்துக்கு trainல போகும்போது  படிக்கிறதுக்கு கதை புத்தகம் எதுவும் இல்லாததுனால, போன்ல தினமலர் படிச்சுக்கிட்டு வந்தேன். (பொதுவா இந்த தினமலர், விகடன் அப்புறம் நண்பர்களோட வலைப்பூவெல்லாம் அலுவலகத்தில தான் படிக்கிறது). அப்படி படிக்கும்போது தான், இந்த செய்தி கண்ல தென்பட்டுச்சு.  

“காலை கழுவிய போலீஸ் அதிகாரி”

                                           (புகைப்படம் நன்றி - தினமலர்)

மாட்டுத் தீவண ஊழல் வழக்குல, மாட்டி சிறைக்குச் சென்ற லாலு பிரசாத் யாதவ் ஜாமீன்ல வெளியே வந்தபோது தான் இந்த கூத்து நடந்திருக்கு. ஜாமீன்ல வெளியே வந்த அவர், நேரா வீட்டுக்கு போகாம கோவிலுக்கு போயிருக்கார்.  அப்ப, டி.எஸ்.பி ரேங்கில் இருக்கும் ஒரு போலீஸ் அதிகாரி, லாலுவின் காலை தண்ணீர் விட்டு பாதாபிஷேகம் பண்ணியிருக்கார். நான் இந்த வரியை படிச்சவுடனே, சரி அந்த போலீஸ் அதிகாரியின் கண்களுக்கு, லாலு ஒரு பெரிய ஆன்மீகவாதியாக தெரிஞ்சிருக்கார் போலயிருக்குன்னு நினைச்சுக்கிட்டு (ஏன்னா அரசியல்வாதிகளை விட இப்ப போலி சாமியார்கள் தானே சிறைக்குப் போறது அதிகமாயிருக்கு) தொடர்ந்து அந்த செய்தியை படிச்சேன். உடனே அடுத்த வரில, பக்கத்தில் இருந்த போலீஸ் கான்ஸ்டபுள், லாலுவோட செருப்பை பத்திரமா கைல தூக்கிக்கிட்டு நடந்தார்ன்னு போட்டிருந்துச்சு. அட கடவுளே, எங்க லாலு செருப்பை யாராவது திருடிக்கிட்டு போயிட்டா(?) என்ன பண்றதுன்னு பயந்துக்கிட்டு, அந்த கான்ஸ்டபுள் கையிலேயே தூக்கி வச்சுக்கிட்டு இருந்திருக்காரு. இந்த அவலத்தை கேள்விப்பட்ட அந்த ஊர் காவல்துறை, அந்த இரண்டு பேர் மேலையும் துறை ரீதியா விசாரானைப் பண்ண போறோம்னு சொல்லியிருக்காங்க!. இதை கேள்விப்பட்ட அந்த போலீஸ் அதிகாரி, “லாலுவை எனக்கு சின்ன வயசிலிருந்து தெரியும், அவர் மீதுள்ள மதிப்பின் காரணமாகத்தான் , அவருக்கு நான் பாத பூஜை செய்தேன்னு சொல்லியிருக்காரு.

இந்த செய்தியைப் படிச்சு முடிச்சவுடனே, எனக்கு சட்டுன்னு நம்ம தமிழ்நாட்டு மந்திரிங்க தான் நியாபகத்துக்கு வந்துச்சு. அவுங்க தானே, அம்மாவைப் (அவுங்க அம்மாவை இல்லைங்க!!) பார்த்துட்டாலே, படக்குன்னு கால்ல விழுவாங்க. இந்த படத்தைப் பாருங்க, எப்படி, அந்த மந்திரி ஸாஷ்டாங்கம்மா, அம்மாவின் காலில் விழுந்து கும்பிடுவதை.... 

