Saturday, January 2, 2016

ஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது
(நேற்று இரவு(31ஆம் தேதி) சிட்னியில் நடந்த வண்ணமயமான வாண வேடிக்கை)

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இந்த வருடமும் நீங்கள் நினைத்ததை எல்லாம் சாதிக்க அந்த இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஓவியா திடீரென்று ஒரு நாள், அப்பா நீங்கள் மீசை இல்லாமல் இருந்தால் எப்படி இருப்பீர்கள்? நாங்கள் உங்களை மீசை இல்லாமல் பார்க்க வேண்டும் என்று ஒரு போடு போட்டார். என்னடாயிது, வம்பா போச்சு, நமக்கு இருப்பதோ அருகம்புல்லு மாதிரியான ஒரு மீசை,அதையும் எடுக்க வேண்டும் என்று சொல்லுகிறாரேன்னு கவலை. எப்படியும் அவரை தாஜா செய்து விடலாம் என்று எண்ணி, ஓவியாவிடம், இல்லடா, அப்பாவுக்கு மீசை இல்லாமல் இருந்தால் பார்க்கவே நல்லா இருக்காதுன்னு ஒரு பிட்டை போட்டேன். அதெல்லாம் முடியாது, நீங்கள் மீசையை எடுத்து தான் ஆகணும் என்று ஒரே பிடிவாதம். கூட இனியாவும் சேர்ந்து கொண்டார். இவர்கள் இருவரும் பத்தாதுன்னு, வீட்டு அம்மணியும், ஏங்க பிள்ளைங்க ஆசைப்படுறாங்க, பேசாம மீசையை ஒரு தடவை மட்டும் எடுத்துடுங்க என்று அவர்கள் பங்குக்கும் எடுத்து விட. ஆஹா, நம்மளை சரியாக கார்னர் பண்ணிவிட்டார்களே,இவர்களை எப்படி சமாளிப்பது என்று யோசித்து, நமக்கு கை வந்த கலையை உபயோகித்து விட வேண்டியது தான் என்று அந்த கலையை பிரியோகப்படுத்தினேன். (அது வேற ஒண்ணும் இல்லைங்க, வீட்டு அம்மணி ஏதாவது கேட்டால், முடியாக்டு என்று சொன்னால் தானே பிரச்சனை, சரி செய்யுறேன், செய்யுறேன் என்று சொல்லி மழுப்புவது தான்). அந்த மாதிரி ஓவியாவிடம், நம்முடைய தமிழ் பள்ளி முடியட்டும், பிறகு நான் மீசையை எடுக்கிறேன் என்று சொல்லி அப்போதைக்கு அந்த மீசை பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.
இருபது நாட்களுக்கு முன்பு தமிழ் பள்ளி முடிவடைந்தது, இனி ஜனவரி மாதம் கடைசி சனிக்கிழமை தான் திறக்கும். அதற்கு பிறகு ஓவியாவும் மறந்து விட்டார். நானும் பரவாயில்லை அம்மணி மாதிரி ஓவியாவும் மறந்து விட்டார். நம்முடைய மீசை தப்பித்தது என்று நினைத்து சந்தோஷப்பட்டேன். அந்த சந்தோஷத்திலும் இன்று காலை மண் விழுந்தது. ஜனவரி ஒன்றாம் தேதி காலையில் ஓவியா எழுந்தவுடன், அப்பா நீங்கள் தமிழ் பள்ளி முடிந்தவுடன் மீசை எடுக்கிறேன்னு சொன்னீங்க,இன்னும் எடுக்கவேயில்லை. அதனால கண்டிப்பா இன்றைக்கு நீங்கள் மீசையை எடுக்கணும் என்று கூறிவிட்டார். நானும் அடுத்த வாரம் எடுக்கிறேனே என்று கேட்டுப்பார்த்தேன். என்னுடைய போக்கு புரிந்து, நீங்க இப்படியே மீசையை எடுக்காம நாளை ஓட்டிடுவீங்க,அதனால இன்னைக்கு கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று கூறினார். அம்மணியும் ஏங்க வருடப்பிறப்பு அதுவுமா குழந்தையை ஏமாத்தாதீங்க, இன்னைக்கு மீசையை நீங்க எடுக்கிறீங்க என்று சொல்லிவிட்டார்.

சரி, ஓவியாவிடம் நம்ம பருப்பு வேகலை, இன்றைய தினம் இந்த அழகான மீசைக்கு வேட்டுத்தினமாகிவிட்டதே என்று எண்ணிக்கொண்டு தில்லுமுல்லு படத்தில் ரஜினி அழுதுக்கொண்டே மீசையை எடுப்பாரே, அது மாதிரி நானும் மீசையை எடுத்துவிட்டு குளியலையறையிலிருந்து வெளியே வந்தேன். குளியலைறைக்கு வெளியிலேயே ஓவியா அம்மணியின் அலைபேசியில் காமிராவை ஆன் செய்துகொண்டு காத்திருந்தார். நான் வெளியே வந்தவுடன் என்னை ஒரு புகைப்படம் எடுத்தார். இந்த புகைப்படம் எதுக்கு என்று கேட்டதற்கு, தம்பி பெரியவனானவுடன் அவனிடம் காட்டுவதற்கு என்று கூறினார். பிறகு என்னை பார்த்து,பார்த்து ஓவியாவும் இனியாவும் சிரி,சிரி என்று சிரிக்க ஆரம்பித்து விட்டனர். சிறிது நேரம் கழித்து, இனியா அப்பா,put back your மீசை” என்று ஒரு போடு போட்டார். ஐயையோ, இது  வம்பாயிடுச்சுன்னு, ஏன் உங்களுக்கு நான் மீசை இல்லாமல் இருப்பது பிடிக்கலையான்னு கேட்டேன். அதற்கு இனியாவும்,ஓவியாவும் ஆமாம் எங்களுக்கு பிடிக்கலை என்று கூறினார்கள். உடனே எல்லாம் மீசை வராது. இன்னும் கொஞ்ச நாள் ஆகணும் அப்பத்தான் மீசை வரும் என்று சொன்னேன். நான் சொன்ன பதிலை கேட்டுக்கொண்டிருந்த அம்மணி, ஏங்க எனக்கு நீங்க மீசை இல்லாமல் இருப்பது தாங்க பிடிச்சிருக்கு என்று ஒரு இடியை இறக்கினார்கள்.


இந்த நல்ல நாள் அதுவுமாக மீசை விஷயத்தில் நான் இப்படி மாட்டிக்கொண்டனே, ஆண்டவா இதென்ன சோதனை,பிள்ளைகளுக்கு நான் மீசையோடு இருப்பது தான் பிடிக்கிறது. மனைவிக்கு நான் மீசை இல்லாமல் இருப்பது தான் பிடிக்கிறது. இப்போது நான் யார் பக்கம் சாய்வது?