Wednesday, April 1, 2020

ஆண்கள் சமையல் - மீள் பதிவு



இந்த வார பதிவாக நான் பதிவிட நினைத்தது எங்கள் கல்லூரியின் 25ஆம் ஆண்டு நினைவுகளின் சங்கமத்தைப்பற்றி தான். ஆனால் நேற்று ஒரு டிக்டாக் காணொளியை காண நேர்ந்தது. அதில் கணவன் மணி 11 ஆகுது இன்னும் சமைக்காம என்னடி பண்ற என்று கேட்பான், அதற்கு மனைவி, இந்த பாருங்க, நான் ஒரு நாள் சமைச்சா, நீங்க ஒரு நாள் சமைக்கணும். நான் ஒரு நாள் வீடு கூட்டினா, நீங்க ஒரு நாள் வீடு கூட்டணும்னு சொல்லுவார். 

இதை பார்த்தவுடன் 2012ல் நான் பதிவிட்ட ஆண்கள் சமையல் தான் நியாபகத்துக்கு வந்தது. சரி, அந்த பதிவையே மீள் பதிவாக போடலாம்னு போட்டது தான் இந்த பதிவு. அன்றைக்கு பதிவிட்ட பதிவில் புகைப்படங்கள் கிடையாது. இதில் புகைப்படங்களை சேர்திருக்கிறேன்.



சமையல் கலைக்கு உதாரணம் சொல்பவர்கள் “நள மகராஜாவை” தான் சொல்லுவார்கள். அதற்கு ஏற்ற மாதிரி, பெரிய பெரிய நட்சத்திர உணவகங்களில் ஆண்கள் தான் முதன்மை சமையல் நிபுணர்களாக இருப்பார்கள். இன்னும் சொல்லனும்னா, இங்கு ஆஸ்திரேலியாவில் தொலைக்காட்சியில் வரும் “மாஸ்டர் செஃப்(Master Chef)” நிகழ்ச்சியில் கூட, ஆண்கள் தான் நீதிபதிகளாக இருக்கிறார்கள். சமையல்னா ஆண்கள் தான் அப்படிங்கிறது மாறிப்போய் பெண்கள், வீட்டில் சமையலை குத்தகைக்கு எடுத்துக் கொண்டார்கள் (பின்ன! பெண்கள் உள்ளே நுழையாத துறை ஏதாவது இருக்கிறதா என்ன!!!). அவர்கள் இப்படி சமையலை குத்தகை எடுத்துக்கிட்டதுனால தான், என்னை மாதிரி ஆட்கள், சமையலறை எந்தப் பக்கம் இருக்கிறது என்பது கூட தெரியாமல் வீட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறோம். எதுக்குடா, தெரிஞ்ச விஷயத்துக்கு போயி இவ்வளவு பில்டப் கொடுக்கிறானேன்னு பார்க்கிறீங்களா, சரி விஷயத்துக்கு வரேன்.