 

                                      (புகைப்படம் நன்றி - கூகிள் ஆண்டவர்)
 
 
 
 
 
(புகைப்படம் நன்றி - கூகிள் ஆண்டவர்)
 


 
வக்கீல் ஒருவரும் அம்மாவின் காலில் விழுவதைப் பாருங்கள்  
 
 
(புகைப்படம் நன்றி - கூகிள் ஆண்டவர்) 


இந்த மாதிரியான, அதிகாரிகளும், மந்திரிகளும் இருக்கும்போது நம்ம நாடு எப்படி முன்னேறும்???

Tuesday, December 17, 2013

தலைவா திரைப்பட அனுபவம் – நடன வகுப்பு காட்சி


இந்த நடனக் காட்சியின் காணொளியை இங்கே பார்க்கவும். 


இயக்குனர் எங்களையெல்லாம் கூப்பிட்டு அந்த நடன வகுப்பு காட்சியை விளக்க ஆரம்பிச்சாரு. எனக்கு உள்ளுக்குள்ள உதற ஆரம்பிச்சிடுச்சு. ஏன்னா, எனக்கு தான் சுட்டுப் போட்டாலும் நடனம் வராதே. ஏழு வருஷத்துக்கு முன்னாடி நான் டோக்கியோவில இருக்கும்போது, வருஷா வருஷம் நடக்கிற பொங்கல் திருவிழாவில நாங்க ஒரு  நாடகம் போடுவோம். அப்படி ஒரு நாடகத்தை எழுதி இயக்கிய நண்பர் ஒருவர்,  ராமராஜன் மாதிரி நடனம் ஆடுங்கன்னு சொல்ல, நானோ பாக்யராஜ் மாதிரி நடனம் ஆடினேன். அவர் கடுப்பாயிட்டாரு. உடனே நான், ஏங்க எனக்கு தெரிஞ்ச ஒரே நடனம் பாக்யராஜ் நடனம் தான், அதனால நாம ராமராஜனுக்கு பதிலா பாக்யராஜ்ன்னு மாத்திடுவோம்ன்னு சொன்னேன். அவரும், இவன் கிட்ட கோவிச்சுக்கிட்டா வேலைக்கு ஆகாதுன்னு நினைச்சு, என்னிடம், ஏங்க ராமராஜன் நடனமும் ரொம்ப ஈஸி தாங்கன்னு, “தைய தக்க, தைய தக்கண்ணு” ஆடி காமிச்சாரு. நாம யாரு!!, நீங்க எப்படி வேணாலும் ஆடுங்க, ஆனா நான் பாக்யராஜ் நடனம் மட்டும் தான் ஆடுவேன்னு ஆடினேன். அவரும் எவ்வளவோ முயற்சி செஞ்சு, கடைசில  ஒண்ணும் வேலைக்கு ஆகலை. அதனால மேடைல நீங்க வரும்போது, ராமராஜன்  பாட்டு வரும், அப்ப கையை மட்டும் ஆட்டுங்க போதும்னு  வெறுத்துப்போய் சொன்னாரு. இப்ப இயக்குனர் அந்த நடனக் காட்சியை சொல்ல, சொல்ல, எனக்கு அந்த வேண்டாத பழைய நினைப்பு எல்லாம் வந்துடுச்சு. எங்க நம்மளால நிறைய டேக் ஆயிடுமோன்னு பயம் வந்துடுச்சு. ஏன்னா, இந்த காட்சியில விஜய்,அமலாபால், சந்தானம்ன்னு எல்லாரும் இருக்காங்க. ஏற்கனவே சந்தானம், எங்களோட முத காட்சிக்கு, நீங்க 400/500 டேக் எடுத்தவங்கதானேன்னு சொல்லி ரொம்ப கடுப்பேத்தினாரு. இந்த காட்சியில நான் ஒழுங்கா நடிக்காம நிறைய டேக் வாங்கினா என்ன பண்றதுன்னு ஒரே பயமாயிடுச்சு. இயக்குனர் சொல்லி முடிச்சவுடனே, நான் தயங்கிக்கிட்டே, சார், எனக்கு நடனம் எல்லாம் ஆட வராதுன்னு” சொன்னேன். அவரும், “அது தாங்க எங்களுக்கு வேணும். நீங்க நடனம் கத்துக்க வந்திருக்கீங்க,அதனால தப்புத்தப்பா ஆடுங்கன்னு” தைரியம் கொடுத்தாரு. அந்த காட்சி என்னன்னா, விஜய் சொல்லிக்கொடுக்கிற