எப்படியும் நாலைந்து காட்சில நடிக்கணும்னு சொல்லியிருந்ததுனால, இந்த முத காட்சியோட படப்பிடிப்பில
கலந்துக்காம அடுத்த காட்சியோட படப்பிடிப்பில் கலந்துக்கலாமான்னு, அவுங்க கிட்ட போன்ல கேட்டேன். அதுக்கு அவுங்க, நீங்க
வர்ற காட்சியெல்லாம் கோர்வையா வரும், அதனால அந்த மாதிரி பண்ண
முடியாது. நாளைக்கு நீங்க வரலைன்னா, படத்துல நடிக்க முடியாதுன்னு
சொன்னாங்க. அத்திப் பூத்த மாதிரி நமக்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கு, அதை ஏன் கெடுத்துக்கணும்னு முடிவு பண்ணி, கான்பெராவிலிருந்து
மாலை 4மணிக்கு கிளம்பி, இரவு 7.30மணிக்கு
வீட்டுக்கு வந்துட்டோம். நாளைக்கு காலையில சரியா 8மணிக்கு படப்பிடிப்பு தளமான ஹாரிஸ்
பார்க்கில் இருக்கும் “spice of life”க்கு வந்துடுங்க. வரும்போது
4 set formal dress, 4 set informal dress, அதுல 2 t-shirt அப்புறம் shoes,chappal, இதையெல்லாம் கொண்டு வந்துடுங்கன்னு இரவு 8மணிக்கு மறுபடியும் போன் பண்ணி சொன்னாங்க.
அப்பவே, அவுங்க சொன்ன dress எல்லாம் எடுத்து
பெட்டில வச்சுட்டேன். மறு நாள் காலைல குடும்பத்தோட, சரியா 7.50க்கு
எல்லாம் அந்த எடத்துக்கு போய் சேர்ந்தேன். பார்த்தா என்னோட இரண்டு நண்பர்கள் மட்டும்
வந்திருந்தாங்க. அந்த ரெஸ்டாரண்ட்டும் திறக்கலை. நாங்க அந்த ரெஸ்டாரண்ட்டுக்கு வெளியிலே
வாட்ச்மேன் வேலை பார்த்துக்கிட்டு இருந்தோம். படப்பிடிப்புக்கு தேவையான வேறு சில பெரிய
பெரிய கருவிகளை எல்லாம் இந்த ஊர்ல இருக்கிற சினிமா கம்பெனி ஆளுங்க அதையெல்லாம்
கொண்டு வந்து செட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. ஆக மொத்தத்துல நாங்களும் அந்த வெள்ளைக்கார
ஆளுங்களும் தான் சொன்ன நேரத்துக்கு வந்திருந்தோம். சரியா 9மணிக்கு ஒரு பெரிய பஸ் வந்துச்சு.
இயக்குனர், உதவி இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர், எடுபிடிகள்ன்னு எல்லோரும் அதிலிருந்து இறங்கினார்கள். அவுங்களோட காலை உணவும்
இறங்கிச்சு. வண்டியிலிருந்து இறங்கின எல்லோரும் முத வேலையா பேப்பர் தட்டை எடுத்துக்கிட்டு
இட்லி சாம்பாரை சாப்பிட ஆரம்பிச்சாங்க. எங்களை யாரும் ஒண்ணும் கண்டுக்கவேயில்லை. அப்ப
தான் அந்த ரெஸ்டாரண்ட்டையே திறந்தாங்க. ஒரு வழியா உதவி இயக்குனர் கிருஷ்ணா எங்களிடம்
வந்து, நீங்க உங்களோட துணிமனியெல்லாம் எடுத்துக்கிட்டு போய், அங்க நிக்கிற பல்லவிக்கிட்ட போய் காட்டுங்க, அவுங்க
இந்த காட்சிக்கு என்ன போட்டுக்கலாம்னு சொல்லுவாங்கன்னு சொன்னாரு. நாங்க எல்லாரும் பெட்டியை
எடுத்துக்கிட்டு போய் அந்த பல்லவி முன்னாடி கடையை விரிச்சொம். அந்த பொண்ணும், எல்லார்க்கிட்டேயும், நீங்க இதை போட்டுக்கிட்டு வாங்க, நீங்க அதை போட்டுக்கிட்டு வாங்கன்னு சொன்னுச்சு. நாங்களும் ரெஸ்டாரண்ட்க்குள்
போய் மாத்திக்கிட்டு, தலையெல்லாம் சீவி, பல்லவி முன்னாடி வந்து நின்னோம் அந்த பல்லவியும் அவுங்களோட உதவியாளர் ஒருவரை
கூப்பிட்டு, இவருக்கு அந்த கண்ணாடியை கொடுங்க, இவருக்கு இந்த கண்ணாடியை கொடுங்க, இவருக்கு இந்த பட்டையான
சங்கலியை கொடுங்கன்னு ஆர்டர் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அப்ப எனக்கு ஒரு சோடா புட்டி
கண்ணாடியை கொடுத்தாங்க. அதை போட்டவுடனே, எனக்கு எல்லாம் ரெண்டு
ரெண்டா தெரிஞ்சுது. என்னங்க, எல்லாம் ரெண்டு ரெண்டா தெரியிது, இதென்ன பவர் கண்ணாடியான்னு கேட்டேன். ஆமா, , கொஞ்சம் பவர் தான், ஆனா ஒண்ணும் பிரச்சனை இல்லை அப்படின்னாங்க.
அடப்பாவிகளா! உங்க படத்துல ஏதோ ரெண்டு மூணு காட்சில நடிக்கிறதுக்காக, என்னோட கண்ணை நொல்லை கண்ணாக்கிவிடுவீங்க போல இருக்கேன்னு நினைச்சுக்கிட்டு,சரி பரவாயில்லை, டேக்குக்கு(!) போகும்போது மட்டும் அந்த
கண்ணாடியை போட்டுக்கலாம்னு முடிவு பண்னி,அந்த கண்ணாடியை டி-ஷர்ட்ல
வெளியில தெரியிர மாதிரி மாட்டிக்கிட்டேன். . இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஏதாவது ஒரு
பொருளை கொடுத்து போட்டுக்க சொன்னாங்க. அதுக்குள்ள அந்த உதவி இயக்குனர் கிருஷ்ணா வந்து, பல்லவியிடம் என்ன! எல்லோரும் ரெடியான்னு கேக்க ஆரம்பிச்சார். அவுங்களும் இன்னும்
இரண்டு பேர் தான் ரெடியாகலை. ஐந்து நிமிஷத்துல ரெடியாயிடுவாங்கன்னு சொன்னாங்க. கிருஷ்ணா
எங்களை எல்லாம் இயக்குனர் கிட்ட கூட்டிக்கிட்டு போனாரு. இயக்குனரும் எங்களுக்கு, நாங்க நடிக்க வேண்டிய காட்சியை விளக்கி சொல்ல ஆரம்பிச்சாரு.
- இன்னும் சொல்கிறேன்