நான் வார இறுதியில் தமிழ் சொல்லிக் கொடுக்கும் தமிழ் பள்ளியிலிருந்து, ஒவ்வொரு வருடமும் சிட்னியில் உள்ள ஏதாவது ஒரு முகாமிற்கு போயி இரண்டு நாட்கள் தங்கி விட்டு வருவோம். இதை, எங்கள் பள்ளியின் முதல்வர் தான் ஆரம்பித்து வைத்தார். இந்த முகாமில் என்ன சிறப்பு என்றால், அந்த இரண்டு நாட்களும், அதாவது, வெள்ளிக்கிழமை இரவும், சனிக்கிழமை 3 நேரமும், ஞாயிற்றுக்கிழமை இரண்டு நேரமும், ஆக மொத்தம் 6 வேளைக்கு ஆண்கள் மட்டுமே சமைத்து, பெண்கள் சாப்பிடுவார்கள். நடு, நடுவில், இந்த காபி, டீ, பஜ்ஜி, சொஜ்ஜி போன்றவைகளும் உண்டு. பெண்கள் சமையல்கட்டுப் பக்கம் தலையை கூட காட்ட மாட்டார்கள். அவர்களுடைய ஒரே வேலை, அரட்டை அடிப்பது, ஆண்கள் சமைத்ததை சாப்பிடுவது, தூங்குவது தான். இதில், கைக்குழந்தையை வைத்திருக்கும் தாய்மார்கள் மட்டும் இன்னும் ஒரு வேலையாக அந்த குழந்தையை கவனித்துக் கொள்வார்கள்.  அந்த அளவுக்கு பெண்கள் அந்த இரண்டு நாளும் ஓய்வெடுத்துக்கொள்வார்கள். ஆனால், அப்படியும் சொல்லமுடியாது, சில பேர் ஒரேடியாக அரட்டை அடித்து சோர்வடைந்து விடுவார்கள். இந்த முகாமில் இன்னொரு விசேடம் என்னவென்றால், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்துவது தான். ஒவ்வொருவரிடமும் இவ்வளவு திறமை இருக்கிறதா என்று அப்பொழுது தான் தெரியும்.








இந்த ஆண்டும், மூன்றாவது வருடமாக, சென்ற வெள்ளிக்கிழமை மாலை  நாங்கள் ஒரு 75 பேர் முகாமிற்கு சென்றோம். அந்த முகாம், நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து கிட்டதட்ட 65கிலோமீட்டர் தூரத்தில், சரியான ஒரு காட்டுப் பகுதியில் இருந்தது. அங்கு சென்றவுடன், எங்கள் தமிழ் பள்ளியின் சமையல் கலை நிபுணர்கள் இரவுக்கு கொத்து பரோட்டா செய்தார்கள். முக்கியமாக ஒரு விஷயத்தை இந்த இடத்தில் சொல்லியாக வேண்டும், அதாவது நான் இந்த முகாம்களில் எல்லாம் சமைத்தது இல்லை. வெறும் எடுபுடி தான் (வேற என்னங்க பண்ண முடியும், வீட்டு அம்மணிக்கு எடுபுடியாவே இருந்து பழகிப்போயிடுச்சு). ஆனா, நான் மட்டும் இல்லைங்க, என்னைய மாதிரி, நிறைய எடுபுடிகள், அந்த முகாமில் இருந்தார்கள். காய்களை எல்லாம் நறுக்குவதும், பாத்திரங்களை எல்லாம் கழுவுவதுமாக எங்களுக்கு கொடுக்கப்பட்ட எடுபிடி வேலைகளை ஒழுங்காக செய்தோம். அந்த இரவில், நாங்க ஒரு நான்கு பேர் காய்களை நறுக்கிக்கொண்டிருக்கும்போது, ஒரு நண்பரின் மனைவி நாங்கள் எல்லாம் எப்படி வேலை பார்க்கிறோம் என்று பார்க்க வந்தார். வந்தவர், ஒரு நிமிடம் அப்படியே நின்று, திடீரென்று, “ஏங்க என் வீட்டுக்காருக்கு நல்லா சமைக்க தெரியும், அவரைப் போயி காய்களை நறுக்க விட்டுட்டீங்களேன்னு கேட்டாரு. உடனே, என் பக்கத்தில் இருந்த நண்பர், அம்மா தாயே, நீ கிளம்பு, நானே, ஏதோ ஒரு நாலு பேருக்கு, ஐந்து பேருக்கு  சமைச்சிருக்கேன். இங்க என்னடான்னா 75 பேருக்கு சமைக்கணும், நம்மாலாள எல்லாம் அந்த அளவுக்கு முடியாதுன்னு ஒதுங்கி எடுபிடி வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். நீ வேற!, என்ன, இப்ப, நான் சமைக்கணும் அவ்வளவுதானே, வீட்டுக்கு வந்து உனக்கு ஒரு நேரம் சமைச்சு போடுறேன். இப்ப இடத்தை காலி பண்ணுன்னு அழாத குறையா கெஞ்சி, அவுங்களை கிளப்பப் பார்த்தாரு. நான் உடனே, என் பங்குக்கு, ஏங்க “கத்தி பிடிச்ச கையால, எப்படிங்க கரண்டியை பிடிக்கிறதுன்னு” ஒரு பிட்டைப் போட்டுப் பார்த்தேன். (பின்ன, இந்த மாதிரி நேரங்கள்ல, நண்பனை விட்டுக்கொடுக்க முடியுமா!!). வேற வழியில்லாம அவுங்க கிளம்பி போயிட்டாங்க. அப்புறம் தான் நம்ம நண்பருக்கு நிம்மதியே வந்துச்சு. ரொம்ப பேருக்கு, அந்த நண்பர் நல்லா சமைப்பாருன்னு தெரியாது. திருமணத்துக்கு முன்னாடி, அவர் தனிக்காட்டு ராஜாவா, இருந்தபோது, அவர் நல்லா சமையல் செஞ்சு சாப்பிட்டிருக்காரு. இதை ஒரு சிறப்பு தகுதியா வச்சு, அவருக்கு பெண் பார்த்த இடத்துல , அவருக்கு வேண்டாதவங்க பெண் வீட்டாரிடம் போட்டு கொடுத்திருக்காங்க. அந்த பெண்ணும், ஆஹா, நமக்கு வரபோற கணவருக்கு நல்லா சமைக்கத்தெரிஞ்சிருக்கு, அதனால நமக்கு பிரச்சனை இல்லைன்னு, அவருக்கு கழுத்தை நீட்டிட்டாங்க. ஆனா, நண்பர் யாரு!!, கல்யாணம் ஆகி, ஏழெட்டு வருஷமா ஒரு வேளை கூட, மனைவியை உட்காரவச்சு சமைச்சு போடலை. இங்கையாவது, நம்ம கணவர் சமைச்சதை சாப்பிட்டு பார்க்கலாங்கிற ஒரு நப்பாசைல, அவர் மனைவியும் போட்டுப் பார்த்திருக்காங்க. ஆனா ஒண்ணும் நடக்கலை. 