நடனப்பள்ளியில அமலாபால் போய் சேருவாங்க. நாங்க தான் அமலாபாலை பின்னாடியே ஃபாலோ பண்ணுகிற கல்யாணமாகாத பிரம்மச்சாரிகள் ஆச்சே, அதனால நாங்களும் விஜய் கிட்ட எங்களையும் அந்த நடனப்பள்ளியில சேர்த்துக்குங்கன்னு கெஞ்சுவோம். அந்த காட்சி தான், நாங்க விஜய் முன்னாடி, முட்டிப் போட்டு, கையை மேல தூக்கி, விஜயிடம்,”தலைவா, நீங்க தான் எங்களுக்கு குரு, எங்களுக்கு டான்ஸ்ன்னா உயிரு. பிளீஸ் எங்களுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுங்கன்னு” சொல்லுவோம்.
இந்த காட்சியை எடுக்குறதுக்காக முதல்ல எங்களை எல்லாம் வரிசையா நிக்கச் சொன்னாங்க. நான் வந்து முத வரிசையில நின்னுக்கிட்டு இருப்பேன். அப்புறம் அப்படியே முட்டி போடச் சொல்லி, . கையை தூக்கி மேல காட்டச் சொன்னாங்க. காமிரா எங்களுக்கு பின்னாடி இருந்துச்சு. முதல்ல சரியா வரலை. எல்லாரும் ஒரே நேரத்துல முட்டி போடலை. உடனே டைரக்டர் நான் ஒண்ணு,ரெண்டு, மூணு சொல்லுவேன். மூணு சொன்னவுடனே நீங்க முட்டி போட்டு கையை மேல துக்கணும்னு சொன்னாரு. அப்புறமும் சரியா வரலை, பின்னாடி இருக்கிறவங்களோட கை, முன்னாடி இருக்கிறவங்களோட தலையை மறைக்குதுன்னு, அந்த கைகளையெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணி, சரியா தூக்கச் சொன்னாங்க. 4/5 டேக்குக்கு அப்புறம் அந்த காட்சி சரியா வந்துச்சு. இதுல விஜய் எங்களுக்கு முன்னாடி நிக்கணும். இன்னும் சரியா சொல்லனும்னா, எனக்கு முன்னாடி நின்னு(அவரோட முகத்துக்கு நேரா நீட்டிக்கிட்டு இருக்கிற கை, என்னோட கை), என்னைய அவர் பார்த்துக்கிட்டு இருப்பாரு. அவரும் பாவம் அந்த காட்சி முடியுற வரைக்கும் பேசாம நின்னுக்கிட்டு இருந்தாரு. இப்ப வசனம். படத்துல எல்லாரும் ஒண்ணா சொல்லுவோம். ஆனா காட்சி எடுக்கும்போது, இந்த வசனங்களையே தனித்தனியா சொல்லச் சொன்னார்கள். முத வசனமே என்னோடது தான். “தலைவா நீங்க தான் எங்களுக்கு குரு.” இந்த வசனத்தை நான் முகத்தை அப்பாவியா(!!) வச்சுக்கிட்டு(எல்லாம் வீட்டு அம்மணிக்கு எதிர்ல நின்னு பேசிப் பேசி பக்கமாயிடுச்சு)  சொன்னவுடனே, விஜய் சிரிசிட்டாரு. உடனே, “சாரி, சாரி இன்னொரு டேக் போயிடலாம்னு சொன்னாரு”. அவர் சிரிச்சவுடனே, எல்லோரும் “சாம் (ஏன் சாம்ன்னு கூப்பிடுறாங்கன்னு இந்த பதிவுல சொல்லியிருக்கேன் - சம்பந்தம் ஏன் சொக்கன் ஆனான் ), அவர் சிரிக்கிற அளவுக்கு என்ன பண்ணினீங்கன்னு” கேக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு ரெண்டு டேக் ஒவ்வொருத்தரா வசனம் சொல்ற மாதிரி எடுத்தாங்க. அப்புறம் இயக்குனர் என்ன நினைச்சாரோ, எல்லோரையும் ஒண்ணா சொல்ல சொல்லி எடுத்தாரு. ஆனா அப்படியுமே நாங்க நாலு டேக் வாங்கினோம்.

இப்ப, நடனம் கத்துக்கிற மாதிரியான காட்சி.  இந்த காட்சிக்கு, முன்னாடி நின்ன மாதிரியே நிக்கணும். ஆனா, முதல் வரிசையில நடுவுல அமலாபால் நிப்பாங்க. அவுங்களுக்கு ரெண்டு பக்கமும் டான்சர் பாய்ஸ் நிப்பாங்க, அப்புறம் நான் அமாலாபாலுக்கு இடதுபுறத்துல அந்த டான்சர் பாய்க்கு பக்கத்துல நிப்பேன். அந்த மாதிரி மூணு வரிசைல நாங்க நிப்போம். இந்த ஷாட்ல விஜய் கிடையாது. இன்னொரு டான்சர் தான் எங்களுக்கு சொல்லிக்கொடுப்பவரு. அவரு ஒன்,டூ, த்ரீ ஃபோர், ஃபைவ் ,சிக்ஸ் ,செவன் ,எய்ட் அப்டின்னு சொல்லுவாரு. அப்ப எல்லோரும் டான்ஸ் மூவ்மென்ட் பண்ணனும். அப்படி பண்ணிக்கிட்டே, அமலாபால் பக்கத்துல போறதுக்கு ட்ரை பண்ணனும். அதாவது, எங்களுக்கு பக்கத்துல இருக்கிற அந்த டான்சரை தள்ளிட்டு அமாலாபாலுக்கு பக்கத்துல போகணும். உடனே அந்த டான்சர் பாய்ஸும் எங்களை தள்ளிட்டு, அவுங்க அமலாபால் பக்கத்துல போவாங்க. இப்படியே ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு நடக்கும். இதுல நான் ரொம்ப ஒல்லியா இருக்கிறதுனால, எனக்கு பக்கத்துல இருந்த டான்சர் நான் அமலாபால் பக்கத்துல போனவுடனே, என்னைய தூக்கி ஒரு சுத்து சுத்தி இறக்கி விடுவாரு. இயக்குனருக்கு அது ரொம்ப பிடிச்சுப்போச்சு. அப்படியே பண்ணுங்கன்னு சொன்னாரு. எனக்கு தான் டான்ஸ் வராதே, அதனால நான் ஒரு தலை ராகத்துல வர்ற “கூடையில கருவாடு” பாட்டுல வர்ற ஸ்டெப்ஸ் தான் போட்டேன். ஒரு வழியா இந்த காட்சியையும் 4 டேக்ல எடுத்தாங்க. இந்த காட்சியை எடுத்ததுக்கு அப்புறம், இயக்குனர், காமிரா மேன், அமலாபால் எல்லோரும் அந்த காட்சியை போட்டுப்பார்த்தாங்க. அப்ப இயக்குனரும், அமாலாபாலும், என்னையப் பார்த்து, அவரு, நல்லா காமெடியா ஆடியிருக்கறேன்னு பேசிக்கிட்டாங்க. உடனே,நாங்களும் போய் பார்த்தோம். நான் போட்ட ஸ்டெப்ஸ் ரொம்ப காமெடியா இருந்துச்சு.
அதற்கு பிறகு, அடுத்த ஷாட் – அதாவது சந்தானம் வந்து அமலாபாலிடம் பேசுகிற காட்சி. அவர் உள்ள என்ட்ரியாவதையே மூணு டேக் எடுத்தாங்க. அப்புறம் அவர் எங்கக்கிட்ட வந்து “ஸ்டாப்ன்னு” சொன்னவுடனே, நாங்க எல்லாம் அப்படியே நிக்கணும். அதை ஒரு ஷாட்டா எடுத்தாங்க. அப்புறம் அவர் நான் ஒரு ஸ்டெப் போடுறேன்னு சொல்லி போய் குதிக்கிற மாதிரி ஆக்க்ஷன்  பண்ணுவாரு, நாங்க அப்படியே காதைப் பொத்திக்கணும். இதையே 7/8 டேக் எடுத்தாங்க. அதற்கு பிறகு தான், அந்த டான்சர் ஒரு கையை கீழே ஊனிக்கிட்டு டான்ஸ் பண்றதை தனியா ஷூட் பண்ணினாங்க.