அப்புறம் மறு நாள் காலைல ஐந்து மணிக்கெல்லாம், டீ மாஸ்டர் (டீ, காபி எல்லாம் போடுறது  தான் அந்த நண்பரோட வேலை) டீ போட்டு, எங்களையெல்லாம் எழுப்பிவிட்டார். நானும் எழுந்து, எடுபிடி வேலைகளை செய்ய ஆரம்பிச்சுட்டேன் (வீட்டில் ஒரு நாள் கூட ஐந்து மணிக்கு எழுந்ததே இல்லை). காலைல இட்லி, பொங்கல், ஊத்தப்பம், ரெண்டு வகையான சட்னி,சாம்பார் அப்படின்னு ஒரு கல்யாண விருந்தையே செஞ்சோம். மழையும், இந்த ஆண்கள் எல்லாம் எப்படி சமைக்கிறாங்கன்னு பார்க்க வந்துடுச்சு. அதனால, குழந்தைகளுக்கு தான் கொஞ்சம் வருத்தமா போயிடுச்சு. இருந்தாலும் நம்ம குழந்தைகள் அறைலேயே இருப்பாங்களா என்ன? அடாது மழை பெய்தாலும், விடாமல் நாங்கள் வெளியே சென்று எங்களுக்கான ஆக்டிவிட்டியில் இறங்குவோம்னு, ரெயின்கோட் எல்லாம் போட்டுக்கொண்டு அவர்கள் கிளம்பி போனார்கள். மதியமும் ரசம், புளிக்கொழம்புன்னு அசத்தினோம். 