ஒரு வழியா இந்த நடனக் காட்சி முடிஞ்சிருச்சுன்னு சொன்னாங்க. இன்னும் ஒரு continuity காட்சி மட்டும் பாக்கியிருக்கு, நீங்க திங்கள் கிழமையோ, செவ்வாய்க்கிழமையோ வர வேண்டியிருக்கும். நாங்க எப்பன்னு சொல்றோம்னு சொன்னாங்க. நான் அந்த காட்சிக்காக ஆபிஸ்ல பர்மிஷன் போட்டு போனேன். அன்னைக்கு என்ன நடந்ததுன்னு அப்புறம் சொல்றேன்.  
- இன்னும் சொல்கிறேன்


Thursday, December 12, 2013

பேஸ்புக் ஒரு எச்சரிக்கை!!!!!!!!!

சமீபத்தில் ஒரு இணையத்தளப் பத்திரிக்கையில் இந்த செய்தியை படிக்க நேர்ந்தது. இந்த செய்தியை நீங்களும் படித்திருப்பீர்கள். அப்படி படிக்க முடியாமல் போனவர்களுக்காக இந்த பதிவு.

இன்று பேஸ்புக்,ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்துக்கொள்ளாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவிற்கு நாம் அவைகளின் அடிமையாகி விட்டோம். அதிலும் குறிப்பாக இன்றைய இளைய சமுதாயம் இவைகளே கதியென்று இருக்கின்றனர். இவைகள் மூலமாக நாம் எவ்வளவோ நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. நல்லது இருந்தால், கெட்டதும் இருக்கத்தானே செய்யும். ஆனால், நாம் கொஞ்சம் சுதாரிப்போடு இருந்தால், அந்த கெட்டவைகளை நீக்கிவிட்டு, நல்லவைகளை மட்டும் எடுத்துக் கொள்ள முடியும். அப்படி சுதாரிப்போடு இல்லாமல் போனதால் ஒரு பெண்ணிற்கு நடந்த அநியாயத்தை அந்த இணையத்தளப் பத்திரிக்கை ஒரு செய்தியாக வெளியிட்டிருந்தது.

இதோ அந்த செய்தி:


இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி கண்டிப்பாக படிக்கவும்எச்சரிக்கைச் செய்தி..
முழுவதும் படித்துவிட்டு மற்றவர்களுக்குப் பகிரவும்.. எனக்குத் தெரிந்த நண்பரின் வாழ்வில் நடந்த கொடுமை இது.. Internetல் எல்லா** தளங்களுக்கும் செல்பவர்..
ஒருநாள், அத்தளத்தில் அழகான தமிழ்ப் பெண்கள்என்ற தலைப்பில் இருந்த பகுதியைத் திறந்து பார்த்திருக்கிறார்.. நான்கைந்து பக்கங்களைப் பார்வையிட்டவருக்கு ஆறாவது பக்கத்தில் காத்திருந்தது பேரதிர்ச்சிஆம்…!
அதில் அவரது தங்கையின்புகைப்படமும் இருந்தது கூடவே அவரது அழகைப்பற்றிய அருவருப்பான commentகளும்.. நன்றாக யோசித்துப் பாருங்கள்ஒரு சராசரி** அண்ணனுக்கு இது எப்படி இருந்திருக்குமென்று..! தங்கை வீட்டிற்கு வந்ததும் பளார்.. பளார்.. என்று அறைந்தவர் இதுபற்றித் தங்கையிடமே நேரில் கேட்க, அவரது தங்கை அங்கேயே மயங்கிவிழ.. ஓடிவந்து பார்த்த பெற்றோரிடம் எல்லாவற்றையும் போட்டு உடைத்தார்.. (அப்போது அவருக்கும் ஒரு பளார் கிடைத்ததாம்) மயக்கம் தெளிந்து எழுந்த தன் தங்கையிடம் அந்த தளத்திலுள்ள அவரது படத்தைக் காட்டியபோது அவருக்குப் பேரதிர்ச்சி.. அண்ணா..
இது நான் Facebookல் வைத்திருக்கும் என்னுடைய Profile picture… அப்போதுதான் அவருக்கு உறைத்தது.. #Facebookல் தன்னுடைய பதிவுகளை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று Privacy settingsல் கொடுத்தது.. அதன்பிறகு, உண்மை தெரிந்து அந்தப் படத்தை எடுத்துவிட்டு settingsகளிலும் மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டார்.. இந்த நிகழ்வு எனது நண்பருக்கும் ஒரு பாடமாக அமைந்துவிட்டது.. இதனை இங்கே ஏன் சொல்கிறேன் என்றால், இந்த Facebook இன்றைய இளைய சமுதாயத்தில் எவ்வளவு ஆழமாக வேரூன்றிவிட்டதென்று எல்லோருக்கும் தெரியும்.. இது சரியா தவறா என்ற விவாதஞ்செய்யாமல், இதுபோன்ற மோசமான நபர்களும், தளங்களும் உலாவும் #இணையஉலகில் நம்மை நாமே காத்துக் கொள்ளவேண்டும்.. இதற்கு, நமது #பெண்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்..
முகம் தெரியாத நபர்கள் நட்பிற்கான விடுகையைத் தரும்போது’ (friendship request), அவற்றை எக்காரணங்கொண்டும் ஏற்றுக்கொள்ளவேண்டாம்.. ஏனெனில், உங்களது படத்தை எடுப்பதற்கான பெரும் வாய்ப்பை அவர்களுக்கு நீங்களே அளிக்கிறீர்கள்.. அப்படியொருவேளை இதில் விருப்பமில்லையென்றால், #உங்களது உண்மையான படங்களை எக்காரணங்கொண்டும் இங்கே பதிவேற்றாதீர்கள்.. இதுதான் மிகச்சிறந்தவழி.. இப்போதே இந்த மாற்றங்களைச் செய்யுங்கள்.. இது பெண்களுக்கு மட்டுமல்ல.. எல்லா ஆண்களும் இதனைப் படித்து தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் விளக்கமாக எடுத்துரையுங்கள்.. பொழுதுபோக்கிற்காக உலாவ வரும் பெரும்பாலோனோருக்கு, இங்கே பல புறம்போக்குகளும் உலாவுகின்றனர் என்பதை எச்சரிக்கே இதை கைவலிக்க எழுதியுள்ளேன்..
தயவுசெய்து மற்றவர்களுக்கும் பகிருங்கள்..
நன்றி – (சொல்வது எங்கள் கடமை தீர்மானிப்பது உங்கள் கையில்)
நன்றி: கடையநல்லூர் இணையம்

முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். அது மாதிரி, பேஸ்புக்கால் ஏற்பட்ட ஒரு பிரச்சனையை பேஸ்புக் கொண்டே தெரியப்படுத்தி, மற்றவர்களுக்கும் இம்மாதிரியான ஒரு பிரச்சனை ஏற்படாமல் தடுப்போம்.