மாலை ஐந்து மணிக்கு மேல், அடியேன் எழுதின “கோவிந்தா படம் தயாரிக்கிறார்ன்னு” ஒரு நகைச்சுவை நாடகத்தை போட்டோம். அந்த நாடகத்துக்காக ஒரு மூன்று நாட்கள் பயிற்சி செய்து அன்றைக்கு அரங்கேற்றினோம். சென்ற வருடமும் ”மேலை நாட்டு மருமகள்” என்கிற நாடகத்தை அடியேன் எழுதி, அரங்கேற்றினோம். இந்த முகாம் மூலமாக, என் நாடகங்களுக்கு, அருமையான கலைஞர்கள் கிடைத்துள்ளனர். நான் எதிர்பார்த்ததை விட, பெண்கள் மிக ஆர்வமாக நாடகத்தில் நடிக்க வந்தார்கள். 

மறு நாள் ஞாயிற்றுக் கிழமை அன்றைக்கு, மதிய உணவாக மல்லி பிரியாணியை செய்தோம். அன்றைக்கு மேஜிக் செய்வதற்கு வெளியிலிருந்து ஒருவர் வந்து எங்களுக்கு மேஜிக் செய்து காட்டினார். பிறகு, எல்லா குழந்தைகளையும் அவர்களுக்கு தெரிந்த ஒரு விஷயத்தை செய்யச் சொல்லி பரிசு கொடுத்தோம். இறுதியாக, இந்த வருடம் புதிதாக முகாமுக்கு வந்தவர்களிடம், அவர்களின் அனுபவத்தை கேட்டோம். அதில் ஒரு தாய்குலம், இந்த இரண்டு நாளும் நான் எங்கள் அம்மா வீட்டில் இருந்தது போல் இருந்தேன் என்று கூறினார். (இருக்காதா பின்ன, தாய் வீட்டீல், காபியாவது போட வேண்டும்,இங்கு அதுவும் கிடையாது. அப்புறம்  ஏன் சொல்ல மாட்டீங்க!) அடுத்த வருடத்து முகாமுக்கான தேதியை முடிவு பண்ணி அறிவிச்சோம், அதாவது மூன்று நாள் விடுமுறையில் (சனி, ஞாயிறு மற்றும் திங்கள்) இந்த முகாமை நடத்துவோம் என்று கூறியவுடன், பெண்களிடமிருந்து பயங்கிற ஆரவாரம் எழுந்தது. என்னன்னு பார்த்தா, மூன்று நாளைக்கும் ஆண்கள் சமைக்க போறீங்களேன்னு சொன்னாங்க. அட! ராமா, நாங்க மூன்று நாள் விடுமுறையில் முகாமை நடத்துவோம் என்று சொன்னதற்கு காரணமே, கடைசி நாள் வீட்டில் நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான்ன்னு (ரெண்டு நாள் முழுக்க வேலை பார்த்து சோர்ந்து போய் விடுகிறோம்!!!) சொன்னோம். இறுதியாக, எல்லா அறைகளையும், சமையலறை எல்லாம் சுத்தம் செஞ்சு வீட்டுக்கு திரும்பினோம். அந்த இரண்டு நாளும் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது, சமையலறையில் வேலை பார்க்கும்போதும் சரி, இரவு அறையில் வந்து படுக்கும்போதும் சரி, ஒரே அரட்டைக் கச்சேரி தான், அப்படியே, மனது கல்லூரி காலத்துக்கு சென்றுவிட்டது.

வருஷம் 365 நாளும் பெண்கள் ஓய்வில்லாமல் நமக்காக சமைக்கும்போது, நாம ஒரு இரண்டு நாள் அவர்களுக்கு ஓய்வு அளித்தோம்ன்னு எண்ணும்போது மனதுக்குள் ஒரு சின்ன சந்தோஷம் தலை தூக்குகிறதை மறுக்க முடியாது.